முன்னோக்கு

பைடெனின் ஆசியப் பயணம் சீனாவுடனான இராணுவ மோதலுக்குத் தயாரிப்பு செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி பைடென் நிர்வாகம் உக்ரேனில் ரஷ்யாவுடனான அதன் பினாமிப் போரைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கும் அதேவேளையில், சீனாவைப் பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தவும் மற்றும் அதனுடன் போருக்குத் தயாரிப்பு செய்யவும், பிரதான கூட்டாளிகள் மற்றும் மூலோபாய பங்காளிகளுடன் கூட்டுச் சேர்ந்து அமெரிக்கத் தலைமையிலான சீன மோதலை முன்னெடுக்க ஆசியாவுக்கான அவரின் முதல் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கிழக்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான இராணுவக் கூட்டாளிகளான தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கான பைடெனின் பயணம், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய சீனாவுக்கு எதிராகத் திருப்பப்பட்ட ஒரு மூலோபாயக் குழுவான, நாற்கரப் பாதுகாப்பு உரையாடலின் (Quadrilateral Security Dialogue) தலைவர்களுடன் நடக்கும் ஒரு சந்திப்பில் நாளை முடிவடையும்.

U.S. President Joe Biden, center right, with South Korean President Yoon Suk Yeol, center left, speaks at the Combat Operations Floor of the Osan Air Base, Sunday, May 22, 2022, in Pyeongtaek, South Korea. [AP Photo/Evan Vucci] [AP Photo/Evan Vucci]

தென் கொரியாவுக்குப் புறப்படுவதற்குச் சற்று முன்னர், ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்த நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்து மற்றும் சுவீடனின் முயற்சிகளை விவாதிப்பதற்காக, வெள்ளை மாளிகையில் பைடென் பின்லாந்து மற்றும் சுவீடன் தலைவர்களைச் சந்தித்தார். அவர் சனிக்கிழமை சியோலில், ஒரு நீடித்த போர் மூலம் ரஷ்யாவைச் சுற்றி வளைத்து பலவீனப்படுத்தும் நோக்கில், உக்ரேனுக்கான 40 பில்லியன் டாலர்கள்ரகள் இராணுவ உதவிப் பொதியில் கையெழுத்திட்டார்.

உக்ரேன் போரின் ஆரம்பத்தில் இருந்தே, பைடென் நிர்வாகம் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் பெய்ஜிங்கை ஒரு மத்தியஸ்தராகப் பட்டியலிடுவது பற்றிச் சிறிது பாசாங்கும் கூட செய்ததில்லை. மாறாக, ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்க மறுத்ததற்காக சீனாவை வாஷிங்டன் கண்டனம் செய்துள்ளது, பொருளாதாரத் தடைகளைக் கொண்டு அச்சுறுத்தியதுடன், ஒரு சிறிய ஆதாரமும் இல்லாமல், தைவான் மீது படையெடுக்கச் சீனா தயாராகி வருவதாக பெய்ஜிங்கைக் குற்றஞ்சாட்டியது.

'அவர் நிர்வாகம் ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போரை அரங்கேற்றி இருந்தாலும் கூட, சீனாவை எதிர்கொள்வதிலும் அமெரிக்கா ஒருமுனைப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதே' பைடென் பயணத்தின் நோக்கம் என்று நியூ யோர்க் டைம்ஸ் வாதிட்டது. ஆனால் அதிகரிக்கப்பட்டு வரும் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பு மற்றும் அதனுடன் இணைந்து பெய்ஜிங்கை பூதாகரமாகக் காட்டுவது என இவற்றுக்கும் தற்காப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் (Yoon Suk-yeol) உடனான பைடெனின் பேச்சுவார்த்தைகள் ஒட்டுமொத்தமாக இந்தப் பயணத்தின் நோக்கத்தை அடிக்கோடிட்டது — அதாவது, முக்கிய கூட்டு இராணுவ ஒத்திகைகளை மீண்டும் தொடங்குவது, தென் கொரியாவின் இராணுவத் திறன்களை அதிகரிப்பது மற்றும் செமிக் கண்டக்டர் போன்ற முக்கிய வினியோகச் சங்கிலிகளை ஒருங்கிணைப்பது, மோதல் சம்பவத்தில் எந்த விதத்திலும் பொருளாதார ரீதியில் சீனாவைச் சார்ந்திருப்பதை தடுப்பது ஆகியவையாகும்.

தென் கொரியா மற்றும் ஜப்பான் இரண்டுமே நீண்ட கால அமெரிக்க இராணுவ கூட்டாளிகள் என்பதோடு, பென்டகன் போர் திட்டமிடலுடன் ஒருங்கிணைந்த முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ளன. வட கொரிய அச்சுறுத்தல் என்ற சாக்குப்போக்கைக் கூறும் அதேவேளையில், இந்தக் கூட்டணிகளின் ஒருங்கிணைப்பும் பலப்படுத்தல்களும் சீனாவுக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஓர் அணு ஆயுதப் போருக்கான அமெரிக்க மூலோபாயத் தயாரிப்புகளில் முக்கிய அங்கமாக உள்ள தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் அமெரிக்காவின் ஏவுகணைத் தகர்ப்பு அமைப்புகளை இவ்விரு நாடுகளும் கொண்டுள்ளன. முக்கியமாக, அமெரிக்காவின் மத்திய தூர அணு ஆயுத ஏவுகணைகளை அவற்றின் எல்லைகளில் நிலைநிறுத்துவது குறித்து, இவ்விரு நாடுகளிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

போர் மொழியைப் பயன்படுத்தி, ஒரு மூத்த அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரி கடந்த வாரம் Defense One வலைத் தளத்திடம் கூறுகையில், ஐரோப்பா மற்றும் ஆசியா என இரண்டு முனைகளையும் அமெரிக்கா பேண முடியும் என்பதற்குப் பைடெனின் விஜயம் 'சாதகமான சான்று' என்றார். 'எல்லோரும் உக்ரேன் மீது கவனம் செலுத்தி வந்தார்கள், எங்களுக்குப் புரிகிறது, ஆனால் நாங்கள் இந்தோ-பசிபிக் பகுதியின் கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுடன் பணிபுரிவதை நிறுத்தி விட்டோம் என்று அர்த்தமல்ல, இந்தோ-பசிபிக் பகுதியில் எங்கள் வான்வழி மற்றும் கடல்வழி நடவடிக்கைகளை நாங்கள் நிறுத்தி விட்டோம் என்று அர்த்தமல்ல,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

“கடல் போக்குவரத்து சுதந்திரம்' என்ற போர்வையில் அமெரிக்கா தென் சீனக் கடலில் அதன் கடற்படை ஆத்திரமூட்டல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது, மிகச் சமீபத்தில் மே 10 இல் தைவான் மற்றும் சீனப் பெருநிலத்திற்கு இடையே ஒரு குறுகிய ஜலசந்திக்கு மத்தியில் ஒரு போர்க் கப்பலை அனுப்பியது.

ஆசிய விவாதங்களில் தைவான் மீது பைடென் நிர்வாகம் கவனம் செலுத்துவது குறிப்பாகக் கபடத்தனமாக உள்ளது. இதே விதமாக தான் ரஷ்ய இராணுவத்தை ஒரு நீடித்த மோதலில் சிக்க வைக்கும் வழி வகையாக உக்ரேனில் மாஸ்கோவை ஒரு போருக்குள் இழுத்து விட்டது, சீன ஆயுதப் படைகளுக்கான ஒரு சாத்தியமான புதைகுழியாக அமெரிக்கா தைவானைப் பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது.

ட்ரம்ப் எங்கே விட்டுச் சென்றாரோ அந்த இடத்திலிருந்து தொடங்கி, பைடென் ஆத்திரமூட்டும் விதமாக நீண்ட காலமாக பேணி வந்த ஒரே சீனக் கொள்கைக்குக் குழி பறித்தார், இந்தக் கொள்கையின் கீழ் பெய்ஜிங்கின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தைவான் உட்பட மொத்த சீனாவுக்கான சட்டபூர்வ அரசாங்கமாக அமெரிக்கா நடைமுறையளவில் ஏற்றுக் கொண்டிருந்தது. 1979 இல் சீனாவுடன் முறையான இராஜாங்க உறவுகளை நிறுவிய போது, அமெரிக்கா தைபே உடனான இராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொண்டு, ஒப்பந்தங்களைத் தரமிறக்கியது மற்றும் அத்தீவில் இருந்து அனைத்து இராணுவப் படைகளையும் அகற்றியது.

பைடென் கடந்தாண்டு உயர்மட்ட கூட்டங்களுக்கு இருந்த முந்தைய கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளதுடன், அமெரிக்க இராணுவப் 'பயிற்சியாளர்களை' தைவானில் நிறுத்தவும் ஒப்புதல் வழங்கி உள்ளார், தைவான் ஜலசந்தி மற்றும் அண்டைக் கடற்பகுதிகளில் அமெரிக்கக் கடற்படை நடவடிக்கைகளை அதிகரித்தார். தைவானுக்கு அருகே அதன் வான்வழி நடவடிக்கைகளை அதிகரித்ததன் மூலம் சீனா விடையிறுத்த போது, படையெடுக்கத் தயாரிப்பு செய்து வருவதாக வாஷிங்டன் சீனாவைக் குற்றஞ்சாட்டியது.

உண்மையில், சீனப் படையெடுப்புக்கு எதிரான ஏதேனும் போருக்காகத் தைவானை அமெரிக்கா நனவுபூர்வமாக ஆயுதமயப்படுத்தி வருகிறது, மிகப் பெரிய சீன இராணுவத்திற்கு எதிரான சமச்சீரற்ற போருக்காக ஆயுதங்களைக் கொள்முதல் செய்யுமாறு அது வலியுறுத்தி வருகிறது. அனைத்து படைப் பிரிவுகளுக்கான தலைமைத் தளபதி மார்க் மில்லி (Mark Milley) ஏப்ரலில் ஒரு காங்கிரஸ் சபை விசாரணையில் விசாரிக்கப்பட்ட போது, “ஆயுதம் உள்ள நாடாக' உக்ரேனிடம் இருந்து தைவான் ஒரு முக்கிய பாடத்தைப் பெற முடியும்,” என்றார்.

'உங்கள் எதிரி உங்கள் மீது படையெடுக்க முயன்றால், இராணுவ வயதுடைய ஒவ்வொரு ஆணும் [மற்றும்] பெண்ணும் ஆயுதம் ஏந்தி இருந்தால், அவர்களுக்குச் சிறிதளவு பயிற்சியும் இருந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்று மில்லி கூறினார். குறிப்பாக அவர்கள் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான அதிநவீன அமெரிக்க ஆயுதங்கள் ஏந்தி இருந்தால், அதனுடன் முடக்கும் விதமான பொருளாதார மற்றும் நிதியத் தடையாணைகளும் இருந்தால், என்பதையும் ஒருவர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் ஒரு மூத்த ஆய்வாளர் சார்லஸ் எடெல், வியாழக்கிழமை பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுத்துறைக் குழுவிடம் கூறுகையில், ஒரு சாத்தியமான சீனப் படையெடுப்பில் இருந்து தைவானை எவ்வாறு பாதுகாப்பது என்று யோசிக்கும் போது, நிர்வாகம் கட்டமைக்கக் கூடிய ஒரு நல்ல 'முன்வடிவை', உக்ரேன் போருக்கான அமெரிக்க மூலோபாயம் வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

யதார்த்தத்தில், தைவானை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அமெரிக்கா பரிசீலிக்கவில்லை, மாறாக சீனாவுடனான ஒரு போரில் தைவான் மக்களை எப்படி பீரங்கிக்குத் தீவனமாகப் பயன்படுத்துவது என்று பரிசீலித்து வருகிறது.

மூலோபாய யுரேஷிய நிலப்பரப்பு மற்றும் அதன் வளங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெறும் நோக்கிலும், அமெரிக்கா அதன் பிரதான அச்சுறுத்தல்களாகக் கருதும் ரஷ்யா மற்றும் சீனாவால் அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு வரும் எந்தவொரு சவாலைத் தடுக்கவும் நோக்கம் கொண்ட ஒரு மூலோபாயத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் பொறுப்பற்ற முறையில் பின்பற்றி வருகிறது என்ற உண்மையைப் பைடெனின் ஆசிய பயணம் அடிக்கோடிடுகிறது. அதன் வரலாற்று வீழ்ச்சியில், வாஷிங்டன் அதன் மேலாதிக்கத்தை வலுப்படுத்த இராணுவ வழிவகைகளை நாட தள்ளப்படுகிறது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஜனாதிபதி ஒபாமாவின் 'ஆசியாவை நோக்கிய முன்னோக்கில்' இருந்து தொடங்கி, அமெரிக்கா சீனாவை இராஜாங்க ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் இராணுவ ரீதியாகவும் பலவீனப்படுத்த மற்றும் சுற்றி வளைக்க முயன்றுள்ளது. இப்போது உள்நாட்டில் முன்னோடியில்லாத சமூக மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் வர்க்கப் போராட்டங்களின் மீளெழுச்சியால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பைடென் நிர்வாகம், உலகை அணு ஆயுதச் சக்திகளுடனான ஒரு மோதலைக் கொண்டு அச்சுறுத்தும் வகையில், ஐரோப்பாவைப் போரில் மூழ்கடித்துள்ளதுடன், ஆசியாவிலும் அதையே தயார் செய்து வருகிறது.

என்ன நடந்து வருகிறது என்பதை நன்கு உணர்ந்துள்ள தளபதி மார்க் மில்லி, உலகப் போருக்குத் தயாராக இருக்குமாறு மேற்கு முனை அமெரிக்க இராணுவப் பயிலகத்தில் பட்டம் பெற்ற மாணவர்களை எச்சரித்தார். 'நீங்கள் பணியமர்த்தப்படும் உலகம், வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு குறிப்பிடத்தக்க சர்வதேச மோதலுக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. மேலும் அதற்கான சாத்தியக்கூறு குறைந்து வரவில்லை, அதிகரித்து வருகிறது,” என்றார்.

சீனாவுடனான அமெரிக்கப் போர் ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பேரழிவாக இருக்கும். போருக்கு மூலக் காரணமான இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு சர்வதேசிய சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சீனா, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலுமான தொழிலாளர்களின் ஓர் ஒருங்கிணைந்த போராட்டம் மட்டுமே ஒரு பேரழிவுகரமான அணு ஆயுதப் போரை நோக்கி தலைதெறிக்க ஓடும் இந்த ஓட்டத்தை நிறுத்த ஒரே வழியாகும்.

Loading