UAW தலைவர் வேட்பாளர் வில் லெஹ்மன்: இரயில் தொழிலாளர்கள் மீதான பைடென் நிர்வாகத்தின் தாக்குதலுக்கு எதிராக முழு தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டவும்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த அறிக்கை UAW ஜனாதிபதி வேட்பாளர் வில் லெஹ்மனால் பைடென் நிர்வாகத்தின் இரயில் துறையில் ஒரு உடன்பாட்டுக்கான பரிந்துரைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டது.

வில் லெஹ்மன் Will Lehman[Photo: WSWS]

UAW ஜனாதிபதிக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்திற்கு WSWS ஆதரவு அளிக்கின்றது. மேலும் தகவலுக்கு WillforUAWpresident.org க்குச் செல்லவும்.

***

இரயில் நிறுவனங்கள் மற்றும் பைடென் நிர்வாகத்திற்கு எதிரான இரயில் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிக்குமாறு UAW இல் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் நான் அழைக்கிறேன்.

செவ்வாயன்று, பைடெனின் ஜனாதிபதி அத்தியாவசிய வாரியம் (PEB) இரயில்வே துறையில் உடன்பாட்டிற்கான பரிந்துரைகளை வழங்கியது. அங்கு 116,000 தொழிலாளர்கள் தேசியளவிலான ஒப்பந்தம் அல்லது ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வு பெறவில்லை.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஜனாதிபதி வாரியம் கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரச்சினையிலும் இரயில் துறையினரின் பக்கத்திற்கு சார்பாக இறங்கி, பணவீக்க விகிதத்தை விட குறைவான உயர்வுகளை முன்மொழிந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தொழிலில் இருந்து வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரயில்வேயின் தண்டனைக்குரிய வருகையளிக்கும் கொள்கைகளை (attendance policie) அனுமதித்தது.

கடந்த ஆறு ஆண்டுகளில், இரயில்கள் தங்கள் பணியாளர்களை 29 சதவீதம் குறைத்துள்ளனர். அவர்கள் 'துல்லியமான திட்டமிடப்பட்ட இரயில் பாதையை' (எங்கள் 'மாற்றீடான வேலை அட்டவணைகளுக்கு' மாறுபாடான) பயன்படுத்தி குறைவான தொழிலாளர்களிடமிருந்து அதிக உற்பத்தித்திறனைப் பெறுகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோடீஸ்வரரான வாரன் பஃபெட்டின் BNSF இரயில் பாதை ஒருதலைப்பட்சமாக அதன் 'Hi-Viz' எனப்படும் வருகைளிக்கும் கொள்கையை திணித்தது. இது தொழிலாளர்களை 7 நாட்களுக்கும் 24 மணிநேர தயார்நிலையில் இருக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. இதனால் குடும்ப நிகழ்வுகள் அல்லது மருத்துவர் சந்திப்புகளை கூட திட்டமிட முடியாது.

ஜனாதிபதி அத்தியாவசிய வாரியத்தின் பரிந்துரையின்படி, இரயில்வே தொழிலாளர்கள் 2020-ஆம் ஆண்டிலிருந்து பின்னோக்கி கணிக்கப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு 22 சதவீத ஊதிய உயர்வைப் பெறுவார்கள். இது ஆண்டுக்கு சராசரியாக 4.4 சதவீதமாக இருக்கும். இது தற்போதைய பணவீக்கமான 8.5 சதவீத விகிதத்தில் பாதிக்கும் சற்று அதிகமாகும்.

மிகவும் ஆத்திரமூட்டும் வகையில், நிர்வாகத்தின் மிருகத்தனமான வருகை மற்றும் ஒழுங்குக் கொள்கைகளை திணிப்பதைத் தடுக்க தொழிலாளர்களுக்கு உரிமை இல்லை என்று வாரியம் அறிவித்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், 17,000 BNSF தொழிலாளர்கள் Hi-Viz கொள்கையை நிறுத்த வேலைநிறுத்தம் செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் டெக்சாஸில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி அவர்களைத் தடுக்க வேலைநிறுத்தத் தடை உத்தரவு பிறப்பித்தார். அனைத்து முக்கிய இரயில் பாதைகளிலும் வேலைநிறுத்தத்தைத் தடுக்க, தொழிலாளர் விரோத இரயில்வே தொழிலாளர் சட்டத்தை நம்பி, பைடெனும் அதையே செய்தார்.

வேலைநிறுத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க 99.5 சதவீதம் வாக்களித்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தடுப்பதற்காக பைடென் கடந்த மாதம் இந்த வாரியத்தை நியமித்தார். இப்போது அது தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளதால், ஒப்பந்தம் உருவாகும் போது அடுத்த 30 நாட்களுக்கு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை நிராகரித்தாலும், மற்றொரு 30 நாள் 'அமைதியான' காலத்தில் வேலைநிறுத்தம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்குள் காங்கிரஸ் தலையிட்டு வேலைநிறுத்தத்தைத் தடுத்து சமரசம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மற்ற பகுதிகளுக்கு 'சுதந்திரம்' மற்றும் 'ஜனநாயகம்' ஆகியவற்றைக் கொண்டுவர அமெரிக்கா போர்களை நடத்துகிறது என்பதை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நமக்குச் சொல்லத் தவறுவதில்லை. ஆனால் அமெரிக்காவில், நாட்டின் பொருட்களை நகர்த்தும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய உரிமை இல்லை மற்றும் அடிப்படையில் தொழில்துறை அடிமைகளாக உள்ளனர். எண்ணெய் தொழிற்துறை மற்றும் மேற்கு கடற்கரை கப்பல்துறைகளில் வேலைநிறுத்தங்களை தடுக்கவும் பைடென் தலையிட்டார்.

UAW இல் நாம் எதிர்கொள்வது போலவே, இரயில் தொழிலாளர்களின் போராட்டமும் அவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் தொழிற்சங்க அமைப்பினால் தடுக்கப்படுகிறது.

Teamsters உடன் இணைந்த இரயில் இயந்திர பொறியியலாளர்கள் (BLET) மற்றும் SMART-TD தொழிற்சங்கங்கள் ஆகியவை இரயில்வே முதலாளிகள் செய்வதற்கு முன்பே ஜனாதிபதி அத்தியாவசிய வாரியத்தை நியமிக்க பைடெனை அழைத்தன. அதாவது வேலை நிறுத்தத்தை தடுக்குமாறு தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தன. அவர்கள் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி 'நடுநிலையாக' இருப்பார் என்று பொய் சொன்னார்கள். அவருடைய வாரியம் இரயில் துறையினருக்கு பக்கபலமாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும்.

வெள்ளை மாளிகையின் தலையீடு அனைத்து தொழிலாளர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடத்தை எடுத்துக்காட்டுகிறது. தொழிலாளர்களுக்கு எதிராக பெருநிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கும் போது, ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும ஒன்றுபட்டுள்ளனர். பணக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் தொழிலாளர்கள் நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அனைத்து அரசாங்கத்திற்கும் எதிராக ஒரு மோதலை எதிர்பார்க்கலாம்.

பெருநிறுவன சுரண்டல் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்திற்கான முன்நிபந்தனையாக UAW அமைப்பிற்கு எதிராக ஒரு சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியை முன்னெடுப்பதற்காக நான் ஐக்கிய வாகனத் தொழிலாளர்களின் (UAW) தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். ஆனால் இது சாமானிய தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பை கட்டியெழுப்புவதன் மூலம் முழு தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இரயில் தொழிலாளர்களுக்கு ஆதரவு செய்திகளை அனுப்ப UAW இல் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் நான் அழைக்கிறேன். தொழிற்சங்க அமைப்பில் இருந்து சுயாதீனமாக ஒரு போராட்டத்தை ஒழுங்கமைக்க, சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை நிறுவுமாறு இரயில் தொழிலாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

நமது போராட்டங்களுக்கு அனைத்து தொழிலாளர்களின் ஆதரவு தேவைப்படுவது போல், இரயில் ஊழியர்களுக்கும் நமது ஆதரவு தேவை! ஒருவருக்கு ஏற்பட்ட காயம் அனைவருக்கும் ஒரு காயம்! அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் மட்டுமே, நமக்கும் நம் குடும்பங்களுக்கும் தேவையானதையும், பெறத்தகுதியானதையும் நாம் வெல்ல முடியும்.

உங்கள் ஆதரவுச் செய்தியை அனுப்ப அல்லது சாமானிய தொழிலாளர்களின் குழுவை அமைப்பதற்கு உதவி பெற willforuawpresident@gmail.com என்ற எனது பிரச்சாரத்திற்கு எழுதவும் அல்லது (267)225-6633 இற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

Loading