ஜோன்சன் அரசாங்கம் இங்கிலாந்தில் “கோவிட் உடன் இறக்கும்” உத்தியை பின்பற்றுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் “கோவிட் உடன் வாழும்” மூலோபாயத்தை பின்பற்ற தீர்மானித்துள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், அதை தொழிலாளர்கள் “கோவிட் உடன் இறப்பதற்கான” திட்டம் என்று சரியாக அழைக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார். அவர் இவ்வாறு அறிவித்தார்:

  • இன்று முதல், பள்ளி ஊழியர்களும் மாணவர்களும் வாரத்திற்கு இருமுறை பரிசோதனை செய்து கொள்வதற்கான வழிகாட்டுதல் முடிவடைகிறது.
  • இந்த வியாழக்கிழமை முதல், நோய்தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுதல், வழக்கமாக தொடர்புத் தடமறிதல் மற்றும் சுய-தனிமைப்படுத்தல் ஆதரவு கொடுப்பனவுகள் ஆகியவற்றுக்கான சட்டப்பூர்வ தேவைகள் முடிவடைகிறது.
  • மார்ச் 24 முதல், கோவிட் நோயாளிகளுக்கான ஊதிய ஒதுக்கீடுகள் முடிவடையும்.
  • ஏப்ரல் 1 முதல், பொது மக்களுக்கான இலவச சோதனைகள் முடிவடைகின்றன.

இந்தக் கொலைகாரக் கொள்கையை பாதுகாப்பதற்காக உச்சரிக்கப்படும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பொய்யை அடிப்படையாகக் கொண்டது. ஞாயிற்றுக்கிழமை, ஜோன்சன், “நாம் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு ஒரு படி நெருக்கமாக இருக்கிறோம் என்பதுடன், அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும், முடிவாக மக்களுக்கு அவர்களது சுதந்திரத்தை மீண்டும் வழங்குகிறோம்” என BBC க்கு தெரிவித்தார்.

பிரதமர் போரிஸ் ஜோன்சன் (நடுவில்) திங்களன்று டவுனிங் ஸ்ட்ரீட் செய்தியாளர் கூட்டத்தில் (வலதுபுறம்) சர் கிறிஸ் விட்டி மற்றும் (இடதுபுறம்) சர் பாட்ரிக் வாலன்ஸ் ஆகியோருடன் பேசுகிறார். (screentshot from video/Boris Johnson/Twitter)

பழமைவாத அரசாங்கத்தின் மூலோபாயம் அனைத்து பாதுகாப்புக்களையும் நீக்குவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது, அது ‘இயல்புநிலைக்கு’ வழிவகுக்காது.

அவசரநிலைகள் பற்றிய விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினர் பேராசிரியர் ராபர்ட் வெஸ்ட், டைம்ஸ் வானொலி இடம் பேசுகையில், அரசாங்கம் “தனது மக்களை பாதுகாப்பதற்கான சொந்தப் பொறுப்பை கைவிட” தீர்மானித்துள்ளது என்றும், “ஆண்டுக்கு 20,000 முதல் 80,000 வரையிலான கோவிட் இறப்புக்களுடன் நாடு வாழ வேண்டியிருக்கும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வது போல் தெரிகிறது, மேலும் உண்மையில் அதற்காக அது எதுவும் செய்யப் போவதில்லை” என்றும் தெரிவித்தார்.

உலகளவில் புறக்கணிக்கப்பட்ட மாநாட்டில் SAGE ஆல் பெப்ரவரி 10 அன்று அடிக்கோடிட்டுக் காட்டப்பட்ட நடுத்தர கால காட்சிகள் இன்னும் கடுமையான கவலைகளை எழுப்புகின்றன. பொது சுகாதார பீடத்தின் தலைவர் பேராசிரியர் மேகி ரே, இலவச பரிசோதனையின் முடிவை ‘புரிந்துகொள்ள முடியாதது’ என்று அழைத்தார். அதாவது, அரசாங்கத்தின் கொள்கைக்கு சரியான விஞ்ஞான அல்லது மருத்துவ அடிப்படை எதுவும் இல்லை.

ஜோன்சன் BBC நேர்காணலில் தனது உண்மையான உந்துதலை இவ்வாறு வெளிப்படுத்தினார். “எங்கள் தேவை மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் வேலைக்குத் திரும்ப வேண்டும்… நாங்கள் ஒரு மாதத்திற்கு 2 பில்லியன் பவுண்டுகள் வரை [பரிசோதனைக்கு] செலவழிக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

பெரும் பணக்காரர்களுக்கு, எந்தவொரு பொது சுகாதாரத் தலையீடும் அரசு மானியத்துடன் கூடிய இலாபக் குவிப்புக்கு இடையூறு விளைவிக்கும். அவர்களது ‘புதிய வழமை’ என்பது வைரஸை ஒழிப்பது பற்றியதல்ல, மாறாக வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணியிடங்களில் கோவிட்-19 க்கு அவர்களை வெளிப்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

“நீங்கள் இறக்கும் வரை வேலை செய்யுங்கள்” இயக்கத்தை, பிரிட்டனின் 95 வயதான இராணி அரசுடமை பிரச்சாரமாக பட்டியலிட்டுள்ளது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. “கோவிட் உடன் தொடர்ந்து பணியாற்றுவதாக இராணி சபதம் செய்கிறார்,” என்று டெய்லி டெலிகிராஃப் உற்சாகப்படுத்தியது; “95 வயது இராணியை கோவிட் தாக்கியது… ஆனால் அவர் தொடர்ந்து வேலை செய்வதாக சபதம் செய்கிறார்,” என்று சன் கூறியது; “இராணிக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, ஆனால் அவர் தொடர்ந்து செயலாற்றுகிறார்,” என்று மிரர் செய்தி வெளியிட்டது; தவிர்க்க முடியாமல் “இராணி அமைதியாக இருக்கிறார், மேலும் வேலையை தொடர்கிறார்,” என்று மெட்ரோ தெரிவித்தது; மேலும் டெய்லி மெயில் “இராணிக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது நம் அனைவருக்கும் உதாரணம்” என்று புகழ்ந்தது.

மன்னராட்சி உட்பட தீவிர அரசியல் நெருக்கடிகள் நிலவும் நேரத்தில் பிரித்தானிய அரச தலைவரின் உயிரைப் பணயம் வைப்பது நல்ல யோசனையா என்று பிரதான ஊடகங்களில் யாரும் கேள்வி எழுப்பாத அளவுக்கு ஆசிரியர்கள் வெறித்தனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இரண்டாவது பொய் என்னவென்றால், ஜோன்சனின் வார்த்தைகளில், “தனிப்பட்ட பொறுப்பை ஊக்குவிப்பதன்” மூலம் இப்போது கூட கோவிட்-19 ஐ சமாளிக்க முடியும் என்பதாகும். அவர் இழிந்த முறையில்: 'நாம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம்' என்று மேலும் கூறினார்.

சரியாக எப்படி செய்வது? என்ற கேள்விக்கு ஸ்கை நியூஸூக்கு நேற்று அளித்த பேட்டியில், வணிகத்துறை மந்திரி பால் ஸ்கல்லி, கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 'எந்தவொரு தொற்று நோயைப் போலவும் வீட்டிலேயே இருங்கள்... ஆனால் அது உங்களுடையது அல்லது உங்கள் முதலாளியைப் பொறுத்தது' என்று கூறினார். உண்மையில், இது முற்றிலும் 'முதலாளிகளுக்கு' இருக்கும், தொழிலாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட நோய்வாய்ப்பட்ட ஊதியம் மற்றும் சுய-தனிமைப்படுத்தல் கொடுப்பனவுகளுக்கு கூட அணுக முடியாமல் தொழிலாளர்கள் இரட்டிப்பு அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

இலவச சோதனை வசதி இல்லாமல், பெரும்பாலான மக்கள் தங்களுக்கு கோவிட் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய வழி இருக்காது. எனவே, வைரஸ் தடையின்றி பரவ அனுமதிக்கப்படும்.

மூன்றாவது பொய், ஓமிக்ரோன் மாறுபாடு மற்றும் தடுப்பூசி திட்டம் ஆகியவற்றின் கலவையானது கோவிட் காரணமான எந்தவொரு தீவிரமான அச்சுறுத்தலையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்கிறது. இங்கிலாந்து “வேறு உலகில் உள்ளது,” என்று ஜோன்சன் ஞாயிறன்று கூறினார். மேலும், “தடுப்பூசி அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டு தொற்றுநோய் பிரச்சினைகளை நான் தீர்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

ஜோன்சனும் அவரது ஆதரவாளர்களும்தான் “வேறு உலகில்” வாழ்கிறார்கள் அல்லது ஒருவரின் கட்டுக்கதையை விற்க முயற்சிக்கிறார்கள். ஓமிக்ரோன் இன்னும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையின் மீது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, மேலும் அதன் நீண்டகால தாக்கங்கள் பற்றி இன்னும் தெரியவில்லை. கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்திற்கான முக்கிய கருவியான தடுப்பூசிகள், பிற பொது சுகாதார நடவடிக்கைகளை அகற்றுவதன் மூலம், தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, வைரஸ் பரவலாக பரவுவதற்கும் புதிய மாறுபாடுகள் உருவாவதற்கும் அனுமதிக்கிறது.

அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞான அதிகாரி சர் பாட்ரிக் வாலன்ஸ் நேற்று ஒப்புக்கொண்டது போல், அடுத்த மாறுபாடுகள் குறைந்த வீரியத்துடன் இருப்பதற்கு “எந்த உத்தரவாதமும் இல்லை.” மேலும், “மேலதிக மாறுபாடுகள் தோன்றும், அவை மிகுந்த வீரியமுள்ளவையாகவும் இருக்கலாம் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

ஓமிக்ரோன் மாறுபாட்டின் மிகவும் பரவக்கூடிய BA.2 துணை மாறுபாட்டின் 1,000 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளன. டோக்கியோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் ஆரம்ப முடிவுகள், இது மிகவும் கடுமையானதாகவும், சிகிச்சைகளை எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் இருக்கலாம் என்று கூறுகிறது. மிகவும் கொடிய டெல்டா மற்றும் ஓமிக்ரோன் மாறுபாடுகளின் கலப்பினமான டெல்டாக்ரான் (Deltacron) இங்கிலாந்திலும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் தடுப்பூசிகள் இருந்தபோதிலும், தடுப்பூசியிலிருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தே வருகிறது. மூன்று கட்ட தடுப்பூசி பெற்றவர்கள் குறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு, அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு முதல் இரண்டு மாதங்களில் 91 சதவீதமாக இருந்தது நான்கு மாதங்களுக்குப் பின்னர் 78 சதவீதமாகக் குறைந்துள்ளதை கண்டறிந்தது. அவசர சிகிச்சை பெறுவதற்கு மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு, 87 சதவீதத்தில் இருந்து 66 சதவீதமாகக் குறைந்து வந்துள்ளது. ஐந்து மாதங்களுக்கு கூடுதலான காலத்திற்குப் பின்னர், செயல்திறன் 31 சதவீதமாகக் குறைந்தது, இருப்பினும் “சில தரவுகள் மட்டுமே கிடைப்பதால் மதிப்பீடு துல்லியமாக இல்லை” என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இங்கிலாந்தில் சுகாதாரத்துறை செயலர் சஜித் ஜாவிட் நேற்று அறிவித்த நான்காம் கட்ட தடுப்பூசி திட்டங்களின்படி, 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் மற்றும் வயோதிகர் பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.

SAGE ஆலோசகர் பேராசிரியர் வெஸ்ட், நெடுங்கோவிட் மற்றும் மருத்துவமனை அனுமதிப்புகளுக்கான பெரும் பொருளாதாரச் செலவுகளை கருத்தில் கொண்டு, “கோவிட் உடன் வாழும்” மூலோபாயம் செலவு குறைந்ததாக இருந்தால், அவர் “மிகவும் ஆச்சரியப்படுவார்” என்று டைம்ஸ்வானொலிக்கு தெரிவித்தார். இருப்பினும் இது திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் கொடூரத்தை குறைத்து மதிப்பிடுகிறது.

ஆரம்பத்தில் இருந்தே, அரசாங்கத்தின் விருப்பமான “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை, பணக்காரர்களின் இலாபத்திற்காக வயோதிகர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்களின் வாழ்க்கையை விலைகொடுப்பதாக உள்ளது. மேலும் அது சமூகப் பாதுகாப்புக் கொடுப்பனவுகளை தாக்குவதுடன், தேசிய சுகாதார சேவையின் குறைவான நிதியுதவி காரணமாக வயோதிகர்களையும் பலவீனமானவர்களையும் கவனிக்கும் எண்ணம் அதற்கு இல்லை என்பதையும் காட்டுகிறது. “இனி பூட்டுதல்கள் இல்லை. உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்!” என்று இழிவான முறையில் அக்டோபர் 2020 இல் ஜோன்சன் அறிவித்து தெளிவுபடுத்தியது போல், அவர்களின் இறப்புகள் ஒரு நேர்மறையான ஆசீர்வாதமாக பார்க்கப்படுகிறது.

தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்களால் ஜோன்சன் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற அவையில் அரைத் தூக்கத்தில் அவர் தனது அறிக்கையை வெளியிட்டார்.

தொழிற் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஒரு வாரத்தில் மறந்துவிடக்கூடிய சில சார்புக் கவலைகளை எழுப்பி, 'கோவிட் உடன் சிறப்பாக வாழ்வது' என்ற ஆபாசமான தொழிற் கட்சியின் வேலைத்திட்டத்துடன் அவற்றை எதிர்த்தார். இது அரசாங்கக் கொள்கையின் மிகவும் பொறுப்பான பதிப்பைக் குறிக்கும் நோக்கம் கொண்டது. அவர் பரிசோதனையைப் பற்றி குறிப்பிடுகையில், “நீங்கள் பத்து நிமிடங்களில் 2-1 நிமிடங்களுக்கு மேல் இருந்தால், உங்கள் சிறந்த பாதுகாவலர்களில் ஒருவரை நீங்கள் இழக்க வேண்டாம்” என்று கூறினார்.

இங்கிலாந்து “2-1 முன்னணி” வகை அல்ல, இங்கு 180,000 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச் செயலர் பிரான்செஸ் ஓ’கிரேடி, ஜோன்சனின் கருத்துடன் உடன்பட்டார்: 'நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்க்கையைத் தொடர ஆவலுடன் காத்திருக்கிறோம்.' பின்னர் அவர் தனது குற்றவியல் அரசாங்கத்திடம் 'இலவச சோதனையைப் பராமரித்து மேம்படுத்துவதன் மூலம் நாட்டையும் பொது சுகாதாரத்தையும் முதன்மைப்படுத்த வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார். இது, அவருக்கோ அல்லது எந்த தொழிற்சங்கத் தலைவருக்கோ நோயை எதிர்த்துப் போராடும் எண்ணம் இல்லை என்பதைக் காட்டுகிறது.

ஜோன்சனின் அறிவிப்பு குறிப்பாக இங்கிலாந்துக்கு பொருந்தும், அதேவேளை ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளின் அதிகாரப்பகிர்வு அரசாங்கங்கள் அவற்றின் சொந்த கால அட்டவணைகளை பின்பற்றுகின்றன. ஆனால் அவர்கள் டோரிகளுக்கு எதிராக எந்த அரசியல் வெற்றிகளை பெற முயற்சித்தாலும், தொற்றுநோய் காலம் முழுவதும் செய்ததைப் போலவே, அவர்கள் குறுகிய ஒழுங்கிற்குள் அதைப் பின்பற்றுவார்கள்.

தொற்றுநோயுடன் உள்நாட்டிலும், ரஷ்யாவிற்கு எதிரான போர் திட்டங்களுடன் வெளிநாட்டிலும், ஜோன்சன் அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் தொழிலாள வர்க்கத்தை பாதாளத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். கோவிட்-19 மற்றும் போர் அச்சுறுத்தலுக்கு எதிரான பொதுவான போராட்டத்தை தொழிலாளர்கள் அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டும். சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டம் மட்டுமே இதற்கான அடிப்படையாகும்.

Loading