உக்ரேன் மீதான அணு ஆயுதப் போர் பற்றிய கிரெம்ளினின் எச்சரிக்கைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புறக்கணிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழன் அன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 300,000 சேமப்படையினரை சேவைக்கு அழைத்து, ரஷ்யா மீது நேட்டோ தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக எச்சரித்த பின்னர், ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் மோதலைத் தொடர்வதாக உறுதியளித்தனர். தொழிலாளர்களின் வருமானங்களை பேரழிவிற்கு உட்படுத்தும் உணவு மற்றும் எரிசக்தி விலைகளை மேலும் உயர்த்தும் ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளையும், மேலும் உக்ரேனுக்கான ஆயுத விநியோகத்தை தொடருவதாக அவர்கள் அறிவித்தனர்.

நியூ யோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கூறுகையில், 'பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து ரஷ்யாவிற்கு எதிரான கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விரைவில் கொண்டு வர நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய தொழிற்துறைளை குறிவைத்து 'தனிப்பட்ட மற்றும் துறைசார்ந்த புதிய கட்டுப்பாடுகளை நாங்கள் ஆரோய்வோம்' என்று அவர் மேலும் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் (AP Photo/Jean-Francois Badias) [AP Photo/Jean-Francois Badias]

நேட்டோ தாக்குதலில் இருந்து ரஷ்ய பிரதேசத்தை பாதுகாக்க 'எங்களிடம் இருக்கும் அனைத்து ஆயுத அமைப்புகளையும்' பயன்படுத்துவேன் என்ற புட்டினின் எச்சரிக்கைகள் உண்மையானவை என்று பொரெல் ஒப்புக்கொண்டார். அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல், 'முழு உலகிற்கும் உண்மையான ஆபத்து, சர்வதேச சமூகம் எதிர்விளைவை காட்டவேண்டும்' என்று பொரெல் கூறினார். எவ்வாறாயினும், நாட்டின் ரஷ்ய மொழி பேசும் பகுதிகளை மீண்டும் மீண்டும் தாக்கும் தீவிர வலதுசாரி உக்ரேனிய ஆட்சிக்கு பில்லியன் கணக்கான யூரோ பெறுமதியான ஆயுதங்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது என்பதை பொரெல் தெளிவுபடுத்தினார்.

புட்டினின் 'அணு ஆயுதங்கள் பற்றிய குறிப்புகள் உக்ரேனுக்கு ஆதரவாக நிற்கும் நமது உறுதியையும், ஒற்றுமையையும் அசைக்கவில்லை' என்று பொரெல் கூறினார்.

ஏனைய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளால் எதிரொலிக்கப்படும் பொரலின் கவனமற்ற மற்றும் முற்றிலும் பொறுப்பற்ற அறிக்கைகள் ஐரோப்பாவையும் உலகையும் நேராக அணுவாயுத போருக்கு இட்டுச் செல்கின்றன.

வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உக்ரேனிய இராணுவப் பிரிவுகள் மற்றும் தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்களுக்கு பல பில்லியன் டாலர்களை ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் ரஷ்யா உரிமை கோரும் எல்லைக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கியுள்ளன. 'நேட்டோ நாடுகள் நம் நாட்டை பலவீனப்படுத்தவும், பிரிக்கவும் மற்றும் இறுதியில் அழிக்கவும்' முனைவதாக கிரெம்ளின் முடிவுக்கு வந்துள்ளதாக புட்டின் புதன்கிழமை கூறினார். அணு ஆயுதங்கள் உட்பட ரஷ்யாவின் முழு இராணுவ ஆயுதக் களஞ்சியத்தையும் பயன்படுத்துவதற்கான தனது அச்சுறுத்தல் 'வெறும் வாயடிப்பல்ல' என்று அவர் மேலும் கூறினார்.

ரஷ்யா தற்போது வைத்திருக்கும் உக்ரேனிலுள்ள ரஷ்ய மொழி பேசும் பகுதிகள் உட்பட, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி தனது பிராந்தியத்தின் மீதான தாக்குதல்களுக்கு ரஷ்யா பதிலளிப்பதாக புட்டினின் அச்சுறுத்தல்களை ரஷ்ய உயர் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கூறினர். நேற்று, முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ்: 'டொன்பாஸ் (டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்) குடியரசுகள் மற்றும் பிற பிரதேசங்கள் ரஷ்யாவில் ஏற்றுக்கொள்ளப்படும். …… அணிதிரட்டல் திறன்கள் மட்டுமல்ல, மூலோபாய அணு ஆயுதங்கள் மற்றும் புதிய கொள்கைகளின் அடிப்படையில் ஆயுதங்கள் உட்பட எந்த ரஷ்ய ஆயுதங்களும் அத்தகைய பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படலாம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது” என அறிவித்தார்.

ஏற்கனவே கடந்த வாரம், மெட்வெடேவ் 'நேட்டோவின் அதிக அபாயகரமான வகை ஆயுதங்களை கியேவ் ஆட்சிக்கு கட்டுப்பாடில்லாமல் புகுத்துவது' ரஷ்ய இராணுவ மோதலைத் தூண்டும் என்று எச்சரித்தார்.

ரஷ்யாவும் நேட்டோ சக்திகளும் மூலோபாய அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கான மில்லியன் இறப்புகளுக்கும், மனிதகுலத்தின் அழிவுக்கும் வழிவகுக்கும். ஒரு ரஷ்ய RS-28 மூலோபாய அணுசக்தி ஏவுகணையானது 15 சுயாதீனமாக இலக்கு வைக்கக்கூடிய வெடிக்கும் குண்டுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் 25 மெகா டன்கள் வரை TNTயின் வெடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இது 1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களை அழித்த அமெரிக்க அணுக்குண்டுகளின் சக்தியை விட ஆயிரம் மடங்கு அதிகம்.

ஒரே ஒரு RS-28 ஏவுகணையானது டெக்சாஸ் அல்லது நிலப்பரப்பின் அடிப்படையில் மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றிய நாடான பிரான்ஸ் அளவிலான ஒரு பகுதியை அழிக்க முடியும் என்று பிரெஞ்சு ஊடகங்கள் ரஷ்ய அறிக்கைகளை மேற்கோள் காட்டியுள்ளன.

அவர்கள் இராணுவ மோதலைத் தவிர வேறு எதையும் முன்மொழியவில்லை என்று மற்ற ரஷ்ய அதிகாரிகளும் வலியுறுத்தினர். ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ், நியூயோர்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு குழுக்கூட்டத்தில், நேட்டோ நாடுகளை கண்டித்து அறிக்கை வெளிவிட்ட பின்னர் ஏனைய தூதர்கள் எந்த கருத்துக்கும் செவிசாய்க்காமல் வெளியேறினார்.

உக்ரேனில் உள்ள ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய மொழி பேசுபவர்களின் உரிமைகளை 'வெட்கமின்றி மிதித்ததாக' கீயேவை குற்றம் சாட்டிய லாவ்ரோவ், இது 'சிறப்பு இராணுவ நடவடிக்கையை நடத்துவதற்கான முடிவை தவிர்க்க முடியாதது என்பதை உறுதிப்படுத்துகிறது' என்றார். 'மேற்கு நாடுகளின் கூட்டினால் இந்த மோதலை வேண்டுமென்றே தூண்டப்பட்டது தண்டிக்கப்படாமல் இருக்கின்றது' என்று அவர் மேலும் கூறினார்.

சோவியத்துக்கு பிந்தைய ரஷ்யாவின் முதலாளித்துவ ஆட்சியின் பிரதிநிதிகளின் அவநம்பிக்கையான மற்றும் போர்க்குணமிக்க கருத்துக்கள் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் ஆக்கிரோஷமான மற்றும் பொறுப்பற்ற அறிக்கைகள் ஆகிய இரண்டும் எச்சரிக்கைகளாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது முதலாளித்துவ அமைப்பின் ஆழமான நெருக்கடி முக்கிய உலக சக்திகளுக்கு இடையே முழுமையான அணுசக்தி போருக்கு இட்டுச்செல்லும் அச்சுறுத்தலாக உள்ளது.

கிரெம்ளின் திவால் தன்மையும் மற்றும் 1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதன் பேரழிவுகரமான விளைவுகளும் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இராணுவ மற்றும் அரசியல் எதிர்விளைவு பற்றிய கவலையிலிருந்து விடுபட்டு மத்திய கிழக்கு மற்றும் பால்கனில் மட்டும் போரை நடத்தவில்லை. அவர்கள் முன்னாள் சோவியத் குடியரசுகளிடையே மோதல்களைத் தூண்டினர். அவை இப்போது முழுப் போராக வெடித்துள்ளன. மாஸ்கோ ஆட்சியானது, சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு சமூக கோரிக்கை விடுக்க முடியாதுள்ளது. அது ஏகாதிபத்தியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் அதனை இராணுவ சக்தியைக் கொண்டு அச்சுறுத்துவதற்கும் இடையே ஊசலாடிக்கொண்டு, ஏகாதிபத்தியத்திடம் சரணடைதல் அல்லது அதனுடனான அணுசக்தி மோதலை தேர்ந்தெடுப்பதில் இப்போது தங்கியுள்ளது.

நேட்டோ சக்திகள் தங்கள் பங்கிற்கு நெருப்பில் எண்ணெயை வார்க்கின்றன. 2014ல் உக்ரேனிய தலைநகர் கியேவில் ஒரு தீவிர வலதுசாரி, ரஷ்ய எதிர்ப்பு ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரிப்பதன் மூலம் உக்ரேனில் மோதலை தூண்டிவிட்ட அவர்கள், இப்போது ஜேர்மன் அரசாங்கம் மறுஆயுதமயமாக்கல் மற்றும் ஒரு ஆக்கிரமிப்புமிக்க இராணுவ வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவது போல, இராணுவ-பொலிஸ் படைகளின் பரந்த விரிவாக்கத்தை நியாயப்படுத்தவும் போரைப் பயன்படுத்துகின்றனர்.

நேற்று, ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி கிறிஸ்டீன லம்பிரெக்ட் மற்றும் அவரது பிரெஞ்சு பிரதிநிதியான செபஸ்ரியான் லுகொர்னு ஆகியோர் பேர்லினில் சந்தித்தனர். இது அணுவாயுதப் போரை ஆபத்தில் ஆழ்த்தினாலும் கூட, ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் உக்ரேனிய இராணுவப் பிரிவுகளுக்கும் தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்களுக்கும் தொடர்ந்து ஆயுதம் கொடுக்கும் என்று வலியுறுத்தினார்கள்.

'எங்கள் பிரதிபலிப்பு உண்மையில் நிலையானது மற்றும், மிக முக்கியமாக உறுதியானதும் மற்றும் இணைந்ததும்: இதிலிருந்து எந்த விலகலும் இருக்காது, எதிர்காலத்தில் உக்ரேனின் தைரியமான போராட்டத்தில் நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்' என லம்பிரெக்ட் கூறினார். உக்ரேனிய இராணுவத்தின் 'பெரிய வெற்றிகள்' ஜேர்மனியினதும் பிரான்சினதும் இராணுவ உதவியின் ஒரு பகுதியாகும் என்று அவர் பெருமிதம் கொண்டார்.

பேர்லினும் பாரிசும் அணுவாயுத சக்தி அதிகரிப்பு பற்றிய ரஷ்ய எச்சரிக்கைகளை புறக்கணித்து ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தின் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவாக தொடர்ந்து முரட்டுத்தனமாக இயங்கும் என லம்பிரெக்ட் மேலும் கூறினார். 'எங்களைப் பொறுத்தவரை, இந்த வாக்கெடுப்பு [டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில்] எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்காது. ஏனெனில் இவை உக்ரேனின் பிரதேசம் மற்றும் அப்படியே இருக்கும்' என்று அவர் கூறினார். 'நாங்கள் ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்புவது நல்லது: உக்ரேனின் வெற்றிகளுக்கு புட்டினின் பிரதிபலிப்பு உக்ரேனுக்கு தொடர்ந்து ஆதரிக்கவளிக்கவே ஊக்குவிக்கிறது' என்றார்.

ஊடகங்களில் உள்ள போர்வெறியர்கள் விரைவான மோதல்களுக்கான அழைப்புகளால் நிரம்பி வழிகின்றன. 'புட்டினின் அணுவாயுத போர்முழக்கத்தின்' மூலம் ஒருவர் 'பயமுறுத்தப்படக்கூடாது' என்று Frankfurter Allgemeine Zeitung இன் ஆசிரியர் பெர்தோல்ட் கோஹ்லர் ஒரு வர்ணனையில் கோருகிறார். 'ஆகக்குறைந்தது இதுவரை செய்ததுபோல் மேற்குலகம் உக்ரேனுக்கு ஆதரவாக நின்றால் மட்டுமே புட்டினுடனான மோதலில் நம்பகமான எதிரியாக இருக்கும். மற்றைய எதுவும் 'இணங்கிப்போதல்' மற்றும் 'அதன் சொந்த மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு துரோகம்' ஆகும்.

Die Welt பத்திரிகையின்வெளிவிவகாரத்துறைக்கு பொறுப்பான கிளெமென்ஸ் வெர்ஜின்ஸ்ப மின்வருமாறு கோரிக்கை விடுக்கிறார்: 'உக்ரேன் இப்போது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக விடுவிக்க தேவையான அனைத்து ஆயுதங்களையும் பெறவேண்டும். உதாரணமாக, Leopard 2 போன்ற நவீன மேற்கத்திய டாங்கிகள் அல்லது Marder போன்ற காலாட்படை சண்டை வாகனங்கள் உட்பட'. 'ஜேர்மனியின் நலன் கருதி, கார்கிவில் சமீபத்தில் நடந்ததைப் போலவே, ரஷ்ய தாக்குதலும் எதிர்வரும் மாதங்களில் மற்ற இடங்களில் சரிந்துவிடும். அப்போது உக்ரேன், பீதியுற்றிருந்த ரஷ்ய துருப்புக்களை விட்டோட செய்வதில் வெற்றிபெற்று, மின்னல்வேகத்தில் பரந்த நிலப்பரப்பைக் கைப்பற்றியது”.

பின்னர் அவர் மேலும் கூறுகிறார், 'புதிய ஆட்கள் முன்னணிக்கு வருகையில் ரஷ்யாவிற்கு இந்த போர் இழக்கப்பட்டுவிட்டது என்பது எவ்வளவு தெளிவாக தெரிகின்றது. மேலும் படையெடுப்பாளர்கள் இன்னும் குறைவான உக்ரேனிய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால், இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும்'.

இந்த இழிந்த விளக்கம் 20 ஆம் நூற்றாண்டின் ஜேர்மன் இராணுவவாதத்தின் கொலைகார தர்க்கத்திற்கு ஒத்திருக்கிறது. குடியரசும் நாஜிகளின் முன்னணி பிரதிநிதிகளும், விரைவான 'வெற்றியூடான அமைதி' (Siegfrieden) அல்லது 'இறுதி வெற்றியை' (Endsieg) அடைய ஜேர்மன் போர் எந்திரத்தின் விரைவான மற்றும் அதிகபட்ச அணிதிரட்டல் அவசியம் என்று வாதிட்டனர். உண்மையில், இந்த விரிவாக்க மூலோபாயம் பல்லாயிரக்கணக்கானோர் போரில் இறப்பதற்கும் மற்றும் காட்டுமிராண்டித்தனமான குற்றங்களும் உள்ளடங்கிய ஒட்டுமொத்தப் போருக்கு இட்டுச் சென்றது.

தற்போதைய ஏகாதிபத்திய போர்வெறிக்குப் பின்னால் பைத்தியக்காரத்தனமான புவிசார் அரசியல் அபிலாஷை மற்றும் ஆழமான உள்நாட்டு நெருக்கடி ஆகியவற்றின் நச்சு கலவையே உள்ளது. 1930 களில் இருந்ததைப் போலவே, ஆளும் வர்க்கம் முதலாளித்துவத்தின் உடைவிற்கும், தொழிலாள வர்க்கத்தில் வெடிக்கும் எதிர்ப்புக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இராணுவவாதம், பாசிசம் மற்றும் உலகப் போருக்கு திரும்புகிறது. தொழிலாள வர்க்கம் அதன் சொந்த மூலோபாயமான உலக சோசலிசப் புரட்சியின் மூலம் அனைத்து மனிதகுலத்தின் உயிர்வாழ்வையும் அச்சுறுத்தும் முதலாளித்துவ பைத்தியக்காரத்தனத்தை எதிர்கொள்ள வேண்டும்.

Loading