நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் 1982-86 உடைவின் அரசியல் மூலங்களும் பின்விளைவுகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த உரை அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் டேவிட் நோர்த் ஜூலை 21, 2019 அன்று வழங்கியதாகும். நோர்த் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியளவிலான தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் ஆவார்.

இந்த வாரத்தின் விரிவுரைகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினது (ICFI) வரலாற்றின் 1982 முதல் 1995 வரையான காலத்தின் மீது, அதாவது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தத்துவார்த்த அடித்தளங்கள் மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிகரக் கட்சி (WRP) மேற்கொண்ட திருத்தல்வாதத்தின் மீது ஒரு விரிவான விமர்சனத்திற்கான ஆரம்பகட்ட சூத்திரமாக்கலில் தொடங்கி அனைத்துலகக் குழுவின் கழகங்களை கட்சிகளாக உருமாற்றும் முடிவு வரையான காலத்தின் மீது கவனம் குவிக்க இருக்கின்றன. கடந்த காலத்தில், குறிப்பாக 2015 கோடைப் பள்ளியில், தொழிலாளர் புரட்சிகரக் கட்சியுடனான (WRP) உடைவுக்கு இட்டுச்சென்ற நிகழ்வுகளை நாம் திறனாய்வு செய்தோம். சமீப மாதங்களில் கட்சியின் உறுப்பினர்கள் 1982க்கும் 1985க்கும் இடையிலான காலத்தில் வேர்க்கர்ஸ் லீக்கினால் (WL) உருவாக்கப்பட்ட ஆவணங்களை கற்று ஆய்ந்து வருகின்றனர்.

1986 பிப்ரவரியில் WRP உடன் இறுதியான உடைவு நடந்ததற்குப் பிந்தைய காலத்தில் அனைத்துலகக் குழு கண்ட அபிவிருத்தியே இந்தப் பள்ளியின் பிரதான கவனப்புள்ளியாக இருக்கும். இந்த விரிவுரைகள், மூலோபாயம், வேலைத்திட்டம், முன்னோக்குகள் மற்றும் அமைப்புரீதியான இன்றியமையாத விடயங்களில் அனைத்துலகக் குழுவிற்கும் அதன் பிரிவுகளுக்கும் உள்ளாக நடந்த விவாதங்கள் குறித்த ஆய்வை சாத்தியமாக்கக் கூடிய வகையிலான பலதரப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும்.

நான்காம் அகில அனைத்துலகக் குழுவின் அரசியல் காலவரிசை 1982-1991 (Political Chronology of the International Committee of the Fourth International 1982–1991) என்ற தலைப்பிலான ஆவணங்களது தொகுப்பில் புதிய உள்ளடக்கம் —தலைமைக் குழுக்களுக்குள்ளான கலந்துரையாடல்களின் உரைவடிவங்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கடிதப் பரிவர்த்தனைகள் ஆகியவையும் இதில் அடங்கும்— சேர்க்கப்படுகிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாக முதன்முதலாய் இப்போதே ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆவணங்கள் அனைத்துலகக் குழுவிற்குள் நடந்த விவாதங்களின் ஆழம் மற்றும் தீவிரத்தையும் அத்துடன் அரசியல்-புத்திஜீவித வாழ்க்கையின் உயிர்ப்பினையும் வெளிப்படுத்துகின்றன. இவை, அனைத்துலகக் குழுவின் வரலாறு குறித்த ஒரு விரிவான ஆய்வுக்கு விலைமதிப்பில்லாத ஆதார விடயங்களாய் இருக்கின்றன. அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் அனைத்துலகக் குழுவிலான 1985-86 உடைவைப் பின்தொடர்ந்து வந்த வருங்கால முக்கியத்துவமிக்க நிகழ்வுகளுக்கு எந்த அரசியல் நிகழ்ச்சிப்போக்கின் மூலமாக தமது பதிலிறுப்பை அபிவிருத்தி செய்தனவோ அந்த நிகழ்ச்சிப்போக்கை ஆய்வு செய்வதற்கு இவை கட்சி அங்கத்தவர்களுக்கு வழியமைக்கும். கோட்பாடான அரசியல் கலந்துரையாடல்கள் ஒரு புரட்சிகர மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச கட்சியில் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கான ஒரு உட்பார்வையை இந்த ஆவணங்கள் வழங்குகின்றன.

இந்தப் பள்ளிக்கான தலைப்பை தேர்வுசெய்வதற்கும் ICFI இன் இந்த ஆவணங்கள் மீது கவனம் குவிப்பதற்கும் எந்த பரிசீலிப்புகள் செல்வாக்கு செலுத்தின? அனைத்துலகக் குழு ஒரு கணிசமான வளர்ச்சியின் காலகட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது என்பதை பல அறிகுறிகளும் காட்டுகின்றன. பல புதிய உறுப்பினர்களை நாம் ஏற்கனவே நமது இயக்கத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த செயல்முறையில் ICFI யின் தற்போதைய பிரிவுகளில் உறுப்பினர்களை சேர்ப்பது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் புதிய பிரிவுகளை ஸ்தாபிப்பதும் அடங்கும். இந்த வளர்ச்சியின் சரியான வேகமும் வீச்சும் புறநிலை நிகழ்வுகளின் தாக்கத்திற்குட்படும். ஆயினும், நமது அரசியல் வேலையானது, ஒரு சர்வதேச மட்டத்தில், உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அதிகரித்துச் செல்லும் நெருக்கடியால் உந்தப்பட்ட வர்க்கப் போராட்டத்துடன் பொருந்தியிருக்கின்றது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

நமது இயக்கத்தின் வளர்ச்சியை நாம் வரவேற்கிறோம், ஏனென்றால் இதனைக் கட்டியெழுப்புவதற்காக பல தசாப்தங்களாக நாம் போராடி வந்திருக்கிறோம். ஆயினும் அனைத்து நிகழ்ச்சிப்போக்குகளும் உள்ளார்ந்த முரண்பாடுடையவை. ட்ரொட்ஸ்கி அவருடைய 1923 இன் விமர்சனமான புதிய பாதை இல் விளக்கியதுபோல, புதிய மற்றும் அனுபவமற்ற ஆட்சேர்க்கைகளது உட்பாய்வு கட்சியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் மட்டத்தை கீழிறக்க இட்டுச் செல்லும் ஒரு ஆபத்து எப்போதும் அங்கே இருக்கவே செய்கிறது. இது வளர்ச்சியின் உடன்வரக் கூடிய ஒரு இயல்பான பிரச்சினை. இளம் உறுப்பினர்கள் புரட்சிகர வேலையின் சவால்களையும் கோரிக்கைகளையும் தானாகவே புரிந்து கொண்டு விடுவார்கள் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது. நிகழ்வுகளுக்கு தோற்றப்பாட்டுவாத மற்றும் அனுபவவாத பதிலிறுப்பைக் கொடுக்கின்றதான ஒரு போக்கு, அனுபவமின்மையில் இருந்து தோன்றக் கூடும். அவசியமான சகிப்புத்தன்மையுடன், புதிய உறுப்பினர்களுக்கு உதவுவது பழைய தோழர்களின் பொறுப்பாகும்.

ஆனாலும், பழைய தோழர்கள், அவர்களது பல ஆண்டுகால அனுபவத்தின் காரணமாக, அரசியல்ரீதியாக தவறிழைக்காதவர்களாகி விடுகின்ற நிலையைப் பெற்று விட்டிருப்பதாக அனுமானிப்பதும் தவறாகிவிடும். வயதுடன் வருகின்ற அனுபவம் மிகவும் மதிப்புமிக்கதுதான், ஆயினும் அதற்கும் எதிர்மறையான மற்றும் பிரச்சினையான அம்சங்களும் இல்லாமலில்லை. வயது, அனுபவத்தை உடன்கொண்டு வருகிறது என்றுதான் நாம் கற்பிக்கப்படுகிறோம். இது சற்று முன்னெச்சரிக்கையுடன் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு ஆலோசனையாகும். வயது, மருத்துவரிடம் அடிக்கடி செலுத்துவதையும் தவிர, பழமைவாதம் மற்றும் வறட்டுப் பிடிவாதம், புதிய பிரச்சினைகளுக்கு ”கடந்த கால படிப்பினைகள்” என்றபேரில் போதுமான பிரதிபலிப்பு இன்றி அடிக்கடி சொல்லப்படுகின்ற விடயங்களை நேரடியாக செயலுறுத்தினாலே போதுமானது என்ற தவறான நம்பிக்கை ஆகியவற்றை நோக்கிய ஒரு போக்கினையும் கொண்டுவருகிறது. “படிப்பினைகள்” என்று சொல்லப்படுவன மிகத் துல்லியமாக வரையறை செய்யப்பட்டிருக்க வேண்டும், இல்லையேல் நடப்பு நிலையின் தனித்துவத்தை, ஒரு காலமற்ற வரலாறு-கடந்த பொதுவான இடத்தினுள் கலைத்துவிடும் அபாயத்திற்குள் ஒருவர் செல்வதாய் இருக்கும்.

பழைய மற்றும் இளைய உறுப்பினர்கள் அனைவருடனும் இணைந்த ஒட்டுமொத்தமான கட்சியின் அரசியல் அபிவிருத்தி, மற்றும் தீவிரமடைந்து செல்லும் அரசியல் சவால்களுக்கு ஏற்ற விதத்தில் அதன் தத்துவார்த்த மட்டத்தை உயர்த்துவது என்பவை சமகால அபிவிருத்திகளுடனான ஒரு தீவிரமான ஈடுபாடு மற்றும் “நிகழ்கால”த்தின் அத்தியாவசிய உள்ளடக்கமாக இருக்கின்ற வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளை அடையாளம் காண்பது மற்றும் விமர்சனப் பகுப்பாய்வு ஆகியவற்றின் ஒரு பரஸ்பர செயல்பாட்டை அவசியமாக்குகிறது. இதுவே மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பாக, ரொம் ஹீனெஹன் இன் ஐந்தாவது நினைவு தினத்தையொட்டிய எனது 1982 கட்டுரைகளில் நான் மேற்கோளிட்ட ஹேகலின் வாசகத்தின் அர்த்தமாகும்: “இவ்வாறு அறிகையானது ஒரு உள்ளடக்கத்தில் இருந்து இன்னொரு உள்ளடக்கத்திற்கு நகர்ந்து முன்செல்கிறது ... அதன் இலக்கின் ஒவ்வொரு புதிய கட்டத்திலும் ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தையும் தீர்க்கமான ஒவ்வொரு புதிய மட்டத்திற்கு உயர்த்துகிறது, அத்துடன் அது தனது இயங்கியல்ரீதியான முன்னேற்றத்தின் மூலமாக எதனையும் இழப்பதில்லை மற்றும் எதனையும் விட்டுச் செல்வதில்லை என்பது மட்டுமல்ல, மாறாக தான் ஈட்டிய அனைத்தையும் தன்னுடன் சுமந்து செல்கிறது, தன்னைத் தானே செழுமைப்படுத்திக் கொண்டும் செறிவூட்டிக் கொண்டும் செல்கிறது.”[1]

தத்துவார்த்த மற்றும் அரசியல் கல்வியின் ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்குவதும் பராமரிப்பதும் ஒரு அடிப்படையான மற்றும் சவாலான பணியாகும். மார்க்சிசத்தின் “அடிப்படைகள்” விடயத்தில், அதாவது மெய்யியல் சடவாதம், அரசியல் பொருளாதாரம் மற்றும் சோசலிச இயக்கத்தின் வரலாற்று மூலங்கள் ஆகிய விடயங்களில் விரிவுரைகள் தயாரிப்பதற்கான ஒரு தீவிரமான தேவை இருக்கிறது என்பது உண்மையே. ஆயினும், இந்த அடித்தளமான விடயங்களில் வர்க்கங்களின் முக்கியத்துவத்தை குறைத்துமதிப்பிடும் நோக்கமற்று, ஒருவர் எச்சரிக்கக் கூடியது என்னவென்றால், நான்காம் அகிலத்தின் வரலாற்றின் மீதான ஒரு தீவிர ஆய்வை உள்ளடக்கியதாக இருக்கின்ற ஒரு கல்வியூட்டல் வேலைத்திட்டத்தின் பகுதியாக அது இல்லாமல் போனால் வெறும் கல்வியியல் குணாம்சத்தை கொண்டதாய் அந்த வேலை இருந்துவிடும். இந்த பரந்த தலைப்பானது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலகட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அனுபவத்தை சூழ்ந்ததாய் இருக்கிறது.

மேலும், இந்த ஆய்வானது ஒரு சரியான தத்துவார்த்த வழிமுறையூடாக செய்யப்பட வேண்டும். ஹேகல், அவரது வரலாற்றின் மெய்யியல் இல், வரலாற்றை நோக்கிய அனுபவவாத அணுகுமுறைகளின் பல்வேறு வகைகளைக் கேலிசெய்தார். “அனுபவவாத வரலாற்றாசிரியர்களின் மோசமான வகையினர் அகநிலைக் காரணங்களைத் தேடுகின்ற குட்டி மனோதத்துவவாதிகளாகும்...” என்று அவர் எழுதுகிறார். "கிறிஸ்தவ பிரதிபலிப்புகளினால் விழித்தெழுந்து, தனது அறநெறித் தாக்குதல்களின் பக்கத்திலிருந்து நிகழ்வுகள் மற்றும் மனிதர்கள் மீது தாக்குதல், மற்றும் ஒரு நிலையுயர்த்தும் சிந்தனையை, ஒரு அறிவுறுத்தல் வார்த்தையை, ஒரு அறநெறிக் கோட்பாட்டை அல்லது இது போன்றவற்றை உதிர்ப்பதற்காக தனது களைப்பூட்டும் வெற்று அலைவுகளில் இருந்து அவ்வப்போது விழித்துக் கொள்கின்ற ... அறநெறி காட்டும் அனுபவவாதி” அவரினும் கொஞ்சமும் மேலானவராய் இல்லை.[2] ஹேகல் குறிப்பிட்டது, துலக்கமாக, ரோபர்ட் சேர்விஸ் ஐ ஆகும்.

ஹேகல் ஒரு புறநிலைவாத கருத்துவாதியாக இருந்தார், அவரது இயங்கியல் வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை தர்க்கவியல் விரிவாக்கமாகவும் மற்றும் முற்றுமுதல் கருத்தின் (Absolute Idea) மெய்யியல் சிந்தனையின் மூளையிலான தர்க்கவாத கட்டவிழ்வு மற்றும் மீள்கட்டுமானமாக முன்வைத்தது. மார்க்சும் ஏங்கெல்சும் ஹேகலின் மர்மமான கருத்துவாத முன்வைப்பிலிருந்து, வரலாற்றின் பணியாக இருக்கும் உண்மையான சடவாத நிகழ்ச்சிப்போக்கை பிரித்தெடுத்தனர். ஏங்கெல்ஸ், 1888 இல் எழுதுகையில், அனுபவவாத வரலாறு குறித்த ஹேகலின் விமர்சனத்தில், ஒரு சடவாத அடிப்படையில், மறுவேலை செய்தார். வரலாற்றை நோக்கிய அனுபவவாத அணுகுமுறையின் அடிப்படை பலவீனமாக அமைவது, “இது ஒவ்வொருவரையும் அவரது செயலின் நோக்கங்களின் படி முடிவுசெய்கிறது; இது வரலாற்றில் செயல்படும் மனிதர்களை, புனிதர்கள் மற்றும் மரியாதைக்குறைவானவர்களாய் பிரிக்கிறது, பின்னர் ஒரு விதியாக, புனிதர்கள் ஏமாற்றப்படுபவர்களாகவும் மரியாதைக்குறைவானவர்கள் வெற்றிபெறுவதாகவும் காண்கிறது” என்பதை ஏங்கெல்ஸ் விளக்கினார். [3]

ஏங்கெல்ஸ் தொடர்ந்தார்:

வரலாற்றில் செயல்படும் மனிதர்களது நோக்கங்களுக்குப் பின்னால் —நனவாகவோ அல்லது நனவில்லாமலோ, உண்மையில் பெரும்பாலும் நனவில்லாமல்தான்— அமைந்திருக்கின்ற மற்றும் வரலாற்றின் உண்மையான இறுதி உந்துசக்திகளாய் இருக்கின்ற, உந்துசக்திகளை ஆராய்கின்றதொரு கேள்வியாக அது இருக்கிறபோது, அது பாரிய வெகுஜனங்களை, ஒட்டுமொத்த மக்களை, அதிலும் அந்த ஒவ்வொரு மக்களிலும் ஒட்டுமொத்தமான வர்க்கங்களை, அதுவும், கண நேரத்திற்கு, விரைவாக அணைந்து போகும் வைக்கோல்-நெருப்பின் தற்காலிக பற்றவைப்புக்கு வழிவகுக்காமல், மாபெரும் வரலாற்று உருமாற்றத்தில் விளையக்கூடிய நீடித்த செயல்புரிவுக்கு வழிவகுக்கும் வகையில், நகர்த்துகின்ற, நோக்கங்களின் அளவுக்கு, ஒற்றைத் தனிமனிதர்களின், அவர்கள் எத்தனை புகழ்பெற்றவர்களாய் இருந்தபோதினும், நோக்கங்களைக் குறித்த ஒரு கேள்வியாக இருப்பதில்லை.[4]

இதுவே ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு குறித்த நமது ஆய்விற்கு அவசியமாக வழிநடத்தக்கூடிய அணுகுமுறையாகும். நாம் கவனம்குவிப்பது, அந்த வரலாற்றில் வெவ்வேறு புள்ளிகளில் முக்கிய பாத்திரம் வகித்த தனிமனிதர்கள் அனுமானித்த “நோக்கங்கள்” மீதல்ல மாறாக நான்காம் அகிலத்தின் அரசியல் போராட்டங்களில் நனவான வெளிப்பாட்டைக் கண்ட புறநிலை வரலாற்று மற்றும் சமூக நிகழ்ச்சிப்போக்குகளின் மீதே ஆகும்.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு, 1923 இல் இடது எதிர்ப்பாளர்கள் அணி ஸ்தாபகம் செய்யப்பட்டதை அதன் தொடக்கப் புள்ளியாக நாம் எடுத்துக் கொண்டோமேயானால், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் நீண்டதாகும். 1917 அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயத்தை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மார்க்சிச முன்னணிப்படை நடத்திய நனவான போராட்டமே அந்த வரலாற்றின் விடயமாக உள்ளது. போர்கள், புரட்சிகள் மற்றும் எதிர்ப்புரட்சிகள் ஆகிய பில்லியன் கணக்கான மக்களை போராட்டத்திற்குள் கொண்டுவந்த மற்றும் நூறுமில்லியன் கணக்கான உயிர்களைக் காவுகொண்ட இருபதாம் நூற்றாண்டின் மிகப்பிரம்மாண்டமான நிகழ்வுகள் இந்த வரலாற்றுக்குள் “கிளர்ச்சியூட்டும் உள்ளடக்க”மாய் இருக்கின்றன. இத்தகைய வருங்கால முக்கியத்துவமுடைய மாபெரும் நிகழ்வுகள் வெறுமனே தனிமனிதர்களின் —ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றின் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் எத்தனை முக்கியமானதொரு பாத்திரத்தை வகித்திருக்கக் கூடிய போதிலும்— நோக்கங்களை மட்டுமே கொண்டு போதுமான அளவில் விளங்கப்படுத்தி விடமுடியாது. கட்சிகள் அல்லது தனிமனிதர்களது நடவடிக்கைகளில் வெளிப்படுத்திக்காட்டப்படும் புறநிலைமைகள், சமூக சக்திகள் மற்றும் வர்க்க நலன்களை பெரும்பாலும் அரசியல் நிகழ்ச்சிப்போக்கில் செயலூக்கத்துடன் இருப்போரால் போதுமான அளவில் உணரப்பட்டதாய் இது இருக்காது. இதனை வெளிக்கொண்டுவருவதற்கு ஒருவர் எப்போதும் முனைய வேண்டும். வரலாற்றை தங்களின் அகநிலை விருப்பத்திற்கேற்ப வளைத்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டிருப்பவர்கள் தவறாமல் மிகப் பிற்போக்கான சமூக சக்திகளினதும் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளினதும் கருவிகளாய் இருக்கிறார்கள். வரலாற்றின் இயங்கியல் விதிகள் புரிந்து கொள்ளப்படுகின்ற மட்டத்திற்கும், சாத்தியமான மிக உயர்ந்த மட்டத்திற்கு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றப்படுகின்ற மட்டத்திற்கும்தான் வரலாற்றை ”ஆளுமைக்குட்படுத்தப்பட” முடியும் என்பதை மார்க்சிச புரட்சிகரவாதி புரிந்துகொள்கிறார். மார்க்சிச பகுப்பாய்விற்கும் அகநிலை புரட்சிகர திடப்பாட்டிற்கும் இடையிலான உறவு குறித்து ட்ரொட்ஸ்கி தனது வழமையான அறிவுத்தகைமையுடன் பின்வருமாறு விவரிக்கிறார்:

நமது சகாப்தத்தின் புரட்சியாளர்கள் —அவர்கள் தொழிலாள வர்க்கத்துடன் மட்டுமே தொடர்புபடுத்தப்பட முடியும்— தனிச்சிறப்பான உளவியல் குணநலன்களையும், புத்திஜீவித மற்றும் விருப்ப பண்புகளையும் கொண்டிருக்கின்றனர். அவசியமும் சாத்தியமும் இருக்கின்ற பட்சத்தில், புரட்சியாளர்கள் வரலாற்றுத் தடைகளை பலத்துடன் உடைத்தெறிவார்கள். அது சாத்தியமில்லாதபட்சத்தில், அவர்கள் கடந்து செல்கின்றனர். கடந்து செல்வதும் கூட சாத்தியமில்லாதபோது, புரட்சியாளர்கள், பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் அதை இல்லாதொழிக்கவும் துண்டுதுண்டாக்கவும் முனைகின்றார்கள். அவர்கள் தடைக்கற்களை உடைத்தெறியவோ அல்லது சளைக்காது பலத்தை பிரயோகிக்கவோ அஞ்சாதவர்களாய் இருப்பதால்தான் அவர்கள் புரட்சியாளர்களாய் இருக்கின்றனர். இத்தகைய விடயங்களின் வரலாற்று மதிப்பை அவர்கள் அறிவார்கள். தமது அழிப்பு மற்றும் ஆக்க வேலைகளில் முழுத்திறனையும் காட்டுவதில், அதாவது கொடுக்கப்படும் ஒவ்வொரு வரலாற்று சூழ்நிலையிலும் புரட்சிகர வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கு பயனளிப்பதாய் அமையக் கூடிய அதிகபட்சமானதை அகழ்ந்தெடுப்பதில், அவர்கள் எப்போதும் முயற்சி காட்டுகின்றனர்.

புரட்சியாளர்கள், அவர்தம் நடவடிக்கைகளில், வெளிப்புறத் தடைகளினால் மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றனரே அன்றி, உள்முகத் தடைகளினால் அல்ல. அதாவது, சூழ்நிலையை, அவர்களது ஒட்டுமொத்த நடவடிக்கை களத்தின் சடவாத மற்றும் ஸ்தூலமான யதார்த்தத்தை, அதன் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் சகிதமாக மதிப்பிடுவதற்கும், சரியான அரசியல் இருப்புநிலை கணக்கை வரைந்துகொள்வதற்கும் தங்களைத் தாங்களே அவர்கள் பயிற்றுவித்தாக வேண்டும். [5]

வரலாற்றுடன் மார்க்சிச புரட்சியாளர் கொண்டுள்ள உறவு இயங்குநிலையுடையதாகும். ட்ரொட்ஸ்கிச இயக்கம் அதன் இன்றைய தின பகுப்பாய்வு மற்றும் நடவடிக்கையை ஒரு ஒட்டுமொத்த புரட்சிகர சகாப்தத்தின் உள்ளடக்கத்திற்குள்ளாக நிறுத்துவதற்கு பாடுபடுகிறது. இந்த கோட்பாடான விஞ்ஞானபூர்வ அணுகுமுறை தனிமனிதரீதியான, தோற்றப்பாட்டுவாதரீதியான மற்றும் நடைமுறைவாதரீதியான —அதாவது, சந்தர்ப்பவாத— அரசியலுடன் இணக்கம் கொள்ள முடியாததாகும். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோக்கானது, அந்நாளின் தேவைகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல, மாறாக அந்த வரலாற்று சகாப்தத்தின் கோரிக்கைகளால் தீர்மானிக்கப்படுவதாகும்.

புரட்சிகரக் கட்சியானது அதன் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளின் வரலாற்று அடித்தளங்கள் மற்றும் எதிர்காலத் தாக்கங்கள் குறித்து நனவுடன் இருந்தாக வேண்டும். ஆனால் அரசியல் நனவின் இந்த உயர்ந்த மட்டமானது நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்த ஒரு விரிவான அறிவை அவசியமாய் கோருகிறது.

இது கிட்டத்தட்ட ஒரு முழு நூற்றாண்டு காலம் நீண்டு செல்லக்கூடிய ஒரு விரிந்த விடயமாகும். ஆயினும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றை நான்கு தெள்ளத்தெளிவான காலகட்டங்களாக அடையாளம் காண்பது சாத்தியமாயுள்ளது. இவ்வாறு காலகட்டப்படுத்துவதன் பயன் என்னவென்றால், முதலாவதாய் இது, நான்காம் அகிலத்தின் வரலாற்று அபிவிருத்தி பயணப்பாதையில் அனைத்துலகக் குழுவின் இடத்தை மிகத் துல்லியமாக இருத்திக்கொள்ள நமக்கு வழிவகை தருகிறது; இரண்டாவதாக, நான்காம் அகிலத்தின் வரலாற்று வளர்ச்சிக்கும் முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி மற்றும் உலக சோசலிசப் புரட்சி நிகழ்ச்சிப்போக்கு ஆகியவற்றுக்கும் இடையிலான உறவைத் தெளிவுபடுத்துவதற்கும் இது வழிவகையளிக்கிறது.

நான்காம் அகிலத்தின் வரலாற்றிலான முதல் காலகட்டம், அக்டோபர் 1923 இல் இடது எதிர்ப்பாளர் அணி உருவாக்கப்பட்டதில் தொடங்கி செப்டம்பர் 1938 இல் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸ் வரையான 15 ஆண்டு காலத்தைச் சூழ்ந்ததாய் இருக்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் மற்றும் தனியொரு நாட்டில் சோசலிசம் என்னும் அதன் தேசியவாத முன்னோக்குக்கும் எதிரான போராட்டம் மேலாதிக்கம் செலுத்திய இந்த துன்பியல்கரமான ஆண்டுகளின் போது, ஜேர்மனியில் நாஜிக்களுக்கு அதிகாரத்திற்கான அணுகல் கிடைத்துவிட்டதன் பிந்தைய சமயத்தில், ட்ரொட்ஸ்கி, பின்னாளில் நான்காம் அகிலமாக ஆகவிருந்ததன் தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளங்களை அபிவிருத்தி செய்தார். ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தையும் நான்காம் அகிலத்தின் உருவாக்கத்தையும் வழிநடத்திய மைய மூலோபாயக் கோட்பாடு ட்ரொட்ஸ்கியால் 1928 இல் அவரது கம்யூனிசஅகிலத்தின்வரைவுவேலைத்திட்டத்தின்மீதானவிமர்சனம்இல் சூத்திரப்படுத்தப்பட்டது.

ட்ரொட்ஸ்கி எழுதினார்:

ஏகாதிபத்திய சகாப்தமான நமது சகாப்தத்தில், அதாவது உலகப் பொருளாதாரமும் உலக அரசியலும் நிதி மூலதன மேலாதிக்கத்தின் கீழ் இருக்கின்றதான ஒரு சகாப்தத்தில், எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியும் முழுமையாக அல்லது பிரதானமாக அதன் சொந்த நாட்டின் நிலைமைகள் மற்றும் வளர்ச்சிப் போக்குகளில் இருந்து முன்செல்வதன் மூலமாக அதன் வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது. சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்குள்ளாக அரசு அதிகாரத்தைச் செலுத்துகின்ற கட்சிக்கும் இது முழுமையாகப் பொருந்தும். 1914 ஆகஸ்டு 14 அன்று, தேசிய வேலைத்திட்டங்களுக்கு அனைத்து காலத்திற்குமாக சாவுமணி அடிக்கப்பட்டாகி விட்டது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியானது இப்போதைய சகாப்தத்தின், அதாவது முதலாளித்துவத்தின் மிக உயர்ந்த அபிவிருத்தி மற்றும் வீழ்ச்சியின் சகாப்தத்தின் தன்மைக்குப் பொருத்தமானதொரு சர்வதேசிய வேலைத்திட்டத்தின் மீதே தனக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ள இயலும். ஒரு சர்வதேச கம்யூனிச வேலைத்திட்டம் என்பது எந்தவொரு சமயத்திலும் தேசிய வேலைத்திட்டங்களின் கூட்டுமொத்தமாகவோ அல்லது அவற்றின் பொதுவான அம்சங்களது ஒரு கலவையாகவோ இருக்க முடியாது. அந்த சர்வதேசிய வேலைத்திட்டமானது, ஒட்டுமொத்தமாக உலகப் பொருளாதார மற்றும் உலக அரசியல் அமைப்புமுறையை, அதன் அத்தனை இணைப்புகள் மற்றும் முரண்பாடுகள் சகிதமாக, அதாவது அதன் தனித்தனி பாகங்களது பரஸ்பர குரோதமான இடைச்சார்பு சகிதமாக எடுத்துப் பார்த்து, அதன் நிலைமைகள் மற்றும் போக்குகள் மீதான ஒரு பகுப்பாய்வில் இருந்து நேரடியாக முன்செல்வதாக இருந்தாக வேண்டும். கடந்ததை விடவும் மிகப்பெருமளவில் இப்போதைய சகாப்தத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலையானது ஒரு உலக நோக்குநிலையில் இருந்தே பிறக்க முடியும், பிறந்தாக வேண்டுமே தவிர, அதற்குத் எதிர்மாறான விதத்தில் அல்ல. கம்யூனிச சர்வதேசியவாதத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான மற்றும் பிரதான வித்தியாசம் இங்குதான் அமைந்திருக்கிறது.[6]

முதல் காலகட்டமானது, பிரதானமாக ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களது காட்டிக்கொடுப்புகளின் காரணத்தால், வரிசையான அரசியல் பேரழிவுகளை கண்ணுற்றது. மக்கள் முன்னணிவாதம் —அதாவது தொழிலாள வர்க்கமானது ஸ்ராலினிசக் கட்சிகளால் ஏகாதிபத்தியம் மற்றும் நிதி மூலதனத்தின் முதலாளித்துவ தாராளவாத பிரதிநிதிகளுக்கு கீழ்ப்படியச் செய்யப்பட்டது— மற்றும் ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தை வெற்றிக்கு அழைத்துச் சென்ற போல்ஷிவிக் காரியாளர்களை அழித்தொழித்த மாஸ்கோ விசாரணைகள் மற்றும் ஸ்ராலினிச பயங்கரம் ஆகியவற்றின் காலகட்டமாய் அது இருந்தது. நான்காம் அகிலத்தின் வரலாற்று அவசியத்தின் மீது வலியுறுத்திய ட்ரொட்ஸ்கி, ஒரு புதிய அகிலத்தைப் பிரகடனம் செய்வது முதிர்ச்சியற்ற செயல் என மத்தியவாத அமைப்புகள் பலவும் கூறியதை எதிர்த்தார். ஒரு அகிலத்தை நிறுவ, “மாபெரும் நிகழ்வுகள்” அவசியமாயிருந்ததாக அந்த அமைப்புகள் கருதின. வரலாற்றில் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் தோல்விகளாய் “மாபெரும் நிகழ்வுகள்” ஏற்கனவே நடந்து விட்டிருந்ததாக ட்ரொட்ஸ்கி பதிலளித்தார். நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்பி புரட்சிகரத் தலைமை நெருக்கடியை தீர்ப்பதன் மூலம் மட்டுமே தோல்வியின் வடிவங்களை தலைகீழாக்கி சோசலிசத்தின் வெற்றியை சாதிப்பது சாத்தியமாகும் என்றார்.

நான்காம் அகிலத்தின் வரலாற்றிலான இரண்டாவது காலகட்டம் 1938 செப்டம்பர் ஸ்தாபக காங்கிரஸ் தொடங்கி 1953 இல் நான்காம் அகிலத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் உடைவுடன் முடிகிறது. இந்த வரலாற்றுக் காலகட்டத்தில் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டமை, இரண்டாம் உலகப் போரின் முழுக்காலம், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் ஸ்தாபகம், மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பானில் முதலாளித்துவத்தின் மறு-ஸ்திரப்படல், பனிப்போர் வெடிப்பு, சீனப் புரட்சியின் வெற்றி, கொரியப் போர் வெடிப்பு மற்றும் ஸ்ராலின் மரணம் ஆகியவை இடம்பெறுகின்றன.

இந்த கொந்தளிப்பான நிகழ்வுகள் அனைத்தும், நான்காம் அகிலத்தின் அரசியல் அபிவிருத்தியில் பிரதிபலிப்பைக் கண்டன. 1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போரின் வெடிப்பானது உடனடியாக அமெரிக்க சோசலிசத் தொழிலாளர் கட்சிக்குள்ளாக (SWP) பிளவுகளைத் தோற்றுவித்தது; ஸ்ராலின்-ஹிட்லர் வலிந்து தாக்கா ஒப்பந்தம் 1939 ஆகஸ்டில் கையெழுத்தானதற்கான பதிலிறுப்பின் போது, ஜேம்ஸ் பேர்ன்ஹாம், மக்ஸ் சாக்ட்மன் மற்றும் மார்ட்டின் அபேர்ன் ஆகியோர் தலைமையிலான ஒரு சிறுபான்மை எண்ணிக்கையிலான கன்னை, சோவியத் ஒன்றியத்தை ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசாக (degenerated workers state) வரையறை செய்ததை மறுதலித்தது. ட்ரொட்ஸ்கி அவரது வாழ்க்கையின் இறுதி மாதங்களில் பங்களித்த பல ஆவணங்கள் அவரது மிகச் சிறந்த மற்றும் தொலைநோக்கான பங்களிப்புகளில் இடம்பிடிப்பவையாக இருக்கின்ற SWP க்குள்ளான போராட்டம் 1940 இல் நடந்த ஒரு உடைவில் உச்சமடைந்தது.

இந்த அதிமுக்கியமான போராட்டத்தில், சோவியத் அரசின் வர்க்க தன்மையை வரையறை செய்வதற்கு என்ன வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலான ஒரு மோதலைக் காட்டிலும் மிக அதிகமான விடயங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. வரலாற்று மற்றும் அரசியல் முன்னோக்கின் மிக அடிப்படையான பிரச்சினைகள் இந்த மோதலின் வெகு மையத்தில் இருந்தன: இது சோசலிசப் புரட்சியின் சகாப்தமாக இருந்ததா? தொழிலாள வர்க்கம் அதன் வரலாற்றுவழியான முற்போக்கு பாத்திரத்தை ஆற்றி ஓய்ந்து ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்கத் திறனற்றதாக நிரூபிக்கப்பட்டுவிட்டதா? சோவியத் அதிகாரத்துவமானது ஒரு தொடர் அசாதாரண சூழ்நிலைகளால் அதாவது சோவியத் ஒன்றியத்தின் பின்தங்கிய நிலை மற்றும் தனிமைப்படுத்தப்படல், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசத் தோல்விகளால் உருவாக்கப்பட்டிருந்த ஒரு ஒட்டுண்ணித்தனமான சாதியாக இருந்ததா? அல்லது மார்க்சிசம் முன்னெதிர்பார்த்திராத முதலாளித்துவத்திற்குப் பிந்தைய சுரண்டல் வடிவம் ஒன்றின் மீது அமர்ந்து ஆட்சி செய்த ஒரு புதிய வர்க்கமா?

1940 உடைவுக்குப் பிந்தைய சில வாரங்களிலேயே, பேர்ன்ஹாம், அவரது தத்துவார்த்த மற்றும் அரசியல் கருத்தாக்கங்களது தர்க்கத்தின் வழிவந்த செயல்பாடாக, சோசலிசத்தை மறுதலித்து துரிதமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுற்றுவட்டத்திற்குள் நகர்ந்தார். சாக்ட்மன் சோசலிசத்துடன் முறித்துக் கொண்டமை சற்று சுற்றுவழியான விதத்தில் நடந்தது. சோவியத் ஒன்றியம் நாஜி இராணுவங்களது படையெடுப்புக்கு அது முகம்கொடுத்த நிலையிலும் கூட நிபந்தனையற்று அதனைப் பாதுகாப்பதை அவர் மறுதலித்ததற்குப் பின்னர், சாக்ட்மன், முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாப்பதென்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல், இராணுவ மற்றும் உளவு முகமைகளுடன் நேரடியாக சேர்ந்து வேலை செய்வது சம்பந்தப்பட்டதாய் இருந்தது என்ற நிலையிலும் கூட அதனை நிபந்தனையற்றுப் பாதுகாப்பது என்ற கோட்பாட்டைப் பிரகடனம் செய்ய முன்சென்றார்.

போரின் போது “மூன்று ஆய்வுக்கட்டுரைகள்” (“Three Theses”) குழு என்ற இன்னொரு திருத்தல்வாதப் போக்கும் எழுந்தது. சாக்ட்மனின் கண்ணோட்டங்களுக்கு இணையான கண்ணோட்டங்களை முன்வைத்த இந்த மூன்று ஆய்வுக்கட்டுரைகள் குழு, ஜேர்மனியின் மூன்றாம் குடியரசு காலகட்டமானது சோசலிசத்தை அரசியல் சாத்தியங்களது களத்தில் இருந்து அகற்றிவிட்டிருந்த, உலகளாவிய வரலாற்றுப் பின்னடைவுக் காலகட்டம் ஒன்றின் தோற்றத்தைக் குறித்ததாய் இருந்ததாக வாதிட்டது. மனிதகுலம் ஒரு நூற்றாண்டு பின்நோக்கி வீசப்பட்டிருப்பதாகவும் அது தனது சுவடுகளை மீண்டும் தேடத் தள்ளப்பட்டிருப்பதாகவும் அது கூறிக் கொண்டது. முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தேசிய சுதந்திரத்தையும் மறுஸ்தாபகம் செய்வதே சகாப்தத்தின் அரசியல் சவால் என்றது.

பேர்ன்ஹாம், சாக்ட்மன் மற்றும் பின்னோக்காளர்கள், தொழிலாள வர்க்கத்தில் இருந்தும் சோசலிசப் புரட்சி முன்னோக்கில் இருந்தும் தங்களை பிரித்துக் கொள்ளும் நிகழ்ச்சிப்போக்கில் இருந்த நடுத்தர வர்க்க இடது புத்திஜீவித் தட்டின் பிரிவுகளுக்குள்ளாக இருந்த மாறும் அரசியல் மனோநிலைகளைப் பிரதிபலித்தனர். அந்த நிகழ்ச்சிப்போக்கின் இன்னுமொரு வெளிப்பாடு நான்காம் அகிலத்தில் ஒரு திருத்தல்வாதப் போக்கின் வடிவத்தில் எழுந்தது. அதன் தலைவர்களான மிஷேல் பப்லோவும் ஏர்னெஸ்ட் மண்டேலும், சோவியத்தின் இராணுவ வெற்றிகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் ஸ்தாபகம் செய்யப்பட்டமை ஆகியவற்றுக்கு ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கு ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை வழங்குவதன் மூலமாக பதிலிறுப்பு செய்தனர். கிழக்கு ஐரோப்பா பாணியிலான “ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்” (“deformed workers states”) பல நூற்றாண்டுகளின் பாதையில் சோசலிசத்துக்கு கொண்டுசெல்லும் அரசியல் வடிவத்தை குறித்ததாக அவர்கள் வாதிட்டனர். இந்த நிகழ்ச்சிப்போக்கில் நான்காம் அகிலம் வகிப்பதற்கு, வரலாற்று முக்கியத்துவமான பாத்திரத்திற்கெல்லாம் போகவேண்டாம், சுயாதீனமான பாத்திரமும் கூட இல்லை என்றனர்.

1950களின் ஆரம்பத்திலேயே, பப்லோவாதப்போக்கு, நான்காம் அகிலத்தின் பிரிவுகள் அதன் அமைப்புகளை ஸ்ராலினிசக் கட்சிகளுக்குள் மட்டுமல்லாது சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளுக்குள்ளும் கூட கலைத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. 1953க்குள்ளாக, நான்காம் அகிலம் இனியும் அரசியல்ரீதியாக ஒருபடித்தான ஒரு அமைப்பாக இல்லாது போய்விட்டிருந்தது. நான்காம் அகிலத்தின் கலைப்பைத் தடுப்பதற்காக, ஜேம்ஸ் பி. கனன் தலைமையிலான மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கன்னையானது, நான்காம் அகிலத்திற்குள் ஒரு உடைவை பிரகடனம் செய்தும் அனைத்துலகக் குழுவை உருவாக்கியும் 1953 நவம்பரில் பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டது. இந்த உடைவு நான்காம் அகிலத்தின் வரலாற்றிலான இரண்டாவது காலகட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது.

மூன்றாவது காலகட்டமானது பகிரங்க கடிதம் வெளியிடப்பட்டதில் தொடங்கி பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிகரக் கட்சி (WRP) 1985 டிசம்பரில் அனைத்துலகக் குழுவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டமை மற்றும் 1986 பிப்ரவரியில் பிரிட்டிஷ் தேசிய சந்தர்ப்பவாதிகளுடன் இறுதியாக அனைத்து உறவுகளும் துண்டித்துக் கொள்ளப்பட்டமை ஆகியவற்றுடன் முடிவடைந்தது. இந்த காலகட்டம் கிட்டத்தட்ட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய எழுச்சி முழுமையையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. குருச்சேவின் இரகசிய உரை, ஹங்கேரிய புரட்சி, காலனித்துவ-எதிர்ப்புப் போராட்டங்களது ஒரு பாரிய அலையின் (அதாவது. வியட்நாம், எகிப்து, அல்ஜீரியா, காங்கோ) வெடிப்பு, கியூபாவில் காஸ்ட்ரோவின் ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டமை, வியட்நாமில் அமெரிக்காவின் தலையீடு மற்றும் அதனைத் தொடர்ந்து உலகளாவிய அளவில் மாணவர்களது ஒரு பாரிய எதிர்ப்புப் போராட்டம் வெடித்தமை, இந்தோனேசியாவின் 1965-66 எதிர்ப்புரட்சிப் படுகொலை, சீனாவின் கலாச்சாரப் புரட்சி, 1968 மே-ஜூன் பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம், 1971 ஆகஸ்டில் பிரெட்டன் வூட்ஸ் முறையின் பொறிவு, 1973 செப்டம்பரில் அலன்டேயின் கவிழ்ப்பு, 1973 அக்டோபரின் அரபு-இஸ்ரேல் போர், 1974 மார்ச்சில் பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் டோரி அரசாங்கத்திற்கு எதிராக வெற்றி கண்டமை, 1974 ஏப்ரல் போர்ச்சுகீசியப் புரட்சி, 1974 ஜூலையில் கிரேக்க இராணுவ ஆட்சிக்குழு நிலைகுலைந்தமை, 1974 ஆகஸ்டில் நிக்சனின் இராஜினாமா, 1975 மேயில் வியட்நாமில் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டமை, 1978-79 ஈரானியப் புரட்சி, 1979 மற்றும் 1980 இல் தாட்சர் மற்றும் ரீகன் அதிகாரத்திற்கு வந்தமை, அதன்பின் சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தன நிகழ்ச்சிப்போக்கு ஒன்றுக்கு துவக்கமளிக்கப்பட்டமை ஆகிய நிகழ்வுகள் இதில் அடங்கும்.

தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த வெகுஜன இயக்கங்கள் சோசலிசப் புரட்சியின் சாத்தியத்தை புறநிலையாக முன்நிறுத்திய இந்த வெடிப்பான காலகட்டம் முழுவதிலும், அனைத்துலகக் குழுவானது ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளிடம் இருந்தான இடைவிடாத அழுத்தத்துடன் மட்டும் போராட வேண்டி இருக்கவில்லை. மேற்கூறிய அதிகாரத்துவங்களுடன் சேர்ந்து கொண்டு பப்லோவாத இயக்கங்களும், அத்துடன் குட்டிமுதலாளித்துவ தீவிரப்பட்ட பிரிவினர் மற்றும் ட்ரொட்ஸ்கிச-விரோத புத்திஜீவிகளது ஒரு பரந்த அடுக்கினரும் அனைத்துலகக் குழுவைத் தனிமைப்படுத்துவதற்கு முனைந்தனர். மார்க்சிசத் தத்துவம் மற்றும் நான்காம் அகிலத்தின் கோட்பாடுகளின் மீதான இடைவிடாத பொய்மைப்படுத்தல்களுடன் அரசியல்ரீதியான மற்றும் அமைப்புரீதியான ஆத்திரமூட்டல்களின் ஒரு முடிவற்ற வரிசையை அவர்கள் ஒன்றிணைத்தனர்.

முதலாவது மற்றும் இரண்டாவது காலகட்டங்கள் ஒவ்வொன்றும் 15 ஆண்டு காலப்பகுதியை கொண்டவை. 1986 உடைவுடன் முடிவடைந்த மூன்றாவது காலகட்டம் 33 ஆண்டுகள் நீடித்தது. 1986 இல் தொடங்கி இன்று வரை தொடர்ந்து வருகின்ற நான்காவது காலகட்டமும் 33 ஆண்டு காலம் நீண்டதாக இருக்கிறது. 1985-86 உடைவானது அனைத்துலகக் குழுவின் 66 ஆண்டுகால வரலாற்றின் துல்லியமான மத்திய புள்ளியில் நடந்தது. மூன்றாவது மற்றும் நான்காவது காலகட்டங்களை பேதப்படுத்தி பார்ப்பது வழிநடத்தக்கூடியதாக இருப்பதாகும். 1953 முதல் 1986 வரை, பப்லோவாத சந்தர்ப்பவாதிகள் ICFI இன் பிரிவுகளுக்கு உள்ளேயிருந்தும் வெளியேயிருந்தும் இரண்டு வழிகளிலும், நான்காம் அகிலத்தின் மீது கடுமையான நெருக்குதல் கொடுத்தனர். அரசியல் நோக்குநிலைபிறழ்வு மற்றும் ஆத்திரமூட்டலுக்கான முடிவற்ற மூலவளமாக அவர்கள் இருந்தனர். சமூகவியல் வார்த்தைகளில் சொல்வதானால், ஏகாதிபத்தியமும் அதன் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவ முகமைகளும் அனைத்துலகக் குழுவை சீர்குலைப்பதற்கும் தனிமைப்படுத்துவதற்கும் மார்க்சிச-விரோத தீவிரப்பட்ட குட்டி முதலாளித்துவத்தின் பிரிவுகளை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதற்குப் பயன்படுத்திக் கொண்ட கருவிகளாக பப்லோவாத அமைப்புகள் இருந்தன. மேலும், 1968 மற்றும் 1975க்கு இடையிலான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை மட்டுப்படுத்துவதிலும் மற்றும் திசைதிருப்புவதிலும், இதன்மூலம் அனைத்துலகக் குழுவின் மீதான அரசியல் அழுத்தத்தை தீவிரப்படுத்துவதிலும் பப்லோவாத அமைப்புகள் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் பாத்திரத்தை வகித்தன.

1953 இல் பப்லோ மற்றும் மண்டேலை எதிர்ப்பதில் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பிரிவுகள் ஒரு இன்றியமையாத பாத்திரம் வகித்தன. 1961க்கும் 1963க்கும் இடையில் பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL), பிரெஞ்சு பிரிவின் ஆதரவுடன், பப்லோவாதிகளுடனான அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் கோட்பாடற்ற மறுஇணைவுக்கு எதிரான போராட்டத்தில் தலைமையில் நின்றது. ஆயினும் 1960களின் பிற்பகுதியில், பிரிட்டனிலும் பிரான்சிலும் ஏமாற்றக் கூடிய கவர்ச்சியான அமைப்புரீதியான வெற்றிகள் இருந்தபோதிலும், சோசலிச தொழிலாளர் கழகமும் சர்வதேச கம்யூனிச அமைப்பும் (Organisation Communiste Internationaliste OCI) தமது முன்னோக்கையும் செயல்பாட்டையும் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டதாய் இருந்த அப்போது நிலவிய தேசிய அரசியல் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளத் தொடங்கின. 1971 இல் OCI மற்றும் SLL க்கு இடையிலான உடைவு அந்த அமைப்புகளுக்கு இடையிலான அரசியல் பேதங்கள் தெளிவுபடுத்தப்படாமல் விடப்பட்டிருந்த நிலைமைகளின் கீழ் அரங்கேறியது. முழுக்கவும் தேசிய-ரீதியான தந்திரோபாய பரிசீலிப்புகளின் செயல்படுத்தப்பட்ட SLL WRP ஆக உருமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வானது பிரிட்டிஷ் பிரிவின் சந்தர்ப்பவாத சீரழிவைத் துரிதப்படுத்தியது.

பிரிட்டிஷ் அமைப்பின் அதிகரித்த தேசியரீதியான விடயங்களில் மீதான கவனக்குவிப்பானது ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடுகளில் இருந்து முன்னெப்போதினும் வெளிப்படையான விலகிச் செல்லலுக்கு இட்டுச் சென்றது. குறிப்பாக, நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை அது கைவிட்டதிலும் வளர்ச்சி குன்றிய நாடுகளின் தேசிய முதலாளித்துவத்தை நோக்கி அது நோக்குநிலை அமைத்துக் கொண்டதிலும் இது வெளிப்படையாகத் தெரிந்தது.

இந்த வலது-சாரி மற்றும் அடிப்படையாக பப்லோவாதப் பாதையானது ICFI இன் இலங்கை பிரிவான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) மற்றும் அமெரிக்காவில் வேர்க்கர்ஸ் லீக் (WL) ஆகிய இரண்டிற்குள்ளும் எதிர்ப்பை உண்டுபண்ணியது. இந்த இரண்டு பிரிவுகளும் 1963 பப்லோவாத மறுஇணைவுக்கான ICFI இன் எதிர்ப்பில் —இதுவே இந்த இரண்டு பிரிவுகளின் அடுத்துவந்த அபிவிருத்தியில் அதிமுக்கிய காரணியாக இருந்தது— தங்கள் மூலங்களைக் கொண்டிருந்தன. 1971 இன் ஆரம்பத்திலேயே, தோழர் கீர்த்தி பாலசூரியாவும் RCL தலைமையும், இந்திரா காந்தியின் முதலாளித்துவ அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்டிருந்த கிழக்கு பாகிஸ்தான் மீதான இந்தியப் படையெடுப்புக்கு பிரிட்டிஷ் SLL ஆதரவளித்தமையுடன் தங்களது கருத்துவேறுபாட்டை வெளிப்படுத்தினர். ஆனால் இந்த கோட்பாடான விமர்சனம், அனைத்துலகக் குழுவிற்குள் எந்த விவாதமும் இன்றி பிரிட்டிஷ் அமைப்பினால் ஒடுக்கப்பட்டது. இலங்கை அமைப்பை திட்டமிட்டு தனிமைப்படுத்துவதன் மூலமும் அதன் தலைவர்களை தீயநோக்குடனான ஆத்திரமூட்டல்களுக்கு இலக்காக்குவதின் மூலமும் RCL இன் விமர்சனத்திற்கு SLL பதிலடி கொடுக்க முனைந்தது.

வேர்க்கஸ் லீக்கிற்குள் உருவான எதிர்ப்பின் அபிவிருத்தியானது, ஒருவகை சற்று நெடிய மற்றும் சிக்கலான நிகழ்ச்சிப்போக்கை கொண்டிருந்தது. 1974 இல் தேசிய செயலாளர் பொறுப்பில் இருந்து வொல்ஃபோர்த் அகற்றப்பட்டமை (அவர் அதன்பின் SWP இல் மீண்டும் இணைந்தார்) ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றின் அடிப்படையில் அதன் ஒட்டுமொத்த காரியாளர்களுக்கும் முறைப்படி கல்வியூட்டுவதை சாத்தியமாக்கியது. லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையை சுற்றிய சூழ்நிலைகள் மீது விசாரணை தொடக்கப்பட்டமை —பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என அறியப்படுவது— வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் அபிவிருத்தியில் ஒரு இன்றியமையாத பாத்திரம் வகித்தது. அத்துடன் மிக உண்மையான மற்றும் புறநிலையான வார்த்தைகளில், முதலாளித்துவ அரசு மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் இரண்டினது எதிர்ப்புரட்சி முகமைகளுக்கும் எதிராய் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் தொடுக்கப்பட்ட ஒரு அரசியல் தாக்குதலை அது பிரதிநிதித்துவம் செய்தது.

1974க்குப் பின்னர் வேர்க்கர்ஸ் லீக்கில் அடுத்துவந்த அபிவிருத்தியானது, WRP உடனான கருத்துவேறுபாடுகள் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட 1982 இல் தொடங்கிய அரசியல் போராட்டத்திற்கு அதனை தயாரிப்பு செய்தது. இந்தப் போராட்டத்தின் முதல் கட்டத்தில், வேர்க்கர்ஸ் லீக் முற்றிலும் தனிமைப்பட்டிருந்ததாகத் தென்பட்டது. ஆயினும் மூன்று ஆண்டுகளுக்கும் சற்று அதிகமான காலத்திற்குள்ளாகவே, WRP இன் பப்லோவாத அரசியலுக்கான ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு அனைத்துலகக் குழுவின் ஒரு தீர்மானகரமான பெரும்பான்மையைப் பெற்றது. 1985 ஆகஸ்டுக்கும் 1986 பிப்ரவரிக்கும் இடையில் அனைத்துலகக் குழுவிற்குள் நடைபெற்ற மாற்றமானது ஒரு அரசியல் புரட்சியுடன் ஒப்புமை செய்யத் தகுதியுடையதாகும்.

1985 ஜனவரியில் “அனைத்துலகக் குழுவின் பத்தாவது காங்கிரஸ்” எனக்கூறப்பட்டதில், WRP, முந்தைய மூன்று ஆண்டுகளில் வேர்க்கர்ஸ் லீக்கினால் எழுப்பப்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் மீதான எந்த விவாதத்தையும் தடைசெய்தது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். காங்கிரசில் விவாதத்திற்காக WRP தயாரித்திருந்த முன்னோக்குகள் ஆவணமானது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெற்று அலங்கார அறிவிப்புகளை —பின்னாளில் தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது இல் அனைத்துலகக் குழு “கிளீவ் சுலோட்டரின் பத்து முட்டாள்தனங்கள்” என்று இவற்றை பொருத்தமாய் வர்ணித்திருந்தது— கொண்டிருந்தது.

ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளுக்கு எதிராக ஒன்றினை அடுத்து ஒன்றாக அரசியல் ஆத்திரமூட்டல்களை அரங்கேற்றியதன் மூலம், தமது அரசியல் திவால்நிலையை மூடிமறைக்க முனைந்தனர். ஆனாலும் 1985 முடிவதற்குள்ளாக, மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நிரந்தரப் புரட்சியை பாதுகாத்து இறுதியாக அனைத்துலகக் குழுவின் கட்டுப்பட்டை மறுபடி மீட்டனர்; WRP ஐ உறுப்பினராக இருப்பதில் இருந்து இடைநீக்கம் செய்தனர்.

1982-86 மோதலின் வரலாற்றை ஆய்கின்றபோது, உட்கட்சிப் போராட்டத்திற்கும் உடைவு உருவான விரிந்த வரலாற்று, அரசியல், புத்திஜீவித மற்றும் சமூக உள்ளடக்கத்திற்கும் இடையிலான (பிந்தையது ஒரு மிக உயர்ந்த நனவான அரசியல் வெளிப்பாடாக இருந்தது) சிக்கலான சந்திப்பை உணர்ந்து கொள்வது அவசியமானதாகும்.

இந்த விரிந்த உள்ளடக்கத்தில் இருந்து விலகி 1982-86 நிகழ்வுகளை புரிந்து கொள்வதென்பது உண்மையாகவே சாத்தியமில்லை. வேர்க்கர்ஸ் லீக்கிற்கும் WRPக்கும் இடையில் மெய்யியல் மற்றும் இயங்கியல் வழிமுறை தொடர்பாக எழுந்த வேறுபாடுகளின் மிக அருவமான கூறும் கூட ICFI க்கு வெளியில் நடைபெற்ற அபிவிருத்திகளுடன் தொடர்புபட்டவையாக இருந்தன. ஹீலியின் நவ-ஹேகலிய “அறிகை பயிற்சி” எத்தனைதான் சிலருக்கு மட்டும் புரியக் கூடியதாகவும் புதிர் போன்றும் தெரிகின்றபோதும் கூட, மெய்யியல் சடவாதத்தில் இருந்து அவர் பின்வாங்கியமையும் ஒரு மிகவும் அகநிலையான மற்றும் தன்னார்வவாத வழிமுறையை அவர் ஏற்றுக்கொண்டமையும் பல இன்றியமையாத அம்சங்களில் 1968க்குப் பிந்தைய காலத்தில் குட்டி-முதலாளித்துவ புத்திஜீவிகள் மத்தியில் செல்வாக்கு செலுத்தவிருந்த மார்க்சிச-விரோதத் தத்துவங்களின் கூறுகளைப் பிரதியெடுத்திருந்தது.

1982 இல் ஹீலியின் மார்க்சிசத் திருத்தல்கள் மீதான விமர்சனத்தை அபிவிருத்தி செய்கையில், மார்க்சும் ஏங்கெல்சும் 1843 மற்றும் 1847க்கு இடையில் இடது ஹேகலியவாதத்தில் இருந்து முறித்துக் கொண்ட மற்றும் வரலாறு குறித்த சடவாதக் கருத்தாக்கத்தை எடுத்துரைத்த தத்துவார்த்த-புத்திஜீவித நிகழ்ச்சிப்போக்கை மீள்கட்டுமானம் செய்வது அவசியமானது. மனித வரலாற்றை, “முதலாளிகள் மற்றும் தொழிலாள வர்க்கம் இரண்டும் கொண்ட ஆக்கம்மிக்க சக்தியான மனித முன்முயற்சியின் வளர்ச்சி”யாக புரிந்துகொள்ளப்பட வேண்டும் [7] என்ற ஹீலியின் கூற்று ஏனைய எண்ணிலடங்கா பல பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் இடது ஹேகலியர்களின் அகநிலை கருத்துவாதத்திற்கு உண்மையிலேயே ஒரு அவலட்சணமான விதத்தில் புத்துயிரூட்டிய மற்றும் உருப்பெருக்கிக் காட்டிய தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் வேலைத்திட்டத்தைக் கைவிடுவது என்ற மிகத் திட்டவட்டமான அரசியல் முடிவுகளுக்கு சேவைசெய்தது. 1983க்குள்ளாக கிளீவ் சுலோட்டர், இந்த அரசியல் சுயாதீனத்தின் மீதான வேர்க்கர்ஸ் லீக்கின் “அளவுக்கதிகமான வலியுறுத்த”த்தை தாக்கிக் கொண்டிருந்தார். அதேகாலகட்டத்தில் குட்டி-முதலாளித்துவ, மார்க்சிச-விரோத தத்துவாசிரியர்கள் மார்க்சிச சடவாதம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தின் மீதான வலியுறுத்தல் இரண்டின் மீதும் தாக்குதல் நடத்தி எழுதிக் கொண்டிருந்ததற்கு ஏராளமான உதாரணங்களை வழங்குவது கடினமில்லை.

மிக நன்கறிந்த ஒரு உதாரணத்தை கூறுவதானால், எர்னெஸ்டோ லாக்கிளவ் மற்றும் சாந்தால் மூஃப் எழுதி பப்லோவாத பிரசுரமான Verso ஆல் 1985 ஆல் வெளியிடப்பட்ட மேலாதிக்கமும் சோசலிச மூலோபாயமும் (Hegemony and Socialist Strategy) முழுக்க முழுக்க, வேர்க்கர்ஸ் லீக் தொழிலாள வர்க்கத்தின் மீது “அளவுமீறிய முக்கியத்துவம்” கொடுத்தமை மீதான கிளீவ் சுலோட்டரின் 1983 விமர்சனத்தை வலுப்படுத்துவதற்காய் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் எழுதினர்: தொழிலாள வர்க்கத்தை தத்துவார்த்த மையமாக கொண்டிருக்கும் சோசலிசம் என்ற ஒட்டுமொத்த கருத்தாக்கமும் இப்போது நெருக்கடியில் இருக்கிறது...”. உறுதியாகச் சொல்லலாம் லாக்கிளவ் மற்றும் மூஃப் க்கு சுலோட்டரின் 1983 கடிதம் பற்றி தெரிந்திருக்க முடியாது, அல்லது சுலோட்டரும் WRP மீதான எனது விமர்சனங்களைக் குறித்து அவர்களுடன் கலந்துரையாடியிருக்க வாய்ப்பில்லை. சுலோட்டர், லாக்கிளவ் மற்றும் மூஃப் அனைவருமே குட்டி-முதலாளித்துவ மார்க்சிச-விரோத தத்துவாசிரியர்களின் பரந்த பிரிவுகளின் மத்தியில் வியாபித்திருந்த புத்திஜீவித மற்றும் அரசியல் கருத்தாக்கங்களை நீட்டிமுழக்கிக் கொண்டிருந்தார்கள்.

வேர்க்கர்ஸ் லீக்கின் எதிர்ப்பானது ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் உலக முதலாளித்துவத்தின் உலகளாவிய மறுசீரமைப்பு ஆகியவற்றின் நெருக்கடி வளர்ச்சியடைந்து வந்ததில் இருந்து தானாக உருவாகி விடவில்லை. ஆயினும் நிச்சயமாக, அது சமூக சக்திகளின் ஒரு புதிய உறவையும் மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு ஒரு கூடுதல் சாதகமான சூழலையும் உருவாக்கித் தந்ததோடு ட்ரொட்ஸ்கிச-விரோத சந்தர்ப்பவாதிகள் மற்றும் ஓடுகாலிகளை வெற்றிகாண்பதில் பங்களிப்பு செய்தது.

ஆயினும், WRP தோற்கடிக்கப்பட்டதும் அனைத்துலகக் குழுவில் இருந்து சந்தர்ப்பவாதிகள் வெளியேற்றப்பட்டதும் ஒரு முன்கூட்டி-விதிக்கப்பட்ட மற்றும் தானாக நடந்த நிகழ்ச்சிப்போக்கு அல்ல. அது நனவுடனும் திட்டமிட்டும் நடத்தப்பட்ட ஒரு போராட்டம். ஆயினும் மோதலின் துவக்கமளிப்பும் அதன் அபிவிருத்தியின் வடிவமும் கூட வரலாற்றுக் காரணிகளால் தீர்மானிக்கப்பட்டவையாக இருந்தன, இக்காரணிகள் வேர்க்கர்ஸ் லீக் தலைமையின் மற்றும் காரியாளர்களின் அரசியல் நனவின் மீது ஒரு தீவிரமான செல்வாக்கை செலுத்தின.

தெளிவுபட, ஹீலியின் இயங்கியல் சடவாதத்திலான ஆய்வுகள் மீதான விமர்சன ஆவணங்களில், நாங்கள், மார்க்சிச இயக்கத்தின் மூலங்களுக்குச் சென்று அதன் ஒட்டுமொத்த தத்துவார்த்த மூலதனத்தின் மீது மிக நனவுடன் எங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டோம்.

மேலும், 1917 அக்டோபர் புரட்சியின் கோட்பாடுகளையும் இலட்சியங்களையும் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதில் உழைப்பை அளித்திருந்த லியோன் ட்ரொட்ஸ்கியின் மலைபோன்ற புத்திஜீவித மற்றும் அரசியல் பாரம்பரியத்தை நாங்கள் அறிந்து வைத்திருந்தோம். 2008 இல் SEP இன் ஸ்தாபக காங்கிரசில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் இடத்தைக் குறித்த ஒரு இரத்தினச் சுருக்க விவரிப்பை வைத்தது:

அவர் அக்டோடர் புரட்சியின் இணைத்தலைவராக, ஸ்ராலினிசத்தின் சமரசமற்ற எதிரியாக மற்றும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகராக மட்டும் இருக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி சகாப்தத்திலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களிலும் எழுந்த பாரிய புரட்சிகரத் தொழிலாளர்’ இயக்கத்திற்கு ஆதர்சமளித்த செவ்வியல் மார்க்சிசத்தின் அரசியல், புத்திஜீவித, கலாச்சார மற்றும் அறநெறிப் பாரம்பரியங்களது இறுதியான மற்றும் மகத்தான பிரதிநிதியாக இருந்தார். மெய்யியல்ரீதியாக சடவாதத்தில் வேரூன்றியிருந்த, வெளிநோக்கி திரும்பிய புறநிலை யதார்த்தத்தினை அறிவதை இலக்காகக்கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் கல்வியூட்டல் மற்றும் அரசியல் அணிதிரள்வை நோக்கி நோக்குநிலை அமைந்த, மற்றும் மூலோபாயரீதியாக முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தில் எப்போதும் கவனம்செலுத்துகின்ற புரட்சிகரத் தத்துவத்தின் ஒரு கருத்தாக்கத்தை அவர் அபிவிருத்தி செய்தார்.[8]

நாம் சிரமேற்கொண்டு படித்த, அக்டோபர் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பின் துரோகத் தன்மையை அம்பலப்படுத்திய ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள், சமகால உலகத்தில் சோசலிசப் புரட்சிக்கான மூலோபாய நோக்குநிலையையும் வேலைத்திட்ட அடித்தளங்களையும் அபிவிருத்தி செய்தது. அத்துடன் மாபெரும் அமெரிக்கப் புரட்சியாளரான ஜேம்ஸ் பி.கனனின் தலைமையின் கீழ் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) முன்னோடியான வேலைகளில் இருந்தும் நாங்கள் அரசியல் உத்வேகத்தையும் உண்மையான அறிவையும் பெற்றோம்.

ஜோசப் ஹான்சனால் ஏற்பாடு செய்யப்பட்டு பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) கோட்பாடற்று மறுஇணைவு காண்பதற்கு எதிராக 1960களின் ஆரம்பத்தில் சோசலிச தொழிலாளர் கழகத்தால் (SLL) நடத்தப்பட்ட போராட்டம் இல்லாமல் நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழு உருவாக்கப்படுவதோ 1966 இல் வேர்க்கர்ஸ் லீக் (WL) ஸ்தாபிக்கப்படுவதோ சாத்தியமாகியிருக்க முடியாது. 1970களின் ஆரம்பங்களில் வேர்க்கர்ஸ் லீக்கில் இணைந்தவர்கள் ட்ரொட்ஸ்கிசம் எதிர் திருத்தல்வாதம் என்ற நூல் திரட்டின் முதல் நான்கு தொகுதிகளில் வெளியான முக்கியமான ஆவணங்களை பயின்றார்கள், அதாவது கற்றார்கள். பிரிட்டிஷ் பிரிவின் வரலாற்றின் அந்த வெகுமுக்கிய கூறில் இருந்து வேர்க்கர்ஸ் லீக் ஒருபோதும் விலகியதே இல்லை.

வேர்க்கர்ஸ் லீக் (WL), அதன் வெகு ஆரம்ப நாட்களில் இருந்தே, தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு உறுதியான நோக்குநிலையைக் கொண்டிருந்தது என்பதை அழுத்திக் கூறியாக வேண்டும். முகம்கொடுத்த அத்தனை சிரமங்களையும் தாண்டி, வேர்க்கர்ஸ் லீக் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தின் மீதான நம்பிக்கையால் நிரப்பப்பட்டிருந்தது. இங்குதான் “கனன்” வாதத்தின் ஆகச் சிறந்த பாரம்பரியங்கள் வெளிப்பாடு கண்டன.

WL இன் அரசியல் வரலாறும், பிரிவின் தத்துவார்த்த-அரசியல் வேலைகளும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறும் கோட்பாடுகளும் புகட்டப்பட்டிருந்த WL தலைமையை, புறநிலை பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு உணர்திறன் மிக்கதாய் ஆக்கியிருந்தன. இதுவே WRP ஆல் பின்பற்றப்பட்ட பாதைக்கு அரசியல் அதிருப்தியையும் உடன்பாடின்மையையும் உருவாக்கியது.

நாம், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பின்நோக்கிப் பார்ப்பதற்கு இயலுகின்ற ஒரு அனுகூலமான நிலையில், இந்த விமர்சனத்தினால் தொடங்கப்பட்டு 1985 டிசம்பரில் அனைத்துலகக் குழுவில் இருந்து WRP இடைநீக்கம் செய்யப்படுவதிலும் 1986 இல் முழுமையாக உறவுகள் துண்டிக்கப்படுவதிலும் உச்சமடைந்த மோதலானது, உலக மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு வெகுமுக்கியமான நிகழ்வாக இருந்ததை உணர்ந்து கொள்ள முடியும். நான்காம் அகிலத்தின் உயிர்வாழ்க்கையே பணயத்தில் இருந்தது. அனைத்துலகக் குழுவைத் தவிர்த்து, லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இயக்கமானது அரசியல்ரீதியாக பப்லோவாதிகளால் கலைக்கப்பட்டு விட்டிருந்தது. பப்லோவாதிகள் அமைப்புரீதியான கட்டுப்பாட்டை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்திருந்த அத்தனை நாடுகளிலும் அவர்கள் ட்ரொட்ஸ்கிச அமைப்புகளை ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அல்லது முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளின் அரசியல் ஒட்டுவால்களாக ஆக்குவதன் மூலம் அழித்து விட்டிருந்தனர். 1985க்குள்ளாக பப்லோவாதத்திடம் சரணடைவு கண்டு விட்டிருந்த WRP யும் இதே அழிவு நடவடிக்கையில் நெருக்கமாக போட்டிபோட்டது. நாங்கள் பின்னாளில் கண்டுபிடிக்க நேர்ந்தவாறாக, ஹீலி அவரது இரகசியமான தகவல்தொடர்புகளில், மத்திய கிழக்கில் இருந்த முதலாளித்துவ தேசிய ஆட்சிகள் மற்றும் பிரிட்டனில் இருந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இரண்டுக்கும் WRP இன் முழு வளங்களும் அவற்றின் விருப்பத்திற்கேற்ப செயல்படும் இடத்தில் வைக்கப்படும் என்ற வாக்குறுதியளித்துக் கொண்டிருந்தார்.

நிச்சயமாக, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை காப்பாற்றவும் மீள்கட்டமைக்கவும் முயற்சிகள் இருந்திருக்கும் தான். அனைத்துலகக் குழுவின் அத்தனை பிரிவுகளிலும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட, நான்காம் அகிலத்தை மீள்கட்டியமைப்பதில் தீர்மானகரமான உறுதியுடன் திகழ்ந்த தோழர்கள் இருந்திருப்பார்கள் என்று நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். ஆயினும், 1985 நெருக்கடியின் கீழமைந்த காரணங்கள் குறித்த ஒரு மிகவும் அபிவிருத்தியடைந்ததொரு பகுப்பாய்வு அங்கு இல்லாது போயிருக்குமாயின், அவர்களது முயற்சிகள் WRP இன் பொறிவைத் தொடர்ந்து வந்த நோக்குநிலை பிறழ்வின் சுமையினால் அழுத்தப்பட்டிருந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால், ஜெரி ஹீலியின் தத்துவார்த்த பித்தலாட்டம் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்திடம் WRP சரணடைந்தமை ஆகியவற்றின் மீது 1982 மற்றும் 1984க்கு இடையில் வேர்க்கர்ஸ் லீக்கின் தலைமையினால் அபிவிருத்தி செய்யப்பட்ட விரிவான எழுத்துரீதியான விமர்சனம் இருந்தமைதான், WRP இன் அரசியல் நெருக்கடியானது ஒட்டுமொத்த அனைத்துலகக் குழுவின் “சம அளவிலான சீரழிவில்” ஒரேயொரு கூறு மட்டுமே என்ற கிளீவ் சுலோட்டரின் சிடுமூஞ்சித்தனமான பொய்க்கு மறுதலிப்பாக இருந்தது. ICFI 1985-86 நெருக்கடியில் உயிர்பிழைக்காது போயிருக்குமானால், இன்று உலகில் ஒரு சர்வதேச அரசியல்ரீதியாக ஐக்கியப்பட்ட புரட்சிகர மார்க்சிசக் கட்சி ஒன்று இல்லாமலே போயிருந்திருக்கும்.

ஆனால் அனைத்துலகக் குழு நெருக்கடியில் உயிர்தப்பியது மட்டுமல்ல. உடைவில் இருந்து ஒரு மிகப்பரந்த வலுவான அமைப்பாக அது எழுந்தது. உடைவுக்கு முந்தைய 33 ஆண்டுகளிலான அனைத்துலகக் குழுவின் அபிவிருத்தியை WRP உடன் முறித்துக் கொண்டதற்குப் பிந்தைய காலத்தின் அரசியல் அபிவிருத்தியுடன் ஒருவர் ஒப்பிட்டால், 1985-86 உடைவின் அரசியல் முக்கியத்துவம் விளங்கப்படும். பப்லோவாத சந்தர்ப்பவாதம் தீர்மானகரமாக தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு செறிவான தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியான அபிவிருத்திக்கான நிலைமைகளை உருவாக்கியது. தேசிய சந்தர்ப்பவாதிகளின் வெளியேற்றத்தின் மூலமாக சாத்தியமாக்கப்பட்ட தத்துவார்த்த மற்றும் அரசியல் தெளிவுபடுத்தல் வேலையானது ட்ரொட்ஸ்கிசத்தின் ஒரு மறுமலர்ச்சிக்கு சளைக்காத ஒன்றைக் குறித்து நின்றது.

1982க்கும் 1986க்கும் இடையில், மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நான்காம் அகிலத்தின் அரசியல் பாரம்பரியத்தையும் வேலைத்திட்டத்தையும் பாதுகாத்து நின்றனர். ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளை பாதுகாத்தமையின் அத்தியாவசியமான வரலாற்று முக்கியத்துவம் உடைவுக்குப் பிந்தைய காலத்தில் கட்டவிழ்ந்த உலக நிகழ்வுகளால் வெளிப்பட்டது. 1985-86 உடைவானது தீவிரமான உலகளாவிய அரசியல், புவியரசியல் மற்றும் சமூக-பொருளாதார மாற்றங்களை கட்டியம் கூறியது என்பதை இப்போது நாம் நன்கு அறிவோம்.

WRP ட்ரொட்ஸ்கிசத்தை மறுதலித்த நிலையில், அது முதலாளித்துவ தேசியவாதிகள், சமூக ஜனநாயக சீர்திருத்தவாதிகள், மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் மத்தியில் புதிய கூட்டாளிகளைக் காண விழைந்தது. அனைத்துலகக் குழுவின் சிறிய பிரிவுகளை அது அலட்சியமாகப் பார்த்தது. “ட்ரொட்ஸ்கிச குழுக்களுக்கு” (“Trotskyite groupos” - இது உடைவுக்கு முந்தைய ஆண்டுகளின் போது ஹீலி மிக அடிக்கடி பயன்படுத்திய ஒரு பதமாக இருந்தது) என்ன தேவை இருந்தது? 1986 உடைவுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக, கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகள் அனைத்தும் கலைக்கப்படும் என்பதையோ, வெகுஜன ஸ்ராலினிச அமைப்புகள் எல்லாம் சுக்குநூறாகிப் போகும் என்பதையோ, அதன்மூலம் “மனிதகுலத்தினை நோக்கி விரைந்து வரும் மாபெரும் நிகழ்வுகள் இந்த காலாவதியாகிப்போன அமைப்புகளில் ஒன்றையும் கூட விட்டுவைக்கப் போவதில்லை” என்று 1938 இல் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்தின் போதான ட்ரொட்ஸ்கியின் தீர்க்கதரிசனம் பூர்த்திகாணும் என்பதையோ ஓடுகாலிகள் கற்பனை பண்ணிப் பார்த்திருப்பது கடினம் தான்.

ஒரு பரிதாபகரமான சிதைவாக சுருங்கி விட்டிருந்த ஹீலி, அவரது நாயகர் மிக்கையில் கோர்பச்சேவ் ஒரு அரசியல் புரட்சிக்குத் தலைமை கொடுத்துக் கொண்டிருப்பதாக நம்பியபடியே, 1989 டிசம்பரில் கல்லறைக்குப் போனார். உடைவுக்குப் பிந்தைய கொந்தளிப்பான நிகழ்வுகளின் மத்தியில், அனைத்துலகக் குழு, ஓடுகாலிகளால் ஏற்படுத்தப்பட்டிருந்த சேதாரத்தை மட்டும் ஈடுகட்டவில்லை. நான்காம் அகிலத்தின் ஒரு தொலைநோக்கான தத்துவார்த்த மற்றும் அரசியல் புதுப்பிப்பை அது மேற்கொள்ள வேண்டியிருந்தது. வழக்கமான அரசியல் சூத்திரங்கள் மற்றும் சுலோகங்களை மறுபடியும் பிரயோகித்துப் பார்ப்பதுடன் எங்களை மட்டுப்படுத்திக் கொண்டால் இந்த சவாலை எங்களால் எதிர்கொள்ள முடியாது. அதுவரை தயாரான பதில் இருந்திராத முன்கண்டிராத நிகழ்வுகளின் மீதான பகுப்பாய்வுக்கு, வரலாற்று அனுபவம் என்ற பட்டகம் வழியே ஊடுருவிக் காணக்கூடிய மார்க்சிச வழிமுறையை, படைப்புத்திறனுடனும் சிந்தனைத் திறனுடனும் பிரயோகிப்பது அவசியமாயிருந்தது.

அனைத்துலகக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தத்துவார்த்த வேலைகளது வீச்சினை உடைவுக்குப் பிந்தைய ஆறு ஆண்டுகளின் போது நடந்த அனைத்துலகக் குழுவின் நிறைபேரவைக் கூட்டங்கள் குறித்த ஒரு திறனாய்வின் மூலமாக சுட்டிக்காட்டலாம்.

ICFI இன் முதலாவது நிறைபேரவை [மே 18 - ஜூன் 9, 1986] WRP இன் காட்டிக்கொடுப்பு மீதான ஒரு பகுப்பாய்வினால் நிரம்பியிருந்தது. WRP இன் பொறிவு சந்தர்ப்பவாதத்தின் விளைபொருளாய் இருந்ததை அது நிறுவியது. இரண்டு வாரங்கள் நீடித்த அந்த நிறைபேரவையின் வேளையில், தோழர் கீர்த்தியும் நானும் தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது 1973-1985 ஐ எழுதுவதில் சேர்ந்து செயற்பட்டோம்.

ICFI இன் இரண்டாவது நிறைபேரவை (செப்டம்பர் 29-அக்டோபர் 12, 1986) அனைத்துலகக் குழு முழுவதிலும் WRP இன் சந்தர்ப்பவாதம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை ஆய்வு செய்ததுடன் அனைத்துலகக் குழுவின் வெவ்வேறு பிரிவுகளிலும் முன்னோக்குகளின் அபிவிருத்தியை சீர்குலைத்த “தந்திரோபாய சந்தர்ப்பவாத”த்தின் மீதான ஒரு விமர்சனத்தையும் அபிவிருத்தி செய்தது. நாங்கள் பிரிட்டனில் இருந்த சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி (ICP) குறித்த ஒரு தீர்மானத்தை தயாரித்தோம்; அத்துடன் இலங்கையில் RCL க்கான ஒரு முன்னோக்கு தொடர்பாகவும் வேலைசெய்யத் தொடக்கினோம்.

ICFI இன் மூன்றாவது நிறைபேரவை (1987 மார்ச் 10-23) WRP க்கும் ஆர்ஜென்டினாவின் MAS க்கும் (சோசலிசத்திற்கான இயக்கம்) இடையிலான உறவுகள் மீதான ஒரு பகுப்பாய்வையும், அத்துடன் பில் வான் ஆக்கென் மற்றும் நிக் பீம்ஸ் எழுதிய, பெரஸ்த்ரோய்க்கா (மீள்கட்டுமானம்) மற்றும் கிளாஸ்னோஸ்ட் (வெளிப்படைத்தன்மை) ஐ பகுப்பாய்வு செய்த “சோவியத் ஒன்றியத்தில் என்ன நடக்கிறது” என்ற அறிக்கையையும் உருவாக்கியது. MAS இன் வரலாற்றின் மீதான திறனாய்வு முக்கியத்துவம் பெற்றதற்கு ஆர்ஜென்டினா நிகழ்வுகளின் உள்ளார்ந்த முக்கியத்துவம் மட்டுமே காரணமல்ல, சுலோட்டரும் அவரது ஆதரவாளர்களும் அனைத்துலகக் குழுவுடன் அவர்கள் முறித்துக் கொண்டதன் பின்னர், ஆர்ஜென்டினாவின் படுபயங்கர சந்தர்ப்பவாதியான நஹூவேல் மொரேனோ (Nahuel Moreno) வின் அமைப்புடன் கூட்டணி வைத்து நான்காம் அகிலத்திற்கு ஒரு புதிய அடித்தளம் உருவாக்கப்படவிருப்பதாக கூறி வந்தனர் என்பதும் அதற்கொரு காரணமாக இருந்தது.

ICFI இன் நான்காவது நிறைபேரவை (1987 ஜூலை 20-27) ஒரு சர்வதேச முன்னோக்குகள் ஆவணத்தை வரைவு செய்வதில் விவாதத்தை தொடக்கியது. மார்க்சிசம் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் மிக அடிப்படைக் கோட்பாடுகளும் கூட சகல இடங்களிலும் கைதுறக்கப்பட்டதற்கு எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு புதிய அலைக்கான உலகளாவிய பொருளாதார மற்றும் புவியரசியல் அடித்தளங்களை அமைக்கவிருக்கும் புறநிலை உந்து சக்திகளை ICFI எடுத்துரைப்பது அவசியமாயிருந்தது என்பதில் பிரதிநிதிகள் உடன்பட்டனர்.

ICFI இன் ஐந்தாவது நிறைபேரவை (நவம்பர் 11-20, 1987) முன்னோக்குகள் தொடர்பான வேலையின் காலப்பொருத்தம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் நடத்தப்பட்டது. சர்வதேச சந்தைகளின் பொறிவு 1987 அக்டோபர் 19 அன்று நிகழ்ந்தது. இந்த நிகழ்வின் பகுப்பாய்வுக்கான தத்துவார்த்த அடிப்படையானது, நான்காவது நிறைபேரவைக்குப் பின்னர் உற்பத்தியின் பூகோளமயமாக்கம் மற்றும் உலக சந்தைக்கும் தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையில் தீவிரமடையும் மோதல் ஆகியவற்றின் மீது அபிவிருத்திசெய்யப்பட்டிருந்த வேலையில் ஏற்கனவே எடுத்துரைக்கப்பட்டிருந்தது. இந்த நிறைபேரவை RCL இன் பணிகள் குறித்த ஒரு மேலதிக பகுப்பாய்வையும் அபிவிருத்தி செய்தது, ஸ்ரீலங்கா-தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகள் குறித்த ஒரு அறிக்கையையும் தயாரித்தது.

ICFI இன் ஆறாவது நிறைபேரவையானது (பிப்ரவரி 9-13, 1988) கீர்த்தி பாலசூரியா அவரது 39வது வயதில் 1987 டிசம்பர் 18 அன்று திடீரென அகால மரணமடைந்ததற்கு ஒரு சில வாரங்களின் பின்னர் நடைபெற்றது. இந்த நிறைபேரவை ICFI இன் பிரிவுகளது வேலைகளில் சர்வதேச மூலோபாயத்திற்கும் தேசிய தந்திரோபாயத்திற்கும் இடையிலான உறவின் மீது கவனம்குவித்தது.

ICFI இன் ஏழாவது நிறைபேரவை (1988 ஜூலை 23-26) சர்வதேச முன்னோக்குகள் தீர்மானத்தை ஆய்வுசெய்து ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

ICFI இன் எட்டாவது நிறைபேரவை (1989 ஜூன் 15-24) 1985-86 உடைவுக்குப் பிந்தைய அனைத்துலகக் குழுவின் அபிவிருத்தியை திறனாய்வு செய்தது; கோர்பச்சேவ் ஆட்சியின் ஆழமடையும் நெருக்கடி குறித்து விவாதித்தது, அத்துடன் நான் சோவியத் ஒன்றியத்திற்கு பயணம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தது.

ICFI இன் ஒன்பதாவது நிறைபேரவை (1989 டிசம்பர் 11-16) கிழக்கு ஐரோப்பாவின், குறிப்பாக ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு (Deutsche Demokratische Republik - DDR) இன் நிகழ்வுகளை திறனாய்வு செய்தது. நவம்பரில் நான் மேற்கொண்ட சோவியத் ஒன்றிய சுற்றுப்பயணம் குறித்து அறிக்கையளித்தேன், எனது பயணத்தில் மாஸ்கோவில் உள்ள வரலாற்று-காப்பக நிறுவனத்தில் நான் ஒரு விரிவுரை நிகழ்த்தியிருந்தேன், அதில் கிட்டத்தட்ட 200 பேர் பங்குபற்றியிருந்தார்கள்.

ICFI இன் பத்தாவது நிறைபேரவை (1990 மே 6-9) ஜேர்மன் ஜனநாயக குடியரசு (DDR) கலைக்கப்பட்டதன் அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தின் மீதான ஒரு திறனாய்வின் மீது கவனம்குவித்தது.

ICFI இன் பதினோராவது நிறைபேரவை (1991 மார்ச் 5-9) ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு குறித்த ஒரு விரிவான விவாதத்தை மேற்கொண்டது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சர்வதேச மாநாட்டை நடத்துவதற்கு ICFI தீர்மானித்தது. அந்த நிறைபேரவையைத் தொடர்ந்து ICFI விடுத்த ஒரு அறிக்கை, வளைகுடாப் போரின் முக்கியத்துவத்தை விளக்கியது மற்றும் நவம்பரில் நடக்கவிருந்த சர்வதேச மாநாட்டிற்கு வேலைத்திட்ட அடிப்படையை வழங்கியது.

ICFI இன் பன்னிரண்டாவது நிறைபேரவை (1992 மார்ச் 11-14) சர்வதேச சோசலிச இயக்கத்தின் வரலாற்றின் உள்ளடக்கத்தில் இருந்து சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை ஆய்வு செய்தது. இந்த நிறைபேரவை “மார்க்சிசத்திற்கான போராட்டமும் நான்காம் அகிலத்தின் கடமைகளும்” என்ற எனது அறிக்கையுடன் தொடங்கியது.

ICFI இன் வேலைகளது வீச்சு எத்தனை பிரம்மாண்டமானதாக இருந்தது என்பது, உடைவைத் தொடர்ந்த ஆறு ஆண்டுகளில் நடந்த பன்னிரண்டு நிறைபேரவைகளின் மீதான இந்த திறனாய்வில் இருந்து தெளிவாகியிருக்கும். அரசியல் தீவிரமிக்க இந்த கூட்டங்களில் திறனாய்வு செய்யப்பட்ட நிகழ்வுகள் மற்றும் அரசியல் அனுபவங்களது முழு வீச்சையும், இந்த நிறைபேரவைகள் குறித்த சுருக்கமான விவரிப்பில் அடக்கிவிட இயலாது என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்டியாக வேண்டும். உதாரணமாக, இந்தக் கூட்டங்கள் பலவற்றிலும், நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதிலும் தேசிய சுய-நிர்ணயக் கோரிக்கையை நோக்கிய நான்காம் அகிலத்தின் மனோபாவத்தை மறுமதிப்பீடு செய்வதிலும் இன்றியமையாததாய் இருந்த இலங்கையிலான அபிவிருத்திகள் குறித்த விரிவான விவாதங்கள் இடம்பெற்றன. 1998 இல் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) தொடங்கப்படும் காலத்திற்குள்ளாக, இன்னுமொரு ஐந்து நிறைபேரவைகள் நடத்தப்பட்டிருந்தன. 1995 ஆகஸ்டில் நடந்த பதினைந்தாவது நிறைபேரவை, கழகங்கள் கட்சிகளாக உருமாற்றப்படுவதற்கான காரணங்கள் மற்றும் தாக்கங்களை விவாதித்தது. 1998 ஜனவரியில் நடந்த பதினெட்டாவது நிறைபேரவை உலக சோசலிச வலைத் தளம் தொடங்கப்படுவதற்கு இறுதி ஒப்புதலை அளித்தது.

இந்த அத்தனை வேலைகளிலும், மார்க்சிச சர்வதேசியவாதமே எங்களது முயற்சிகளை வழிநடத்திய அடிப்படை அரசியல் கோட்பாடாக இருந்தது. தேசிய தந்திரோபாயங்களைக் காட்டிலும் உலக மூலோபாயத்தின் பிரதானத்தின் மீதும், தேசிய வட்டத்திற்குள் எழுகின்ற பிரச்சினைகளுக்கான பொருத்தமான பதில் உலகளாவிய நிகழ்ச்சிப்போக்குகளின் மீதான ஒரு பகுப்பாய்வின் அடிப்படையிலேயே தேற்றம் செய்யப்பட முடியும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தினோம். இந்த அடிப்படையில், நான்காம் அகிலத்தின் ஒட்டுமொத்த வரலாற்றிலும் அதற்கு முன் இருந்திராத ஒரு சர்வதேச கூட்டுசெயல்பாட்டு (collaboration) மட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்துலகக் குழுவால் முடிந்தது. உண்மையைச் சொல்வதானால், WRP தேசியவாத ஓடுகாலிகளுடனான உடைவுக்குப் பின் அபிவிருத்தியடைந்த ICFI பிரிவுகளுடனான செயல்பரிமாற்றத்தின் தன்மையை முழுவதுமாக எடுத்துரைப்பதற்கு “கூட்டுசெயல்பாடு” என்ற வார்த்தை போதுமானதல்ல. 1989 ஜூன் 25 தேதியிட்ட எனது அறிக்கையை மீண்டும் குறிப்பிடுகிறேன்:

இந்த சர்வதேச கூட்டுசெயல்பாட்டின் வீச்சும், ஒவ்வொரு பிரிவின் நடைமுறை வேலைகளது கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்தின் மீதுமான அதன் நேரடித் தாக்கமும் ICFI மற்றும் அதன் பிரிவுகளது தன்மையை ஆழமாகவும் சாதகமான விதத்திலும் மாற்றியுள்ளது. இந்த பிரிவுகள், எந்த அரசியல் மற்றும் நடைமுறைரீதியான அர்த்தமுள்ள விதத்திலும் சுதந்திரமான ஸ்தாபனங்களாக இருப்பதில் இருந்து மறைகின்றன. ஒரு பொதுவான அரசியல் வேலைத்திட்டத்தின் அடித்தளத்தின் மீது, ஒவ்வொரு பிரிவையும் ஒன்றிணைக்கின்ற உறவுகளது ஒரு சிக்கலான வலைப்பின்னல் ICFIக்குள்ளாக எழுந்திருக்கிறது. அதாவது, ICFI இன் பிரிவுகள் ஒரு ஒற்றை அரசியல் அமைப்பாக ஒன்றுடன் ஒன்று இணைந்த மற்றும் ஒன்றினை ஒன்று சார்ந்த பாகங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த உறவிலான எந்த முறிவும் அது சம்பந்தப்பட்ட பிரிவில் நாசகரமான விளைவுகளை உருவாக்கும். ஒவ்வொரு பிரிவும், சித்தாந்தரீதியாக மற்றும் நடைமுறைரீதியாக ஆகிய இரண்டு விதத்திலுமே, அது உயிர்வாழ்வதற்கேயும் இந்த சர்வதேச ஒத்துழைப்பையும் கூட்டுசெயல்பாட்டையும் சார்ந்ததாக ஆகியிருக்கிறது.[9]

1986க்கும் 1992க்கும் இடையில் ஏற்பட்ட வேலைத்திட்டம், முன்னோக்கு மற்றும் அமைப்பு ஆகிய துறைகளிலான முன்னேற்றங்கள், அதன்பின் 1995-97 இல் ICFI இன் கழகங்கள் கட்சிகளாக மாற்றப்படுவதற்கும், 1998 இல், உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிக்கப்படுவதற்கும் தயாரிப்பு செய்தது.

சந்தர்ப்பவாதிகளை வெளியேற்றி விட்டு மார்க்சிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் புரட்சிகர இயக்கத்தை அபிவிருத்தி செய்ய இயன்ற நிலையில், நான்காம் அகிலம் என்னவெல்லாம் சாதிக்க முடிந்திருக்கிறது என்பதை சென்ற நூற்றாண்டின் மூன்றாவது பகுதியின் போது அனைத்துலகக் குழு கண்ட முன்னேற்றம் எடுத்துக்காட்டியிருக்கிறது.

ட்ரொட்ஸ்ட்கி 1938 அக்டோபரில், புதிய அகிலத்தின் அடித்தளங்களுக்கு தயாரிப்பு செய்த வேலைகளைத் திறனாய்வு செய்து ஆற்றிய அவரது உரையில் கூறினார்:

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளும், சர்வதேச முன்னோடிகளும், உலகெங்குமான நமது தோழர்களும் உண்மையான மார்க்சிஸ்டுகளாக, புரட்சிக்கான பாதையை, தத்தமது உணர்வுகளிலும் விருப்பங்களிலும் தேடாமல், மாறாக புறநிலை நிகழ்வுகளின் அணிவகுப்பு மீதான பகுப்பாய்வில் தேடினர். எல்லாவற்றையும் விட, மற்றவர்களையும் நம்மை நாமேயும் ஏமாற்றிக் கொள்ளக்கூடாது என்ற தீர்க்கமான எண்ணத்தால் நாம் வழிநடத்தப்பட்டோம். நாம் தீவிரமாகவும் நேர்மையாகவும் தேடினோம். சில முக்கியமான விடயங்களை நாம் கண்டுபிடித்தோம். நிகழ்வுகள் நமது பகுப்பாய்வையும் நமது முன்னறிதல்களையும் ஊர்ஜிதம் செய்தன. அதனை யாரும் மறுக்க முடியாது. இப்போது நாம் நமது வேலைத்திட்டத்திற்கும் மற்றும் நமக்கேயும் உண்மையாக இருப்பது அவசியமாயுள்ளது. அவ்வாறு செய்வது சுலபமல்ல. பணிகள் பிரம்மாண்டமானதாக இருக்கின்றன, எதிரிகளோ எண்ணிலடங்காது உள்ளனர். கடந்தகாலத்தின் படிப்பினைகளில் இருந்து வருங்காலத்திற்குத் தயாரித்துக் கொள்ள நம்மால் முடிகின்ற அளவுக்கு மட்டுமே ஸ்தாபக தினக் கொண்டாட்டங்களில் நமது காலத்தையும் கவனத்தையும் செலவிடுவதற்கான உரிமை நமக்கு உள்ளது.[10]

ட்ரொட்ஸ்கி இந்த உரையைப் பதிவுசெய்த போது, அவர் 1923 முதல் 1938 வரையான 15 ஆண்டு கால அரசியல் வேலைகள் மற்றும் போராட்டத்தின் முடிவுகளைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார். இப்போது நாம், அதனினும் இருமடங்கு காலத்தில், அதாவது 33 ஆண்டுகளில் செய்யப்பட்ட வேலையை திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ட்ரொட்ஸ்கி சொன்ன வார்த்தைகள் தீவிரமான பொருத்தத்துடன் திகழ்கின்றன. நமது பணிகள் இப்போதும் ”பிரம்மாண்டமானவையாக”வே இருக்கின்றன, நமது எதிரிகள் “எண்ணிலடங்காதவர்களாக” இருக்கின்றனர். ஆயினும் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான சமயத்தின் பாதையில் “சில முக்கியமான விடயங்களை”யும் நாம் கண்டறிந்திருக்கிறோம், “நிகழ்வுகள் நமது பகுப்பாய்வையும் நமது முன்னறிதல்களையும் ஊர்ஜிதம் செய்திருக்கின்றன” என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை.

1986க்கும் 1992க்கும் இடையிலான காலத்தில் அனைத்துலகக் குழுவால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிடக்கூடிய விதத்தில் அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முன்கணிப்புகளையும் கொண்ட ஆவணங்களை கொண்டிருக்கும் அக்கறை —அல்லது துணிச்சல் என்றும் கூட சொல்வேன்— உலகின் வேறெந்த அரசியல் கட்சிக்கும் உண்டா? பல்கலைக்கழக கல்வியாளர்கள் மற்றும் சிந்தனைக் குழாம் நிபுணர்களில், 1989-91 இடையில் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டதை கருதிப்பார்ப்பதை கூட விடுவோம், கோர்பச்சேவின் பெரெஸ்த்ரோய்கா (மறுசீரமைப்பு) மற்றும் கிளாஸ்னோஸ்ட்டின் (வெளிப்படைத்தன்மை) தன்மையை சரியாக எவர் மதிப்பீடு செய்தார்கள்?

பப்லோவாதிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் எதனையும் புரிந்து கொள்ளவுமில்லை, எதனையும் கருதிப்பார்க்கவுமில்லை. 1951 தொடங்கி ஏர்னெஸ்ட் மண்டேல், மிஷேல் பப்லோவுடன் சேர்ந்து கொண்டு, ஸ்ராலினிச அதிகாரத்துவமானது சோவியத் ஒன்றியத்தையும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அதனை சுற்றியுள்ள ஆட்சிகளையும் சோசலிசத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதாய் வலியுறுத்தி வந்திருந்தார். இந்த முட்டாள்த்தனமான முன்னோக்கின் பூர்த்தியுருவாக அவர்கள் கோர்பச்சேவின் புகழ்பாடினார்கள். மண்டேலின் வாழ்க்கைசரித ஆசிரியர் நினைவுகூருகிறார்: “1989 இல் இலண்டனிலும் பாரிஸிலும் ஒரேசமயத்தில் வெளியிடப்பட்ட, பெரெஸ்த்ரோய்கா மற்றும் கிளாஸ்னோஸ்ட்டின் மீதான ஒரு ஆய்வான, மறுசீரமைப்பைத் தாண்டி: கோர்பச்சேவின் சோவியத் ஒன்றியத்தின் வருங்காலம் (Beyond Perestroika: The Future of Gorbachev’s USSR) என்ற அவரது புத்தகத்தில் மண்டேல், கோர்பச்சேவ் உயிருட்டியிருந்த நான்கு சாத்தியமான காட்சிகளை வரைந்து காட்டினார். முதலாளித்துவத்தின் மீட்சி சாத்தியத்திற்கு அவர் ஒரேயொரு வார்த்தையும் கூட அர்ப்பணிக்கவில்லை.”[11]

மண்டேல், கோர்பச்சேவின் கிரெம்ளின் மேலே அதன்மீது வானவில் ஜொலிப்பைக் கண்ட அதேவேளையில், அனைத்துலகக் குழுவோ பாதாளம் நெருங்குவதை முன்னெதிர்பார்த்தது. 1989 ஜூன் 25 அன்று வேர்க்கர்ஸ் லீக்கின் டெட்ராயிட் உறுப்பினர்களுக்கு வழங்கிய அறிக்கையில், நான் கூறினேன்:

சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் முதலாளித்துவம் மீட்சியடையக் கூடும் என்று பேசுவதற்காக நமது ஓடுகாலி எதிரிகள் அனைவரும், அத்துடன் பப்லோவாதிகள் அனைவரும் ஒன்றாய் நின்று நம்மை தாக்குகின்றனர். அதிகாரத்துவம், 1917 இல் அல்லது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அரசு சொத்துறவுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது மற்றும் வேரூன்றியிருக்கிறது என்று வாதிட்டு, ஆகவே அதிகாரத்துவம் சொத்து உறவுகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவராது என்று வலியுறுத்துகின்றனர். இது ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாட்டின் மீதான ஒரு முழுமையான பொய்மைப்படுத்தலாகும். அதிகாரத்துவம், தொழிலாள வர்க்கத்தினால் தூக்கியெறியப்படாமல் போகுமானால், அது தவிர்க்கவியலாமல் முதலாளித்துவ சொத்துகளின் மீட்சியை நோக்கிய திசையிலேயே நகரும் என்று ட்ரொட்ஸ்கி மீண்டும் மீண்டும் எச்சரித்தார்.[12]

இந்த அறிக்கை, சீனாவில் தியானென்மென் சதுக்க படுகொலை நடந்து மூன்றே வாரங்களே கடந்திருந்த நிலையிலும் கிழக்கு ஜேர்மனியில் அரசியல் நெருக்கடி வெடித்து DDR துரிதமாக கலைக்கப்படும் நிலை வருவதற்கு மூன்றே மாதங்களுக்கு முன்பாகவும் வழங்கப்பட்டதாகும். அப்போதும் கூட, அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வு ஒரு அரசியல் குறுங்குழுவின் புலம்பலாகக் கூறி நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த “குறுங்குழு” லியோன் ட்ரொட்ஸ்கியின் தத்துவார்த்த வேலைகள் மீதான அதன் பகுப்பாய்வை அடித்தளமாகக் கொண்ட ஈடிணையற்ற அனுகூலத்தைக் கொண்டிருந்தது.

முதலாளித்துவ தத்துவாசிரியர்கள், ஸ்ராலினிச அரசுகளின் தன்மை குறித்து எதனையும் புரிந்து கொள்ளாமல், அவற்றின் கலைப்பை முன்னெதிர்பார்த்திருக்க தவறி, 1989-91 நிகழ்வுகளுக்குப் பின்னர் உலக அரசியலின் பயணப்பாதை குறித்த தங்களது பகுப்பாய்வுகளை சூத்திரப்படுத்துவதில் தமது தகமையின்மையை வெளிப்படுத்தினார்கள். ஃபுக்குயாமாவின் “வரலாற்றின் முடிவு” தத்துவத்தை திறனாய்வு செய்ய அபூர்வமாகவே அவசியப்படுகிறது, எவரொருவரும், மற்றவர்களை விட அதன் ஆசிரியரே கூட, அதனை தீவிரமாக எடுத்துக் கொள்வதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே மறைந்து விட்டது, இப்போது அந்த ஆசிரியரே தனது சொந்த படைப்பை பகிரங்கமாக கைகழுவியிருக்கிறார். மறைந்த எரிக் ஹோப்ஸ்வாமின் “குறுகிய இருபதாம் நூற்றாண்டு” விடயத்தைப் பொறுத்தவரை, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் மீதான இந்த தோற்றப்பாட்டுவாத பிரதிபலிப்பானது (impressionist reaction), புதிய நூற்றாண்டின் பெருகும் நெருக்கடிகள், கடந்த நூற்றாண்டின் நெருக்கடிகளுடன் ஒரு வலிமிக்கவகையிலான ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன என்ற வெளிப்படையான உண்மையினல் மறுதலிக்கப்பட்டிருக்கிறது.

போலியான தத்துவங்கள், பின்விளைவுகள் கொண்டவையாகும். தாராளவாத தத்துவாசிரியர்கள் எதிர்பார்த்தவாறாய் முதலாளித்துவ-அடிப்படையிலான ஜனநாயகத்தின் உலகளாவிய வெற்றி என்பது நடக்காமல் போனது. 1991 இன் ஜனநாயக பகல்கனவுகள் 2019 இன் பாசிச கொடுங்கனவுகளுக்கு பாதை தந்திருக்கின்றன. ஹிட்லரின் மூன்றாம் குடியரசு வீழ்ச்சியடைந்து கிட்டத்தட்ட எழுபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பாசிசம் இப்போது உலகெங்கும் ஒரு வளரும் அரசியல் சக்தியாக இருக்கிறது. அமெரிக்காவில் ட்ரம்ப், ஒரு அமெரிக்க ஜனாதிபதியால் —குறைந்தபட்சம் பொதுவெளியில்— இதுவரை பிரயோகிக்கப்பட்டிராத ஒரு மொழியை பிரயோகிக்கிறார். அவரது உரைகள் —அவரது அன்றாட ட்வீட்டுகள் குறித்து சொல்லவும் தேவையில்லை— ஒரு வெளிப்படையான பாசிசத் தன்மையை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

கிழக்கு ஐரோப்பாவில் வெளிநாட்டினர் வெறுப்பு கொண்ட தேசியவாதக் கட்சிகள் மேலாதிக்கம் செலுத்துகின்றன. இத்தாலியில், துணைப் பிரதமரான மத்தேயோ சல்வீனி, பெனிட்டோ முசோலினிக்கு புகழாரம் சூட்டுவதில் இரகசியம் வைப்பதில்லை. ஜேர்மனியில், மறுஇணைவுக்கு 30 ஆண்டுகளின் பின்னர், அரசியல் வாழ்க்கையானது பாசிச மீளெழுச்சியால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறது. நவ-நாஜி வலதுகளின் மீது மிகப்பெருவாரியான குரோதம் நிலவுகின்ற போதும் கூட, அரசு மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் இருக்கும் வலிமைமிக்க சக்திகள் பங்குபற்றும் ஒரு சதியின் மூலமாக அது திட்டமிட்டு ஆதரிக்கப்படுகிறது, வலுவூட்டப்படுகிறது. ஜேர்மனிக்கான மாற்று [Alternative für Deutschland - AfD] இந்த அரசியல் சதியின் உத்தியோகபூர்வ அரசியல் அங்கமாய் இருக்கிறது. CDU-CSU-SPD கூட்டணி அரசாங்கம், சென்ற தேர்தலில் AfD வெறும் 13 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது என்பதே உண்மையாக இருக்கின்ற போதிலும், ஜேர்மனியில் அதனை மிகவும் செல்வாக்கான அரசியல் கட்சியாக ஆக்குவதற்கு திரைமறைவில் காய்நகர்த்துவதன் மூலம், இந்த சதியின் வழிவகை வகுப்பாளராக இருக்கிறது. அரசியல் படுகொலைகளை —சமீபத்தில் CDU அரசியல்வாதியான வால்டர் லூப்க படுகொலை செய்யப்பட்டார்— நிகழ்த்துகின்ற நேரத்தில், போலிஸ் மற்றும் உளவு முகமைகளால் பாதுகாக்கப்படுகின்ற நாஜி பயங்கரவாதிகளது வலைப்பின்னல் பாசிஸ்டுகளின் துணை இராணுவப் படையாக இருக்கிறது.

ஜேர்மன் உள்துறை அமைச்சகத்தின் இரகசிய சேவையான அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகம் (Verfassungsschutz) நவ-நாஜி மீளெழுச்சியின் நீதித்துறை அங்கமாக இருக்கிறது. Verfassungsschutz எங்கே முடிவடைகிறது, ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் எங்கே தொடங்குகிறார்கள் என்பதை துல்லியமாக கண்டறிவது கடினம். தங்களுக்குத் தேவையான சட்ட மறைப்பை Verfassungsschutz வழங்கும் என்ற முழு நம்பிக்கையுடன்தான் படுகொலையாளர்கள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். எவ்வாறெனினும், ஜேர்மனியில் முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்குமான எதிர்ப்பை ஒழிப்பதற்கான தமது பொதுவான போரில் அவர்கள் சேர்ந்து கூட்டுசேர்ந்து செயல்படுகிறார்கள்.

உள்துறை அமைச்சகத்தின் சதி அமைப்புகளது பட்டியலில் பட்டியலிடப்பட்டதற்கு எதிரான சோசலிச சமத்துவக் கட்சியின் முறையீட்டுக்கு ஒரு 56 பக்க பதிலை 2019 மே 23 அன்று, Verfassungsschutz அனுப்பியது. Verfassungsschutz பதில் மீதான ஒரு மிக விரிவான பகுப்பாய்வும், அரசியல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான ஜனநாயக உரிமை மீதான இந்தத் தாக்குதலுக்கு நமது இயக்கத்தின் சட்டபூர்வமான மற்றும் அரசியல்ரீதியான பதிலும் இந்த வாரத்தின் இறுதியில் வெளிவரும். Verfassungsschutz ஆவணமானது வெளிப்படையாக நாஜிக்கள் 1933 இல் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட சர்வாதிபத்திய சட்ட சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தின் ஏதோவொரு சமயத்தில் அரசு மற்றும் சமூக ஒழுங்கிற்கு குரோதமான மற்றும் அரசியல் எதிர்ப்பை ஊக்குவிக்கக் கூடும் என்று, தான் கருதுகிற அத்தனை சிந்தனைகளையும் குற்றமாக்கும் ஒரு குற்றத்தை செய்ய விருப்பை கொண்டிருப்பதாக குறிப்பிடும் (Willensstraffrecht) சித்தாந்தத்திற்கு இது புத்துயிரூட்டுகிறது.

SGP அதன் நடவடிக்கைகளை சட்ட வரம்புக்குள்தான் மேற்கொள்கிறது என்பதில் Verfassungsschutz மறுப்பு கூறவில்லை. Verfassungsschutz ஐ பொறுத்தவரை, SGP இன் நடவடிக்கைகள் குற்றமானவை அல்ல, மாறாக கட்சியின் சிந்தனைகள்தான் குற்றவியல்தனமானவை. குறிப்பாக, அது தேசத்திற்கு எதிராய் வர்க்கத்தை நிறுத்தும் கருத்தாக்கங்கள் மற்றும் வகைப்பாடுகளை (categories) பயன்படுத்தும் சிந்தனையை ஊக்குவிக்கிறது; தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக அதன் சமூக நலன்களைக் குறித்த நனவை அபிவிருத்தி செய்ய விழைகிறது; முதலாளித்துவத்திற்கு எதிரான குரோதத்தை ஊக்குவிக்கிறது; ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்தைக் கண்டனம் செய்கிறது; அத்துடன் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடனான அத்தனை சமரசங்களையும் நிராகரிக்கிறது.

Verfassungsschutz அதன் பதிலுக்கான அடித்தளத்தை, SGP இன் வேலைத்திட்டம் மற்றும் அதனால் வெளியிடப்பட்ட அறிக்கைகள், குறிப்பாக, அதன் 2010 மே 23 இல் வெளியிட்ட கோட்பாடுகள்தொடர்பானஅதன்அறிக்கை, மீதான ஒரு விரிவான திறனாய்வின் மீது அமைத்துக் கொள்கிறது; அந்த அறிக்கையில் இருந்து பின்வரும் பிரகடனத்தை அது மேற்கோளிடுகிறது: “முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்திற்கும், தொழிலாளர்’ அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கும் ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியூட்டுவதும் அதனைத் தயாரிப்பு செய்வதுமே சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூலோபாய இலக்காகும்.” [Verf, p. 8] SGP "அதன் சித்தாந்த நோக்குநிலையின் படி, அதன் அத்தனை அடிப்படை எழுத்துக்களிலும் எல்லாவற்றிற்கும் முதலில் ரஷ்யப் புரட்சியாளரான லியோன் ட்ரொட்ஸ்கியை மேற்கோளிடுகின்ற, அவரது கற்பிப்புகளுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சியாக தன்னைப் புரிந்து கொள்கிறது. இது தவிர, வாதி [SGP] குறிப்பாக காரல் மார்க்ஸ், பிரெடெரிக் ஏங்கெல்ஸ், விளாடிமிர் இலியிச் லெனின், ரோஸா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் ஆகியோரின் மீது சார்ந்திருக்கிறது.” [அதே ஆவணம், பக். 9]

Verfassungsschutz கூறுகிறது:

வர்க்க அடிப்படையிலான அதன் மார்க்சிச சிந்தனை —ஏற்கனவே காட்டப்பட்டிருப்பதைப் போல, இது அரசியலமைப்பின் சிந்தனைகளுக்கு இணக்கமற்றதாகும்— மற்றும் அதன் வர்க்கப் போராட்ட பிரச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில், வாதி, “முதலாளித்துவத்தை” முடிவுகட்டவும் தூக்கியெறிவதற்கும் கோருகிறது, பொருளாதார அமைப்புமுறை தொடர்பான ஒரு அர்த்தத்தில் மட்டுமல்ல, தாராளமய ஜனநாயக அடிப்படை ஒழுங்கை முடிவுகட்டும் அர்த்தத்திலும். கம்யூனிசப் பொருள்விளக்கத்தின் படி, “முதலாளித்துவம்” என்பது அத்தனை மேலதிக அரசியல் குறைகளுக்கும் பொறுப்பான மையப் பிரச்சினையாக கருதப்படுகிறது. ஆகவே அது ஒரு பொருளாதார அமைப்புமுறையாக மட்டுமன்றி ஒரு சமூக ஒழுங்காகவும் அடிப்படையாக எதிர்க்கப்படுகிறது. வாதி, மேற்குறிப்பிட்டபடி ஒரு சோசலிச அரசையும் சமூக அமைப்புமுறையையும் ஸ்தாபிக்க விழைகிறது. [அதே ஆவணம். பக்.22]

முதலாளித்துவமும் “தாராளமய ஜனநாயக ஒழுங்கும்” சமஉரிமைகொண்டதும் சமமானமானவை என்பதே இந்த குற்றப்படுத்தலின் கீழான அனுமானமாக இருக்கிறது. ஒரு வரலாற்றுப் பார்வையில் பார்க்கும்போது, இந்த வாதம் செய்யப்பட இடமிருக்கிறது என்பது உண்மையே, ஆயினும் இதுதான் “ஒழுங்கின்” ஜனநாயக பாவனைகளை பலவீனம் செய்கின்ற ஒன்றாகும். ஏனெனில் தாராளவாத ஜனநாயக ஒழுங்கு முதலாளித்துவத்தில் இருந்து பிரிக்கமுடியாதது என்றால், தாராளவாதம், எத்தனை பிரச்சினைகளுடனென்றாலும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதுடன் அடையாளம் காட்டப்படுகின்ற மட்டத்திற்கு, அது நிச்சயமாக ஒரு புள்ளியில் “தாராளமய”மானதாக இருப்பதில் இருந்து மறைந்து விடுகிறது. இந்த வரையறையின் வரம்புக்குள் பார்த்தால், சமூக ஒழுங்கு எத்தனை அதிகமாய் முதலாளித்துவமயமானதாய் இருக்கிறதோ, அத்தனை குறைவாகவே தாராளமயமானதாக இருக்க முடியும். இதுவே பிரபல அமெரிக்க தாராளவாத மெய்யியலாளரான ஜோன் டுவி, “தாராளமயத்திலான நெருக்கடி” என்ற அவரது 1935 கட்டுரையில் வலுவுடன் எடுத்துவைத்த புள்ளியாகும். நவீன சமூகத்தின் பொருளாதார அபிவிருத்தியின் ஒரு விளைவாக, முதலாளித்துவமும் தாராளமயமும் பரஸ்பர இணக்கமற்றவையாக ஆகி விட்டிருந்ததாக அவர் வாதிட்டார். அவர் எழுதினார்:

சமூகத்தின் பொருளியல் ஆதாரவளங்களை ஒரு சிலர் பறித்தெடுத்துக்கொள்வதன் பின்னால் சிலர் தமது சொந்த நலன்களுக்காக கையகப்படுத்தியவை தனிநபர்களது விளைபொருளாய் அல்லாத மாறாக மனிதகுலத்தின் கூட்டுழைப்பான வேலையின் விளைபொருளாய் இருக்கும் கலாச்சார, ஆன்மீக வளங்களாக இருக்கின்றன. ஜனநாயகம் தோல்வியடைவதற்கான மூலகாரணம் புரிந்து கொள்ளப்பட்டு புத்திஜீவித்தனத்தின் சமூகமயப்பட்ட அபிவிருத்தியை ஊக்குவிக்கக் கூடிய சமூக ஒழுங்கமைப்பு வகையைக் கொண்டுவரக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற வரையில் ஜனநாயகத்தின் தோல்வியைக் குறித்து பேசுவது பயனற்றதாகும்.[13]

பாசாங்குத்தனத்துடனும் ஏமாற்றுவித்தையுடனும் ஏவப்பட்டிருக்கும் Verfassungsschutz இன் பதிலானது ஜனநாயகத் தத்துவத்திற்காக அக்கறை கொண்டதல்ல. அது முன்னுதாரணத்தை எடுத்துக் கொள்வது டுவியிடம் இருந்து அல்ல, மாறாக கார்ல் ஷிமித்திடம் இருந்தும் ஜோசப் கோயபல்ஸிடம் இருந்துமாகும். மார்க்சிசக் கருத்தாக்கங்கள் சட்டபூர்வமானதாக இருக்கமுடியாது ஏனென்றால் முதலாளித்துவத்திற்கான எதிர்ப்பு, பிரிக்கவியலாமல், நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு வடிவங்களின் எதிர்ப்புக்கு இட்டுச்செல்கிறது என்று வெளிப்படையாக அது வாதிடுகிறது. ஜனநாயகம், முதலாளித்துவம் மற்றும் தனியார் பொருளாதார நலன்களுக்கு இடையிலான முறிக்கவியலாத இணைப்பு மீது அது வலியுறுத்துகிறது. மார்க்சிச மற்றும் ட்ரொட்ஸ்கிசக் கருத்தாக்கங்கள் சட்டபூர்வமான வழிமுறைகளின் மூலமாகத் தான் பரப்பப்படுகின்றன என்றபோதும், அவை ஒரு புரட்சிகரக் கவிழ்ப்பின் பேயுருவை எழுப்புகின்றன. ஆகவே அந்த சிந்தனைகள் தடை செய்யப்பட்டாக வேண்டும், ஒடுக்கப்பட்டாக வேண்டும்.

SGP ஏகாதிபத்தியத்தையும் இராணுவவாதத்தையும் கண்டனம் செய்வது நிலவும் ஒழுங்கிற்கான அபாயத்தை முன்நிறுத்துவதில் அதன் முதலாளித்துவ எதிர்ப்புக்கு சளைக்காததாகும். போருக்கு எதிரான கட்சியின் போராட்டத்தை விளக்குகையில் 2017 இல் ஒரு வானொலி நேர்காணலில் தோழர் கிறிஸ்தோஃப் வாண்ட்ரியர் கூறிய கருத்துக்களை Verfassungsschutz மேற்கோளிடுகிறது:

ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை உருவாக்குவதே போரைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டியதாகும். அரசியல் நிகழ்வுகளில் பரந்துபட்ட மக்கள் நேரடியாகத் தலையிட்டாக வேண்டும். ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அவர்கள் சர்வதேச அளவில் முதலாளித்துவத்தை தூக்கிவீசியாக வேண்டும்; தேசிய-அரசுகள் அமைப்பு முறையைக் கடந்து சென்று உலகம் தேசிய-அரசுகளாக பிளவுபடுத்தப்பட்டிருப்பதற்கும், உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். [அதே ஆவணம், பக். 34]

குறிப்பிடத்தக்கது என்னவென்றால், SGP, "தனிமனிதர்களின் தனித்தனி வன்முறை நடவடிக்கைகள், முதலாளித்துவ அரசின் கைகளில் பகடைக்காய்களாகும் அபாயம் கொண்டிருக்கின்ற காரணத்தாலும், அத்தகைய செயல்களை நிராகரிக்கிறது” [அதே ஆவணம், பக். 40] என்பதை Verfassungsschutz இன் பதில் ஆவணம் முழுமையாக ஒப்புக்கொள்கிறது. ஆனாலும் “இந்த நிராகரிப்பு, ‘வன்முறையில் இறங்கும் தனிமனிதர்களுக்குத் தான் பொருந்து’கிறதே தவிர ‘தொழிலாள வர்க்கத்தின் கூட்டுப் போராட்டத்திற்கு’ அல்ல” என்பதை அந்த அறிக்கை அழுத்தமளித்துக் காட்டுகிறது.

எந்த சூழ்நிலைகளின் கீழும், இத்தகைய வெகுஜனப் போராட்டங்கள் சட்டபூர்வமானவையாகவோ “தாராளமய ஜனநாயக ஒழுங்கு” உடன் இணக்கமானவையாகவோ கருதப்படமுடியாது என்று Verfassungsschutz வலியுறுத்துகிறது. தொழிலாள வர்க்கம் அதன் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பாசிசத் தாக்குதல்களுக்கு எதிராய் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கொண்டிருக்கும் உரிமையும் கூட மறுக்கப்படுகிறது. இடைமருவல் வேலைத்திட்டத்திலான, ”தற்காப்புக்கான தொழிலாளர்’ குழுக்களை உருவாக்கும் அவசியத்தை பிரச்சாரம் செய்வது அவசியமாயுள்ளது” என்ற ட்ரொட்ஸ்கியின் பிரகடனத்தை இந்த அறிக்கை கண்டனம் செய்கிறது. இந்தக் கோரிக்கை, ஹிட்லர் ஜேர்மனியையும் முசோலினி இத்தாலியையும் ஆட்சி செய்த சமயத்தில், அமெரிக்காவில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் கனமான ஆயுதங்களேந்திய பாசிஸ்டுகளின் —முதலாளித்துவ அரசின் ஒடுக்குமுறை படைகளைக் குறித்து சொல்லவும் தேவையில்லை— நன்கு ஒழுங்கமைந்த படைகளுக்கு முகம்கொடுக்க நேர்வது வழக்கமாகி விட்டிருந்த ஒரு சமயத்தில் சூத்திரப்படுத்தப்பட்டதாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரைகள் “‘மார்க்சிச பகுப்பாய்வின்’ அடிப்படையில் வாசகர்களுக்கு ஒரு ‘சோசலிச நோக்குநிலை’யை கொடுப்பதற்கு வெளிப்படையாய் நோக்கம் கொண்டுள்ளன” என்று கூறி அதன் மீது Verfassungsschutz கண்டனம் செய்கிறது. [அதே ஆவணம். பக். 48] SGP இன் பிரசுர அங்கமான Mehring Verlag “மற்றவற்றுடன் சேர்த்து ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் மற்றும் டேவிட் நோர்த்தின் எழுத்துக்களை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்த்து பிரசுரிக்கிறது” [அதே ஆவணம், பக். 48] என்றும் அந்த ஆவணம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

ஜனநாயக உரிமைகள் மீதான Verfassungsschutz இன் தாக்குதலின் பிரதான மற்றும் உடனடி இலக்காக SGPயும் ICFIயும் இருக்கின்றன. அதனை தயாரித்தவர்கள் அரசியல் அறிவிலிகள் அல்லர். நமது கட்சியின் ஆவணங்களை —ட்ரொட்ஸ்கியின் மற்றும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் வரை பின்செல்லக் கூடிய சோசலிசத்தின் மாபெரும் தத்துவாசிரியர்களின் படைப்புகளையும் என்பதை சொல்லவும் அவசியமில்லை— அவர்கள் மிகக் கவனமாகப் படித்திருக்கிறார்கள். SGP யையும் ICFI ஐயும் சமகால மார்க்சிச சோசலிசத்தை தாங்கிநிற்பவையாக Verfassungsschutz பார்ப்பதை அது தெளிவாக்கி விடுகிறது. ஆனால் அதன் சட்டரீதியான தாக்கங்கள் மற்றும் விளைவுகள், நமது கட்சியின் சிந்தனைகளையும் தாண்டி நீண்டு செல்வதாக உள்ளது. முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், சமூக சமத்துவமின்மை மற்றும் போர் ஆகியவற்றுக்கான எதிர்ப்பின் எந்தவொரு வடிவத்தையும் குற்றமாக்குவதே Willensstraffrecht (குற்றத்தின் விளைவாக அல்லாது குற்றம் செய்வதற்கான விருப்பத்தின் அடிப்படையில் தண்டனை வழங்குதல்) என்ற கருத்தாக்கம் அறிமுகம் செய்யப்படுவதன் நோக்கமாக இருக்கிறது. பாசிச சிந்தனைகளை முறையானவையாக்குவதற்கான முயற்சிகளுக்கு எரியூட்டிக் கொண்டிருக்கும் சோசலிசத்தை நோக்கிய ஆவேச குரோதத்தின் —இது பெருகும் தொழிலாள-வர்க்க எதிர்ப்பு மற்றும் அதன் அரசியல் தீவிரமயப்படல் குறித்த ஒரு அச்சத்தில் வேரூன்றியதாகும்— போலி-சட்டபூர்வமான வடிவத்தை Verfassungsschutz இன் ஆவணம் வெளிப்படுத்துகிறது. பேராசியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி —இவரை அம்பலப்படுத்துவதற்கு SGP நிறைய செய்திருக்கிறது— ஏதோ தனிமைப்பட்ட விநோதமான கல்வியாளர் வகை அல்ல. மாறாக அவர், 1920கள் மற்றும் 1930களில் நன்கறியப்பட்ட பாசிச புத்திஜீவி எனும் ஒரு சமூக நிகழ்வுப்போக்கின் மிக செயலூக்கமான மற்றும் வெளிப்படையான பிரதிநிதியாவார்.

கணிசமான எண்ணிக்கையிலான வெளிப்படையான பாசிச தத்துவாசிரியர்கள் —கடந்த காலத்தைச் சேர்ந்த சிலர் (உதாரணமாக கார்ல் ஷிமித் மற்றும் ஜுலியஸ் எவோலா போன்றவர்கள்) இருந்தாலும் மற்ற பலரும் உயிருடனும் செயலூக்கத்துடன் இயங்குபவர்களாக இருப்பவர்கள் (அலன் டு பெனுவா, பௌல் கோட்ஃபிரிட், மற்றும் அலெக்ஸாண்டர் டகின் போன்றவர்கள்) அவர்களது சிந்தனைகள் அரசாங்கக் கொள்கைகளில் வெளிப்பாடு காண்கின்ற காரணத்தால், அதிக பிரபலம் பெற்று வருகின்றனர். இந்த பாசிச சித்தாந்தவாதிகளில் பலரும் மிகவும் அறியப்படாதவர்களே என்றபோதும் அது அவர்களது அரசியல் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடவில்லை.

தமது பிற்போக்கான கொள்கைகளுக்கும் அரசியல் கிளர்ச்சிக்கும் ஆதர்சமாக, பாசிசவதிகளின் கவனத்தை ஈர்ப்பது புத்திசாலித்தனமான விடயமாக இருக்காது என்பதை ஆளும் உயரடுக்கும் அதன் பிரதிநிதிகளும் உணர்ந்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான தீவிர வலதுகளின் முக்கியமான சிந்தனையாளர்கள் (Key Thinkers of the Radical Right) என்ற தலைப்பிலான ஒரு புத்தகத் தொகுதியின் ஆசிரியர் எச்சரிக்கிறார்:

[கிரேக்க] கோல்டன் டோன் கட்சியின் அல்லது [ஹங்கேரிய] ஜோபிக் கட்சியின் வாக்காளர்களில் எவோலா குறித்து கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள், அவர்களிலும் வெகுசிலரே பாலினம், போர், அல்லது பலகடவுள்வாதம் (paganism) குறித்த அவரது கண்ணோட்டங்களை பகிர்ந்து கொள்வார்கள், என்றபோதும் கூட எவோலாவின் சிந்தனைகள் கிரேக்க மற்றும் ஹங்கேரிய அரசியலுக்கும், சந்தேகத்திற்கிடமின்றி, தங்களது வலைத் தளங்களில் என்ன பதிகிறோம் எந்த படைப்பாசிரியர்களுக்கு மற்றும் பிரசுரத்தாருக்கு முன்னுரை எழுதுகிறோம் என்பதில் கூடுதல் எச்சரிக்கை உணர்வுடைய அரசியல்வாதிகளை உடைய மற்ற நாடுகளது அரசியலுக்கும், இப்போதும் மறைமுக முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் முன்னாள் “தலைமை மூலோபாயவாதி”யான ஸ்டீவ் பானன், எவோலா மற்றும் டகன் குறித்து ஜாடையாகத் தான் குறிப்பிட்டு வந்திருக்கிறார், எவோலா மற்றும் டகின் ஆகிய இருவருக்கும் ஆதர்சமாயிருந்த பிரெஞ்சு சிறுவட்ட எழுத்தாளரான கெனோன் (Guénon) மீதான தனது அபிமானத்தை ஒரே ஒருமுறை தான் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும், தீவிர வலதின் இந்த முக்கியமான சிந்தனையாளர்கள், அமெரிக்காவின் அளவுக்கு பிரான்ஸ், கிரீஸ், ரஷ்யா மற்றும் ஹங்கேரியில், வலதுகள் மீளெழுச்சி காண்கிற ஒவ்வொரு இடத்திலும், முக்கியத்துவமிக்கவர்களாய் விளங்குகிறார்கள். [14]

பாசிசத்தின் சித்தாந்த மற்றும் அரசியல் மீளெழுச்சி, ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டு முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதற்கு உடனடிப் பிந்தைய காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட “முதலாளித்துவத்தின் வெற்றி” மற்றும் “மார்க்சிசத்தின் மரணம்” கதையாடல்களின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது. இந்தக் கதையாடல்கள், ஒரு மிகப்பெரும் மட்டத்திற்கு, தேவையான கவர்ச்சி வசனங்களுடன் ஒரு அரசியல் பிரச்சாரமாக சேவை செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டன. பகுத்தாயும் விதத்தில் மிகக் குறைவானவையே இருந்தன. ஆயினும் கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலான கிளர்ச்சிகள், உலகளாவிய ஒழுங்கின் எந்த பரந்த —அமெரிக்கா மற்றும் பிற முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு அதுவரை உணரப்படாததாக இருந்த, ஆயினும் நீண்டகால பின்விளைவுகள் கொண்டதாய் இருந்த— நெருக்கடியுடனும் தொடர்பற்றவை என்பதே, ஸ்ராலினிச ஆட்சிகளது கலைப்பை பாராட்டியவர்களிடம் இருந்து வந்ததாயிருந்தாலும், விரக்தியுடன் பதிலளித்தவர்களிடம் இருந்து வந்ததாய் இருந்தாலும், கிட்டத்தட்ட அனைத்து பதிலிறுப்புகளுக்கும் கீழமைந்த ஒரு அனுமானமாய் இருந்தது.

நிகழ்வுகள் கட்டவிழ்ந்து கொண்டிருந்த நிலையிலும், அனைத்துலகக் குழுவால் அபிவிருத்தி செய்யப்பட்ட பகுப்பாய்வானது, தனித்துவமானது என்று நியாயமான முறையில் விவரிக்கத்தகுந்த வரலாற்று-விவரமறிந்த ஒரு தொலைநோக்கு மட்டத்தை விளங்கப்படுத்தியது. 1990 மேயில் நடந்த அனைத்துலகக் குழுவின் பத்தாவது நிறைபேரவையில், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டதன் முக்கியத்துவம் குறித்த ஒரு விரிவான விவாதம் நடைபெற்றது. 1990 மே 6 அன்று தொடங்கிய அந்த நெடிய விவாதத்தின் சமயத்தில், நான் கூறினேன்:

நிச்சயமாக, கிழக்கு ஜேர்மனியில் நடைபெற்றிருக்கும் நிகழ்வுகளும் கிழக்கு ஜேர்மனியில் BSA [Bund Sozialistische Arbeiter] பெற்றிருக்கின்ற அனுபவங்களும் மிக முக்கியமானவை, அவை விவாதிக்கப்பட வேண்டும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். ஆயினும் விவாதத்தின் இந்தப் புள்ளியில், இந்த நிகழ்வுகளை நமது சர்வதேசப் பகுப்பாய்வின் வரம்புக்குள்ளாக அணுகுவதும் உலக சூழ்நிலையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் குறிப்பிட்ட முடிவுகளுக்கு நாம் வந்தடைவதும் அவசியமாய் உள்ளது.

வெறுமனே, முதலாளித்துவத்தை மீண்டும் திணிப்பதற்கான முனைப்பானது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொள்ளவிருக்கிறது என்கிறதான கருதுகோளின் அடிப்படையில் மட்டும், கிழக்கு ஐரோப்பாவில் ஒரு முன்னோக்கை நாம் அபிவிருத்தி செய்து விட முடியும் என்று நான் நம்பவில்லை. அந்த கருதுகோள் நிச்சயமாக உண்மைதான், ஆனாலும் இன்னும் கூடுதலான அடிப்படையான பிரச்சினைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஸ்ராலினிசத்தின் உதவியுடன் ஏகாதிபத்தியத்தால் நிலைநிறுத்தப்பட்ட அத்தனை உறவுகளும் முறிந்து கொண்டிருப்பதே இப்போது நாம் கண்ணுற்றுக் கொண்டிருப்பது என்ற வலியுறுத்தலே நமது பகுப்பாய்வின் இருதயத்தானத்தில் இருந்து வந்திருக்கிறது.

கிழக்கு ஐரோப்பாவில் நடந்து வரும் நிகழ்வுகளுக்கு இரண்டு விதமான பொருள்விளக்கங்கள் கொடுக்கப்படுவது சாத்தியமானதாகும். இது சோசலிசத்திற்கு எதிராக முதலாளித்துவம் பெற்ற ஒரு வரலாற்று வெற்றியைக் குறிக்கிறது; தொழிலாள வர்க்கம் ஒரு பாரிய வரலாற்றுத் தோல்வியை சந்தித்திருக்கிறது; சோசலிச முன்னோக்கு அடிப்படையாக சிதைவு கண்டிருக்கிறது, அத்துடன் நாம் முதலாளித்துவத்தின் ஒரு ஒட்டுமொத்தமான புதிய காலகட்டத்தின் நுழைவிளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதாக ஒருவர் பொருள்விளக்கம் தரலாம். இல்லையேல் —சந்தேகத்திற்கிடமின்றி, இதுவே அனைத்துலகக் குழுவின் நிலைப்பாடு, இதுவே நம்மை மற்ற பிற போக்குகளில் தனிப்படுத்திக் காட்டுவதாகும்— ஏகாதிபத்திய ஒழுங்கின் முறிவானது ஒரு ஆழமான சமநிலையின்மை காலகட்டத்தைத் திறந்து விடுகிறது, இது சர்வதேசரீதியில் பாரிய அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களது வழியில் தான் தீர்க்கப்படவிருக்கிறது; அத்துடன் 1930களுக்குப் பிந்தைய காலத்தின் வேறொரு சமயத்தினை இணைகூறமுடியாத ஒரு ஸ்திரமின்மையின் மட்டம் இன்று மேலோங்கியிருக்கிறது. நமது பகுப்பாய்வு, நிச்சயமாக, கிழக்கு ஐரோப்பாவின் ஆரம்ப கட்ட நிகழ்வுகளின் விளைவுகள் மீது தனக்கு அடிப்படை அமைத்துக் கொள்ள முடியாது. இல்லையேல், ஒரு அவநம்பிக்கையான முடிவுடன் தான் ஒருவர் விடப்பட வேண்டியிருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இந்த விவாதம் மே 7 அன்றும் தொடர்ந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பழைய ஒழுங்கு முறிவதை உணர்ந்து கொண்ட அதேவேளையில், உலக முதலாளித்துவத்தின் ஒரு நெடிய மற்றும் அமைதிகரமான அபிவிருத்தியை சாத்தியமாக்கக் கூடிய ஒரு புதிய உலகளாவிய சமநிலை துரிதமாக ஸ்தாபிக்கப்படுவதை நாங்கள் முன்னெதிர்பார்த்தோமா? இந்தக் கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்க நான் விழைந்தேன்:

இதற்கு ஒரு பதிலுக்கு வந்தடைய நாம் இந்தக் கேள்வியின் இரண்டு பகுதிகளை பரிசீலித்தாக வேண்டும்: முதலாவதாய், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான உறவு, மற்றும் இரண்டாவதாய், வர்க்கங்களுக்கு இடையிலான உறவு, வெறுமனே தேசிய மட்டத்தில் அல்ல, மாறாக ஒரு உலகளாவிய மட்டத்தில். கேள்வி என்னவென்றால்: ஏகாதிபத்தியவாதிகளால் ஒரு புதிய மற்றும் ஸ்திரமான சமநிலையை சமாதானமாக உருவாக்கி விட முடியுமா?...

இதுவே தீர்மானகரமான கேள்வி: ஏகாதிபத்தியவாதிகள், ஒரு புதிய உலக சமநிலைக்கும், சக்திகளது ஒரு புதிய சர்வதேச சமநிலைக்கும் அமைதியாகவும் ஒத்திசைவாகவும் வந்துசேர்வார்கள் என்று எதிர்பார்க்கலாமா? சர்வதேச ஒற்றுமைக்காக தேசிய நலன்களைத் தியாகம் செய்ய அவர்கள் விருப்பத்துடன் இருப்பார்களா? ஆம் என்று சொல்ல வேண்டுமென்றால் 1) முதலாளித்துவ வர்க்கம் கடந்த காலத்தில் அது நடந்து கொண்ட விதத்திற்கு அடிப்படையாக மாறுபட்ட விதத்தில் நடந்து கொள்ளும் என்றும் 2) ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் இன்று நிலவுகிற முரண்பாடுகள் 1914 மற்றும் 1939 இல் நிலவியதைக் காட்டிலும் குறைந்த அளவிலானதாக இருக்கும் என்றும் அனுமானித்தாக வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கம், கடந்த கால வரலாற்று அனுபவத்திற்கு முரண்பாடான விதத்தில், ஒரு “ஞானம்பெற்ற” பாதையை பின்பற்றுவது தத்துவார்த்தரீதியாக சாத்தியமே என்று ஒருவர் ஒப்புக்கொள்வதாகக் கூட வைப்போம்; ஒரு தேசிய முதலாளித்துவ சக்தியாக, மிக அடிப்படையான அம்சங்களில் தமது நலன்களுக்கு அனுகூலமற்றதாக இருக்கக் கூடிய ஏற்பாடுகளில் நுழைவதற்கு அவர்கள் தயாரிப்புடன் இருப்பதாக அனுமானித்துக் கொள்வதாகவும் கூட வைப்போம்; அப்போதும் எந்தவொரு தேசிய முதலாளித்துவ வர்க்கமும் சர்வதேச அரங்கில் செய்யக்கூடிய விட்டுக்கொடுப்புகள் அதன் உள்நாட்டு எல்லைகளுக்குள்தான் ஈடுசெய்யப்பட்டாக வேண்டியிருக்கும் என்பதே உண்மையாக தொடர்கிறது. தேசிய முதலாளித்துவ வர்க்கம் அதன் ஏகாதிபத்திய போட்டியாளர்களிடம் என்ன விட்டுக்கொடுக்கிறதோ அதனை அதன் சொந்த தொழிலாள வர்க்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலமாகத்தான் அது ஈடுசெய்ய வேண்டியிருக்கும்.

இங்குதான் நாம் இரண்டாவது பிரச்சினைக்கு, அதாவது, சர்வதேச வர்க்க உறவுகள் நிலை எனும் பிரச்சினைக்கு வருகிறோம். புதிய சமநிலை ஒன்று அமைதியானவிதத்தில் உருவாக்கப்பட்டுவிட முடியும் என்பதாக அனுமானிக்கின்ற பட்சத்தில், அத்தகையதொரு சமநிலை புரட்சிகரப் பரிமாணங்களுடனான வர்க்கப் போராட்டத்தை உருவாக்காமல் வந்தடைந்துவிட முடியுமா? இன்றைய தொழிலாள வர்க்கமானது, அதன் தலைமையின் காட்டிக்கொடுப்பையும் தாண்டி, நூற்றாண்டின் திருப்பத்தில் இருந்ததைக் காட்டிலும் ஒரு மிகப் பெரிய பாரிய சமூக சக்தியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. வரலாற்றின் கடிகாரத்தினை பின்நோக்கி திருப்ப முடியாது.[15]

இந்த பகுப்பாய்வு சரிபார்க்கப்பட்டிருந்தது. ஆயினும் இப்போது நாம் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்பாக ICFI மிகத் தெளிவாக அடையாளம் கண்டிருந்தவொரு நெருக்கடியின் மிக முன்னேறியதொரு காலகட்டத்தில் இருக்கிறோம். அந்த சமயத்தில் நாம், இந்த நெருக்கடியானது புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கும் என்று முன்கணித்தோம். அந்த எழுச்சியின் தொடக்கத்தை நாம் இப்போது கண்ணுற்றுக் கொண்டிருக்கிறோம்.

இது நம்மை மிக இன்றியமையாத கேள்விக்குக் கொண்டுவருகிறது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுப் பயணப்பாதையை, 1923 இல் ஆன அதன் மூலங்கள் வரை சென்று பார்த்தாகி விட்டதற்குப் பின்னர், அதன் அபிவிருத்தியின் நான்கு தெள்ளத்தெளிவான காலகட்டங்களை அடையாளம் கண்டிருப்பதன் பின்னர், நமது வேலையின் இப்போதைய காலகட்டம் எவ்வாறு குணாம்சப்படுத்தப்பட வேண்டும்?

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர எழுச்சி, அனைத்துலகக் குழுவின் அரசியல் நடவடிக்கையுடன் சந்திப்பதையே நாம் இப்போது கண்ணுற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் இப்போது பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கும் உலக நெருக்கடியில் அனைத்துலகக் குழு அதிகரித்த விதத்தில் செயலூக்கமான மற்றும் நேரடியானதொரு பங்கேற்பாளராய் இருக்கிறது.

பப்லோவாதிகளை அகற்றுவதற்கான இன்றியமையாத தயாரிப்பு வேலைகள், ஒரு சர்வதேச அடித்தளத்தில் உலகக் கட்சியை மீளக்கட்டியெழுப்புவது, ICFI இன் சர்வதேச மூலோபாயத்தை எடுத்துரைப்பது, நான்காம் அகிலத்தின் வரலாற்று மரபியத்தை பாதுகாப்பது, அனைத்துலகக் குழுவின் கழகங்களை கட்சிகளாக மாற்றுவது, மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தை ஸ்தாபிப்பது ஆகியவை நான்காம் காலகட்டத்தின் முக்கியமான சாதனைகளாக இருந்தன. இந்த சாதனைகள் அனைத்துலகக் குழுவின் அரசியல் செல்வாக்கு மிகப்பரந்த அளவில் விரிவு கண்பதையும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை கணிசமாக வளர்ச்சி காண்பதையும் சாத்தியமாக்கின. இந்த காலகட்டம் நிறைவுபெற்றது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றின் ஐந்தாவது காலகட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்தக் காலகட்டமே சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக ICFI இன் விரிந்த வளர்ச்சியை காணவிருக்கும் நிலையாகும். 30 ஆண்டுகளுக்கும் முன்னர் அனைத்துலகக் குழுவால் அடையாளம் காணப்பட்ட, பொருளாதார உலகமயமாக்கத்தின் புறநிலை நிகழ்ச்சிப்போக்குகள், மேலும் பிரம்மாண்டமானதொரு அபிவிருத்திக்குள் சென்றிருக்கின்றன. தகவல்தொடர்பில் புரட்சிகளை உண்டாக்கியிருக்கும் புதிய தொழில்நுட்பங்களது எழுச்சியுடன் சேர்ந்து, இந்த நிகழ்ச்சிப்போக்குகள் 25 ஆண்டுகள் முன்புவரை கூட கற்பனை செய்திருக்க சிரமமான ஒரு மட்டத்திற்கு வர்க்கப் போராட்டத்தை சர்வதேசியமயப்படுத்தியிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டமானது ஒரு பரஸ்பரஇணைப்புடைய மற்றும் ஐக்கியப்பட்ட உலக இயக்கமாக அபிவிருத்தி காணும். இந்த புறநிலை சமூகப்-பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் நனவான அரசியல் தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கட்டியெழுப்பப்படும். அது ஏகாதிபத்தியப் போர் எனும் முதலாளித்துவ அரசியலுக்கு எதிராக, உலக சோசலிசப் புரட்சி எனும் வர்க்க-அடிப்படையிலான மூலோபாயத்தை எதிர்நிறுத்தும். இதுவே நான்காம் அகிலத்தின் வரலாற்றில் புதிய காலகட்டத்தின் அடிப்படையான வரலாற்றுப் பணியாகும்.

நமது இயக்கத்தின் வேலைத்திட்டமும் சிந்தனைகளும் தொழிலாள வர்க்கத்தில் வெகுஜன ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியம் கொண்டுள்ளதை ஆளும் வர்க்கம் உணர்ந்துகொள்கிறது என்ற தெளிவானதொரு அரசியல் வாசகமே நமது ஜேர்மன் பிரிவின் மீது Verfassungsschutz நடத்தும் தாக்குதலாகும். SGP 2017 செப்டம்பர் கூட்டரசாங்கத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளே பெற்றது என்பதை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆயினும் உடனடியாக பின்வரும் எச்சரிக்கையையும் Verfassungsschutz சேர்த்துக் கொண்டது: “மறுபக்கத்தில், வாதி, ஜேர்மன் கூட்டரசாங்கத் தேர்தலிலும், அதுதொடர்பான பொது ஒளிபரப்பு நிறுவனங்களிலும் கூட தேர்தல் விளம்பரங்களிலும், பங்குபெற்றதன் மூலமாக, பொதுமக்களது விழிப்புணர்வையையும் கவனத்தையும் கணிசமாகப் பெற்றிருக்கிறது என்பது நிச்சயம்.”

ஒரு அர்த்தத்தில், சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) அரசியல் உயர்நிலை குறித்த இந்த ஒப்புதல் ஒரு பாராட்டாக இருக்கிறது. அதேநேரத்தில் இது ஒரு மிரட்டலாகவும் இருக்கிறது, அதை அசட்டைசெய்யாத வகையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பொருத்தமான அரசியல் மற்றும் நடைமுறை பதில்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும்.

வர்க்கப் போராட்டத்தின் இந்த உலகளாவிய அபிவிருத்தியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்துலகக் குழுவின் காரியாளர்கள் நமது உலகக் கட்சியின் ஒட்டுமொத்த தத்துவார்த்த மற்றும் அரசியல் மூலதனத்தைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமாக உள்ளது. இந்த அடித்தளத்தின் மீதே நான்காம் அகிலத்தின் வரலாற்றிலான இந்த புதிய, ஐந்தாவது காலகட்டத்தின் போது கட்சி தனது வேலைகளை அபிவிருத்தி செய்யவிருக்கிறது.

Footnotes:

[1] Leon Trotsky and the Development of Marxism, (New York: Labor Publications, 1985), pp. 18-19

[2] Lectures on the Philosophy of World History, by George Wilhelm Friedrich Hegel, translated by H. B. Nisbet (Cambridge University Press, 1973), p. 20

[3] “Feuerbach and the End of Classical German Philosophy,” in Marx Engels Collected Works, Volume 26 (Moscow: Progress Publishers, 1990), p. 388

[4] Ibid, p. 389

[5] Problems of Everyday Life, by Leon Trotsky (New York: Pathfinder, 1973), pp. 137–38

[6] https://www.marxists.org/archive/trotsky/1928/3rd/ti01.htm#p1-01

[7] Cited in “A Contribution to a Critique of G. Healy’s ‘Studies in Dialectical Materialism,’” Fourth International, Volume 13, No. 2, Autumn 1986, p. 17

[8] The Historical and International Foundations of the Socialist Equality Party (Detroit: Mehring Books, 2008), p. 59

[9] Ibid, p. 5

[10] https://www.marxists.org/archive/trotsky/1938/10/foundfi.htm

[11] Ernest Mandel: A Dream Deferred, by Jan Willem Stutje (London and New York: Verso, 2009) p. 240

[12] Workers League Internal Bulletin, Volume 3, Number 4, June 1989, p. 7

[13] John Dewey, The Later Works, Volume 11, edited by Jo Ann Boydston [Carbondale and Edwardsville: Southern Illinois University Press, 1991], p. 39

[14] Key Thinkers of the Radical Right: Behind the New Threat to Liberal Democracy, edited by Mark Sedgwick (Oxford University Press, 2019), p. xxv

[15] Workers League Internal Bulletin, Volume 4, Number 7, June 1990, pp. 13–17

Loading