மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கியதில் இருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரேனில் இருந்து வெளியேறியுள்ளனர். UN அகதிகள் உதவி அமைப்பு (UNHCR) இதை 'இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வேகமாக வளர்ந்து வரும் அகதிகள் நெருக்கடி' என விவரித்துள்ளது மற்றும் நான்கு மில்லியன் அகதிகளை எதிர்பார்க்கிறது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனிய குடிமக்களுக்கு ஒரு வருட காலத்திற்கு தற்காலிக பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், பிற நாடுகளிலிருந்து வரும் அகதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை, முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளின் 'திரளான வருகை' குறித்த உத்தரவை இயற்றியது, இது அனைத்து உறுப்பு நாடுகளாலும் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த உத்தரவு, அகதிகளுக்கு ஒரு சிக்கலான புகலிட நடைமுறைக்குள் செல்லாமல் ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் குடியிருப்பு, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். அகதிகளுக்கு சமூக நலன்கள், வீட்டுவசதி மற்றும் பள்ளி வயது குழந்தைகளுக்கு கல்விக்கான அணுகலுக்கு உடனடி உரிமைகளும் உள்ளன.
இன்றுவரை, போலந்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அகதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர், அவர்களில் பாதி குழந்தைகள். கடந்த வார இறுதியில் மட்டும், சுமார் 250,000 அகதிகள் உக்ரேனின் மேற்கு அண்டை நாடான போலந்துக்கு மெடிகா மற்றும் கோர்சோவா எல்லைக் கடவை வழியாக வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ருமேனியாவில் சுமார் 227,000 அகதிகள், ஹங்கேரியில் 163,000 மற்றும் ஸ்லோவாக்கியாவில் 114,000 அகதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இல்லாத மோல்டோவா, உக்ரேனில் இருந்து 250,000 க்கும் மேற்பட்ட மக்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், அகதிகளுக்கான உதவி, முக்கியமாக மக்களுக்கு உதவுவதற்கான பெரும் விருப்பம் கொண்டவர்களின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர் மற்றும் உதவி வழங்கும் தன்னார்வலர்களை மிகவும் அரிதாகவே ஒருங்கிணைக்கின்றனர். போலந்தில், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் நன்கொடைகளை வகைப்படுத்தவும் விநியோகிக்கவும், பயணங்களை ஒழுங்கமைக்கவும் அல்லது தங்குமிட வசதிகளை வழங்கவும் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான அகதிகள் உறவினர்கள், தெரிந்தவர்கள் அல்லது முன்னாள் அண்டை வீட்டாருடன் நேரடியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே போர் வெடிப்பதற்கு முன்பே, உக்ரேனில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குடியேறியவர்கள் போலந்தில் வாழ்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர்.
உக்ரேனில் இருந்து இதுவரை 37,500 அகதிகள் ஜேர்மனியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலோர் இரயிலில் பேர்லினுக்கு வருகிறார்கள், அங்கு குறிப்பாக தன்னார்வலர்கள் முதன்மையாக பாதுகாப்பு தேடும் மக்களுக்கு தங்குமிடம், உடை மற்றும் உணவு வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர்.
ஜேர்மனிய உள்துறை மந்திரி நான்சி ஃபேசர் (SPD) Bild am Sonntag இடம், 'நாங்கள் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறோம், கடவுச்சீட்டு ஒரு பொருட்டல்ல' என்று கூறினார், மேலும் உக்ரேனில் இருந்து வரும் அகதிகள் அனைவரும் அவர்களது தேசியத்தைப் பொருட்படுத்தாமல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். ஆனால் யதார்த்தம் முற்றிலும் வேறு மாதிரியாகத் தெரிகிறது.
ஜேர்மனிய-போலந்து எல்லையில் அகதிகளை முறையாக வரிசைப்படுத்துவது குறித்து Tageszeitung செய்தி வெளியிட்டுள்ளது. ஃபெடரல் காவல்துறையின் எல்லைக் காவலர்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட இரயில்கள் வழியாகச் சென்று, கருமையான சருமம் உள்ளவர்கள் தொடர்வதைத் தடுக்கிறார்கள். பிராங்பேர்ட்டில் (ஓடர்) தங்கள் அடையாளத்தை நிறுவுவதற்காக இரயில்களை விட்டு வெளியேற வேண்டிய அகதிகளின் எண்ணிக்கை ஏற்கனவே வியாழன் அன்று மூன்று இலக்க வரம்பில் இருந்ததை ஒரு போலீஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார், 'ஆம், அவர்களில் பெரும்பாலோர் ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.' எவ்வாறாயினும், கூட்டாட்சி காவல்துறை மக்களை அவர்களின் தோற்றத்தின் அடிப்படையில் நிறுத்துவதில்லை என்று செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார்.
இந்தக் கூற்று முற்றிலும் நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை. உத்தியோகபூர்வ தகவல்களின்படி, மத்திய போலீஸ் கூறியது போல், எல்லைக் காவலர்கள் 'free riders' என்று அழைக்கப்படுபவர்களைத் தேடுகிறார்கள். ஜேர்மனிக்கு செல்வதற்கு நிலைமையை 'சுரண்டிக்கொள்ளும்' நபர்களை இது குறிக்கிறது. பின்னர் அவர்கள் 'அங்கீகரிக்கப்படாத எல்லைக் கடத்தல்' என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள், இது சட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று காவல்துறை கூறுகிறது. சட்டபூர்வமாக விசா பெற முடியாத நிலையில் இருக்கும் அகதிகளை, இந்த மனிதாபிமானமற்ற குற்றமாக்கல் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாமல் காவல்துறையின் சட்டவிரோத 'இன விவரக்குறிப்புக்கு' வழிவகுக்கிறது.
அகதிகளின் தோல் நிறம் மற்றும் இன தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையிலான இந்த பாகுபாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள் கொள்கையின் பாசாங்குத்தனத்தை நிரூபிக்கிறது. உத்தியோகபூர்வ தகவல்களின்படி, உக்ரேனிய கடவுச்சீட்டு இல்லாதவர்கள் மற்றும் உக்ரேனில் வேலை செய்ய அல்லது படிப்பதற்காக வசிப்பவர்களுக்கும் தற்காலிக ஓராண்டு தங்குவதற்கான உரிமை வழங்கப்படுகிறது. இருப்பினும், உக்ரேனில் நிரந்தர வதிவிடத்தை நிரூபிக்கக்கூடிய ஆதாரம் தேவை. இந்த ஆதாரத்தை வழங்க முடியாத எவரும் விலக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, ஆப்கானிஸ்தான், சிரியா, செச்னியா, சோமாலியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு உக்ரேன் ஒரு போக்குவரத்து நாடாக இருந்து வருகிறது, அவர்கள் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவேற்பு ஆட்சியின் கீழ் இல்லை.
வரவேற்கப்படுபவர்கள் மற்றும் விரும்பத்தகாதவர்கள் என்று அகதிகளை பிரிப்பது ஏற்கனவே உக்ரேனில் நடைபெற தொடங்கிவிட்டது. பிரான்ஸ் 24 என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி, கடந்த வாரம் போலந்து எல்லையில் திருப்பி அனுப்பப்பட்ட ஆபிரிக்கா மாணவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டது.
கார்கிவ் நகரத்திலிருந்து தப்பி வந்த கினியாவைச் சேர்ந்த முஸ்தாபா பாகிய் சில்லா, 'எல்லையில் எங்களை நிறுத்தி 'கறுப்பர்களுக்கு அனுமதி இல்லை' என்று கூறினார்கள்' எனத் தெரிவித்தார்.
நைஜீரியாவைச் சேர்ந்த மைக்கல் மேலும் கூறியதாவது: “அவர்கள் ஆபிரிக்கர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். கருமையான சருமம் உள்ளவர்கள் மற்றும் ஐரோப்பிய கடவுச்சீட்டு இல்லாதவர்கள் எல்லையை கடக்க அனுமதிக்கப்படுவதில்லை. நாங்கள் கறுப்பாக இருப்பதால் நம்மை பின்னுக்கு தள்ளுகிறார்கள். இன்னும் நாம் அனைவரும் மனிதர்கள்தான். எங்கள் தோலின் நிறத்தைக் காரணம் காட்டி அவர்கள் எங்களைப் பாகுபாடு காட்டக் கூடாது.”
போலந்து எல்லைக் காவலர்களின் உத்தரவின் பேரில், ஐரோப்பியர் அல்லாதவர்களை திருப்பி அனுப்புவதாக உக்ரேனிய சிப்பாய்கள் தன்னிடம் கூறியதாக பாகிய் சில்லா மேலும் தெரிவித்தார்.
InfoMigrants செய்தித் தளம் உக்ரேனிய அதிகாரிகளால் நாடு கடத்தப்படவிருந்த பங்களாதேஷில் இருந்து வந்த அகதிகளைத் தொடர்புகொண்டது, அவர்கள் ஒரு போர் மண்டலத்தின் நடுவில் உள்ள மைகோலைவ் நகருக்கு அருகில் உள்ள நாடுகடத்தப்படும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மற்ற அகதிகள் Kivertsi நகருக்கு அருகில் ஒரு நாடு கடத்தல் வளாகத்தில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது, அதன் இடம் சமீபத்தில் உக்ரேனிய இராணுவத்தின் தளமாக மாற்றப்பட்டது. “ரஷ்யா முக்கியமாக இராணுவ தளங்களைத் தாக்கியுள்ளது. அதனால்தான் இங்கு குண்டுவெடிப்புக்கு பயப்படுகிறோம். இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருடன் அவர்கள் எங்களை இங்கு அடைத்து வைத்துள்ளனர்,” என்று ரியாத் மாலிக் தெரிவித்தார்.
உக்ரேனில் இருந்து அகதிகள் சமமற்ற முறையில் நடத்தப்படுவதை எதிர்கொண்ட, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இயக்குநர் ஜெனரல் அன்டோனியோ விட்டோரினோ, உக்ரேனை விட்டு வெளியேற விரும்பும் மூன்றாம் நாடுகளின் அகதிகளுக்கு எதிரான வன்முறை மற்றும் இனவெறி குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்: 'அப்பட்டமாகச் சொல்வதானால், அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது. இனப் பாகுபாடு, இனத் தோற்றம், தேசியம் அல்லது குடியேற்ற நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது.
எவ்வாறாயினும், கடந்த இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலந்து எல்லைக் காவலர்களால் பெலாரஷ்யன்-போலந்து எல்லையில் கண்ணீர்ப்புகை மற்றும் மிளகுத் தெளிப்புகளைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதைத் தடுத்த மக்களுடன் ஒப்பிடும்போது, உக்ரேனிய அகதிகள் வெளிப்படையாக சமமற்ற முறையில் நடத்தப்பட்டதை விட்டோரினோ குறிப்பிடவில்லை. பத்திரிகையாளர்களோ அல்லது உதவி நிறுவனங்களோ எல்லைப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குறைந்தது 15 அகதிகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளில் அகதிகளை எப்படியும் விரட்டியடிப்பதற்கான இடைவிடாத உறுதியின் காரணமாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட காடுகளில் உறைந்து அல்லது பட்டினியால் இறந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அகதிகள் வந்தடைந்த பின்னர் 'விரும்பப்படாத அகதிகளை' வரிசைப்படுத்துவதை தொடர்கின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த புதன்கிழமை ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜார்டோ, மூன்றாம் நாட்டுப் பிரஜைகள் ஹங்கேரிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், ஹங்கேரிய அரசாங்கம் 'அருகில் உள்ள விமான நிலையத்திற்கு போக்குவரத்தை மட்டுமே ஏற்பாடு செய்கிறது, இதனால் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியும்.' வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் இரக்கமின்றி நாடு கடத்தப்படுகிறார்கள்.
பல்கேரிய பிரதம மந்திரி கிரில் பெட்கோவ், வரவேற்கத்தக்க மற்றும் வரவேற்கத்தகாத அகதிகளுக்கு இடையிலான மனிதாபிமானமற்ற வேறுபாட்டை மிகத் தெளிவாக வெளிப்படுத்தினார். உக்ரேனில் இருந்து வரும் அகதிகள் 'நாங்கள் பழகிய அகதிகள் அல்ல' என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 'அவர்கள் ஐரோப்பியர்கள், புத்திசாலிகள் மற்றும் படித்தவர்கள், அவர்களில் சிலர் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட. எந்த ஐரோப்பிய நாடும் இவர்களுக்கு பயப்படுவதில்லை” என்றார்.
அகதிகள் குறித்து செய்தி வெளியிடும் பல ஊடகவியலாளர்களும் இதே இனவாதப் போக்கையே மேற்கொண்டனர். உக்ரேன் 'ஆப்கானிஸ்தான் அல்லது ஈராக்' போன்ற 'மூன்றாம் உலக நாடு அல்ல', ஆனால் 'ஐரோப்பிய மற்றும் நாகரீகமானவர்கள்' என்பதால் அந்த அகதிகள் வேறுபட்டவர்கள் என CBS மற்றும் BBC நிருபர்கள் வலியுறுத்தினர்.
அகதிகளை சமமற்ற முறையில் நடத்துவதற்கான முக்கிய காரணம் வெளிப்படையானது. உக்ரேனில் இருந்து வரும் அகதிகள் ரஷ்ய தலையீட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர். நேட்டோ, ரஷ்யாவிற்கு எதிரான அதன் ஆக்கிரமிப்பு போர் உந்துதல் மூலம் படையெடுப்பைத் தூண்டிவிட்டாலும், அகதிகள் 'ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு' பிரத்தியேகமாக பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே காட்டப்படுகிறார்கள். அவை, ரஷ்யாவின் அனைத்திற்கும் எதிராக விரோதத்தைத் தூண்டுவதற்கும், உக்ரேனுக்கு நேட்டோவின் ஆயுத விநியோகத்தை நியாயப்படுத்தவும், மறுஆயுதமாக்கல் மற்றும் போருக்கான திட்டங்களை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
இது முற்றிலும் பிற்போக்குத்தனமான ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் கொள்கையில் எதையும் மாற்றாது. இந்த நேரத்தில் உக்ரேனில் இருந்து வரும் அகதிகளுக்கு எல்லைகள் திறந்திருந்தாலும், அவர்கள் அவமானகரமான மற்றும் அடக்குமுறையான புகலிட நடைமுறையிலிருந்து விடுபட்டாலும், ஐரோப்பாவின் கோட்டைச் சுவர்கள் மற்ற அகதிகள் அனைவருக்கும் கடக்க முடியாததாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்தியதரைக் கடலில் மட்டுமே, ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டிவிடப்பட்ட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் நடந்த போர்களில் இருந்து தப்பியோடிய 1,500க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர்.
லிபியாவில், குறைந்தது ஒரு இலட்சம் அகதிகள் பயங்கரமான சூழ்நிலையில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் இருந்து தப்பிக்க முடிந்தால், அவர்கள் சிறிய ஊதப்பட்ட படகுகளில் மத்திய தரைக்கடல் வழியாக உயிருக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர் மற்றும் ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் நீரில் மூழ்கும் அல்லது கொடூரமாக வந்த இடத்திற்கே திருப்பப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.