முன்னோக்கு

ஐக்கிய வாகனத் துறை தொழிலாளர்கள் சங்கத் தலைவராக வில் லெஹ்மனை ஆதரிப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை மதியம், பென்சில்வேனியாவின் மக்குங்கியின் மாக் டிரக்ஸ் ஆலையில் 34 வயதான வாகனத் துறைத் தொழிலாளரும் ஒரு சோசலிசவாதியுமான வில் லெஹ்மன், ஐக்கிய வாகனத் துறைத் தொழிலாளர்கள் (UAW) சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாளர்களுடன் சேர்ந்து, லெஹ்மனுக்கு UAW இல் உள்ள அனைத்து தொழிலாளர்களின் பரந்த ஆதரவு தேவைப்படுகிறது.

மிச்சிகன், டெட்ராய்டில் நடந்த UAW சங்கக் கூட்டத்தில், சங்க விதிமுறைகளின்படி அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட இரண்டு பிரதிநிதிகளால் லெஹ்மன் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் விளைவாக, 400,000 தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் 500,000 ஓய்வு பெற்ற தொழிற்சங்க உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி உள்ள தேர்தல்களில் இப்போது அவர் வாக்குச் சீட்டில் இடம் பெறுவார்.

இந்த செப்டம்பர்-நவம்பரில் தபால் வாக்குகள் மூலமாக நடத்தப்பட உள்ள இந்த தேர்தல்களில், லெஹ்மன் குற்ற வழக்கிற்கு உள்ளான முன்னாள் தலைவர் கேரி ஜோன்ஸின் செல்லப் பிள்ளையான தற்போதைய UAW சங்கத் தலைவர் Ray Curry; நீண்ட கால UAW சங்க அதிகாரத்துவவாதி Shawn Fein; ஒரு தேசியவாதியும் மற்றும் சோசலிச எதிர்ப்பாளருமான பிரைன் கெல்லர்; உள்ளூர் கிளை 163 தலைவர் மார்க் கிப்சன் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுவார்.

டெட்ராய்டில் உள்ளூர் கிளை 174 இன் ஒரு பிரதிநிதி லெஹ்மனைப் பரிந்துரைத்தார், அவர் முன்னாள் UAW நிர்வாகிகளை 'திருடர்கள்' என்று கண்டித்ததுடன், ஊழலை மூடிமறைத்ததற்காக இப்போதைய நிர்வாகக் குழுவையும் கண்டித்தார். சிகாகோவின் மற்றொரு பிரதிநிதி கூறுகையில், லெஹ்மனின் பிரச்சாரம் UAW அதிகாரத்திற்கு எதிராக இருப்பதால் அவரை வேட்பாளராக நிறுத்துவதாக தெரிவித்ததுடன், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தார்.

லெஹ்மனை வேட்பாளராக நியமிப்பதில் இருந்து பிரதிநிதிகளின் ஆர்வத்தைக் குலைக்க UAW சங்கத் தலைமை அவர்கள் மீது அளப்பரிய அழுத்தத்தைச் செலுத்தியது. அந்தச் சங்கக் கூட்டமே ஜனநாயக விரோதக் கேலிக் கூத்தாக இருந்தது, அதில் தலைவர்கள் வேலைநிறுத்தச் சம்பளத்தை அதிகரிப்பதற்கான முந்தைய வாக்கெடுப்பை இரத்து செய்வதற்காக, பெரும்பாலான பிரதிநிதிகள் டெட்ராய்டில் இருந்து வெளியேறும் வரையில் காத்திருந்தனர். வாகனத் துறைப் பெருநிறுவனங்களுடன் குற்றகரமாகக் கூட்டுச் சேர்ந்து அதன் தலைமை தோற்றுவித்திருந்த UAW இன் உள்நெருக்கடி எந்தளவுக்குப் பெரியதாக உள்ளது என்றால் இந்த சீர்குலைக்கப்பட்ட கூட்டத்திற்கான பிரதிநிதிகளே கூட பதவிகளைக் கடந்து வாக்கெடுப்பில் லெஹ்மனை நிலைநிறுத்த வாக்களித்தனர்.

அந்த சங்கக் கூட்டத்தில் லெஹ்மன் மற்றும் அவர் ஆதரவாளர்களின் தலையீடு, அவர் பிரச்சாரம் சாமானிய தொழிலாளர்களுக்காக பேசுகிறது என்பதைத் தெளிவுபடுத்தியது. பிரதிநிதிகளைச் சமாதானம் செய்யவும் மற்றும் அவரது பிரச்சாரம் சாமானியத் தொழிலாளர்களால் மட்டுமே ஆதரிக்கப்படுகிறது என்பதைக் காட்டவும் தொழிலாளர்களின் ஒரு குழுவை லெஹ்மன் அழைத்து வந்திருந்தார். அவர் வேட்பாளர் ஆவதற்கு முந்தைய நாள் ஸ்டெல்லன்டிஸ் வாரென் டிரக் ஆலையில் நடத்தப்பட்ட ஒரு பேரணியில், சாமானியத் தொழிலாளர்கள், வாக்குச் சீட்டில் லெஹ்மன் இடம் பெறுவதைப் பிரதிநிதிகள் அனுமதிக்குமாறு கோரியதுடன், தசாப்தங்களாக UAW காட்டிக்கொடுப்புகள் மீதான அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

UAW presidential candidate Will Lehman speaking to a worker at Warren Truck, July 25, 2022 [Photo: WSWS]

வேட்பாளராக நியமனமிக்கப்பட்ட பின்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் லெஹ்மன் கூறுகையில், அவர் பிரச்சாரம் 'ஒரு அதிகாரத்துவவாதியை மற்றொருவரைக் கொண்டு பிரதியீடு செய்ய நோக்கம் கொண்டதில்லை. நம்மை நாமே ஒழுங்கமைத்துக் கொள்ளாமல் நமக்கு என்ன தேவையோ அவற்றுக்காக போராட முடியாது,” என்றார். “அதிகாரத்தை அதற்குரிய இடத்தில் நிலைநிறுத்த, கடைநிலை வேலையிடத் தொழிலாளர்களுடன் சேர்ந்து, ஒவ்வொரு வேலையிடத்திலும், சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களை' அமைப்பது அவசியம் என்றவர் கூறினார்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் அனைத்து தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதற்கும், மற்றும் பெருநிறுவனங்களுக்கு எதிராக ஓர் உண்மையான போராட்டத்தை முன்னெடுப்பதற்குமான ஒரு போராட்டத்திற்கு, சாமானியத் தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சி தேவைப்படுகிறது என்பதையும் லெஹ்மன் சேர்த்துக் கொண்டார். “நம் போராட்டத்தை நசுக்குவதற்காக மட்டுமே இருக்கும் இந்த அதிகாரத்துவ எந்திரத்தைச் சீர்திருத்த முடியாது. அதைத் துடைத்தழிக்க வேண்டும்,” என்றார்.

லெஹ்மனின் பிரச்சாரம், பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான அந்த எந்திரத்தில் இருந்து உடைத்துக் கொள்ள தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் ஓர் இயக்கத்தைப் பிரதிபலிக்கிறது, இது UAW ஆதரவு ஒப்பந்தங்களைத் தொடர்ந்து பெருவாரியாகத் தொழிலாளர்கள் நிராகரித்ததில் இருந்தும், கடந்தாண்டு அந்த சங்கம் ஒடுக்குவதற்காக செயல்பட்ட சக்தி வாய்ந்த வேலைநிறுத்தங்களிலும் வெளிப்பட்டன. அதே நேரத்தில், இது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் இந்த சாமானிய தொழிலாளர் இயக்கத்தை அபிவிருத்தி செய்ய உதவும்.

UAW முன்னெப்போதையும் விட பலமாக உள்ளது என்றும், ஒவ்வொரு புதிய ஒப்பந்தமும் 'வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதாயங்களைக்' கொண்டுள்ளன என்றும் அந்தச் சங்கம் தொழிலாளர்களிடம் தொடர்ந்து நம்பமுடியாத பொய்யைக் கூறினாலும் கூட, லெஹ்மனின் பிரச்சாரம் அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் பாரிய வளர்ச்சியுடன் ஒத்திசைந்து ஆதாயமடையும் என்பதற்கு எல்லா அறிகுறிகளும் உள்ளன.

இந்த எந்திரத்திற்கு எதிராக சாமானியத் தொழிலாளர் கிளர்ச்சிக்கு அழைப்பு விடுப்பதுடன் சேர்ந்து, லெஹ்மனின் பிரச்சாரம் இரண்டு புள்ளிகளை வலியுறுத்துகிறது:

முதலாவதாக அது அனைத்து வகையான தேசியவாதத்தையும் எதிர்க்கிறது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. UAW சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் அறிக்கைகளில், கடந்த மே மாதம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட ஒரு முன்முயற்சியான சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) லெஹ்மன் அங்கீகரித்துள்ளார்.

இரண்டாவதாக, சமத்துவமின்மை மற்றும் வறுமைக்கு ஆதாரமாக விளங்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்துடன், முக்கிய பொருளாதார ஆதாயங்களுக்கான போராட்டத்தை இந்தப் பிரச்சாரம் இணைத்துள்ளது. இந்த சங்கக் கூட்டத்திற்கு முன்னர் UAW உறுப்பினர் ஆவதற்காக அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், லெஹ்மன் பின்வருமாறு எழுதினார், “நான் ஒரு சோசலிசவாதி. சமூகம் வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டு இருப்பதாக சோசலிசம் கருதுகிறது. இப்போது ஒரு வர்க்கப் போர் நடத்தப்பட்டு வருகிறது, ஆனால் ஒரு வர்க்கம் மட்டுமே சண்டையிட்டு கொண்டிருக்கிறது. சோசலிசம் என்றால் உலகின் உற்பத்தி சக்திகளைத் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தி, ஆதார வளங்களை ஒரு சில பில்லியனர்களை வளப்படுத்துவதற்காக அல்ல, மாறாக ஒட்டுமொத்த மனித இனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வினியோகிப்பதாகும்.”

அந்த அறிக்கை, இரண்டு முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்குத் தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதை வெளிப்படையாக தாக்கியது, அவை 'ஆளும் உயரடுக்கால் கட்டுப்படுத்த' படுகின்றன என்றவர் கூறினார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்:

உழைக்கும் மக்கள் எதுவும் குரல் எழுப்பாமல் இருக்கச் செய்யும் நோக்கில், UAW சங்கம் இந்த அரசியல் கட்டுப்பாட்டு வலையமைப்பின் பாகமாக உள்ளது. பல தசாப்தங்களாக, பள்ளிகள், பொதுக் கட்டமைப்பு அல்லது சமூகச் சேவைகளுக்கு 'பணம் இல்லை' என்று எங்களிடம் கூறி வந்த பின்னர், இந்த இரண்டு கட்சிகளும் —UAW ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும்— உக்ரேன் விவகாரத்தில், மனிதகுலத்தையே நிர்மூலமாக்கக் கூடிய, ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போரை விரிவாக்க 40 பில்லியன் டாலர் காண்கிறார்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

ஒரு வெளிப்படையான சோசலிச வேலைத்திட்டத்துடன் UAW தலைவர் பதவிக்கு உத்தியோகபூர்வ வேட்பாளராக ஒருவர் போட்டியிடுவது ஒரு வரலாற்று மைல்கல் என்பதோடு, இது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தில் ஒரு பாரிய புரட்சிகர இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான அளப்பரிய சாத்தியக்கூறின் ஒரு வெளிப்பாடாகும்.

தொழிற்சங்கங்களில் சோசலிசவாதிகள் இருப்பதற்கு எதிராக அமெரிக்காவில் போல வேறெந்த மேற்கத்திய ஜனநாயகத்திலும் இந்தளவுக்கு ஓர் ஈவிரக்கமற்ற போர் நடத்தப்பட்டதில்லை. ஸ்ராலினிஸ்டுகளின் அழுகிப் போன அரசியலைச் சாதகமாக்கி, 1940 களில் கம்யூனிச விரோத வேட்டையாடல்கள் தொடங்கிய போதிருந்து, தொழிற்சங்கங்களில் இருந்து சோசலிசம் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளது.

1955 இல் AFL-CIO இன் ஐக்கியம், தொழிலாளர்களின் போர்க்குணத்தை நிராகரிப்பதை, வக்கிரமான கம்யூனிச எதிர்ப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிய செய்வதை அடிப்படையாக கொண்டிருந்தது. இது 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும் தொழிற்சங்க எந்திரத்தைப் பெருநிறுவன நிர்வாகத்தின் நேரடி கருவிகளாக மாற்றுவதற்கான நிலைமைகளை உருவாக்கியது.

ஆனால் தொழிலாள வர்க்கம் மீண்டும் திருப்பிப் போராடத் தொடங்கி உள்ளது. UAW பிரச்சாரம் ஒரு தீவிர அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நடக்கிறது. விலைவாசிகள் அதிகரித்து வருகின்றன, மற்றும் நிஜமான அர்த்தத்தில் கூலிகள் சரிந்து வருகின்றன, அதே நேரத்தில் பெருந்தொற்றுக் கட்டுப்பாடு இல்லாமல் பரவிக் கொண்டிருக்கிறது. கூலிகளைக் குறைப்பதற்காக பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனிய அரசாங்கத்தை ஆயுதமயப்படுத்த அரசாங்கம் பில்லியன் கணக்கில் செலவழித்தாலும், ஒப்பந்தங்களைப் பணவீக்கத்தை விட குறைவாக வைக்க நிர்பந்திப்பதற்காக அரசாங்கம் தொழிற்சங்கங்களை நம்பி உள்ளது.

விளைவுகளைக் குறித்து ஆளும் வர்க்கம் பீதி அடைந்துள்ளது. ஜனநாயகக் கட்சிக்காக பேசும் நியூ யோர்க் டைம்ஸ், UAW சங்கக் கூட்டம் தொடர்பாக ஒரு கட்டுரை பிரசுரித்தது, அது லெஹ்மனைக் குறித்து போகும் போக்கில் குறிப்பிட்டுச் சென்றது. தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அனைவரும் 'அடுத்தாண்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் பணயத்தில் உள்ள பெரும்பாலான முக்கியப் பிரச்சினைகளில் உடன்படுகிறார்கள்' —ஓர் அப்பட்டமான பொய்— என்று கூறும் அளவுக்கு டைம்ஸ் சென்றது.

ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரத்தைச் சுற்றியுள்ள அமைப்புக்களைப் பொறுத்த வரையில், அவை லெஹ்மன் பிரச்சாரம் குறித்து முழுமையாக வாய்மூடி உள்ளன. அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அல்லது Labor Notes அமைப்பைச் சுற்றி அணி சேர்ந்துள்ள பல பிரதிநிதிகளில் யாருமே பகிரங்கமாக ஒரு சோசலிசவாதியாக போட்டியிடும் இந்த ஒரேயொரு வேட்பாளரைப் பெயரிட முன்னுக்கு வரவில்லை. இது ஏனென்றால் நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை பிரிவுக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த போலி-இடது அமைப்புகள், தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு பொலிஸ் படையாக சேவையாற்றும் ஓர் எந்திரத்திற்குள் பதவிகளைப் பெறுவதை நோக்கியே நோக்குநிலை கொண்டுள்ளன.

UAW சங்கத் தலைவர் பதவிக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரம், போலி இடதின் இனவாத அரசியலையும் அத்துடன் சேர்ந்து தொழிலாள வர்க்கத்திற்காக பேசும் ஓர் உத்தியோகப்பூர்வ வலதுசாரி சொல்லாடலையும் தகர்க்கிறது. பெருநிறுவன மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் ஒட்டுமொத்த கொள்கையை எதிர்க்க ஒரு வழியைத் தேடி, தொழிலாள வர்க்கம் இடதுக்கு நகர்ந்து வருகிறது. இந்தப் பிரச்சாரம், பெருநிறுவனம் சார்ந்த தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சிக்கும், தொழிலாள வர்க்கத்தில் ஓர் உண்மையான, இடதுசாரி, சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான மிகப் பெரும் சாத்தியக்கூறு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஆனால் இந்தப் பிரச்சாரத்தின் வெற்றி ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் செயலூக்கமான ஆதரவைச் சார்ந்துள்ளது. லெஹ்மன் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தொழிலாளர்களுக்கு அவர் கூறியதைப் போல, “நான் தனியொருவனாக இதைச் செய்ய முடியாது, நான் ஒரு மாயாஜால தொழிலாளி இல்லை. இந்தப் பிரச்சாரம் பெரிதும் என்னைப் பற்றியது இல்லை மாறாக உங்களைப் பற்றியது. நீங்கள் எந்தளவுக்கு ஈடுபடுகிறீர்களோ அந்தளவுக்கு இது வெற்றி பெறும், இந்தப் பிரச்சாரம் மூலம் நாம் போராடுவதற்கும் ஜெயிப்பதற்கும் முன்முயற்சி மற்றும் ஒழுங்கமைப்பை அபிவிருத்தி செய்வோம்,” என்றார்.

UAW சங்கத் தலைவர் பதவிக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்தை உலகச் சோசலிச வலைத் தளம் ஆமோதிக்கிறது. ஒவ்வொரு வேலையிடத்திலும் தேர்தல் குழுக்களை ஏற்படுத்துவதன் மூலம் அதை ஆதரிக்குமாறு நாங்கள் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் எல்லா தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். இந்த பிரச்சாரத்தை சாத்தியமான அளவுக்குப் பரவலாகத் தெரியப்படுத்துங்கள். இந்த விதத்தில் மட்டுந்தான் பெருநிறுவன சுரண்டல் மற்றும் இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாளர்களின் ஒரு சாமானிய தொழிலாளர் கிளர்ச்சிக்கு இந்தப் பிரச்சாரத்தை ஒரு தாக்குமுகப்பாக மாற்ற முடியும்.

வில் லெஹ்மனின் பிரச்சாரம் குறித்து கூடுதல் தகவல்களுக்கு, WillforUAWpresident.org தளத்தைப் பார்க்கவும்.

Loading