சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டுக்கான அறிக்கை

21ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அமைப்புகளான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

'சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை உருவாக்குக!தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய எதிர்த்தாக்குதலுக்காக!' என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கு எரிக் லண்டன் அளித்த அறிக்கை.

லண்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராவார். மாநாடு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய முழு அறிக்கையையும் படிக்கவும்.

“சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டணி உருவாக்குங்கள்! தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர்த்தாக்குதலுக்காக!' என்ற தீர்மானத்தை இந்த மாநாட்டில் நிறைவேற்ற ஆதரவளித்து பேசுகிறேன்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவது கட்சிக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் ஒரு முன்னோக்கிய முக்கிய படியாக இருக்கும். IWA-RFC என்பது சாமானிய தொழிலாளர்களின் ஜனநாயக சுய-ஒழுங்கமைப்பை எளிதாக்குவதற்கும், உலக அளவில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பலத்தை கட்டவிழ்த்து விடுவதற்கும் தேவையான முன்முயற்சியாகும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான IWA-RFC இன் அவசியத்தை, 2021 மே மாதம் அதை கட்சி நிறுவியதில் இருந்து அதன் அனுபவங்கள் உறுதிப்படுத்துகின்றன. IWA-RFC உம் அதனுடன் இணைந்துள்ள குழுக்களும் மில்லியன் கணக்கான பலமான உலகத் தொழிலாளவர்க்கம் அதன் நலன்களை வெளிப்படுத்தும், தேசிய எல்லைகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு பல தசாப்த கால சமூக எதிர்ப்புரட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைப்புரீதியான வடிவமாகும். IWA-RFC மூலம், தொழிலாள வர்க்கம் உலக சோசலிசப் புரட்சிக்கான பாதையை உருவாக்கக்கூடிய உலகளாவிய ஒருங்கிணைந்த எதிர்த்தாக்குதலை தொடங்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும், நிலைநிறுத்துவதற்கும் முற்போக்கான சமூக சக்தியாக அதன் பங்கை உணர்ந்து கொள்ளும்.

தோழர் நோர்த் தனது ஆரம்ப அறிக்கையில், கட்சி ஒரு சில எதிர்கால நெருக்கடிக்கு மட்டும் தயாராகவில்லை மாறாக ஏற்கெனவே காணப்படும் சகாப்தகால வடிவத்திலான நெருக்கடிக்கு தயாராகுகின்றது என்று வலியுறுத்தினார். முதலாளித்துவ வர்க்கம் உலகை பேரழிவிலிருந்து இன்னும் பெரிய பேரழிவிற்கு இழுத்துச் செல்கிறது. போர், தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி, முதலாளித்துவ ஜனநாயகத்தின் சரிவு, உணவுப் பற்றாக்குறை, பூமியின் அழிவு ஆகிய அனைத்தும் முதலாளித்துவ வர்க்கம் பில்லியன் கணக்கான மக்களைப் பலி கொடுக்கத் தயாராக உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக சுரண்டலின் மூலம் குவித்துள்ள செல்வத்தை பாதுகாப்பதற்காக மனித நாகரீகம், உற்பத்தி, கலை, இசை, இலக்கியம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றில் நமது முன்னேற்றங்கள் அனைத்தையும் அழிக்க முனைகின்றது.

இந்த நெருக்கடியிலிருந்து எழும் ஆழமான ஆபத்துகளை நாம் வலியுறுத்துவது சரிதான். நாம் எச்சரிக்கையை ஒலிக்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையைப் பற்றிய தலைவிதிப்படியே நடக்கும் என்ற உணர்வும் அல்லது நம்பிக்கையின்மையும் முற்றிலும் பொருத்தமற்றதுடன் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கும் புரட்சியின் தலைவிதிக்கும் ஆழமான பாதிப்பையே ஏற்படுத்தும். ஒரு நல்ல மற்றும் எளிதான வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் கொள்கைகள் தொடர்பான தமது எதிர்ப்பை கைவிடுவதை, ஒரு நியாயப்படுத்தலாக கொள்ளும் சுய பரிதாபப்படும் குட்டி முதலாளித்துவ பிரிவினரிடம் விட்டுவிடுவோம்.

அத்தகைய மனப்பான்மைக்கு யதார்த்தத்துடன் எந்த தொடர்பும் இல்லை. இந்த நெருக்கடியிலிருந்து விடுபட ஒரு வழி இருக்கிறது என்பதையும், ஆளும் வர்க்கத்தின் நடத்தையில் எந்த அளவுக்கு பொறுப்பற்ற தன்மை, விரக்தி மற்றும் பைத்தியக்காரத்தனம் அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உலக சமுதாயத்தின் புரட்சிகர மாற்றத்திற்கு மிகவும் முதிர்வடைந்த அல்லது அதிக முதிர்ந்த நிலைமைகள் உள்ளன என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதுதான் மார்க்சிஸ்டுகளின் ஆரம்பப்புள்ளியாகும்.

ஆபத்துகள் மிகப் பெரியவை. ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கம் பொருளாதாரரீதியாக மிகவும் சக்திவாய்ந்ததாகவும், சர்வதேச அளவில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய தொழிலாள வர்க்கத்தை உலகம் இதுவரை அறிந்திருக்கவில்லை. தற்போதுள்ள உற்பத்தி சக்திகள் மிகவும் மேம்பட்டவையும் மனிதகுலத்தின் விஞ்ஞான வெற்றிகள் மிகவும் பிரமாண்டமானவையும், உற்பத்தி சக்திகளை தனியார் உடைமை மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையில் இருந்து விடுவித்தால் பற்றாக்குறையை நிரந்தரமாக நீக்குவது சாத்தியமாகும்.

கடந்த 30 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியும், குறிப்பாக இணையத்திற்கான விலைகுறைவான, பாரிய அணுகல் அதிகரிப்பும், அதே அளவிற்கு பெரிய கொள்கலன் கப்பல் போக்குவரத்து ஆகியவை சமூக இருப்பை மாற்றியுள்ளன.

கடந்த தசாப்தத்தில், இந்த புறநிலை சமூக நிகழ்ச்சிப்போக்கானது உலகம் முழுவதும் பரவியுள்ள மூன்று பெரும் கிளர்ச்சி அலைகளில் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. ஒவ்வொன்றும் கடந்ததை விட அதிகமான நாடுகளில் அதிகமான மக்களைச் சூழ்ந்துள்ளது. இந்த எழுச்சிகள், முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், 20 ஆம் நூற்றாண்டின் போக்கில் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்க நம்பியிருந்த அனைத்து சக்திகளும் வர்க்கப் போராட்டத்தை அடக்கும் திறனை இழந்துவிட்டன என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்த இளம் மற்றும் நகர்ப்புற தொழிலாள வர்க்கத்தால் ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகள் அவர்களின் மோசமான நிலைமைகளுக்குப் பொறுப்பாகக் கருதப்படுகிறார்கள். 1930 களின் புரட்சிகர எழுச்சிகளின் போது தொழிலாளர் இயக்கத்தை மூச்சுத் திணறடிக்கவும் தவறாக வழிநடத்தவும் இருந்த மூன்றாம் அகிலம் இப்போது இல்லை. இந்த எழுச்சிகளின் தோல்வி பெரும் பயங்கரம், இரண்டாம் உலகப் போர், யூதப்படுகொலை மற்றும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு களம் அமைத்தது.

இன்று, ஒவ்வொரு அலையும் வெகுஜனங்களின் சக்திவாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் சமத்துவ மற்றும் புரட்சிகர அபிலாஷைகளைக் காட்டுகிறது. அதே நேரத்தில் இந்த அபிலாஷைகளை தன்னிச்சையான கோபம் மற்றும் தைரியத்தின் அடிப்படையில் மட்டுமே வெற்றிகொள்ள முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

முதல் அலை 2011 அரபு வசந்தமாகும். இது வட ஆபிரிக்கா முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை உள்ளடக்கியிருந்தது. இரண்டாவது, 2018-19 இன் வெகுஜனப் போராட்டங்கள் நூற்றுக்கணக்கான மில்லியன்களை உள்ளடக்கியிருந்ததுடன், எந்த ஒரு பிராந்தியத்திற்கும் மட்டுப்படுத்தப்படவில்லை. சிலி, லெபனான், சூடான், ஈராக், ஈக்வடோர், பிரான்ஸ் மற்றும் பிற டசின் கணக்கான நாடுகளில் நடைபெற்றது. தன்னிச்சையான எதிர்ப்பின் இரண்டாவது அலையானது, முதல் அலையில் இருந்து தீர்க்கப்படாத குறைபாடுகளை இன்னும் வெடிக்கும் வடிவில் முன்கொண்டுவந்தது. ஆனால், அரபு வசந்தத்தைப் போன்று, இந்த இரண்டாவது அலையானது வெகுஜன மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் நிரந்தரமான எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆளும் வர்க்கம் 'கீழிருந்து வரும் அழுத்தத்திற்கு' சமூகத்தை மேலும் ஜனநாயகமாக்குவதன் மூலம் அல்ல, பொருளாதார சலுகைகளை வழங்குவதன் மூலம் அல்ல, மாறாக மண்டையை உடைப்பதன் மூலம் பதிலளித்தது. ட்ரொட்ஸ்கி இது போன்ற காலங்களை 'முதலாளித்துவத்தின் எதிர்ப்புரட்சிகர மூலோபாயத்தின் மிக உயர்ந்த மலர்ச்சியின் காலங்கள்' என்று விவரித்தார். “இதை நாம் தெளிவாகவும் துல்லியமாகவும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். “எதிர்-புரட்சிகர மூலோபாயம், அதாவது இனிப்பூட்டும், தொழில்முறை திறன்மிக்க-மதகுரு போதனையிலிருந்து இயந்திர துப்பாக்கியால் வேலைநிறுத்தம் செய்வோரை சுடுவது வரை பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தும் கலை இப்போது இருப்பதைப்போல் ஒரு காலத்திலும் இருந்ததில்லை”.

'சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது' என்ற எங்கள் ஜனவரி 2020 அறிக்கையில், தோழர்கள் கிஷோர் மற்றும் நோர்த் ஒரு முன்னணி உளவுத்துறை நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளனர். இது 2018 இலிருந்து தொற்றுநோய்க்கு முன்னதாக 2019 வரைமுதல் உலகத்தை உலுக்கிய சமூக எதிர்ப்பு அலையில் 'தலைமையற்ற புரட்சிகள்' என்று இந்த எழுச்சியை அவர்கள் அழைத்ததைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் வளர்ந்து வரும் உலகளாவிய எழுச்சி 'தலைமையற்றதாக' இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதே நமது பணியாகும்.

தலைமை இல்லாத புரட்சி தோல்வி அடையும். 1921 ஆம் ஆண்டு அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸில் 'புரட்சிகர மூலோபாயத்தின் பள்ளி' என்ற தலைப்பில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதுகிறார்:

முதலாளித்துவம், வரலாற்று முன்னேற்றத்தின் கோரிக்கைகளுடன் முற்றிலும் முரண்பட்ட நிலையில் தன்னைக் கண்டாலும், இன்னும் சக்திவாய்ந்த வர்க்கமாகவே உள்ளது. அதற்கும் மேலாக, அரசியல்ரீதியாக முதலாளித்துவம் அதன் மிகப் பெரிய அதிகாரங்களை, சக்திகள் மற்றும் வளங்களின் மிகப்பெரிய செறிவு, அரசியல் மற்றும் இராணுவ வழிவகைகளை ஏமாற்றுதல், வற்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டல் ஆகியவற்றின் மூலம், அதாவது சமூக அழிவால் அது உடனடியாக அச்சுறுத்தப்படும் தருணத்தில் அதன் வர்க்க மூலோபாயத்தின் மலர்ச்சியை அடைகிறது என்று கூறலாம். போரும் அதன் பயங்கரமான விளைவுகளும் (போர் முதலாளித்துவ சமூகத்தின் கட்டமைப்பிற்குள் உற்பத்தி சக்திகளுக்கு மேலும் வளர்ச்சியடைய இடமில்லை என்ற உண்மையிலிருந்து துல்லியமாக உருவாகின்றது) போரும் அதன் விளைவுகளும் முதலாளித்துவத்தை பயங்கரமான அழிவு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. இது அதன் வர்க்க சுய-பாதுகாப்பின் உள்ளுணர்வை தீவிர உணர்திறன் கொண்டதாக ஆக்கியுள்ளது. ஆபத்து எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, சுய-பாதுகாப்புக்கான போராட்டத்தில் அதன் முக்கிய சக்தியை வெளிப்படுத்தும் தனிமனிதனைப் போலவே வர்க்கமும் அவ்வளவு அதிகமாக வெளிப்படுத்துகின்றது. … அவர்கள் எவ்வளவு சமயோசிதமாக, தந்திரமாக, இரக்கமின்றி செயல்படுகிறார்கள், அவர்களின் தலைவர்கள் அச்சுறுத்தும் ஆபத்தை மிகவும் தெளிவாக அறிந்து கொள்கிறார்கள்.

இந்தப் புரிதலுடன் ஆயுதபாணியாகிய சோசலிச சமத்துவக் கட்சி, புரட்சிகர எழுச்சிகளின் மூன்றாவது அலையின் தோற்றத்தை எதிர்கொள்கிறது. புறநிலை நிகழ்வுகளிலிருந்து புரட்சி தானாகவே வெளிப்படும் என்று காத்திருக்கும் கட்சி அல்ல நாங்கள். நாங்கள் ஒரு புரட்சி செய்யும் கட்சியாகும்.

இன்று, தொற்றுநோயின் அதிர்ச்சிக்குப் பின்னர், இந்த மூன்றாவது சமூக எதிர்ப்பு அலை முதல் இரண்டையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது. தொற்றுநோய், போர் தொடர்பான பற்றாக்குறை மற்றும் பெருகிய முறையில் பொதுவான தீவிர காலநிலை நிகழ்வுகளின் பேரழிவு தரும் சமூக, பொருளாதார மற்றும் தனிப்பட்ட தாக்கத்தால் தீவிரமடைந்த இந்த எதிர்ப்பு அலையானது மில்லியன் கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான மில்லியன் அல்ல, ஆனால் பில்லியன் கணக்கான மக்களை உள்ளடக்கும்.

இந்த உலக இயக்கம், எந்த நாட்டிற்கும் அல்லது பிராந்தியத்திற்கும் தனிமைப்படுத்தப்படவில்லை. இது ஒரு வார இடைவெளியில் வேகமாக எழுந்தது. லெனினும் ட்ரொட்ஸ்கியும் ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் முதலாளித்துவம் 'அதன் சங்கிலியின் பலவீனமான இணைப்பில்' உடைந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்கள். இப்போது தொழிலாளர்கள் உலகின் அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகைகளின் கீழ் அணிவகுத்து வருகின்றனர். இந்த இயக்கம் உலக ஏகாதிபத்தியத்தின் மையங்களில் மிகவும் முன்னேறிய தொழிற்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுடன், தெற்கில் மிகவும் ஏழ்மையான முறைசாரா தொழிலாளர்களை ஒன்றிணைத்துள்ளது. இது ஒரு இணைப்பு உடைவது பற்றிய கேள்வி அல்ல; முழு சங்கிலியும் முடிவிற்கு வந்துள்ளது.

இந்த மூன்று சமூக எதிர்ப்பு அலைகளில் தொழிலாள வர்க்கம் விமர்சனரீதியான அனுபவங்களை கடந்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தின் கோரிக்கைகள் சம்பள ஒப்பந்தப் பிரச்சனைகள் மீது மட்டுமல்லாது அடிப்படை சமூகப் பிரச்சனைகள் தொடர்பாகவும் இருக்கின்றன. அரசியல் பிரச்னைகள் அதிகம் முன்னணிக்கு வருகின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஈட்டி முனையாக இலங்கை இருக்கின்றது. 1917 இல் ரஷ்ய தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட சமூக கேள்வியான எந்த வர்க்கம் உலகத்தை ஆளுவவது? என்பதை இலங்கை மக்கள் முதலில் முன்வைக்கத் தொடங்கியுள்ளதுடன், விரைவில் அது பில்லியன் கணக்கானவர்களின் சிந்தனையில் தோன்றும்.

இந்தக் கேள்விக்கான பதிலை இனிவரும் காலங்களில் எமது கட்சியின் செயற்பாடுகள் தீர்மானிக்கும். சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள் முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியை தீர்ப்பதில் தீர்க்கமான காரணியாகும். முந்தைய காலத்தில் சாத்தியமில்லாத சாதனைகள் தற்போது சாத்தியமாகியிருப்பதை கட்சியின் அனுபவங்கள் காட்டுகின்றன. ஆனால் அவை தவிர்க்க முடியாதவை அல்ல. நாம் அவர்களுக்காகப் போராடும்போது, நம்மைக் குறைத்து மதிப்பிட மறுக்கும்போது, நம்மால் சாதிக்கமுடியும் போது, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் நாம் திட்டமிட்டமுறையில் தலையிட்டு, அவர்கள் ஏன், எதற்காகப் போராடுகிறார்கள் என்பதைக் காட்ட தொழிலாளர்களுடன் இணைந்து போராடும்போது, அவர்கள் சோசலிசத்திற்கு வெற்றிகொள்ளும் போதுதான் அவை நடைபெறுகின்றன. இந்த மதிப்பீடு, கட்சி, அதன் கிளைகள் மற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட தோழரின் பணியின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இந்த அறிக்கை IWA-RFC ஐ கட்டமைப்பதற்கான தீர்மானத்தை ஆதரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இது ஒரு சரியான நேரத்தில் தந்திரோபாய சூழ்ச்சியாக அல்ல, மாறாக உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தின் அவசியமான கூறுகளாகும்.

21 ஆம் நூற்றாண்டின் சர்வதேச தொழிலாள வர்க்கம்

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) என்பது 21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தன்மையுடன் தொடர்புபட்டிருக்கும் அமைப்புரீதியான வடிவமாகும். 1980 முதல் 2020 வரை, உலகின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தொழிலாள வர்க்கத்தின் அளவை 2 பில்லியன் மக்களால் அதிகரித்தது. உலக மக்கள்தொகையில் பெரும்பாலோர் இப்போது உலக வரலாற்றில் முதல்முறையாக நகரங்களில் வாழ்கின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கில் உயர்கிறது.

இந்தியா, சீனா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் பின்தங்கிய கிராமப்புறங்களில் இருந்து பெருநகரங்களுக்கு நகர்ந்த பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஒற்றை வாழ்நாளில் பல நூற்றாண்டுகளை கடந்துள்ளனர். அடுத்த தசாப்தங்களில் ஒரு பில்லியன் ஆபிரிக்கத் தொழிலாளர்கள் உலகளாவிய தொழிலாளர் படையில் நுழைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக வர்த்தகத்தில் தொண்ணூறு சதவிகிதம் உலகின் ஒரு சில டசின் மிகப்பெரிய பெருநகரங்களின் வழியாக பாய்கிறது. அங்கு தொழிலாள வர்க்கம் அபரிமிதமான ஆற்றல்மிக்க நிலையை கொண்டிருப்பதுடன் மற்றும் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முறையால் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள தொழிலாளர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களில், ஒவ்வொரு நாளும் சமத்துவமின்மையை அனைவரும் கண்கூடாக பார்க்கவும் அனுபவிக்கவும் கூடியதாக இருப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் பிரிவினரின் கூட்டுத்தொகையை விட மிக அதிகமான சக்தியை அவர்களுக்கு வழங்குகிறது. இங்கிலாந்தின் Royal Institution of Chartered Surveyors எழுதியது போல், “நகர்ப்புறங்கள், தொலைதூர மாற்றத்தின் மையங்களாக இருக்கலாம் என்பதுடன் செயல்பாடு மற்றும் கற்றலின் சூறாவளிகள் மற்றும் மாற்றத்தின் உந்துசக்தியாகலாம். ஆனால் அவை கட்டுப்பாடற்றதாக இருந்தால், அவை மிகப்பெரிய ஆபத்தையும் மற்றும் சாத்தியமான உறுதியற்ற தன்மையையும் கொண்டிருக்கலாம். புரட்சி எங்கிருந்து தொடங்குகிறது? எப்போதும் நகரங்களில்.”[1]

முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் முந்தைய காலகட்டத்தில் மெதுவான மற்றும் தாமதமான பொருளாதார வளர்ச்சி பிரிவினைவாதத்தையும் மையவிலக்கு போக்குகளையும் தூண்டியது போல், இன்று பூகோளமயமாக்கல் நிகழ்போக்கு அதற்கு நேர்மாறாக உள்ளது. இது உலகெங்கிலும் உள்ள வாழ்க்கை நிலைமைகளில் ஒற்றுமையை உருவாக்கி, தேசியம், இனம் அல்லது இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உழைக்கும் மக்களின் சமூகக் கண்ணோட்டத்தில் ஒற்றுமைக்கான அடிப்படையை உருவாக்குகிறது. இந்த புறநிலை நிகழ்ச்சிப்போக்கானது பிரிவினைவாதம் மற்றும் தேசியவாதத்திற்கான அரசியல் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. அவை பழமையானதாகவும் பகுத்தறிவற்றதாகவும் தோன்றி தேசிய தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் மேலாதிக்கத்தை உடைக்க வழிவகுக்கின்றன.

மூச்சடைக்கக்கூடிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பொருளாதாரத்தை மாற்றியமைத்து, அரசியல் நனவு மற்றும் மனித கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கான புதிய எல்லைகளைத் திறந்துவிட்டன. 16 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவின் விவசாயிகளின் சிந்தனையில் கூட்டன்பேர்க்கின் அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பை விடவும் கூட சமூக முக்கியத்துவத்தை விஞ்சும் அளவில் தகவல்களும் அறிவும் இப்போது கிடைக்கின்றன.

சமூக ஊடகங்களின் ஜனநாயக சாராம்சம், பல்வேறு தளங்களின் பெருநிறுவன உரிமையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அதன் புரட்சிகர ஆற்றலில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இது கூட முன் எப்போதும் இல்லாத வகையில் வெகுஜன எதிர்ப்பு அலைகளைத் தூண்டுவதற்கு போதுமானதாக உள்ளது. அச்சு இயந்திரம் மதகுருக்களின் தகவல் ஏகபோகத்தை வெடிக்கச் செய்தது போல, சுரண்டப்பட்ட விவசாயிகளை லூத்தரின் பைபிளுக்கு அறிமுகப்படுத்தி, அந்த நேரத்தில் உலக வரலாற்றில் மிகப் பெரிய புரட்சிகர இயக்கத்தைத் தூண்டியது போல, இன்று இணையம் வழியாக உலக சோசலிச வலைத் தளம் பொய்கள் நிறைந்த உலகில் உண்மையின் கலங்கரை விளக்காக இருந்து, கைத்தொலைபேசிகளையும் கணினித் திரைகளையும் மேலும் மேலும் ஒளிரச் செய்து, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் விரைவாகத் திறக்கும் சிந்தனைக்கு அறிவொளியூட்டுகிறது.

2000 முதல் 2020 வரை, கிட்டத்தட்ட 5 பில்லியன் மக்கள் இணையத்தை அணுகியுள்ளனர். இது, தேசிய குறுகிய பார்வை, சமூக பின்தங்கிய நிலை, கல்வியறிவின்மை மற்றும் கிராமப்புற மூடநம்பிக்கையின் மரபு ஆகியவற்றிற்கு பெரும் அடியை கொடுத்தது. ட்விட்டர் 50 மில்லியன் பயனர்களை அடைய எடுத்த நேரம், உதாரணமாக ஒன்பது மாதங்களாகும். முன்னர் இவ்வளவு பேரை சென்றடைய தொலைக்காட்சிக்கு 13 வருடங்களும், வானொலிக்கு 38 வருடங்களும் தேவையாக இருந்தது.

லெனின், ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி பற்றி எழுதுகையில், ரஷ்ய தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சியின் ஆழமான புரட்சிகரமான தாக்கங்களை அங்கீகரித்து பழைய விவசாய மற்றும் கிராமப்புற சமுதாயத்திலிருந்து ஒரு சக்திவாய்ந்த நகர்ப்புற தொழிலாள வர்க்கத்தின் தோற்றத்தைப்பற்றி பின்வருமாறு எழுதினார்:

பழைய பொருளாதார அமைப்பில் முதலாளித்துவம் கொண்டு வரும் அனைத்து மாற்றங்களும் தவிர்க்க முடியாமல் மக்களின் சிந்தனையின் உருவாக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பொருளாதார வளர்ச்சியின் அவ்வப்போதான தன்மை, உற்பத்தி முறைகளில் விரைவான மாற்றம் மற்றும் உற்பத்தியின் மகத்தான செறிவு, அனைத்து வகையான தனிப்பட்ட சார்பு மற்றும் ஆணாதிக்க உறவுகளின் மறைவு, மக்கள்தொகையின் நகர்வு, பெரிய தொழில்துறை மையங்களின் செல்வாக்கு போன்ற இவை அனைத்தும் உழைக்கும் வர்க்கத்தின் தன்மையில் ஒரு ஆழமான மாற்றத்தை கொண்டுவரும்.

லெனின் இந்த வார்த்தைகளை 1899 இல் எழுதினார். அப்போது ரஷ்ய தொழிலாள வர்க்கம் மக்கள் தொகையில் ஒரு சிறிய பகுதியாக இருந்ததுடன், அவர்கள் கிராமப்புறங்களிலும் மற்றும் கல்வியறிவற்றவர்களாக இருந்தனர். இன்று, 21 ஆம் நூற்றாண்டில், தொழிலாள வர்க்கத்தின் குணாதிசயத்தில் மாற்றமும் அதன் சிந்தனையின் உருவாக்கமும், லெனின் மிகவும் செழுமையாகக் கூறியதுபோல் இன்னும் ஆழமானது.

சோசலிசப் புரட்சியின் தசாப்தம்

கடந்த 20 ஆண்டுகள் தொழிலாள வர்க்கத்தின் எப்போதும் விரிவடையும் மற்றும் பெருகிய முறையில் உலகளாவிய இயக்கத்தினை கண்டது. World Protests (உலக எதிர்ப்புகள்) இன் சமீபத்திய ஆய்வின் ஆசிரியர்கள்: 21 ஆம் நூற்றாண்டில் முக்கிய ஆர்ப்பாட்ட விடயங்கள் பற்றிய ஆய்வு குறிப்பிடுவது போல், “வரலாற்றில் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் மாற்றத்தைக் கோரி, இருக்கும் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் காலங்கள் உள்ளன. இது 1830-1848 இல், 1917-1924 இல், 1960 களில் நடந்தது. அது இன்று மீண்டும் நடக்கிறது.'[2]

அரபு வசந்தத்தில் இருந்து 2018-19 வெகுஜன சமூக எதிர்ப்புகள், மேலும் 2022 இன் தொடக்கத்தில் எதிர்ப்புகள் வெடிக்கும்வரை, நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டத்தில் நுழைந்துள்ளனர். இந்தியாவில், 2020 பொது வேலைநிறுத்தம் 250 மில்லியன் தொழிலாளர்களை உள்ளடக்கியிருந்தது. இது வரலாற்றில் மிகப்பெரிய வேலைநிறுத்தமும், பூமியிலுள்ள நான்கு நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விடவும் அதிகமாகும்.

உலக எதிர்ப்புகளின் ஆசிரியர்களின் கூற்றுப்படி, “2006ஆம் ஆண்டிலிருந்து ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து” இருப்பது மட்டுமல்லாமல், “மோசமான ஜனநாயகங்கள், அரசியல்வாதிகள் மீதான விரக்தி மற்றும் அரசாங்கங்கள் மீதான நம்பிக்கையின்மை போன்றவற்றால் போராட்டங்கள் மேலும் அரசியல்மயமாகியுள்ளன. ”ஒற்றை-பிரச்சினை தொடர்பான எதிர்ப்புகள் ''ஒரு கூட்டு எதிர்ப்பு'களால் மாற்றப்பட்டுள்ளன என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை எழுப்பினர். ஆசிரியர்கள் மேலும் 'பல நாடுகளில் ஒரே நேரத்தில் பல சர்வதேச மற்றும் உலகளாவிய எதிர்ப்புகள் நடந்துள்ளன. மேலும் அவற்றில் எண்ணிக்கையும் பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது' எனக் கூறுகிறார்கள் [3]

ஆசிரியர்கள் விளக்குகிறார்கள்:

இந்த துன்பங்கள் காலப்போக்கில் எவ்வாறு வளர்ச்சியடைந்தன? 2006 ஆம் ஆண்டு தொடங்கி, 2020 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்த எதிர்ப்புக்களில் ஒரு நிலையான அதிகரிப்ப உள்ளது. இதை பொதுமைப்படுத்துவது கடினம் என்றாலும், 2007-2008 இல் உலக நிதி நெருக்கடி வெளிவரத் தொடங்கும் போது, எதிர்ப்புகளின் எண்ணிக்கையில் ஆரம்ப உயர்வைக் காண்கிறோம். 2010 க்குப் பின்னர் நிதிய ஊக்குவிப்பு மற்றும் உலகளவில் சிக்கன வெட்டுக்கள் மற்றும் செலவு-சேமிப்பு சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் எதிர்ப்புகள் தீவிரமடைந்தன, பின்னர் அவை 2012-2013 இல் உச்சத்தை எட்டின. 2010-2014 காலகட்டத்தில் பொருளாதாரரீதியாக நீதி மற்றும் சிக்கன எதிர்ப்பு சீர்திருத்தங்களுக்காக எதிர்ப்பாளர்கள் முதன்மையாக ஆர்ப்பாட்டம் செய்தனர். தீர்க்கப்படாத குறைகள், சில கெளரவமான வேலைகள், மோசமான சமூகப் பாதுகாப்பு, பொதுச் சேவைகள், விவசாய மற்றும் நியாயமான வரியின் தோல்விகள் ஆகியவை இப்போராட்டங்கள் மேலும் அரசியல்மயமாக காரணமாக இருந்ததுடன், 2016 இல் தொடங்கி ஒரு புதிய போராட்ட அலையைத் தூண்டியது. இது ஜனநாயகத்தின் தோல்விகளால் தூண்டப்பட்டது. 2016 முதல், எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. இவை பெரும்பாலும் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பிற்கு எதிராக 'பன்முகப்பட்ட எதிர்ப்புகளாக' (பல பிரச்சினைகளுக்கான எதிர்ப்பு) தோன்றின. பல தசாப்தங்களாக புதிய தாராளமயக் கொள்கைகள் அதிக சமத்துவமின்மையை உருவாக்கியுள்ளதுடன் குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமானம் மற்றும் நலனைக் குறைத்துள்ளன. இவை, விரக்தி மற்றும் அநீதியின் உணர்வுகளுக்கு தீயூட்டி, தவறான ஜனநாயகங்கள், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் தோல்விகள் மற்றும் அரசாங்கங்கள் மீதான நம்பிக்கையின்மை ஆகியவற்றால் தூண்டப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் சமூக அமைதியின்மையை அதிகப்படுத்தியுள்ளது.

ஆய்வாளர்கள் மற்றொரு அவதானிப்பு செய்கிறார்கள்:

2010-2014 காலகட்டத்தில் எதிர்ப்பாளர்கள் முதன்மையாக பொருளாதார நீதிக்காகவும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்பதை எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது. இருப்பினும், அவர்களின் குறைகள் புறக்கணிக்கப்பட்டபோது, வேலையின்மை, போதிய சமூகப் பாதுகாப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் பலவற்றின் காரணமாக விரக்தி ஏற்பட்டது, எதிர்ப்புகள் அரசியல்ரீதியானதாக மாறியது. அரசாங்கங்களின் இந்த தோல்விகள் 2016-2017 இல் தொடங்கி ஒரு புதிய போராட்ட அலைக்கு வழிவகுத்தது. இந்த போக்கு மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் வெளிப்படுவதுடன், ஒவ்வொரு பிராந்தியத்திலும் காணப்படுகிறது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் இந்த போக்கு இரண்டு முறை கூட காணப்படுகிறது: 2011 இல் அரசியல் பிரதிநிதித்துவ தோல்விக்கான எதிர்ப்புகள் பொருளாதார நீதிக்கான எதிர்ப்புகளை விட அதிகமாகியது. பின்னர் 2019 இல் இரண்டாவது உருவாகியது. இதை சில பார்வையாளர்கள் இரண்டாவது அரபு வசந்தம் என்று அழைத்தனர். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அரசியல் தோல்விகளுக்கு எதிரான எதிர்ப்புகளை மீறும்வரை பொருளாதார நீதிக்கான எதிர்ப்பு நிகழ்வுகள் மிக அதிகமாக இருந்தன. [4]

தொழிலாள வர்க்கம் மிக அடிப்படையான அரசியல் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுகிறது என்பதை இது முற்றிலும் தெளிவாக்குகிறது. இது IWA-RFC மற்றும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் சோசலிசத்தை அறிமுகப்படுத்துவதற்கான போராட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

தேசிய தொழிற்சங்கங்களின் வீழ்ச்சி

தொழிலாள வர்க்கம் அளவிலும் பொருளாதார பலத்திலும் அபரிமிதமாக வளர்ந்த பல தசாப்தங்களில், தேசிய தொழிற்சங்கங்கள் ஆதரவை வென்றெடுக்கத் தவறியது மட்டுமல்லாமல், அவை உலகளாவியரீதியில் உறுப்பினர் எண்ணிக்கையில் சரிவையும், அவற்றின் சட்டபூர்வ தன்மையிலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் முக்கியமற்றவர்கள் என்றோ அல்லது நமது மூலோபாயத்தின் அடிப்படையில் அவர்களை இரண்டாம் பட்சமாக மாற்ற வேண்டும் என்றோ இது பரிந்துரைக்கவில்லை, ஆனால் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் சதவீதம் உலக அளவில் 1990 இல் 36 சதவீதத்தில் இருந்து 2016 இல் 18 விகிதமாக வெகுவாகக் குறைந்துள்ளது. அமெரிக்காவில் தனியார்துறை ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 1970 இல் தொழிற்சங்கப்படுத்தப்பட்டனர். இன்று வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். மேற்கு ஆபிரிக்காவில், அனைத்து தொழிலாளர்களில் 35 சதவீதம் 1990 இல் தொழிற்சங்கமயப்பட்டிருந்தனர். ஆனால் இப்போது 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். தென்கிழக்கு ஆசியா மற்றும் அரபு நாடுகளில், விகிதம் 1980 இல் 28 சதவீதத்திலிருந்து முறையே 12 மற்றும் 7 சதவீதமாகக் குறைந்தது.

ஒரு காலத்தில் முதலாளித்துவத்தின் மிக சக்திவாய்ந்த தொழிற்சங்கங்களின் தாயகமாக இருந்த மேற்கு ஐரோப்பாவில், தொழிற்சங்கமயமாக்கல் விகிதம் 1980 இல் 40 சதவீதத்திலிருந்து இன்று 20 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது. ஆனால் இது இந்த அமைப்புகளின் மாறிவரும் வர்க்கத் தன்மையை ஓரளவு மட்டுமே வெளிப்படுத்துகிறது. 2020 ஆம் ஆண்டின் அனுபவ ஆய்வின்படி, ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் உள்ளிட்ட ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் பெரும்பகுதியில் 'நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர வர்க்க ஊழியர்கள் தொழிற்சங்கங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்'. 'இந்த நாடுகளில், தொழிலாள வர்க்கத்தை சேர்ந்த ஊழியர்கள் 35 முதல் 50 சதவிகிதமே தொழிற்சங்கமயப்பட்டவர்களாக உள்ளனர்.'[5]

அமெரிக்காவில், தொழிலாளர் புள்ளியியல் அலுவலகத்தின்படி, நாட்டின் தொழிற்சங்க உறுப்பினர்களில், 4 மில்லியன் பேர் 'நிர்வாக மற்றும் தொழில் தகுதி பெற்ற' வேலைகளைச் சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் உற்பத்தி துறையில் உள்ள வெறும் 1.2 மில்லியன் உடன் ஒப்பிடுகையில் 7.7 மில்லியன் பேர் பொதுத்துறையில் பணிபுரிகின்றனர். போக்குவரத்துறையின் 1.1 மில்லியனும், சேவை துறையில் 2.3 மில்லியனும் தொழிற்சங்க உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

மேலதிகமாக, நாட்டிற்கு நாடு, 'தொழிற்சங்க ஊதிய மேலதிககொடுப்பனவு' என்று அழைக்கப்படுவது சரிந்து வருகிறது. Dartmouth கல்லூரியால் வெளியிடப்பட்ட 2020 ஆய்வறிக்கை பிரிட்டனில், '1990களின் இறுதியில் தனியார் துறையில் ஊதிய உடன்பாடுகளில் தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டவற்றில் அது கலந்துகொள்ளாததை விட அதிகமாக இல்லை.'[6]

அமெரிக்காவில் ஊதிய கொடுப்பனவுகள் குறைந்து வருகிறது. அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின்படி, 2021ல் அமெரிக்காவில் வருடாந்திர ஊதிய வளர்ச்சி வெறும் 4.5 சதவீதமாக இருந்தது. தொழிற்சங்க ஊழியர்களின் உண்மையான ஊதியம் சராசரியாக வெறும் 3.3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. தொழிற்சங்கங்கள் தற்போதைய பணவீக்க விகிதத்தை விட மிகக் குறைவாக ஊதிய உயர்வில் பல ஆண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதால், தொழிற்சங்கங்களில் இல்லாத தொழிலாளர்களின் விகிதத்தை விட கணிசமாகக் குறைவாக உள்ளது.

தொழிலாள வர்க்கம் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவும் வளர்ந்தபோது, தேசிய-அரசு அமைப்புகளிலும் ஏகாதிபத்திய அரசிலும் வேரூன்றியிருந்த தொழிற்சங்கங்கள், பல தசாப்தங்களாக காட்டிக்கொடுப்பதன் மூலம் தங்களின் வளர்ந்து வரும் அதிகாரத்தை நனவுபூர்வமாக குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. துல்லியமாக அவர்களின் புறநிலை சக்தி வளர்ந்து கொண்டிருந்த போது, தொழிற்சங்கங்கள் அவர்களை பலவீனப்படுத்தி, மேலும் அவர்களின் தேசிய குணாம்சத்தால் உற்பத்தியின் பூகோளமயமாக்கலுக்கு பதிலளிக்க முடியாமல் போனது. இந்தக் காலக்கட்டத்தில், தொழிற்சங்கங்கள் 'அவர்களின்' அரசாங்கங்கள் மற்றும் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து ஊதியங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் சலுகைகளைக் குறைப்பதற்கும் உலகளாவிய பந்தயத்தில் ஈடுபட்டன. ஒவ்வொரு நாட்டிலும், தொழிற்சங்கங்கள் அரசாங்கங்களுடன் பெருநிறுவன கூட்டணியில் நுழைந்து நிறுவனங்கள் மற்றும் அரசின் தொங்குதசையாக மாறின. உலக அளவில் மில்லியன் கணக்கான தொழிற்சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளும் அடையாளம் காணக்கூடிய ஒரு தனித்துவமான ஒட்டுண்ணி சமூக அடுக்கை உருவாக்குகின்றனர்.

21ம் நூற்றாண்டின் புதிய தொழிலாள வர்க்கத்திலிருந்து இருந்து வெளிப்படும் சமூக எதிர்ப்பின் வெடிப்பை, தொழிற்சங்கங்களால் தடுக்க முடியாமல் போய்விடும் என்ற கவலைகள் ஆளும் வட்டாரங்களில் அதிகரித்து வருகின்றன. ரைட்ஷேரிங், டெலிவரி (ridesharing, delivery) மற்றும் பிற குறைந்த ஊதிய வழமையற்ற மலிவு தொழில் பயன்பாடுகள் போன்ற 'இலத்திரனியல் இயங்குதளத்துறை மேடைகளில் (digital labour platforms) தொழிலாளர் எதிர்ப்பின் உலகளாவிய பகுப்பாய்வு' என்ற ILO வின் ஜூன் 2022 ஆய்வுத்தாளை எடுத்துக் கொள்ளுங்கள்.

உலகளாவிய இலத்திரனியல் இயங்குதளத்துறையின் (digital platform), ஆய்வுத்தாளின் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்:

தொழிலாளர் உறவுகளின் ஸ்தாபகமயப்பட்ட கட்டமைப்பிற்கு எளிதில் பொருந்தாதுள்ளது. பொதுவான வேலைவாய்ப்பு மற்றும் கூட்டு பேரம்பேசல் அரிதாக உள்ளதுடன் மற்றும் தொழிற்சங்கமயமாக்கல் விகிதம் குறைவாக உள்ளது. சில இயங்குதளத்துறை தொழிலாளர்கள் பொதுவாக ஐரோப்பாவின் சில பகுதிகளில் பாரம்பரிய தொழிற்சங்கங்களில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மிகச் சிறிய, புதிய தொழிற்சங்கங்களின் உருவாக்கமும் உள்ளது. மற்ற இயங்குதளத்துறை பணியாளர்கள் குறிப்பாக உலகத்தின் தெற்கில் குறிப்பிட்ட குறைகள் தொடர்பாக தற்காலிக குழுக்களில் முறைசாரா முறையில் ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, இயங்குதளத்துறை பணியாளர்களின் அதிருப்தியைக் பாரம்பரிய முறைகளில் ஈர்த்துக்கொள்வது கடினமாக உள்ளது. [7]

ஜனவரி 2017 முதல் ஜனவரி 2020 வரை 1,271 தொழிலாளர் போராட்டங்களை அறிக்கை பகுப்பாய்வு செய்து பின்வரும் முடிவிற்கு வருகின்றது:

தொழிலாளர்களின் அமைப்பின் குறிப்பிடத்தக்க எழுச்சி மற்றும் இயங்குதளத்துறை வேலைகளில் போர்க்குணமானது தொழிலாளர் சுய-அமைப்பு நிகழ்ச்சிப்போக்குகளால் கீழே இருந்து உந்தப்படுகிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. நாங்கள் அடையாளம் கண்ட 1,271 எதிர்ப்பு நிகழ்வுகளில், உலகின் தெற்கில் ஒரு சிறுபான்மை விடயங்களில் மட்டுமே தொழிற்சங்கங்களின் ஈடுபாட்டிற்கான சான்றுகள் இருந்தன. அவர்களின் ஈடுபாடும் இன்னும் குறைவாக இருந்தது. இயங்குதளத்துறை பணியாளர்கள் சில பழக்கமான மற்றும் சில குறைவான பழக்கமான பலவிதமான எதிர்ப்பு முறைகளை பின்பற்றுவதையும், உலகின் பல்வேறு பிராந்தியங்களில் கணிசமான மாறுபாடுகளுடன் இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். [8]

ஆய்வின் ஆசிரியர்கள் 'தொழிலாளர் குழுக்கள்' என்று அழைப்பதன் தோற்றம் மிகவும் முக்கியமானது. அவர்கள் விளக்குகிறார்கள்:

தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள கூட்டு அமைப்புகளைப் பொறுத்தவரை, தொழிலாளர்களின் சுய-ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தோராயமாக 80 சதவீத போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தொழிலாளர்களின் குழுக்கள், உலகெங்கிலும் உள்ள இயங்குதளத்துறை தொழிலாளர் போராட்டங்களில் கூட்டு அமைப்பின் முக்கிய வடிவமாக இருந்ததுடன், முக்கியமாக பாரம்பரிய அல்லது புதிய தொழிற்சங்க அமைப்பைக் கணிசமாக விஞ்சியது. நாங்கள் அடையாளம் கண்ட 48.3 சதவீத போராட்டங்களில், வேறு எந்த அமைப்புக்கும் சம்பந்தம் இல்லாமல் ஒரு குழு தொழிலாளர்கள் செயல்பட்டனர். உண்மையில், எங்கள் தரவுகளில், தொழிலாளர்களின் சுய-ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஈடுபடாத எதிர்ப்புகள், அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளை விட மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. இந்த முக்கியமான கண்டுபிடிப்பு, சில அமைப்புகளில் இவை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் தொழிற்சங்க அமைப்பின் முயற்சிகளை விட, தொழிலாளர்களிடையே சுய-அமைப்பு மூலம் இயங்குதள ஊழியர் எதிர்ப்பு எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதை பிரதிபலிக்கிறது. தெளிவாக, இந்தக் கண்டுபிடிப்பு, தொழிற்சங்கங்கள் தொழிலாளர் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன என்ற இன்னும் பரவலாக இருக்கும் ஆனால் தவறான நம்பிக்கையை மறுக்கிறது. [9]

உண்மையில் இதுதான் நிகழ்கின்றது. ஆசிரியர்கள் இன்னும் ஒரு முக்கியமான அவதானிப்பை மேற்கொள்கின்றனர். தொழிலாளர்கள் சுயமாக ஒழுங்கமைக்கும்போது, அவர்கள் ஒரு நிறுவனத்திற்கு எதிராக அல்லாமல், அவர்களின் செயல்களை ஒட்டுமொத்த நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களாகவே பார்க்கிறார்கள் என்பதை எதிர்ப்பு பற்றிய தரவு காட்டுகிறது. ஆசிரியர்கள் பின்வருமாறு எழுதினர்:

எங்கள் தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இயங்குதள வேலையின் சில உண்மையான தனித்துவமான அம்சங்கள் தெளிவாகத் தெரிந்தன. குறிப்பாக, பல நிறுவனங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்ப்புகளின் எண்ணிக்கை, இயங்குதள வேலையின் ஒரு தனித்துவமான பண்பாகும், இது இயங்குதள தொழிலாளர் சந்தைகளின் தன்மையை பிரதிபலிக்கிறது, அங்கு தொழிலாளர்கள் பெரும்பாலும் பல தளங்களில் வாழ்வாதாரத்திற்கு நம்பியிருக்கிறார்கள். இயங்குதள பணியாளர்கள், தனிப்பட்ட நிறுவனங்களை தாண்டிய ஒற்றுமையின் நரம்புகளை வலுப்படுத்துவதன் மூலம், நன்கு பிணைக்கப்பட்டுள்ளனர் என்றும் இது அறிவுறுத்துகிறது. இயங்குதள தொழிலாளர் எதிர்ப்பு என்பது அடிமட்டத்தில் இருந்து வெளிவர முனைகிறது என்பதை அவதானிப்பது முக்கியமாகும். குறிப்பாக உலகின் தெற்கில் இத்தகைய எதிர்ப்புகள் முறைசாரா தொழிலாளர் குழுக்களால் பெருமளவில் வழிநடத்தப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். [10]

முகநூல் பக்கங்கள், டெலிகிராம் குழுக்கள், வாட்ஸ்அப் இடுகைகள் மற்றும் இயங்குதள உழைப்பு போன்ற தொழில்களில் இருந்தே சாமானிய தொழிலாளர் குழுக்கள் இயல்பாக உருவாகி வருகின்றன. IWA-RFC பரந்த சாத்தியமான ஐக்கியத்திற்காக, நிறுவனங்கள் முழுவதும், நாடு முழுவதும், இந்த அல்லது அந்த முதலாளிக்கு எதிராக அல்லாது முழு முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக இந்த சமூகத் தேவையை நிவர்த்தி செய்ய ஒரு பொதுவான போராட்டத்திற்காக போராடுகிறது.

எதிர்வரவிருக்கும் சிக்கனக் கொள்கை அலை

உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தில் தொற்றுநோயும் உக்ரேன் போரும் ஒரு பேரழிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்றுநோய் காரணமாக, 2020 ஆம் ஆண்டில் 1 பில்லியன் முழுநேர வேலைகள் இழக்கப்பட்டன. மேலும் 275 மில்லியன் மக்கள் சர்வதேச வறுமைக் கோட்டின் கீழ் ஒரு நாளைக்கு 3 டாலருக்கு கீழே விழுந்தனர். உக்ரேன் போரினால் தூண்டப்பட்ட உணவு நெருக்கடியின் தாக்கம், பில்லியன் கணக்கானவர்களை பட்டினிக்கு நெருக்கமாக தள்ளியுள்ளது. மேலும் ஏழ்மையான பொருளாதாரங்கள் முதல் மிகவும் முன்னேறிய பொருளாதாரங்கள் வரை பணவீக்கத்தின் தாக்கம் தொழிலாளர்களுக்கு பேரழிவை ஏற்படுத்துகிறது.

சர்வதேச நாணய நிதியம் ஜூலை மாதம் பின்வருமாறு குறிப்பிட்டது, “உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி விலை அதிகரிப்பதன் நேரடி விளைவாக வளரும் நாடுகளில் 71 மில்லியன் மக்கள் வெறும் மூன்று மாதங்களில் வறுமையில் விழுந்துள்ளனர். கோவிட்-19 தொற்றுநோயின் அதிர்ச்சியை விட வறுமை விகிதங்களின் தாக்கம் மிக வேகமாக உள்ளது.' [11]

இந்த நிலைமைகளின் கீழ், பொருளாதார நெருக்கடியால் நசுக்கப்பட்டுள்ள ஆளும் வர்க்கம், முன்னோடியில்லாத வகையில் கொடூரமான தாக்குதலை நடத்தத் தயாராகி வருகிறது. நாங்கள் போர் வரைபடத்தை அல்ல வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தைப் பின்பற்றுகிறோம் என்று கூறும்போது, எதிரிகளின் போர்த் திட்டங்கள் இவ்வாறு உள்ளன.

2022 McKinsey Institute அறிக்கையின்படி, உக்ரேனில் போர், கொரோனா வைரஸ் தொற்றுநோய், அதிகரித்து வரும் பணவீக்கம், உலகளாவிய குறைவான வளர்ச்சி மற்றும் உலகளாவிய கடனின் அதிகரிப்பு ஆகியவை ஒன்றிணைவது பொருளாதார குழப்பங்களின் ஒரு 'பொருத்தமான புயலை' உருவாக்குகின்றன.

ஜூன் மாதம், உலக வங்கி பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டது, 'நீடித்த மந்த-வீக்கநிலை' அச்சுறுத்தலைப் பற்றி எச்சரித்தது. அறிக்கை குறிப்பிட்டது:

சமீபத்திய தசாப்தங்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பல விவசாயத்திலிருந்து தொழிலாளர்களின் மாற்றம் [வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களில்], பூகோளயமாக்கல் மற்றும் விரைவான மக்கள்தொகை அதிகரிப்பு ஆகியவை உள்ளடங்கும் உற்பத்தியின் உலகளாவிய விரிவாக்கத்திற்கு ஆதரவான சக்திகள் விலைவீக்கத்தின் வேகத்தை தற்காலிகமாக மெதுவானதாக்குவதில் பலமாக இருந்தன. இவை மங்கும்போது, சமீபத்திய விநியோக அதிர்ச்சிகளுடன், பணவீக்க அழுத்தங்கள் உருவாகலாம். இது 1970 களின் அனுபவத்தை எதிரொலிக்கும் போது, பெரிய விநியோக அதிர்ச்சிகள், இணக்கக் கொள்கைகள் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கட்டமைப்பு சக்திகளின் மங்கலும் விலை வீக்கமும் நீடித்த மந்த-வீக்க நிலையை தூண்டலாம். தொற்றுநோயால் ஏற்பட்ட விநியோகத் தடைகளும் இப்போது உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் சமீபத்திய விநியோக அதிர்ச்சியால் உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு விலைகளில் ஏற்பட்ட தாக்கமும் 1973 மற்றும் 1979-80 இல் ஏற்பட்ட எண்ணெய் அதிர்ச்சிகளை ஒத்திருக்கிறது. மேலும் 2021 மற்றும் 2024 க்கு இடையில், உலகளாவிய வளர்ச்சியானது 2.7 சதவீத புள்ளிகள் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 1976 மற்றும் 1979 க்கு இடையில் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். [12]

உலக வங்கி மேலும் எழுதியது, 'பணவீக்கம் உயர்ந்திருக்குமானால், அதிக பணவீக்கத்தின் எதிர்பார்ப்புகள் ஊதிய மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயமும் அதிகரிக்கும்.'

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வாழ்க்கைச் செலவுகள் கட்டுப்பாட்டை மீறுவதால், தொழிலாளர்கள் உயிர்பிழைப்புக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அமெரிக்காவில் மத்திய வங்கியினதும் ஐரோப்பாவில் உள்ள மத்திய வங்கிகளினதும் வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக்கைகள், முதலில் ஊதியங்களைக் குறைத்தல், பாரிய வேலைவாய்ப்பின்மையை உருவாக்குதல் மற்றும் ஊதியத்தில் கீழ்நோக்கிய அழுத்தத்தை உருவாக்குதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் உயரும் விலைகளைக் குறைக்க எதுவும் செய்யவில்லை.

எவ்வாறாயினும், 1970களின் பிற்பகுதிக்கும் இன்றைக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவெனில் அது முன்னெப்போதும் இல்லாத அளவு அரசாங்கக் கடன்களாகும். உலக வங்கி ஜூன் 2022 அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது:

1970களின் பிற்பகுதியில் மந்த-வீக்கநிலைக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 50 ஆண்டுகளில் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களின் (EMDE) அரசாங்கக் கடனில் மிகப்பெரிய, வேகமான மற்றும் மிகவும் பரந்த அடிப்படையிலான அதிகரிப்பை உள்ளடக்கிய உலகளாவிய கடன் திரட்சியின் நான்காவது (மற்றும் தற்போதைய) அலையை 2010கள் கொண்டிருநதன. பல முன்னணி தொழிற்துறை கூட்டுழைப்பு சமுதாயங்கள் (LIC) ஏற்கனவே கடன் நெருக்கடியில் அல்லது அதற்கு அருகில் உள்ளன. கடன் அதிகரிப்பின் செங்குத்தான அளவும், வேகமும் அதனுடன் தொடர்புடைய அபாயங்களை உயர்த்துகிறது. பாரம்பரியமற்ற உத்தியோகபூர்வ கடனாளிகள் மற்றும் வணிகக் கடன்கள் வரை அதிகரித்தளவில் வெளிவருதல் காரணமாக கூடுதல் பாதிப்புகள் எழுந்துள்ளன. இது பணவீக்க அழுத்தங்கள் முக்கிய முன்னேறிய பொருளாதாரங்கள் மத்தியில் செங்குத்தான இறுக்கமான நிதிய கொள்கை கட்டாயப்படுத்தும் அபாயத்துடன் இணைந்து, 1980 களில் இருந்ததைப் போல, வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களில் புதுப்பிக்கப்பட்ட தொடர் நிதி நெருக்கடிகளின் அச்சத்தை எழுப்புகிறது. [13]

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது வழங்கப்பட்ட பெருநிறுவன பிணையெடுப்புகள் மற்றும் பல ஆண்டுகளாக பண அச்சடிப்பு ஆகியவற்றால் பாரிய உலகளாவிய கடன் நிலை கணிசமாக மோசமடைந்துள்ளது. இது சமூக திட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் ஊதியங்கள் மீதான இரக்கமற்ற தாக்குதல்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் அழைப்புகளை எழுப்பியுள்ளது. 2010 ஆம் ஆண்டிலிருந்து ஆபிரிக்க நாடுகளின் வருடாந்திர கடன் செலுத்துதல் 17.3 பில்லியன் டாலரில் இருந்து 57.9 பில்லியன் டாலராக நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. ஏகாதிபத்திய சக்திகளின் வட்டி விகிதக் குறைப்புக்கள் கடனுக்கான கொடுப்பனவுச் செலவுகளின் விரைவான உயர்வை உருவாக்குகின்றன.

கடன் மற்றும் மேம்பாடு குறித்த ஐரோப்பிய வலைப்பின்னலால் வெளியிடப்பட்ட 2021 பொருளாதாரக் கட்டுரை, எதிர்கால சர்வதேச நாணய நிதியத்தினது திட்டங்களை மதிப்பாய்வு செய்து 2007-08 'உலகளாவிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து வந்ததை விட மிகவும் கடுமையானதும்', இது 'தொற்றுநோய்க்குப் பிந்தைய நிதி சிக்கன அதிர்ச்சி' பற்றி எச்சரித்தது. வியட்நாம், இந்தோனேசியா, நைஜீரியா, பிரேசில் மற்றும் எகிப்து உட்பட அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளாக இருக்கும். இவை ஒவ்வொன்றும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடுகளாகும். இந்த அறிக்கையின்படி:

செலவினக் கணிப்புகளின் பகுப்பாய்வு, 2021ல் 154 நாடுகளிலும், 2022ல் 159 நாடுகளிலும் சிக்கனக் வெட்டுக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த போக்கு, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 139 நாடுகளில் குறைந்தது 2025 வரை தொடர்கிறது. … சிக்கனத் திட்டமானது 2021 இல் 5.6 பில்லியன் பேர்களை அல்லது உலக மக்கள்தொகையில் சுமார் 75% மக்களை பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2022 இல் 6.6 பில்லியன் அல்லது உலக மக்கள் தொகையில் 85% ஆக உயரும். [14]

உலக அளவில் என்ன வரப்போகிறது என்பதற்கு இலங்கை ஒரு அடையாளம் என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கார்மென் ரெய்ன்ஹார்ட் கூறியதை ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது: “இலங்கையை போன்று இன்னும் நிறைய இருக்கின்றன ... எனது பயம், ஆனால் அது வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பயம் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு விரிவான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். உண்மையில் கணிசமான கடன் குறைப்பு, பல ஆண்டுகளாக நீண்ட காலம் எடுக்கும்'.

பல ஆண்டுகளாகத் தொடரவுள்ள இந்தத் திட்டமிட்ட தாக்குதல், சமூக அதிருப்தியை ஒடுக்கும் தொழிற்சங்கங்களின் திறனைப் பற்றிய கவலைகளை உருவாக்கியுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2021 அறிக்கை, 'தொழிற்சங்கங்கள் பொதுவாக தங்கள் அரசாங்கங்களின் கோவிட்-19 க்கான பிரதிபலிப்பை வரவேற்றன' மற்றும் இப்போது பரவலான கோவிட் இறப்புகள் தொடர்பாக கீழிருந்து எதிர்ப்பை எதிர்கொள்கின்றன என்று குறிப்பிடுகிறது. 2019 சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி, 'தொழிற்சங்கங்கள் தங்களைப் புத்துயிர் பெறச் செய்து, அவை முக்கியமுள்ளதாக இருக்கவேண்டுமானால் தற்போதைய தனது ஆதரவாளர்களுக்கு அப்பால் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. தொழில்மயமான மற்றும் வளரும் நாடுகளில், தொழிற்சங்கங்கள் விரிவடைய போராடுகின்றன. இது 'அவர்களின் நிகழ்ச்சி நிரலை சுருக்கி, கூட்டு பேரம் பேசுதல் மற்றும் சமூக உரையாடல்களில் அவர்களின் சட்டபூர்வமான தன்மையை அரிக்கிறது' என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்தது.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிற்சங்கங்களின் நிலையைப் பற்றிய மற்றொரு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை, பின்வரும் வரிகளில் பல மேற்கோள்களை உள்ளடக்கியது. முக்கிய கிரேக்க தொழிற்சங்க கூட்டமைப்பைக் குறிப்பிடுகையில், 'GSEE உறுப்பினர்களை விரிவுபடுத்தும் பணி மிகவும் கடினமாக உள்ளது, ஏனெனில் கிரேக்கத்தில் தொழிற்சங்கங்கள் மீது நம்பிக்கை இல்லை.' ருமேனியாவில், 'இந்த உண்மையான உரையாடல் இல்லாமை மற்றும் தற்போதைய ஏற்பாடுகளின் கடினத்தன்மை ஆகியவை வேலைநிறுத்தங்கள் மற்றும் தன்னிச்சையான எதிர்ப்புகள் வடிவில் சமூக மோதல்களுக்கு வழிவகுத்தன.' பிரான்சில், தொழிலாளர்கள் 'சமூக பங்காளிகள் மீது குறைந்த அளவிலான நம்பிக்கையை' கொண்டிருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு புகார் கூறுகிறது, இது 'அவர்களின் பங்கு பற்றிய அறிவு இல்லாததால்' என்று அவர்கள் கூறுகிறார்கள். [15]

எல்லா இடங்களிலும், ஆளும் உயரடுக்குகள், தொழிற்சங்கங்களை 'சமூகப் பங்காளிகளாக' வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கும் தொழிலாளர் சக்தியைக் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான அமைப்புகள் என்றும் பார்க்கின்றனர். ஒரு இலத்தீன் அமெரிக்க அரசியல்வாதி, ஏப்ரல் 2022 இல் El País இடம், 'எல்லாமே வெடிக்கவில்லை என்றால், தொழிலாள வர்க்கத்தின் சுற்றுப்புறங்களில் சமூக அமைப்புகள் இருப்பதால் தான்' என்று கூறினார். மேற்கு ஆபிரிக்காவில் அமைதியின்மை தவிர்க்க முடியாதது என்று 2022 இன் ஆக்ஸ்போர்டு பொருளாதார அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் 'தொழிற்சங்கங்கள் மற்றும் பொது சமூக அமைப்புகளுடன் கலந்தாலோசிப்பதன் மூலம் அமைதியின்மையை அமைதிப்படுத்த சிறந்த அரசாங்கங்கள் செய்ய முடியும். இந்த பணி, வாங்கு சக்தியில் ஏற்படும் மேலதிக இழப்புகளால் இன்னும் கடினமாகிவிடும்'.

உலகளாவிய மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்கள் இளைஞர்களிலும் வயதானவர்களிலும் இரக்கமற்ற தாக்குதல்களை முன்னறிவிக்கிறது. வயதானவர்கள் நீண்ட காலம் வாழ்வதுடன் மருத்துவ சிகிச்சைக்காக அதிக பணத்தை வீணடிக்கிறார்கள். இங்கிலாந்து வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணர் சார்லஸ் குட்ஹார்ட்டின் 2020 அறிக்கையின்படி, உயரும் ஆயுட்காலம் 'மோசமான நிதிப் பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. ஏனெனில் மருத்துவம், பராமரிப்பு மற்றும் ஓய்வூதியச் செலவுகள் அனைத்தும் நமது வயதான சமுதாயங்களில் அதிகரித்து வருகின்றன.' [16]

பொருளாதார வல்லுநர்கள் இழிந்த முறையில் 'சார்பு விகிதம்' என்று அழைக்கப்படுவது, உலகம் முழுவதும் கூடிய குழந்தைப் பிறப்பிற்கு காரணமானோர் ஓய்வு பெறுவதால் அதிகரித்து வருகிறது. குட்ஹார்ட்டின் கூற்றுப்படி பிரச்சனை என்னவென்றால், 'உழைக்காத இளைஞர்களும் முதியவர்களும் சாப்பிடுகிறார்கள், ஆனால் உற்பத்தி செய்வதில்லை.' இதன் விளைவாக, 'ஆயுட்காலம் அதிகரிப்பதில் மகிழ்ச்சியற்ற அம்சம் என்னவெனில் முதுமையின் குறைபாடுகள் உள்ளவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது', 'விரைவாகக் கொல்லாது... ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களைச் செயலிழக்கச் செய்யும்' குறைபாடுகளால் அரசாங்கத்திற்கும் பராமரிப்பாளர்களுக்கும் சுமையாக இருக்கிறது. [17] இந்த உண்மைகள் ஆளும் வர்க்கத்தின் 'பரவி அழித்துவிடு' என்ற தொற்றுநோய் கொள்கையின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தது என்பதை தெளிவுபடுத்துகிறது. உலகெங்கிலும், அரசாங்கங்கள் ஓய்வூதிய வயதை உயர்த்துவதுடன், ஆயுட்காலத்தைக் குறைக்க சுகாதாரப் பராமரிப்பைக் குறைத்து, குழந்தை தொழிலாளர்களின் வடிவங்களை மீண்டும் அறிமுகப்படுத்த குறைந்தபட்ச வயது எல்லைகளைக் குறைக்கின்றன. இவை அனைத்தும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகின்றன.

அதே நேரத்தில், 30 வயதிற்குட்பட்டவர்கள் இப்போது உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானவர்களாகவும், துணை-சஹாரா ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினராகவும் உள்ளனர். ஏறக்குறைய 2.6 பில்லியன் மக்கள் 20 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். பொருளாதார வல்லுநர்கள் 'இளைஞர்களின் குமுறல்' என்று அழைக்கும் தீவிரமயப்படுத்தலின் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலைகள் உள்ளன. குறிப்பாக ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, இளைஞர்கள் பெருமளவில் தொழிற்சங்கங்களில் இணைந்திருக்கவில்லை. பொருளாதார அபிவிருத்திக்கும் கூட்டுழைப்பிற்குமான அமைப்பிலுள்ள (OECD) நாடுகளில், போர்ச்சுகல், பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் 16-25 வயதுடைய தீவிர தலைமுறையினரிடையே தொழிற்சங்க அங்கத்துவ விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாகவும், கிரீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி மற்றும் பல நாடுகளில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவும் உள்ளது. எமது நோக்குநிலை குறித்த சமீபத்திய நாட்களில் நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில், இந்தக் குறிப்பை வலியுறுத்த வேண்டும்: 'இளைஞர்கள்' என்ற சில தெளிவற்ற, அருவமான கருத்தாக்கத்தினை நோக்குநிலையாக கொண்டிருக்கவில்லை, மாறாக நாங்கள் உலகளாவிய சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் கணிசமான பகுதியை உள்ளடக்கிய தொழிலாள வர்க்க இளைஞர்களை நோக்கியுள்ளோம்.

கட்சியின் அனுபவங்களும் பணிகளும்

இதுவரை கூறியவற்றை மீளாய்வு செய்தோமானால்: தற்போதைய சூழ்நிலையில் மிகப்பெரிய ஆபத்துகளையும் மகத்தான புரட்சிகர சாத்தியங்களையும் இரண்டையும் கொண்டுள்ளோம். சோசலிசப் புரட்சியின் தசாப்தம் என்ற முற்கணிப்பு சரியானது. பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கிய பின்னர், சமூக வெடிப்புகளின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.

சர்வதேச சமூகப் போராட்டத்தின் மூன்று அலைகள் கடந்த தசாப்தத்தில் உருவாகியுள்ளன, ஒவ்வொரு அலையும் அதற்கு முந்தையதை விட பெரியதாகவும் பரந்ததாகவும் உள்ளது. சமீபத்திய அலை, மிகவும் வெடிக்கும் மற்றும் சர்வதேச அளவில், போர் மற்றும் தொற்றுநோயால் தூண்டப்பட்டது. தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடி என்பது தொழிலாள வர்க்கத்தின் மீது இரக்கமற்ற தாக்குதல்கள் வரவுள்ளன என்பதாகும். இது எல்லா இடங்களிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் வெடிக்கும் வளர்ச்சியைத் தூண்டும். ஆனால் தன்னிச்சையான எழுச்சி மட்டும் போதாது. இதற்கு ஒரு சோசலிச தலைமை இருக்க வேண்டும். தேசிய தொழிற்சங்கங்கள், வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன. ஏனெனில் அவை சோசலிசத்திற்கு விரோதமானவை. தொழிலாள வர்க்கம் முன்னெப்போதையும் விட அளவில் பெரிதாகவும் மற்றும் தொழில்நுட்பரீதியாக மேம்பட்டுமுள்ளது. ஆனால் அதன் புரட்சிகர பங்கு பற்றிய அதன் நனவு, சமூக இருப்பை விட பின்தங்கியுள்ளது. இதற்கு கட்சி எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பது நிகழ்வுகளின் போக்கை மேலும் மேலும் நேரடியாக மாற்றும்.

இந்த மதிப்பீட்டில் இருந்து வெளிவரும் பணிகள் என்ன? 2019 சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைக்காலப் பள்ளிக்கு தோழர் நோர்த் ஆற்றிய உரையில், நாம் இப்போது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றின் ஐந்தாவது காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை விளக்கினார், மேலும் இதிலிருந்து வரும் பணியை வலியுறுத்தினார். அவர் எழுதினார்:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றின் ஐந்தாவது காலகட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்தக் காலகட்டமே சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக ICFI இன் விரிந்த வளர்ச்சியை காணவிருக்கும் நிலையாகும். 30 ஆண்டுகளுக்கும் முன்னர் அனைத்துலகக் குழுவால் அடையாளம் காணப்பட்ட, பொருளாதார பூகோளயமாக்கத்தின் புறநிலை நிகழ்ச்சிப்போக்குகள், மேலும் பிரம்மாண்டமானதொரு அபிவிருத்திக்குள் சென்றிருக்கின்றன. தகவல்தொடர்பில் புரட்சிகளை உண்டாக்கியிருக்கும் புதிய தொழில்நுட்பங்களது எழுச்சியுடன் சேர்ந்து, இந்த நிகழ்ச்சிப்போக்குகள் 25 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட கற்பனை செய்திருக்க கடினமான ஒரு மட்டத்திற்கு வர்க்கப் போராட்டத்தை சர்வதேசியமயப்படுத்தியிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டமானது ஒரு பரஸ்பரஇணைப்புடைய மற்றும் ஐக்கியப்பட்ட உலக இயக்கமாக அபிவிருத்தி காணும். இந்த புறநிலை சமூகப்-பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் நனவான அரசியல் தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கட்டியெழுப்பப்படும். அது ஏகாதிபத்தியப் போர் எனும் முதலாளித்துவ அரசியலுக்கு எதிராக, உலக சோசலிசப் புரட்சி எனும் வர்க்க-அடிப்படையிலான மூலோபாயத்தை எதிர்நிறுத்தும். இதுவே நான்காம் அகிலத்தின் வரலாற்றில் புதிய காலகட்டத்தின் அடிப்படையான வரலாற்றுப் பணியாகும்.

IWA-RFC ஐந்தாவது கட்டத்தில் இந்த இன்றியமையாத வரலாற்றுப் பணியின் முக்கிய அங்கமாகும். தொழிலாள வர்க்கம் என்பது சுரண்டப்படும் வர்க்கம் மட்டுமல்ல, முதலாளித்துவத்தின் கீழ் புரட்சிகர வர்க்கமும் கூட. அதன் பன்முகத்தன்மை கொண்ட சமூக மற்றும் அரசியல் அமைப்பு ஒரு சிக்கலான வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் விளைபொருளாகும். இது பொருளாதார ஏற்றம் மற்றும் பேரழிவு, பூகோளமயமாக்கல் மற்றும் தொழிற்துறை அழிப்பின் தாக்கம், கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கும் மற்றும் நாடுகளுக்கு இடையே வெகுஜன இடம்பெயர்வு அலைகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், மதவாத கருத்தாங்கங்களின் தாக்கங்கள், கடந்தகால சமூகப் போராட்டங்களின் மரபு, பெரும் தகவல்துறையினதும் அரசியல் கட்சிகளினதும் தாக்கம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. IWA-RFC என்பது சுயாதீனத்திற்கும் ஐக்கியத்திற்குமான போராட்டத்தையும் ஊக்குவிப்பதற்கும் மேலும் தேசிய, அடையாள அரசியலின் அடிப்படையிலான தடைகளை கடப்பதற்குமான முயற்சிகளுக்கான ஒரு பொறிமுறையாகும். பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கிய பழைய அமைப்புகளிலிருந்து விடுபட தொழிலாளர்கள் பயன்படுத்தும் நெம்புகோலாகும். மேலும் இது, இயக்கத்தின் இன்றியமையாத வரலாற்றுப் பணியை நிறைவேற்றுவதற்கு, புரட்சிகர சோசலிச தொழிலாளர்களின் சக்திவாய்ந்த முன்னணிப் படையை உருவாக்குவதற்கு, கட்சிக்கு ஒரு பயிற்சிக் களமாகும்.

தொழிலாள வர்க்கத்தில் நமது தலையீடுகளின் நோக்கம் இதுதான். ஜனவரி 1932 இல் 'அடுத்து என்ன' என்ற கட்டுரையில் ட்ரொட்ஸ்கி எழுதுகிறார்:

வர்க்க நனவை நோக்கிய ஒரு வர்க்கத்தின் முன்னேற்றம், அதாவது பாட்டாளி வர்க்கத்தை வழிநடத்தும் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது என்பது ஒரு சிக்கலான மற்றும் முரண்பாடான நிகழ்ச்சிப்போக்காகும். வர்க்கமே ஒருமுகத்தன்மையானதல்ல. அதன் வெவ்வேறு பிரிவுகள் வெவ்வேறு பாதைகள் மற்றும் வெவ்வேறு நேரங்களில் வர்க்க நனவை வந்தடைகின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கில் முதலாளித்துவம் தீவிரமாக பங்கேற்கிறது. தொழிலாள வர்க்கத்தினுள், ஒரு பிரிவை மற்றைய பிரிவிற்கு எதிராக நிறுத்துவதற்காக அது அதன் சொந்த நிறுவனங்களை உருவாக்குகிறது அல்லது ஏற்கனவே உள்ளவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறது.

[ட்ரொட்ஸ்கி தொடர்கிறார்:] பாட்டாளி வர்க்கம் புரட்சிகர நனவை நோக்கி நகர்கிறது, அது பள்ளியில் ஒவ்வொரு வகுப்புகளூடாக கடந்து செல்வது போலல்லாது, மாறாக குறுக்கீடுகளை ஏற்றுக்கொள்ளாத வர்க்கப் போராட்டத்தின் மூலம் கடந்து செல்கிறது. … கட்சியின் பணியானது, போராட்டத்திலிருந்து பெறப்பட்ட அனுபவத்திலிருந்து, பாட்டாளி வர்க்கத்திற்கு அதன் தலைமைத்துவத்திற்கான உரிமையை எவ்வாறு எடுத்துக்காட்டுவது என்பதை கற்றுக்கொள்வதில் உள்ளது.

சாமானிய தொழிலாளர் குழுக்களுக்கான போராட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு 'தங்களுடைய சொந்த அமைப்புகளை உருவாக்க' உதவுவதில் அமெரிக்காவில் உள்ள தோழர்கள் முக்கியமான அரசியல் அனுபவங்களைக் கடந்துள்ளனர். இந்த அறிக்கையை முடிக்கையில், எங்களின் சொந்த சமீபத்திய அனுபவங்களைப் பற்றி ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கட்சியானது முக்கிமான போராட்டங்களின் போக்கை வியத்தகு முறையில் மாற்றியமைக்கவும், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தில் கட்சியின் அந்தஸ்தை கணிசமாக அதிகரிக்கவும் முடிந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் Stanford மருத்துவமனை வேலைநிறுத்தத்தில், மருத்துவமனையில் கட்சியின் தலையீடு மருத்துவமனையையும் தொழிற்சங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளி செவிலியர்களுக்கு அதிக அதிகாரம் அளித்து, மேலும் ஒரு கிளர்ச்சிக்கு உதவி, நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் உருவாக்கத்திற்கு வழி வகுத்தது. இந்தக் குழு நாடு முழுவதிலுமிருந்து டஜன் கணக்கான மற்றும் நூற்றுக்கணக்கான செவிலியர்களை உள்ளடக்கிய கூட்டங்களை நடத்தி மற்றும் Radonda Vaught இனை பாதுகாக்கும் பிரச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. Vaught இன் வழக்குக்கு செவிலியர்களிடையே இருந்த ஆழ்ந்த எதிர்ப்பு, நாடு முழுவதும் தன்னியல்பான வேலைநிறுத்தங்களைத் தூண்டிவிடும் என்ற அச்சத்தில், அவருக்கு மிக மிதமான தண்டனையை வழங்க அரசை கட்டாயப்படுத்தியது.

கடந்த கோடை மற்றும் இலையுதிர் காலத்தில் டேனாவில் உள்ள உதிரிபாகத் தொழிலாளர்களிடையே நாங்கள் தலையிட்டதில், கட்சி காட்டுக்கொடுக்கும் ஒப்பந்தத்தை நிராகரித்து, பல மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களை இணைக்கும் ஒரு குழுவை நிறுவியது. இது வாரத்திற்கு 80 மணி நேர வேலை பற்றிய மோசமான நிலைமைகளைக் கண்டறிந்து, டேனி வால்டர்ஸின் மரணம் எங்கள் அறிக்கைகளுக்கு பரந்த ஆதரவை பெற்றுத்தந்தது. இதனால், அவரது விதவை மனைவியான மார்சியா, UAW தலைவருக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக ஒரு சக்திவாய்ந்த அறிக்கையை அளித்துள்ளார்.

வில் லெஹ்மனின் பிரச்சாரத்தில், ஒரு புரட்சிகர வாகனத் தொழிலாளியின் அரசியல் வளர்ச்சி UAW சர்வாதிகாரத்திற்கு மட்டுமல்ல, மத்திய அரசாங்கத்திற்கும் சவாலாக உள்ளது. அவர்கள் எங்களை தலைவருக்கான தேர்தலில் பங்கேற்பதைத் தடுக்கலாம் என்று நம்பியதால், கடந்த ஜூலை மாதம் நடந்த தொழிற்சங்க மாநாட்டில் பிரதிநிதிகளால் வேட்புமனு தாக்கல் செய்ப்படுவதில் வெற்றி பெற வேண்டியிருந்தது. அவர்கள் எங்களை குறைத்து மதிப்பிட்டார்கள் என்பதை இப்போதுதான் நிரூபித்துள்ளோம். நம்மையும் நமது தலையீடுகளின் தாக்கத்தையும் நாம் குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய அரசியல் ஆபத்தாக இருக்கும் என்பதே இந்த மாநாட்டில் இருந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு அடிப்படையான விடயமாக இருக்கவேண்டும் என நான் நம்புகிறேன்.

இதேபோன்ற உதாரணங்களை மற்ற தொழிற்துறைகளிலும் காட்டலாம். இந்த பிரச்சாரங்கள் ஒவ்வொன்றிலும் சோசலிசம் பற்றிய கேள்வியை தொழிலாளர்களுக்கு முன் வைத்தோம். ஆனால் அவர்களின் ஐக்கியத்திற்கும் சுயாதீனத்திற்குமான போராட்டத்தில் அரசியல் கேள்விகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை அவர்களின் அனுபவங்கள் எடுத்துக்காட்டுவதை தொழிலாளர்களுக்கு தெளிவாக்க முயற்சித்தோம்.

வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு நாம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்திலிருந்து நாம் திருப்தியடைய வேண்டுமென இது பரிந்துரைக்கவில்லை. நாம் தொழிலாள வர்க்கத்தில் அணிதிரட்டலை செய்ய வேண்டும். நாம் அவ்வாறு செய்கையில் பாரிய தொழிலாளர்கள் மீது நமது செல்வாக்கு அதிவேகமாக வளரும். நாம் இப்போது முக்கியமான தொழிற்சாலைகள், கிட்டங்கிகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் கணிசமான பிரசன்னத்தை ஸ்தாபிக்கவேண்டும். இதன் மூலம் அமெரிக்காவில் இயக்கம் தொடர்ந்து வளர்ந்து, வளர்ச்சியடையும் போது, அதன் மீது அதிகபட்ச அரசியல் செல்வாக்கை செலுத்த முடியும்.

தொழில் ஒப்பந்தம் முடிவடையும் போது மட்டுமல்லாமல், தொழிலாளர்களுடன் அரசியல் உறவுகளை உருவாக்கவும், தொழிலாளர்களுடன் தொடர்ந்து பேசவும், அவர்களுக்கு விரிவுரை வழங்காமல், சோசலிசத்தைப் பற்றி அவர்களின் அனுபவங்களின் மூலம் அவர்களுக்கு கற்பிக்கவும், கற்றுக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள நனைவின் மட்டத்திற்கு அடிபணிந்துபோகாது அவர்களின் அபிலாஷைகளை உயர்த்தி, அவர்களின் மாயைகளை அகற்றவும் வேண்டும். எமது தலையீடுகள் முன்கூட்டியே முடிந்தவரை கவனமாக திட்டமிடப்பட்டு, முழுமையான அரசியல் விவாதத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு, ஒரு புரட்சிகர இராணுவத்தில் ஒருவர் எதிர்பார்க்கும் அளவுக்கு உயர் தொழில்முறை மற்றும் ஒருங்கிணைப்புடன் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். முன்னைய தலையீடுகள் பின்தொடரப்பட வேண்டும், அவற்றின் படிப்பினைகள் கலந்துரையாடப்பட்டு உள்வாங்கப்பட வேண்டும். அதனால் அவை கட்சி மற்றும் வர்க்கத்தின் சொத்தாக மாற்றப்பட்டு அடுத்த போராட்டங்களுக்கு முன்னோக்கி கொண்டு வரப்பட வேண்டும். ஒவ்வொரு போராட்டத்தின் மையத்திலும் நாம் செயலூக்கமான பங்கேற்பாளர், வெறுமனே வெளியிலிருந்து கருத்து தெரிவிக்கும் செயலற்ற பார்வையாளர்கள் அல்ல என்ற புரிதலில் இருந்து நாம் தொடர வேண்டும்.

அனைத்துலகக் குழுவின் வரலாற்று அனுபவங்களில் பயிற்றுவிக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தில் நமது முன்னோக்கிற்காகப் போராடுவதற்கு தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் ஒரு காரியாளரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இதற்கு விதிவிலக்கு இல்லாமல் அனைத்து தோழர்களின் சுறுசுறுப்பான, அர்ப்பணிப்பு, தொழில்முறை மற்றும் நிலையான வேலை தேவைப்படும். இது தேவையானபோது தனது பணிகளைச் செய்யாத, தங்கள் கிளைச் செயலாளர்களுடன் தொடர்பு கொள்ளாத, எந்தவொரு குறிப்பிட்ட பணியிலும் தீவிரமாக ஈடுபடாத தனிநபர்களுக்கான கட்சி இதுவல்ல. அத்தகைய புறக்கணிப்புக்கு பின்னால் எப்போதும் தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சமூக சக்தி அல்ல என்ற நம்பிக்கையில் வேரூன்றியுள்ள ஒரு அரசியல் கண்ணோட்டம் உள்ளது.

இறுதியாக, 'புரட்சிகர மூலோபாயத்தின் பள்ளி' என்ற ட்ரொட்ஸ்கியின் உரையில் இருந்து மேலும் ஒரு மேற்கோள்:

தொழிலாள வர்க்கத்தின் பணியானது, முதலாளித்துவத்தின் முற்றிலும் சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர மூலோபாயத்திற்கு எதிராக, அதேபோன்று இறுதிவரை சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட அதன் சொந்த புரட்சிகர மூலோபாயத்தை முன்வைப்பதில் உள்ளது. … இந்த போராட்டத்தில் உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையை நோக்கி சீராக நகர்ந்து கொண்டிருக்கும் கட்சி, முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கு சாதகமான தருணம் வரும் வரை சூழ்ச்சி செய்து, இப்போது தாக்கி, இப்போது பின்வாங்கி, முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்காக சாத்தியமான தருணம் வரும்வரை எப்போதும் தனது செல்வாக்கை பலப்படுத்தி புதிய நிலைமைகளை வெற்றி கொள்ள வேண்டும்.

தோழர்களே, இது தாக்கி, புதிய நிலைமைகளை வெற்றிகொள்வதற்கான நேரம். இங்கே, உலக அரசியல் பிற்போக்குத்தனத்தின் மையத்தில், சோசலிசப் புரட்சிக்காக போராடத் தயாராக இருக்கும் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியை நாம் ஆக்ரோஷமாக வளர்க்க வேண்டும். இந்த அடிப்படையில், நாம் சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) ஐ கட்டியெழுப்பலாம். இது தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய ஆற்றல்மிக்க சக்தியை கட்டவிழ்த்துவிட்டு, ஏகாதிபத்திய போரை முடிவுக்கு கொண்டு வந்து, பாசிசத்தின் அச்சுறுத்தலை நசுக்கி சோசலிச புரட்சிக்கான பாதையை உருவாக்கும்.

அடிக்குறிப்புகள்,

[1] James Kavanagh, “Corruption and social unrest: coping with rapid urbanisation,” Royal Institute of Chartered Surveyors, September 13, 2017.

[2] Isabel Ortiz, Sara Burke, Mohamed Berrada, Hernaán Saenz Cortés, “World Protests: A Study of Key Protest Issues in the 21st Century,” Palgrave Macmillan, 2020.

[3] Ibid.

[4] Ibid.

[5] Carsten Strøby Jensen, “Trade unionism in Europe: Are the working class still members?” European Journal of Industrial Relations, April 1, 2019.

[6] David G. Blanchflower and Alex Bryson, “The Union Wage Premium in the US and the UK,” Dartmouth College, 2020.

[7] Ioulia Bessa, Simon Joyce, Denis Neumann, Mark Stuart, Vera Trappmann, Charles Umney, “A global analysis of worker protest in digital labour platforms,” International Labor Organization, June 2022.

[8] Ibid.

[9] Ibid.

[10] Ibid.

[11] United Nations, “Addressing the cost-of-living crisis in developing countries,” July 7, 2022.

[12] World Bank Flagship Report, “Global Economic Prospects,” World Bank, June 2022.

[13] Ibid.

[14] Isabel Ortiz, Matthew Cummins, “Global Austerity Alert,” Initiative for Policy Dialogue, April 2021.

[15] Daniel Vaughan-Whitehead, Youcef Ghellab, Rafael M. de Bustillo Llorente, “The New World of Work: Challenges and Opportunities for Social Partners and Labour Institutes,” International Labor Organization, 2021.

[16] Charles Goodhart, Manoj Pradhan, “The Great Demographic Reversal: Ageing Societies, Waning Inequality, and an Inflation Revival,” Palgrave Macmillan 2020.

[17] Ibid.

Loading