சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) மூன்றாவது தேசிய மாநாடு: இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளுக்கும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மே 14-16, 2022 வரை இணையவழியாக நடைபெற்ற இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) மூன்றாவது தேசிய மாநாட்டில் பின்வரும் அவசரகாலத் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களில் இது முதலாவது தீர்மானமாகும். இந்த நிகழ்விற்கான இரண்டாவது தீர்மானமும் சர்வதேச வாழ்த்துகளும் இந்த வார இறுதியில் வெளியிடப்படும்.

1. இலங்கையின் தற்போதைய அசாதாரண அரசியல் சூழ்நிலையை, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் மிகவும் தீவிரமடைந்துள்ள உலக முதலாளித்துவத்தின் பெரும் நெருக்கடி சூழ்நிலையில் வைத்து ஆராய்வதன் மூலம் மட்டுமே அதை சரியாக புரிந்து கொள்ள முடியும். இலங்கையில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் வளர்ந்து வரும் வெகுஜன இயக்கத்தை நோக்கிய கட்சியின் சரியான அரசியல் நோக்குநிலையை, அத்தகைய சர்வதேச அணுகுமுறையின் மூலம் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும்.

2. தொற்றுநோயானது உலக முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை – அதாவது காலாவதியான தேசிய அரசு அமைப்புக்கும் அதிகம் பூகோளமயமாகியுள்ள உலகப் பொருளாதாரத்திற்கும் இடையேயான, மற்றும் உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமைக்கும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் இடையேயான முரண்பாடுகளை - மேற்பரப்பிற்கு கொண்டு வந்து, அவற்றுக்கு ஒரு தீவிர வெடிக்கும் பண்பை உருவாக்கியுள்ளது. உக்ரேனை ஒரு தூண்டில் இரையாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போர், உலகின் பெரிய அணு ஆயுத சக்திகளுக்கு இடையே நேரடி மோதலுக்கு வழிவகுத்து, உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மூன்றாம் உலகப் போரின் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் நெருக்கடியும் அமெரிக்காவும் ஐரோப்பாவில் உள்ள அதன் கூட்டாளிகளும் ரஷ்யாவிற்கு எதிராக நடைமுறைப்படுத்தியுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளும், உலகளவில் உணவு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கும் பெரும் விலைவாசி அதிகரிப்புக்கும் வழிவகுத்து, சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இலங்கையில் அசாதாரண அரசியல் சூழ்நிலையை உருவாகியுள்ள சூழல் இதுவே ஆகும்.

9 மே 2022 அன்று காலிமுகத் திடல் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக மருத்துவ மாணவர்கள் தொழிலாளர்களுடன் இணைந்து றாகமவில் நடத்திய ஆர்ப்பாட்டம் [Photo: WSWS]

3. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, விண்ணைத் தொடும் விலைவாசி அதிகரிப்பு மற்றும் பல மணிநேர மின்வெட்டு போன்றவற்றால் உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளும் எதிர்கொள்ளும் தாங்க முடியாத நிலைமைகளால் வெடித்த, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்கள், இப்போது தொழிலாள வர்க்கத்தின் பலம்வாய்ந்த தலையீட்டுடன் ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளன. ஏப்ரல் 28 மற்றும் மே 6 இரண்டு நாட்களும் நடந்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களில் சிங்களம், தமிழ், முஸ்லிம், பௌத்தம், இந்து மற்றும் கிறிஸ்தவம் போன்ற இன மற்றும் மத வேறுபாடுகளுக்கு அப்பால், அனைத்துத் துறைகளில் இருந்தும் நாடு முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான அரச, தனியார் மற்றும் அரை-அரச தொழிலாளர்கள் பங்கேற்றதும், ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது மே 9 அன்று அரசாங்க குண்டர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடந்த அண்மைய பொது வேலை நிறுத்தமும் அதை வெளிப்படுத்தியுள்ளது. முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் பல்வேறு வகையான இனவாதங்களைத் தூண்டிவிட்டு வருகின்ற பல தசாப்த கால வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் இது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

4. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியே இலங்கையில் நடைபெற்று வரும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சியாகும். உலக முதலாளித்துவத்தின் பெரும் பொருளாதார நெருக்கடியை தொழிலாளர்கள் மீது சுமத்துவதில், அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் தொழிலாளர்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது கட்டவிழ்த்துவிட்டு வரும் தாக்குதலுக்கு எதிராகவே இந்த சர்வதேச எழுச்சி தலைதூக்கியுள்ளது. பூகோள முதலாளித்துவத்தின் இந்த நெருக்கடியானது கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் மேலும் உக்கிரமடைந்துள்ளது. உலகெங்கிலும் போலவே, இலங்கையிலும் இந்த வெகுஜன எழுச்சி, இராஜபக்ஷ அரசாங்கத்தின் மற்றும் முதலாளித்துவ ஆட்சியின் அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கியுள்ளது.

5. மே 9 அன்று, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியிலும் காலி முகத்திடலில் உள்ள பிரதான போராட்டத் தளத்திலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராஜபக்ஷ அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குண்டர்களால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலானது, எதிர்ப்பாளர்கள் மீது ஒரு பெரிய பாய்ச்சலை கட்டவிழ்த்துவிட அரசாங்கத்தால் திரை மறைவில் தயாரிக்கப்பட்டு வரும் சூழ்ச்சித் திட்டங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. இது, இராணுவம் மற்றும் பொலிசை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வாதிகார ஆட்சிக்கான தனது நகர்வுகளை தீவிரப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். காலி முகத்திடலில் பொல்லுகள் தடிகளுடன் வந்த குண்டர்கள், போராட்டத் தளத்திற்குள் நுழைவதற்கும், அங்கிருந்த கட்டமைப்புகளையும் கூடாரங்களையும் அழித்து, போராட்டக்காரர்களை கொடூரமாகத் தாக்குவதற்கும் அனுமதித்து, காலி முகத்திடலில் கடமையில் இருந்த பொலிசார் நடந்துகொண்ட விதம், பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட, முதலாளித்துவ அரசின் எந்தப் பிரிவுகளிடமிருந்து எந்தப் பாதுகாப்பையும் பெற முடியாது என்ற சக்திவாய்ந்த படிப்பினைகளை உழைக்கும் மக்களுக்கு கொண்டு வந்துள்ளது. அதற்குப் பதிலாக, உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை நசுக்குவதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதே இராணுவம் மற்றும் பொலிஸின் உண்மையான வகிபாகம் என்பது, றம்புக்கனையில் எரிபொருள் விலை உயர்விற்கு எதிராக நிராயுதபாணியாகப் போராடியவர்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தி, சமிந்த லக்ஷான் என்ற ஒரு தொழிலாளியைக் கொன்று டசின் கணக்கானவர்களை காயப்படுத்தியதில் இது மீண்டும் ஒரு முறை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

6. மே 09 குண்டர் தாக்குதல், அரசாங்கத்திற்கு எதிரான ஒரு மாதத்திற்கும் மேலான நீண்ட போராட்டத்தில் வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் பெரும் ஆபத்தை தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மற்றும் மிக முக்கியமாக, அரசாங்கத்தினால் ஏவிவிடப்படும் குண்டர்கள் மற்றும் முதலாளித்துவ அரசு எந்திரங்களான பொலிஸ் மற்றும் இராணுவத்தினதும் இத்தகைய தாக்குதல்களில் இருந்து, தம்மையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் பாதுகாக்க தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அரசியல் ரீதியில் தலையிட வேண்டியதன் அவசரத்தையும் வலியுறுத்தியுள்ளது. உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உட்பட அவர்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல் உட்பட அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தேவைகளைப் பாதுகாப்பதற்கும் இது அவசரமான அவசியமாகிறது. இந்தத் தேவைகளுக்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் மற்றும் அவற்றுடன் தொங்கிக்கொண்டிருக்கும் போலி-இடதுகளிடம் இருந்தும் விலகி, சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அனைத்து தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களிலும் உருவாக்க வேண்டும். நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்காக சோ.ச.க. முன்னெடுத்து வரும் போராட்டத்தை தீவு முழுவதும் இரட்டிப்பாக்க இந்த மாநாடு தீர்மானிக்கும். பெருந்தோட்டங்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் மத்தியில் அத்தகைய குழுக்களை அமைப்பதில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள கட்சியின் முயற்சியை இது மேலும் விரிவுபடுத்தும். நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதில் முன்முயற்சி எடுக்கும் உழைக்கும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், அதிகபட்ச அரசியல் உதவிகளை வழங்க கட்சி தயாராக இருக்க வேண்டும்.

7. நடந்துகொண்டிருக்கும் அரசாங்க-எதிர்ப்பு எழுச்சியில் தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த தலையீடும், மற்றும் அது முழு முதலாளித்துவ ஆட்சிக்கும் விடுக்கக் கூடிய சாத்தியமான அச்சுறுத்தல், இராஜபக்ஷ அரசாங்கத்தை மட்டுமன்றி, அதன் பாராளுமன்ற எதிர்க் கட்சிகளையும், பிரதானமாக ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) போன்றவற்றையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. அவற்றின் போலி-இடது ஒட்டுண்ணிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் உதவியுடன், வெகுஜன இயக்கத்தை சிக்க வைப்பதற்காக, 'இடைக்கால' அல்லது 'அனைத்து கட்சி' அல்லது 'தேசிய ஒற்றுமை' அரசாங்கத்தின் வடிவத்தில் ஒரு மாற்று முதலாளித்துவ அரசாங்கத்தை ஒன்றிணைப்பதில் அவர்கள் தங்களை மும்முரமாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். அத்தகைய மாற்று முதலாளித்துவ அரசாங்கம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகள் எதையும் தீர்க்காது என்று சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை கடுமையாக எச்சரிக்கிறது. பூகோள முதலாளித்துவத்தின் சிதைவின் சகாப்தத்தில், முதலாளித்துவம் வெகுஜனங்களுக்கு எந்தவொரு சமூக அல்லது ஜனநாயக உரிமையையும் உறுதிப்படுத்த முற்றிலும் இலாயக்கற்றது. இதனால்தான் அவர்கள் உள்நாட்டில் இராணுவ சர்வாதிகாரத்தையும் பாசிசத்தையும் மற்றும் சர்வதேச அளவில் மூன்றாம் உலகப் போரையும் தூண்டிவிட அச்சுறுத்துகின்றனர்.

8. முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் எந்தவொரு கட்சியையும், இராஜபக்ஷவின் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து எந்த அடிப்படையிலும் வேறுபட்ட பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை கொண்டிருக்கவில்லை. அதனால் தொழிலாள வர்க்கம் அவற்றை நம்பக்கூடாது. அவை அனைத்தும் முதலாளித்துவ வர்க்க ஆட்சியை எந்த விலை கொடுத்தும் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளதுடன் சர்வதேச நாணய நிதியம் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும். முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தை அணுகவில்லை என இராஜபக்ஷ அரசாங்கத்தை ஐ.ம.ச. விமர்சித்த அதே நேரம், ஜே.வி.பி மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சியும் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கும் நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டங்களுக்கும் தங்கள் ஆதரவை சமிக்ஞை செய்துள்ளன.

9. ஏப்ரல் 7 அன்று அதன் அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளபடி, சோ.ச.க., அரசாங்க எதிர்ப்பு போராட்ட இயக்கத்தின் கோரிக்கையான 'கோட்டா வெளியேற வேண்டும்!” என்ற “உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை ஆதரிக்கின்ற அதே வேளை”: 'அவருக்கு பதிலீடு என்ன? இராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்யக் கோருவது மட்டும் போதாது,” மற்றும் 'தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதில் ஒரு முக்கிய படிமுறையாக, எதேச்சதிகார அதிகாரங்களுடன், தொழிலாள வர்க்கத்தின் தலைகளுக்கு நேரே துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்றும் சோ.ச.க. கோருகிறது'.

10. காலிமுகத் திடல் போராட்ட ஏற்பாட்டாளர்களால் 'அரசியல் வேண்டாம்' என்ற கட்டளைக்கு எதிராகவும் சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கிறது. இது அந்த இயக்கத்தின் ஆபத்தான அரசியல் நோக்கு நிலையை வெளிப்படுத்துகிறது. முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகள் மீதும் உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளுக்கு மத்தியிலும் காணப்படும் பரவலான விரோதப் போக்கையும், அந்தக் கட்சிகளின் கீழ் ஏழு தசாப்தங்களுக்கும் மேலான ஆட்சி காலத்தில் அவர்களது கசப்பான அனுபவத்தையும் பிரதிபலிக்கும் அதே வேளை, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தங்களை அடித்தளமாகக் கொள்ள வேண்டிய புரட்சிகர சோசலிச அரசியலை நனவுடன் ஓரங்கட்டுவதற்காக, 'அரசியல் வேண்டாம்' என்ற கோஷம் நனவுடன் பயன்படுத்தப்படுகிறது. இராஜபக்ஷ அரசாங்கத்தினாலும் ஆளும் வர்க்கத்தினாலும், தங்களது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்களின் முன் அது தொழிலாளர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கும். அனைத்து வகையான பிற்போக்கு முதலாளித்துவ அரசியலையும் சரியாக நிராகரிக்கும் அதே வேளை, உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளுக்கு, இராஜபக்ஷ ஆட்சிக்கும் முதலாளித்துவ ஆட்சிக்கும் எதிராகப் போராடுவதற்கு ஒரு மாற்று சோசலிச அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டம் அவசரமாகத் தேவைப்படுகிறது.

11. கடந்த ஆண்டுகளில் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் முழு அனுபவமும், குறிப்பாக தற்போதைய அரசாங்க எதிர்ப்பு வெகுஜன இயக்கமும், இலங்கையில் அரசாங்கம் மற்றும் முதலாளிகளுக்கு சார்பான ஒரு தொழிற்துறை பொலிஸ் படையாக செயற்படுகின்ற தொழிற்சங்கங்களின் துரோகப் பாத்திரத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் அவர்களின் சமதரப்பினரும் இதையே செய்து வருகின்றனர். தொழிற்சங்ங்கள் பெருகிவரும் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கு செயற்பட்டுள்ளதோடு, தடுப்பதற்கான அவற்றின் முயற்சிகளையும் மீறி வேலைநிறுத்தங்கள் வெடித்த போதெல்லாம், அரசாங்கத்தினதும் முதலாளிமார்களதும் போலி வாக்குறுதிகளைப் பற்றிக்கொண்டு அவற்றை காட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன. கடந்த ஆண்டு 100 நாட்களுக்கும் மேலாக அரச பாடசாலை ஆசிரியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தத்தின் போதும், இலவச சுகாதாரத்துறை மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களின் போதும், தொழிற்சங்கங்கள் இதையே செய்தன. அரசதுறையில் பெரும்பகுதியில் வேலை நிறுத்தங்களை தடை செய்யும் இராஜபக்ஷவின் அடக்குமுறை அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டம் குறித்து அனைத்து தொழிற்சங்கங்களும் மௌனம் காக்கின்றன.

12. இந்த தொழிற்சங்கங்கள் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக தற்போது வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்புக்கள் சம்பந்தமாக வாரக்கணக்கில் மௌனம் காத்து வந்தன. இந்த பாரிய நெருக்கடி நிலைமைக்குள் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான தலையீட்டையும் துரோகத்தனமாக தடுத்து வந்தன. தொழிலாளர்களின் பெருகிய அழுத்தம் காரணமாக ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் இரண்டு பொது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், அந்த எதிர்ப்பு வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்த செயற்பட்டன. பின்னர் அவர்கள் மே 11 முதல் காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்திற்காக முதலில் விடுத்த அழைப்பை கைவிட்டனர். இதனால் மே 9 நடத்திய குண்டர் தாக்குதல் உட்பட அதன் கொடூரமான அடக்குமுறை திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மிகவும் பலவீனமான இராஜபக்ஷ அரசாங்கத்தின் கரங்களை பலப்படுத்தியது. கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் தபால் திணைக்களம் உட்பட பல பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாங்களாகவே காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பின்னரே மே 9 மாலை முதல் தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிரப்பந்திக்கப்பட்டன. எனினும் தொழிற்சங்கங்கள் இரண்டு நாட்களுக்குப் பின்னர் சமீபத்திய பொது வேலைநிறுத்தத்தை கைவிட முடிவு செய்தன. இதனால், இராஜபக்ஷ அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் உழைக்கும் மக்களின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வெகுஜன எழுச்சியை நசுக்குவதற்கான பிற்போக்கு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் முண்டு கொடுத்தன. தொழிற்சங்கங்களின் துரோகப் பாத்திரத்தைப் பற்றிய இந்த முழு கசப்பான அனுபவமும், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து வெளியேறி, நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலம் விஷயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலுவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

13. ஏப்ரல் 7 முதல் மே 10 வரை வெளியிடப்பட்ட கட்சி அறிக்கைகளின் தொடரில் விரிவாகக் கூறப்பட்டுள்ளபடி, சோசலிச சமத்துவக் கட்சியானது 'வெகுஜன மக்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைக் குழுக்களின் பணிகளை உயிர்ப்பிக்கும் திட்டம் மற்றும் கொள்கைகளை' பரிந்துரைக்கிறது. அவற்றில் பின்வருவன அடங்கும்: மக்களின் வாழ்கைக்கு இன்றியமையாத அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் மீது தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபித்தல் வேண்டும்; சிறு விவசாயிகள், மீனவர்கள், சிறு தொழில் முனைவோர் மற்றும் வணிகர்களின் கடனை இரத்துச் செய்ய வேண்டும்; வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் பிற பெரிய பிரதான பொருளாதார மையங்களை தேசியமயமாக்க வேண்டும்;, அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரிக்க வேண்டும்; IMF மற்றும் உலக வங்கியின் சிக்கனக் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும்.

14. ஏழை விவசாயிகள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவதற்காக, மேற்கூறிய வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகள் அடிப்படையில் நடவடிக்கை குழுக்களின் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டம், சர்வதேச சோசலிசக் கொள்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதை நோக்கி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் இந்தப் போராட்டம், தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாவதோடு தெற்காசியாவிலும் உலகளவிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதரர்களின் ஐக்கியத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.

15. இராஜபக்ஷ அரசாங்கமும் ஆளும் வர்க்கத்தின் ஏனைய பிரிவினரும் பல்வேறு வகையான இனவாதத்தை தூண்டிவிட மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக, தற்போதைய அரசாங்க-விரோத எழுச்சியில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளவாறு இனவாத பிளவுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கம் தனது ஐக்கியத்தை மேலும் பலப்படுத்துவதும் அவசியமாகும். இந்த புறநிலை வர்க்க ஐக்கியம் மற்றும் ஒத்துழைப்புக்கு தேவையான அரசியல் விளக்கத்தை வழங்க, சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஆயுதபாணியாக்க சோ.ச.க. போராட வேண்டும்.

16. இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆட்சிக்கும் எதிரான அதன் தீர்க்கமான போரில் இந்தியாவிலும், தெற்காசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதரர்களுக்கு விசேட வேண்டுகோள் விடுப்பதற்காக இலங்கை தொழிலாள வர்க்கத்தை சிந்திக்க வைக்க சோ.ச.க. முன்முயற்சி எடுக்க வேண்டும். மார்ச் 28-29 தேதிகளில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற முதலீட்டாளர்-சார்பு பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். கடந்த காலத்தில் இந்திய தொழிலாள வர்க்கம் நடத்திய தொடர் போராட்டங்களில் இது சமீபத்தியதாகும். இந்த அபிவிருத்திகள் இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான பொது போராட்டத்தில் ஐக்கியப்படுவதற்கு ஒரு சக்திவாய்ந்த அடித்தளத்தை வழங்குகின்றன.

கெய்ரோவின் தஹிர் சதுக்கத்தில் 4 பெப்பிரவரி 2011 அன்று நடந்த வெகுஜனப் போராட்டம் (Image: Wikipedia)

17. இலங்கை தொழிலாள வர்க்கம் 2011ல் எகிப்தில் அதன் வர்க்க சகோதர சகோதரிகளால் நடத்தப்பட்ட துணிச்சலான புரட்சிகரப் போராட்டத்தில் இருந்து பெறுமதியான படிப்பினைகளைப் பெற முடியும். இந்தப் போராட்டங்கள் முதலாளித்துவ முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் போலி இடது புரட்சிகர சோசலிஸ்டுகளின் (RS) கலவையால் கொடூரமாக காட்டிக் கொடுக்கப்பட்டதால் இராணுவ சர்வாதிகாரத்துக்கு வழியமைக்கப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மக்கள் எழுச்சியால் 2011ல் பல தசாப்த கால ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிய முடிந்தாலும், இராணுவம் முபாரக்கின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி முஹம்மது தந்தவியின் கீழ்.அதிகாரத்தைக் கைப்பற்ற்றியது. இதற்கு புரட்சிகர சோசலிஸ்டுகள் அரசியல் ரீதியாக தொழிலாள வர்க்கத்தை தேசிய முதலாளித்துவத்தின் பிரிவுகளுக்கு கீழ்ப்படுத்தி, இராணுவத்தின் மீதான மாயைகளை ஊக்குவிது வசதியேற்படுத்தி கொடுத்தனர். 2012 இல் இராணுவ ஆட்சியின் கீழ் நடைபெற்ற தேர்தல்களில், மக்கள் எதிர்ப்பை முஸ்லிம் சகோதரத்துவத்தின் (MB) பின்னால் திசை திருப்ப புரட்சிகர சோசலிசஸ்ட்கள் வேலை செய்ததன் மூலம் அது ஆட்சிக்கு வர உதவியது. 2013ல் முஸ்லிம் சகோதரத்துவ அரசாங்கத்திற்கு எதிராக வெகுஜன கோபம் வளர்ந்தபோது, புரட்சிகர சோசலிஸ்டுகள் மீண்டும் இராணுவத்தை ஆதரித்து, முபாரக்கின் முன்னாள் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் தலைமையில் மீண்டும் இராணுவம் ஆட்சிக்கு வர உதவியது. அவர், அன்றிலிருந்து எகிப்தை இரத்தக்களரி சர்வாதிகாரத்தின் மூலம் ஆட்சி செய்து வருகிறார். அவரின் கீழ் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அரசியல் எதிரிகள் மீதான ஒடுக்குமுறையில் ஆயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் படைகளை வீதியில் நிலைநிறுத்தியுள்ள அதேவேளை, அரசாங்கத்தை மறு ஒழுங்கமைப்பதற்கான இராஜபக்ஷவின் தொடர்ச்சியான சூழ்ச்சிகளும், ஜே.வி.பி. உட்பட பாராளுமன்றக் கட்சிகளின் இணக்கப்பாடும், போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சி ஆற்றிய துரோகப் பாத்திரமும், இந்த செயல்முறைகளை மீண்டும் இலங்கைக்குள் முன்னெடுக்க அனுமதிக்கின்றன. இத்தகைய பேரழிவை நிறுத்துவதற்கு, ஏற்கனவே இருக்கின்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோ.ச.க.வை, தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புவதே இப்போதுள்ள பணியாகும்.

18. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஆவுஸ்திரேலியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகள் உட்பட உலகெங்கிலும், தொழிலாள வர்க்கமானது ஒழுக்கமான ஊதியம், சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கும், பாதுகாப்பற்ற ஆபத்தான தொற்று நோய் நிலைமைகளுக்கு மத்தியில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கும் ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரால் தூண்டப்பட்ட இதே போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி அதிகரிப்புக்கும் எதிராகவும், வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இலங்கை தொழிலாள வர்க்கம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எழுச்சியின் ஒரு பகுதியாக இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதலுக்கு எதிரான தங்களது போராட்டங்களை நோக்க வேண்டும். அதற்காக இலங்கைத் தொழிலாளர்களால் கட்டமைக்கப்படும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் தொடக்கி வைக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் இணைக்கப்பட வேண்டும்.

19. இந்த அசாதாரணமான அரசியல் சூழ்நிலையில் சோ.ச.க.யை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் புரட்சிகரக் கட்சியாகக் கட்டியெழுப்புவது மிகவும் தீர்க்கமானதாகும். இந்த இலக்கை நோக்கி, நடப்பு வெகுஜன எழுச்சியில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மத்தியில் கட்சி காரியாளர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான தீவிர அரசியல் தலையீட்டின் மூலம் அடைந்த முக்கியமான முன்னேற்றங்களின் அடிப்படையில், சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட அதனது அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தை சோ.ச.க. மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க

Loading