மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த கட்டுரை முதலில் ட்வீட்டர் தொடர் பதிவுகளாக வெளியிடப்பட்டது.
இந்த போர் வரலாற்றாசிரியர்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை முற்றிலும் கொள்கை ரீதியான மற்றும் இடதுசாரி அடித்தளத்தில் எதிர்ப்பதற்கான காரணங்கள் உள்ளது. இதற்காக உக்ரேனின் கடந்த கால மற்றும் நிகழ்கால பாசிசத்தை அமெரிக்கா-நேட்டோ மூடிமறைப்பதை ஏற்க வேண்டும் என்பதில்லை.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பாசிசவாதி ஸ்டீபன் பண்டேரா, உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பான OUN-B மற்றும் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) ஆகியவற்றின் மீது முக்கிய படைப்புகளை எழுதியுள்ள வரலாற்றாசிரியர்களே கூட அமெரிக்க-நேட்டோ பிரச்சாரத்தின் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் சொந்த மேதமையைக் கைவிட்டு வருகிறார்கள்.
'இனப்படுகொலை, நாஜிசம் மற்றும் இரண்டாம் உலகப் போர் பற்றி எழுதிய அறிஞர்களின் உக்ரேன் மீதான அறிக்கை', வரலாற்றுப் பொய்மைப்படுத்தலுக்கான கோரிக்கைகளுக்குக் கல்வித்துறைசார் சமூகத்தின் குறிப்பிடத்தக்க பிரிவுகள் புத்திஜீவிதரீதியிலும் தார்மீகரீதியிலும் சமரசப்பட்டிருப்பதற்கு ஒரு அவமானகரமான எடுத்துக்காட்டாகும்.
இரண்டாம் உலகப் போரைப் பற்றிய ஒரு குறிப்புடன் தொடங்கும் அந்த அறிக்கை, ஒரு ரஷ்ய ஜனாதிபதி சுமார் 30 மில்லியன் சோவியத் பிரஜைகளின் உயிர்களை விலை கொடுக்கும் ஒரு பேரழிவை 'ஏற்படுத்த இருப்பது' அசாதாரணமானது என்பதைப் போல, புட்டினை 'அந்தப் போர் வரலாற்றுடன் தொடர்புபடுத்தி' இயல்புக்கு மீறி தாக்குகிறது.
அந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள், இனப்படுகொலை பற்றிய ஆய்வுக்காக தங்கள் தொழில் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என்பதோடு, அவர்கள் 'அந்தப் போரின் வரலாற்றுடன் தொடர்புடையவர்கள்' என்பதையும், அந்த போரின் மைய நிகழ்வே யூத இனப்படுகொலை என்பதும், அதில் பண்டேரா மற்றும் OUN-B ஒரு முக்கிய பங்கு வகித்தன என்பதையும் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த அறிக்கையில் கையொப்பமிட்டவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நாங்கள் உக்ரேனிய அரசு மற்றும் சமூகத்தை சிறப்பான ஒன்றென அடையாளப்படுத்தவில்லை. மற்ற நாடுகளைப் போலவே, அது வலதுசாரி தீவிரவாதிகளையும் வன்முறையான வெளிநாட்டவர் விரோத பேரினவாத குழுக்களையும் கொண்டுள்ளது. உக்ரேனும் அதன் வேதனையான மற்றும் சிக்கலான வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களைச் சிறப்பாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.”
அதன் வரலாற்றின் உள்ளடக்கத்தில், இந்த அறிக்கையானது உண்மையில் உக்ரேனிய அரசு மற்றும் சமூகத்தை சிறப்பான ஒன்றென அடையாளப்படுத்துகிறது. 'வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் வன்முறையான வெளிநாட்டவர் விரோத பேரினவாத குழுக்களை' கொண்ட 'எந்தவொரு மற்றைய நாட்டையும் போலவும்' உக்ரேன் இல்லை என்கிறது.
உக்ரேனிய தேசியவாதிகளின் நாஜி-ஒத்துழைப்புவாத அமைப்பு OUN இன் மாபெரும் தலைவர் (Providnyk) ஸ்டீபன் பண்டேரா தலைமையின் கீழ், பாசிச தேசியவாதிகளின் மரபு உக்ரேனில் அளப்பரிய அரசியல் மற்றும் கலாச்சார செல்வாக்கைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளது என்பது இந்த வரலாற்றாசிரியர்களுக்கு தெரியும்.
இந்த அறிக்கையில் கையொப்பமிட்டவர்களில் வரலாற்றாசிரியர் Grzegorz Rossolińsli-Liebe உம் உள்ளார், இவர் ஸ்டீபன் பண்டேரா: ஓர் உக்ரேனிய தேசியவாதியின் வாழ்வும் மற்றும் மறைவுக்குப் பின்னரும்—பாசிசம், இனப்படுகொலை மற்றும் வெறித்தனமான ஈடுபாடு என்ற தலைப்பில் 652 பக்கத்தில் வெளியான ஓர் அறிவார்ந்த முக்கிய படைப்பின் ஆசிரியர் ஆவார்.
இந்த புத்தகம் பண்டேராவின் இயக்கம் செய்த குற்றங்களை மட்டும் ஆவணப்படுத்தவில்லை. தற்கால உக்ரேனிய சமூகத்தின் பரந்த பிரிவுகளிடையே அவர் மீதுள்ள வெறித்தனமான ஈடுபாட்டையும் Rossolińsli-Liebe ஆய்வுக்குட்படுத்தினார்.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், அவர் எழுதுகிறார்: 'உக்ரேனிய தேசியவாதிகள் அல்லது சோவியத் ஒன்றியத்தின் மாவீரர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல நினைவுச்சின்னங்கள், பண்டேராவுக்கும் OUN மற்றும் UPA இன் 'வீரர்களுக்கும்' அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களால் பிரதியீடு செய்யப்பட்டன.
'பண்டேரா மற்றும் உக்ரேனிய புரட்சிகர தேசியவாதிகள் மீண்டும் மேற்கு உக்ரேனிய அடையாளத்தின் முக்கிய கூறுகளாக மாறிவிட்டனர்.
'அதிவலது நடவடிக்கையாளர்கள் மட்டுமல்ல, மாறாக உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட மேற்கத்திய உக்ரேனிய சமூகத்தின் முக்கிய நீரோட்டமும், பண்டேராவை ஒரு தேசிய மாவீரராக கருதியது… சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அவர் போராடியதற்காக அவர் நினைவு கௌரவிக்கப்பட வேண்டும்.'
Rossolińsli-Liebe பின்வரும் குறிப்பிடத்தக்க மற்றும் தொந்தரவான விபரங்களை வழங்கினார்: “உக்ரேனில் சோவியத்துக்குப் பிந்தைய நினைவு அரசியல் முற்றிலும் அரசியல் ஜனநாயக மதிப்புகளைப் புறக்கணித்ததுடன், வரலாற்றுக்கு எந்த விதத்திலும் மன்னிப்பு கோராத அணுகுமுறையை அபிவிருத்தி செய்யவில்லை.”
சோவியத்துக்கு பிந்தைய உக்ரேனின் அறிவுசார் வாழ்க்கை குறித்த இந்த அதிர்ச்சிகரமான வர்ணனையானது, 'சுதந்திர மற்றும் ஜனநாயக உக்ரேன்' பற்றி அந்த அறிக்கை குறிப்பிடும் எரிச்சலூட்டும் மற்றும் வரலாற்றுரீதியான மன்னிப்பு பற்றிய குறிப்புடன் எப்படி சமரசம் செய்து கொள்ளப்படுகிறது?
பனிப்போரின் போது அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுடன் பண்டேராவைப் பின்தொடர்ந்தவர்கள் ஏற்படுத்திக் கொண்ட குறிப்பிடத்தக்க சர்வதேச தொடர்புகள் மீதும் Rossolińsli-Liebe கவனத்தைக் கொண்டு வந்திருந்தார்.
'புதிதாக பிரகடனப்படுத்தப்பட்ட உக்ரேனிய அரசை ஏற்றுக் கொள்ளுமாறு கோரி, மாபெரும் தலைவர், டியூஸ், போக்லாவ்னிக் [உயர்மட்ட குரோஷிய நாஜி] மற்றும் காடிலோ [ஃபிராங்கோ] ஆகியோருக்குக் கடிதம் எழுதியிருந்த,” Iaroslav Stets’ko, “1966 இல் கனடாவின் வின்னிபெக் நகரில் கௌரவக் குடிமகனாக நியமிக்கப்பட்டார்.”
அந்த வரலாற்றாசிரியர் தொடர்ந்து குறிப்பிடுகிறார்: '1983 இல் அவர் அமெரிக்க தலைமை செயலகம் மற்றும் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டார், அங்கே ஜோர்ஜ் புஷ் மற்றும் ரொனால்ட் ரீகன் ஆகியோரால் மூன்றாம் ரைஹ்ஹின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அந்த 'சுதந்திர உக்ரேனிய அரசின் கடைசி பிரதமர்', வரவேற்கப்பட்டார்.
'1982 ஜூலை 11 இல்,” 'சிறைப்பிடிக்கப்பட்ட தேசங்களின் வாரத்தின் போது, 1941 இல் உக்ரேனிய தேசியவாதிகளின் இரண்டாம் மகாமாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட OUN-B இன் சிவப்பு-கறுப்பு கொடி, அமெரிக்க தலைமை செயலகத்தின் மேலே பறந்தது' என்று Rossolińsli-Liebe நினைவுகூர்கிறார்.
'இக்கட்டிடமானது, இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை பாசிசத்தை அல்ல, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அடையாளப்படுத்தியது. இதே கொடி தான், ஜூலை 1941 இல் யூத மக்கள் முறையின்றி கையாளப்பட்டு கொல்லப்பட்ட லிவெவ் நகர மண்டபம் மற்றும் பிற கட்டிடங்களிலும் பறந்தது என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை…'
உக்ரேனிய பாசிசத்தின் வரலாறு மற்றும் அதன் உண்மையான இழிவார்ந்த சமகாலத்திய முக்கியத்துவத்தை வைத்துப் பார்த்தால், வரலாற்றாசிரியர்கள் ஈடுபட்டுள்ள இந்த மன்னிப்பு வழங்கல் கோழைத்தனமானதைப் போலவே இழிவானதும் ஆகும்.
ரஷ்ய அரசாங்கம் அதன் சொந்த பிரச்சார பாணியில் வரலாற்று பொய்மைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளது, அதுவும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அக்டோபர் புரட்சியினது சர்வதேசியவாதத்தின் கடுமையான எதிர்ப்பாளரான புட்டின் ரஷ்ய தேசியவாதத்தை உக்ரேனிய தேசியவாதத்திற்கு எதிர் நிறுத்துகிறார்.
அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியங்கள், உக்ரேனில் உள்ள அவற்றின் பாசிச கூட்டாளிகள் மற்றும் ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்டமைப்பின் ஊழல் ஆட்சி ஆகியவற்றுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் நலன்களுக்காக, இந்த போட்டியிடும் தேசியவாத சொல்லாடல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.