முன்னோக்கு

தொற்றுநோய் மற்றும் ஓமிக்ரோன் எழுச்சியைத் தடுக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுங்கள்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1. SARS-CoV-2 இன் ஓமிக்ரோன் மாறுபாடு இப்போது உலகளவில் பரவி வரும் நிலையில், கோவிட்-19 தொற்றுநோய் பற்றிய உத்தியோகபூர்வ கூற்றுக்கள் முற்றிலும் தவறானவை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைடென் நிர்வாகமும், உலகளவில் முதலாளித்துவ அரசாங்கங்களும் தொற்றுநோயை குற்றகரமாக பொறுப்பற்ற வகையில் அணுகுகின்றன. அவை, பெருநிறுவன ஊடகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூகத்தை பாதுகாப்பதில் தங்கள் தொழில்முறைப் பொறுப்பை மீறும் டாக்டர் அந்தோனி ஃபவுசி மற்றும் டாக்டர் ஆஷிஷ் ஜா போன்ற பொது சுகாதார அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகின்றன.

ஓமிக்ரோன் “கவலைக்குரிய மாறுபாடு” என உலக சுகாதார அமைப்பால் (WHO) அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களில், தொற்றுநோய் ஒரு புதிய மற்றும் மிகுந்த ஆபத்தான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது தெளிவாகியுள்ளது. இந்த மாறுபாடு இப்போது 63 நாடுகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது, அவற்றில் பல சமூக பரவலை உறுதிப்படுத்தியுள்ளன. இது, மாறுபாடுகளை பரவலாக கண்காணிக்கும் மற்றும் கோவிட்-19 க்கு எதிராக அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ள தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. மேலும், இது வரும் வாரங்களில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களிலேயே, ஓமிக்ரோன் முன்னைய மாறுபாடுகளை விட மிக வேகமாக பரவுவது அறியப்பட்டுள்ளது. மே 2021 முதல் உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் நோய்தொற்றுக்களையும் மற்றும் மில்லியன் கணக்கான இறப்புக்களையும் விளைவித்த டெல்டா மாறுபாடை விட இது குறைந்தது இரண்டு மடங்கு அதிகம் பரவக்கூடியது என ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது.

தொற்றுநோயின் முந்தைய அலைகளை விட இப்போது தென்னாபிரிக்கா முழுவதும் தினசரி புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்துள்ளன, அதாவது கடந்த மூன்று வாரங்களில் நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 420 இல் இருந்து 22,388 என்றளவிற்கு கடுமையாக உச்சமடைந்துள்ளது. என்றாலும், தேசியளவில் பரிசோதனை நேர்மறை விகிதம் தோராயமாக 30 சதவீதமாக இருப்பதால், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நோய்தொற்றுக்கள் கண்டறியப்படாத நிலை இப்போது உள்ளது. வைரஸின் பரவல் முற்றிலும் கட்டுப்பாட்டில் இல்லை என்ற நிலையில், இந்நிலைமைகள் உலகம் முழுவதும் பரவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்ட தினசரி புதிய நோய்தொற்றுக்கள் (Source: Our World in Data)

ஆரம்பகால ஆய்வுகள், ஓமிக்ரோன் முந்தைய மாறுபாடுகளை விட மறுதொற்றுக்களையும் வெடித்துப் பரவும் நோய்தொற்றுக்களையும் விளைவிப்பதில் மிகுந்த திறன் கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகின்றன. புதனன்று, ஓமிக்ரோன் நோய்தொற்றைத் தடுப்பதில் Pfizer mRNA தடுப்பூசியின் திறன் கணிசமாகக் குறைவதை காட்டும் ஆரம்ப தரவு வெளியிடப்பட்டது.

சாரம்சமாக, மூன்றாவது “பூஸ்டர்” தடுப்பூசி பெற்றவர்கள் (உலக மக்கள்தொகையில் வெறும் 4.1 சதவீதத்தினர் மட்டும்), தீவிரமாகப் பரவும் வைரஸை எதிர்க்க இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்ட நபரைப் போல ஓமிக்ரோனுக்கு எதிராக முடிந்தளவு பாதுகாப்பை கொண்டுள்ளனர் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இரண்டு அளவு தடுப்பூசியை மட்டும் பெற்றவர்கள் (உலக மக்கள்தொகையில் 45 சதவீதத்தினர் மட்டுமே) ஓமிக்ரோனால் ஏற்படும் தொற்றுக்கு முற்றிலும் பாதுகாப்பற்றவர்களாக இருக்கலாம். முதல் அளவு தடுப்பூசியைப் பெற்றவர்கள் அல்லது முற்றிலும் தடுப்பூசி போடாதவர்கள் தொற்றுநோயிலிருந்து தொடர்ந்து பாதுகாப்பற்றவர்களாகத் தோன்றுகிறார்கள்.

இன்னும் தெளிவுபடுத்தப்படாத முக்கிய விஞ்ஞான ரீதியான கேள்வி என்னவென்றால் புதிய மாறுபாட்டின் வீரியம், அல்லது நோய்தொற்றுக்களின் தீவிரம் பற்றியதுதான், ஏனென்றால் இது ஒரு பின்தங்கிய குறிகாட்டியாக உள்ளது, அதனால் வரும் வாரங்களில் தான் அது தீர்மானிக்கப்படும். இருப்பினும், தென்னாபிரிக்காவில் இப்போது தோராயமாக ஒவ்வொரு ஐந்து நாட்களில் மருத்துவமனையில் புதிதாக சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது என்பதுடன், மூன்று வாரங்களுக்குள் மொத்த மருத்துவமனை அனுமதிப்புக்கள் ஏற்கனவே முன்னைய உச்ச நிலைகளில் 31 சதவீதத்தை எட்டியுள்ளன.

2. ஓமிக்ரோன் ஒரு “இலேசான” மாறுபாடாக இருக்கும் என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மெதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்றும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் பெருநிறுவன ஊடகங்களும் கூறியதற்கு முற்றிலும் மாறாக, டெல்டா மாறுபாட்டினால் ஏற்கனவே உருவான பேரழிவுகர உலகளாவிய எழுச்சியை, இன்னும் ஆழப்படுத்தவே ஓமிக்ரோன் அச்சுறுத்துகிறது என பல விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஓமிக்ரோன் குறைவான வீரியம் கொண்டதாக இருந்தாலும், கடுமையாக நோய்வாய்ப்படும் அல்லது இறப்பவர்களின் சதவீதம் குறைந்தாலும், நோய்தொற்றுக்களின் மொத்த அளவை வைத்துப் பார்த்தால், மில்லியன் கணக்கானவர்களை தேவையில்லாமல் வைரஸ் அழித்துவிடும்.

வைரஸின் பரவலை மெதுவாக்கும் வகையில் எந்தவித பொது சுகாதார நடவடிக்கைகளையும் எடுக்க மறுப்பதை நியாயப்படுத்த அரசியல்வாதிகள் கோவிட்-19 ஐ பருவகால காய்ச்சலுடன் இழிவாகவும் விஞ்ஞானபூர்வமற்ற வகையிலும் ஒப்பீடு செய்துள்ளனர். உண்மையில், மக்கள்தொகையில் பெரும் பகுதியினருக்கு, குறிப்பாக வயோதிகர்களுக்கும் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும் காய்ச்சல் பேரழிவை ஏற்படுத்தும். இதேபோல், கோவிட்-19 உடன் “வாழும்” கொள்கை என்பது, சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரிடையே பல்லாயிரக்கணக்கானவர்களை அகால மரணமடைய அனுமதிப்பதாகும்.

அட்லாண்டாவில், டிசம்பர் 8, 2021, புதன்கிழமை, அசோசியேட்டட் பிரஸூக்கு அளித்த பேட்டியின்போது, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குநர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி பேசுகிறார். வாலென்ஸ்கி, ஓமிக்ரோன் “இலேசானது” என முன்கூட்டியே அறிவித்த ஊடக கோரஸூடன் இணைந்து கொண்டார்(AP Photo/Brynn Anderson)

மேலும், உலகளாவிய சமூகத்தின் ஊடாகப் பரவும் ஓமிக்ரோனின் அதிவேக பரவல், குறிப்பாக அதிகமாக தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையே பரவுவது வைரஸ் மேலதிக பிறழ்வுகளை எடுக்க பரிணாம அழுத்தங்களை கொடுக்கிறது. ஒவ்வொரு நாளும், இன்னும் அதிகம் பரவக்கூடிய, தடுப்பூசி எதிர்ப்பு அல்லது கடுமையான மாறுபாடுகள் வெளிப்படக்கூடிய ஆபத்து அதிகரித்து வருகிறது.

ஓமிக்ரோனின் பரிணாம வளர்ச்சி கூட உலகளவில் முதலாளித்துவ அரசாங்கங்களால் வேண்டுமென்றே பின்பற்றப்பட்ட கொள்கைகளின் விளைவாகும். அவர்களின் தீய எண்ணம், அல்லது முன்கூட்டிய திட்டம், கோவிட்-19 ஐ கட்டுப்பாடற்று பரவ அனுமதித்தது அல்லது வரையறுக்கப்பட்ட தடுப்பூசி திட்டங்களால் வைரஸ் பரவல் சிறிதளவு குறைக்கப்பட்டது. தடுப்பூசி மட்டும் அணுகுமுறையின் தோல்வியை ஓமிக்ரோன் அம்பலப்படுத்தியுள்ளது, இது சமூகத்தை வைரஸூக்குப் பின்னால் பல படிகள் பின்தங்கச் செய்துள்ளது.

3. தொற்றுநோய் காலம் முழுவதும், மேலும் இப்போது ஓமிக்ரோன் அச்சுறுத்தலை எதிர்கொள்வதிலும், பொதுச் சுகாதாரம் தனியார் இலாபத்திற்கும் நிதிய தன்னலக்குழுவின் சமூக நலன்களுக்கும் கீழ்ப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் உயர்ந்து வரும் பங்குச்சந்தை இப்போது வரவிருக்கும் இறப்புக்களின் முன்னணி குறிகாட்டியாகும்.

ஓமிக்ரோனின் அதிவேக பரவல் நவம்பர் 26 அன்று உலகளவில் பங்குச்சந்தைகளில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவில் பைடென் நிர்வாகம், இங்கிலாந்தில் ஜோன்சன், ஜேர்மனியில் புதிய கூட்டணி அரசாங்கம், மற்றும் டஜன் கணக்கான பிற உலகத் தலைவர்கள் ஆகியோர், பூட்டுதல்கள் அல்லது கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்பட மாட்டாது என சந்தைகளுக்கு உடனடியாக மீளுறுதி அளித்துள்ளனர். தொற்றுநோய் அசாதாரண வேகத்தில் பரவினாலும், அவர்கள் அனைவரும் தொற்றுநோயை கட்டுப்படுத்த உறுதி அளிக்கவில்லை, ஆனால் கிறிஸ்துமஸ் காலத்தில் பள்ளிகள் மற்றும் கடைகளைத் திறந்து வைப்பதாக உறுதியளித்தனர்.

நியூ யோர்க் டைம்ஸில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை இந்த செயல்முறையை எடுத்துக்காட்டுகிறது. “பங்குச் சந்தையின் கோவிட் பாங்கு: ஒவ்வொரு பீதியில் இருந்தும் விரைவான மீட்பு” என தலைப்பிடப்பட்ட கட்டுரை, “பிப்ரவரி 2020 முதல் பங்குச் சந்தையில் தொற்றுநோயால் ஏற்பட்ட ஒவ்வொரு ஏற்றத்தாழ்வும் முந்தையதை விடக் குறைவாக இருந்தது, அதைத் தொடர்ந்து புதிய உச்சத்திற்கு மீண்டுள்ளது. நவம்பர் 26 அன்று ஓமிக்ரோனின் இருப்பு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட பின்னர், S&P 500 திங்கள் முழுவதும் அதன் முந்தைய உச்சத்திலிருந்து கிட்டத்தட்ட அனைத்து இழப்புக்களையும் மீட்டெடுத்தது” என்று குறிப்பிடுகிறது.

“வோல் ஸ்ட்ரீட்டின் செயல்,” “சில சமயங்களில் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையை புறக்கணித்துள்ளது, அதற்கு பதிலாக குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் அரசாங்க செலவினங்கள் போன்ற பெருநிறுவன இலாபங்களை பெருக்கக்கூடிய பிற காரணிகளில் அதை பூஜ்ஜியமாக்கியது” என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

4. தொற்றுநோய் காலம் முழுவதும் சமூகத்தின் மீது இந்தளவிற்கு அலட்சியம் காட்டியதில் உலக அரசாங்கங்களில் நவீன முன்மாதிரி எதுவும் இல்லை. அவர்களது கொள்கைகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களது செல்வத்தில் அதிவேக வளர்ச்சி கண்ட நிதிய உயரடுக்கின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கே சேவையாற்றுகின்றன. ஆளும் வர்க்கத்தின் ஒரு கணிசமான பிரிவினர் அவர்களின் தொற்றுநோய்க் கொள்கைகளின் நேர்மறை விளைவாக, வயோதிகர்களின் ஆயுட்காலம் குறைந்து, அவர்களது நலன்புரி செலவுகளும் குறைக்கப்பட்டு, இறுதியில் அவர்கள் இறந்துபோவதைக் காண்கின்றனர்.

ஏப்ரல் 24, 2020, வெள்ளிக்கிழமை, உத்தாவின், மேற்கு வேலி சிட்டியில், Maverik மையத்தில் Utah Food Bank இன் நகரும் உணவு விற்பனையகம் முன்பாக உணவு வாங்குவதற்காக வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன [Credit: AP Photo/Rick Bowmer]

உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் (World Inequality Lab) சமீபத்திய அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் மட்டும், உலகின் கோடீஸ்வரர்கள் 3.6 டிரில்லியன் டாலர்களை குவித்துள்ளனர், அதேவேளை தோராயமாக 100 மில்லியன் மக்கள் கடுமையான வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த இரண்டு புள்ளிவிபரங்களும் 2021 இல் மேலும் கணிசமாக அதிகரித்துள்ளன, அதேவேளை தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலகளவில் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கோவிட்-19 தொற்றுநோய்க்கு பலியாகியுள்ளனர்.

5. தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது முதன்மையாக ஒரு மருத்துவ ரீதியான கேள்வி அல்ல என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு, ஒவ்வொரு நாட்டிலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகளைச் செயல்படுத்த அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான போராட்டம் தேவைப்படுகிறது. அதாவது, ஏப்ரல் 2020 இல் சீனாவில் முதன்முதலில் வைரஸ் அகற்றப்பட்டதிலிருந்து இந்த விஞ்ஞான திட்டம் பற்றி அறியப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து மற்ற ஆசிய-பசிபிக் நாடுகளாலும் அது பின்பற்றப்பட்டது.

கோவிட்-19 ஐ முற்றிலும் ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளில், பாரிய பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல், உயர்தர முகக்கவசங்களை வழங்குதல், உலக மக்கள் தொகைக்கு விரைவாக தடுப்பூசி போடுதல், மற்றும் ஏனைய பொது சுகாதார நடவடிக்கைகள் உட்பட, பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக ஆதரவு வழங்கி, பள்ளிகளையும் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் தற்காலிகமாக மூடுவது அடங்கும். இந்த நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தில் பெரிதும் பிரபலமாக உள்ளன, மேலும் அவற்றிற்கு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்து, ஏராளமான ஊடகங்களில் விளக்கமளித்து, விரிவான முறையில் அதற்கு திட்டமிடப்பட்டால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும்.

சீனாவில் நடைமுறையிலுள்ள வைரஸ் ஒழிப்பு மூலோபாயம், தொற்றுநோயை எவ்வாறு நிறுத்துவது என்பது பற்றி சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு மிக முக்கியமான படிப்பினைகளை வழங்குகிறது. ஜனவரி-மார்ச் 2020 முதல் பரவலாக நடைமுறைப்படுத்தபட்ட பூட்டுதல் நடவடிக்கைகள் சீனாவிற்குள் கோவிட்-19 இன் அனைத்து சமூகப் பரவல்களையும் முடிவுக்குக் கொண்டுவந்தன, சில பிராந்தியங்களில் மட்டும் ஏப்ரல் 2020 இல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இது உள்நாட்டிற்குள் வணிகங்களை மீண்டும் திறக்க அனுமதித்தது, அதேவேளை புதிய நோய்தொற்றுக்கள் உள்நுழைவதைத் தடுக்க அனைத்து சர்வதேச பயணிகளையும் கடுமையாக இரண்டு வார காலம் தனிமைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது. பாரிய பரிசோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் திட்டங்களைச் செயல்படுத்தி, நோய்தொற்று வெடிப்புக்கள் எழுச்சி பெறும் போதெல்லாம் அவை விரைந்து தடுக்கப்பட்டன. இந்த கொள்கை, பாரிய தடுப்பூசித் திட்டத்துடன் இணைந்து, சீன தொழிலாள வர்க்கத்தில் பரந்த ஆதரவைக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, சீனா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரில் நிகழ்ந்த ஒட்டுமொத்த இறப்புக்களை ஒப்பீடு செய்யும் வரைபடம். சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்தில் இப்போது நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், சீனா மட்டுமே தொற்றுநோய் ஒழிப்பு உத்தியைப் பராமரித்து வருகிறது. (Source: Our World in Data)

மற்ற பல நாடுகளிலும் பிரதிபலித்ததான சீனாவின் பயனுள்ள எதிர் நடவடிக்கை, கோவிட்-19 ஐ அகற்ற முடியும் என்பதை நிரூபிக்கிறது. மே 16, 2020 முதல், கோவிட்-19 ஆல் 701,170 அமெரிக்கர்களும் மற்றும் உலகளவில் சுமார் 5 மில்லியன் மக்களும் இறந்ததுடன் ஒப்பிடுகையில், 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட சீனாவில் இந்த காலகட்டத்தில் வெறும் இரண்டு பேர் மட்டுமே வைரஸால் இறந்துள்ளனர். உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமான சீனாவில் எடுக்கப்பட்ட விஞ்ஞானபூர்வ நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகளை மீறுவதைக் குறிப்பதாக கூறப்படுவதை சோசலிச சமத்துவக் கட்சி முற்றிலும் நிராகரிக்கிறது.

6. தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரதான தடையாக எப்போதும் ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நலன்கள் இருந்து வந்துள்ளன, அது அதன் தனிப்பட்ட செல்வச் செறிவூட்டலில் எந்த மீறலையும் ஏற்காது. உலகத்தை போட்டி தேசிய-அரசுகளாக பிரித்தல் மற்றும் சமூகத் தேவைகளை தனியார் இலாபத்திற்கு கீழ்ப்படுத்துதல் ஆகிய உலக முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சங்கள், ஒவ்வொரு நாட்டிலும் கோவிட்-19 ஐ ஒழிப்பது குறித்த சமூகத் திட்டமிடலுக்கான மற்றும் உலகளாவிய ஒருங்கிணைந்த முயற்சிக்கான அனைத்து முயற்சிகளையும் சாத்தியமற்றதாக்குகிறது.

அக்டோபர் 8, 2021, வெள்ளிக்கிழமை, இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது இலங்கையின் சுகாதாரப் பணியாளர்கள் சிறந்த ஊதியம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கக் கோரி கோஷமிடுகின்றனர் (AP Photo/Eranga Jayawardena)

தொற்றுநோயைத் தடுக்க தேவையான விஞ்ஞானபூர்வ திட்டத்தைச் செயல்படுத்தவும், மிகவும் ஆபத்தான மாறுபாடுகள் அபிவிருத்தி காண்பதைத் தடுக்கவும் மற்றும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், சர்வதேச தொழிலாள வர்க்கம் சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பை அடிப்படையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த சமூக இயக்கத்தை உருவாக்க வேண்டும். தொழிலாளர்கள், இந்த போராட்டத்தை முன்னெடுக்கவும் அனைத்துத் தொழில்கள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து ஒன்றுபடுவதற்கும், ஆளும் உயரடுக்கின் சார்பாக கொலைகார மீளத்திறக்கும் கொள்கைகளைச் செயல்படுத்திய பெருநிறுவன தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு பள்ளியிலும் மற்றும் பணியிடத்திலும் சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

அடிப்படையில், கோவிட்-19 க்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டமாகும். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி, உழைக்கும் வெகுஜனங்கள் தாமே செல்வத்தை பாரிய மறுபங்கீடு செய்துகொள்வது மற்றும் உற்பத்தி சக்திகளின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்கிறது.

7. தொற்றுநோயின் ஆறாவது உலகளாவிய எழுச்சிக்கான மற்றும் ஓமிக்ரோனின் தோற்றத்திற்கான முதலாளித்துவ பதிலானது, பொய்கள், மூடிமறைத்தல் மற்றும் தவறான தகவல்களை முன்னறிவிக்கிறது, மேலும் முன்நிகழ்ந்திராத இந்த நெருக்கடியை எதிர்கொள்கையில் பொதுமக்களை நிராயுதபாணியாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஓமிக்ரோன் மாறுபாடு வெளிப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் உலக சோசலிச வலைத் தளத்தால் (WSWS) தொடங்கப்பட்ட கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய தொழிலாளர் விசாரணை (Global Workers’ Inquest), தொற்றுநோயின் ஒவ்வொரு அம்சத்திலும் மேற்கொள்ளப்படும் விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடந்து கொண்டிருக்கும் குற்றங்களை ஆவணப்படுத்துகிறது.

இந்த விசாரணை தொழிலாள வர்க்கத்திற்கு கற்பிப்பதற்கும் மற்றும் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாரிய போராட்டத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் தீவிரமாக பங்கேற்கவும், அதன் கண்டுபிடிப்புக்களை சர்வதேச அளவில் பிரபல்யப்படுத்தவும் அனைத்து தொழிலாளர்களையும் WSWS இன் வாசகர்களையும் சோசலிச சமத்துவக் கட்சி அழைக்கிறது.

2022 நெருங்கிக் கொண்டிருக்கையில், பாரிய மரணங்களின் மற்றொரு ஆண்டை நாம் எதிர்கொள்ள முடியாது. கோவிட்-19 க்கு எதிரான போராட்டம் அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் தளங்களில் ஆழப்படுத்தப்பட வேண்டும். ஓமிக்ரோன் மாறுபாட்டினால் ஏற்படவுள்ள அதிர்ச்சிகள் வெகுஜன நனவை ஆழமாக மாற்றும் என்பதுடன், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மற்றும் உலகளவில் சமுதாயத்தை மாற்றுவதற்கான ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தின் அபிவிருத்திக்கு அடித்தளம் அமைக்கும்.

Loading