“நிரந்தர” கோவிட்-19 தொற்றுநோய் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 250,000 இறப்புகளுக்கு வழிவகுக்கும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் நிகழும் கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை குறித்து அங்கு நிலவும் மௌனம் சிலிர்க்க வைக்கிறது. ஒட்டுமொத்த மாநில மற்றும் கூட்டாட்சி எந்திரமும் கோவிட் ஐ நிரந்தர நோய் என்று அறிவிக்கவும், மற்றும் தொற்று மற்றும் இறப்புக்கு எதிராக சிறிதளவு பாதுகாப்பை வழங்கிய அனைத்து உத்தரவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் முனைந்து விட்டன.

இது பல்வேறு கோவிட் கண்காணிப்பு அமைப்புக்களின் செவ்வாய்க்கிழமை புள்ளிவிபரங்களை மதிப்பாய்வு செய்கிறது.

BNO News, கோவிட் நோயால் செவ்வாயன்று 3,349 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது, அதாவது ஏழு நாள் சராசரியாக ஒவ்வொரு நாளும் 2,488 இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகிறது. ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் கோவிட் கண்காணிப்பு அமைப்பு, அதிகப்படி இறப்புக்களின் எண்ணிக்கை 2,777 என தெரிவித்துள்ளது, ஏழு நாள் சராசரி இறப்பு ஒரு நாளைக்கு 2,000 க்கு சற்று குறைவு என்று கூறுகிறது. நியூ யோர்க் டைம்ஸின் கோவிட் கண்காணிப்பு பிரிவு, அதிகப்படி இறப்புக்களின் பதினான்கு நாள் சராசரி 2,454 என அறிவித்தது. வோல்டோமீட்டர் கோவிட் தரவுத்தளம், அன்றைய தினத்தில் 2013 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. தினசரி இறப்புக்களின் ஏழு நாள் சராசரி இப்போது 2,121 என்கிறது.

மிகப்பெரிய கல்லறையில் தொழிலாளர்கள் சடலங்களைப் புதைக்கின்றனர் (Credit: AP Photo/John Minchillo) [AP Photo/John Minchillo]

ஆயினும்கூட, எந்தவொரு பிரதான செய்தி நிறுவனமும் இந்த மிக மோசமான புள்ளிவிபரங்களைப் பற்றி குறிப்பிடவில்லை. ஓமிக்ரோன் முதன்முதலில் அமெரிக்காவில் வெளிப்பட்டதிலிருந்து, 137,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதனால் நாட்டின் ஒட்டுமொத்த கோவிட் இறப்பு எண்ணிக்கை 950,000 ஐ நெருங்குகிறது. தற்போதைய போக்கின்படி, ஏப்ரல் மாதத்திற்கு முன்பாகவே ஒரு மில்லியன் பேர் இறந்திருப்பார்கள்.

ஒவ்வொரு நாளும் அரை மில்லியனுக்கு சற்று அதிகமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், 65 சதவீதத்திற்கு குறைவான மக்களுக்கே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி பிரச்சாரம் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், SARS-CoV-2 இன் புதிய மாறுபாடுகள், மக்கள்தொகையின் குறைந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி அதிக நோயெதிர்ப்பு-தவிர்க்கும் பண்புகளை உருவாக்குவதற்கான குறிப்பிட்ட அழுத்தங்கள் இருப்பதானது ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருக்கும்.

எவ்வாறாயினும், கூட்டாட்சி பொது சுகாதார அதிகாரிகளும் கொள்கை வகுப்பாளர்களும், இதுபோன்ற வாய்ப்புக்களைப் பற்றி விவாதிக்கவோ அல்லது நாடு முழுவதும் ஒவ்வொரு வீதியிலும் உள்ள ஒவ்வொரு வீட்டையும் கொரோனா வைரஸ் தடையின்றி அணுக அனுமதிக்கும் போது அதை ‘புதிய இயல்பு’ என்பதாக அழைப்பதற்கு பரிசீலிக்கவோ சிரமப்படுகிறார்கள்.

இது, கலிபோர்னியாவில் உள்ள Scripps Research நிறுவனத்தில் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியரான டாக்டர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் வழங்கிய “In the Bubble” போட்காஸ்ட் பதிவின் சமீபத்திய பிரிவில் எழுப்பப்பட்ட எரியூட்டும் கேள்வியாகும். இந்த நிகழ்ச்சியை, பைடென் நிர்வாகத்தின் கோவிட்-19 நடவடிக்கை ஒருங்கிணைப்பாளருக்கு இடைக்கால மூத்த ஆலோசகராக இருந்த ஆண்டி ஸ்லாவிட் தொகுத்து வழங்கினார். மேலும், இந்த விவாதம், டென்மார்க்கில் தொற்றுநோய்க்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முற்றிலும் கைவிடப்பட்டதன் தாக்கங்களை மையப்படுத்தியிருந்தது.

டென்மார்க்கில் மிக அதிகமான தடுப்பூசி விகிதங்கள் இருந்தாலும், கடந்த குளிர்காலத்தின் உச்சங்களுக்குப் பின்னர் நிகழாத அளவிலான நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் மட்டங்களை அந்நாடு எதிர்கொள்ளும் நிலையில் கூட இது மேற்கொள்ளப்படுகிறது.

ஆண்டர்சன் “SARS-CoV-2 இன் அருகாமை தோற்றுவாய்கள்,” (“Proximal Origins of SARS-CoV-2”) என்ற கட்டுரையை எழுதியுள்ளார், இது வைரஸ் ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது அல்லது வேண்டுமென்றே பரப்பப்பட்டது என்ற கருத்துக்கு எதிரான விஞ்ஞானபூர்வ ஆதாரங்களை கவனமாக மதிப்பாய்வு செய்கிறது. இந்த வார போட்காஸ்டில், டென்மார்க்கின் நடவடிக்கை பற்றி அவர் இவ்வாறு கூறினார்:

பிரச்சினை என்னவென்றால், அதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும், டென்மார்க் போன்ற ஒரு நாட்டில், மேலும் அதன் அர்த்தம் என்னவென்றால் உதாரணமாக, 2019 ஆம் ஆண்டுக்கு நாம் திரும்பிச் சென்றால், ஒவ்வொருவரும் வருடத்திற்கு இரண்டு முறையாவது நோய்தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று எதிர்பார்க்கலாம் என்பதே அநேகமாக அதன் அர்த்தமாகும். இதன் விளைவாக ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், இது சாதாரண சளி அல்லது காய்ச்சலாக இருக்காது என்பதையும் நாம் யதார்த்தமாக அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லாவிட் இந்த சிலிர்க்க வைக்கும் கருத்தாய்வைத் தொடர்ந்தார்:

பாருங்கள், அவர்கள் அதைச் சொல்ல விரும்பவில்லை என்றே நான் நினைக்கிறேன், இதில் மறைமுகமாக இருப்பது, குறைந்தபட்சம் அமெரிக்காவில், ஒரு வருடத்திற்கு 200,000 முதல் 250,000 வரை இறப்புக்கள் நிகழும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டதாக நான் நினைக்கிறேன்.

ஆண்டர்சன் மற்றும் ஸ்லாவிட் இருவருமே அத்தகைய அளவிலான மரணங்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்கு தொடரலாம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

டாக்டர் எல்லி முர்ரே போன்ற தொற்றுநோயியல் நிபணர்கள் கணித்தபடி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு நோய்தொற்று சுழற்சி முறை உருவாகும், அதாவது குளிர்காலத்தில் எழும் தீவிர ஆதிக்கம் செலுத்தும் நோய்தொற்று அலையைத் தொடர்ந்து கோடை மற்றும் இலையுதிர் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு சிறு அலைகள் உருவாகும் என்பதாகும். ஓமிக்ரோன் அலை ‘இலேசானது’ என்று கூறப்பட்டாலும், அதனால் நாம் எதிர்கொண்ட மரணத்தின் அளவு மிகப்பெரியது, மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் அமெரிக்காவில் வருடாந்திரம் 250,000 இறப்புக்கள் நிகழும் என்ற மதிப்பீடு குறைவானதாக இருக்கலாம் என்பதையும் நமக்கு தெரிவிக்கிறது.

மேலும், கடந்த பல மாதங்களின் நிகழ்வுகளானது குழந்தைகள் நோய்தொற்றால் கணிசமாக பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கான ஏராளமான புறநிலை ஆதாரங்களை வழங்கியுள்ளன. ஓமிக்ரோன் அலையின் போது குழந்தைகள், அதிலும் குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் உச்சபட்ச எண்ணிக்கைகளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதை காண முடிந்தது.

CDC தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 539 குழந்தைகள் கோவிட்-19 க்கு பலியாகியுள்ளனர், இது பெரும்பாலும் பள்ளிகள் மீளத்திறக்கப்பட்டதன் பின்னர் ஆண்டின் இரண்டாம் பகுதியில் நிகழ்ந்துள்ளது. ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டில் காய்ச்சலால் மூன்று குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, வைரஸ் நோய்தொற்றுக்களுக்கு இடையிலான வேறுபாட்டை மட்டுமே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மிகுந்த நம்பகமான வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் காற்றுப் பதனாக்கம் ஆகிய தேவைகளை நிவர்த்தி செய்ய குறைந்தளவு உள்கட்டமைப்பு செலவினங்களைச் செய்து, அதேவேளை அனைத்து முகக்கவச கட்டுப்பாடுகளையும் நீக்கி, பள்ளிகளும் வணிகங்களும் முழுமையாக திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அது அப்பாவி மக்களின் வாழ்க்கையில் நிச்சயம் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

கூட்டாட்சி அரசாங்கமும் மாநிலங்களும் பொறுப்பற்ற வகையில் முகக்கவச கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு பதிலிறுப்பாக, 300 க்கும் மேற்பட்ட பொது சுகாதார நிபுணர்களும் மற்றும் வல்லுநர்களும் சேர்ந்து, “பள்ளிகளில் முகக்கவச கட்டுப்பாடுகளுக்கான முடிவை” மறுமதிப்பீடு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தும் ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டனர்.

அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளனர்:

கடந்த பல வாரங்களாக பள்ளிகளில் கோவிட்-19 தணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக குறைக்க சிறுபான்மையினர் தொடர்ந்து குரல்கொடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும், கேபிள் செய்திகளின் பண்டிதர்களும், மற்றும் தேசிய ஊடக நிறுவனங்களும் முகக்கவச கட்டுப்பாடுகளை ‘விரைந்து நீக்க’ அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த வார நிலவரப்படி, பல மாநிலங்கள் (கனெக்டிகட், மாசசூசெட்ஸ், நியூ ஜெர்சி, ரோட் தீவு போன்றவை) ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் பள்ளிகளுக்கு உள்ளே முகக்கவசம் அணியும் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளன. இருப்பினும், இந்த அழைப்புகள் தீவிரமாக திரட்டப்பட்ட விஞ்ஞானபூர்வ ஆதாரங்களால் வழிநடத்தப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் உட்புற முகக்கவச கட்டுப்பாடுகளை நீக்குவது என்பது – சமூக பரவல் மற்றும் மருத்துவமனை அனுமதிப்புகளுக்கு முற்றிலும் எதிராக- விஞ்ஞானப்பூர்வமற்றது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் 12.3 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றுக்களில் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் 2022 புத்தாண்டு தினத்திலிருந்து உருவாகியுள்ளன. தொடர்ந்து 27 வாரங்களாக, குழந்தை கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 100,000 க்கும் அதிகமாக உள்ளது. பள்ளிப் பருவ குழந்தைகள் மத்தியில் இறப்புக்கான ஆறாவது முன்னணி காரணியாக கோவிட்-19 மாறியுள்ளது.

இந்த புள்ளிவிபரங்களில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடையே இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களின் நீண்டகால தாக்கங்கள் இருப்பது உட்படுத்தப்படவில்லை. கோவிட் நோய்க்கு பின்னைய நோயறிகுறிகளின் நீண்டகால தாக்கம் பற்றியும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நெடுங்கோவிட் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களின் இளமைக் கால வாழ்வில் கணிசமான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

“In the Bubble” போட்காஸ்ட் முடிவடையும் போது, SARS-CoV-2 கொரோனா வைரஸ் மிகவும் பொருத்தமானதாக உள்ளது மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருமாறி அதனால் உயிர்வாழ முடிந்துள்ளது என்ற உண்மையை ஆண்டர்சன் வெளிப்படுத்தியமை, மக்களுக்கு அது ஏற்படுத்தக்கூடிய உடனடி ஆபத்துக்களை மட்டும் அடிக்கோடிட்டுக் காட்டவில்லை, மாறாக விடாப்பிடியாக அது நிலைத்திருக்கப் போவதையே சுட்டிக்காட்டுகிறது.

அவர் விவரித்தது போல், SARS-CoV-2 க்கு இயற்கையான தோற்றுவாய் உள்ளது. ஆனால், கொரோனா வைரஸின் தற்போதைய மாறுபாடுகளும், மற்றும் அது நிரந்தர நோய்தொற்றாக மாறுவதற்கான வாய்ப்பும் மனித செயல்பாட்டின் விளைவுகளால் உருவானவையே – அதிலும் குறிப்பாக, உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டின் மக்களையும் அவர்களின் வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தும் பெருநிறுவன ஆளும் உயரடுக்கின் நிதிய நலன்களை மேம்படுத்த உருவாக்கப்பட்டதான கொடிய மற்றும் பொறுப்பற்ற கொள்கைகளே அதற்கு காரணமாகும்.

Loading