மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிரிட்டனின் லிவர்பூலில் ஜி7 ஏகாதிபத்திய வல்லரசுகளின் வெளியுறவு அமைச்சர்களின் உச்சிமாநாடு நேற்று ரஷ்யா மற்றும் சீனாவை அச்சுறுத்தும் ஒரு போர்க்குணமிக்க அறிக்கையை வெளியிட்டு நிறைவு பெற்றுள்ளது. அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ரஷ்யாவை கண்டனம் செய்தனர், அதாவது உக்ரேனை ஆக்கிரமிக்க அது தயாராகி வருவதாக கூறப்படுவதன் “பாரிய விளைவுகள்” குறித்து எச்சரித்தனர்.
“உக்ரேனுக்கு எதிரான மேலதிக இராணுவ ஆக்கிரமிப்பு பாரிய விளைவுகளையும் கடுமையான விலை கொடுப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ரஷ்யாவிற்கு எந்தவித சந்தேகமும் வேண்டாம்,” என்று உச்சிமாநாட்டு அறிக்கை கூறியுள்ளது. மேலும், “உக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, அத்துடன் எந்தவொரு இறையாண்மை அரசுக்கும் அதன் சொந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை ஆகியவற்றுக்கான எங்கள் உறுதியான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்றும் அது தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கை சீனாவையும் கண்டித்து இவ்வாறு அறிவிக்கிறது: “சீனாவைப் பொறுத்தவரை, கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் அமைந்துள்ள ஹாங்காங் மற்றும் ஜின்ஜியாங்கில் உள்ள சூழ்நிலைகள் மற்றும் தைவான் ஜலசந்தி முழுவதுமான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். … கட்டாய பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய எங்கள் கவலையையும் தெரிவித்தோம்.”
இந்த அறிக்கை, இரண்டு பெரிய அணுவாயுத சக்திகளான ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக வெளிப்படையாக போர் அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு பொறுப்பற்ற அரசியல் ஆத்திரமூட்டலாகும். கடந்த வாரங்களில், உக்ரேனிய எல்லைக்கு அருகே ரஷ்யா 94,000 முதல் 175,000 வரை துருப்புக்களை குவித்திருப்பதாகக் கூறப்படும் பல்வேறு கூற்றுக்களை அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் வெளியிட்டன. அதே நேரத்தில், அது மாஸ்கோவை எளிதில் சென்றடையக்கூடிய ஏவுகணைகள் அடங்கிய பெரும் ஆயுதக் களஞ்சியத்தை உக்ரேனுக்கு வழங்குவதுடன், உக்ரேனை நேட்டோ கூட்டணியில் சேர்க்கவும் திட்டமிடுகிறது.
ரஷ்யாவிற்கு எதிராக, அமைதி மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாவலராக ஜி7 தன்னைக் காட்டிக்கொள்வது ஒரு மோசடியாகும். ரஷ்யா எவ்வளவு படைகளை அனுப்பினாலும் அது அதன் எல்லைகளுக்குள் உள்ளன, அதே நேரத்தில் வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் ரஷ்யாவின் வாசல் வரை ஒரு சக்திவாய்ந்த ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்குகின்றன, இது மாஸ்கோ மீதான பேரழிவுகரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிடக்கூடும்.
சீனாவைப் பொறுத்தவரை, கோவிட்-19 இன் தோற்றம் பற்றி அது பொய் கூறியதாகவும், ஜின்ஜியாங்கில் வீகர் இனப்படுகொலையை நடத்தியதாகவும் குற்றம்சாட்டப்படும் ஊடக அவதூறு பிரச்சாரங்களை எதிர்கொள்கிறது, அதேவேளை சீனாவின் கரையோரங்களில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்கப்பல்களின் சுதந்திரமான பயணத்திற்கு அது அச்சுறுத்தல் விடுப்பதாகக் கூறப்படுகிறது. இவை மீண்டும் அரசியல் நோக்கம் கொண்ட பொய்களே.
கோவிட்-19 இன் புழக்கத்தை அகற்றும் கொள்கையை சீனா நடைமுறைப்படுத்த முயன்றது, இது 100,000 நோய்தொற்றுக்கள் மற்றும் 5,000 இறப்புக்கள் என்றளவில் தொற்றுநோயை மட்டுப்படுத்தியுள்ளது. இதற்கு மாறாக, ஜி7 நாடுகள், “வைரஸூடன் வாழும்” கொள்கையை நடைமுறைப்படுத்திய நிலையில், கோவிட்-19 காரணமாக 85 மில்லியனுக்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்களுக்கும், 1.4 மில்லியனுக்கு சற்று குறைவான இறப்புக்களுக்கும் அது வழிவகுத்தது. சீன ஆட்சி, வீகர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ய விரும்பியிருந்தால், அது ஜி7 நாடுகள் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக மனித உயிர்களை அப்பட்டமான அலட்சியத்துடன் செயல்படுத்திய கொள்கைகளை இதுவும் ஜின்ஜியாங்கில் பயன்படுத்தியிருக்கலாம்.
லிவர்பூல் உச்சிமாநாட்டு அறிக்கை, வாஷிங்டன் மற்றும் நேட்டோ கூட்டணியின் வன்முறை போர் பிரச்சாரத்துடன், குறிப்பாக ரஷ்யாவிற்கு எதிரான போர் பிரச்சாரத்துடன் ஜி7 ஐ இணைக்க உதவியது. ஜி7 நாடுகளில் நாளாந்தம் சுமார் 2,500 என்றளவிற்கு கோவிட்-19 இறப்புக்கள் தற்போது அதிகரித்து வருகையில், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான கண்டனங்கள் மேலும் வெறித்தனமானதாகவும், தடையற்றதாகவும் மாறுகின்றன.
கடந்த வாரம், அமெரிக்க செனட்டர் ரோஜர் விக்கர், ரஷ்யாவுக்கு எதிராக அணுவாயுதப் போரையும், தரைவழித் தாக்குதலையும் தொடங்க அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “இராணுவ நடவடிக்கை என்பது, கருங்கடலில் நமது கப்பல்களை நாம் நிலைநிறுத்தி ரஷ்ய இராணுவத் திறனை நாம் தீவிரமாக அழிப்போம் என்பதாகும்,” என்று கூறி, இவ்வாறு தெரிவித்தார்: “இதன் பொருள், நாம் பங்கேற்போம், அதை நான் நிராகரிக்க மாட்டேன், அமெரிக்க துருப்புக்கள் தரைவழியாக மோதுவதையும் நான் நிராகரிக்க மாட்டேன். முதல் பயன்பாட்டு அணுசக்தி நடவடிக்கையையும் நாம் நிராகரிக்க மாட்டோம்.”
கலிபோர்னியா மற்றும் மிசிசிப்பி மாநிலங்களைச் சேர்ந்த அமெரிக்க துருப்புக்கள் ஏற்கனவே உக்ரேனில் உள்ளன என்றும் அவர் கூறினார்.
சனிக்கிழமை, ஜனாதிபதி ஜோ பைடென், கடந்த வாரம் ஒரு தொலைபேசி அழைப்பில், “[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்] புட்டின் உக்ரேனை நோக்கி முன்னேறினால் அவரது பொருளாதார விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும், பேரழிவை ஏற்படுத்தும்” என்பதை அவருக்கு முற்றிலும் தெளிவுபடுத்தியுள்ளார். உக்ரேனுக்கு எதிரான நடவடிக்கை என்று வாஷிங்டன் அறிவித்ததை ரஷ்யா எடுக்குமானால், கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க துருப்புக்களை அனுப்புவதாக கடந்த வாரம் பைடென் உறுதியளித்ததைத் தொடர்ந்து இது நடந்தது.
லிவர்பூலில் ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரூஸ், ரஷ்யாவிற்கு எதிரான இத்தகைய அச்சுறுத்தல்களுடன் ஜி7 ஒன்றுபட்டுள்ளது என்று பெருமையாகக் கூறினார். “இந்த வார இறுதியில் நாங்கள் காட்டியது என்னவென்றால், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் ஒன்றுபட்டுள்ளன என்பதைத்தான்,” என்று கூறினார். மேலும், “எங்கள் எதிரிகளுக்கும் எங்கள் கூட்டாளிகளுக்கும் நாங்கள் ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை அனுப்பியுள்ளோம். உக்ரேனுக்குள் ரஷ்யாவின் எந்தவித ஊடுருவலும் கடும் விலை கொடுக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” என்றும் கூறினார்.
வாஷிங்டன், ஐரோப்பிய சக்திகள், ரஷ்யா மற்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 2015 ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக இரத்து செய்ததன் பின்னர், வியன்னாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் “ஒரு தீவிரமான தீர்மானத்துடன் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கான கடைசி வாய்ப்பு” என்று ஈரானுக்கும் ட்ரூஸ் எச்சரிக்கை விடுத்தார்.
ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் சீனாவின் “கட்டாய பொருளாதாரக் கொள்கைகளை” கண்டித்து, அங்கு சீன வர்த்தகத்துடன் போட்டியிட “Build Back Better World” முதலீட்டு முயற்சியை முன்னெடுக்க ட்ரூஸ் அறிவித்தார். “மேலும், முதலீட்டு வரம்பை உருவாக்கவும், ஒத்த எண்ணம் கொண்ட, சுதந்திரத்தை விரும்பும் ஜனநாயக நாடுகளின் பொருளாதார வர்த்தக அணுகலை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்,” “அதனால்தான் நாங்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எங்கள் முதலீட்டை அதிகரிக்கிறோம்” என்றும் ட்ரூஸ் கூறினார்.
உண்மையில், உக்ரேன் மீதான மோதல் என்பது, ஜி7 நாடுகளின் கோவிட்-19 கொள்கைகள் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அவற்றின் பல தசாப்தங்களாக நீடித்து வரும் போர்கள் ஆகிய இரண்டின் ஆழமான நெருக்கடியுடன் பிணைந்துள்ளது. அமெரிக்க தலைமையிலான போர்களில் அழிக்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்களை இழந்துள்ள ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரங்களில் சீன வர்த்தகம் அதிகரித்தளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2013 இல் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை கவிழ்ப்பதற்கான அமெரிக்க இராணுவ நடவடிக்கையைத் தடுக்க ஈரானுடன் ரஷ்யா தலையிட்ட பின்னர் தான், பிப்ரவரி 2014 இல் உக்ரேனில் நடந்த சதிக்கு வாஷிங்டன் ஆதரவளித்தது.
இந்த சதி ரஷ்ய சார்பு உக்ரேனிய ஜனாதிபதி விக்டோர் யானுகோவிச்சை ஆட்சியிலிருந்து கவிழ்த்து, 2012 இல் இனவெறி மற்றும் யூத விரோத கருத்துக்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் செய்த ஸ்வோபோடா கட்சி உட்பட ஒரு தீவிர வலதுசாரி ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. டொன்பாஸ் மற்றும் கிரிமியா போன்ற கிழக்கு உக்ரேனின் ரஷ்ய மொழி பேசப்படும் பகுதிகளில் தீவிர வலதுசாரி ஆயுததாரிகள் திடீர் தாக்குதல்களை நடத்தியதால், இந்த பகுதிகள் பிரிந்து செல்ல வாக்களித்தன.
கிழக்கு ஐரோப்பா எங்கிலும் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளிலும் கோவிட்-19 இறப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜி7 நாடுகள், உக்ரேனில் உள்ள தீவிர வலதுசாரி ஆட்சி இன்னும் ஆக்கிரோஷமான நடவடிக்கைகளை எடுக்கவும், ரஷ்யாவுடன் வெடிக்கும் அரசியல் நெருக்கடியைத் தூண்டவும் பச்சைக்கொடி காட்டுகின்றன.
கடந்த மாதம், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரேன் மீதான தரைவழி தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிடுகிறது என்ற நேட்டோவின் குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்தார். “ரஷ்யா யாரையும் அச்சுறுத்துவதில்லை. எங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட துருப்புக்களின் நடமாட்டம் எவருக்கும் கவலையை ஏற்படுத்தக் கூடாது,” என்று பெஸ்கோவ் கூறினார். மேலும், “எங்கள் எதிரிகள் எங்கள் எல்லைகளுக்கு அருகே எதிர்மறையான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.
அதே நேரத்தில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், கிழக்கு உக்ரேனை மீண்டும் தாக்கும் வகையில் கியேவில் தீவிர வலதுசாரி ஆட்சியை ஊக்குவிப்பதாக வாஷிங்டனை குற்றம்சாட்டியது. உக்ரேனைச் சுற்றியுள்ள கருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை “பிராந்திய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஸ்திரத்தன்மைக்கான அச்சுறுத்தல்” என்று அழைக்கிறது, அதாவது, போரைத் தூண்டக்கூடிய செயல்கள் என்கிறது. “கருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்க நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள உண்மையான குறிக்கோள், தென்கிழக்கில் மோதலை பலவந்தமாக தீர்க்க கியேவ் முயற்சித்தால், செயலில் இறங்குவதுதான்” என்று அது கூறியுள்ளது.
அவசர எச்சரிக்கைகள் வரிசையில் உள்ளன. கோவிட்-19 இன் புதிய எழுச்சிக்கு மத்தியில், முழு நேட்டோ கூட்டணியும் கிட்டத்தட்ட 2 மில்லியன் கோவிட்-19 இறப்புக்களை எதிர்கொண்டதன் பின்னர் கூட, நேட்டோ சக்திகள் “வைரஸூடன் வாழ வேண்டும்” என்ற கொலைகார கொள்கைக்கு மேலும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆழமாக ஸ்திரமின்மைக்குள்ளாகி, அதே சமயம் அதற்கு எதிராக வெளிப்புற இலக்குகளைத் தேடுகிறார்கள், அவற்றை வளர்ந்து வரும் கோபத்தின் இலக்குகளாக மாற்றுவார்கள் என்று நம்புகிறார்கள். இந்த நிலைமைகளின் கீழ் எழக்கூடிய தீர்க்கமான கேள்வி என்னவென்றால், போரை எதிர்க்கும், மற்றும் வைரஸை ஒழிக்கவும் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரவும் ஒரு விஞ்ஞானபூர்வ கொள்கையை செயல்படுத்தும் ஒரு சர்வதேச இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது பற்றியதுதான்.