மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த வாரம், ஐக்கிய வாகன தொழிற்சங்கம் (UAW) டெட்ராய்டில் அதன் 38வது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்தும் மாநாட்டை நடத்துகின்றனர்.
70 ஆண்டுகளில் முதன்முறையாக அமைப்பின் தலைமைக்கு நேரடித் தேர்தல்களை நடாத்துவது குறித்து இம்மாநாடு வாக்களிக்கவுள்ளது. UAW அதன் உயர்மட்ட தலைமையை மூழ்கடித்த ஊழல் காரணமாக அதை மேற்பார்வையிடும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளரின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து இது தேவைப்படுகிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்ட இந்தத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களையும் பிரதிநிதிகள் பரிந்துரைப்பார்கள்.
உலக சோசலிச வலைத் தளம் 34 வயதான மாக் ட்ரக்ஸ் தொழிலாளி வில்லியம் லெஹ்மனை UAW தலைவராக்குவதற்கு ஆதரித்துள்ளது. கடந்த வாரம் அனைத்து UAW உறுப்பினர்களுக்கு என்ற தலைப்பில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், லெஹ்மன் தனது பிரச்சாரத்தின் அடிப்படையை கோடிட்டுக் காட்டினார்.
'UAW ஆல் மேற்பார்வையிடப்பட்ட மற்றும் திணிக்கப்பட்ட பல தசாப்தங்களாக சலுகைகள் ஒப்பந்தங்கள் எங்கள் உறுப்பினர்களில் பெரும் பகுதியினர் வறிய நிலையில் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது' என்று லெஹ்மன் எழுதினார். தொழிலாளர்கள் உயரும் பணவீக்கத்தை எதிர்கொள்கின்றனர். ஆலைகள் மீண்டும் கோவிட் பரவுவதையும், வாகனம் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து தீவிரமான சுரண்டலையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
கடந்த ஆண்டில், வோல்வோ ட்ரக்ஸ், டேனா, டீரே மற்றும் மிக சமீபத்தில் வென்ட்ரா வாகன உதிரிப்பாகங்கள் ஆகியவற்றில் 90 சதவீதத்திற்கும் அதிகமான 'வேண்டாம்' என்ற வாக்குகள் உட்பட, சாமானிய தொழிலாளர்களிடம் இருந்து வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்கையிலும் விட்டுக்கொடுப்பு ஒப்பந்தங்களை திணிக்க UAW முனைந்துள்ளது.
தற்போதைய தலைவரான ரே கரிக்கு முன்னர் இரு தலைவர்கள் உட்பட ஒரு டஜன் UAW நிர்வாகிகள் சிக்கிய பாரிய ஊழலை அந்தக் கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஊழலை UAW இன் குணாதிசயத்திலிருந்து பிரித்து புரிந்து கொள்ள முடியாது என லெஹ்மன் விளக்கினார். 'ஊழல் என்பது UAW அதிகாரத்துவம் நமது நலன்களை பெருநிறுவன இலாப உந்துதலுக்கு அடிபணியவைத்ததன் விளைவாகும்' என்று அவர் எழுதினார்.
UAW, 'பெயருக்கு மட்டுமே தொழிற்சங்கமாக' இருக்கிறது என லெஹ்மன் விளக்கினார். தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய அனைத்து பாரம்பரிய செயல்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளன. 1 பில்லியன் டாலர்களுக்கும் மேலான சொத்துக்கள் மற்றும் $75 மில்லியனுக்கும் அதிகமான வருடாந்திர ஊதிய பட்டியலுடன், இது ஒரு பாரிய அமைப்பினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது எதிர்ப்பை ஒடுக்கவும், தொழிலாள வர்க்கத்தினை கண்காணிக்கவுமே இருக்கின்றது.
லெஹ்மனின் பிரச்சாரம் UAW அதிகாரத்துவத்தை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. 'எனது பிரச்சாரம், இவ்வமைப்பின் சர்வாதிகாரத்தை உடைப்பதற்கும், அனைத்து முடிவெடுக்கும் செயல்முறையின் மீதான அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டை வாகன ஆலைகளிலும் அனைத்து வேலை இடங்களிலும் சாமானிய தொழிலாளர்களிடம் மாற்றுவதற்கும் மற்றும் சாமானிய தொழிலாளர்களின் ஒரு வெகுஜன இயக்கத்தை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது' என்று அவர் விளக்கினார்.
பெரும் ஊதிய உயர்வு, கட்டாய வாழ்க்கைச் செலவிற்கு ஈடாக உதவி (COLA), அனைத்து அடுக்குமுறை, பகுதி நேர வேலைக்கும் முடிவு, ஓய்வூதியத்திற்கான முழு நிதி மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு உயர்தர சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் 8 மணி வேலைநேரத்தை மீளஸ்தாபிப்பது உள்ளிட்ட ஒரு போராட்ட வேலைத்திட்டத்தை இந்தப் பிரச்சாரம் முன்னெடுத்து வருகிறது.
எவ்வாறாயினும், லெஹ்மன் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கை முன்வைக்கிறார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இது நீண்டகாலமாக UAW இலும் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களிலிருந்தும் விலக்கப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளது.
UAW உம் பிற தொழிற்சங்கங்களும் 1930களில் சோசலிஸ்டுகள் தலைமையிலான போர்க்குணமிக்க மற்றும் கிளர்ச்சிமிக்க வர்க்கப் போர்கள் மூலம் நிறுவப்பட்டன. 1940கள் மற்றும் 1950களில் சோசலிஸ்டுகளுக்கு எதிரான சூனிய வேட்டை, UAW இல் வால்டர் ரியூட்டரால் தலைமை தாங்கப்பட்டது. இது முதலாளித்துவ அமைப்புமுறைக்கும், ஜனநாயகக் கட்சிக்கும் தொழிலாளர்களை அடிபணியச் செய்வதோடு பிணைந்திருந்தது.
UAW இன் தலைமையிலிருந்து சோசலிஸ்டுகளை வெளியேற்றுவது சீரழிவின் ஒரு நிகழ்ச்சிப்போக்கை தொடக்கியதுடன், இது இறுதியில் எந்த அர்த்தத்திலும் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்க அமைப்புகள் என்று இருப்பதிலிருந்து அழிக்க வழிவகுத்தது. 1979 இல் கிறைஸ்லரின் பிணையெடுப்பில் தொடங்கி, அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையில் நீடித்த சரிவுக்கு விடையிறுக்கும் வகையில், UAW தொடர்ச்சியான விட்டுக்கொடுக்கும் ஒப்பந்தங்களுக்கு ஒப்புக் கொண்டது. அதே நேரத்தில் தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே இன்னும் நேரடியான உறவை ஸ்தாபித்தது.
'நான் ஒரு சோசலிசவாதி' என்று லெஹ்மன் அறிவித்தார். “சமூகம் வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதை சோசலிசம் அங்கீகரிக்கிறது. இப்போது ஒரு வர்க்கப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு வர்க்கம் மட்டுமே போராடுகிறது. சோசலிசம் என்பது உலகின் உற்பத்தி சக்திகளை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, வளங்களைப் பகிர்ந்தளிப்பதாகும். இது ஒரு சில பில்லியனர்களை மேலும் செல்வந்தர்களாக்க அல்ல, மாறாக முழு மனித இனத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாகும்.
'அவற்றின் அனைத்து உட்பூசல்களை கொண்டிருந்தாலும்... ஆளும் உயரடுக்கினால் கட்டுப்படுத்தப்படும்' ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு இந்த பிரச்சாரத்தின் எதிர்ப்பை அந்தக் கடிதம் அறிவித்தது. இது மேலும் பின்வருமாறு கூறியது:
UAW என்பது உழைக்கும் மக்களின் எந்தக் குரலையும் பறிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசியல் கட்டுப்பாட்டு வலையமைப்பின் ஒரு பகுதியாகும். பள்ளிகள், பொது உள்கட்டமைப்பு அல்லது சமூக சேவைகளுக்கு 'பணம் இல்லை' என்ற பல தசாப்தங்களுக்குப் பின்னர், UAW ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் உட்பட இரண்டு கட்சிகளும் உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிரான மனிதகுலத்தை அழிக்கக்கூடிய போரைத் தீவிரப்படுத்த 40 பில்லியன் டாலர்களைக் கண்டறிந்துள்ளது வேதனையளிக்கிறது.
பைடென் நிர்வாகம் தொழிற்சங்கங்களை வர்க்கப் போராட்டத்தை நசுக்கும் கருவியாகவும், ஆளும் வர்க்கத்தின் போர் உந்துதலுக்குப் பின்னால் தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையாகவும் ஆக்கிரோஷமாக ஊக்குவித்து வருகிறது. மாநாட்டில் வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், UAW தலைவர் கரி, உக்ரேன் மீதான ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கப் போரையும், பைடென் நிர்வாகத்தின் சீன எதிர்ப்பு கிளர்ச்சியையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டார்.
லெஹ்மனின் கடிதம் UAW ஆல் ஊக்குவிக்கப்பட்ட தேசியவாதத்திற்கு அதன் எதிர்ப்பையும், சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணிக்கான ஆதரவையும் அறிவித்தது. 'நாங்கள் மாபெரும் நாடுகடந்த நிறுவனங்களை எதிர்கொள்கிறோம். மேலும் இதில் வெற்றி பெறுவதற்கு ஒரு சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதியாக நாம் நம்மைப் பார்க்க வேண்டும்.'
மாநாட்டிற்கு முன்னதாக, வேலை வெட்டுக்கள் மற்றும் பெருநிறுவன சுரண்டலுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கிய பிரச்சாரம் பற்றி விவாதிக்க, சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) நிதியுதவியுடன் ஜேர்மனி மற்றும் இந்தியாவை சேர்ந்த போர்டு தொழிலாளர்களுடனான சந்திப்புகளில் லெஹ்மன் பங்கேற்றார்.
லெஹ்மனின் பிரச்சாரத்தைத் தடுக்க UAW அமைப்பு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 'சீர்திருத்தவாதிகள்' என்று காட்டிக் கொள்ளும் போலி-இடது அமைப்புகளைப் பொறுத்தமட்டில் உண்மையில் தொழிற்சங்க அமைப்பை வலுப்படுத்த வேலை செய்கின்றன. அவை இப்பிரச்சாரம் பற்றி முற்றிலும் மௌனமாக உள்ளன. வசதி படைத்த நடுத்தர வர்க்கத்திற்கு சார்பான இந்த அமைப்புகள் கடைசியாக விரும்புவது கீழிருந்து வரும் தொழிலாளர்களின் இயக்கத்தை தடுப்பதுதான்.
UAW இன் தலைவர் பதவிக்கு வில் லெஹ்மனின் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய ஆரம்பபுள்ளியை குறிக்கிறது. UAW மாநாட்டில் உள்ள பிரதிநிதிகள் லெஹ்மனை முன்மொழிந்தாலும் அல்லது அவரது பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறும் என்பதை உறுதி செய்தாலும் இல்லாவிட்டாலும், லெஹ்மனின் பிரச்சாரம் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களிடம் இருந்து பரந்த ஆதரவை ஈர்த்து வருகிறது. இது அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் வெடிக்கும் வர்க்கப் போராட்டத்தின் நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது.
ஒவ்வொரு கண்டத்திலும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரினால் பெரிதும் மோசமடைந்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். ஏகாதிபத்தியப் போரை நிறுத்தவும், அவசர வாழ்க்கைச் செலவு நெருக்கடியைத் தீர்க்கவும், இந்த இயக்கம் முதலாளித்துவ சார்பு மற்றும் தேசியவாத தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து உடைத்துக்கொண்டு வந்து ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய தன்மையைப் பெற வேண்டும்.
லெஹ்மனின் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அழைக்கிறது. www.WillForUAWPresident.org இல் நீங்கள் இதுபற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறிந்து, நன்கொடை வழங்கலாம்.