மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உலகம் முழுவதும், முதலாளித்துவ அரசியல்வாதிகள் கோவிட்-19 இன் பரவலை மெதுவாக்கும் எஞ்சியுள்ள அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் அகற்றி வருகின்றனர். SARS-CoV-2 இன் ஓமிக்ரோன் மாறுபாடு சமூகத்தில் வைரஸ் 'நிரந்தர' (“endemic”) தொற்று ஆகிவிட்டது அல்லது எதிர்காலத்தில் அவ்வாறு செய்யும் என்று பொய்யாகக் கூறி பலர் அவ்வாறு செய்துள்ளனர். இந்த தவறான மற்றும் விஞ்ஞானபூர்வமற்ற கூற்றான, ஓமிக்ரோன் 'பாதிப்புகுறைந்தது' என்ற அறிக்கைகளின் தொடர்ச்சி என்னவென்றால், வைரஸ் இப்போது காய்ச்சல் அல்லது ஜலதோஷத்தை விட தீங்கு விளைவிப்பதில்லை எனப்படுகின்றது.
'நிரந்தரமான' என்ற சொல், கொடுக்கப்பட்ட புவியியல் பிராந்தியத்தில் கணிக்கக்கூடிய மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய நோயைக் குறிக்கிறது. கோவிட்-19 தொற்றுநோயின் பாதை இதற்கு நேர் எதிரானது.
இரண்டு மாதங்களுக்கும் மேலான காலப்பகுதியில், ஓமிக்ரோன் தொற்றுநோய்களின் உயர்மட்டத்தை அடைந்து மற்றும் உலகளாவிய இறப்புகளின் அடிப்படையில் டெல்டா எழுச்சிக்கு அடுத்ததாக உள்ளது. நவம்பர் மாத இறுதியில் இருந்து சுமார் 140 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வமாக கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையான எண்ணிக்கை 1 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. Economist இன் கருத்துப்படி, திங்களன்று ஓமிக்ரோனால் மேலதிகமான இறப்புகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 41,200 என்ற உச்சத்தை எட்டியது.
ஓமிக்ரோனால் சமூகத்தை கிழித்தெறிய அனுமதிப்பது 'நிரந்தரதன்மை' மற்றும் 'இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை' உருவாக்கும் என்ற கூற்றுகளுக்கு மாறாக, BA.2 ஓமிக்ரோன் துணை மாறுபாடு எதிர்வரவிருக்கும் வாரங்களில் தொற்றுக்களில் மற்றொரு உலகளாவிய எழுச்சியை ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறிகள் இப்போது அதிகரித்து வருகின்றன. இது BA.1 ஐ விட குறைந்தபட்சம் 30 சதவிகிதம் அதிகமான தொற்றுநோயாக இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் BA.1 ஓமிக்ரோன் தொற்று ஏற்பட்ட சில வாரங்களுக்குள் மக்களை மீண்டும் பாதிக்கலாம். BA.2 டென்மார்க் மற்றும் பிரித்தானியாவில் வேகமாக ஆதிக்கம் செலுத்தியதுடன் மற்றும் அமெரிக்காவில் விரைவாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் அதன் தொற்றுக்குகளின் சதவீதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
கோவிட்-19 'நிரந்தரமாகின்றது' என்று தவறான தகவலைப் பரப்புவதில் பெருநிறுவன ஊடகங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. திங்களன்று, நியூ யோர்க் டைம்ஸ் “கோவிட் நிரந்தமாவது பயணத்திற்கு எதனை அர்த்தப்படுத்துகின்றது?” என்று கேட்டது. செவ்வாயன்று, போர்ப்ஸ், 'தொற்றுநோய் இறுதிக்கட்டம்: 'நிரந்தரமான' கோவிட் என்றால் என்ன - மற்றும் நாம் எப்போது அதனை அடையலாம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஃபைனான்சியல் டைம்ஸ் “கோவிட் நோயுடன் வாழ்வது வலியற்றதாக இருக்கப் போவதில்லை” என தன் வாசகர்களை எச்சரித்தது.
கடந்த மாதத்தில், இதேபோன்ற டஜன் கணக்கான கட்டுரைகள் 'நிரந்தரமானது' என்ற வார்த்தையை தவறாகப் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில் அரசியல்வாதிகள் இந்த வார்த்தையை அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் நீக்குவதை நியாயப்படுத்த விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டனர்.
புதன்கிழமை, பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் பிப்ரவரி இறுதிக்குள் நீக்கப்படும் என்று அறிவித்தார். கடந்த மாதம், ஜோன்சன் “கோவிட் பரவி வரும் நிலையில், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மற்றவர்களிடம் கவனமாகவும் அக்கறையுடனும் இருக்குமாறு வலியுறுத்தும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் சட்டத் தேவைகளை நாங்கள் மாற்ற வேண்டும்” என அறிவித்தார்.
சுதந்திரத் தொடரணியின் (Freedom Convoy) பாசிச ஆதரவாளர்கள் கனடாவின் ஒட்டாவாவைத் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதால், அனைத்து கோவிட்-19 தணிப்பு நடவடிக்கைகளையும் நீக்குவதற்கான அவர்களின் கோரிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. அல்பர்ட்டாவில், பிரதமர் ஜேசன் கென்னி செவ்வாயன்று தனது மாகாணத்தில் தடுப்பூசிக்கான ஆதாரத்தை காட்டுவது புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையும் என்று அறிவித்தார். 'பரவலான தொற்றுநோய்க்கான பிரதிபலிப்பிலிருந்து முன்னேற வேண்டும், நம் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்' என்று கூறினார். மார்ச் நடுப்பகுதியில் கியூபெக்கில் கிட்டத்தட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும். பிரதமர் பிரான்சுவா லெகால்ட் செவ்வாயன்று, “நாங்கள் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இறுதியில் ஆறாவது அலைகூட இருக்கலாம். ஆனால் நாம் கோவிட் உடன் வாழ வேண்டும்” என்றார்.
ஸ்பெயினில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மத்தியில், பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் ஜனவரி மாதம் 'நாங்கள் இப்போது வரை இருக்கும் தொற்றுநோயை விட ஒரு நிரந்தர நோயை நோக்கி செல்கிறோம்' என்று கூறினார்.
அமெரிக்கா முழுவதும், ஓமிக்ரோன் எழுச்சியின் போது மீண்டும் நிறுவப்பட்ட அனைத்து முகக்கவச உத்தரவும் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அகற்றுவதற்கான பிரச்சாரத்தை ஜனநாயகக் கட்சி ஆளுநர்கள் தொடங்கியுள்ளனர். கலிஃபோர்னியாவில், ஜனநாயகக் கட்சி ஆளுநர் கவின் நியூசோம் திங்களன்று, அவரது நிரந்தநோய் திட்டத்தின்படி மாநிலத்தின் முகக்கவச உத்தரவு பிப்ரவரி 15 அன்று காலாவதியாகும் என்று அறிவித்தார். இது அடுத்த வாரம் முழுமையாக அகற்றப்பட்டுவிடும். பள்ளிகளில் முகக்கவச உத்தரவுகளை நீக்குதல் மற்றும் மீதமுள்ள மற்ற கோவிட்-19 தணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை, நியூயோர்க்கின் ஜனநாயக ஆளுநர் கேத்தி ஹோச்சுல், பெரும்பாலான உட்புற பொது கூடுமிடங்களுக்கான முகக்கவச உத்தரவுகளை மாநிலம் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தார். நியூ ஜேர்சி, டெலாவேர், கனெக்டிகட், மாசசூசெட்ஸ் மற்றும் பிற ஜனநாயகக் கட்சி தலைமையிலான மாநிலங்களில், பள்ளிகளில் முகக்கவச உத்தரவு இந்த வாரம் நீக்கப்பட்டது.
இந்த நகர்வுகள் பைடென் மற்றும் வாரந்தோறும் தேசிய ஆளுநர்கள் சங்கத்தை சந்திக்கும் வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியண்ட்ஸ் ஆகியோரால் தெளிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த வார கூட்டத்தைத் தொடர்ந்து, சங்கத்தின் துணைத் தலைவரான நியூ ஜேர்சி ஆளுனர் பில் மேர்பி செய்தியாளர்களிடம், “தொற்றுநோயிலிருந்து நிரந்தர நோய்க்கான பாதை எப்படி இருக்கும் மற்றும் நாங்கள் அதனை எவ்வாறு சமாளிப்பது?” என்ற கேள்வியை மையமாகக் கொண்டது என்று கூறினார். அவர் மேலும் 'அதுதான் எங்களுக்கு முன்னால் உள்ள பணி என்பதில் பரந்த உடன்பாடு இருந்தது' என்றார்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) முகக்கவச உத்தரவுகள் போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளை எப்போது நீக்குவது என்பது குறித்த அதன் வழிகாட்டுதல்களை மாநிலங்களுக்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக புதனன்று Politico வெளியிட்டது. பெருநிறுவன அமெரிக்காவின் தேவைகளுக்கு ஏற்ப விஞ்ஞானத்தை மீண்டும் மீண்டும் திரிபுபடுத்தும் CDC, கடந்த வாரம் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை (DHHS) இறப்புகள், மருத்துவமனை திறன் மற்றும் பல உட்பட மருத்துவமனைகளில் இருந்து தினசரி தரவுகளின் பரவலான தகவல்களை சேகரிப்பதை நிறுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ், நோய்த்தொற்று தரவுகளுக்கு பதிலாக மருத்துவமனையில் சேர்க்கும் தரவுகளின் அடிப்படையில் அதன் அளவீடுகளை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை கோவிட்-19 'நிரந்தரமானது' என்று இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்காதிருப்பதில் கவனமாக இருந்தாலும், பொதுமக்களை நிராயுதபாணியாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக உயர் அதிகாரிகள் இந்த கருத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளனர்.
செவ்வாயன்று ஒரு நேர்காணலில், பைடெனின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர். அந்தோனி பௌசி பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார், “கோவிட்-19 இன் முழுமையான தொற்றுநோய் கட்டத்தில் இருந்து நாம் வெளியேறும்போது, இந்த முடிவுகள் [தணிக்கும் நடவடிக்கைகள் குறித்து] மத்திய முடிவெடுக்கப்பட்ட அல்லது கட்டாயப்படுத்தப்படுவதற்குப் பதிலாக உள்ளூர் மட்டத்தில் அதிகளவில் உருவாக்கப்படும்' என்றார். அமெரிக்க தனிமனிதவாதத்தின் மிகவும் பின்தங்கிய வடிவங்களுக்கு முறையீடு செய்த அவர், 'அதிகமானவர்கள் வைரஸை எவ்வாறு சமாளிக்க விரும்புகிறார்கள் என்பதில் தங்கள் சொந்த முடிவுகளை எடுப்பார்கள்' என்று அவர் மேலும் கூறினார்.
'நிரந்தரமான' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதே செயல்முறையை தெளிவற்ற முறையில் விவரிக்க பௌசி 'சமநிலை' என்ற சொற்பதத்தை பயன்படுத்தினார். அவர் உறுதியாகக் கூறினார், “இந்த வைரஸை அழிக்க எந்த வழியும் இல்லை. ஆனால் போதுமான மக்கள் தடுப்பூசி போடப்பட்ட மற்றும் முந்தைய நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்போடு போதுமான மக்கள் இருக்கும் நேரத்தை நாங்கள் பார்க்கிறோம் என்று நம்புகிறேன். கோவிட் கட்டுப்பாடுகள் விரைவில் கடந்த காலத்திற்கான ஒரு விஷயமாக” இருக்கும் என்றார்.
கடந்த மாதம் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பேசிய பௌசி, 'ஓமிக்ரோன் அனைவரும் எதிர்பார்க்கும் வாழ்நாள் முழுவதற்குமான வைரஸ் தடுப்பூசியாக இருக்கப் போகிறதா இல்லையா என்பது திறந்த கேள்வியாகும்' என்றார்.
இந்தக் கொள்கை மாற்றங்கள் மற்றும் கோவிட்-19 'நிரந்தரமானதாக' மாறுகிறது என்ற கூற்றுக்கள் அனைத்தும் முற்றிலும் விஞ்ஞானபூர்வமற்றவையும் மற்றும் புதிய, மிகவும் ஆபத்தான மாறுபாடுகள் உருவாகுவதற்கான நிலைமைகளையும் உருவாக்கும். இது மேலும் தொற்றுநோய்கள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளை ஏற்படுத்தும். உலக சோசலிச வலைத் தளத்துடனான ஒரு விரிவான நேர்காணலில், பாஸ்டன் பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர். எலினோர் முர்ரே, நிரந்தர பரவலைச் சுற்றியுள்ள இந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசினார். மேலும் கோவிட்-19 இனை நிரந்தரமானது பிரகடனப்படுத்துவது முற்றிலும் காலத்திற்கு முற்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தினார். 'நிரந்தரம்' என்ற சொல்லை அரசியலாக்குபவர்கள், பல அர்த்தங்களைக் கொண்ட இந்த வார்த்தையின் தெளிவின்மையை வேண்டுமென்றே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
டாக்டர். முர்ரே கூறினார், 'முதலாவது விஷயம் என்னவென்றால், ஒரு தொற்றுநோய் என்பது மிகப் பெரிய அளவில் ஒரு நிரந்தமான தொற்றுநோயாகும். மற்றும் நிரந்தர நோய் அந்த வகையில் இல்லை. இது முற்றிலும் வேறுபட்ட ஒரு கருத்தாகும். உத்தியோகபூர்வ உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் CDC இன்படி ஒரு தொற்றுநோய்க்கான வரையறை, உலகின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டை மீறி பரவும் ஒரு நோயாகும்.
'நிரந்தரமானது' என்ற சொல் ஒரு கணித மாதிரியைக் குறிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். அதில் ஒரு நோய் 'ஒவ்வொரு தற்போதைய நோய்த்தொற்றுக்கும் ஒரு புதிய நபரை அந்த காலகட்டத்தில் பாதிக்கிறது'. மேலும், 'ஒரு நோய்க்கு சற்று தெளிவற்ற வரையறை உள்ளது. அது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு வகையான நீண்டகாலம் முன்னெதிர்பார்க்காத வகையில் நிலவுவதாகும்'.
ஓமிக்ரோன் எழுச்சியின் போது 'நிரந்தரம்' என்ற பிந்தைய வரையறை தவறாகப் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், 'கோவிட் நிரந்தரமாகிவிட்டது, நாங்கள் இனி எதுவும் செய்யத் தேவையில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும் இது ஒரு அபத்தமான கணிப்பு. கோவிட் நிரந்தரமானது என்று அழைப்பதன் மூலம் அவர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், இனி எங்களிடம் எந்த கோவிட்டும் இருக்காது. இது முற்றிலும் தவறானது”.
டாக்டர். முர்ரே இந்தக் கொள்கையின் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, 'ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரும் ஒரு புதிய மாறுபாட்டிற்கான ஒரு வாய்ப்பாகும். மேலும் எங்களுக்கு இப்போது அதிக தொற்று உள்ளது. முழுமையான நோயெதிர்ப்பு-தப்புதல் மாறுபாடு இருக்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. டெல்டாவை விட இரண்டு மடங்கு கடுமையான ஒன்றை நாங்கள் கொண்டிருக்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை”.
டொனால்ட் ட்ரம்ப், போரிஸ் ஜோன்சன், ஜெயர் போல்சனாரோ மற்றும் சர்வதேச அளவில் அவர்களது வலதுசாரி இணை-சிந்தனையாளர்களால் 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி' என்ற விஞ்ஞானக் கருத்தை சிதைப்பதுடன் 'நிரந்தர' என்ற வார்த்தையை வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்துவதை ஒப்பிடலாம்.” முன்னர் ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையைப் பாதுகாக்கத் தேவையான தடுப்பூசியால்-தூண்டப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தியின் நிலைக்கு பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தை, 2020 ஆம் ஆண்டில், பாரிய நோய்த்தொற்றுகளின் அடிப்படையில் ஒரு கட்டுக்கதையான “சமூக நோய் எதிர்ப்பு சக்தியை” அடைவதற்காக அனைத்து வணிகங்களையும் பள்ளிகளையும் முன்கூட்டியே மீண்டும் திறப்பதை நியாயப்படுத்த இந்தக் கருத்து கையாளப்பட்டது.
இதன் விளைவாக, முன்னர் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் மூலம் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற பாசாங்குத்தனத்தை உருவாக்கிய பைடென் மற்றும் பிற உலகத் தலைவர்களால் இந்த படுகொலை மூலோபாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 'நிரந்தரமானது' என்ற சொல்லை அவர்கள் சிதைப்பது, ஒவ்வொரு பள்ளியையும், பணியிடத்தையும் முழுமையாக மீண்டும் திறப்பதன் மூலம் அதிக இலாபத்தைப் பிரித்தெடுப்பதில் உறுதியாக இருக்கும் ஆளும் வர்க்கத்தின் அதே நோக்கத்திற்கும் அதே நலன்களுக்கும் உதவுகிறது.
ஓமிக்ரோன் எழுச்சியின் தொடக்கத்தில், பைடென் நிர்வாகம் வைரஸ் சமூகத்தை கிழித்தெறிய அனுமதிக்க இரத்தம்தோய்ந்த முடிவை எடுத்தது என்பது இப்போது தெளிவாகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, தனிப்பட்ட கூட்டங்களில் அவர்கள் 'எத்தனை அமெரிக்கர்கள் இந்த அலையில் பாதிக்கப்பட்டு இறப்பார்கள்?' எனக் கேட்டனர். மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள் மற்றும் நூறாயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று கூறப்பட்டபோது, அவர்கள் செலவு-இலாப பகுப்பாய்வு செய்து, இந்த கொலைத் திட்டத்தைத் தொடர தேர்ந்தெடுத்தனர். இதன் விளைவாக, ஓமிக்ரோன் எழுச்சியின் போது 100,000 அமெரிக்கர்கள் இப்போது இறந்துள்ளனர்.
தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, கோவிட்-19 க்கு சிறந்த பதிலளிப்பு வைரஸை அகற்ற அல்லது ஒழிப்பதற்கான முழு முயற்சியா அல்லது ஆக்ரோசமான கட்டுப்பாடு மூலம் அதை சமாளிக்க முடியுமா என்பது பற்றி விஞ்ஞான சமூகத்திற்குள் ஒரு உயிரோட்டமான விவாதம் இருந்தது.
ஆனால் யதார்த்தம் இந்தக் கேள்வியை ஆட்டிப்படைக்கிறது. ஒருபுறம், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் கூட, ஒரு அழிப்பு மூலோபாயங்கள் மூலம் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை சீனாவின் அனுபவம் காட்டுகிறது. உலகின் பிற பகுதிகளில், கோவிட்-19 ஐ 'நிரந்தரமானதாக' ஆக்குவது நோய் பரவுவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முழக்கமாக மாறியுள்ளது. அதாவது இதன் அர்த்தம் அமெரிக்காவில் 1 மில்லியன் அமெரிக்கர்களின் மரணம் விரைவில் இரண்டு, மூன்று மற்றும் அதற்கு மேற்பட்டதாக மாறும் என்பதாகும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொற்றுநோய்க்கான இரண்டு சாத்தியமான பதில்களை மனிதகுலம் எதிர்கொள்கிறது. ஒன்று 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி' மற்றும் 'நிரந்தரமானது' என்ற போர்வையில் ஆளும் வர்க்கத்தின் பாரிய தொற்று அல்லது கோவிட்-19 இன் உலகளாவிய ஒழிப்புக்காக சோசலிச சமத்துவக் கட்சிகளாலும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தாலும் எடுத்துக்காட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கையாகும்.
தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டம் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும், தொழிற்சங்கங்களில் உள்ள அவற்றின் ஆதரவாளர்களிடமிருந்தும் சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே முன்னெடுக்கப்படும். பூஜ்ஜிய கோவிட் மூலோபாயம் பற்றிய விஞ்ஞாரீதியான விளக்கம் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்திய சமூக மற்றும் வரலாற்று சக்திகள் பற்றிய அரசியல் புரிதலுடன் ஆயுதம் ஏந்திய ஒரு புரட்சிகர சோசலிச தலைமையை உருவாக்குவதே மிக முக்கியமான பணியாகும்.
ஓமிக்ரோன் தோன்றுவதற்கு சில நாட்களுக்கு முன்பு உலக சோசலிச வலைத் தளத்தால் தொடங்கப்பட்ட கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணையானது, தொற்றுநோயின் விஞ்ஞான, அரசியல், பொருளாதார மற்றும் வரலாற்று பரிமாணங்கள் பற்றி தொழிலாள வர்க்கத்திற்கு கல்வி கற்பிப்பதற்கான மைய அச்சாக செயல்படும். தொற்றுநோயைத் தடுக்கவும், மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும் தீர்மானித்துள்ள அனைத்து விஞ்ஞானிகளும் தொழிலாளர்களும் விசாரணையில் பங்கேற்க கீழே உள்ள படிவத்தை நிரப்ப ஊக்குவிக்கப்படுகிறார்கள்.