முன்னோக்கு

அமெரிக்க தொழிற்சங்கங்களும், அவற்றை இயக்கும் ஒட்டுண்ணிகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை அதிகரித்தளவில் பெருநிறுவன முதலாளிமார்களின் கட்டுப்பாடற்ற தீவிரச் சுரண்டலால் வரையறுக்கப்படுகிறது, இவர்களின் இலாபங்கள் அதிகரிக்கின்ற அதேவேளையில் கூலிகள் வீழ்ச்சி அடைந்து வருவதுடன், பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் குடும்பங்கள் போராடுகின்றன. 2021 இல் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் கூலி, உத்தியோகபூர்வமாக 9 சதவீதத்தில் உள்ள பணவீக்க விகிதம் மற்றும் தொழிற்சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களின் 5.3 சதவீதக் கூலி உயர்வு ஆகிய இரண்டையும் விட மிகவும் குறைவாக 3.3 சதவீதமே அதிகரித்தது.

ஆரம்ப கால கட்டத்தில், வேலையிடச் சுரண்டலின் அளவு தொழிற்சங்கங்களால் மட்டுப்படுத்தப்பட்ட விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நடத்திய சக்தி வாய்ந்த கடுமையான வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை ஒரு பாதுகாப்பு அமைப்புகளாகக் கட்டமைத்து இருந்தார்கள். இன்றோ, அரசு-சாரா தொழில்துறையில் பணி புரிபவர்களில் வெறும் 6 சதவீதத்தினரை மட்டுமே தொழிற்சங்கங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றன. தொழிற்சங்கங்கள் இருக்கும் இடத்தில் கூட, வேலையிலோ அல்லது பெரியளவில் சமூகத்திலோ தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுரண்டல் மட்டத்தின் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

'தொழிலாளர்களின் நிதிக் கோட்டை' என்று Radish Research அமைப்பு வெளியிட்ட ஒரு புதிய அறிக்கை, தொழிற்சங்க நிதிகளைப் பற்றிய தரவுகளைத் திரட்டியது, அது இன்று தொழிற்சங்கங்களின் தொழிலாள வர்க்க விரோதத் தன்மை மற்றும் அவை நிர்வாகத்தில் வைத்திருக்கும் பத்து நூற்றுக் கணக்கான நிர்வாகிகள் வகிக்கும் ஒட்டுண்ணித்தனமான பாத்திரம் இரண்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் அமைப்புகள் இல்லை என்பதை அந்தத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. அவை, அதிகாரத்துவவாதிகளை செழிப்பாக்கத் தொழிலாளர்களிடம் இருந்து சந்தா தொகையாக பில்லியன் கணக்கான டாலர்களைக் கொள்ளை அடிக்கும் அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன, அவர்கள் அமெரிக்க சமூகத்தின் மிகப் பெரிய 10 சதவீதச் செல்வந்தர்களாக வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். வர்க்கப் போராட்டத்தை நசுக்கும் அவர்கள், ஜனநாயகக் கட்சி மற்றும் ஏகாதிபத்திய அரசின் ஒரு முக்கிய பாகமாக இருக்கிறார்கள்.

தொழிற்சங்கங்களின் சொத்துக்கள், வருமானம், செலவுகள் மற்றும் உறுப்பினர் எண்ணிக்கை [Photo: Radish Research]

14,000 தொழிற்சங்கங்களின் கூட்டாட்சி தாக்கல் செய்துள்ள தகவல்படி, அமெரிக்கத் தொழிற்சங்கங்களிடம் 2020 இல் 35.8 பில்லியன் டாலர் சொத்துக்கள் இருந்தன, இது இந்தப் புவியில் உள்ள பாதிக்கும் அதிகமான நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட அதிகமாகும். 2020 இல் மட்டும், நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் கோவிட்-19 ஆல் இறந்து கொண்டிருந்த போது, தொழிற்சங்கங்கள் அவற்றின் செயல்பாட்டுச் செலவுகள் போக 2.7 பில்லியன் டாலரை அவற்றின் சொத்துக்களில் அதிகரித்தன, இது ஏறக்குறைய Air BnB இன் 2020 ஆண்டு இலாபத்திற்குச் சமம்.

தொழிற்சங்கங்களின் வருவாயில் எண்பத்தைந்து சதவீதம் சந்தா தொகையில் இருந்து வருகிறது (2020 இல் மட்டும் 15.5 பில்லியன் டாலர் ஆகும்), இந்த தொகை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தினருக்குப் பாரியளவில் செல்வம் கைமாற்றப்பட்டதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இது தவிர, தொழிற்சங்கங்கள் முதலீடுகளில் இருந்து வரும் வட்டி (2020 இல் 509 மில்லியன் டாலர்), வாடகை (262 மில்லியன் டாலர்), மற்றும் பங்குவீத உரிமைகள் மற்றும் மானியங்கள் (2 பில்லியன் டாலர்) உட்பட இன்னும் பல ஒட்டுண்ணித்தனமான செயல்பாடுகள் மூலமும் மிகப் பெரும் தொகைகளைச் சம்பாதிக்கின்றன.

அமெரிக்க தொழிற்சங்கங்களின் மொத்த வருமானக் கணக்கு [Photo: Radish Research]

2020 சொத்து அதிகரிப்பு 'ஒரேயொரு தனித்த நிகழ்வு அல்ல, மாறாக ஒரு நிலையான நீண்ட கால வடிவம்' என்று அந்த அறிக்கை விளக்குகிறது. '2010 இல் இருந்து, ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பு பெரும் உபரிகளை உருவாக்கி உள்ளது, கடந்த பதினொரு ஆண்டுகளில் 18.5 பில்லியன் டாலர் அல்லது ஆண்டுக்குச் சராசரியாக 1.7 பில்லியன் டாலர் நிகரத் தொகையாக ஈட்டியுள்ளது.' 2010 இல் இருந்து 2020 வரை, தொழிற்சங்கங்கள் 465,000 உறுப்பினர்களை இழந்தன, அதேவேளையில் மொத்த வருவாயோ 14.3 பில்லியன் டாலரில் இருந்து 18.3 பில்லியன் டாலராக 28 சதவீதம் உயர்ந்தது. அந்த அறிக்கை குறிப்பிடுகிறது, 'இந்த வருவாய் அதிகரிப்பு, 2010 இல் ஓர் உறுப்பினருக்கு 818 டாலராக இருந்த சந்தா தொகை 2020 இல் 1,091 டாலராக உயர்த்தப்பட்ட, உறுப்பினர்கள் ஒவ்வொருவரினது அதிக உறுப்பினர் சந்தா மூலமாக வந்ததில்லை. இதற்கு கூடுதலாக, கணிசமான முதலீடு அதிகரிப்புகள் (+46%), வாடகை (+47%) மற்றும் இதர வருமானமும் (+24%) ஒட்டுமொத்தமாக இந்த வருவாய் அதிகரிப்புகளில் பங்களிப்பு செய்தன.”

தொழிற்சங்கங்கள் பத்து பில்லியன் கணக்கான டாலர்களை, அவை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிலாளர்களின் நிலைமைக்களை மேம்படுத்துவதற்காகச் செலவிடுவதில்லை, மாறாக தொழிலாளர்கள் ஒருபோதும் கண்ணால் பார்த்திராத அல்லது காதால் கேட்டிராத நிர்வாகிகளின் ஓர் எந்திரத்திற்காகச் செலவிடுகின்றன. தொழிற்சங்கங்கள் பத்தாயிரக் கணக்கான தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான கூலிகள் மற்றும் சலுகைக்களுக்காக மிக அதிகளவில், 2020 இல் 15.6 பில்லியன் டாலர் செலவிட்டன. இதில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த நிர்வாகிகள் ஜனநாயகக் கட்சி செயல்பாட்டாளர்களாக இருந்தார்கள், ஜனநாயகக் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதை வேலையாகக் கொண்ட இவர்களுக்கு குறிப்பாக சுயவிருப்பமின்றித் தொழிலாள வர்க்கம் நன்கொடை வழங்கச் செய்யப்படுகிறது.

'2010 இல் இருந்து [தொழிற்சங்க செயல்பாட்டாளர்களின்] சராசரி வருடாந்திர ஊதியம் 37% அதிகரித்தது' என்றும், 'நிர்வாக இடங்கள் 7,360 இல் இருந்து 9,390 ஊழியர்களாக 28% அதிகரிக்கப்பட்டன' என்றும் அந்த அறிக்கை விளக்குகிறது.

2020 புள்ளிவிபரங்களின்படி, “10,000 க்கும் அதிகமான நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மொத்தம் 125,000 டாலருக்கும் அதிகமான தொகையைச் சம்பளமாகப் பெற்றனர், இது அவர்களை (தொழிற்சங்கங்கள் வழக்கமாக வழங்கும் பொது மருத்துவம், ஓய்வூதியம் மற்றும் இதரச் சலுகைகள் இல்லாமல்) அமெரிக்காவின் உயர்மட்ட பத்து சதவீத வருவாய் பிரிவில் நிறுத்தியது.

மத்திய உளவுத்துறை முகமையின் முன்னணி அமைப்பான AFL-CIO இன் ஒற்றுமை மையத்தில் (AFL-CIO’s Solidarity Center) இந்த நூற்றுக்கணக்கான தொழிற்சங்க ஊழியர்கள் சம்பளத்திற்கு வேலைச் செய்தனர், இந்த மையம் தேர்தல் தலையீடுகள், தவறான தகவல்களைப் பரப்புதல் மற்றும் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதன் மூலம் உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவு கொள்கையின் நலன்களை முன்னெடுக்கிறது.

ஒப்பீட்டளவில், வேலைநிறுத்தச் சம்பளத் தொகைக்காக தொழிற்சங்கங்கள் ஒன்றுமே செலவிடுவதில்லை எனும் அளவுக்கு உள்ளது, 2010 இல் இருந்து சராசரியாக ஆண்டுக்கு வெறும் 70 மில்லியன் டாலர் அல்லது ஆண்டுக்கு வருவாயில் ஒரு சதவீதத்தில் ஒரு பாதிக்கும் குறைவாகச் செலவிடப்பட்டுள்ளன. நிர்வாகிகளைப் பொறுத்த வரையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் சக்தியை அதிகரிக்கச் செலவிடப்படும் ஒரு டாலரும் அவர்களின் சொந்தச் சம்பளத்தில் இருந்து வழங்கப்படும் ஒரு டாலராக உள்ளது. தொழிற்சங்க நிர்வாகிகளின் நலன்கள் தொழிலாளர்களின் நலன்களுக்கு இணங்க இல்லை மாறாக அவற்றுக்கு நேரெதிராக உள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்துவதுடன், நிறுவனங்களுக்குச் சாதகமான ஷரத்துக்களை ஏற்குமாறு அவர்களை நிர்பந்திக்கின்றன.

வேலைநிறுத்தம் ஊதியம் vs தொழிற்சங்க செல்வம் ஆண்டுக்கு [Photo: Radish Research]

குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் புள்ளிவிபரங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் சொத்துக்களைப் பெருமளவில் குறைத்துக் காட்டுகின்றன. AFL-CIO இன் பாதி உறுப்பினர்களை உள்ளடக்கிய அரசுத் துறைப் பணியாளர்களைக் கொண்ட தொழிற்சங்களை இந்த அறிக்கை உள்ளடக்கி இல்லை, ஏனென்றால் அத்தகைய தொழிற்சங்கங்கள் அவற்றின் சொத்துக்கள், வருவாய் மற்றும் செலவுகள் பற்றி கூட்டாட்சிக்கு அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த அறிக்கை தனிநபர் சொத்து மதிப்புகள் மற்றும் ஓய்வூதிய நிதிகளின் மதிப்பையும் உள்ளடக்கி இருக்கவில்லை, இவற்றின் மதிப்பு 7 ட்ரில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது.

இந்தப் போக்குகளை மாற்றியமைக்க எதுவும் செய்யாவிட்டால், தொழிற்சங்கங்கள் மற்றொரு 800,000 உறுப்பினர்களை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும் கூட, தொழிற்சங்கங்களின் சொத்துக்கள் 35.8 பில்லியன் டாலரில் இருந்து 2030 இல் 75.6 பில்லியன் டாலராக உயரும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், பத்தாயிரக் கணக்கான தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களைத் தாங்களே செழிப்பாக்கிக் கொள்ள வரவிருக்கும் ஆண்டுகளில் தொழிலாளர்களின் சந்தா பணத்தில் இருந்து இன்னும் பல பத்து பில்லியன் டாலரைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உள்ள பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைச் சவால் விடுக்க, தொழிலாள வர்க்கம் அதன் மீது தொழிற்சங்கங்கள் திணித்துள்ள இரும்புப் பிடியை உடைத்து, அதன் மிகப் பெரிய சாத்தியமான பொருளாதார சக்தியை அணித்திரட்ட வேண்டும், அணித்திரட்ட முடியும்.

ஐக்கிய வாகனத் துறைத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்குப் பென்சில்வேனியா மாக் ட்ரக்ஸ் ஆலைத் தொழிலாளி வில் லெஹ்மனின் பிரச்சாரம் இந்தப் போராட்டத்தில் ஒரு முக்கிய படியாகும்.

ஐக்கிய வாகனத் துறைச் சங்கத் தலைமையில் (UAW) உள்ள பெரும்பாலானவர்கள், வாகனத் துறைத் தொழிலாளர்களை விற்றுத் தள்ளியதற்கு பிரதியீடாக பெருநிறுவன இலஞ்சங்களை பெற்றதற்காகத் தண்டிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த ஊழல், AFL-CIO மற்றும் பெருநிறுவன நிர்வாகத்திற்கு இடையிலான இந்த உறவின் மிகவும் வெட்கக்கேடான வெளிப்பாடு மட்டுந்தான், ஏனைய தொழில்துறையில் உள்ள அவர்களின் சகாக்களைப் போலவே, வாகனத் துறைத் தொழிலாளர்களும் தசாப்தங்களாக நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் மேற்பார்வையிட்ட கூலிகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தக் காரணத்தினால் தான், கடந்த மாதம் UAW கூட்டத்தில் அவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து லெஹ்மன் வெளியிட்ட ஓர் அறிக்கையில், அவரது பிரச்சாரம் 'இந்த ஒட்டுமொத்த பெருநிறுவன சார்பு UAW எந்திரத்திற்கு எதிராகச் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமைப்பதை' நோக்கமாகக் கொண்டுள்ளது என்று விளக்கினார்.

UAW சொத்துக்களை அந்த எந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி, தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கான அவரது கோரிக்கைக்கு லெஹ்மன் ஆதரவை வென்றுள்ளார், இவ்விதத்தில் அதை அதிகாரத்துவத்தைச் செழிப்பாக்குவதற்காக அல்ல மாறாக பெருநிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பலப்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும்.

இதன் அர்த்தம் ஓர் அதிகாரத்துவவாதியை மற்றொரு அதிகாரத்துவவாதியைக் கொண்டு பிரதியீடு செய்வதல்ல, மாறாக 'பெருநிறுவனங்களும் UAW அதிகாரத்துவவாதிகளும் எது சாத்தியம் என்று கூறுகிறார்களோ அதற்காகப் போராட அல்ல, நம் தேவைக்காகச் சண்டையிட' சர்வதேச அளவிலும் எல்லா தொழில்துறையிலும் தொழிலாளர்களின் ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டமைப்பதாகும். அத்தகைய ஒரு போராட்டத்தை, சகவாழ்வு சபையில் (Solidarity House) ஆறு இலக்கச் சம்பளங்கள் பெறும் இந்தப் பெருநிறுவன ஒட்டுவார் ஒட்டிகளால் நடத்த முடியாது, நடத்தவும் மாட்டார்கள். நம் போராட்டங்களை நசுக்குவதற்காக மட்டுமே இருக்கும் இந்த அதிகாரத்துவ எந்திரத்தைச் சீர்திருத்த முடியாது. அதை இல்லாது ஒழிக்க வேண்டும்.”

தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கையிலெடுக்கும் போது, தங்களின் வேலைகள் மற்றும் சம்பளங்களை இழக்க இருப்பவர்களிடம் இருந்து அந்த எந்திரத்திற்கு உள்ளே லெஹ்மனின் பிரச்சாரம் கடுமையான எதிர்ப்பை முகங்கொடுக்கும். இதனால் தான், அந்தக் கூட்டத்தில் அமெரிக்க ஜனநாயகச் சோசலிஸ்டுகளில் ஒரேயொரு உறுப்பினர் கூட லெஹ்மனை வேட்பாளராக நிறுத்தவில்லை மற்றும் எந்தவொரு போலி-இடது பிரசுரமும் அவரது பிரச்சாரம் குறித்து எழுதவில்லை. இந்த தனிநபர்களும் போக்குகளும் செல்வச் செழிப்பான உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர், தொழிற்சங்க நிர்வாகிகளே கூட இந்த அடுக்கைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியப் போர் ஆத்திரமூட்டல்களாலும் மற்றும் இந்தப் பெருந்தொற்றாலும் தூண்டவிடப்பட்ட ஒரு கிளர்ச்சி உலகளவில் தொழிலாள வர்க்கத்தில் உருவெடுத்து வருகிறது. இந்த வரவிருக்கும் கிளர்ச்சி தேசிய தொழிற்சங்களின் தனிமைப்படுத்தலை உடைக்கும் நோக்கில் தொழிலாளர்களே கட்டுப்படுத்தும் ஜனநாயக அமைப்புகளின் ஒரு சர்வதேச வலையமைப்பான சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியைக் (IWA-RFC) கட்டமைப்பதன் மூலம் அரசியல் வெளிப்பாட்டைக் காணும். IWA-RFC மூலம், தொழிலாள வர்க்கம் உலகளாவிய பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் நலன்களுக்குச் சேவையாற்றும் அரசாங்கங்களுக்கு எதிராக ஓர் உலகளாவிய போராட்டத்தைத் தொடங்கி, பல தசாப்தக் கால சமூக எதிர்புரட்சிக்கு எதிராக ஒரு சர்வதேச எதிர்தாக்குதலைத் தொடுக்கும்.

Loading