மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
புதனன்று நிகழ்ந்த மாட்டலன் ஆல்பிரைட்டின் மரணமானது, அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் மற்றும் பெருநிறுவன ஊடகங்களும், அவர் முதல் பெண் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலராக அவரது பங்கைப் மகிமைப்படுத்தினர் மற்றும் 1990 களிலும், இன்றும், மோசமான ஏகாதிபத்திய குற்றங்கள் சிலவற்றுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய அடையாளத்தை மூடிமறைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.
உக்ரேனில் நடக்கும் ரஷ்ய போர்க்குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய பிரச்சாரத்திற்கு அமெரிக்காவும் நேட்டோவும் தலைமை தாங்குகின்றன என்ற தற்போதைய கூற்றுக்களின் பின்னணியில், ஆல்பிரைட்டின் இரத்தக்களரியான சாதனைகளை கொண்டாடுவது கோரமான பாசாங்குத்தனத்தின் நிரூபணமாகும். உக்ரேனில் விளாடிமிர் புட்டின் இதுவரை எடுத்ததை விட மிகவும் கொடூரமான செயல்களுக்காக வாதிடுபவராகவும் வக்காலத்து வாங்குபவராகவும் ஆல்பிரைட் இருந்தவராவார்.
அவரது வாழ்க்கையின் மிக மோசமான நிகழ்வு 1996 இல் நிகழ்ந்ததாகக் கூறலாம், அந்த நேரத்தில் ‘60 நிமிடங்கள்’ என்ற CBS நிகழ்ச்சியில், ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்த நாட்டின் மீது சுமத்தப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளால் நிகழ்ந்த 500,000 ஈராக்கிய குழந்தைகளின் மரணம் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது, ஹிரோஷிமா நிகழ்வை விட ஈராக்கில் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனரே என்று பேட்டியாளர் லெஸ்லி ஸ்டால் கேட்டார். அதற்கு ‘இந்த விலை கொடுப்பு சரியானது’ என்று ஆல்பிரைட் பதிலளித்தார்.
பெருநிறுவன ஊடகங்களின் ஆல்பிரைட்டை போற்றும் இரங்கல்கள் எதுவும் இந்த கருத்தைப் பற்றியோ அல்லது இவ்வளவு பாரியளவிலான மரணத்தை விளைவித்த கொள்கையை அமல்படுத்தி ஊக்குவித்ததில் ஆல்பிரைட்டின் பங்கைப் பற்றியோ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவப் படைகளுக்கு எதிராக நடந்த அமெரிக்க ஆதரவு கொரில்லாப் போரின் போது, அமெரிக்காவுடனான கூட்டணியில் இருந்து 9/11 பயங்கரவாத தாக்குதல்களுக்காக அமெரிக்காவை குறிவைக்கும் நோக்கில், அவர்கள் மாறியதற்கான காரணமாக ஈராக்கிய குழந்தைகளின் இந்த பாரிய இறப்பு எண்ணிக்கை ஒசாமா பின்லேடன் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பலமுறை மேற்கோள் காட்டப்பட்டது. அமெரிக்கா இவ்வாறு அப்பாவிகளை படுகொலை செய்வது அல்கொய்தாவிற்கான சாக்குப்போக்காக அமைந்தது.
இந்த கருத்தானது, பெப்ரவரி 1998 இல் நிகழ்த்தப்பட்ட ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்கு ஆதரவு திரட்ட கிளின்டன் நிர்வாகம் கல்லூரி வளாகங்களில் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியபோது அதற்கான ஒரு அரசியல் மூடிமறைப்பாக மாறியது. அந்த நேரத்தில், வெளியுறவுத்துறைச் செயலர் ஆல்பிரைட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாண்டி பேர்கர் மற்றும் பாதுகாப்பு செயலர் வில்லியம் கோஹன் ஆகிய மூத்த வெளியுறவுக் கொள்கை அதிகாரிகள் மூவரும் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்திற்கு சென்றனர், அங்கு அவர்கள் ஒரு பெரிய மற்றும் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பார்வையாளர்களென அவர்கள் கருதிய கூட்டத்திற்கு முன் உரையாற்றினர்.
இருப்பினும், சில எதிர்ப்பாளர்கள் ஆல்பிரைட்டுக்கு சவால் விடுத்தனர். இந்தோனேசியாவில் சுஹார்டோ போன்ற சர்வாதிகாரிகளுக்கும் மற்றும் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய அடக்குமுறைக்கும் மற்றும் உலகளாவிய மனித உரிமைகளின் அக்கறையின் பேரில் சதாம் ஹுசைன் எதிர்க்கப்படுவதாக கூறப்படுவதற்கும் அமெரிக்கா ஆதரவளிப்பதை அவரால் எப்படி நியாயப்படுத்த முடியும் என்று அவரிடம் கேட்கப்பட்டது. இது, அமெரிக்க நட்பு நாடுகளின் குற்றங்களை மன்னிக்கும் அதேவேளையில், அமெரிக்க இலக்குகளை முன்னிலைப்படுத்தும் இரட்டை நிலைப்பாடு இல்லையா?
ஆல்பிரைட் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்க முயன்றார், பொதுவாக McCarthyite பாணியில், அவர்கள் ஏன் சதாம் ஹுசைனின் உரிமைகளில் அக்கறை காட்டுகின்றனர் என்று கேட்டார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தியதற்கு உற்சாகமாக பதிலளித்த கூட்டத்தால் அவர் கேலிக் கூச்சலுக்கு ஆளானார். அதுதான் அதிகாரிகளின் முதல் எழுத்துக்களைக் கொண்டு பெயரிடப்பட்ட ‘ABC’ சுற்றுப்பயணத்தின் முடிவாக இருந்தது. இந்த நிகழ்வு உலக சோசலிச வலைத் தளத்தால் (WSWS) வெளியிடப்பட்டது, ஆனால் ஊடகங்களில் வெளியான ஆல்பிரைட்டின் எந்த இரங்கல் செய்திகளிலும் அது மீண்டும் குறிப்பிடப்படவில்லை.
ஆல்பிரைட், 1991 ஆம் ஆண்டில் தொடங்கி ஜேர்மன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்தின் கீழ் துண்டாடப்பட்ட முன்னாள் யூகோஸ்லாவியாவில் அமெரிக்க கொள்கையுடன் மிக நெருக்கமாக அடையாளம் காணப்பட்டவர், அந்தச் சமயத்தில், பிரிந்து சென்ற ஸ்லோவேனியா மற்றும் குரோஷியா குடியரசுகளை ஜேர்மனி அங்கீகரித்தது, அதைத் தொடர்ந்து பொஸ்னியா பிரிவினையை ஜேர்மனியும் அமெரிக்காவும் அங்கீகரித்தன.
யூகோஸ்லாவியாவின் மிகப்பெரிய இனக்குழுவான சேர்பியர்கள், குறிப்பாக குரோஷியா மற்றும் பொஸ்னியாவில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினராக ஒரே இரவில் மாற்றப்பட்டனர். ஒவ்வொரு குடியரசிலும் உள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவவாதிகள் தங்களை விரைவாக தேசியவாத கிளர்ச்சித் தலைவர்களாக மாற்றிக்கொண்ட நிலையிலும், மேலும், இறுதியில், ‘இனச் சுத்திகரிப்புக்கான’ பாசிச ஆதரவாளர்களாக, ஒவ்வொரு குடியரசின் பெரும்பான்மையினரும் ‘தவறான’ இனப் பின்னணியில் உள்ளவர்களை ஒடுக்க அல்லது விரட்ட முற்படுகின்ற நிலையிலும், பதட்டங்கள் பெரிதும் அதிகரித்தன.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அப்போதைய அமெரிக்க தூதராக இருந்த ஆல்பிரைட், யூகோஸ்லாவியாவிற்குள் வெடித்த பல்வேறு உள்நாட்டுப் போர்களில் அமெரிக்காவும் ஐ.நா. வும் தலையிடுவதை தீவிரமாக ஆதரித்தார். அந்த பிராந்தியத்திற்கு அமெரிக்க இராணுவப் படைகள், குறிப்பாக விமானப் படைகள் அனுப்பப்பட வேண்டும் என கிளின்டன் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனில் உள்ள தனது சகாக்களை வலியுறுத்துவதில் ஆரம்பத்தில் அவர் தோல்வியடைந்தார்.
அப்போது கூட்டுப் பணியாளர்களின் தலைவராக இருந்த ஜெனரல் கொலின் பவலுடனான ஒரு மோசமான மோதலில், “எங்களால் அதைப் பயன்படுத்த முடியாவிட்டால், நீங்கள் எப்போதும் பேசும் இந்த அற்புதமான இராணுவத்தை வைத்திருப்பதில் என்ன பயன்?” என்று அவர் கேட்டார்.
இறுதியில், அமெரிக்கா, வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்தல் இரண்டிலும் தலையிட்டது, மேலும், யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிச் உம் மற்றும் பொஸ்னிய சேர்பியர்களின் தலைவர்களும், ஐ.நா. அமைதி காக்கும் படையின் மேற்பார்வையின் கீழ் பொஸ்னியாவை முஸ்லீம்கள், குரோஷியர்கள் மற்றும் சேர்பியர்கள் ஆதிக்கம் செலுத்தும் மண்டலங்களாக பிரிக்கும் முத்தரப்பு பிரிவினையை வகுத்த Dayton உடன்படிக்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது.
1997 இல், கிளின்டன் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் ஆல்பிரைட்டை வெளியுறவுத்துறைச் செயலராக நியமித்தார். அது, செனட்டில் ஜெஸ்ஸி ஹெல்ம்ஸ் மற்றும் ஸ்ட்ரோம் தர்மண்ட் மற்றும் பரம இராணுவவாதியான ஜோன் மெக்கெய்ன் போன்ற பிற்போக்குவாதிகளை உள்ளடக்கிய ஒருமித்த இருகட்சி வாக்கெடுப்பில் 99-0 வாக்குகள் மூலம் அவரது வலதுசாரி மற்றும் இராணுவவாத சாதனை உறுதிப்படுத்தப்பட்டது.
ஆல்பிரைட்டின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக நேட்டோவின் விரிவாக்கம் இருந்தது, இது போலந்து, ஹங்கேரி மற்றும் ஆல்பிரைட்டின் பிறப்பிடமான செக் குடியரசு ஆகிய முன்னாள் சோவியத் கூட்டு அங்கத்துவ நாடுகளை 1999 இல் அனுமதித்தது. இது, முன்னாள் வார்சோ உடன்படிக்கையின் எல்லைக்குள் நேட்டோ விரிவடையாது என சோவியத் ஒன்றிய கலைப்பின் போது மிக்கைல் கோர்பச்சேவுக்கு வாஷிங்டன் வழங்கிய பொறுப்பேற்புக்களின் ஒரு வெட்கக்கேடான நிராகரிப்பாகும்.
1999 இல் கொசோவோவில் அல்பானியர்களுக்கும் சேர்பியர்களுக்கும் இடையிலான மோதல்களால் ஒரு புதிய நெருக்கடி வெடித்தபோது, ஆல்பிரைட் இராணுவத் தலையீட்டிற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தமை, இனக்கலவரத்தை மிலோசெவிக் நடத்திய ஒரு இனப்படுகொலையாக சித்தரித்தது, அது ஒரு பெரும் மிகைப்படுத்தலாக மாறியது. பிரான்சில் உள்ள Chateau of Rambouillet இல் நடைபெற்ற மாநாட்டின் போது, அவர் அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சு தாக்குதலுக்கான அச்சுறுத்தல் விடுத்து சேர்பிய தூதுக்குழுவைத் தாக்கினார், அதேவேளை 30,000 நேட்டோ துருப்புக்கள் யூகோஸ்லாவியாவில் எஞ்சியிருக்கும் பகுதியில் எங்கும் செல்வதற்கான உரிமையை ஏற்றுக்கொள்வதை உள்ளடக்கிய இறுதி எச்சரிக்கையை முன்வைத்தமை, அடிப்படையில் அந்நாட்டை ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாற்றியது.
சேர்பியர்களும் ரஷ்யர்களும் வெளிநடப்பு செய்தபோது, அல்பானிய பிரதிநிதிகளை —கொசோவோ விடுதலை இராணுவத்தில் இருந்து பெறப்பட்ட, போதைப்பொருள் மற்றும் உறுப்பு கடத்தலுடன் தொடர்புடைய ஒரு கும்பலை— சர்வதேச ஆதரவிற்கு தகுதியான சுதந்திரப் போராளிகள் என ஆல்பிரைட் அறிவித்தார். சில நாட்களுக்குள், ஒரு தீவிர குண்டுவீச்சு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டு 78 நாட்கள் நீடித்து, அது ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தது.
யூகோஸ்லாவியாவின் முக்கிய நகரங்களில், குறிப்பாக தலைநகர் பெல்கிராட்டில் ஏற்பட்ட சேதத்தின் அளவானது 30 பில்லியன் டாலருக்கு அதிகம் என பின்னர் மதிப்பிடப்பட்டது, இதில் 20,000 க்கும் மேற்பட்ட வீடுகள், பல அரசு கட்டிடங்கள், டஜன் கணக்கான மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார வசதிகள், மற்றும் நாட்டின் பெரும்பாலான அடிப்படைக் கட்டமைப்புகளான சாலைகள், பாலங்கள், நீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் வசதிகள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவையும் அடங்கும்.
அமெரிக்கா மற்றும் நேட்டோ இரண்டும் அவற்றின் காட்டுமிராண்டித்தனத்திலும், மற்றும் சர்வதேச சட்டத்தை கேவலமாக மீறுவதிலும் குறைந்தவை அல்ல என்ற நிலையில், சேர்பியா மீதான அமெரிக்க-நேட்டோ தாக்குதலானது, உக்ரேன் மீதான புட்டினின் பிற்போக்குத்தனமான தாக்குதல், இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து ஐரோப்பாவில் நடைமுறையில் இருக்கும் சர்வதேச விதிமுறைகளை முன்னோடியில்லாத வகையில் மீறுவதாகும் என்ற இன்றைய கூற்றுக்களை கேலிக்கூத்தாக்குகிறது.
ஏகாதிபத்திய சக்திகள் ஒரு இறையாண்மை மிக்க யூகோஸ்லாவியாவை துண்டாக்கி, சேர்பியாவின் நீண்ட பகுதியான கொசோவோவின் சுதந்திரத்தை அங்கீகரித்து அதன் எல்லைகளை மீட்டெடுத்தன, மேலும் நூறாயிரக்கணக்கான சேர்பியர்கள், முதலில் குரோஷியாவில் இருந்து, பின்னர் பொஸ்னியாவில் இருந்து, அதன் பின்னர் கொசோவோவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு ஒப்புதல் அளித்தனர். ஒரு பெரிய ஐரோப்பிய நகரத்தின் மீதான தூண்டப்படாத இராணுவத் தாக்குதல் 2022 இல் கியேவில் இருந்து தொடங்கவில்லை, மாறாக 1999 இல் பெல்கிராட்டில் தொடங்கியது (உக்ரேனியப் படைகள் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள் மீது குண்டுவீசி தாக்கிய காலமான, 2014 இல் டொனெட்ஸ்கில் இது தொடரப்பட்டது.)
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த ‘பெண்ணிய சின்னம்’ தொடர்புபட்டுள்ள ஒவ்வொரு குற்றத்தையும் ஆராய்வதற்கு போதுமான இடமும் நேரமும் இல்லை. அவர் எகிப்தின் ஹோஸ்னி முபாரக் மற்றும் இந்தோனேசியாவின் சுஹார்டோ போன்ற அமெரிக்காவுடன் இணைந்த இரத்தக்கறை படிந்த சர்வாதிகாரிகளின் பிடிவாதமான பாதுகாவலராக இருந்தார். ஐ.நா. தூதராக இருந்தபோது, ருவாண்டாவில் இனப்படுகொலையை நிறுத்துவதற்கான வெளியில் இருந்து எந்த தலையீட்டையும் எதிர்க்க அவர் அமெரிக்க வீட்டோவை பயன்படுத்தினார். வெளியுறவுத்துறைச் செயலராக, அமெரிக்கா “இன்றியமையாத தேசமாக” அனைத்து முக்கிய உலகளாவிய நிறுவனங்களின் மைய புள்ளியாக இருக்க வேண்டும் என்று விவரித்து, அவர் உலக அளவிலான அமெரிக்க மேலாதிக்கத்தை ஆதரித்தார்.
ஆல்பிரைட், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட இரு கட்சி வெளியுறவுக் கொள்கை உயரடுக்கின் விளைபொருளாக இருந்தார். அவரது தந்தை, ஸ்ராலினிச கையகப்படுத்துதலை தொடர்ந்து செக்கோஸ்லோவாக்கியாவை விட்டு வெளியேறியதன் பின்னர், டென்வர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பற்றி கற்பித்தார், அங்கு அவரிடம் பயின்ற பட்டதாரி மாணவர்களில் ஒருவரான கொண்டலீசா ரைஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார், பின்னர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் ஆட்சியில் வெளியுறவுத்துறைச் செயலராக இருந்தார், மேலும், ஈராக் போரின் முக்கிய கட்டமைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.
மாட்டலன் ஆல்பிரைட், வெல்லெஸ்லி மற்றும் பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகங்களில் படித்தார், அங்கு அவர் 1976 இல் செபிக்னியேவ் பிரெஸென்ஸ்கி (Zbigniew Brzezinski) இன் வழிநடத்துதலின் கீழ் தனது Ph.D. படிப்பை முடித்தார். பிரெஸென்ஸ்கி 1977 ஆம் ஆண்டு ஜிம்மி கார்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான போது, அவர் தன்னுடன் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆல்பிரைட்டை அழைத்து வந்தார், அங்கு அவர் காங்கிரஸூடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருந்தார்.
மில்லியனர் ஜோசப் ஆல்பிரைட்டை மணந்ததன் மூலம் அவர் சுதந்திரமான பணக்காரி ஆனார், அவர் ஜனநாயகக் கட்சியின் முன்னணி நிதி சேகரிப்பாளராக ஆனார், மற்றும் ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுக் கொள்கை வட்டங்களில் முன்னேறினார், காட்டருக்கு ஆலோசனை வழங்கினார், பின்னர், 1984 இல் வால்டர் மொண்டேல், 1988 இல் மைக்கல் டுகாகிஸ், மற்றும் 1992 இல் பில் கிளின்டன் ஆகிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அவரை 1993 இல் ஐ.நா. தூதராக நியமித்ததும் 1997ல் வெளியுறவு செயலராக நியமித்ததும் கிளிண்டன்தான்.
2001 ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதன் பின்னர், அவர் வெளிநாடுகள் தொடர்புபட்ட இடர் மதிப்பீட்டில் நிபுணத்துவம் பெற்ற மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆல்பிரைட் ஸ்டோன்பிரிட்ஜ் குழுவை (Albright Stonebridge Group) உருவாக்கினார், மற்றும் எதிர்கால ஜனநாயக நிர்வாகத்திற்கான வெளியுறவுக் கொள்கையின் தேவைகளுக்கு அவர் தாய்த் தெய்வமாக மாறிப் போனார். கட்டுரையாளர் டேவிட் இக்னேஷியஸ் வியாழனன்று கூறியபடி, “ஆல்பிரைட்டின் பாதுகாவலர்கள் நம்மைச் சூழ்ந்துள்ளனர். அவருடன் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணிபுரியும் வெண்டி ஷெர்மன் துணைச் செயலராக உள்ளார், மேலும் பைடென் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரையும் ஆல்பிரைட்டின் பரம்பரையை சேர்ந்தவர்களாகக் காண முடியும்.”
இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், ஆல்பிரைட் 2001 இல் தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (National Democratic Institute -NDI) தலைமை பொறுப்புக்கு வந்து, இறக்கும் வரை அவர் அந்த பதவியில் நீடித்தார். NDI என்பது முதலாளித்துவ அரசின் ஒரு அங்கமாகும், அது ஏகாதிபத்திய சார்பு அரசியல் சக்திகளை மேம்படுத்தவும் மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் அமெரிக்க பெருநிறுவன நலன்களை அச்சுறுத்தும் எந்தவொரு தீவிரமான அல்லது எதிர்க் கட்சி வாத போக்கைத் தகர்க்கவும் சிஐஏ ஆல் நிதி வழங்கப்பட்டது.
அந்த வகையில், 21 ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில், ஆப்கானிஸ்தான் முதல் ஈராக், உக்ரேன் வரையிலான அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஒவ்வொரு குற்றத்திலும் ஆல்பிரைட் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பெருநிறுவன ஊடகங்களாலும், மற்றும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளாலும் அவரது வாழ்க்கையும் பணியும் கொண்டாடப்படுவதானது, அது எவ்வளவு ஜனநாயக விரோத மற்றும் இரத்தக்களரியாக இருந்தாலும், அமெரிக்க நிதியப் பிரபுத்துவத்தின் இலாபங்களையும் மற்றும் அதன் உலகளாவிய நலன்களையும் பாதுகாப்பதை பொறுத்தவரை என்ன நடந்தாலும் அது குறித்து இரு கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இருக்கும் என்பதற்கு இது ஒரு நிரூபணமாகும்.
