முன்னோக்கு

உக்ரேன் போர்: கேட்கப்பட வேண்டிய கேள்விகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரு போரின் ஆழமான வேரூன்றிய இன்றியமையா காரணங்கள், ஒரு போர் எவ்வாறு தொடங்குகிறது என்பதில் அல்ல, மாறாக அது எவ்வாறு அபிவிருத்தி அடைந்து எதை நோக்கி செல்கிறது என்பதில் வெளிப்படுகின்றன. அமெரிக்க உள்நாட்டுப் போர் சம்டர் கோட்டை (Fort Sumter) மீது தாக்குதல் நடத்தியதால் ஏற்படவில்லை. ஆஸ்திரிய இளவரசர் ஆர்ச்ட்யூக் பெர்டினான்ட் படுகொலை முதலாம் உலகப் போரை ஏற்படுத்தவில்லை.

அந்த உள்நாட்டுப் போர் இறுதியில் அடிமைத்தனத்தை அழிப்பதாக இருந்தது (அதன் விளைவாக அமெரிக்காவில் நவீன முதலாளித்துவம் தடையின்றி வளர்ச்சி அடைந்தது) என்பது வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் தெளிவாக தெரியும். சாரயேவோவில் பெர்டினாண்ட் படுகொலை, நீண்ட காலமாக கொதித்துக் கொண்டிருந்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள் வெடிப்பதற்கு ஒரு தூண்டுதல் சம்பவத்திற்கும் சற்று கூடுதலாக இருந்தது என்பது 1914 இல் மிகவும் தொலைநோக்கு பார்வை கொண்ட மார்க்சிஸ்டுகளுக்கு, குறிப்பாக லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் லுக்செம்பேர்க் ஆகியோருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

உக்ரேன் மீதான படையெடுப்பு அமெரிக்கா-நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான மோதலாக வளர்ந்துள்ளது என்பது இப்போது வெளிப்படையாக உள்ளது. ஆனால், உக்ரேன்-ரஷ்யப் போர் பற்றிய வெறித்தனமான வெகுஜன கருத்துரைகளில், இந்த மோதல் வெடிப்பை ஒரு பரந்த புவிசார் அரசியல் மற்றும் வரலாற்று உள்ளடக்கத்தில் வைக்கும் எந்தவொரு முயற்சியையும் —உலக சோசலிச வலைத் தளத்திற்கு அப்பாற்பட்டு— காண்பது ஏறத்தாழ முழுமையாக சாத்தியமில்லை.

[AP Photo/Leon Neal]

நேட்டோவின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், மார்ச் 1, 2022, செவ்வாய்கிழமை, தாலினில் உள்ள ஒரு விமான தளத்தில் நேட்டோ துருப்புகளைச் சந்தித்தார் (Leon Neal/Pool Photo via AP)

மோதல் குறித்து அறிவிப்பதில், பத்திரிகையியலுக்கும் பிரச்சாரத்திற்கும் இடையேயான வேறுபாடு அழிக்கப்பட்டுள்ளது. எல்லாமே கருப்பு வெள்ளையில் காட்டப்படுகிறது, மேலும் மூளை வேலை செய்ய ஊடகங்கள் இடம் கொடுப்பதில்லை. சதாம் ஹுசைன், ஒசாமா பின்லேடன் மற்றும் ஸ்லோபோடன் மிலோசிவிக் என்று பெயர் கொண்ட அரக்கர்கள் இருந்ததைப் போல, புட்டின் என்ற ஓர் அரக்கரும் இருப்பதால் தான் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்தது என்று உலகெங்கிலும் கூறப்படுகிறது.

கற்றறிந்த கல்வியாளர்கள் —பல தசாப்தங்களாக சிக்கலான வரலாற்று காரணகாரிய பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பவர்களும் கூட— புத்திஜீவித வீழ்ச்சிக்கு உள்ளாகின்றனர், CNN, MSNBC மற்றும், நிச்சயமாக, நியூ யோர்க் டைம்ஸ் அவர்களுக்காக சிந்திப்பதாக அகமகிழ்கிறார்கள். தீவிரமான கேள்விகளுக்குப் பதில் வழங்கப்படுவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், தீவிரமான கேள்விகளே கூட முன்வைக்கப்படுவதில்லை.

இங்கே கேட்கப்படாத ஆனால் கேட்கப்பட வேண்டிய ஒரு சில கேள்விகள் உள்ளன:

1) இந்த பெருந்தொற்றால் தீவிரப்படுத்தப்பட்ட, (ரஷ்யா உள்ளடங்கலாக) ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு நெருக்கடிக்கும் மற்றும் இந்த போர் வெடிப்புக்கும் இடையிலான தொடர்பு என்ன?

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வான கோவிட்-19 பெருந்தொற்றுக்கும் போர் முனைவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போல் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. Economist பத்திரிகையின் மதிப்பீட்டின்படி, இந்த பெருந்தொற்று உலகம் முழுவதும் 20 மில்லியன் பேரைக் கொன்றுள்ளது. இது ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் வாழ்க்கையை ஆழமாக சீர்குலைத்துள்ளது, வேறெங்கையும் விட அமெரிக்காவில் இது அதிகமாக நடந்துள்ளது, இது உள்நாட்டுப் பதட்டங்களை வெளிப்புறமாக திசைதிருப்ப ஆளும் வர்க்கத்தின் தரப்பில் தீவிர முயற்சிக்கு இட்டுச் சென்றுள்ளது.

2) கடந்த 30 ஆண்டுகளாக, பெரும்பாலும் நேட்டோ ஒத்துழைப்புடன், அமெரிக்காவால் இடைவிடாமல் நடத்தப்பட்டுள்ள போர்களுக்கும், ரஷ்யாவுடன் வேகமாக தீவிரமடைந்து வரும் மோதலுக்கும் இடையிலான தொடர்பு என்ன?

'எதிர்காலத்தில் எந்தவொரு நாடும் உலகளாவிய போட்டியாளராக மேலெழக்கூடியதை' தடுக்கும் அதன் நோக்கத்தை அறிவித்து, 1992 இலேயே, அமெரிக்கா ஒரு மூலோபாய ஆவணத்தை ஏற்றது. 1990-91 பாரசீக வளைகுடா போரைத் தொடர்ந்து 1999 இல் சேர்பியாவுக்கு எதிராக போர் நடத்தப்பட்டது, 2001 இல் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு, 2003 இல் ஈராக்கிற்கு எதிரான இரண்டாம் போர், 2011 இல் லிபியாவுக்கு எதிரான போர் மற்றும் சிரியாவில் சிஐஏ ஆதரவிலான உள்நாட்டுப் போர் ஆகியவை நடத்தப்பட்டது.

ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒரு நேரடி மோதலுக்கு அமெரிக்கா பல ஆண்டுகளாக திட்டமிட்டு வந்துள்ளது என்ற, மூலோபாய ஆவணங்களில் ஆவணப்படுத்தப்பட்ட உண்மையைப் பற்றி ஊடகங்களில் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. 2016 இல் தொடங்கி, அமெரிக்கா அதன் அணு ஆயுதத் தளவாடங்களை மிகப் பெரியளவில் பல ட்ரில்லியன் டாலர் மதிப்பில் விரிவாக்கத் தொடங்கியது, இதில் அதிகமாக பயன்படுத்தத்தக்க, சிறிய பாதிப்புகளை ஏற்படுத்தும் போர்க்கள அணுஆயுதங்களை உருவாக்குவதும் உள்ளடங்கும். 2018 இல், அமெரிக்கா மத்தியதூர அணுஆயுத தளவாடங்கள் தடை ஒப்பந்தத்தில் (INF) இருந்து விலகியது மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரதான ரஷ்ய நகரங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கி சோதிக்கத் தொடங்கியது.

3) நேட்டோவைப் பரந்தளவில் விரிவாக்கி, அதன் படைகளை நூற்றுக்கணக்கான மைல்கள் கிழக்கு நோக்கி நகர்த்திய அமெரிக்கா, ரஷ்யாவுக்கு ஒரு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த போரைக் கருதுகிறதா? இந்த மோதலுக்கும் சீனாவுடனான மோதலுக்கும் என்ன தொடர்பு உள்ளது?

அமெரிக்க மூலோபாயவாதிகள் ரஷ்யாவின் இயற்கை வளங்களை நேரடியாக அணுகுவதற்காக அதை உடைக்க நீண்ட காலமாக கனவு கண்டுள்ளனர் என்பதை, செய்தி ஒளிபரப்புகளைப் பார்க்கும் போதும், முக்கிய செய்தித்தாள்களைப் படிக்கும் போதும், யாருக்குத் தெரியும்? பல ஆண்டுகளாக, பிரதான அமெரிக்க சிந்தனைக் குழாம்கள் 'ரஷ்ய ஆட்சியை சீர்குலைத்து', இறுதியில் ஆட்சி மாற்றக் கொள்கையைச் செயல்படுத்த பரிந்துரைத்துள்ளன. இந்த முயற்சிகள் வெற்றி பெறுமானால், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் மைய மூலோபாய போட்டியாளராக கருதும் சீனாவை இலக்கு வைத்த ஓர் உலகப் போருக்கான களமாகவும் ஆதார மையமாகவும் ரஷ்யாவை மாற்றிவிடக் கூடும்.

4) ஜேர்மனியின் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை மூன்று மடங்காக உயர்த்துவது மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அதன் ஆயுதப் படைகள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் திறம்பட அகற்றுவது என்ற ஜேர்மனியின் முடிவு உக்ரேன் போர் சம்பந்தமாக எடுக்கப்பட்ட திடீர் விடையிறுப்பு என்பதற்கு அதிகமாக வேறொன்றுமில்லையா? அல்லது நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட மீள்ஆயுதமயப்படுத்தலுக்கு இந்த போர் ஒரு சாக்குப்போக்கை ஜேர்மனிக்கு வழங்கி உள்ளதா?

ஒரு வரலாற்று திருப்பமாக, ஜேர்மனி அதன் இராணுவ செலவினங்களைப் பாரியளவில் விரிவாக்கியதுடன் சேர்ந்து, உக்ரேனுக்கு தாக்கும் ஆயுதங்களை அனுப்பியதன் மூலம், மோதல் பகுதிகளுக்கு ஆயுதங்கள் அனுப்புவதில்லை என்ற அதன் கொள்கையை இந்த வாரம் மீறியது. இது 2014 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கொள்கையை முடித்துக் கொள்வதாக இருந்தது, ஜேர்மனி 'உலக அரசியலின் பக்கவாட்டில் இருந்து மட்டும் கருத்து தெரிவிக்க முடியாத அளவுக்கு பெரியது' என்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் அப்போதைய ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் அறிவித்தார். அப்போதிருந்து, ஜேர்மனியை மீள்இராணுவமயப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சி இருந்துள்ளது, அதில் நாஜி போர்க்குற்றங்களைச் சிறுமைப்படுத்துவதற்கான பிரச்சாரம் உள்ளடங்கி இருந்தது.

ஜேர்மனி தனியாக இருக்கவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் ஒட்டுமொத்த வரலாற்றையும் முறித்துக் கொண்டு, அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஷின்ஜோ அபே, அந்நாட்டு எல்லையில் அமெரிக்க அணுஆயுதங்களை நிலைநிறுத்த முன்மொழிந்தார். கடந்த வாரம், சுவிட்சர்லாந்து நூற்றுக்கணக்கான ஆண்டு கால அதன் நடுநிலைமையை முறித்துக் கொண்டு, ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைத் தொடங்கியது, இது அரை மில்லினிய காலத்தில் முன்னோடியில்லா ஒரு நகர்வாகும்.

நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வந்த, புவிசார் அரசியல் உறவுகளில் இந்த பாரிய மாற்றங்கள், வெறுமனே உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கான ஒரு பிரதிபலிப்பு என்று ஒருவரால் நம்ப முடியுமா?

5) போரால் எந்த உலகளாவிய பெருநிறுவன மற்றும் நிதி நலன்கள் ஆதாயமடைகின்றன மற்றும் ரஷ்ய உடைவில் இருந்தும் மற்றும் யுரேஷிய பெருநிலத்தில் அதன் அளப்பரிய ஆதாரவளங்களைத் தடையின்றி அணுகுவதில் இருந்தும் எவை இலாபமடைகின்றன?

ரஷ்ய தன்னலக் குழுக்களைக் கண்டிக்கும் அதே வேளையில், ரஷ்யாவின் உடைவிலும் மற்றும் கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையிலான மூலோபாய பாதையை நேரடியாக அணுகுவதிலும் அமெரிக்க தன்னலக்குழுக்கள் கொண்டிருக்கும் நலன்களைக் குறித்து இந்த ஊடகங்கள் பேசுவதில்லை. ரஷ்யா உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வினியோகஸ்தராக விளங்குகிறது, இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராகவும், மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய நிலக்கரி ஏற்றுமதியாளராகவும், இரும்பு, தங்கம், பிளாட்டினம், அலுமினியம், தாமிரம் மற்றும் வைரங்களை அதிகளவில் வழங்கும் முக்கிய நாடாகவும் உள்ளது, இவை எல்லாம் போருக்கான முக்கிய உற்பத்தி உட்பட அனைத்து வகையான நவீன உற்பத்திக்கும் இன்றியமையாதவை ஆகும்.

6) சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் 'வரலாறு முடிந்தது' என்றும், அமைதி மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி என்றும் கூறி வாதிட்ட நேட்டோ முகாமுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு மோதல் வெடித்தது எப்படி?

இந்த மோதல் வெடித்திருப்பது, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் மற்றும் சீனாவில் முதலாளித்துவ அபிவிருத்தியும் அமைதி மற்றும் உலகளாவிய செழிப்புக்கான புதிய சகாப்தத்திற்கு இட்டுச் செல்லும் என்ற பொய்யான கூற்றுகளை உடைத்தெறிந்துள்ளது. மாறாக, கடந்த மூன்று தசாப்தங்களில் போர் மற்றும் உலகளாவிய மோதல்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன, இது அணுஆயுத மூன்றாம் உலகப் போராக அச்சுறுத்துவதற்கு ஒரு பீடிகையாக உள்ளது.

7) ஆனால் கேட்கப்படாத மிக முக்கியமான கேள்வி: இந்த மோதல் ஓர் அணு ஆயுதப் போராக மாறினால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? இந்த புவியில் என்ன மிஞ்சும்?

உக்ரேனில் இருந்து வரும் மூச்சுமுட்டும் போர் பற்றிய செய்திகளுக்கு மத்தியில், இதெல்லாம் எங்கே இட்டுச் செல்கின்றன என்று கேட்க ஊடகங்களில் யாரும் இல்லை. ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ இராணுவக் கூட்டணியில் இணைய உக்ரேன் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற 'புனிதக் கோட்பாட்டை' பாதுகாப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள் அணு ஆயுதப் போரையும் மனிதகுலத்தின் அழிவையும் ஆபத்தில் வைக்க விரும்புகிறார்களா? தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் எல்லா சமூகப் பிரச்சனைகளுக்கும் மத்தியில், இங்கே தான் ஒரு பிளவுக்கோடு வரைந்திருக்க வேண்டுமா?

உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத நெருக்கடியில் இருந்து போர் எழுகிறது என்ற உண்மையை அவை சுட்டிக்காட்டுவதால், இந்தக் கேள்விகள் எதையும் கேட்கவோ அல்லது பதிலளிக்கவோ முடியாது. ரஷ்ய தன்னலக்குழுவின் பிற்போக்குத்தனமான தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு, சோசலிஸ்டுகள் மற்றும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களால் எதிர்க்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைய நெருக்கடியை அதன் பரந்த வரலாற்று அரசியல் உள்ளடக்கத்தில் வைக்காத எந்தவொரு பகுப்பாய்வும் அதன் ஆழமான வேர்களை மறைக்க மட்டுமே உதவுகிறது.

உக்ரேன், ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அவர்கள் கண்களுக்கு முன்னால் கட்டவிழ்ந்து வரும் இந்த பேரழிவின் படிப்பினைகளைப் பெற வேண்டும் என்றும், போருக்கு அடிப்படை காரணமான இந்த முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து சமூகத்தில் சோசலிச மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தில் இணையுமாறும் உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது.

Loading