முன்னோக்கு

அமெரிக்க செனட் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்பை குறிவைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம், குடியரசுக் கட்சியின் செனட்டர் ரொன் ஜோன்சன், சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்பு உரிமைத்திட்டங்களை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதற்குப் பதிலாக அவற்றை விருப்பப்படி வெட்டுதலுக்கு உட்படுத்தக்கூடிய வரவு-செலவுத் திட்டத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.

ஜோன்சனின் முன்மொழிவுவை தொடர்ந்து புளோரிடா செனட்டர் ரிக் ஸ்காட் இதேபோன்ற அழைப்பை பின்பற்றுகின்றார். அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்பை புதுப்பிப்பதற்கு அழைப்பு விடுத்தார்.

சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவச் செலவுகள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க, தொழிலாளர்களின் ஊதிய வரிகளால் நிதியளிக்கப்படும் கட்டாயச் செலவீனமாக ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டங்களை விருப்பமான வரவு-செலவுத் திட்டத்திற்கு மாற்றுவது, அவை ஒழிக்கப்படுவதைக் குறிக்கும். இது மில்லியன் கணக்கான ஓய்வு பெற்றவர்கள் வறுமையிலும் தடுக்கக்கூடிய நோயாலும் இறக்க காரணமாகி, அமெரிக்க மக்களின் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் குறைக்கும்.

சீமோர் ஃபோகல், 'The Wealth of the Nation', சமூக பாதுகாப்பு வாரிய கட்டிடத்திற்காக நியமிக்கப்பட்டார், வாஷிங்டன் டி. சி., 1938

'நீங்கள் உதவி பெறுவதற்கு தகுதி பெற்றால், என்ன விலை என்றாலும் அதைப் பெறுவீர்கள்' என்று ஜோன்சன் கூறினார். 'இந்த நாட்டில் எங்கள் பிரச்சனை என்னவென்றால், இந்த கட்டாய கொடுப்பனவுகள் எங்கள் வரவு-செலவுத் திட்டத்தில் 70% க்கும் அதிகமாக நமது மத்திய செலவினங்களில் எடுக்கும்.

'ஆம்' ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் இந்த நன்மைகளுக்கு 'உரிமை' பெற்றுள்ளனர். ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதற்காக பணம் செலுத்தி வருகின்றனர். தொழிலாளர்கள் சம்பாதித்த ஒவ்வொரு டாலரில், அவர்கள் தங்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீட்டு நலன்களுக்கு நிதியளிப்பதற்காக எட்டு சென்ட்களை செலுத்தினர். அது அவர்களின் முதலாளியிடமிருந்து கிடைக்கும் கொடுப்பனவுகளுக்கு சமமானதாக உள்ளது.

ஆனால் அமெரிக்காவை ஆளும் கோடீஸ்வரர்களின் கையாட்களான ஜோன்சனும் ஸ்காட்டும், தன்னலக்குழுவை பணக்காரர்களாக்குவதற்கும் அமெரிக்காவின் புதிய 'என்றென்றுக்குமான போர்களுக்கு” நிதியளிப்பதற்கும் தொழிலாளர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து போராடி செலுத்தி வரும் இந்த நிதி அவர்களிடமிருந்து திருடப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.

பெரும் மந்தநிலையின் போது சமூகப் போராட்டங்களின் அலைக்கு விடையிறுப்பக சமூகப் பாதுகாப்பு 1935 இல் ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. குடியுரிமை உரிமைகள் இயக்கம் மற்றும் வேலைநிறுத்த அலையின் நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள பின்னணியில் 1965 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜோன்சனின் பெரும் சமூக (Great Society) சீர்திருத்தங்களின் போது மருத்துவ காப்பீடு உருவாக்கப்பட்டது.

இந்த இரண்டு திட்டங்களுடனும், அமெரிக்க முதலாளித்துவத்தின் தலைவர்கள் முதலாளித்துவ அமைப்பானது சமூகத்தின் தேவைகளை வழங்குவதற்கும், மில்லியன் கணக்கான முதியவர்களின் பாரிய வறுமை மற்றும் அகால மரணத்தைத் தடுப்பதற்கும் திறன் கொண்டது என்று தொழிலாளர்களை நம்ப வைக்க முயன்றனர்.

ஜோன்சன், ஸ்காட் மற்றும் அவர்களது சதிகாரர்கள் இதற்கு நேர்மாறான கருத்தைத் தெளிவுபடுத்துகின்றனர்: அதாவது முதலாளித்துவம் என்பது தொழிலாளர்களுக்கு சமூக அவலத்தையும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு முடிவில்லாத செல்வத்தையும் குறிக்கிறது என்கின்றனர்.

இந்த செனட்டர்கள், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள், இராணுவ மூலோபாயவாதிகள் மற்றும் முன்னணி சிந்தனையாளர்களின் தலைமுறைகளின் இலக்காக இருந்ததை ஒரு நேர்மறையான முன்மொழிவாக வெளிப்படுத்தியுள்ளனர். 2010 ஆம் ஆண்டில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் குடியரசுக் கட்சியின் செனட்டர் ஆலன் சிம்ப்சன் மற்றும் கிளின்டன் நிர்வாகத்தின் முன்னாள் தலைமைத் தளபதியான ஜனநாயகக் கட்சியின் எர்ஸ்கின் பவுல்ஸ் ஆகியோரின் தலைமையில் இரு கட்சியினரதும் 'நிதியப் பொறுப்புக்கான தேசிய ஆணையத்தை' உருவாக்கினார்.

சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்புக்கான நிதியைக் குறைக்க இந்த ஆணையம் அழைப்பு விடுத்தது. அதன் முன்மொழிவுகளின் அடிப்படையில், மத்திய அரசு, மத்திய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் மருத்துவப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வெட்டுக்களுடன் சமூக செலவினங்களைக் குறைப்பதை மேற்பார்வையிட்டது.

இப்போது, தொற்றுநோயால் தூண்டப்பட்ட சமூக நெருக்கடி, ரஷ்யாவுடனான போர் வெடிப்பு மற்றும் சீனாவுடனான மோதல் ஆகியவற்றின் மத்தியில், அமெரிக்காவின் நிதிய தன்னலக்குழு இந்த அடித்தள சமூக பாதுகாப்புத் திட்டங்களை அகற்றுவதற்கான அதன் அழைப்புகளை புதுப்பித்து வருகிறது.

மார்ச்சில், பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் முன்னாள் தலைவரான க்ளென் ஹப்பார்ட் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு பதிவை வெளியிட்டார். சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீட்டைக் குறைத்து இராணுவச் செலவினங்களில் பாரிய அதிகரிப்பிற்கு நிதியளிப்பதற்காக, “நேட்டோவுக்கு அதிக துப்பாக்கிகளும் வெண்ணெய் குறைவாகவும் தேவை” என்று அறிவித்தார்”. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஹப்பார்ட், ஒபாமாவின் 2010 பற்றாக்குறைக் குறைப்புக் குழுவின் முடிவுகளைப் பாராட்டி, அதன் கோரிக்கைகளை முழுமையாக செயல்படுத்த அழைப்பு விடுத்தார்.

ஹப்பார்ட் 2013 ஆம் ஆண்டு மூலோபாயத்திற்கும் சர்வதேச கற்கைகளுக்குமான வாஷிங்டன் சிந்தனைக் குழாமின் நிலையத்தின் (CSIS) ஆண்டனி கோர்டெஸ்மேன் எழுதிய கட்டுரையின் கருப்பொருளை எதிரொலித்தார்: 'அமெரிக்கா எந்த வெளிநாட்டு அச்சுறுத்தலையும் கவனத்துடன் எதிர்கொள்ளத் தவறியது போல்... கூட்டாட்சி செலவினங்களின் உயர்வையும் கையாள முடியாது இருந்தது'.

ஆனால் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்க பணம் இல்லை என்று கூறப்படும் அதே வேளையில், ரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்க மோதல்களுக்கு நிதியளிப்பதற்காக பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்குவதில் வரம்பு ஏதும் இல்லை.

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர் வெடித்த ஆறு மாதங்களில், அமெரிக்கா $54 பில்லியனுக்கும் மேலாக போர் முயற்சிக்கு உறுதியளித்துள்ளது. இது வாரத்திற்கு $2 பில்லியனுக்கு சமம். சீனாவுடனான அமெரிக்க இராணுவ மோதலின் ஒரு பகுதியாக தைவானுக்கு கூடுதலாக 4.5 பில்லியன் டாலர் ஆயுதங்களை அனுப்பும் மசோதாவை செனட் தற்போது விவாதித்து வருகிறது.

ஜூன் மாதம், செனட் ஆயுத சேவைகள் குழு, 2023 நிதியாண்டிற்கான இராணுவ செலவினத்தில் $858 பில்லியனை அங்கீகரிக்க வாக்களித்தது. இது பைடென் நிர்வாகத்தின் வரவு-செலவுத் திட்ட கோரிக்கையை விட $45 பில்லியன் அதிகரிப்பும் மற்றும் நடப்பு நிதியாண்டில் காங்கிரஸால் ஒதுக்கப்பட்ட தொகையை விட $80 பில்லியன் அதிகமானதாகும்.

இராணுவ செலவினங்களின் இந்த பாரிய எழுச்சியானது, நிதிய தன்னலக்குழுவை மேலும் செழுமைப்படுத்தும் நோக்கத்துடன் தொழிலாளர்களின் ஊதியங்களைக் குறைப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியுடன் சேர்ந்துள்ளது.

ஜூன் மாதம், மத்திய நிதி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பதாக அறிவித்த மத்திய ரிசர்வ் தலைவர் ஜெரோம் பௌல் 'தொழிலாளர் சந்தையில் உங்களிடம் நிறைய உபரிகள் உள்ளது ... வேலை தேடும் ஒவ்வொரு நபருக்கும் இரண்டு காலி வேலையிடங்கள் உள்ளன. மேலும் இது ஊதிய பேச்சுவார்த்தைகளில் உண்மையான ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கின்றது' எனக் கூறினார்.

ஃபெடரல் ரிசர்வ் வேண்டுமென்றே வேலையின்மை விகிதத்தை அதிகரிக்க முயல்கிறது. இது தொழிலாளர்களை மேலும் வறுமையில் ஆழ்த்தும் நோக்கத்துடன், மந்தநிலையை தூண்டும் அளவிற்கு கூட உள்ளது என்பதை பௌல் தெளிவுபடுத்தினார்.

பெருநிறுவனங்கள் பல வருடங்களில் பெருநிறுவன இலாபங்களின் மிக உயர்ந்த மட்டத்தில் குதித்தாலும் கூட, உயரும் விலையில் மூழ்கி இருக்கும் தொழிலாளர்களின் பலத்தைப் பற்றி அவர் புகார் கூறினார்.

அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் எந்தப் பகுதியிலும் பெருநிறுவனங்களின் அளவற்ற விலையேற்றத்தை நிறுத்துவது பற்றி ஒரு குறிப்பும் இல்லை.

பொருளாதாரக் கொள்கை நிறுவனத்தின் ஏப்ரல் 2022 ஆய்வின்படி, விலைகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக, பெருநிறுவனங்கள் விலையை உயர்த்துவது நேரடியாக இலாபவரம்பின் மீது தாக்கத்தை கொடுக்கின்றது. முந்தைய காலகட்டத்தில் இருந்ததிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க திருப்பமாக, அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளை விட, அதிகரிக்கும் விலைக்கு பெருநிறுவன இலாபங்களே ஆறு மடங்கிற்கு அதிகமாக பங்களித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

2021ல், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இலாபம் 35 சதவீதம் அதிகரித்தது. இது 1950க்குப் பிறகு பெருநிறுவன இலாபத்தில் அதிகபட்ச அதிகரிப்பாகும்.

இதற்கு நேர்மாறாக, கடந்த 12 மாதங்களில், அமெரிக்க தொழிலாளர்களின் சராசரி மணிநேர வருவாய் வெறும் 5.2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதாவது ஒரு சாதாரண தொழிலாளி கடந்த வருடத்தில் உழைத்ததை விட மணித்தியாலத்திற்கு 4 விகிதம் குறைவாகவே பெறுகின்றார்.

ஜோன்சன் சார்ந்து பேசும் நிதிய தன்னலக்குழுவின் தெளிவான நோக்கம், அமெரிக்கா முழுவதும் நடைபெறும் தொழிலாளர்களின் ஏழ்மையாக்கலை ஓய்வு பெற்றவர்களுக்கு மாற்றப்படுவதை உறுதி செய்வதாகும்.

அமெரிக்க நிதிய தன்னலக்குழு தொழிலாள வர்க்கத்தின் மீது போரை அறிவித்துள்ளது. கோவிட்-19 பரவுவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டு வந்து, தொற்றுநோய் பரவுவதற்கான முக்கிய இடங்களான பணியிடங்களுக்கு தொழிலாளர்களை செல்லக் கட்டாயப்படுத்திய பின்னர், ஆளும் வர்க்கம் தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் மோசமான சமூக பாதுகாப்பு வலையின் எஞ்சியுள்ள அனைத்தையும் குறைக்கும் முழு முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

இந்தக் கொள்கையானது அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் சமூக எதிர்ப்பு அலையை உருவாக்கி வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் வடிவத்தை எடுத்து வருகிறது. போர்க்குணம் மற்றும் உறுதியான போராட்டத்திற்காக அதிகரித்துவரும் மனநிலை, ஐக்கிய வாகன தொழிற்சங்க (UAW) தலைவருக்கான, பென்சில்வேனியாவின் மக்குங்கியில் உள்ள Mack Trucks இன் சோசலிச தொழிலாளியான வில் லெஹ்மனின் பிரச்சாரத்தில் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது.

UAW உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில், லெஹ்மன், 'பல தசாப்தங்களாக விட்டுக்கொடுக்கப்பட்டதை ஈடுசெய்ய பாரிய ஊதிய உயர்வுகள்', 'உயர்ந்து வரும் பணவீக்க வேகத்தைத் தக்கவைக்க கட்டாய வாழ்க்கைச் செலவு ஈடுசெய்தல் (COLA)' மற்றும் வறுமை நிலை ஊதியத்தின் அடிப்படையில் அல்லாது நமக்கும் எங்கள் குடும்பங்களுக்கும் வாழ அனுமதிக்கும் ஊதியத்துடன் '8 மணித்தியால வேலையினை மீண்டும் நிறுவ வேண்டும்' என்று கோரினார்.

தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதை இலக்காகக் கொண்ட நிதிய தன்னலக்குழுவின் ஈவிரக்கமற்ற வர்க்கப் போர் கொள்கை வெற்றிபெற அனுமதிக்க முடியாது. பல தசாப்தங்களாக வீழ்ச்சியடைந்து வரும் ஊதியங்களை ஈடுசெய்ய இரட்டை இலக்க ஊதிய உயர்வுகளுடன் இணைந்து சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதுகாத்தல் மற்றும் விரிவாக்கம் செய்யக் கோரும் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்துடன் தொழிலாளர்கள் பதிலளிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் ஒரு அரசியல் மூலோபாயத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழக்கூடிய ஊதியத்திற்கான போராட்டத்தை போருக்கு எதிரான போராட்டத்துடனும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் இணைக்கவேண்டும்.

Loading