கொலம்பியாவின் ஜனாதிபதியாக குஸ்டாவோ பெட்ரோ பதவியேற்கையில் முதலாளித்துவத்தையும், இராணுவத்தையும், வலதுசாரிகளையும் புகழ்ந்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, போலி-இடது கூட்டணியான வரலாற்று ஒப்பந்தம் (Pacto Histórico) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குஸ்டாவோ பெட்ரோ, கொலம்பியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார். முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், கொலம்பியாவின் முதல் 'இடதுசாரி ஜனாதிபதியின்' பதவியேற்பு கொண்டாட்ட விழா பொகோட்டாவின் மையத்திற்கு கூட்டத்தை ஈர்த்தது.

ஆகஸ்ட் 7, 2022 அன்று, கொலம்பியாவின் பொகோட்டாவில் காங்கிரஸின் தலைவரான ராய் பாரெராஸ், குஸ்டாவோ பெட்ரோவின் மீது ஜனாதிபதி பட்டியை அணிகின்றார் (Credit: Nelson Cárdenas - Presidencia de Colombia)

கௌரவ விருந்தினர்களாக, கொலம்பிய வலதுசாரி அரசியல்வாதிகள், முக்கிய வர்த்தகர்கள் மற்றும் சர்வதேச முதலாளித்துவ அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்களில் பெட்ரோவால் தோற்கடிக்கப்பட்ட பாசிச வேட்பாளர் ரோடோல்போ ஹெர்னாண்டஸ், ஸ்பெயினின் மன்னர் ஆறாம் பிலிப் மற்றும் 'இடது' இலத்தீன் அமெரிக்க ஜனாதிபதிகளான சிலியின் காப்ரியல் போரிக், பொலிவியாவின் லூயிஸ் ஆர்ஸ் மற்றும் ஆர்ஜென்டினாவின் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஆகியோர் அடங்குவர்.

மோசமான அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொலம்பியாவின் ஜனாதிபதியாக பெட்ரோ பொறுப்பேற்றுள்ளார். பல தசாப்தங்களாக இரத்தம் தோய்ந்த அரசு வன்முறையால் அடையாளப்படுத்தப்பட்ட, வர்க்க உறவுகள் முதலாளித்துவ ஆட்சியின் தொடர்ச்சியை அச்சுறுத்தும் பதட்ட நிலையை அடைந்துள்ள உலகின் மிகவும் சமூக சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றின் தலைமையை அவர் எடுக்கிறார்.

வலதுசாரி ஜனாதிபதி இவான் டுக்கின் பதவிக்காலம் முழுவதும் தேசிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அலைக்கு வழிவகுத்த, கொலம்பியாவின் ஊழல்மிக்க அரசியல் அமைப்புமுறையின் பாரிய நிராகரிப்புக்கு பெட்ரோ ஒரு வேட்பாளராக பதிலளிக்க முயன்றார்.

பாக்டோ ஹிஸ்டோரிகோ 'அன்பின் அரசியல்' (“politics of love”) என்ற முழக்கத்தை உருவாக்கியபோது, சகிக்க முடியாத வன்முறை மற்றும் சிக்கனக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாக்குறுதியாக அவரின் வாக்காளர்கள் புரிந்துகொண்டனர். அல்வாரோ யூரிப் நிர்வாகத்தின் போது அரசால் கொல்லப்பட்ட 6,000க்கும் மேற்பட்ட குடிமக்கள் மற்றும் போரில் கொல்லப்பட்ட 'கெரில்லாக்கள்' என்று பொய்யாக முன்வைக்கப்பட்ட 'தவறான நேர்மறைகளை' (“false positives”) அவர்கள் நினைவு கூர்ந்தனர். டியூக்கின் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோரும் இராணுவத்தால் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆனால் பெட்ரோவின் 'அன்பு' உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் வெறுக்கப்படும் எதிரிகளான பழைய வலதுசாரி அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தின் மீது கணிசமான அளவில் செலுத்தப்படும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை அவரது பதவியேற்பு உரையும், அவரது அரசாங்கத்தை தொடங்குவதற்கான தயாரிப்புகளும், அவர் முன்னெடுக்கும் 'பெரிய தேசிய உடன்படிக்கையின்' அடிப்படையில் பிற்போக்குத்தனமான உள்ளடக்கத்தை தெளிவாக்குகிறது.

ஜூன் 19 அன்று வெற்றி பெற்றதில் இருந்து சில வாரங்களில், பெட்ரோ ரோடோல்போ ஹெர்னாண்டஸ் மற்றும் யூரிப் ஆகியோரை சந்திப்பதன் மூலம் கொலம்பிய ஆளும் உயரடுக்கிற்கு ஒரு முக்கியமான சமிக்ஞையை கொடுத்துள்ளார். யூரிப் உடனான சந்திப்பு பற்றி, போலி-இடது ஜனாதிபதி ட்விட்டரில் 'நாங்கள் வேறுபாடுகளையும் பொதுவான அடித்தளத்தையும் கண்டோம்' என்று அறிவித்தார். ஹெர்னாண்டஸின் கைகளை குலுக்கி ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டபோது 'நாங்கள் நிச்சயமாக ஒரு தேசிய உடன்படிக்கைக்கு செல்கிறோம்' என்று அறிவித்தார்.

கொலம்பிய மக்களால் பாரியளவில் நிராகரிக்கப்பட்ட வலதுசாரிக் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவுகளில் பங்கேற்க சந்தேகத்திற்கு இடமில்லாத உரிமையைப் பெற்றுள்ள அதே கொள்கையின்படி புதிய அமைச்சரவையும் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிதியமைச்சர் ஜோஸ் அன்டோனியோ ஒகாம்போ தொடங்கி முக்கிய பதவிகள் கொலம்பிய முதலாளித்துவத்திற்கு உடன்பாடான வேட்பாளர்கள் என்பதால் நியமிக்கப்பட்டனர்.

பெட்ரோவின் தொடக்க உரையில், சமூக சமத்துவமின்மை, அரச வன்முறை, சுற்றுச்சூழல் நெருக்கடி மற்றும் அரசியல் அமைப்பின் ஊழல் போன்ற கொலம்பிய மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு அவர் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் தீர்வுகள் முதலாளித்துவ அமைப்புக்கும் அதன் அரசுக்கும் எந்த சவாலையும் உள்ளடக்கியதாக இருக்கக்கூடாது என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

'கொலம்பிய மக்கள்தொகையில் 10 சதவிகிதத்தினர் 70 சதவிகித செல்வத்தை வைத்திருக்கிறார்கள்' என்ற உண்மையை 'முட்டாள்தனம் மற்றும் ஒழுக்கக்கேடான' என்று கண்டித்த பெட்ரோ, 'அனைவருக்கும் செல்வத்தை உருவாக்கும் திறன் இருந்தால் சமத்துவம் சாத்தியமாகும்' என்று வலியுறுத்தினார். அவரது முதலாளித்துவ புனைகதையில், 'செல்வ விநியோகம்' என்பது 'அதிர்ஷ்டசாலி ஒருவர் தனது அதிர்ஷ்டத்தை அனுமதிக்கும் மற்றும் உத்தரவாதம் அளிக்கும் ஒரு சமூகத்திற்கு செலுத்தும் ஒற்றுமைக்கான பணம்' என்று பொருள்படும் என்றார்.

'கொலம்பியாவில் முதலாளித்துவத்தை வளர்ப்பது' என்ற பணியை தனக்குத்தானே வரித்துக்கொண்ட பெட்ரோ, தனது 'முற்போக்கான' வாயடிப்பால் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நிரூபித்த ஒரு கட்டுக்கதையைக் கண்டறிந்தார். அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வத்திரட்சியானது முழு சமூகத்தினதும் பொருளாதார நிலைகளின் உயர்வுக்கு வழிவகுக்கிறது என்பதாகும்.

கார்ல் மார்க்ஸ் 150 ஆண்டுகளுக்கு முன்பு பின்வரும் முடிவிற்கு வந்தார். “ஒரு துருவத்தில் செல்வம் குவிவதானது, அதே நேரத்தில் மறு துருவத்தில் மூலதன வடிவில் உற்பத்தி செய்யும் வர்க்கத்திற்கு துன்பம், உழைப்பின் வேதனை, அடிமைத்தனம், அறியாமை, கொடூரம், மனச் சீரழிவுவை உருவாக்குகின்றது'.

முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றிய இந்த மிகச்சிறந்த உண்மை வரலாற்றில் எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் இன்று மிகவும் கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது. மிருகத்தனமான சமூக சமத்துவமின்மை என்பது பெட்ரோ குறிப்பிடுவது போல் கொலம்பிய 'விதிவிலக்கு' அல்ல. ஒரு கொடிய தொற்றுநோய்க்கு மத்தியில் 10 பணக்காரர்கள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கி, 160 மில்லியன் பேர் வறுமையில் தள்ளப்பட்ட உலகில், கொலம்பிய யதார்த்தம் பெருகிய முறையில் பொது விதியாக உள்ளது.

பெட்ரோவின் உரை பெருவணிகத்திற்கு ஒரு சமிக்ஞையாக பெருநிறுவன ஊடகங்களால் சந்தேகத்திற்கு இடமின்றி அடையாளம் காணப்பட்டது. ஞாயிறு தலையங்கத்தில், El Tiempo இதழானது முக்கியமாக “பறிமுதல் வரிகள் இல்லை என்ற வாக்குறுதியையும், ‘உழைத்து உற்பத்தி செய்வதன் மூலம்’ செல்வத்தை உருவாக்கும் சமூகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதையும் எடுத்துக்காட்டியது.

மேலும், இந்த வார தொடக்கத்தில் ஒகாம்போ இனால் உருவாக்கப்பட்ட மற்றும் பெட்ரோவினால் வழங்கப்பட்ட 'வரி சீர்திருத்தம்' அவரது பிரச்சார வாக்குறுதியான அவரது சீர்திருத்தம் பணக்கார 4,000 கொலம்பியர்களை மட்டுமே தாக்கும் என்பது முற்றிலும் தவறானது என்பதை உறுதிப்படுத்துகிறது. வரி அதிகரிப்பு மாதத்திற்கு 10 மில்லியன் பெசோவிலிருந்து (U$ 2,000 க்கு மேல்) சம்பாதிப்பவர்களை பாதிக்கும். அதாவது தொழிலாள வர்க்கம் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகள் மற்றும் உணவு மற்றும் எரிபொருள் போன்ற நுகர்வோர் பொருட்களை பாதிக்கும்.

பெட்ரோவின் முதலாளித்துவ-சார்பு வேலைத்திட்டத்தின் திவால்நிலை, முதலாளித்துவ தேசிய அரசின் வரம்புகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. சர்வதேச அரசியல் தொடர்பான அவரது அணுகுமுறையால் இது அப்பட்டமாக வெளிப்படுகிறது.

காலநிலை மாற்றம் என்பது ஒரு 'அவசர யதார்த்தம்' என்று கூறி, 'பொருளாதார ரீதியாக, சமூகரீதியாக மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலைத்திருக்ககூடிய ஒரு மாதிரியைக் கண்டறிய' உலகத்தைக் கோருகிறது என்றும், இந்த மாற்றத்தின் முகவராக சர்வதேச நிதி மூலதனத்தை பெட்ரோ சுட்டிக்காட்டுகிறார். 'காலநிலை நெருக்கடிக்கு எதிரான உறுதியான நடவடிக்கைக்கான கடனைப் பரிமாறிக் கொள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF) உதவினால், நாம் ஒரு வளமான புதிய பொருளாதாரத்தையும் மனிதகுலத்திற்கு ஒரு புதிய வாழ்க்கையையும் பெறுவோம்' என்று அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள தனது நண்பர்களை தவிர, பெட்ரோ பிரேசிலின் ஜெய்ர் போல்சனாரோ போன்ற பாசிச அரசியல்வாதிகள் உட்பட இலத்தீன் அமெரிக்கத் தலைவர்களுக்கு 'தடைகள், குழுக்கள் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளை விட்டுவிட்டு ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும்' என்று அழைப்புவிட்டார்.

கொலம்பியாவில் முதலாளித்துவ சுரண்டலின் அடித்தளத்தை பராமரிக்கும் பெட்ரோவின் திட்டம், தொழிலாள வர்க்கத்தின் வர்க்க எதிரிகளால் முன்வைக்கப்படும் பாரிய ஆபத்துக்களை எதிர்கொள்வதில் முழுமையாக நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் என்று கோருகிறது. அவரது பதவியேற்பு உரையின் மிகவும் மோசமான பத்திகளில் அவர் ஆயுதப்படைகளை நோக்கி ஆற்றியதும் ஒன்றாகும். அவர் அறிவித்தார்:

'இராணுவம், சமூகம் மற்றும் உற்பத்தி ஆகியவை ஒரு புதிய அழிக்கமுடியாத சமூக நெறிமுறையில் ஒன்றிணைக்க முடியும். ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், போர்க் கப்பல்கள், குண்டுவீசுவதற்கும் அல்லது சுடுவதற்கும் மட்டுமல்லாமல், கொலம்பிய மக்களுக்கான முதல் தடுப்பு சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கவும் உதவுகின்றன”.

இந்த குற்றவியல் சுயதிருப்தி, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆளும் வர்க்கத் தாக்குதலுக்கான பாதையைத் திறப்பதில் தெளிவான பாத்திரத்தைக் கொண்டுள்ளது. இலத்தீன் அமெரிக்க வரலாற்றில் இருந்து இதற்கு பல எடுத்துக்காட்டுகள் சான்றளிக்கின்றன. முதலாவதாக, 1973 இல் சிலியில் ஆட்சிக்கவிழ்ப்பு அதில் அடங்கும். பெட்ரோ மேலும் மேலும் இராணுவத்திற்கு தலைவணங்கும்போது, இரக்கமற்ற சர்வாதிகாரத்தை சுமத்துவதற்கும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வன்முறைமிக்க ஒரு அலையை கட்டவிழ்த்துவிடுவதற்கும் சிறந்த தருணத்திற்காக தளபதிகள் காத்திருக்கிறார்கள்.

கொலம்பிய ஜனாதிபதி பதவியில் பெட்ரோவின் முதல் நாட்கள் 'இடதுசாரி' ரோஜா வர்ண எழுச்சி அரசாங்கங்கள் என்று அழைக்கப்படுபவற்றின் அடிப்படையில் பிற்போக்குத்தனமான தன்மையை ஏற்கனவே உறுதிப்படுத்துகின்றன. 'சோசலிசத்திற்கான புதிய பாதையை' பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அவர்களின் வாக்குறுதிகள் பொருட்களின் விலைகளின் நெருக்கடியின் முன்னால் விரைவாக வாடிவிட்டன. அவற்றின் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தில் இந்த அரசாங்கங்கள் 'ரோஜா நிறத்தின்” சிறிய சாயலைக் கூட இழந்துள்ளன. சிலியில் உள்ள போரிக் முதல் பெருவில் பெட்ரோ காஸ்டிலோ வரை, முதலாளித்துவ தாக்குதல்களை செயல்படுத்தவும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அடக்குமுறையை அதிகரிக்கவும், அதிகாரத்தை கைப்பற்ற தயாராகும் பாசிச சக்திகளை வலுப்படுத்துவதற்குமான பணியை அவர்கள் எடுத்துள்ளனர்.

பெட்ரோவின் கீழ் 'கொலம்பியா மிகவும் நியாயமாகவும் அமைதியாகவும் இருக்கும்' என்று கூறிய அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் இணைந்த ஜாக்கோபின் போன்ற போலி-இடது அமைப்புகளின் இந்த அரசாங்கங்களுக்கான அர்ப்பணிப்பு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் அதன் புரட்சிகர தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI) கட்டியெழுப்பவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றது.