இந்தமொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்குகாணலாம்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஆண்டு டிசம்பர் 8, வியாழன் அன்று பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தை முடித்துக் கொள்ளும் போது, அதன் கடுமையான சிக்கன நடவடிக்கைளுக்கு எதிராக எந்த எதிர்ப்பு வந்தாலும் தனது அரசாங்கம் அதை அமுல்படுத்தும் என்று வலியுறுத்தினார்.
'கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தொலைநோக்கு பார்வையற்ற ஜனரஞ்சக முடிவுகளால் நாடு இன்று பாதகமான விளைவுகளை எதிர்கொள்கிறது' என்று முறையிட்ட விக்கிரமசிங்க, 'நாட்டின் எதிர்கால வாய்ப்புகளுக்காக மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது' என்றார். மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று வலியுறுத்திய அவர், 'நாங்கள் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும்... நாங்கள் கடுமையான முடிவுகளை எடுக்காததாலேயே நாங்கள் இங்கே இருக்கிறோம்' என்று மீண்டும் வலியுறுத்தினார்.
மின்சாரக் கட்டண உயர்வு என்பது அரசாங்கம் செயல்படுத்த தீர்மானித்துள்ள 'கடுமையான முடிவுகளின்' ஒரு நடவடிக்கை மட்டுமே. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கான விலை மானியங்களை வெட்டித்தள்ளுதல், பணவீக்கம் அதிகரித்தாலும் உழைக்கும் மக்கள் மீதான வரிகளை அதிகரித்தல் மற்றும் இலட்சக்கணக்கான தொழில்களை அழிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்துதல் ஆகியவை இதில் அடங்கியுள்ள ஏனையவை ஆகும்.
இந்த வரவு செலவுத் திட்ட சிக்கன நடவடிக்கைகள், நாட்டின் கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் தற்காலிக நிவாரணம் வழங்குவதற்கான அவசரக் கடன் வசதிக்கான முன் நிபந்தனையாக சர்வதேச நாணய நிதியம் (IMF) விதித்துள்ள கட்டளைகளுக்கு முற்றிலும் இணங்கியவை ஆகும்.
அரசாங்கம் ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் 75 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தியது. இப்போது அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களில் மேலும் 70 சதவீதம் அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசாங்கம் இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் கட்டணத்தை 127 சதவீதம் உயர்த்தியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் 200 முதல் 300 சதவீதம் வரை அதிகரித்தன. தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கான விலை மானியங்களை நிறுத்துவதானது தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் எதிர்கொள்ளும் தாங்க முடியாத சுமைகளை மேலும் அதிகரிக்கும்.
ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனையை விரைவுபடுத்துவதாக உறுதியளித்துள்ள அதேவேளை, தனியார்மயமாக்குவதற்குத் தயாராகும் வகையில், இலங்கை மின்சார சபையை 15 நிறுவனங்களாகப் பிரிப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த தனியார்மயமாக்கல் தவிர்க்க முடியாமல் பெரும் வேலை இழப்புகளுக்கும் மேலும் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும்.
கடந்த வியாழக்கிழமை விவாதத்தின் முடிவில் வரவு செலவுத் திட்டம் 123க்கு 80 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் மதிப்பிழந்த கட்சியான ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எந்தவிதமான மக்கள் ஆதரவையும் கொண்டிருக்காத விக்கிரமசிங்க அரசாங்கம், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.யின் பாராளுமன்ற பெரும்பான்மையை முழுமையாக நம்பியுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆரம்பமான மக்கள் எழுச்சியால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ ஜூலை நடுப்பகுதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து, ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பிளவுபட்டுள்ளது. ஒரு சில விதிவிலக்குகளுடன், பாராளுமன்றத்தில் 'சுயேட்சைகளாக' அமர்ந்திருக்கும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவை வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தன. ஆயினும், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரே வழி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதும் அதன் சிக்கனக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதும்தான் என்றே அவை வலியுறுத்தி வருகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்ததன் மூலம் அரசாங்கம் அதன் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள உதவியது. இதற்கு பிரதியுபகாரமாக, விக்கிரமசிங்க அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தெளிவற்ற 'வாக்குறுதியை' வழங்கினார்.
சிக்கன நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்படும் வெகுஜனங்கள் மீது தமிழ் ஆளும் உயரடுக்குகள் கொண்டிருக்கும் அவமதிப்பை இந்த இழிவான ஒப்பந்தம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ் உழைக்கும் மக்களின் இழப்பில் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்வதற்காக, கொழும்பு அரசாங்கத்துடன் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை செய்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. போன்றே, தமிழ் கூட்டமைப்பும்சர்வதேச நாணய நிதியத்துடனனான உடன்பாட்டுக்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் ஏற்கனவே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம், தொலைத்தொடர்பு, காப்புறுதி, வங்கிகள், மின்சாரம், இரயில், சுகாதாரம் மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்களில் வேலை செய்பவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வரவு செலவுத் திட்ட விதிகளுக்கு எதிராக கொழும்பு மற்றும் பிற நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். கடந்த திங்கட்கிழமை, தபால் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகள், தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் எதிர்ப்பின் புதிய அலையைத் தூண்டும் என்று அரசாங்கமும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் அஞ்சுகின்றன. வளர்ந்து வரும் இந்த மக்கள் எதிர்ப்பை நசுக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
நவம்பர் 23 அன்று வரவு-செலவுத் திட்ட விவாதத்தின் போது, அவசரகால நிலையை திணித்து இராணுவ மற்றும் பொலிஸ் படைகளை நிலைநிறுத்தி அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை நசுக்கப்போவதாக விக்கிரமசிங்க அச்சுறுத்தினார். மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் சுகாதாரத் துறைகளில் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்ய அவர் கடுமையான அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை விதித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர்கள் உட்பட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அவர் அடக்குமுறை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தியுள்ளார்.
அரச அடக்குமுறைக்கு அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், 2023 வரவு-செலவுத் திட்டம் ஆயுதப்படைகள் மற்றும் பொலிசுக்கான நிதியை உயர்த்துகிறது. கல்வி மற்றும் சுகாதாரம் நிதி பற்றாக்குறையில் இருக்கும் அதே வேளை, இராணுவம் மற்றும் பொலிசுக்கு வரவு-செலவுத் திட்டத்தில் 539 பில்லியன் ரூபாய் (1.46 பில்லியன் டொலர்) ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்துடன் நேரடி மோதலுக்கு அரசியல்ரீதியாகத் தயாராக வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்தை மட்டுப்படுத்தவும் நாசப்படுத்தவும் இந்த ஆண்டு அனைத்தையும் செய்த தொழிற்சங்கங்களின் துரோகத்திலிருந்து தொழிலாளர்கள் தேவையான அரசியல் படிப்பினைகளைப் பெற வேண்டும்.
டிசம்பர் 7 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அறிக்கை விளக்கியது போல், தொழிற்சங்கங்கள் கடந்த வாரம் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததுக்கான காரணம், தங்களையும் தங்கள் குடும்பங்களையும் கொண்டு நடத்துவது மேலும் மேலும் கடினமாகி வருவதால் தொழிலாளர்கள் மத்தியில் எழும் கோபத்தைத் தணிப்பதற்கே ஆகும். தொழிற்சங்கங்கள் இந்த பரந்த எதிர்ப்பை முதலாளித்துவ எதிர்க் கட்சிகளின் பின்னால் கட்டிப்போடுவதற்கு முயல்கின்றன. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தில் இருந்தால் அதே கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தும்.
தொழிலாளர்களின் வர்க்க நலன்களுக்காகப் போராடுவதற்கு, தொழிற்சங்கங்கள் மற்றும் ஐ.ம.ச., ஜே.வி.பி.மற்றும் தமிழ் கூட்டமைப்பு உட்பட அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற அவற்றின் போலி இடது ஏஜண்டுகளிடம் இருந்தும் சுயாதீனமாக, ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத் தளத்திலும், பெருந்தோட்டத்திலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. கிராமப்புற ஏழைகளையும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைக்கிறோம்.
சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றது.இந்த கோரிக்கைகளைச் சூழ தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்கள் ஒரு அரசியல் போராட்டத்தை நடத்த முடியும்:
* சர்வதேசநாணய நிதிய சிக்கன திட்ட நிரலை நிராகரி! ஊதிய வெட்டு வேண்டாம்! ஓய்வூதிய வெட்டு வேண்டாம்!
* பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு வேண்டாம்! அனைவருக்கும் போதுமான உணவு மற்றும் சத்தான உணவை உறுதி செய்!
* அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்! பெரும் பணக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, பெரிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் தேசியமயமாக்கு!
சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்க, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் சுயாதீனமான இயக்கத்தை முன்னெடுப்பதற்கு, நடவடிக்கைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்கிறது.
இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இதில் பிராந்தியத்திலும் உலக அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தை கட்டியெழுப்ப இலங்கை தொழிலாளர்கள் உதவுகிறார்கள்.
இலங்கை அரச மருத்துவமனைகளில் கட்டண வாட்டுகளை உருவாக்கும் திட்டத்தை தோற்கடி!
இலங்கை ஜனாதிபதி “கடினமான காலங்கள் தவிர்க்க முடியாதவை” என அறிவித்துள்ளார்