மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
2020 ஆம் ஆண்டில் முதல் கோவிட்-19 பூட்டுதலின் போது டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற ஏராளமான மதுபான விருந்துகள் பற்றிய அறிக்கை முக்கிய அரசு ஊழியர் சூ கிரே மூலம் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதன் விசாரணைகளுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பது, ஜோன்சன் ஒரு தலைமைத்துவ சவாலை எதிர்கொள்கிறாரா என்பதை தீர்மானிக்கும்.
புதன்கிழமையன்று எதிர்பார்த்ததுபோல ஜோன்சன் பற்றிய கிரேயின் அறிக்கை வெளியிடப்படாததால் நேற்றைய தினம் பாராளுமன்ற நிகழ்வுகள் பதட்டத்தால் நிறைந்திருந்தன.
பாராளுமன்ற அலுவல்கள் மாலை 5 மணியளவில் முடிவடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, பொது சபையின் சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல், ஜோன்சன் கேள்விகளை எழுப்புவதற்கு முன், அறிக்கையைப் படிக்க தேவையான நேரம் கிடைக்கும் என்பதை உறுதியளிக்கிறேன் என்று ஒழுங்குப் புள்ளிகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.
தவிர்க்க முடியாமல் “பார்ட்டிகேட்” (partygate) என அறியப்பட்டதற்கான அறிக்கை ஜோன்சனுக்கு கிடைத்து, பிரதம மந்திரி ஒரு அறிக்கையை வெளியிடுவதற்காக நேற்றிரவு பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அவர் பரிந்துரைத்தார்.
இன்றைய [வியாழக்கிழமை] எந்த அட்டவணையும் ஜோன்சன் இறுதியாக அறிக்கையை எப்போது பெறுகிறார் என்பதைப் பொறுத்தது, விவாதம் இன்று அல்லது வெள்ளிக்கிழமை கூட சாத்தியமாகும்.
நேற்று ஜோன்சன் மீண்டும் விவாதத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். அதே நேரத்தில் குறைந்தபட்சம் மெட்ரோபொலிட்டன் போலீஸ் விசாரணை செவ்வாய்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டு இறுதியில் எந்த தவறும் இல்லை என்பதை தீர்மானிக்கும்வரை ஒரு தலைமைப் போட்டிக்கு அழைப்பு விடுக்கும் கடிதங்களை அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் பின்வரிசை உறுப்பினர்களுடன் வாதிட்டனர்.
டோரி வலதுசாரிகளுக்கு மிகவும் விருப்பமான கொள்கைகளை 'வழங்குவதில்' ஜோன்சன் தனது நிலைப்பாட்டை அடித்தளமாக கொண்டிருந்ததாக அறிவித்தார். அதாவது வரலாற்று ரீதியாக பிரெக்சிட், இன்று பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் படையெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டி ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான இராணுவ ஆத்திரமூட்டல்களில் முன்னணி பங்கை வகிப்பதே அவர்களின் கொள்கையாகும்.
செவ்வாயன்று, ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்தால் ஐரோப்பாவில் நேட்டோ நட்பு நாடுகளைப் பாதுகாக்க பிரிட்டன் துருப்புக்களை பயன்படுத்தத் தயாராக இருப்பதாக சக போர்வெறியர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஜோன்சன் கூறினார். 'செச்சினியா அல்லது பொஸ்னியாவில் நடந்த முதல் போருடன் ஒப்பிடக்கூடிய இரத்தம் சிந்தல்... என்ற பீதியை எழுப்பி புட்டின் 'உக்கிரமான' உக்ரேனிய எதிர்ப்பை எதிர்நோக்க நேரிடும் மற்றும் ரஷ்யா இந்தப் பாதையைத் தொடர்ந்தால் பல ரஷ்ய தாய்மார்களின் மகன்கள் வீட்டிற்கு வரமாட்டார்கள்' என்று அவர் அச்சுறுத்தினார்.
பிரித்தானியாவும் மற்றும் அதன் கூட்டாளிகள் 'கடுமையான' பொருளாதாரத் தடைகளுடன் விரைவாகவும் 'ஒற்றுமையுடனும்' பதிலளிப்பார்கள் என்றார்.
கடந்த வார இறுதியில் இருந்து அவர் அறிந்த ஒன்றான Met விசாரணை அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பேசியபோது ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் பல்கேரியா உள்ளிட்ட நேட்டோ உறுப்பினர்கள் கிழக்கு ஐரோப்பாவிற்கு இராணுவ நிலைநிறுத்தங்களை அறிவித்து, 'எஸ்தோனியாவில் உள்ள பிரிட்டிஷ் இராணுவம் நேட்டோ தாக்குதல் குழுவை வழிநடத்துகிறது. ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்தால், ஐரோப்பாவில் உள்ள எங்கள் நட்பு நாடுகளைப் பாதுகாக்க எவ்விதமான புதிய நேட்டோ தலையீட்டிற்கும் நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம் என்று ஜோன்சன் பெருமையாக கூறினார்.
ஹங்கேரியில் 'நாம் என்ன செய்யலாம் என்பது பற்றிய கேள்விகள்' உட்பட 'நேட்டோவின் தென்கிழக்கு பக்கத்தை' வலுப்படுத்த உதவுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
பாதுகாப்புக் குழுவின் டோரி தலைவர் ரோபியாஸ் எல்வுட், 'உக்ரேனில் கணிசமான நேட்டோ இருப்பை அணிதிரட்டுவதற்கு இன்னும் தாமதமாகவில்லை' என்று கூறினார். இதனை ஜோன்சன் மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இது 'அண்மையில்' சாத்தியம் என்றும் மற்றும் இது 'படையெடுப்புக்கு புட்டினுக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்கலாம்' என்றும் எச்சரித்தார்.
'உக்ரேனின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு தனது கட்சியின் 'உறுதியான' ஆதரவை அறிவிக்க தொழிற் கட்சித் தலைவர் சேர் கீர் ஸ்டார்மர் உடனடியாக விரைந்தார். 'தொழிற் கட்சியானது உக்ரேன் தன்னை பொருத்தமாக பாதுகாக்கும் திறமையை வலுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை ஆதரிக்கிறது,' என்று அவர் கூறினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக இவர்களுக்கு இடையலான இந்த பொதுவான இராணுவவாத திட்டநிரலானது நேற்றைய பிரதமரின் கேள்விகளின் போது ஜோன்சனுக்கு எதிரான ஸ்டார்மர் மற்றும் பிற தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீடுகள் பலவீனமாக இருப்பதை உறுதி செய்தது. உக்ரேனின் எல்லையில் உள்ள நெருக்கடி குறித்து ஸ்டார்மர் 'அறியாமையில்' இருப்பதாக ஜோன்சன் கூறினார். அதேசமயம் ரஷ்யாவை 'பொறுப்பற்ற மற்றும் பேரழிவுகரமான படையெடுப்பில்' இருந்து தடுக்கும் முயற்சியில் அவரது அரசாங்கம் 'மேற்கு நாடுகளை ஒன்றிணைப்பதில்' மும்முரமாக இருந்தது எனக்குறிப்பிட்டார்.
“பார்ட்டிகேட்” இல், ஸ்டார்மர், நாடாளுமன்றத்தை தெரிந்தே தவறாக வழிநடத்தும் அமைச்சர்கள் தங்கள் இராஜினாமாவை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அறிவிப்புக் கொடுக்கப்பட்டால், 'பிரதமர் இது அவருக்குப் பொருந்தும் என்று நம்புகிறாரா?' என்று கேட்டார். ஜோன்சன், போலீஸ் விஷயங்களில் தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்பது ஸ்டார்மருக்குத் தெரியும் என்றும், அவர் ஒரு 'தலைவராக அல்ல, ஒரு வழக்கறிஞராக' செயல்படுகிறார் என்றும் பதிலளித்தார்.
தொற்றுநோய் காலம் முழுவதும் ஸ்டார்மர் 'தொடர்ச்சியான சந்தர்ப்பவாதியாக' இருந்ததாக ஜோன்சன் குற்றம்சாட்டி, அவர் 'கோடையில் எங்களை பூட்டியிருப்பார், கிறிஸ்துமஸில் அவர் எங்களை மீண்டும் பூட்டுதலுக்கு அழைத்துச் சென்றிருப்பார்' என்று அறிவித்தார். அனைத்து கோவிட் எதிர்ப்புத் தணிப்பு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் பொருளாதாரம் முழுமையாக மீண்டும் திறக்கப்படுவதற்கும் டோரிகளுடன் தொழிற் கட்சி ஒரே நிலைப்பாட்டில் இருப்பதால் ஸ்டார்மர் போட்டியிட விரும்பும் பகுதி இதுவல்ல.
இன்றிலிருந்து பொது இடங்கள் மற்றும் நிகழ்வுகளில் NHS கோவிட் பாஸைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை, மேலும் எந்தவொரு இடத்திலும் சட்டப்படி முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை. இடைநிலைப் பள்ளி வகுப்பறைகளில் கட்டாயம் முகமூடி அணிவது மற்றும் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை கடந்த வாரம் கைவிடப்பட்டது.
ஜோன்சனின் 'முற்றாக பரவவிடு' என்ற சமூகத்தொற்று முனைவிற்கு தொழிற் கட்சியின் பத்து-புள்ளி 'மாற்றீட்டில்' கோவிட் சோதனைகள் கிடைப்பதை விரிவுபடுத்துதல், 'எதிர்காலச் சரிபார்ப்பு' சோதனை மற்றும் தடமறிதல் அமைப்பு, 'தீர்மானங்களை எடுப்பதற்கான வரைபடத்தை வெளியிடுதல்', தேசிய சுகாதார சேவையை 'மாற்றியமைத்தல்' மற்றும் இதனை ஒத்த அர்த்தமற்ற சொற்றொடர்கள் போன்ற குறைந்தபட்ச நடவடிக்கைகளையே கொண்டிருந்தது. 'குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள்' என்ற அதன் அழைப்பு, அதாவது, பாரிய நோய்த்தொற்றுகளை எதிர்கொண்டு பள்ளிகளைத் திறந்து வைப்பது என்பது தொழிற் கட்சியின் முன்னுரிமைகளின் உண்மையான குறிகாட்டியாகும். மேலும் 'வைரஸுடன் வாழ்வதற்கான' திட்டமும் அவர்களின் பத்து புள்ளிகளில் விளக்கப்பட்டுள்ளது.
ஜோன்சனின் பின்வரிசை அங்கத்தவர்களுக்கு அளித்த அறிவிப்பில் இறுதியாக இன்று அரை மில்லியன் மக்களை 'சமூகநல உதவியிலிருந்து' வேலைக்கு அனுப்பும் திட்டத்தை அறிவிப்பதற்கான வாக்குறுதியை உள்ளடக்கியிருந்தது. 'பல பேர் என்னை வெளியேற்ற விரும்பலாம்,' ஆனால் அவர், 'நான் எனது வேலையைத் தொடர்வேன்' என்று அவர் கூறினார்.
ITV இன் துணை அரசியல் ஆசிரியர் அனுஷ்கா அஸ்தானாவின் கூற்றுப்படி, பிரதமர் ஒரு நாளைக்கு 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார். ஒரு ஆதாரத்தின்படி, அவருக்கு அவர்களின் செய்தி? ‘நீங்கள் இன்னும் மேலும் பழமைவாதியாக இருக்க வேண்டும்’ என்னும் பெரும் செய்தியாகும்”. அதாவது வரி குறைப்பு, கோவிட் பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு மற்றும் ஆங்கிலக்கால்வாயினூடாக இடம்பெயர்வதை கட்டுப்படுத்துதல் என்பதாகும்.
ஜோன்சனின் மற்றொரு துருப்புச் சீட்டு, 18 ஆம் நூற்றாண்டின் உறுப்பினர் என்று அறியப்பட்ட ஒரு கடினமான பிற்போக்குவாதியான ஜேக்கப் ரீஸ்-மோக் வழங்கிய செய்தியின்படி சாத்தியமான பொதுத் தேர்தல் மூலம் அவரது எம்.பி.க்களை அச்சுறுத்துவதாகும். நாடாளுமன்ற தலைவரான ரீஸ்-மோக், Newsnight இல் செவ்வாய்கிழமை அன்று ஜோன்சனின் ஆதரவாளர்கள் சாத்தியமான அதிருப்தியாளர்களிடம் அவர் தலைமைப் போட்டியில் தோற்றால், எந்தப் புதிய பிரதமரும் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கூறுவதாக தெரிவித்தார்.
'நாங்கள் சிறப்பாகவோ அல்லது மோசமாகவோ, அடிப்படையில் ஒரு ஜனாதிபதி முறைக்கு நகர்ந்துள்ளோம் என்பது எனது கருத்து. எனவே அங்கு தலைமைக்கான போட்டி என்பது முற்றிலும் கட்சியை விட தனிப்பட்டரீதியானது. மேலும் எந்தவொரு பிரதமரும் புதிய போட்டியைத் தேடுவதற்கு முன்னர் நன்கு ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது நல்லது' என்று அவர் கூறினார்.
இந்த அச்சுறுத்தல், அரசியலமைப்பு ரீதியில் தேவை இல்லை என்று பரவலாக நிராகரிக்கப்பட்டதுடன் மற்றும் டோரி பிரதமர் ஜோன் மேஜர், தொழிற் கட்சியின் கோர்டன் பிரவுன் அல்லது ஜோன்சனின் முன்னோடி தெரசா மே ஆகியோரால் இதற்கு முன்பு பின்பற்றப்படவில்லை.
நேற்றைய விவாதங்களைப் போலவே விகாரமானதாகவும், முடிவெடுக்க முடியாததாகவும் இருந்தபோதிலும், ஜோன்சனின் தலைவிதி பற்றி நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட மோதல், டோரி அல்லது தொழிற் கட்சிக்கு பெயரளவில் அவர்கள் விசுவாசமாக இருந்தாலும், நடைமுறையில் ஒரு அணியாக இருக்கும் சமூக நோய் எதிர்ப்பு சக்தி கொள்கை, சமூக பிற்போக்கு, இராணுவவாதம் மற்றும் போர் ஆகியவற்றிற்கு ஆதரவான போட்டி வலதுசாரி பிரிவுகளுக்கு இடையிலானது தான் என்பதை அவை உறுதிப்படுத்துகின்றன.