UAW தலைவர் பதவிக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்தை தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்: "அதற்கு தேவையானது ஒரு தீப்பொறி"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வில் லெஹ்மனின் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, WillForUAWPresident.org ஐப் பார்வையிடவும்.

இந்த ஆண்டு ஐக்கிய வாகனத் தொழிலாளர்களின் (UAW) தலைவர் பதவிக்கு தான் போட்டியிடுவதாக வில் லெஹ்மன் அறிவித்திருப்பது, வாகனத் தொழிலாளர்கள் மற்றும் பிற பிரிவு தொழிலாளர்களின் வலுவான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் பெற்றுள்ளது.

34 வயதான லெஹ்மன், பென்சில்வேனியாவின் மாக்கன்கி இல் உள்ள மாக் ட்ரக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார், இது 2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட இரண்டு வார கால வேலைநிறுத்தத்தின் தளமாகும், அந்த நேரத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் இல் நடந்த வேலைநிறுத்தத்துடன் இது ஒத்த நேரத்தில் நடந்ததாக இருந்தது.

பிரச்சாரத்தை அறிவிக்கும் தனது காணொளி அறிக்கையில், அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுவை உருவாக்க போராடுவதாக லெஹ்மன் கூறினார். அவர் தனது பிரச்சாரத்திற்கான தளத்தை கோடிட்டுக் காட்டி, அவர் கோருவதாகக் கூறினார்:

  1. தற்போதுள்ள அதிகாரத்துவத்தின் சீர்திருத்தத்திற்கு அல்ல, ஆனால் அதன் ஒழிப்புக்கு
  2. அனைத்து UAW-பெருநிறுவன அமைப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தல்
  3. சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுவின் முழுமையான கட்டுப்பாடும் மேற்பார்வையும்
  4. தொழிலாளர்கள் நமக்குத் தேவையானவற்றிற்காகப் போராடுவதற்கான ஒரு வேலைத்திட்டமும் ஒழுங்கமைப்பும், பெருநிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று கூறுவதற்கு அல்ல. பல தசாப்தங்களாக சரிந்து வரும் உண்மையான ஊதியங்களை ஈடுசெய்ய பாரிய ஊதிய உயர்வுகள், உயர்ந்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ற ஊதியத்துடன் வாழ்க்கை செலவை சரிசெய்தலை (cost-of-living adjustment - COLA) மீட்டெடுத்தல், அனைத்து அடுக்குகளையும் ஒழித்தல், தற்போதைய தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு முழு சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

மாக் ட்ரக்ஸ் இல் தொழிலாளர்கள் தனது பிரச்சாரத்தை அறிவித்த மறுநாளே அவரை அணுகத் தொடங்கினர் என்று லெஹ்மன் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். 'குறிப்பாக ஒரு சக தொழிலாளி அதைப் பற்றி மிகவும் உற்சாகமாக இருந்தார். அவர் என்னிடம், 'நான் காலையில் எழுந்ததும் காணொளியைத்தான் முதலில் பார்த்தேன். நான் பாதி தூக்கத்தில் இருந்ததால் மீண்டும் பார்த்தேன், அது நன்றாக வந்துள்ளது. பின்னர் நான் அதை மீண்டும் பார்த்தேன், அது இன்னும் சிறப்பாக இருந்தது. இது நிச்சயமாக எனது நாளை பிரகாசமாக்கியது. உங்கள் திசை வழி, நீங்கள் அதை மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள்.’

'உடன் பணிபுரிபவர் கூறினார், 'பில் நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் இப்போது நிறைய பேரின் கண்களை மிகவும் அகலமாக திறந்துவிட்டிருக்கிறீர்கள், ஏனென்றால் அதற்கு தேவையானது அந்த தீப்பொறி மட்டுமே’.'

மற்ற மாக் ட்ரக்ஸ் தொழிலாளர்களும் பிரச்சாரத்தைப் பற்றி சாதகமாகப் பேசினர். 'எனது வாக்கு கிடைத்து விட்டது' என ஒருவர் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர் WSWS இடம், லெஹ்மனின் தளத்தில் பதிலளித்து, “மாக் ட்ரக்ஸில் உள்ள பல தொழிலாளர்கள் UAW பற்றி கவலைப்படுவதில்லை. இது எங்களுக்கு ஒருபோதும் அதிகம் செய்ததில்லை. நாங்கள் நடத்திய வேலைநிறுத்தம் ஒரு நகைச்சுவையாக இருந்தது. எங்களின் சம்பளத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. இப்போது உள்ள பணவீக்கத்துடன், ஒவ்வொரு ஆண்டும் 1 சதவீத ஊதிய உயர்வைப் பெறுகிறேன்! சலுகைகளுடன் ஓய்வு பெறவும் முடியாது. இதிலிருந்து நாம் ஒரு வாழ்க்கைபோக்கை உருவாக்கவும் முடியாது. எங்கள் COLA வை அதிகரிக்கவும், ஓய்வூதியத்தை திரும்ப கொண்டு வரவும் வேண்டும்” என்றார்.

பெருநிறுவனங்கள் மற்றும் UAW ஆல் தங்கள் ஊதியங்கள் மற்றும் பணியிடங்கள் மிக மோசமான நிலைமைகளுக்கு தள்ளப்பட்டிருப்பதைக் கண்ட பல வாகன உதிரிபாகத் தொழிலாளர்கள் பிரச்சாரத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். வாகன உதிப்பாகங்கள் மற்றும் பிற கூறுகளின் உலகளாவிய தயாரிப்பாளரான டேனா இன்க். நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளி, 'அடுக்கு அமைப்பிலிருந்து விடுபட விரும்பும் மற்றும் தொழிலாளர்களுக்கு உண்மையான மாற்றத்தை விரும்பும்' ஒருவரை காண்பது நல்லது என்று தான் நினைத்ததாகக் கூறினார். 'தொழிலாளர்கள் கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதை அவர் எடுத்துக்கொள்வதை' நோக்கமாக கொண்டதாக அப் பெண் தொழிலாளி கூறினார், 'இது நம் அனைவருக்கும் தேவை.' 2021 இல், டேனாவில் உள்ள தொழிலாளர்கள் UAW மற்றும் United Steelworkers ஆதரவு பெற்ற தற்காலிக ஒப்பந்தத்தை நிராகரித்தனர், அந்த வறுமை ஊதியத்தை பராமரிப்பதை நிராகரித்து 90 சதவீதமானோர் வாக்களித்தனர்.

மிச்சிகனில் உள்ள Evart இல் உள்ள வென்ட்ரா வாகன உதிரிபாகத் தொழிலாளி ஒருவர் WSWS இடம் கூறினார்: “நான் UAW இன் தலைவராக வில் லெஹ்மனை ஆதரிக்கிறேன். அவரது இலட்சியங்கள் நல்லவை, அவை ஒரு சண்டையின் மூலம் அடையக்கூடியவை. எனது தந்தையும் தாத்தாவும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். வில் எல்லா இடங்களிலும் தொழிலாளர்களுக்காக நிற்கிறார்.”

திங்களன்று, வென்ட்ராவில் உள்ள தொழிலாளர்கள் பணவீக்கத்திற்குக் குறைவான உயர்வு மற்றும் அதிக சுகாதார செலவுகளுடன் தற்காலிக ஒப்பந்தத்தின் மூலம் கட்டாயப்படுத்த UAW மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர், இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கிட்டத்தட்ட ஒருமனதாக 95 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

வென்ட்ரா தொழிலாளி வில் லெஹ்மனின் பிரச்சாரத்தின் மையத்தில் உள்ள சர்வதேசியம் பற்றி குறிப்பாக ஆர்வமாக இருந்தார். 'நான் பெரிய மூன்றின் ஒரு பகுதி பாகங்களை உருவாக்குகிறேன். நான் சீனா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து வரும் பகுதிகளுடன் வேலை செய்கிறேன். தொழிலாளர்களாகிய நாம் அனைவரும் ஒரே உடல்! வலது காலை விட இடது கால் முக்கியம் என்று சொல்ல முடியாது, அப்படியாயின் எங்களால் நடக்கவே முடியாது.

'நடுநிலைப் பள்ளியில் படித்தது எனக்கு நினைவிருக்கிறது. எனக்கு ஒரு ஆசிரியர் இருந்தார், நாங்கள் ஒரு நாள் உலகப் பொருளாதாரத்தில் சமமான பகுதியாக இருப்போம் என்று எங்களிடம் கூறினார், அதற்கு நான் உடன்படவில்லை. நான் இரண்டு வாகனத் தொழிலாளர்களை கொண்ட வீட்டில் ஒரு அழகான வசதியான குழந்தை பருவத்தை கழித்தேன்.

'ஆனால் விஷயங்கள் மோசமாக மாறிவிட்டன. நாங்கள் நிலத்தை இழந்துவிட்டோம். செல்வந்தர்களுக்கு, நாம் இழக்கத்தக்கவர்கள் என்பதை மக்கள் உணரவில்லை- நாம் வெறும் நுகர்வு பொருள் மற்றும் எமது உழைப்பு அவர்களை பணக்காரர்களாக ஆக்குகிறது.

'ஆனால் எங்களிடம் எண்ணிக்கையிலானோர் உள்ளனர், மேலும் நாம் நம்மை உறுதிப்படுத்திக் கொண்டு நம்மை நம்பினால் செல்வத்தின் விநியோகத்தை கட்டுப்படுத்த முடியும்! நாங்கள், வில் லெஹ்மன் மற்றும் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணிக்கு பின்னால் செல்ல வேண்டும்.”

மிச்சிகன் சலைனில் உள்ள ஃபாரேசியா UAW லோக்கல் 892 இன் வாகன உதிரிபாகத் தொழிலாளியான ராண்டல், UAW தலைவருக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்திற்கு ஒப்புதல் அளிப்தாக கூறினார். 'முதலில், அவர் ஒரு சோசலிஸ்ட்,' என்று அவர் கூறினார். “அவர் சொல்வது அனைத்தும் உண்மை.

'நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஆலையிலும் எங்களுக்கு சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்கள் தேவைப்படுகிறது. இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல இந்தப் பிரச்சாரம் ஒரு சிறந்த வழியாகும்.

'நாம் தேசியவாதக் கொள்கையிலிருந்தும், அதை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரத்துவத்திலிருந்தும் விடுபட வேண்டும். ஏனென்றால் அது நம்மை மூன்றாம் உலகப் போருக்குள் அழைத்துச் செல்லும் போர்வெறியர்களின் கைகளில் சரியாக விளையாடுகிறது.

“அதை எதிர்த்து நிற்கவும் அதற்கு எதிராக ஒரு இயக்கத்தை உருவாக்கவும் வில் போன்ற தலைவர்கள் தேவை. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்காக அவர் ஒரு கொள்கையை முன்வைக்கிறார். அடிப்படையில் தொழிலாளர்கள் உலகின் கட்டுப்பாட்டைப் பெற வேண்டும் மற்றும் இந்த அதிகாரத்துவத்தை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்.

“COVID-19 இன்னும் வெளியே உள்ளது மற்றும் பரவுகிறது, மேலும் பல வாகனத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பலர் தேவையில்லாமல் இறந்துள்ளனர். மிச்சிகன் அவென்யூவில் உள்ள சலைன் வணிக பூங்காவில் உள்ள MMI இல் வேலை செய்ய எனது சகோதரர் கட்டாயப்படுத்தப்பட்டார், அங்கு ஜாக் தயாரிப்புகள் (Jack Products) உட்பட அரை டஜன் உற்பத்தி பாகங்களின் ஆலைகள் உள்ளன, இது அனைத்து தயாரிப்புகளுக்கும் மாடல்களுக்கும் மாதிரி வடிவமைப்புக்களை தயாரிக்கிறது.

'அவை எதுவும் மூடப்படவில்லை, மேலும் வைரஸ் காட்டுத்தீ போல் பரவியது. அந்தக் கொள்கையின் காரணமாக எனது சகோதரர் கடந்த நவம்பரில் கோவிட் நோயால் ஒரு பயங்கரமான முறையில் மரணம் அடைந்தார். அவர் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஏனென்றால் அவர் எங்கள் பாட்டியை கவனித்து வந்தார், பாட்டிக்கும் அவரிடம் இருந்து தொற்றிக்கொண்டது.

'வில்லின் பிரச்சாரத்திற்காக நான் முழுவதுமாக இருப்பதற்கு இது மற்றொரு காரணம், ஏனென்றால் அதை நிறுத்துவதற்கான ஒரே கொள்கை அவரிடமே உள்ளது. அது சீனாவில் செய்தது போன்ற பூஜ்ஜிய கோவிட் கொள்கையாகும். அதாவது முழு பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், முழு மருத்துவப் பராமரிப்பு, வெடிப்பதைத் தடுக்க பணிநிறுத்தம். அதைத்தான் நாம் செய்திருக்க வேண்டும். செய்திருந்தால் இன்று என் சகோதரன் உயிரோடு இருந்திருப்பான்.

'பல தொழிலாளர்கள் சோசலிசம் பற்றி தவறான செய்தியைக் கொண்டுள்ளனர், ஆனால் வில் அதை எளிதாகவும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் விளக்குகிறார். சோசலிசம் என்பது தொழிலாளர்கள் மீது சர்வாதிகாரத்திற்கானது அல்ல. அது ஸ்ராலினிசம், அதுதான் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு வழிவகுத்தது. அனைத்து தொழிலாளர்களின் சமத்துவத்திற்காகவும், தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகவும் நாங்கள் நிற்கிறோம்.

ஆட்டோமொபைல் துறைக்கு அப்பால், மற்ற துறைகளில் உள்ள தொழிலாளர்கள் பிரச்சாரத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த ஒரு பணியாளர், “அருமை! வில்லின் பிரச்சாரம் அனைத்தையும் ஒன்றாக இழுக்கும். நான் அதற்கு ஆதரவாயிருக்கிறேன்.

'அவர் ஆலைகளில் சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்காக நிற்கிறார். அது மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் ஒவ்வொரு பணியிடத்திற்கும் பொருந்துகிறது. இது ஓரளவு தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் பிரச்சாரம். ஊழியர்கள் எதிர்கொள்ளும் நிலைமையின் தீவிரத்தை நிறையப் பேர் உணராததால் இது எங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும் ஒன்று. எனது வேலையில் முழுநேர வேலை செய்பவர்களை கொண்டிருக்கிறோம், இன்னும் அதைச் செய்ய முடியாதுள்ளது.

'தாங்கள் தனியாக இல்லை என்பதையும், தொழிலாள வர்க்கத்திற்குள் போராடத் தயாராக இருக்கும் ஒரு இயக்கம் இருப்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் பலர் குறைந்த ஊதியம் பெறுகின்றனர்.

'வில் உண்மையைச் சொல்கிறார். UAW அதிகாரத்துவம் பொய்களால் நிறைந்துள்ளது மேலும் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் போது தொழிலாளர்களை தனிமைப்படுத்தி அவர்களை சோர்வடையச் செய்ய முயற்சிப்பார்கள். அதை எதிர்த்து நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். வில்லின் பிரச்சாரத்திற்கு முழு ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

'நான் ஒரு மாற்றத்தைக் காண விரும்புகிறேன். தொழிற்சாலைகளிலும் உலகம் முழுவதிலும் பாதுகாப்பு இருக்க வேண்டும்.”

வில்லின் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, WillForUAWPresident.org ஐ பார்வையிடவும்.

Loading