உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோ போருக்கு மத்தியில் அஸெரி-ஆர்மீனிய மோதல்கள் வெடித்தன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செப்டம்பர் 12-13 இரவு அஸேரி மற்றும் ஆர்மேனியப் படைகளுக்கு இடையே மோதல் மூண்டது. அஸெரி படைகள் ஆர்மேனிய எல்லையைத் தாண்டி வர்டெனிஸ், கோரிஸ், சோட்க் மற்றும் ஜெர்முக் நகரங்களைச் சுற்றி ஆர்மீனிய நிலைகளைத் தாக்கின. செப்டம்பர் 13 ம் தேதி மாஸ்கோவால் இடைத்தரகு செய்யப்பட்ட போர்நிறுத்தம் உடனடியாக முறிந்த பின்னர், இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு இடையே செப்டம்பர் 14 அன்று மோதல்கள் தொடர்ந்தன.

இந்த மாத சண்டையில் இதுவரை 105 ஆர்மீனிய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக ஆர்மீனிய பிரதம மந்திரி நிகோல் பஷின்யான் நேற்று தெரிவித்தார். அதேவேளை, அஜர்பைஜான் தனது துருப்புக்களில் 50 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்தது.

செப்டம்பர் 13 அன்று, ஆர்மீனிய மற்றும் அஸெரி அதிகாரிகள் மோதலை ஆரம்பித்ததற்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர். ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம், அஸெரி துருப்புக்களின் ‘தீவிர குண்டுவீச்சு தாக்குதல்’ மற்றும் ட்ரோன் தாக்குதல்களால், ‘ஆர்மீனியப் படைகள் சரிக்குசரியான பதிலடி கொடுக்கத் தொடங்கியது’ என்று அறிவித்தது.

அஸெரி பாதுகாப்பு அமைச்சகம் அதன் பங்கிற்கு அவர்களின் கூட்டு எல்லையில் ஆர்மீனியப் படைகள் ‘பெரியளவில் நாசகார செயல்களில்’ ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, ஆர்மீனிய தாக்குதலை அது முறியடிப்பதாகக் கூறியது.

ஆர்மீனியப் பொதுமக்கள் கடுமையான சண்டை தங்களை இடத்தை விட்டு வெளியேற முடியாமல் தடுத்ததாகவும், அத்துடன் பொதுமக்களின் உள்கட்டமைப்பு பெரும் சேதம் அடைந்ததாகவும் கூறினர். “முழு கிராமமும் குண்டுவீச்சு தாக்குதலுக்கு உள்ளானது, எங்களால் குழந்தைகளைக் கூட வெளியேற்ற முடியவில்லை, அவர்களில் ஒரு பகுதியினரை மட்டுமே நாங்கள் வெளியேற்ற முடிந்தது” என்று கெகாமசர் கிராமவாசி ஒருவர் ரேடியோ ஃப்ரீ ஐரோப்பாவிடம் கூறினார். மேலும், “இந்தப் பகுதியில் தீ மிகவும் தீவிரமாக உள்ளது, சாலைகளும் குண்டுவீச்சு தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன, நாங்கள் ஒழிந்திருக்கிறோம்” என்றும் கூறினார்.

சோட்கில் வசிக்கும் சேவக் கச்சத்ரியன் என்பவர், எரிந்த கட்டிடங்களின் படங்களுடன் முகநூலில் பதிவிட்டுள்ள ஒரு அறிக்கை இவ்வாறு தெரிவித்தது: “சோட்கில் இரவு நேர குண்டுவீச்சுத் தாக்குதலுக்குப் பின்னர், சமூக கட்டிடம் சேதமடைந்துள்ளது, பல வீடுகள் எரிந்துவிட்டன, கூரைகளும் ஜன்னல்களும் சேதமடைந்துள்ளன. சேதத்தின் முழு அளவு இன்னும் தெளிவாக இல்லை. தற்போதுவரை, சண்டை நடந்து வருகிறது.”

போரை நிறுத்துவதற்கான போர் நிறுத்த அறிவிப்பை மாஸ்கோ முறியடித்தாலும் கூட, பெரும்பாலான நிகழ்வுகள் துருக்கிய ஆதரவு அஜர்பைஜானால் தொடங்கப்பட்டது, அமெரிக்க அதிகாரிகள் மோதலுக்கு ரஷ்யாவைக் குற்றம் சாட்ட முயன்றனர். உக்ரேன் மீதான கவனத்தை சிதறடிக்க, ஏதோவொரு வகையில் குழப்பத்தை ஏற்படுத்த ரஷ்யா முயற்சிக்கிறதா என்பது பற்றி நாங்கள் எப்போதும் கவலைப்படுகிறோம்,” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கென் அறிவித்தார்.

அதே நேரத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட ஒரு அறிக்கை, “பதட்டங்களைக் குறைக்கவும் மோதல் மேலும் விரிவடைவதைத் தவிர்க்கவும் நாங்கள் உடனடி நடவடிக்கைகளுக்கு வலியுறுத்துகிறோம்” என்று அறிவித்தது. அஸெரி ஜனாதிபதி இல்ஹாம் அலியேவை பிளிங்கென் அழைத்து, அவரது ‘ஆழ்ந்த கவலையை’ வலியுறுத்தியதுடன், ஆர்மினீயாவுக்கு எதிரான ‘விரோதங்களை நிறுத்தவும்’ அலியேவை வலியுறுத்தினார் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார். வாஷிங்டன் “சண்டையை உடனடியாக நிறுத்தவும், ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே அமைதி தீர்வை ஏற்படுத்தவும் வலியுறுத்தும்” என்று தெரிவிக்க பாஷின்யானை பிளிங்கென் அழைத்ததாகவும் பிரைஸ் கூறினார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், அஸெரி ஜனாதிபதி இல்ஹாம் அலியேவைத் தொடர்புகொண்டு ‘மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, போர்நிறுத்தத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். மேலும், ‘ஆர்மீனியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதற்கு’ பிரெஞ்சு ஆதரவை வலியுறுத்துவதற்காக தான் பஷின்யானுடன் பேசியதாகவும் மக்ரோன் கூறினார்.

ஆர்மீனிய-அஸெரி மோதலின் மீள் எழுச்சியானது, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் காகசஸ் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் ஒரு பரந்த போராக விரிவடையக்கூடும் என்ற வளர்ந்து வரும் ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது.

நேற்று, அஜர்பைஜானுக்கு எதிராக இராணுவ ரீதியாக தலையிடுமாறு ரஷ்யா மற்றும் கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பிடம் (Collective Security Treaty Organization – CSTO) பஷின்யான் முறையிட்டார். “ஆர்மீனியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதற்கும், அஜர்பைஜான் ஆயுதப்படைகளை ஆர்மீனியாவில் இருந்து திரும்பப் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் இராணுவ ஆதரவு உட்பட CSTO இடம் நாங்கள் உதவி கேட்டோம்” என்று பஷின்யான் ஆர்மீனிய பாராளுமன்றத்தில் கூறினார்.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடனும் பஷின்யான் பேசினார், அவர் ஒரு புதிய போர் ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று அறிவித்ததுடன், ஆர்மீனியாவுடனான ஈரானிய வர்த்தக பாதைகள் தொடர்ந்து திறந்திருப்பதை உறுதி செய்ய அழைப்பு விடுத்தார்.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் நேற்று அஜர்பைஜானுக்கு ஆதரவாக ஒரு போர்க்குணமிக்க அறிக்கையை வெளியிட்டார். “ஆர்மீனியா இந்த தவறான பாதையில் இருந்து விரைவில் விலகி அமைதியை வலுப்படுத்த தனது நேரத்தையும் சக்தியையும் செலவிடும் என நாங்கள் நம்புகிறோம். நிச்சயமாக, இந்த அணுகுமுறை ஆர்மீனிய தரப்புக்கு விளைவுகளை ஏற்படுத்தும்,” என்று கூறினார்.

தற்போதைய சண்டையானது 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்பின் விஷம் கலந்த விளைபொருளாகும், அத்துடன் கடந்த மூன்று தசாப்தங்களாக இப்பகுதியில் வெடித்த நேட்டோ போர்களின் விளைவாகும். 1988 இல் ஆர்மீனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையே சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் அந்நிய எல்லைக்குட்பட்ட பகுதி குறித்து சண்டை வெடித்தது, இது அஜர்பைஜானுக்குள் இருந்தது, ஆனால் பெரும்பான்மையான ஆர்மீனிய மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் சுதந்திரமடைந்து, ஆர்மீனியா நாகோர்னோ-கராபாக்கை கைப்பற்றியதால், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர் சண்டை ஒரு முழு அளவிலான போராக விரிவடைந்தது.

அதுவரை சோவியத் குடிமக்களாக இருந்த படைகளுக்கு இடையிலான இந்த சகோதர யுத்தம் 1992 முதல் 1994 இல் அமைதியற்ற போர்நிறுத்தம் வரை நீடித்து, 30,000 உயிர்களைக் கொன்றது.

மத்திய கிழக்கில் நேட்டோவின் போர்கள், அதிலும் குறிப்பாக 2011 இல் தொடங்கிய சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அதன் போர், ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான ஆபத்தான சமநிலையைத் தகர்த்தது. துருக்கிய அஜர்பைஜான் இன ரீதியாக துருக்கியுடன் உறவுகளை கட்டியெழுப்பியதால், ஆர்மீனியா ஈரானுடனான நெருக்கமான உறவுகளையும் ரஷ்யாவின் ஆதரவையும் நம்பியிருந்தது, இது ஆர்மீனிய நகரமான கியூம்ரியில் இராணுவ தளத்தைக் கொண்டுள்ளது. நேட்டோ போருக்கு மத்தியில் சிரியாவில் பதட்டங்கள் வெடித்தன, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிடாமல் தடுக்க துருக்கிய துருப்புக்கள் ஈரானிய மற்றும் ரஷ்ய துருப்புக்களுக்கு எதிராகப் போராடியது.

அஸெரிப் படைகள் நாகோர்னோ-கராபாக் அந்நிய எல்லைக்குட்பட்ட பகுதியின் பெரும்பகுதியை கைப்பற்றிய நிலையில், 2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே ஒரு புதிய போர் வெடித்தது. இது கிட்டத்தட்ட 7,000 உயிர்களைக் கொன்றது, அதாவது, அஜர்பைஜானில் 100 பொதுமக்கள் உட்பட 3,006 உயிரிழப்புகளும், ஆர்மீனியாவில் 85 பொதுமக்கள் உட்பட 3,910 உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனியப் போரில் இப்போது முக்கிய பங்கு வகிக்கும் துருக்கிய பைரக்டர் ட்ரோன்களை அஜர்பைஜான் களமிறக்கியது, இது அஜர்பைஜானுக்கு ஆதரவாக சமநிலையை உயர்த்த உதவியது.

2020 போருக்குப் பின்னர், ஆர்மீனிய மற்றும் அஸெரி துருப்புக்களுக்கு இடையே முன் வரிசையில் பல ஆயிரம் அமைதி காக்கும் படையினரை ரஷ்யா நிறுத்தியது. இந்தப் படைகள் ஆர்மீனியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் அடுத்தடுத்த அஸெரி படையெடுப்புக்களை நிறுத்தத் தவறிவிட்டன, இது உக்ரேனில் ரஷ்யாவின் ‘சிறப்பு இராணுவ நடவடிக்கைகள்’ தொடர்பாக நேட்டோ-ரஷ்யா போர் வெடித்ததில் இருந்து அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவில் உள்ள பல அதிகாரிகள் காகசஸ் சண்டையின் புதிய வெடிப்பை உக்ரேன் போருடன் தொடர்புபடுத்தினர். பிரெஞ்சு நாளிதழ் Le Figaro இவ்வாறு எழுதியது: “இரண்டு காரணிகள் அஜர்பைஜானை ஊக்கப்படுத்தியதாகத் தெரிகிறது. முதலாவது, கார்கோவில் ரஷ்யாவின் தோல்வி. ‘ரஷ்யாவிடம் அஜர்பைஜானை தடுக்கும் திறன் குறைவாக உள்ளது,’ என்று பாரிஸில் உள்ள அரசியல் ஆய்வுகள் நிறுவனத்தின் அரசியல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளர் புளோரன்ஸ் பார்மென்டியர் கூறினார். இரண்டாவதாக, “இயற்கை எரிவாயு இறக்குமதிக்கு அது ஐரோப்பாவை சார்ந்துள்ளது.”

ஜூலை மாதம், ஐரோப்பிய ஒன்றிய (EU) ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன், உக்ரேனில் போருக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பணம் செலுத்த மறுத்து வரும் ரஷ்ய எரிவாயுவிற்கு ஒரு பகுதியளவு மாற்றாக அஸெரி எரிவாயுவைப் பெறுவது தொடர்பாக பேரம் பேசுவதற்கு, அஸெரி தலைநகர் பாகுவிற்குச் சென்றார். அஸெரி-ஆர்மீனிய மோதல்கள், இப்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஏற்பட்டுள்ள பாரிய எரிசக்தி பற்றாக்குறையையும், மற்றும் இந்த குளிர்காலத்தில் ஐரோப்பாவில் நிகழவிருக்கும் பொருளாதாரச் சரிவையும் எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய மோதல்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது.

இலண்டனில் உள்ள Chatham House சிந்தனைக் குழுவைச் சேர்ந்த லாரன்ஸ் ப்ரோயர்ஸ், 'அஜர்பைஜான் தனது சக்தியை, அதன் இராணுவச் சாதகத்தை பயன்படுத்துவதற்கு சரியான நேரம்” என்று நான் நினைக்கிறேன். 'புதிய இடைத்தடை மண்டலங்கள், பாதுகாப்பு மண்டலங்களை நிறுவுவதே ஆபத்து என்று நான் நினைக்கிறேன். ஆர்மீனியாவின் தெற்குப் பகுதியின் ஒரு வகையான துண்டாடுதல் மற்றும் இதைத் தடுக்க வெளிப்புற பங்கேற்பாளர்களின் சக்தியற்ற தன்மை,” என்று அவர் மேலும் கூறினார்.

உக்ரேனில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் என்பது, யுரேஷிய நிலப்பரப்பு முழுவதும் தீவிரமடையக்கூடும் என்ற உண்மையான ஆபத்தை காகசஸில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான ஒரே வழி, முதலாளித்துவத்தின் போருக்கான உந்துதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் புரட்சிகரமாக அணிதிரட்டுவதே. இது, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தின் அடித்தளத்திற்கு வழிவகுத்த ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பாதுகாக்கப்பட்ட அக்டோபர் 1917 புரட்சியின் மார்க்சிச-சர்வதேசிய மரபுகளுக்குத் திரும்புவதைக் கோருகிறது.

Loading