மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சாமானிய ஆசிரியர்கள் பாதுகாப்புக் குழு (இங்கிலாந்து) கோவிட்-19 தொற்றுநோயின் அபாயகரமான அதிகரிப்பு நிலைமைகளின் கீழ் பள்ளிகள், வளாகங்களை மீண்டும் திறக்கும் கொள்கைக்கு எதிராக அனைத்து பள்ளி பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கிறது. பூட்டுதல் மற்றும் வைரஸை இல்லாதொழிப்பதற்கான பிற பொது சுகாதார நடவடிக்கைகளின் அவசரதிட்டத்தின் ஒரு பகுதியாக, இணையம் மூலமான கற்றலுக்கு ஆதரவாக பள்ளிகள் மூடப்பட வேண்டும்.
கன்சர்வேடிவ் அரசாங்கம், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் சதிக்கு எதிராக இந்தக் கொள்கையை செயல்படுத்தும் திறன் கொண்ட ஒரே சக்தி, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கிப்பட்ட ஒரு இயக்கமாகும். பாதுகாப்பற்ற பணியிடங்களில் பாரிய வெளிநடப்புகளை ஏற்பாடு செய்வதற்கும், வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் சுயாதீனமான சாமானியதொழிலாளர்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
ஓமிக்ரோன் மூச்சடைக்கக்கூடிய வேகத்தில் பரவுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் உத்தியோகபூர்வமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்களைப் இங்கிலாந்து பதிவு செய்துள்ளது. நோய்த்தொற்றுகளின் பெரும்பொழிவின் காரணமாக பரிசோதனை செய்யும் முறை மிகவும் மோசமாக உள்ளது. அரசாங்க ஆலோசகரான பேராசிரியர் சேர். டேவிட் ஸ்பீகல்ஹால்டர் (Sir David Spiegelhalter), புத்தாண்டு தினத்தன்று இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு 500,000 தொற்றுக்கள் இருக்கும் என்று எச்சரித்தார். மருத்துவமனைகளில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தினசரி 15,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதுடன் இங்கிலாந்தில் கோவிட் நோய்த்தொற்றுகள் ஒரு நாளைக்கு 1.4 மில்லியனையும், வாரங்களுக்குள் ஒரு நாளைக்கு 3,000 இறப்புகளையும் எட்டக்கூடும் என்று நிபுணர்களின் முன்கணிப்பு தெரிவித்துள்ளது.
அனைத்து ஆரம்பப் பாடசாலை மற்றும் இரண்டு மில்லியன் இரண்டாம் நிலைப் பாடசாலை குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாததாலும் மற்றும் பெரும்பாலான இரண்டாம் நிலை குழந்தைகள் ஒற்றை தடவை தடுப்பூசி இடப்பட்டதாலும், மேலும் ஆசிரியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகிக்கொண்டு வருவதாலும், பள்ளிக்கு திரும்புவது பாரிய நோய்த்தொற்று மற்றும் இறப்புக்கான ஒரு செயல்முறையாகும்.
குழந்தைகள், ஆசிரியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பரந்த சமூகத்திற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், வைரஸ் பரவுவதற்கான முதன்மை காரணிகளாக செயல்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது அரசாங்கத்தின் 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி' திட்டத்தை திணிப்பதற்கான ஒரு வழிமுறையாக மாற்றப்படும்.
'குழந்தைகள் நோய்வாய்ப்படுவதில்லை' என்ற இடைவிடாத பிரச்சாரம், குழந்தைகளை பள்ளியில் இருக்கவைக்க சொல்லப்பட்ட ஒரு இழிந்த பொய்யாக அம்பலமாகியுள்ளது. இதன்மூலம் அவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து வேலைக்கு செல்வதால் பெரிய நிறுவனங்களும் பெரும் பணக்காரர்களும் இலாபம் ஈட்ட முடியும்.
டிசம்பர் 28 அன்று இங்கிலாந்தில் 0 முதல் 5 வயதுக்குட்பட்ட 92 குழந்தைகளும், 6 முதல் 17 வயதுக்குட்பட்ட 53 குழந்தைகளும் என ஒரே நாளில் மொத்தம் 145 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்றைய தினம் கோவிட் நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,455 பேரில் குழந்தைகள் 10 சதவீதமாகும். தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரு வாரத்தில் 621 குழந்தைகள் என மிகப்பெரிய வாராந்த அதிகரிப்புடன் அனுமதிக்கப்பட்டனர். நீண்டகால கோவிட் குழந்தைகளுக்கான ஆதரவுக் குழுவானது 69,000 குழந்தைகளுக்கு நீண்டகால கோவிட் விளைவுகள் இருப்பதாக மதிப்பிடுகிறது. இது ஒரு பள்ளிக்கு மூன்று பேருக்கு சமம். இங்கிலாந்தில் ஏற்கனவே 124 குழந்தைகளுக்கு மேல் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர்.
பள்ளிக்கு திரும்பும் கொள்கையை அரசாங்கம் அமுல்படுத்துவதால், இந்த துயரமான புள்ளிவிவரங்கள் மிகவும் சிறியளதாகி விடும். ஜனவரி 1 அன்று, கல்விச் செயலர் நதீம் சஹாவி டெய்லி டெலிகிராப்பில் பின்வருமாறு அறிவித்தார். “இப்போது எங்கள் குழந்தைகள் அவர்கள் விரும்பும் மற்றும் இருக்க வேண்டிய வகுப்பறையில் நேருக்கு நேர் கற்காமல் இருப்பதை மன்னிக்க முடியாது,” மேலும், “நாங்கள் இந்நாட்டில் தொற்றுநோயிலிருந்து நிரந்தர நோய்க்கு மாறுகிறோம்” என்றார்.
ஒரு நாள் கழித்து, சஹாவி கல்வி மற்றும் குழந்தை பராமரிப்புத் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினார், பாதுகாப்பற்ற வகுப்பறைகளுக்குத் திரும்புவதை நியாயப்படுத்த சில பரிதாபகரமான தணிப்பு நடவடிக்கைகளைக் கோடிட்டுக் காட்டினார். ஒரு கட்டுப்பாட்டு பரிசோதனை நடவடிக்கைகளை தளர்த்தி ”7000 புதிய காற்றை சுத்திகரிக்கும் உபகரணங்களை வழங்குவதாகவும் மற்றும் இரண்டாம் நிலை மாணவர்கள் திரும்பி வரும்போது பள்ளிகளிலேயே “வாரத்திற்கு இரண்டு முறை சோதனை செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்” மற்றும் ஜனவரி 26 வரை வகுப்பறைகளில் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கைகளின் மோசடித் தன்மையானது, ஆசிரியர்கள் வருகையின்மையை சமாளிக்க பள்ளிகள் 'வகுப்புகளை ஒன்றிணைத்தல், அதிக எண்ணிக்கையானோருக்கு கற்பித்தல்' ஆகியவற்றைப் கருத்திலெடுக்க வேண்டும் என்ற சஹாவியின் அறிவுறுத்தலால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. ஓமிக்ரோன் பரவலின் அளவு, அரசாங்கம், பொதுத்துறையில் வேலையில் உள்ளவர்களில் 25 சதவீதத்தினரின் வருகையின்மைக்குத் தயாராகி வருவதால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. அதாவது பல பள்ளிகள் திறந்த நிலையில் வைத்திருக்க முயற்சித்தால் 60-70 குழந்தைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த வகுப்புகளை நடத்த வேண்டியிருக்கும். பணியாளர் பற்றாக்குறையை ஈடுசெய்ய ஓய்வுபெற்ற மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு சஹாவி பள்ளிகளை கேட்டுக்கொள்கிறார். கல்வியின் மீதான எந்த அக்கறையினாலும் நேரடி கற்றல் தூண்டப்படுகிறது என்ற அனைத்து கூற்றுகளையும் இது பொய்யாக்குகின்றது. பள்ளிகள் உயர்ந்தளவிலான கோவிட் உற்பத்தி இடங்களாக மாற்றப்படுகின்றன.
இந்தக் குற்றச்செயல்களில் அரசாங்கத்தின் பங்காளிகள் தொழிற்சங்கங்களும் தொழிற் கட்சியும் ஆகும். அவர்கள் இப்போது வெளிப்படையாக அதன் கொலைகாரத் தொற்றுக் கொள்கைக்கு உத்தரவாதம் அளிப்பவர்களாகவும், செயல்படுத்துபவர்களாகவும் தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றனர்.
சஹாவியின் பகிரங்கக் கடிதம் வெளியிடப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, ஆறு முக்கிய கல்வி சங்கங்களான NASUWT, ASCL, GMB, NAHT, NEU மற்றும் UNISON ஆகியவை மீண்டும் திறப்பதற்கு ஒப்புதல் அளிக்க ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. 'ஆசிரியர்கள், தலைவர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் நேரடி கற்பித்தலை நடத்த வேண்டும் என்று தீவிரமாக விரும்புகிறார்கள்' என்று அது அறிவிக்கிறது.
கல்வித்துறை சங்கங்கள் முன்வைத்த ஒரே கோரிக்கை, கட்டுப்பாட்டு பரிசோதனைகளை ஒத்திவைத்தல், “கோவிட் தொடர்பான வருகையின்மையை ஈடுகட்ட மேலதிக ஊழியர்களுக்கான செலவுகள்”, “அவ்விடங்களிலேயே பரிசோதனை”, கூடுதல் “காற்று சுத்தம் செய்யும் கருவிகளுக்கான” செலவுகளுக்கு உதவியளித்தல் மற்றும் முகக்கவச கொள்கைகளை மதிப்பாய்வு செய்தல் ஆகியவை மட்டுமே.
'பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறந்து வைக்க கல்விப் பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் மிகவும் ஒத்துழைப்புடனும் ஆக்கபூர்வமாகவும் பணியாற்ற வேண்டும்' என்ற வேண்டுகோளுடன் அறிக்கை முடிந்தது. சங்கங்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் சஹாவியின் மறுதிறப்பு பிரச்சார முன்னெடுப்புடன் இணைக்கப்பட்டு, இந்த ஒத்துழைப்பு ஏற்கனவே நடந்து வருகிறது.
சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் உடல்நலம் மற்றும் உயிர்கள் மீது கொண்டுள்ள அவமதிப்பு, இதைவிடத் தெளிவாக இருக்க முடியாது. அவர்களின் அறிக்கையின் ஒரு பகுதி, 'கடந்த கல்வியாண்டில் கல்வித்துறை ஊழியர்கள் மற்ற தொழிலாளர்களை விட நோய்க்கான பரிசோதனையில் நேர்மறையாக முடிவை பெற்றிருந்தனர்' என்று ஒப்புக்கொண்டு, இது 'தவிர்க்க முடியாமல் கல்விக்கு இடையூறு விளைவிக்கும்' என்று புகார் கூறுகிறது. அக்டோபர் 2021 முதல் புதுப்பிக்கப்படாத புள்ளிவிவரங்களின்படி, 570 கல்வி ஊழியர்களின் இறப்பு மற்றும் நீண்ட கோவிட் மூலம் 114,000 ஆசிரியர்களின் இயலாமை ஆகியவற்றிற்கு தொற்றுநோய் 'வழிவகுத்தது'!
கடந்த ஜனவரியில், சாமானிய ஆசிரியர்களால் நடத்தப்பட்ட பாரிய கிளர்ச்சி, திட்டமிட்டபடி பள்ளிகளுக்கு திரும்புவதை தடுத்தது, வேலைவாய்ப்புச் சட்டத்தின் 44வது பிரிவின் கீழ் பாதுகாப்பற்ற பணியிடங்களில் வேலை செய்ய மறுக்கும் உரிமையை மேற்கோள் காட்டி, எந்தவொரு தனிப்பட்ட ஆசிரியருக்கும் கல்விச் சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கும்படி கட்டாயப்படுத்தியது. இம்முறை, மூன்று மடங்கு பெரிய கோவிட் வெடிப்பை எதிர்கொள்கையில், சங்கங்கள் என்ன விலை கொடுத்தாலும் வகுப்பறைகளுக்கு திரும்புவதை கண்காணிக்க உறுதியளித்துள்ளன.
தொழிற் கட்சியை பொறுத்தவரை, நிழல் கல்வி அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீடிங், அரசாங்கத்தின் மற்றொரு உத்தியோகபூர்வக் கொள்கையான 'மாணவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை சோதனை செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று பணிவுடன் அழைப்பு விடுத்தார்.
பாரிய தொற்றுக்கான எதிர்ப்பிற்கு இந்த அழுகிய அமைப்புகளின் மூலம் எந்த தீர்வையும் காண முடியாது. தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கட்சியின் உதவியுடன் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து, பிரிட்டனில் உள்ள ஒரே ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு, அக்டோபர் 1 முதல் தாயாரான லீசா டியஸ் மற்றும் பிரச்சாரக் குழுவான SafeEdForAll (அனைவருக்கும் பாதுகாப்பான கல்வி) அழைப்பு விடுத்த வெள்ளிக்கிழமை பள்ளி வேலைநிறுத்தங்கள் ஆகும். இந்த நடவடிக்கைகள் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகள் ஆகியவற்றிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்டு உலகம் முழுவதும் பெற்றோர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் வலுவான பிரதிபலிப்பைத் தூண்டியுள்ளது.
பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கு எதிரான ஒரு பரந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, இந்த சுயாதீனமான சர்வதேச இயக்கம் முழு தொழிலாள வர்க்கத்திலும் வளர்ச்சியடைய வேண்டும். இது அதன் சொந்த கொள்கையின் அடிப்படையில், இலாபங்களை விட உயிர்களை பாதுகாக்க வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) மற்றும் மே, 2020 இல் நிறுவப்பட்ட சாமானியஆசிரியர்கள் பாதுகாப்புக் குழுவும் (UK) உலகெங்கிலும் உள்ள தங்கள் சகோதர அமைப்புகளுடன் சேர்ந்து, தொற்றுநோய் காலம் முழுவதும் இந்த இயக்கத்திற்கான ஒரு வேலைத்திட்டத்தை வழங்குவதற்காக போராடிக் கொண்டுள்ளன.
ஆகஸ்ட் 8, 2020 அறிக்கை ஒன்றில், “பள்ளிகள் திறப்பதற்கும் ஆளும் வர்க்கத்தின் கொலைகாரக் கொள்கைக்கும் எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயாராவதற்கு, சாமானிய குழுக்களின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வலைப்பின்னலை உருவாக்குவதற்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம். தொற்றுநோய் காலம் முழுவதும் முதன்மையான தொற்றுநோயியல் நிபுணர்கள், நுண்ணுயிரியல் நிபுணர்கள் மற்றும் பிற விஞ்ஞானிகளால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், வைரஸை ஒழிப்பதே ஒரே சாத்தியமான மூலோபாயம் பூச்சிய கோவிட் கொள்கையாகும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
சாமானிய ஆசிரியர்கள் பாதுகாப்புக் குழு, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசத் தாக்குதலின் ஒரு பகுதியாக பள்ளிகளுக்குத் திரும்புவதை எதிர்க்குமாறு பிரிட்டன் முழுவதும் உள்ள பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை வலியுறுத்துகிறது.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளான உலகளாவிய சோதனை, தொடர்புத் தடமறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல், முகக்கவசம் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவற்றுடன் வைரஸ் பரவல் சங்கிலியைத் துண்டிக்க அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவதுடன் செயல்படுத்தப்பட வேண்டும். உலக அளவில் செயல்படுத்தப்படும் இத்தகைய நடவடிக்கைகளால் சில மாதங்களிலேயே தொற்றுநோயை கட்டுப்படுத்தி அழிக்கப்படமுடியும்.
இந்த வாழ்வா சாவா என்ற போராட்டத்தை மேற்கொள்ள, இன்றே சாமானிய ஆசிரியர்கள் பாதுகாப்புக் குழுவில் (UK) சேர்ந்து உங்கள் பள்ளியில் இவ்வாறான ஒரு குழுவை அமைப்பது பற்றி விவாதிக்கவும்.