முன்னோக்கு

பெருந்திரளான மக்கள் உயிரிழந்த இந்தியாவின் கோவிட் கொள்கைக்காக, குஜராத்தின் கொடூரக் கொலைகாரர் மோடியை பைடென் புகழ்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் நடந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பானின் 'நாற்கர உச்சி மாநாட்டில்' (Quad Summit) மூடிய கதவுக்குப் பின்னால் நடந்த அமர்வின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நடந்த ஒரு கருத்துப் பரிமாற்றம் வெளிவந்துள்ளது.

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI) வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 'இந்த கோவிட் பெருந்தொற்றை 'வெற்றிகரமாக' கையாண்டதாக பைடென் மோடியைப் 'புகழ்ந்தார்', அவர் இந்தியாவின் வெற்றியை கொரோனா வைரஸைக் கையாள்வதில் சீனாவின் ‘தோல்வி’ உடன் ஒப்பிட்டார்” என்று மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

PTI தொடர்ந்து குறிப்பிடுகையில், 'ஜனநாயகங்களால் சமாளிக்க முடியும் என்பதை மோடியின் வெற்றி உலகுக்குக் காட்டியுள்ளதாகவும், சீனா மற்றும் ரஷ்யா போன்ற 'எதேச்சதிகாரங்கள்' வேகமாக மாறி வரும் உலகைச் சிறப்பாக கையாள முடியும் என்ற கட்டுக்கதையை தகர்த்துள்ளதாகவும் பைடென் தெவித்தார்…'

இடமிருந்து: டோக்கியோவில் மே 24, 2022 செவ்வாய்க் கிழமை, கான்டேய் அரண்மனையில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடென், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானியப் பிரதமர் புமியோ கிஷிடா (AP Photo/Evan Vucci)

இந்தியாவின் 'வெற்றியை' அல்லது, அந்த விஷயத்தில், அதன் 'ஜனநாயக' தன்மையை எந்த அளவீட்டில் அவர் அளவிடுகிறார் என்பதை பைடென் கூறவில்லை. ஆனால் நாம் அந்த உண்மையை மீளாய்வு செய்வோம்.

43.2 மில்லியன் தொற்றாளர்களில், கோவிட்-19 ஆல் 525,000 க்கும் அதிகமான இறப்புகளே ஏற்பட்டதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறது. இந்த புள்ளிவிபரங்களே கூட அவை அளவில் ஒரு அதிர்ச்சியூட்டும் உயிரிழப்பாகும் என்றாலும், இந்திய அரசாங்கத்தைத் தவிர உலகளவில் இவை மிகப் பெரியளவில் ஒரு குறைமதிப்பீடாகும் என ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 'அதிகப்படியான இறப்புகள்' பற்றிய அதன் அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு (WHO) உண்மையான எண்ணிக்கை 3.3 மில்லியனுக்கும் 6.5 மில்லியனுக்கும் இடையில் இருக்கலாம் என்று மதிப்பிட்டது, ஒரு சராசரி மதிப்பீட்டின்படி 2020 மற்றும் 2021 இல் இந்தியாவில் 4.7 மில்லியன் பேர் இறந்துள்ளதாக அது மதிப்பிடுகிறது. உண்மையில் சொல்லப் போனால், கோவிட்-19 ஆல் உலகளவிலான மொத்த அதிகப்படியான உயிரிழப்புகளில் (14.9 மில்லியன்), இந்தியா கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

2020 மற்றும் 2021 இல் இந்தியாவின் மொத்த அதிகப்படியான இறப்புகளை 4 மில்லியனுக்கும் அதிகமாக பிரிட்டிஷ் மருத்துவ இதழான லான்செட் அதன் முந்தைய ஒரு அறிக்கையில் மதிப்பிட்டது.

ஆகவே, பைடெனின் கருத்துப்படி பார்த்தால், மோடி அரசாங்கத்தின் 'வெற்றி' என்பது, இந்த புவியின் எந்தவொரு நாட்டையும் விட அதிக கோவிட்-19 இறப்புகளை மேற்பார்வை இடுவது என்றாகிறது.

லான்செட் தகவல்படி பார்த்தால், அமெரிக்க மக்களில் வெறும் 1.13 மில்லியன் பேரைக் கொன்று 'வெற்றி' பெற்றுள்ள அமெரிக்காவை விட, இந்த விஷயத்தில், கேள்விக்கிடமற்ற அர்த்தத்தில், இந்தியாவின் செயல்திறன் கணிசமாக அதிகமாக இருப்பதால், அமெரிக்கா இரண்டாவது இடத்திற்கு வந்து விடுகிறது. ஆனால், மக்கள்தொகை சதவீதத்தில் பார்த்தால், இறப்பு விகிதம் கிட்டத்தட்ட சமமாக உள்ளது.

பைடெனுக்கும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் நிதிய தன்னலக் குழுவுக்கும் உண்மையான வெற்றி என்னவென்றால், இந்த பெருந்தொற்று நெடுகிலும் இந்தியாவால் உற்பத்தியைத் தொடர்ந்து நடத்த முடிந்தது, அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள் உட்பட நாடு கடந்த பெருநிறுவனங்களின் முக்கிய உற்பத்தி ஆலைகள் அனைத்தும் செயல்பட்டன என்பது ஒன்றும் முக்கியத்துவத்தில் குறைந்ததில்லை. “சமூக பூட்டுதல்களில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதாக' மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, ஜூன் மாதம் உள்ளடங்கலாக, இந்தியாவில் வாகனத் துறை தொழிலாளர்களின் தொடர்ச்சியான பல வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன.

மோடியினது கொள்கையின் விளைவாக, இந்த வைரஸ் கட்டுப்பாடு இல்லாமல் பரவ அனுமதிக்கப்பட்டதுடன் நாடு முழுவதும் சுடுகாடுகளில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

மே 25, 2021 அன்று இந்தியாவின் ஸ்ரீநகரில் உள்ள சுடுகாட்டில், கோவிட்-19 காரணமாக இறந்த நபரின் எரியும் தீக்கு அருகில் குடும்ப உறுப்பினர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். (AP Photo/ Dar Yasin)

சீனாவின் 'தோல்வி' என்றால் என்ன? 2020 மற்றும் 2021 இன் மொத்த அதிகப்படியான இறப்புகள் 17,900 என்று லான்செட் மதிப்பிட்டுள்ளது, அதேவேளையில் தேசிய சராசரியின் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்டதை விட அந்த பெருந்தொற்றின் இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டில் மிகக் குறைவாக 68,000 பேர் இறந்ததாக உலகச் சுகாதார அமைப்பு குறிப்பிட்டது.

மோடியைக் குறித்து அவரது கருத்துக்களில் பைடென் குறிப்பிட்டது போல, சீனா (1.4 பில்லியன்) மற்றும் இந்தியாவின் (1.38 பில்லியன்) மக்கள்தொகை அளவு ஒப்பிடக் கூடியதே. ஆனால் லான்செட் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை சீனாவை விட 223 மடங்கு அதிகமாக உள்ளது. மிகக் குறைந்த மக்கள்தொகையுடன் (329 மில்லியன்) அமெரிக்காவிலான இறப்பு எண்ணிக்கை சீனாவை விட 63 மடங்கு அதிகமாக உள்ளது

கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலும் இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தி, உயிர்களைக் காப்பாற்றவும், அதன் மக்களுக்கு ஒப்பீட்டளவில் இயல்பான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் சீனாவால் முடிந்திருக்கிறது என்பதற்கான காரணம் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை அது அமல்படுத்தியதாகும். நிதி மூலதனத்தின் விடாப்பிடியான எதிர்ப்புக்கு முன்னால், இந்தக் கொள்கையைத் தொடர்வது என்பது, ஜூன் 1 இல் பகுதியாக திறக்கப்பட உள்ள ஷாங்காய் நகரில் ஓமிக்ரோன் வகையின் மிகச் சமீபத்திய வெடிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்ததில் வெற்றி பெற்றுள்ளது.

நரேந்திர மோடி மற்றும் அவரது ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின் 'ஜனநாயகத்திற்கு' திரும்புவோம். வடகிழக்கு மாநிலமான குஜராத்தில் 2002 இல் முதலமைச்சராக இருந்த போது, அங்கே நடந்த முஸ்லீம்-விரோத படுகொலையை மேற்பார்வை செய்துதான் அரசியல் ரீதியில் மோடி வளர்ந்தார் என்ற உண்மையை இப்போது உலகெங்கிலுமான முதலாளித்துவ ஊடகங்கள் புறக்கணித்து விட்டன.

ஹிட்லர் மற்றும் முசோலினியைப் புகழ்ந்துரைத்து 1925 இல் நிறுவப்பட்ட இந்து-தேசியவாத அமைப்பான பாசிச ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் (RSS) பொதுச் செயலராக சேவையாற்றிய பின்னர், 2001 இல் மோடி முதலமைச்சராக பதவியேற்றார். பிஜேபி இல் 1985 இல் மோடி பதவி ஏற்ற நிலையில், இக்கட்சி நடைமுறையளவில் RSS இன் அரசியல் அங்கமாகும்.

1947 பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான வகுப்புவாத வன்முறை சம்பவங்களில் குஜராத் படுகொலையும் ஒன்றாகும். இது இந்து யாத்ரீகர்கள் பயணித்த ஒரு இரயில் பெட்டியில் தீப்பிடித்ததும், பெப்ரவரி 2002 இன் பிற்பகுதியில் தொடங்கியது. ஒரு சிறிய ஆதாரமும் இல்லாமல், மோடி, பாகிஸ்தானையும் இந்தியாவில் உள்ள முஸ்லிம் “பயங்கரவாதிகளையும்” குற்றஞ்சாட்டினார். பின்னர் அவர் குஜராத்தில் ஒரு தாக்குதலுக்கு அழைப்பு விடுத்தார், இது படுகொலைக்கு மூடுமறைப்பாக பயன்படுத்தப்பட்டது.

மோடியின் பொலிஸ் அருகில் நிற்க, இந்து தீவிரவாதிகள், முன்கூட்டியே தயாரிக்கப்பட்டிருந்த முஸ்லீம்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளின் பட்டியல்களைப் பயன்படுத்தி, கற்பழிப்பு மற்றும் படுகொலை நடவடிக்கையைத் தொடங்கினர், அதில் ஏறக்குறைய 2,000 பேர் உயிரிழந்தனர், ஒட்டுமொத்தமாக தீ வைப்பு மற்றும் நாச வேலைகளால் 100,000 பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு ஆணையத்தின் முன் விளக்கம் அளித்தவர்கள் குறிப்பிடுகையில், 'இது வரையில் கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் படுகொலைகளில் இல்லாத ஆனால் பெரும்பாலான விஷயங்களில் இந்த முறை அப்பட்டமான ஆதாரத்துடன் இருந்த ஓர் உறைய வைக்கும் நுட்பம், ஆதாரங்களைத் திட்டமிட்டு அழிப்பதாக இருந்தது. ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான பாலியல் வன்முறைச் சம்பவங்களில், பாதிக்கப்பட்ட பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஆடையின்றி வரிசையாக நடக்க வைக்கப்பட்டார்கள், பின்னர் பலரால் கற்பழிக்கப்பட்டார்கள், பின்னர் அடையாளம் தெரியாத அளவுக்குத் துண்டு துண்டாக வெட்டி எரிக்கப்பட்டனர்,” என்று தெரிவித்தனர்.

2013 இல் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகையில், அந்த படுகொலைக்குப் பின்னர், மோடி அரசாங்கம் 'சமூக ஆர்வலர்களும் சம்பவங்களை நேரில் பார்த்தவர்களும் நீதி கோருவதில் இருந்து அவர்களை அதைரியப்படுத்த, அந்த கலகத்தில் ஈடுபட்டவர்களும் வன்முறையில் பங்கெடுத்தவர்களும், மாநில அதிகாரிகளிடம் இருந்து எந்த விடையிறுப்பும் இல்லாமல், அவர்களை மிரட்ட முடியுமென உணரும் வகையில் தண்டனை விலக்கீட்டுச் சூழலை உருவாக்கியது,” என்ற தீர்மானத்தைக் குறிப்பிட்டது.

இந்திய 'ஜனநாயகம்' இந்தளவுக்கு இருந்தது … உண்மையில் சொல்லப் போனால், 2005 இல் அமெரிக்க வெளியுறவுத் துறை, ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்தின் கீழ், “மதச் சுதந்திரத்தைக் கடுமையாக மீறுவதற்கு' பொறுப்பான வெளிநாட்டு தலைவர்களை நுழைய அனுமதி மறுக்கும் 1998 சட்டத்தைப் பயன்படுத்தி, மோடி அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய அவருக்கு நுழைவனுமதி வழங்க மறுக்கும் அளவுக்கு, அந்த அட்டூழியங்களில் மோடியின் நேரடி பங்கு மிகவும் மோசமாக இருந்தது.

2014 இல் மோடி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தான், அமெரிக்கப் பயணத் தடை நீக்கப்பட்டது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தரப்பில், அந்த வெகுஜனப் படுகொலையில் அவர் வகித்த பாத்திரம் ஒதுக்கி விடப்பட்டது, ஒபாமா நிர்வாகத்தால் மோடி இருகரம் நீட்டி வரவேற்கப்பட்டார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக, மோடி இந்திய பெருநிறுவன உயரடுக்கின் கொள்கையை அமல்படுத்தி உள்ள அதேவேளையில், குறிப்பாக சீனா உடனான அதன் மோதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு முக்கிய புவிசார் மூலோபாய கூட்டாளியாக சேவையாற்றி வருகிறார்.

இரண்டாவதாக கூறப்பட்ட விஷயம் தான் மோடி உடனான பைடெனின் கலந்துரையாடல்கள் மற்றும் அந்த ஒட்டுமொத்த 'நாற்கர உச்சி மாநாட்டின்' மையத்தில் இருந்தது. பைடென் நிர்வாகம் ஆசியாவில் அதன் போர் தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, சீனாவில் 'இனப்படுகொலை' பற்றி பேசுகிறது, அதேவேளையில் அது குஜராத்தின் பாசிச படுகொலையாளரை ஊக்கப்படுத்துகிறது. அதே நேரத்தில், அமெரிக்க நிதிய தன்னலக் குழு முடிவின்றி பாரிய நோய்த்தொற்று மற்றும் மரணங்களுக்கான கோவிட் கொள்கையைக் கோருவதால், அது இந்தியாவின் 'வெற்றியை' ஒரு முன்மாதிரியாகப் பாராட்டுகிறது.

இறுதியில், மோடியைக் குறித்த பைடெனின் கருத்துக்கள், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பாசாங்குத்தனம், குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலை ஆகிய ஒவ்வொன்றைக் குறித்த சுய-கண்டனமாக சேவையாற்றுகின்றன.

Loading