மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஒரு மிகப் பெரிய ஆப்பிள் கைபேசி விநியோகஸ்தரான தைவானிய பெருநிறுவனமான ஃபாக்ஸ்கான் (Foxconn) அதனால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவகத்தில் நூற்றுக்கணக்கான சக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவு விஷமாகி விட்டதை எதிர்த்து, மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய நெடுஞ்சாலையைத் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தியதை அடுத்து, கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் உள்ள அதன் ஒரு முதன்மைத் தொழிற்சாலையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் டிசம்பர் 17 வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தொடங்கி சுமார் பத்து மணி நேரம் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். (முக நூல்)
தென் மாநிலமான தமிழ்நாட்டின் சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் குறைந்தது 159 இளம் பெண் தொழிலாளர்கள் டிசம்பர் 17 வெள்ளிக்கிழமை உணவு விஷத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது 19 ஆம் நூற்றாண்டின் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிகரான சூழ்நிலையில் தொழிலாளர்கள் வாழுகின்ற நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனம் வழங்கிய தங்கும் விடுதிகளில் அவர்கள் கெட்டுப்போன உணவை உண்டதன் விளைவாகும்.
இந்த சம்பவத்திற்காக விடுதிகளில் உணவு சமைத்து பரிமாறும் உணவக ஊழியர்களை பலிக்கடா ஆக்க நிறுவனமும் அரசு அதிகாரிகளும் முயற்சிக்கின்றனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் தகவலின்படி, மேலும் 256 தொழிலாளர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஆகியவற்றால் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.
பெரும் திரளான உணவு நச்சுத்தன்மை குறித்து 1,000 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த ஒரு கொந்தளிப்பான போராட்டத்தை நடத்தினர். தங்களுக்கு வழங்கப்படும் தரம் கெட்ட உணவுக்கு பலமுறை ஆட்சேபனை தெரிவித்ததாக அவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யும் போதெல்லாம், ஃபாக்ஸ்கான் எந்தப் பொறுப்பையும் ஏற்க மறுத்து, அவர்களின் புகார்களை திமுக தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கத்திடம் பதிவு செய்யும்படி கூறியது. அதன் தொழிலாளர் துறை, நிர்வாகத்துடன் வைத்திருக்கும் நெருக்கமான உறவு இழி புகழ் பெற்றது.
செய்தி அறிக்கைகளின்படி, 5,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை, இந்த ஞாயிற்றுக்கிழமை தான் அதிக பட்சமாக சீக்கிரமாக உற்பத்தியை மீண்டும் தொடங்கும். ஆலை மூடல் ஆத்திரமடைந்த ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் கோபத்தை தணிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிக்கவில்லை. மற்ற நாடுகடந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் அவற்றின் விநியோகஸ்தர்களும் இதேபோன்ற நிலைமைகளை எதிர்கொள்வதால், ஆட்டோ உற்பத்தியின் முக்கிய மையமான ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை முழுவதும் எதிர்ப்புகள் பரவக்கூடும் என்று நிர்வாகமும் திமுக அரசாங்கமும் அஞ்சியது. ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் வளாகம் ஆப்பிள் நிறுவனத்திற்காக ஐபோன் 12 மாடல்களை உற்பத்தி செய்கிறது மற்றும் ஆப்பிளின் புதிய, அதிக விளம்பரப்படுத்தப்பட்ட ஐபோன் 13 மாடல்களையும் உருவாக்கத் தொடங்கியுள்ளது. கூடுதலாக, ஆலை Amazon Fire TV குச்சிகள், Xiomi பிராண்ட் செல்போன்கள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்கிறது.
டிசம்பர் 17, வெள்ளிக்கிழமை மாலை, தங்களுடைய விடுதி உணவகத்தில் உணவை சாப்பிட்ட பிறகு, அவர்களின் நூற்றுக்கணக்கான சக ஊழியர்கள் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறித்து ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் அறிந்தனர். செய்தி அறிக்கைகளின்படி, காணாமல் போன எட்டு தொழிலாளர்களின் கதி குறித்து கவலை தெரிவிக்கும் வகையில் தொழிலாளர்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொண்டனர், அவர்கள் இறந்திருக்கலாம் என்ற அச்சத்தில். அவர்கள் நிர்வாகத்தை அணுகியபோது, அது அவர்களின் கவலைகளைத் அலட்சியப்படுத்தி சம்பவத்தை சிறுமைப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, ஷிப்டைத் தொடங்க வந்த நூற்றுக்கணக்கான ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் அருகிலுள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையை மறிக்க முடிவு செய்தனர். சுமார் 10 மணிக்கு ஆரம்பமாகி. சுமார் 10 மணி நேரம் கழித்து காவல்துறையினரால் அடித்து நொறுக்கப்படும் வரை ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது, அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவுடன் சென்னையை இணைக்கும் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தொழிலாளர்கள் முடக்கினர். தாங்கள் அனுபவித்து வரும் மிருகத்தனமான வேலை நிலைமைகள் மற்றும் நிறுவனத்தின் மீதான வெறுப்பு ஆகியவற்றின் மீதான தங்கள் கோபத்தை தெளிவுபடுத்தும் வகையில், ”ஃபாக்ஸ்கான் ஒழிக” என தொழிலாளர்கள் கோஷமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான தொழிலாளர்கள் போலீசாரால் தாக்கப்பட்டு போலீஸ் வேன்களில் தூக்கி வீசப்பட்டனர். போலீசார் 70 தொழிலாளர்களை ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இருபத்தி இரண்டு தொழிற்சங்கவாதிகளும் கைது செய்யப்பட்டு, போராட்டங்களை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
டிசம்பர் 20, திங்கட்கிழமை நிலவரப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 159 தொழிலாளர்களில் 158 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் கூறியது.
யூடியூப்பில் தமிழில் நேர்காணல் செய்யப்பட்ட துர்கா தேவி என்ற முன்னாள் ஃபாக்ஸ்கான் தொழிலாளர், இந்தத் தொழிலாளர்கள் வாழும் விடுதிகளில் எதிர்கொள்ளும் பயங்கரமான நிலைமைகள்குறித்து விவரித்தார் – அந்த நிலைமைகள் பெருந்தொற்றுநோயின் போது மேலும் மோசமாகியது – மற்றும் அவர்களுக்கு தினமும் வழங்கப்படும் சுகாதாரமற்ற உணவு ஆகியவற்றை விவரித்தார். உணவகத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறைந்ததற்கு அங்கே பணிபுரியும் சமையல்காரர்கள் மற்றும் தொழிலாளர்களை குறை சொல்ல வேண்டியதில்லை என்று துர்கா வலியுறுத்தினார். அதற்கு பதிலாக உணவுச் செலவு மற்றும் சுத்தம் செய்வதைக் குறைத்ததற்காக நிறுவன நிர்வாகத்தை அவர் குற்றம் சாட்டினார்.
முன்பு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய மாணவர் விடுதிகள், கோவிட்-19 பெரும்தொற்றுநோயின் காரணமாக மூடப்பட்டிருந்தன, அவற்றை ஃபாக்ஸ்கான் அதன் தொழிலாளர்களை தங்கவைப்பதற்காக குத்தகைக்கு எடுத்தது என்று துர்கா விளக்கினார். இந்த தங்கும் விடுதிகள் ஆலையில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், தொழிலாளர்கள் தினமும் கம்பெனி பேருந்தில் ஆலைக்கு செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகும். இதன் பொருள் தொழிலாளர்கள் தினமும் மூன்று மணிநேரம் வேலையிலிருந்து முன்னும் பின்னுமாக பயணம் செய்கிறார்கள்.
அவர்கள் சகித்துக் கொண்டிருக்கும் நெரிசலான தங்குமிடத்தைப் பற்றி அவர் விவரித்தார்: 'விடுதி அறைகளில் பெரும்பாலும் ஜன்னல்கள் இல்லை, இந்த அறைகளில் 8 முதல் 15 தொழிலாளர்கள் தங்க வேண்டும். உதாரணமாக, நான் விடுதியில் தங்கியிருந்தபோது, எனது அறையில் மொத்தம் 14 தொழிலாளர்கள் இருந்தனர். தொழிலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கள் சாமான்களை வைக்க போதுமான இடம் கூட இல்லை என்று நிர்வாகத்திடம் புகார் செய்தபோது, தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் 'தங்களை சரிசெய்து கொள்ளும்படி' அவர்களிடம் கூறப்பட்டது.
“எங்களுக்கு சரியான தூக்கம் கூட இல்லை, விடுதி சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. நாங்கள் ஒரே இடத்திலேயே சாப்பிடவும் தூங்கவும் வேண்டும். இது தாங்க முடியாதது.' என்று துர்கா கூறினார், மேலும், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க இந்த நெரிசலான அறைகளில் எந்தவிதமான சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.
ஃபாக்ஸ்கானின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டதாக இந்த ஆண்டு மே மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது, இதனால் நிறுவனம் தற்காலிகமாக உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, இந்திய சந்தைக்காக ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 12 இன் உற்பத்தி 50 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. இதனால் ஃபாக்ஸ்கான் நிர்வாகம் உற்பத்தியை அதிகரிக்க தொழிலாளர்கள் மீது பெருமளவிலான அழுத்தத்தை பிரயோகிக்க தூண்டியது, அதனை வேலையின் தீவிரத்தை அதிகரிப்பதன் மூலமும், அதிக நேரம் வேலை செய்யும்படி அவர்களை கட்டாயப்படுத்துவதன் மூலமும் செய்தது.
சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் எப்போதும் அதிகரித்து வரும் தாக்குதல் காரணமாக, ஃபாக்ஸ்கான் மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டும் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு உற்பத்தியை மாற்ற ஆர்வமாக உள்ளன. சீனாவிற்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், அதன் பங்கிற்கு, இந்தியாவை சீனாவிற்கு மாற்று உற்பத்தி சங்கிலி மையமாக மாற்ற ஆர்வமாக உள்ளது. இது ஸ்ரீபெரும்பதூர் ஆலையில் ஆப்பிள் செல்போன் உற்பத்தியைத் தொடங்க ஃபாக்ஸ்கானுக்கு பெரும் தொகையையும் வரி மற்றும் பிற சலுகைகளையும் வழங்கியது.
டிசம்பர். 17-18 இரவு ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் மீது காவல்துறை நடத்திய நடவடிக்கையை கண்டித்து இந்திய ஸ்ராலினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் மார்க்சிஸ்ட் (சிபிஎம்) கே.பாலகிருஷ்ணன் பேசினார். இது முற்றிலும் பாசாங்குத்தனமானது, 2021 மாநிலத் தேர்தல்களில் திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியில் CPM போட்டியிட்டது, இந்த சிறுஇன-பேரினவாத பிராந்தியக் கட்சியுடன் தொடர்ந்து நெருக்கமாக வேலை செய்து வருகிறது, மேலும் அதனை தொழிலாள வர்க்கத்தின் நண்பன் என்று அடிக்கடி போற்றுகிறது. இந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றதும், திமுக அரசாங்கம், CPM மற்றும் அதன் சகோதர ஸ்ராலினிஸ்ட் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆதரவுடன், இந்தியாவில் பெரும்தொற்றுநோயின் பேரழிவுகரமான இரண்டாவது அலைக்கு மத்தியில் பொருளாதாரத்தை 'மீண்டும் திறப்பதற்கு' அழுத்தம் கொடுத்தது.
திமுகவிற்கும் இரண்டு ஸ்ராலினிசக் கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் நெருக்கமாக உள்ளன, இந்தியாவின் 2019 தேசியத் தேர்தலுக்கான பிரச்சாரங்களுக்கு கிட்டத்தட்ட முழுவதுமாக 250 மில்லியன் ($3.6 மில்லியன்) ரூபாவை ஸ்ராலினிசக் கட்சிகளுக்கு திமுக கொடுத்தது.
பெரும் திரளான உணவு விஷம் காரணமாக தொழிலாளர்களின் எதிர்ப்பை அடுத்து ஃபாக்ஸ்கான் முக்கிய இந்திய வளாகத்தை மூட வேண்டிய கட்டாயம்.