மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வோல்டோமீட்டர் கண்காணிப்பு தரவுத்தளத்தின்படி, வியாழனன்று, அமெரிக்கா கோவிட்-19 இறப்புக்களில் 900,000 என்ற கடுமையான மைல்கல்லைக் கடந்தது. மற்ற அனைத்து முக்கிய கண்காணிப்பு அமைப்புக்களும் இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த பயங்கரமான எண்ணிக்கையை கடந்துவிடும்.
ஓமிக்ரோன் மாறுபாடு கோவிட்-19 நோய்தொற்றுக்களையும் மருத்துவமனை அனுமதிப்புக்களையும் உயர் மட்டங்களுக்கு தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து 53,000 அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். ஒவ்வொரு 45 வினாடிக்கும் ஒரு அமெரிக்கர் இறக்கிறார். தற்போது ஏழு நாள் இறப்பு சராசரி 2,514 ஆக உள்ளது, இது கடந்த குளிர்காலம் தவிர்த்து முன்னைய நோய்தொற்று எழுச்சிகளின் போதான உச்சத்தை விட அதிகமாகும்.
2020 ஆம் ஆண்டில், 351,754 அமெரிக்கர்கள் கோவிட்-19 க்கு பலியாகினர். 2021 ஆம் ஆண்டில், 475,680 அமெரிக்கர்கள் இந்த வைரஸால் இறந்தனர். மேலும், ஜனவரியின் இறப்பு விகிதம் 2022 முழுவதும் தொடருமானால், தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டில் 636,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்து போவார்கள்.
இந்த பாரியளவிலான இறப்பு எண்ணிக்கைகள் இப்போது பத்திரிகைகள் மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களில் வெறுமனே புறக்கணிக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 ஆல் 3,826 பேர் இறந்துள்ளனர் என்று BNO Newsroom வெள்ளியன்று அறிவித்த போது, NBC Nightly News அதன் ஒளிபரப்பின் முதல் பாதியில் தொற்றுநோயைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, மாறாக வானிலை மற்றும் நியூயோர்க் நகர பொலிஸ் பற்றிய செய்திகள் மீதே கவனம் செலுத்தியது.
தற்போதைய பாரிய இறப்பு அலையை தடுக்க எதையும் செய்யாமல், பைடென் நிர்வாகம் முதலாக மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் வரையிலான அமெரிக்க சமூகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும், பாரிய நோய்தொற்றை தீவிரப்படுத்தவே அடித்தளம் அமைக்கின்றன.
பைடென் வெள்ளை மாளிகையால் தான் இந்த போக்கு தீர்மானிக்கப்பட்டது. பள்ளிகளையும் வணிகங்களையும் மீளத்திறக்கவும் மற்றும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவும் வலியுறுத்தி, பைடென் நிர்வாகம் கோவிட்-19 பரவலை நிறுத்த எஞ்சியுள்ள இரண்டு நடவடிக்கைகளை மட்டும் தொடர தீர்மானித்தது: அதாவது, பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் கோவிட்-19 ஆல் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த வாரம் Politico உடனான ஒரு நேர்காணலில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) இயக்குநர் ரோசெல் வாலென்ஸ்கி, முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை முடிவுகட்ட வாதிட்டார். அவர் மேலும், “நோய்தொற்றுக்கள் அதிகமாக இருந்தால், தீவிரத்தன்மை என்னவென்றால், நாங்கள் எங்கள் மருத்துவமனைகளில் சாதகமான சூழ்நிலையில் இருப்போம்… எங்கள் முகமூடிகள் கூட அகற்றப்படலாம். பின்னர், உங்களுக்கு மூக்கு ஒழுகுதல் இருந்தால், நீங்கள், 'சரி, சரி, நான் வீட்டில் இருக்கப் போகிறேன், ஏனென்றால் எனக்கு மூக்கு ஒழுகும்போது அதைத்தான் செய்கிறேன்.' ஆனால் நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை' என்றும் தெரிவித்தார்.
அனைத்து தீவிர பொது சுகாதார நிபுணர்களும் தொற்றுநோயியல் நிபுணர்களும், சமூகம் முழுவதும் கோவிட்-19 நோய்தொற்று அது பரவும் விகிதத்திற்கு இணையாக உயிர்களை கொல்லுகின்ற மற்றும் ஊனப்படுத்துகின்ற நிலைமைகளின் கீழ், முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளைத் தொடர்வதற்கே பரிந்துரைக்கின்றனர். வேறுவிதமாகச் செய்வது, ஒட்டுமொத்த மக்கள்தொகையின் தொடர்ச்சியான தொற்று மற்றும் மீண்டும் நோய்தொற்றுக்கான ஒரு செய்முறையாகும், இது இப்போது அமெரிக்க அரசாங்கத்தின் வேண்டுமென்றே பின்பற்றப்படும் கொள்கையாகும்.
ஓமிக்ரோன் மாறுபாடு “அனைவரையும் பாதிக்கும்,” என்று டாக்டர் அந்தோனி ஃபவுசி இந்த மாத தொடக்கத்தில் கூறினார். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் இயக்குநர் ஜேனட் உட்காக், “பெரும்பாலான மக்களுக்கு கோவிட் நோயை பெறப் போகிறார்கள்,” என்று கூறினார்.
முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாலென்ஸ்கியின் அழைப்புக்களை இந்த வாரம் வெகுஜன நோய்தொற்றின் கல்வி ஆதரவாளர்களின் குழு ஏற்றுக்கொண்டு, அவற்றை “இயல்பு நிலைக்கான அவசரம்” என்று அழைக்கின்றனர். இந்தக் குழு, வெள்ளை மாளிகையுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளவரும் மற்றும் தொற்றுநோயையும் அதனால் சமூகம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டவருமான பள்ளிகளை மீளத்திறக்க வாதிடும் மோனிகா காந்தியின் தலைமையில் இயங்குகிறது.
இந்தக் குழு ஒரு அறிக்கையில், “அமெரிக்கப் பள்ளிகளில் முகக்கவசம் விருப்பப்பட்டால் அணியக்கூடியதாக மாற்றப்பட வேண்டும் (இதை பிப்ரவரி 15 க்குள் கொண்டுவர நாங்கள் பரிந்துரைக்கிறோம்), மேலும் தனிமைப்படுத்தலைப் பொறுத்தவரை தொற்றுநோய்க்கு முந்தைய விதிமுறைகளுக்கு நாம் திரும்ப முடியும்: அதாவது நீங்கள் நோய்வாய்ப்பட்டால், வீட்டிலேயே இருக்கலாம் என்பதாகும்” என்று குறிப்பிடுகிறது.
வாலென்ஸ்கியின் கருத்துக்களும் மற்றும் காந்தி மற்றும் பலரது அறிக்கைகளும், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த செய்தி ஊடகங்கள் உட்பட, அமெரிக்க ஊடகங்களில் பெரியளவில் சரமாரியாக நடத்தப்படும் முகக்கவச எதிர்ப்பு பிரச்சாரத்துடன் ஒத்துப்போகின்றன. சமீபத்திய தலைப்புச் செய்திகளில், Atlantic இன் “பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு எதிரான வழக்கு”; NPR இன் “குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்பது பற்றிய புதிய கேள்விகள்”; SF Chronicle இன் “பள்ளிகளில் குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டுமா? ஒருவேளை அவசியமில்லையா”; மற்றும் New York Times இன் “ஓமிக்ரோன் நோய்தொற்று எழுச்சிக்குப் பின்னர் குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லையா” ஆகியவை அடங்கும்.
கோவிட்-19 நோய் பரவலைக் குறைப்பதில், முகக்கவசங்கள், குறிப்பாக உயர்தர முகக்கவசங்கள் அணிவதன் முக்கியத்துவம் ஒருபோதும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்ததில்லை. மாறாக ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாடு தான், முகக்கவசம் அணிவது என்பது தொற்றுநோய் முடிந்துவிடவில்லை என்பதையும், மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து நினைவூட்டுகிறது. அதாவது மொத்தமாக தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப வைப்பதற்கு, முகக்கவசம் அணிவது தொடரப்பட வேண்டும் என்பதாகும்.
இந்த கோரிக்கைகள் ஏற்கனவே உலகம் முழுவதும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. செவ்வாயன்று, சான் பிரான்சிஸ்கோ நகரம் அலுவலகங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் அறைகளுக்குள் முகக்கவசம் அணியும் தேவையை முடிவுக்குக் கொண்டுவரவுள்ளது, இது மற்ற நகரங்கள் பின்பற்றுவதற்கான வழியை உருவாக்குகிறது.
டென்மார்க்கில், BA.2 எனப்படும் ஓமிக்ரோனின் புதிய, மிகுந்த தொற்றும்தன்மையுள்ள துணைமாறுபாட்டினால் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் கடுமையாக அதிகரித்து வருகின்ற நிலையில், அரசாங்கம் தனது முகக்கவச கட்டுப்பாட்டை பிப்ரவரி 1 அன்று முடிவுக்குக் கொண்டு வருகிறது. வியாழக்கிழமை முதல், இங்கிலாந்து முழுவதும் முகக்கவசம் அணியும் தேவை இருக்காது.
நடைமுறையில், CDC இன் மொத்தத்தில் போதாத 5 நாள் தனிமைப்படுத்துதல் வழிகாட்டுதல் கூட ஒரு உயிரற்ற அறிவிப்பாகிப் போனது. ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகத்தின் கென்னடி பள்ளியின் ஆய்வு, “கணக்கெடுப்பின் போது கடந்த மாதத்தில் நோய்வாய்ப்பட்டிருந்ததாகக் கூறிய கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்கள் தாங்கள் நோயின் போதும் வேலை செய்ததாகக் கூறியதையும்,” மேலும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கூற்றுப்படி, “நிதி காரணங்கள்” மற்றும் “பழிவாங்கப்படும் பயம்” ஆகிய இரண்டையும் பலர் சுட்டிக்காட்டியதையும் குறிப்பிட்டது.
மே 2021 இல், வாலென்ஸ்கி, பைடென் மற்றும் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பொறுப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியண்ட்ஸின் வழிநடத்துதலின் பேரில், தடுப்பூசி போடப்பட்ட மக்கள் அனைத்து சமூக இடைவெளி மற்றும் முகக்கவச கட்டுப்பாடுகளை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார், அதாவது “முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட எவரும் முகக்கவசம் அணியாமல் அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், பெரிய அல்லது சிறிய, உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்” என்கிறார். இது, கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களையும் வரும் வாரங்களில் முகக்கவச ஆணையை கைவிடத் தூண்டியது, மேலும் 175,000 அமெரிக்கர்களை கொன்ற டெல்டா மாறுபாட்டின் பேரழிவுகர எழுச்சிக்கு வழிவகை செய்தது.
நியூ யோர்க் டைம்ஸின் கருத்துப்படி, கடந்த மே மாதம் வாலென்ஸ்கி அறிவித்தபடி, “திரு. பைடென், திரு. ஜியண்ட்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையில் உள்ள மற்றவர்களும் பரவசத்தில் திளைத்தனர்.” மேலும் அந்த மாதத்தில், “உங்கள் முகக்கவசங்களை கழற்றுங்கள். நீங்கள் அந்த உரிமையைப் பெற்றுள்ளீர்கள்,” என்று பைடென் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இந்த கட்டுப்பாடுகளின் முடிவால் கடந்த கோடையில் நோய்தொற்றுக்களின் கடுமையான எழுச்சி ஏற்பட்டதன் பின்னர், வாலென்ஸ்கியும் பைடெனும் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு மக்களை மீண்டும் முக்கவசம் அணியுமாறு வலியுறுத்தச் செய்தது. ஆனால் நோய்தொற்று விகிதங்கள் உச்சமடைவதற்கு மத்தியில், இப்போது ஒவ்வொரு நாளும் 3,000 பேர் இறப்பதுடன், தொற்றுநோயின் வேறு எந்த நேரத்தையும் விட மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பி வழிகின்றன, அதேவேளை பைடென் நிர்வாகம் அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளுக்கும் எதிராக தனது அழுத்தத்தை தீவிரப்படுத்தி வருகிறது.
மே 2021 இல், தடுப்பூசி போடப்பட்டவர்கள் கோவிட்-19 நோயைப் பரப்புவதில்லை என்ற தவறான கருத்தைப் பரப்பி, முகக்கவசம் அணியும் பரிந்துரைகளை கைவிடுவது நியாயப்படுத்தப்பட்டது. இன்று இதுவும் ட்ரம்ப் நிர்வாகம் முதலில் செயல்படுத்தியதான “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” மூலோபாயத்தை அப்படியே பின்பற்றுவதன் மூலம் வெகுஜன நோய்தொற்று பரவலை வெளிப்படையாக ஊக்குவிப்பதற்கு ஒத்துப்போகிறது.
இந்த மாதம் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில், தன்னலக்குழுக்களின் வருடாந்திர கூட்டத்தின் போது, டாக்டர் அந்தோனி ஃபவுசியிடம், “2022 ஆம் ஆண்டில், இது உண்மையில் தொற்றுநோயிலிருந்து உள்ளூர் நோயாக மாறவுள்ளதா, அதிலும் தற்போதைய வேகத்தில், மேலும் இந்த செயல்முறை நோய்தொற்று பரவுவதற்கான திறனை அதிகரித்து அதன்மூலம் நோயெதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறதா?” என்று கேட்கப்பட்டது.
வேறு வார்த்தைகளில் கேட்பதானால், கோவிட்-19 காரணமான வெகுஜன தொற்று தான் தொற்றுநோய்க்கு சரியான பதிலா? என்பதாகும்.
இதற்கு, ஃபவுசி, “அது அப்படித்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” “அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் நேரடி வைரஸ் தடுப்பு மருந்தாக ஓமிக்ரோன் இருக்கப் போகிறதா இல்லையா என்பது ஒரு வெளிப்படையான கேள்வியாக உள்ளது” என்றும் பதிலளித்தார்.
2020 ஆம் ஆண்டில், ட்ரம்ப் ஆலோசகர் ஸ்காட் அட்லஸ் தலைமையில் வெகுஜன தொற்றின் நன்மைகளை ஊக்குவித்தவர்கள் “ஆபத்தானவர்கள்” என்று ஃபவுசியும், வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணி ஒருங்கிணைப்பாளர் டெபோரா பிரிக்ஸும் எச்சரித்தனர். அட்லஸின் கருத்துக்கள் “இந்த தொற்றுநோய்க்கான விரிவான மற்றும் முக்கியமான பதிலுக்கு உண்மையான அச்சுறுத்தல்” என்று ஒரு மின்னஞ்சலில் பிரிக்ஸ் குறிப்பிட்டதுடன், அவரது கருத்துக்களின் ஆதரவாளர்களை “தொற்றுநோய்கள், பொது சுகாதாரம் அல்லது பொது அறிவு அனுபவத்தை அடிப்படையாக கொண்டிராத ஒரு வெற்றுக் குழு” என்று அழைத்தார்.
“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” அணுகுமுறை பின்பற்றப்படுவது நூறாயிரக்கணக்கான தடுக்கக்கூடிய இறப்புக்களுக்கு வழிவகுக்கும் என்பதுடன், ஆழ்ந்த பொது சுகாதார மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று பிரிக்ஸ் எச்சரித்து, “எளிய வைரஸ் தொற்றுக்களின் நீண்டகால விளைவுகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம் – நாம் அதனால், இதயத் தசை அழற்சி (pericarditis), மாரடைப்பு (myocarditis), இதயத் தசைநோய் (cardiomyopathy), இரத்தக்குழாய் அழற்சி (vasculitis), மற்றும் தன்னுடல் எதிர்ப்பு சக்தி பற்றி நீண்டகாலம் தொடரும் கேள்வி ஆகியவற்றை நாம் பார்த்தோம்” என்று கூறுகிறார்.
ஃபவுசியும் பிரிக்ஸூம் இந்த இரகசிய எச்சரிக்கைகளை விடுத்து ஒன்றரை ஆண்டுகளில், முழு அரசியல் ஸ்தாபகமும் அட்லஸ் மற்றும் ட்ரம்ப் ஊக்குவித்த கொலைகாரக் கொள்கைகளை அப்படியே பின்பற்றுகிறது.
யூஜெனிக்ஸ் ஆலோசகர் எசிக்கியேல் இமானுவலின் வார்த்தைகளில் கோவிட்-19 “புதிய இயல்பாக” மாற வேண்டும். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் எதிர்ப்புற தலையங்கம் சமீபத்தில் அறிவித்தது போல், “இயற்கை நோயெதிர்ப்பு சக்தியின்” நன்மைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எல்லா பிரச்சினைகளுக்கும் மேலாக, கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் நாளாந்த அறிக்கை பெரும் தாக்குதலுக்குட்பட்டுள்ளது. பிப்ரவரி 2 அன்று, அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை கோவிட்-19 இறப்புக்கள் பற்றி மருத்துவமனைகள் தினசரி அறிக்கை செய்ய வேண்டிய அவசியத்தை முடிவுக்குக் கொண்டுவரும்.
இறப்பு விபரங்களை தெரிந்துகொள்ள எஞ்சியுள்ள ஒரே ஆதாரமாக CDC மட்டுமே இருக்கும், இது மாநில சுகாதாரத் துறைகளிடமிருந்து அறிக்கைகளைப் பெறுகிறது. இருப்பினும், பெரும்பாலான மாநிலங்கள் நாளாந்தம் அறிக்கை செய்வதில்லை, மேலும் எதிர்காலத்தில் வாரத்திற்கு ஒருமுறை அறிக்கை செய்யும் வகையில் வளர்ந்து வரும் எண்ணிக்கைகள் கணக்கிடப்படுகின்றன.
ஆளும் வர்க்கம் மற்றும் அதன் ஊடக மன்னிப்பாளர்களின் செயல்பாடு தெளிவாக உள்ளது: அதாவது கோவிட்-19 தொற்றுநோய் நிரந்தரமாக தொடரும். ஒவ்வொரு ஆண்டும், நூறாயிரக்கணக்கான மக்கள் – முக்கியமாக நோயாளிகளும் மற்றும் வயதானவர்களும் – இறப்பார்கள், மேலும் மில்லியன்களுக்கு அதிகமானவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இறப்புக்கள் மற்றும் நோய்தொற்றுக்கள் பற்றி ஒவ்வொரு நாளும் குறைத்துக் காட்டப்படும், மேலும் ஊடகங்கள், நாளுக்கு நாள், அதைப் பற்றிய செய்திகள் வழங்குவதை நிறுத்திவிடும்.
ஆனால், நிரந்தரமான தொற்றுநோய்க்கான ஆளும் வர்க்கத்தின் மூலோபாயமானது, பாரிய நோய்தொற்றை எதிர்க்கத் தீர்மானித்து, தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கக் கோரி அலை போல தொடர்ச்சியாக வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வரும் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் இயக்கத்துடனான வாழ்நாள் மோதலுக்குள் வருகிறது.
தொழிலாள வர்க்கத்தின் இந்த வளர்ந்து வரும் இயக்கம், தொடர்புத் தடமறிதல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல், தனிமைப்படுத்துதல், மற்றும் அனைத்து பள்ளிகளையும் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு முழு இழப்பீடு வழங்கி அத்தியாவசியமற்ற வணிகங்களையும் தற்காலிகமாக மூடுதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் கோவிட்-19 பரவலை முடிவுக்குக் கொண்டுவருவதை அடிப்படையாகக் கொண்ட பூஜ்ஜிய கோவிட் மூலோபாயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பாரிய நோய்தொற்றுக்கு எதிரான போராட்டம் என்பது நிதிய தன்னலக்குழு மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டமாகும். இந்நிலையில், முக்கியமான பணி என்னவென்றால், தொற்றுநோயைத் தடுப்பதற்கும் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதற்குமான ஒரு ஒருங்கிணைந்த உலகளாவிய மூலோபாயத்திற்காக போராடும் வகையில், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புரட்சிகர சோசலிச தலைமை கட்டியெழுப்பப்பட வேண்டும்.