"இலங்கையில் வெகுஜன எழுச்சியின் படிப்பினைகள்" என்ற தலைப்பில் இலங்கை சோ.ச.க. நடத்தும் பகிரங்க கூட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், ஜூலை 3, ஞாயிறு, மாலை 4 மணிக்கு 'இலங்கையில் வெகுஜன எழுச்சியின் படிப்பினைகள்' என்ற தலைப்பில், ஒரு இணையவழி பகிரங்க கூட்டத்தை நடத்துகின்றன. இந்த கூட்டம் சூம் மூலம் ஒளிபரப்பப்படுவதுடன் கட்சியின் முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து, பூகோள முதலாளித்துவ நெருக்கடியினால் தோற்றுவிக்கப்பட்ட சகிக்க முடியாத சமூக நிலைமைகளுக்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டுமெனக் கோரியும் தொழிலாளர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்கள், மறியல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களால் இலங்கை அதிர்ச்சியடைந்துள்ளது.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாத பிளவுகளுக்கு அப்பால் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியை வெளிப்படுத்திய ஏப்ரல் 28 மற்றும் மே 6 அன்று பல மில்லியன் மக்கள் பங்குபற்றிய பலம்வாய்ந்த, ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்கள் இந்த இயக்கத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஆகும்.

இருந்த போதிலும், ஜனாதிபதி இராஜபக்ஷ தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதோடு, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளும் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வர்க்க யுத்தக் கொள்கைகளை சுமத்துவதற்காக அமெரிக்க சார்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளார். அவரது நியமனத்திற்குப் பின்னர், விக்கிரமசிங்க, சுமார் 800,000 அரச வேலைகள் வெட்டப்படுவதுடன், தனியார்மயமாக்கல் தீவிரப்படுத்தப்படுவதோடு சமூகத் நலத் திட்டங்களில் மேலும் வெட்டித் தள்ளப்படும் என்று அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் அடிப்படை வேறுபாடுகள் ஏதுவும் கொண்டிருக்கவில்லை மற்றும் அவை அதன் சிக்கனக் கொள்கைகளை ஆதரிக்கின்றன.

தொழிற்சங்கங்களின் துரோகத்தின் காரணமாகவே இராஜபக்ஷ-விக்கிரமசிங்க ஆட்சியால் அதன் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட முடிகின்றது. தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தை தடம் புரளச் செய்து, முதலாளித்துவ எதிர்க்கட்சிகளுக்குப் பின்னால் திசைதிருப்ப முயன்றன. முன்னிலை சோசலிசட் கட்சி போன்ற போலி-இடது குழுக்கள், தொழிற்சங்கங்களை ஆதரித்து, புரட்சிகர திசையில் வளரும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களைத் தடுக்க வேலை செய்கின்றன.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ., இந்த வெகுஜன எழுச்சியில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் சக்திவாய்ந்த முறையில் தலையிட்டுள்ளன. தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் போராடும், தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் உக்கிரமாக்கப்பட்டுள்ள உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடிக்கு பதிலிருப்பாக, இலங்கை தொழிலாள வர்க்கத்தின் போராட்டமானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளரும் இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இராஜபக்ஷ ஆட்சியும் ஆளும் வர்க்கமும் தயாரித்து வரும் கொடூரமான அடுத்த சுற்று தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு, தொழிலாளர்களும் இளைஞர்களும், கடந்த மூன்று மாத கால அரசாங்க எதிர்ப்பு வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இருந்து அரசியல் படிப்பினைகளை அவசரமாகப் பெற வேண்டும். ஜூலை 3 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பதிவு செய்துகொண்டு இந்த இன்றியமையாத கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இங்கே பதிவு செய்யவும்: https://chords-org-lk.zoom.us/meeting/register/tJcqcO-sqDopGNIOeLXWE4d1hK76OP8KYGHf.

Loading