ஸ்பானிய மொரேனோவாதிகள் சீனாவின் "பூஜ்ஜிய கோவிட்" மூலோபாயத்தை தாக்குகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போலி-இடது மொரேனோவாத புரட்சிகர தொழிலாளர் பிரிவு (Revolutionary Workers’ Current - CRT) தொற்றுநோய் ஸ்பெயின், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் கட்டுப்பாட்டை மீறி வருகையில் சீனாவின் 'பூஜ்ஜிய கோவிட்' கொள்கைக்கு எதிராக தாக்குகின்றது. ஸ்பெயினின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேலலாக, 10 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 தொற்றுக்களின் கடுமையான மைல்கல்லை நெருங்குகிறது. ஆயினும்கூட, கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்கவும், இதனால் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும் வடிவமைக்கப்பட்ட விஞ்ஞானரீதியான சுகாதாரக் கொள்கைகளை சீனா ஏற்றுக்கொண்டதற்காக CRT கண்டனம் செய்கிறது.

ஜனவரி 17 அன்று அதன் இணையவழி வெளியீடான Izquierda Diario ஒரு கட்டுரையில், 'ஒலிம்பிக் போட்டிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓமிக்ரோன் தொற்றுக்களுக்கான கட்டுப்பாடுகளை பெய்ஜிங் கடுமையாக்குகிறது' என்று தலையங்கத்தின் கீழ் தேவையான கட்டுப்பாடுகளை விதிப்பது தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான சகிக்க முடியாத அத்துமீறலாகும் என CRT சீனாவைக் கண்டிக்கிறது.

அக்டோபர் 6, 2020 செவ்வாய்க் கிழமை, ஸ்பெயினின் டோரெஜோன் டி ஆர்டோஸில் உள்ள டொரெஜோன் பல்கலைக்கழக மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளியின் அருகில் சுகாதாரப் பணியாளர் ஒருவர் நிற்கிறார்[Credit: AP Photo/Manu Fernandez]

தலையங்கத்திற்கு கீழே நேரடியாக அதன் தொடக்க வரிகளில், CRT சீனாவின் ஒழிப்பு மூலோபாயத்திற்கான அதன் எதிர்ப்பை சுருக்கமாகக் கூறு, இது அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரமாக சித்தரிக்கிறது. அது பின்வருமாறு கூறுகிறது: “பொலிஸ் துன்புறுத்தல், அடக்குமுறை மற்றும் மொத்த பூட்டுதல்களை உள்ளடக்கிய ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையை சீன அரசாங்கம் ஆதரித்துள்ளது. இருப்பினும், ஓமிக்ரோன் மாறுபாடு இந்த நடவடிக்கைகளைத் தவிர்த்துக்கொண்டு, குளிர்கால ஒலிம்பிக் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு பெரிய நகரங்களுக்குள் ஊடுருவி வருவதாகத் தெரிகிறது”.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சீனாவின் முயற்சிகளுக்கான அதன் விரோதமான எடுத்துக்காட்டலுக்கு மாறாக, கொரோனா வைரஸ் தொற்றுக்கள் சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை CRT ஒப்புக்கொண்டமை, புதுப்பிக்கப்பட்ட தொற்றுநோயை மொரேனோவாதிகள் ஒரு நல்ல விஷயமாகக் கருதுகிறார்கள் என்பதற்கான அறிகுறியாக மட்டுமே மதிப்பிட முடியும். இந்த தற்செயலான ஏற்றுக்கொள்ளல் அல்லது வைரஸ் அனைத்தும் அகற்றப்பட்ட ஒரு பிரதேசத்தில் மீண்டும் நுழைந்ததைக் கொண்டாடுவது, கோவிட்-19 கொண்டு வரும் இறப்புகள் மற்றும் நீண்டகால சுகாதார விளைவுகளுக்கான CRT இன் அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது.

'கோவிட்டுக்கு எதிரான 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையில் சீனா 'நடமாடுவதை இறுக்கமாக கட்டுப்படுத்தல், அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல், வெடிப்புகளைக் கட்டுப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது முழுமையான பூட்டுதல்கள் மற்றும் நடைமுறையில் அதன் எல்லைகளை முற்றாக மூடல்கள் ஆகியவற்றில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இரக்கமில்லாமல் உள்ளது' என CRT பின்னர் கட்டுரையில் தொடர்கிறது.'

CRT கண்டிக்கும் கொள்கையின் முடிவுகள் என்ன? இதற்கு நேர்மாறாக, 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு பாரிய
சமூகம், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 100,000 க்கும் சற்று அதிகமான தொற்றுக்களை மட்டுமே பதிவு செய்துள்ளதுடன், மேலும் 5,000 க்கும் குறைவான இறப்புகளைக் கொண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், அந்த நாட்டில் இரண்டு பேர் மட்டுமே இந்த வைரஸால் இறந்துள்ளனர்.

இந்த அசாதாரண முரண்பாடு, ஒரு வெற்றிகரமான அழிக்கும் மூலோபாயத்தை தொடர முடியும் என்பதற்கு ஒரு சான்றாகும். வைரஸின் பிறப்பிடமாக இருந்தபோதிலும், அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவது, பரவலான சோதனை, தொடர்புத் தடமறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல் மற்றும் கடுமையான பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகளின் மூலம் வெடிப்பை சீனா விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

சீனா மற்றும் இன்னும் சில முதலாளித்துவ நாடுகளின் உதாரணம் காட்டுவது போல், தொற்றுநோய்களின் கொடிய அலைகள் தொடர்வதை தவிர்க்கமுடியாது என்று எதுவும் இல்லை. கோவிட்-19 ஐ ஒழிக்க சமூக வளங்களைத் திரட்டுவதற்கான சாத்தியம் உள்ளது. உலகம் முழுவதும் உலகளாவிய ஒருங்கிணைந்த முறையில் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டால், தொற்றுநோயை விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடியும்.

எண்ணற்ற ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றக்கூடிய அத்தகைய கொள்கையை CRT இல் உள்ள மொரேனோவாதிகள் எதிர்க்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஸ்பெயினில் உள்ள சோசலிஸ்ட் கட்சி (PSOE) - பொடேமோஸ் அரசாங்கம் இது போன்ற கொள்கைகளை நிராகரித்ததன் விளைவுகள் என்ன?

ஐரோப்பா முழுவதும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 இறப்புகளுக்கு பின்னர், அடுத்தடுத்த ஏழு நாள் சராசரி இறப்பு எண்ணிக்கை ஸ்பெயினில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த வாரம் 1,100 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஸ்பெயினின் மொத்த கோவிட்-19 இறப்புகள் 100,000-க்கும் அதிகமாக இருப்பதாக கூடுதலான இறப்பு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இவற்றில் 4,000க்கும் மேற்பட்டவை நவம்பர் நடுப்பகுதியில் நிகழ்ந்துள்ளன. ஓமிக்ரோன் மாறுபாடு அதனை வெளிப்படுத்தி காட்டத்தொடங்கியதுடன், பரவலான தடுப்பூசி காரணமாக வைரஸ் பாதிப்பில்லாதது என்ற கூற்று பொய் என்பதை காட்டுகின்றது. இந்த சமீபத்திய அலையில் மட்டும் மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கையில் பாதி நிகழ்ந்துள்ளது.

கிட்டத்தட்ட 20,000 பேர் தற்போது கோவிட்-19 உடன் மருத்துவமனையில் உள்ளனர். இந்த அளவானது கடந்த ஆண்டு பெப்ரவரிக்கு பின்னர் காணப்படவில்லை. சுமார் 2,300 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) உள்ளனர். இது மே 2021 க்குப் பின்னர் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

சோசலிஸ்ட் கட்சி - பொடேமோஸ் (PSOE-Podemos) அரசாங்கத்தால் பின்பற்றப்படும் குற்றவியல் மற்றும் கொலைகாரக் கொள்கையின் நேரடி விளைவுதான் பாரிய இறப்பு எண்ணிக்கையும் மற்றும் உடல்நலத்தின் மீதான கணக்கிட முடியாத பரந்த விளைவும் ஆகும். அதன் மக்கள்தொகையின் உடல்நலம் மற்றும் வாழ்க்கையை விட ஸ்பெயினின் வங்கிகள் மற்றும் பெருவணிகத்தின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தொற்றுநோயை அகற்றுவதற்கான விஞ்ஞானரீதியான வழிகாட்டுதல் கொள்கையைப் பின்பற்ற அவர்கள் மறுத்துவிட்டனர்.

தொற்றுநோய் முழுவதும், பூட்டுதல் நடவடிக்கைகளுக்கு எதிராக மொரேனோவாதிகள் தொடர்ந்து கிளர்ந்தெழுந்தனர். கடந்த ஆண்டு ஜனவரியில், தொற்றுநோயின் பேரழிவுகரமான “மூன்றாவது அலை” ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறிக்கையில், CRT சமூக விலகல் கட்டுப்பாடுகளை “அதிகாரத்துவ மற்றும் தேவையற்ற நோய்த்தடுப்பு” நடவடிக்கைகள் என்று கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவர்கள் [PSOE-Podemos அரசாங்கம்] அவர்களின் விருப்பப்படி எங்கள் சுதந்திரங்களையும் நடமாடலையும் கட்டுப்படுத்துகிறார்கள்” என்றனர்.

தொற்றுநோயின் ஒரு முக்கிய கட்டமான கடந்த ஆண்டு ஏப்ரலில் அதன் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை PSOE-Podemos அரசாங்கம் நீக்கியபோது, CRT தொற்றுநோயின் அபாயத்தைக் குறைத்துக்காட்டியது. 2020 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் விதிக்கப்பட்ட கோவிட்-19 பூட்டுதல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் ஆகஸ்ட் மாதம் பிற்போக்குத்தனமான தீர்ப்புக்கு அது மௌனத்துடன் பதிலளித்தது. கோடையின் முடிவில், அது பல்கலைக்கழகங்களில் 'நேரடி கல்விக்கு' அழைப்பு விடுத்தது.

2021 முடிவடையும் போது, ஓமிக்ரோன் மாறுபாடு நாடு முழுவதும் பரவத் தொடங்கியது, இது வெகுஜன நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியது, CRT தலைவர் சாண்டியாகோ லூப் தனது சொந்த பிற்போக்குத்தனமான பங்களிப்பை மொரேனோவாதிகளின் அதிகரித்துவரும் விஞ்ஞான எதிர்ப்பு, பூட்டுதல் எதிர்ப்பு கருத்துகளுக்கு சேர்த்தார். நவ-பாசிச வலதுசாரிகளின் நிலைப்பாடுகளை எதிரொலிக்கும் வகையில் PSOE-Podemos அரசாங்கத்தை வலதுபுறத்தில் இருந்து தாக்கி லூப், தனது எதிர்ப்பை தனிநபர் சுதந்திரத்தின் பாதுகாப்பாக முன்வைத்தார். அவர் எழுதினார்:

PSOE-Podemos அரசாங்கத்தின் இன்றைய பதில்கள் மற்ற காலங்களைப் போலவே உள்ளது. ... புதிய கட்டுப்பாடுகள், தாக்கம் ஏதுமில்லை என நிரூபிக்கப்பட்ட நடவடிக்கைகள்—வெளிப்புறங்களில் முகக்கவச ஆணைகள் போன்றவை— மற்றும், குறிப்பிடத்தக்க வகையில், கோவிட்-19 கடவுச்சீட்டு அல்லது புதிய ஊரடங்கு உத்தரவுகள் போன்ற அடிப்படை உரிமைகள் மீதான புதிய வரம்புகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் மூலம், இந்த நடவடிக்கைகளில் பல தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எந்த நிரூபிக்கப்பட்ட விளைவையும் கொண்டிருக்காதபோதும் அரசு அதன் பலவந்த, போனபார்ட்டிச வழிமுறைகளை வலுப்படுத்துகிறது.

கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளுக்கான CRT இன் எதிர்ப்பானது, தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் விரோதத்தை வெளிப்படுத்துவதாகும். அதன் நிலைப்பாடு, தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட அபாயத்தை தவறாக படித்ததாலோ அல்லது விபத்தினால் ஏற்பட்டதோ அல்ல. இது CRT அடிப்படையாக கொண்டுள்ள பொருளாதாய வர்க்க நலன்களை பிரதிபலிக்கிறது. அவர்களின் பதவிகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் பங்குச் சந்தைகளின் மேல்நோக்கிய நகர்வையும், தொழிலாளர்களைச் சுரண்டுவதையும் சார்ந்திருக்கும் உயர்-நடுத்தர வர்க்கத்தினதும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவ அடுக்குகளின் நலன்களுக்காகப் பேசுகையில், எவ்வளவு உயிர்கள் இழக்கப்பட்டாலும் வங்கிகளுக்கு இலாபங்கள் பாய்வதை CRT தொடர்ந்து வைத்திருக்க விரும்புகின்றது.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெருகிய எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி பொடேமோஸ் இன் ஒரு கருவியாக இது செயல்படுவதுடன் அதை பாதிப்பில்லாத வழிகளில் சிதறடிக்கின்றது. அதன் பிற்போக்குத்தனமான பாத்திரம், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அல்லது அரசியல் ஸ்தாபகத்தின் எந்தப் பிரிவின் மீதும் தங்கியிருக்க முடியாது என்ற தொழிலாள வர்க்கத்திற்கான எச்சரிக்கையாகும்.

சீனாவின் 'பூஜ்ஜிய கோவிட்' கொள்கைக்கு எதிரான ஆளும் உயரடுக்கின் பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தை ஆதரிப்பதன் மூலம், CRT, தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் உடல்நலத்தின் மீதான தனது அலட்சியத்தை மட்டும் காட்டாமல், ஏகாதிபத்திய சக்திகளின் சீன எதிர்ப்பு போர்வெறியுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்குகளும் ஊடகங்களும் சீனாவை முடிவில்லாமல் பேய்த்தனமாகவும் அவதூறாகவும், தொற்றுநோய் தோன்றுவதற்கும் பரவுவதற்கும் குற்றம்சாட்டி, சுகாதாரக் கட்டுப்பாடுகளை கைவிடுமாறு அழுத்தம் கொடுக்கிறது. இது சீன மக்களுக்கு எதிரான பொதுக் கருத்தை விஷமாக்குவதற்கும் போருக்கார காரணத்தை தயார்படுத்துவதற்குமான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்கள், பொடேமோஸ்கள் மற்றும் CRT போன்ற அமைப்புகளில் உள்ள அவர்களின் முண்டுகோல்களில் இருந்து ஒரு தீர்க்கமான முறிவை எடுக்க வேண்டியதுடன், மேலும் நோய்த்தொற்று பரவுவதையும் போருக்கான உந்துதலையும் எதிர்த்துப் போராடுவதற்கு விஷயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும்.

Loading