பிரித்தானியாவின் ஜோன்சன் அரசாங்கம் சமூக வெடிப்புக்கு பயந்து வாழ்க்கைச் செலவு உதவி திட்டத்தை அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில் பிரித்தானிய அமைச்சர் ரிஷி சுனக் இன்று 15 பில்லியன் பவுண்டுகள் 'வாழ்க்கைச் செலவு ஆதரவு பொதி' ஒன்றை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சுனக் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட தனது வசந்தகால வரவு-செலவுத் திட்ட அறிக்கையை கிட்டத்தட்ட கிழித்தெறிந்தார். அது மோசமான வறுமையில் தள்ளப்பட்டவர்களுக்கு எந்த உதவியையும் மறுத்திருந்தது.

பிரித்தானிய அமைச்சர் ரிஷி சுனக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஒளிப்பதிவில் தனது வாழ்க்கைச் செலவுக்கான ஆதரவுப் பொதியை விளக்கினார் (Credit: screenshot-Rishi Sunak/Twitter)

'பொருளாதார மேம்படுத்தல்' எனக் கூறப்பட்டதில், சுனக் 15 பில்லியன் பவுண்டுகள் நிதி உதவியை அறிவித்தார். பணவீக்க உயர்வை மேற்கோள்காட்டி இது 'இந்த நாட்டின் மக்களுக்கு கடுமையான துயரத்தை ஏற்படுத்தும்' என்றார். அவர் 'யாருக்குப் போராட்டம் மிகவும் கடினமாக இருக்கிறதோ... மற்றும் யாருக்கு ஆபத்துகள் அதிகமாக இருக்கின்றனவோ... அவர்களுக்கு ஆதரவளிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்' என அறிவித்தார்.

14.5 மில்லியன் மக்கள் வறுமையில் வாடும் ஒரு நாட்டில், 2023 ஆம் ஆண்டில் மேலும் 250,000 குடும்பங்கள் 'ஏழ்மை நிலைக்குச் செல்லவுள்ள' நிலையில் கோடீஸ்வரரான சுனக் ஆழமாக வேரூன்றியிருக்கும் கஷ்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என பொருளாதாரத்திற்கும் சமூக ஆய்வுக்குமான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

'நலன்புரி திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்க்கைச் செலவுக்கு அரசு ஆதரிவளிக்கும் அளவுக்கு ஏற்கனவே வருமானம் குறைவாக உள்ள' எட்டு மில்லியன் குடும்பங்கள் ஒரு தடவை வாழ்க்கைச் செலவுக் கட்டணமாக 650 பவுண்டுகளை பெறுவார். எட்டு மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியதாரர் குடும்பங்கள் குளிர்கால எரிபொருள் கட்டணத்தை செலுத்த முடியாததால், 350 பவுண்டுகளை ஒருமுறை 'ஓய்வூதியம் பெறுவோர் வாழ்க்கைச் செலவு' பெறுவார்கள். சோதனை செய்யப்பட்ட ஊனமுற்ற நலன்களைப் பெறாத ஆறு மில்லியன் மக்கள்
150 பவுண்டுகள் மதிப்புள்ள 'வாழ்க்கைக்கான ஊனமுற்றோர் செலவுக்கான கட்டணத்தை' ஒருமுறை பெறுவார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, சுனக் ஒரு எரிசக்தி செலவு தள்ளுபடி திட்டத்தை அறிவித்தார். அதில் ஒவ்வொரு குடும்பமும் வெறும் 200 பவுண்டுகள் கடன்பெறத் தகுதியுடையதாக இருக்கும். இது நான்கு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இன்று அவர் இதை இரத்து செய்து, எரிசக்தி கட்டணங்களுக்கான உதவிக்காக ஒவ்வொரு வீட்டிற்கும் திருப்பிச் செலுத்த தேவையில்லாத 400 பவுண்டுகள் மானியமாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மேலும் 500 மில்லியன் பவுண்டுகளை உள்ளூராட்சி மன்றங்கள் வழங்கும் குடும்ப நிவாரண நிதிக்காக அமைச்சர் அறிவித்திருந்தார். அந்த நிதியை 1.5 பில்லியன் பவுண்டுகளாக அதிகரித்துள்ளார்.

'அசாதாரண இலாபம்' என்று சுனக் வர்ணித்த பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் இலாபத்தின் மீது தற்காலிகமாக 25 சதவீத வரி விதிப்பது இந்த திட்டத்திற்கு நிதியளிக்க உதவும். சில வாரங்களுக்கு முன்பு, டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதேபோன்ற தொழிற் கட்சியின் ஒரு திடீர் இலாப வரிக்கான பிரேரணைக்கு எதிராக வாக்களிக்களித்தனர். சுனக்கின் திடீர் இலாபங்களின் மீதான வரியானது, தொழிற் கட்சி முன்மொழிந்ததை விட இருமடங்காக இருப்பது பிரித்தானிய முதலாளித்துவம் எதிர்கொள்ளும் நெருக்கடியின் அளவைக்காட்டுகின்றது.

அப்படியிருந்தும் ஜோன்சன் அரசாங்கத்தின் வரியானது எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் இலாபத்தில் அரிதாகவே கைவைக்கும். 2022 இன் முதல் மூன்று மாதங்களில், Shell 7.2 பில்லியன் பவுண்டுகளும் மற்றும் BP 4.9 பில்லியன் பவுண்டுகளும் இலாபம் ஈட்டின. சுனக் அவர்களுக்கு, 'எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் வரலாற்றுரீதியாக மிகவும் இயல்பான நிலைக்குத் திரும்பும்போது, வரி படிப்படியாக நீக்கப்படும் மற்றும் இச்சட்டம் முடிவடையும் காலம் குறித்த விதியும் இணைக்கப்பட்டுள்ளது' என உறுதியளித்தார்.

சுனக்கின் அறிவிப்புக்கு 24 மணிநேரத்திற்கு முன்னர், 10 பில்லியன் பவுண்டுகள் ஆதரவுப் பொதி பற்றிய அறிக்கைகளை ஊடகங்கள் அறிவித்தன. இறுதியில், அரசாங்கம் மேலும் 5 பில்லியன் பவுண்டுகளைக் கொடுக்க வேண்டியது அவசியம் என கண்டறிந்தது. அந்தளவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்களை சமூகக் கஷ்டம் வாட்டி வதைக்கின்றது. சுனக்கின் நடவடிக்கைகள் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே அளிக்கும். எரிபொருள், உணவு மற்றும் எரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால், ஒரு முறை பணம் செலுத்துவது குறைகிறது.

டோரிக்களின் கணக்கீடுகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கையின் திடீர் தலைகீழ் மாற்றத்திற்கு பல காரணிகள் அடிப்படையாக உள்ளன.

சுனக் தனது மார்ச் மாத பொருளாதார அறிக்கையை வெளியிட்டதிலிருந்து, 40 ஆண்டுகளில் பிரிட்டனில் பணவீக்கம் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. மார்ச் மாதத்தில், பாவனையாளர்கள் பணவீக்கம் 7 சதவீதமாக இருந்து, இந்த மாதம் 9 சதவீதத்தை எட்டியது. வீட்டுச் செலவுகள் உட்பட மிகவும் துல்லியமான விலையதிகரிப்பு அளவீடு 9 சதவீதத்தில் இருந்து 11.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான பற்றுச்சீட்டுக்கள் 1,277 பவுண்டுகளிலிருந்து 1,971 பவுண்டுகளாக 693 பவுண்டுகளினால் உயர்ந்தது. முன்கூட்டியே பற்றுச்சீட்டுக்களை செலுத்துவோர், முக்கியமாக சமூகத்தில் மிகவும் ஏழ்மையானவர்கள், அவர்களின் பற்றுச்சீட்டுக்கள் 1,309 பவுண்டுகளிலிருந்து 2,017 பவுண்டுகளாக 708 பவுண்டினால் அதிகரித்துள்ளது.

நுகர்வோர் இதழான Which? இன் 21,000 உணவு மற்றும் பான தயாரிப்புகளின் பகுப்பாய்வு, டிசம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022 க்கு இடையில் இந்த தயாரிப்புகளின் பணவீக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சராசரியாக 3.14 சதவீதம் அதிகரித்துள்ளது எனக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் குறைந்தபட்சம் 265 பொருட்களின் விலை 20 சதவீதத்திற்கும் அதிகமான விலை உயர்வைக் கண்டுள்ளது.

Zoopla சொத்து இணைய தளத்தின்படி, பிரிட்டன் முழுவதும் வாடகைகள் கடந்த ஆண்டில் 11 சதவீதம் உயர்ந்து, மாதத்திற்கு கிட்டத்தட்ட 1,000 பவுண்டுகளை சராசரி தொழிலாளி தனது வீட்டு வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை வாடகைக்கு செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சுனக்கின் அறிக்கை, பிரதமர் போரிஸ் ஜோன்சனைச் சுற்றியுள்ள 'partygate' ஊழல் பற்றி புதன்கிழமை வெளியிடப்பட்ட மூத்த அரசு ஊழியர் சூ கிரேயின் உத்தியோகபூர்வ அறிக்கையுடன் ஒரேகாலத்தில் வெளிவருவது முன்னரே தீர்மானிக்கப்ப்பட்ட ஒன்று என்பதில் ஐயத்திற்கிடமில்லை. ஜோன்சன் மற்றும் சுனக் இருவரும் தொற்றுநோய்களின் போது டவுனிங் தெருவில் சட்டவிரோத மதுபான விருந்துகளால் பொதுமக்களின் கோபத்திற்கு இலக்காகியுள்ளனர். ஜோன்சன் இந்த வாரம் 'முன்னோக்கிச்செல்லும்' நேரம் என்று அறிவித்தார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை புறக்கணிப்பது ஒரு அரசியல் தற்கொலை என்பதை அவர்கள் கணக்கிட்டுள்ளனர்.

அத்தகைய பதிலின் அவசரத்தை இந்த வாரம் Ofgem இன் தலைமை நிர்வாகி ஜோனதன் பிரேர்லி வலியுறுத்தினார். அவர் நாடாளுமன்றத்தின் வணிகம், எரிசக்தி மற்றும் தொழில்துறை மூலோபாயக் குழுவிடம், அக்டோபரில் விலை உயர்வால் வீட்டு எரிபொருள் கட்டணங்கள் 2,800 பவுண்டுகள் வரை உயரக்கூடும் என்று கூறினார்.

எரிபொருள் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனாக இருமடங்காக அதிகரிக்கலாம் என அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்தார். E.ON energy பிரித்தானிய தலைவர் மிகையில் லூவிஸ் “வெளிப்படையாக, சிலர் விளிம்பில் உள்ளனர். அவர்களால் பணம் செலுத்த முடியாது. மேலும் அக்டோபரில் விலைகள் மீண்டும் உயர்ந்தவுடன் அது மோசமாகிவிடும்... எங்களுக்கு இன்னும் (அரசு) தலையீடு தேவை' என அறிவித்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், முதலாளித்துவத்தின் மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஜோன்சனும் சுனக்கும், 'வரி மற்றும் சோசலிசத்திற்கு செலவழித்தல்' என முன்னர் கண்டித்த நடவடிக்கைகளை இப்போது ஏற்றுக்கொண்டனர். நேற்றைய அறிவிப்பு ஆளும் பழைமைவாதக் கட்சியினரின் சில பிரிவினரிடையே சீற்றத்தை தூண்டியது. ரிச்சர்ட் டிராக்ஸ், 'சோசலிஸ்டுகளுக்கு சிவப்பு இறைச்சியை வீசுவது, வணிகங்கள் மீதான வரிகளை உயர்த்தி, அவர்களின் பணத்தை எங்கு முதலீடு செய்யவேண்டும் என்று கூறுவது பழமைவாதிகளின் வழி அல்ல' என்று அறிவித்தார். டோரிக்கு ஆதரவான Spectator இதழ், 'ரிஷி சுனக், வரி திருடன்' என்று கண்டனம் செய்தது.

அதிகரித்துவரும் வர்க்கப் போராட்டத்தின் மத்தியில் கட்டுப்பாடற்ற சமூக வெடிப்பு ஏற்படும் என்ற அச்சம்தான் சுனக்கின் அறிவிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது. சமீபத்திய வாரங்களில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் பணவீக்கத்தால் உந்தப்பட்ட வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் வெடிப்பு ஒரு எச்சரிக்கை அறிகுறியாக அவதானிக்கப்பட்டுள்ளது.

40,000 இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வாக்களித்ததை அடுத்து பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்திருப்பதை ஊடகத் தலைப்புச் செய்திகள் பிரதிபலிக்கின்றன. சுனக் தனது உரையைத் தயாரித்தபோது, Daily Mail “ஒரு வருட அதிருப்தி?” என்ற அச்சத்தை எழுப்பியது. “இந்த கோடையில் 2023-ஆம் ஆண்டு வரை இரயில் வேலைநிறுத்தங்கள் அலை வீசும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள், மருத்துவமனை சுத்திகரிப்பாளர்கள், குப்பை சேகரிப்பாளர்கள் மற்றும் பாரவூர்தி ஓட்டுநர்கள் ஆகியோரினதும் இதனுடன் கூடும் என எச்சரித்தது. எதிர்வரும் மாதங்களில் வெளியேற வேண்டும்' சுனக் தனது வாழ்க்கைச் செலவுப் பொதியை அறிவித்தபோதும், BT தொலைத் தொடர்பு தொழிலாளர்கள் 35 ஆண்டுகளில் முதல் தேசிய வேலைநிறுத்தத்தை தொடங்கத் தயாராகி வருகின்றனர். 1.3 பில்லியன் பவுண்டுகள் ஆண்டு இலாபம் ஈட்டும் நிறுவனத்திடமிருந்து குறைந்த பணவீக்க ஊதிய சலுகையை நிராகரித்த பின்னர் அடுத்த மாதம் வேலைநிறுத்த நடவடிக்கைக்காக அவர்கள் வாக்களிக்கவுள்ளார்கள்.

ஆளும் வர்க்கத்தின் முக்கிய கவலை என்னவென்றால், வர்க்கப் போராட்டம் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களால் பல ஆண்டுகளாக அதன் மீது சுமத்தப்பட்டிருக்கும் தளைகளை உடைக்க அச்சுறுத்துவதாகும்.

டோவரில் உள்ள P&O போராட்டக்காரர்கள் வேலை இழப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்(WSWS Media)

தொற்றுநோய் முழுவதும், தொழிற்சங்கங்கள் முதலாளிகளுடனும் அரசாங்கத்துடனும் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் மீது எப்போதும் மோசமான தாக்குதல்களை சுமத்தியுள்ளன. தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் British Airways, British Gas, Weetabix, Go North West, Tesco, Jacobs Douwe Egberts, P&O Ferries மற்றும் நாடாளாவிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் ஊழியர்களும் அடங்குவர்.

தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டங்களை நாசப்படுத்துவதை தொழிலாளர்கள் இனி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் எண்ணெய் சுரங்கத் தொழிலாளர்கள் வட கடலில் உள்ள 16 தளங்களில் முன்னறிவித்தலற்ற வேலைநிறுத்த நடவடிக்கையில் வெளிநடப்புச் செய்தனர். வேலைநிறுத்தக்காரர்கள் 'ஊதியப் புரட்சிக்கு' அழைப்பு விடுத்தனர். அதன் அமைப்பாளர்கள் தாங்கள் ஒரு நிறுவனத்தை மட்டும் குறிவைக்கவில்லை மாறாக 'உலகம் முழுவதும் உள்ள தொழில்துறையை' குறிவைப்பதாக அறிவித்தனர்.

Loading