இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
உலகம் முழுவதும் அதிவேகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒமிக்ரோன், இலங்கையில் ஒரு பாரிய பேரழிவுக்கு அச்சுறுத்தி வருகிறது. எவ்வாறாயினும், மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அரசாங்கம் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப நெருக்குவதோடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ஊக்குவிப்பதுடன் வெளிப்படையான ஆபத்துகள் இருந்தபோதிலும் பாடசாலைகளை மீண்டும் திறக்கிறது.
அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் நோயை தடுக்க ஒன்றும் செய்ய முடியாது என்ற கொடிய மனோபாவத்தை ஊக்குவிக்க முயல்கின்றனர். கடந்த திங்கட்கிழமை, சுகாதார அமைச்சின் வைரஸ் நிபுணர் நதீகா ஜனககே ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: “ஒமிக்ரோன் நம் நாட்டில் இருக்கின்றது, அது பரவுகிறது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்வரும் வாரங்களில் இது டெல்டா மாறுபாட்டை விஞ்சி இலங்கையின் ஆதிக்க மாறுபாடாக மாறும்.”
அடுத்த நாள், 'ஓமிக்ரான் சுனாமியின்” விளைவுகளைச் சுட்டிக்காட்டிய மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ, 'மருத்துவமனைகளில் நெரிசலுக்கு வழிவகுக்கும் வகையில் மேலும் பலர் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்படுவதோடு மேலும் பல சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்படுவதுடன் தனிமைப்படுத்தப்படுவர். இது சுகாதார கட்டமைப்பை கடுமையாக முடக்கிவிடும்,” என எச்சரித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவினால் டிசம்பர் 31 அன்று உறுதிப்படுத்தப்பட்டவாறு 41 தொற்றாளர்களுடன் சேர்த்து, இலங்கையில் தற்போது ஒமிக்ரோன் நோய்த்தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை ஐம்பதுக்கும் அதிகமாக உள்ளது. (ஜனவரி 15 அன்று இதே பல்கலைக்கழகம் 160 ஒமிக்ரோன் தொற்றாளர்களை அடையாளம் கண்டது.) இந்த நோய்த்தொற்றுகள் நாடு முழுவதிலும் இருந்து பெற்ற மாதிரிகள் மூலம் அடையாளம் காணப்படவில்லை, மாறாக கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியிலிருந்து முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் அடையாளம் காணப்பட்டவை என நிறுவனத்தின் தலைவர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
சோதனையில் பயன்படுத்தப்பட்ட 176 மாதிரிகளில் 23 சதவீதம் அல்லது 41 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதானது ஓமிக்ரோன் மாறுபாட்டின் அதிகளவான பரவலை சுட்டிக் காட்டுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஒமிக்ரோன் பரவுவது பற்றிய தெளிவான விபரத்தைப் பெற முடியும், ஆனால் அது செய்யப்படவில்லை.
சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத், கடந்த திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “ஓமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் இதுவரை சில பகுதிகளில் மட்டுமே கண்டறியப்பட்டிருந்தாலும், அவர்கள் அந்தப் பகுதிகளில் மாத்திரம் இருப்பதாக அர்த்தமில்லை,” என்றார்.
தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற அதன் பொய் கூற்றை வலுப்படுத்த, அரசாங்கம் வேண்டுமென்றே பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை நாளொன்றுக்கு 6,000 ஆகக் குறைப்பதன் மூலம் தொற்றாளர்களை குறைத்துக் கணக்கிடுகிறது. நாளொன்றுக்கு குறைந்தது 40,000 பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த வரையறுக்கப்பட்ட சோதனையில் கூட, தினமும் 600 நோய்த்தொற்றுகள் மற்றும் 20 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கோவிட்-19 இன் பரவலுக்கும் இப்போது வெளிப்பட்டிருக்கும் புதிய மாறுபாட்டின் புதிய தொற்றுக்கள் தலை தூக்குவதற்கும் இராஜபக்ஷ அரசாங்கமே முழுப் பொறுப்பாகும். இலாப உற்பத்திக்கு இடையூறு விளைவிப்பதில்லை என்று உறுதியளித்த கொழும்பு, தொற்றுநோயைத் தடுப்பதற்கான எந்தவொரு புதிய பொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த மறுப்பது மட்டுமல்லாமல், முன்னர் பின்பற்றிய வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நீக்குகிறது.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் குறிப்பிடத்தக்க பயணக் கட்டுப்பாடுகள் எதையும் விதிக்காத அரசாங்கம், தற்போது திருமணம், வெளியரங்க கூட்டங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கான வரம்புகளையும் நீக்கியுள்ளது. அனைத்து பொதுத்துறை ஊழியர்களும் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் ஓராண்டுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்களுக்கான சிறப்பு விடுமுறை இரத்து செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். சுற்றுலாத் தொழில் மற்றும் சில்லறை விற்பனை உட்பட அத்தியாவசியமற்ற வணிகங்கள் மற்றும் பள்ளிகள் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பிரதான சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் வருவதற்கு எந்த தடையும் இல்லை. புத்தாண்டின் முதல் நான்கு நாட்களில் 11,380 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு வருகையாளர்களுக்கான சரியான தனிமைப்படுத்தல் திட்டம் இலங்கையில் இல்லை.
புதிய மாறுபாடு பரவுவதைத் தடுக்க எந்த குறிப்பிட்ட நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் மறுத்துவிட்டதுடன் அனைத்துப் பொறுப்புகளையும் மக்கள் மீது சுமத்துகிறது. 'வைரஸ் எதுவாக இருந்தாலும், அறிகுறிகள் ஒரே மாதிரியானவை மற்றும் [அதற்கு எதிரான] சுகாதார நடவடிக்கைகள் ஒரே மாதிரியானவை' என்று சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் கடந்த வாரம் தெரிவித்தார்.
'மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்... எண்களின் பின்னால் செல்வதில் அர்த்தமில்லை. பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதைத்தான் செய்ய வேண்டும்,” என்று அவர் அறிவித்தார். முந்தைய விகாரங்களை விட மிகவும் தீவிரமாகவும் வேகமாகவும் தொற்றக்கூடிய ஓமிக்ரோன், தடுப்பூசிக்கு அடங்காதது மற்றும் இளைஞர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதற்கான ஆதாரங்களை அவரது கருத்துகள் வேண்டுமென்றே புறக்கணிக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள அதன் சமதரப்பினரைப் போலவே, இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைகளும் மனித உயிர்களை அல்ல, பெருவணிகத்தின் இலாபங்களைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். வெளிநாட்டு கையிருப்பு குறைவதால் ஏற்பட்டுள்ள ஆழமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, அத்தியாவசியமற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் உட்பட அனைத்து ஏற்றுமதி தொழில்களையும் திறந்த நிலையில் வைத்திருக்குமாறு கொழும்பு பணித்துள்ளது. மருத்துவ ரீதியாக கோவிட் தொற்று உள்ளதற்கான சான்றிதழைப் பெறாத தொழிலாளர்கள் விடுமுறை எடுக்க முடியாது.
தொற்றுநோயால் முன்வைக்கப்படும் சவாலை எதிர்கொள்ள சீரழிந்து வரும் பொது சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கு அதிக நிதியை ஒதுக்குவதற்கு பதிலாக, அரசாங்கம் பெருவணிக இலாபங்களை அதிகரிக்க பாரிய நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளது.
'நிதி அமைச்சரின் 229 பில்லியன் ரூபாய் பொருளாதார நிவாரணப் பொதி பங்குச் சந்தையைத் தூண்டுகிறது' என்ற தலைப்பிலான கட்டுரையை ஜனவரி 5 அன்று ஐலண்ட் பத்திரிகை வெளியிட்டிருந்தது. கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) சுட்டெண் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் 174.72 புள்ளிகளால் உயர்ந்து முன்னெப்போதும் இல்லாத உச்சத்தில் முடிவடைந்ததாகவும், அது 2022 அரசாங்க வருவாயில் 10 சதவீதமாளவான பிரமாண்டமான தொகையாகும், என்று அந்த கட்டுரை கூறியது.
கொடிய வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் இருந்தபோதிலும் தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலைகள் மற்றும் வேலைத் தளங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று கோரும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் முழு ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, நவம்பரில் இலங்கை ஏற்றுமதி மாதாந்திர உச்சத்தை எட்டியது. ஆடை ஏற்றுமதி 58 சதவீதமும், ரப்பர் பொருட்கள் 47 சதவீதமும், தேயிலை 22 சதவீதமும், தேங்காய் பொருட்கள் 41 சதவீதமும் உயர்ந்துள்ளன.
இராஜபக்ஷ அரசாங்கமும் உலகெங்கிலும் உள்ள ஏனைய முதலாளித்துவ அரசாங்கங்களும் தொற்றுநோயைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் புறக்கணித்து, தடுப்பூசி போடுவதே ஒரே தீர்வு என்று வலியுறுத்துகின்றன. அதிக சதவீத மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ள நாடுகளில் கூட, வைரஸின் விரைவான பரவல் மற்றும் அதன் டெல்டா மற்றும் ஓமிக்ரோன் மாறுபாடு, இந்த பொய் கூற்றுக்களை அம்பலப்படுத்தியுள்ளது.
பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பாரிய முயற்சிகள், பாதிக்கப்பட்டவர்களை சரியான முறையில் தனிமைப்படுத்துதல், அத்தியாவசியமற்ற உற்பத்தி மற்றும் பாடசாலைகளை மூடுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் மற்றும் உயர்தர முகக்கவசங்களை மற்றும் சுகாதார பணியாளர்கள் உட்பட பொது மக்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றுடன் உலகளாவிய தடுப்பூசி திட்டம் இல்லாமல் தொற்றுநோயை முற்றாக அகற்ற முடியாது.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது ஆளும் வர்க்கங்களின் கைகளில் இருக்கும் வரை இந்த நடவடிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்படாது. தொற்றுநோயை ஒழிப்பதானது, முதலாளித்துவ முறைமையை தூக்கிவீசி, தனியார் இலாபத்திற்காக அன்றி மனித தேவைக்கேற்ப சமூகத்தை மறுஒழுங்கு செய்யும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தை கட்டியெழுப்புவதுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
உலக சோசலிச வலைத் தளத்தால் தொடக்கி வைக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய தொழிலாளர் விசாரணை, தொழிலாள வர்க்கத்திற்குள் அந்த நனவை வளர்ப்பதில் தீர்க்கமானதாகும்.
மேலும் படிக்க
- இராஜபக்ஷவின் அவசரகால நிலைக்கு எதிராக இலங்கை தொழிலாளர்களை பாதுகாத்திடுங்கள்!
- தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பகிரங்க கடிதம்: தொற்றுநோய் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், 2022 இல் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும்!
- அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு, இலங்கை தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு சோசலிச கொள்கைகளுக்காகப் போராட வேண்டும்