முன்னோக்கு

கோவிட்-19 ஐ அகற்றுவது சாத்தியம் என்பதை சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கை நிரூபிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கை பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் நேற்று ஒரு விரிவான பகுப்பாய்வு வெளியிடப்பட்டது, அது இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள விரும்புபவரின் கவனமான ஆய்வைக் கோருகிறது. SARS-CoV-2 வைரஸ் பரவலை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா வெற்றிகரமாக எடுத்த நடவடிக்கைகள் பற்றிய அந்த நுணுக்கமான மீளாய்வு, உட்குறிப்பாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் பின்பற்றும் பேரழிவுகரமான கொள்கைகளை முழுமையாக அம்பலப்படுத்துகிறது.

பெய்ஜிங்கில் உள்ள அலுவலக வளாகத்தில் மொபைல் கோவிட்-19 சோதனை நிலையம், டிசம்பர் 1, 2021 (AP Photo/Mark Schiefelbein)

1.4 பில்லியன் மக்களைக் கொண்ட சீனா அதன் பூஜ்ஜிய கோவிட் கொள்கையைச் செயல்படுத்துவதன் மூலம், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 100,000 க்கும் குறைவாகவும், மொத்த இறப்புக்களை 5,000 க்கு குறைவாகவும் வைத்துள்ளது (இதில், ஏப்ரல் 2020 வரையில், 10,000 க்கு சற்று அதிகமான நோயாளிகள் மற்றும் வெறும் 3 இறப்புக்கள் என்பதும் உள்ளடங்கும்). ஒப்பிட்டுப் பார்த்தால், சீனாவின் மக்கள்தொகையில் கால்வாசிக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா, 50 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளையும் 800,000 இறப்புக்களையும் கொண்டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், சீனாவைப் போல அதே செயல்திறனுடன் அமெரிக்கா இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி இருந்தால், இறப்பு எண்ணிக்கை 1,000 க்கும் குறைவாக இருந்திருக்கும்.

குறிப்பிட்ட பகுதிகளில் பொது அடைப்புகள், பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல், பாரியளவில் பரிசோதனைகள் மற்றும் நோயின் தடம் அறிதல் உட்பட இந்த வைரஸ் வெடிப்புகளைக் கட்டுப்படுத்த சீனாவுக்குள் எடுக்கப்பட்ட விறுவிறுப்பான பொது சுகாதார நடவடிக்கைகளுடன், உலகளவில் இந்த வைரஸின் பாரிய பரவல் வேகம் அவசியப்படுத்தி இருந்த, சர்வதேச பயணங்கள் மீது சீனாவின் கடுமையான கட்டுப்பாடுகளும் சேர்ந்திருந்தன.

இந்தக் கொள்கை மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்றியது என்பது மட்டுமல்ல, குறிப்பிடத்தக்க வகையில், இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலும் மக்கள் சுதந்திரமாக நடமாடவும் தொடர்பு கொள்ளவும் அனுமதித்துள்ளது. சீனாவின் முக்கிய நகர்ப்புற மையங்கள் உட்பட சீனாவுக்குள் வாழ்க்கை '2020 வசந்த காலத்தின் முதல் அலை முடிந்ததில் இருந்தே ஒப்பீட்டளவில் வழமையாக உள்ளது. உணவகங்கள், மதுபானக் கூடங்கள் மற்றும் திரைப்பட திரையரங்குகள் போன்ற வணிகங்கள் சீனா முழுவதும் திறக்கப்பட்டுள்ளன,' என்று அந்த ஆவணம் விளக்குகிறது. பெரும்பாலும், சீன மக்கள் நோய்தொற்று ஏற்படுமோ அல்லது மற்றவர்களுக்கு நோய்தொற்று ஏற்படுத்தி விடுவோமோ என்ற தொடர்ச்சியான அச்சத்தில் வாழவில்லை.

குறிப்பாக அந்த கட்டுரையின் 'ஒரு வெடிப்பை 15 நாட்களில் கட்டுப்படுத்துவது' என்ற பகுதி கவனமாக ஆய்வு செய்ய தகுதியுடையதாகும். 20 மில்லியன் மக்கள்தொகை கொண்ட முக்கிய பெருநகரமான சோங்கிங்கில் (Chongqing) ஏற்பட்ட ஒரு வெடிப்பை மேற்கோளிட்டு, அது அகற்றும் கொள்கை (“பூஜ்ஜிய கோவிட்' கொள்கை) எப்படி நடைமுறையில் செயல்படுத்தப்பட்டது என்பதை விவரிக்கிறது.

2020 இன் ஆரம்ப மாதங்களில் ஏற்பட்ட முதல் வெடிப்பைத் தொடர்ந்து ஓராண்டுக்கும் அதிகமாக எந்த புதிய நோய்த்தொற்றும் ஏற்படாத பின்னர், நவம்பர் 1, 2021 இல் 32 வயதான ஒருவருக்கு பரிசோதனையில் நோய்தொற்று கண்டறியப்பட்டவுடன் அந்நகரம் மிகவும் வேகமாக விடையிறுத்தது. அந்த ஆவணம் விவரிக்கிறது:

சோங்கிங் நகரில் முதல் நோய்தொற்று கண்டறியப்பட்ட உடனே, நோய்தொற்று ஏற்பட்டவர்கள் விஜயம் செய்திருந்த எரிசக்தி நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் பிற கட்டிடங்களை அந்நகரம் அடைத்தது. நோய்தொற்று ஏற்பட்டவர்கள் வசித்த நகர மாவட்டங்களில் பாரிய பரிசோதனை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் 125,000 பேரிடம் இருந்து பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அந்த நோயாளிகளின் அடுக்குமாடி குடியிருப்புகள் முற்றிலும் மூடப்பட்டன, உணவும் ஏனைய அத்தியாவசிய வினியோகங்களும் வழமையாக அந்நகர சுகாதார தொழிலாளர்களால் வழங்கப்பட்டன. … அந்நகரின் பல்வேறு பகுதிகள் 'உயர் அபாய பகுதிகளாக' முத்திரை குத்தப்பட்டு, நுழைவனுமதியும் வெளியேற்றமும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டன. அந்நகரம் எங்கிலும், மஹ்ஜொங் (mahjong) விளையாட்டு மன்றங்களும், திரைப்பட அரங்குகளும், நூலகங்களும், அருங்காட்சியகங்களும், நிறைய மக்கள் ஒன்று கூடும் பிற பொது இடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.

(ஸ்மார்ட்போன் அடிப்படையிலான பயன்பாடுகளைப் பயன்படுத்துவது உட்பட, நோய்தொற்றுக்கு உள்ளானவர்கள் யார் யாருடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்பதை அடையாளம் காணும்) நோயின் தடமறியும் நடவடிக்கையை அதிகாரிகள் தொடங்கினர். நோய்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள், அவர்களுக்கு அரசால் பாதுகாப்பான இடமும், நேராநேரத்திற்கு உணவும் வழங்கப்பட்டன. நோய்தொற்று ஏற்பட்டவர்களின் ஆரம்ப தொகுப்பு கண்டறியப்பட்ட பின்னர் ஒரு வாரத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,300 க்குச் சென்றது.

இந்த விடையிறுப்பு அளவின் காரணமாக, வெறும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுக்கே பரிசோதனையில் நோய்தொற்று கண்டறியப்பட்டிருந்தது, அவர்கள் அனைவரும் முதல் நாளிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். நவம்பர் 17 இல், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அப்பாற்பட்டு இரண்டு வாரங்களுக்கும் அதிக நாட்களாக எந்த புதிய நோய்தொற்றும் கண்டறியப்படவில்லை என்றான போது, அந்த வெடிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக அந்நகரம் அறிவித்தது. சோங்கிங் உத்தியோகபூர்வமாக 'குறைந்த அபாய பகுதி' என்று அறிவிக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன, வாழ்க்கை திரும்ப வழமைக்குச் சென்றது.

முதல் நோய்தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து அந்த வெடிப்பு உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட வரையில் 15 நாட்கள் ஆகியிருந்தது.

இந்த 15 நாட்கள் தான், சோங்கிங்கில் வசிந்த 20 மில்லியன் பேரும் 2020 இன் ஆரம்பத்தில் முதல் வெடிப்பு ஏற்பட்டதில் இருந்து அவர்களின் வாழ்வில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உள்ளான ஒரே காலகட்டமாக இருந்தது.

இந்த மூலோபாயத்தின் வெற்றி, உள்ளூர் மற்றும் தேசிய மட்டங்களில் சமூக உள்கட்டமைப்பு மற்றும் பொது சுகாதார அமைப்புமுறைகளில் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க முதலீட்டுடன் சேர்ந்து, பரந்த மக்கள் ஆதரவையும் பங்கேற்பையும் சார்ந்திருந்தது, மக்களிடம் இருந்து அந்த ஆதரவும் பங்கேற்பும் கிடைத்தது. அந்த ஆவணத்தின் ஆசிரியர் எழுதுகிறார், சான்றாக, ஐந்து மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் வெறும் இரண்டே நாட்களில் மொத்த மக்களுக்கும் பரிசோதனை செய்யும் அளவிலான திறன் இருக்க வேண்டும், அதேவேளையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஐந்து நாட்களில் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை செய்ய கூடிய திறன் இருக்க வேண்டும்.

சீனாவின் 'பூஜ்ஜிய செயல்விரைவு' கொள்கையானது (dynamic zero policy), SARS-CoV-2 ஐ அகற்ற நோக்கம் கொண்ட ஒரு கொள்கையின் செல்தகைமையை நடைமுறையளவில் உறுதிப்படுத்துகிறது. அக்கட்டுரை விவரித்தவாறு, 2020 இன் கோடையில், சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் (சீன CDC) லான்செட் மருத்துவ இதழில் வெளியிட்ட ஒரு கட்டுரை இரண்டு அடிப்படை மூலோபாயங்களை விவரித்தது: “கட்டுப்படுத்துதல் மற்றும் அடக்குதல்' (அதாவது “பூஜ்ஜிய செயல்விரைவு' கொள்கை அல்லது அகற்றும் கொள்கை') மற்றும் 'தணிப்பு நடவடிக்கைகள்', இது தான் வெவ்வேறு வடிவங்களில் அனைத்து பிரதான முதலாளித்துவ அரசாங்கங்களாலும் பின்தொடரப்பட்ட கொள்கையாகும்.

“தணிப்பு நடவடிக்கைகள், நீண்ட காலத்தில், சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம் ஏற்படுவதை அனுமதிக்கும்,” “என்றாலும் அது நோயாளிகளின் எண்ணிக்கை, நோய் பாதிப்பு மற்றும் இறப்பு ஆகிய அர்த்தத்தில் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்,” என்று சீனா CDC எழுதியது.

விஞ்ஞானிகள் விளக்கியது போலவும், உலக சோசலிச வலைத் தளம் பல முறை ஆவணப்படுத்தி உள்ளதைப் போலவும், கடந்தாண்டு தடுப்பூசி மீது மட்டுமே ஒருமுனைப்பட்டிருந்த “தணிப்பு' மூலோபாயத்தைக் கொண்டு பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியாது. உண்மையில் சொல்லப் போனால், ஆங்காங்கே ஏற்பட்ட தனித்த வெடிப்புகளுக்கு அப்பாற்பட்டு, எந்தவொரு தடுப்பூசியும் வருவதற்கு முன்னரே, இந்த வைரஸைச் சீனாவினால் அகற்ற முடிந்தது என்பதால், பொது அடைப்புகள், தனிமைப்படுத்தல்கள், நோயின் தடம் அறிதல் மற்றும் பாரிய பரிசோதனை என பொது சுகாதார நடவடிக்கைகளே தடுப்பூசிகளை விட மிகவும் முக்கியம் என்பதை சீனாவின் விஷயம் எடுத்துக் காட்டுகிறது.

கூட்டுப் புரட்சிகர போராட்டத்தின் பரந்த சமூக அனுபவம் அங்கே பெருந்திரளான மக்களின் நனவில் ஆழ்ந்த பதிவுகளை விட்டுச் சென்றுள்ளது, அவை முதலாளித்துவ மீட்சிக்கு மத்தியிலும் நிலைத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பூஜ்ஜிய கோவிட் கொள்கைக்கு அங்கே மிகப் பெரியளவில் மக்கள் ஆதரவு உள்ளது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இல்லாதளவில் அங்கிருக்கும் சமூக ஒற்றுமை மற்றும் நனவு மட்டத்தை அது வெளிப்படுத்துகிறது.

தொற்றுநோயைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்புகளை பெய்ஜிங் ஆட்சியால் சர்வசாதாரணமாக புறக்கணித்து விட முடியவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் முற்போக்கான தன்மையைக் கொண்டவை என்றாலும், அவை குறிப்பாக சோசலிசத் தன்மையிலானவை அல்ல. உண்மையில் சீனா நடைமுறைப்படுத்தி உள்ள நடவடிக்கைகள், தொலைதொடர்பு புரட்சியால் சாத்தியமான அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவி இருந்தாலும், 19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் போக்கிலும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த பொது சுகாதார நடைமுறைகள் மற்றும் நீண்ட காலமாக ஸ்தாபிக்கப்பட்ட கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டிருந்தன.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஓர் அகற்றும் மூலோபாயம் (elimination strategy), அது சிறியளவில் இருந்தாலும், நியூசிலாந்து, சிங்கப்பூர், தாய்வான் மற்றும் வியட்நாம் உட்பட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய பிற நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. அதற்கும் மேலாக வாஷிங்டனின் வலுவான அழுத்தத்தின் கீழ், இந்த நாடுகள் பெரிதும் அவற்றின் போக்கை மாற்றிக் கொண்டுள்ளன, சீனா மட்டுமே 'கடைசி வரை பூஜ்ஜிய கோவிட் கொள்கையைத் தொடரும்' கடைசி நாடாகவுள்ளது. அமெரிக்காவில், 1947 இல் நியூ யோர்க்கில் வெடித்த சிற்றம்மை நோய், பாரியளவில் நோயின் தடம் அறிதல் மற்றும் தடுப்பூசி இடுதல் ஆகியவற்றின் மூலம் தடுக்கப்பட்டது, அவ்வாறு ஆரம்பக் காலக்கட்டத்தில், உறுதியான பொது சுகாதார நடவடிக்கைகள், அமெரிக்காவில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தின.

சீனாவில் இத்தகைய வெளிப்படையாக செயல்திறன் மிக்க கொள்கைகள் ஏன் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது பதில் அளிக்க வேண்டிய கேள்வியல்ல, ஆனால், மனித உயிர்களின் இறப்பு எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுமளவுக்கு அதிகரித்துக் கொண்டிருந்த போதும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அது ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற கேள்விக்குத்தான் பதில் தேவைப்படுகிறது.

இதற்கான விளக்கம், வர்க்க நலன்களின் பகுப்பாய்வில் இருந்து வர வேண்டும். இந்த பெருந்தொற்றைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் செயல்திறன் இல்லாதவை என்பதால் நிராகரிக்கப்படவில்லை, மாறாக அவை ஆளும் உயரடுக்கின் நலன்களுடன் மோதுகின்றன என்பதால் நிராகரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே, உயிர்களைக் காப்பாற்றுவதை விட நிதியியல் சந்தைகள் மற்றும் பெருநிறுவன இலாபங்களின் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கவே நனவுபூர்வமாக முடிவெடுக்கப்பட்டது.

மார்ச் 2020 இறுதியில் ஏறக்குறைய இரண்டு கட்சிகளின் ஒருமனதான ஆதரவுடன் அமெரிக்காவில் CARES சட்டம் நிறைவேற்றப்பட்டது, இது வோல் ஸ்ட்ரீட்டுக்கு ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களைக் கையளிக்க ஒப்புதல் வழங்கியது, இதே கொள்கை ஏனைய பிரதான முதலாளித்துவ நாடுகளிலும் பின்பற்றப்பட்டன. இது நடத்தப்பட்ட உடனேயே, ஆளும் வர்க்கம் இந்த வைரஸை கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்து அனைத்தையும் மீண்டும் திறந்துவிட திரும்பியது.

பிறகு என்ன, இந்த பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளில், வயதானவர்களுக்கு அதிக ஆயுட்கால 'பிரச்சினை' மற்றும் முதியோர்களுக்கான சுகாதார கவனிப்பு செலவுகள் ஆகியவையே ஆளும் வர்க்கத்திற்குள் நடந்த தீவிர விவாதத்தின் தலைப்பாக இருந்தது என்ற உண்மையை ஒருவரால் புறக்கணிக்க முடியாது.

65 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 100 முதிய அமெரிக்கர்களில் ஒருவர் கோவிட்-19 ஆல் உயிரிழந்துள்ளார் என்பதை நியூ யோர்க் டைம்ஸ் நேற்று அறிவித்தது. இதுவொரு அதிர்ச்சியூட்டும் தகவலாகும் — அதாவது 65 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய 100 அமெரிக்கர்களில் ஒருவர், அல்லது 600,000 அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். மில்லியன் கணக்கானவர்கள் ஒரு பெற்றோரையோ, பாட்டி-தாத்தாவையோ அல்லது ஒரு துணையையோ இந்த பெருந்தொற்றில் இழந்திருக்கிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.

இந்த மிகப் பெரிய சமூக குற்றம் தொடர்கிறது. கோவிட்-19 இன் ஓமிக்ரோன் வகை உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற போதும், அதை தடுக்க எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதை ஆளும் வர்க்கம் தெளிவுபடுத்தி உள்ளது. “ஓமிக்ரோனின் ஒரு பேரலை வந்து கொண்டிருக்கிறது,” என்பதை பிரிட்டன் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் ஞாயிற்றுக்கிழமை ஒப்புக் கொண்டார், என்றாலும் 'இப்போதே பூஸ்டர் மருந்து எடுத்துக்கொள்வதை' தவிர வேறெதுவும் செய்யப் போவதில்லை என்று முன்மொழிந்தார். அனைத்து வணிகங்களும் பள்ளிகளும் திறக்கப்பட்டிருக்கும்.

தற்போது டெல்டா வகையின் எழுச்சிக்கு மத்தியில் இருக்கும் அமெரிக்காவில், ஓமிக்ரோனுக்கு விடையிறுத்து 'சமூக அடைப்புகள் எதுவும் இருக்காது' என ஜனாதிபதி பைடென் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 1,100 க்கும் அதிகமானவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், சீனாவில் இந்த பெருந்தொற்றின் ஒட்டுமொத்த போக்கில் இறந்தவர்களை விட அதிகமானவர்கள் அமெரிக்காவில் ஒவ்வொரு வாரமும் கொல்லப்படுகிறார்கள்.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கோவிட்-19 ஆல் 5.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர், அதேவேளையில் நிஜமான எண்ணிக்கையோ ('அதிகப்படியான இறப்புகள்') சுமார் 15 மில்லியனாக உள்ளது. அமெரிக்காவில் மட்டுமே, இந்த பெருந்தொற்றால் நிஜமான இறப்பு எண்ணிக்கை 1 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இந்த மரணங்கள் தடுத்திருக்கக் கூடியவை என்றால் —அதை செய்ய முடியும் என்பதைச் சீனா எடுத்துக்காட்டுகிறது— பின் ஒருவர் மிகப்பெரும் விகிதாசாரத்திலான ஒரு சமூக குற்றத்தைப் பற்றி, உண்மையில் சொல்லப் போனால் நவீன வரலாற்றில் மிகப்பெரிய சமூக குற்றங்களில் ஒன்றைக் குறித்து பேசுகிறார்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற முக்கிய முதலாளித்துவ நாடுகளின் அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் மரணங்களின் எண்ணிக்கைக்கு எல்லையே இல்லை என்பதையே கடந்த இரண்டு ஆண்டுகளின் அனுபவம் காட்டுகிறது. இதை வரம்புக்குள் கொண்டு வர முடியும், ஆனால் அந்த வரம்பு ஆளும் வர்க்க அரசாங்கங்களால் அல்ல மாறாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அமைப்பு மற்றும் தலையீட்டால் மட்டுமே நிர்ணயிக்க முடியும்.

சீனாவே எதிர்கொள்ளும் சங்கடமான நிலை என்னவென்றால், பூஜ்ஜிய கோவிட் கொள்கையை தனியொரு நாட்டில் பேணுவதற்கான முயற்சியாகும், இது நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாதவை. இந்த கொள்கையைக் கைவிட பிரதான ஏகாதிபத்திய சக்திகளால் கொடுக்கப்பட்டு வரும் மிகப் பெரும் அழுத்தத்தை சீனா தாங்க வேண்டியுள்ளது. இந்த முனைவுக்குப் பின்னால் இரண்டு நோக்கங்கள் உள்ளன. முதலாவது, உலகாளவிய முதலாளித்துவச் சந்தைக்கு சீனா மிகப் பெரிய உற்பத்தி மையமாக இருப்பதால், சீனாவில் உள்ள கட்டுப்பாடுகள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இலாபங்களை சீர்குலைப்பதாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இதை விட முக்கியமாக உள்நாட்டு அரசியல் பரிசீலனைகளும் உள்ளன. அந்த விஞ்ஞானி சமர்பித்த ஆவணத்திலிருந்து WSWS பெற்றுள்ள ஒரு பொதுவான எதிர்வினை என்னவென்றால், சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கை மற்றும் அதன் பரந்த மக்கள் ஆதரவு இரண்டினது வெற்றியைக் குறித்த ஆச்சரியமாகும். சீனாவின் எல்லைகளுக்குள் இந்த வைரஸை அகற்றுவதற்கான அதன் ஆற்றல், நிதிய தன்னலக்குழு மேற்கொண்டுள்ள கொலைபாதக போக்கிற்குச் சர்வதேச தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது.

இதுதான் சீனாவுக்கு எதிராக 'இனப்படுகொலை' குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் அதிகரித்தளவிலான சீன-விரோத வெறித்தன பிரச்சாரத் தொனிக்குக் காரணமாக உள்ளது. அமெரிக்கா அல்லது ஐரோப்பிய சக்திகளை விட வீகர் மக்ககள் உட்பட அதன் குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையின் மீது அதிக அக்கறை கொண்ட நாடு என்பதை காட்டுகிறது. இத்துடன் இந்த பெருந்தொற்றுக்கு சீனா தான் பொறுப்பு என்ற 'வூஹான் ஆய்வக' பொய்யையும் இந்த சூழலில் இணைத்துப் பார்க்கவேண்டும்.

பொய்களைக் கொண்டு பொதுக் கருத்தில் விஷமேற்றுவதும், பிரதான முதலாளித்துவ நாடுகளில் பின்பற்றப்படும் கொள்கைக்கான மாற்றீடுகள் பற்றிய உண்மையான பொது விவாதத்தைத் தடுப்பதுமே ஒட்டுமொத்த அம்சமாக உள்ளது. இந்த பிரச்சாரம், வைரஸை சீனாவுக்குள் திறந்து விடும் கொள்கைக்கு மாற, அந்நாட்டு வணிக உயரடுக்கிடம் இருந்து அழுத்தத்தைத் தீவிரப்படுத்தும், அதேவேளையில் பூஜ்ஜிய கோவிட் கொள்கையிலிருந்து எவ்விதத்திலும் பின்வாங்குவது சீனத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து மிகப்பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ளும்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் முதலும் முக்கியமாக ஓர் அரசியல் கேள்வி என்பதை சீனாவின் முன்னுதாரணம் எடுத்துக்காட்டுகிறது. உலகளவில் அகற்றுவதற்கான ஒரு மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இந்த பெருந்தொற்று நெடுகிலும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள பொருளாதார நலன்களை மறுத்தளிப்பதன் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சமூக இயக்கம் அவசியமாகும். இதன் அர்த்தம், தவிர்க்க முடியாத வகையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டமாகும்.

என்ன நடந்துள்ளது, இதற்கு யார் பொறுப்பு, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு புரிதலைத் தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ப்பது மிகவும் முக்கியமாக உள்ளது. இதுவே, உலக சோசலிச வலைத் தளம் தொடங்கி உள்ள கோவிட்-19 பெருந்தொற்று மீதான உலகளாவிய தொழிலாளர் விசாரணையின் குறிக்கோளாகும்.

Loading