முன்னோக்கு

கெல்லோக் நிறுவன வேலைநிறுத்த-முறிப்பு முனைவுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவின் கெல்லோக் ஆலையின் 1,400 வேலைநிறுத்தக்காரர்களைப் பாதுகாக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழிலாளர்களை வலியுறுத்துகிறது, விற்றுத்தள்ளப்பட்ட ஓர் ஒப்பந்தத்தை ஞாயிற்றுக்கிழமை பெருவாரியாக நிராகரித்ததால், இவர்களை நிரந்தரமாக பிரதியீடு செய்ய நிர்வாகத்தால் அச்சுறுத்தபட்டு வருகிறார்கள்.

பெருந்திரளாக வேலைநீக்கம் செய்வதன் மூலம் இந்த வேலைநிறுத்தத்தை முறிப்பதற்கான நகர்வு ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்கள் மீதான ஒரு போர் பிரகடனத்திற்கு நிகராக உள்ளது. ஒரு சர்வாதிகாரத்திற்கு உரிய உத்திகளைப் பயன்படுத்தி வரும் நிர்வாகம், அது கொடுப்பதைத் தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், எந்தவொரு எதிர்ப்பும் நிறுவன மற்றும் அரசு வன்முறை மூலம் அவர்களை வேலையிலிருந்து பலவந்தமாக நீக்குவதையும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களையே அழிப்பதையும் சந்திக்கும் என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கெல்லோக் வேலைநிறுத்தத்தைப் பாதுகாப்பது அனைத்து தொழிலாளர்களின் ஓர் அவசர பணியாகும், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு ஒரு தேசிய மற்றும் சர்வதேச பிரச்சாரத்தைக் கொண்டு பதிலளிக்க வேண்டும். உலகெங்கிலுமான கெல்லோக் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறை தொழிலாளர்களை ஒருங்கிணைக்கவும், இந்த வேலைநிறுத்த-முறிப்பு தாக்குதலைத் தோற்கடிக்க பொதுவான நடவடிக்கைக்குத் தயாரிப்பு செய்யவும், சாமானிய தொழிலாளர் ஐக்கிய குழுக்களின் ஒரு வலையமைப்பு கட்டமைக்கப்பட வேண்டும்.

இந்த வேலைநிறுத்தத்தைப் பாதுகாக்க தொழிற்சங்கங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை என்பதைப் பெருவாரியான அனுபவம் எடுத்துக்காட்டி உள்ளது; இந்த தாக்குதல் தோற்கடிக்கப்பட வேண்டுமானால், தொழிலாளர்கள் தாங்களே எதிர்-தாக்குதலை ஒழுங்கமைக்க வேண்டும்.

கெல்லோக் வேலைநிறுத்தத்தின் பிரச்சினைகள் அனைவருக்குமான பிரச்சினை என்பதை ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழிலாளர்கள் அங்கீகரிப்பார்கள். வறிய சம்பளங்கள், கடுமையான வேலை நேரங்கள், மற்றும் தொடர்ந்து தொழிலாளர்களைக் கோவிட்-19 நோய்தொற்று மற்றும் இறப்புகளுக்கு முன்கொண்டு வருவது ஆகியவற்றுக்கு எதிராக கெல்லோக் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் நிராகரித்த ஒப்பந்தம், தற்போதைய பணவீக்க விகிதத்தில் பாதியை விட குறைவாக, வெறும் 3 சதவீத சம்பள உயர்வை உள்ளடக்கி இருந்தது. நிறுவனம் வேலைக்கு எடுக்கும் இரண்டாம் அடுக்கு 'இடைக்கால' தொழிலாளர்கள் எண்ணிக்கை மீதுள்ள நிர்ணய வரம்புகளை நீக்கிவிட்டால் அது இன்னும் படுமோசமாக இருக்கும்.

புதிதாக நியமிக்கப்படுவர்களைப் பொருளாதார பாதுகாப்பின்மைக்கு இரையாக்க மற்றும் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிலைநிறுத்துவதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியில், இப்போதைய இரண்டாம் அடுக்கு தொழிலாளர்கள் பலரை உயர்-சம்பள 'மரபார்ந்த' அடுக்குக்கு மாற்ற அந்நிறுவனம் ஒப்புக் கொண்ட பின்னரே இந்த நிராகரிப்பு ஏற்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.. இதைத் தொழிலாளர்கள் கண்டு கொண்டார்கள் என்பதையும், பிளவுபடுத்தி ஜெயிக்கும் இந்த மூலோபாயத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதையும் இந்த வாக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.

அந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்குக் கொண்டு வரப்பட்டதே கூட, இரண்டு மாதத்திற்கு அதிகமாக நீண்ட ஒரு வேலைநிறுத்தத்தை பேக்கரி, தீன்பண்டங்கள், புகையிலைத்துறை தொழிலாளர்களின் மற்றும் தானிய அரவை தொழிலாளர்களின் சர்வதேச தொழிற்சங்கமான BCTGM இன் ஒரு காட்டிக்கொடுப்பாக இருந்தது, இது நிர்வாகத்தின் பொலிஸ் படையாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பிரதாயமான கூட்டங்களைத் தொடர்ந்து தொழிலாளர்களை உடனடியாக வாக்களிக்க நிர்பந்திப்பதன் மூலமாக இந்த ஒப்பந்தத்தை முடிந்த வரை விரைவாக திணிப்பதற்கான BCTGM இன் முயற்சி தோற்றுப் போனது.

BCTGM சங்கம் அதன் வலைத் தளத்திலோ அல்லது அதன் சமூக ஊடக பக்கங்களிலோ நிரந்தர கருங்காலிகளை நியமிக்கும் நகர்வுகளை ஒப்புக் கொள்ளவும் கூட இல்லை. இந்த மவுனமே சம்மதத்திற்கு அறிகுறியாக உள்ளது. இதை நிறைவேற்ற நிர்வாகம் தீர்மானகரமாக உள்ளதைப் போலவே, அது எந்த எல்லைக்கும் போகக்கூடியதாக உள்ளது.

இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவது அல்லது நடத்தப்பட்டிருப்பது இந்தாண்டு இது முதல்முறை இல்லை. பல மாதங்களாக, மாசசூசெட்ஸின் வொர்செஸ்டரில் செயிண்ட் வின்சென்ட் மருத்துவமனை நிர்வாகம் இந்தாண்டின் பெரும்பாலான நாட்கள் நடத்தப்பட்ட செவிலியர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை முறிக்க மாற்று நியமனங்களைச் செய்துள்ளது. இந்த அக்டோபரில் கென்டக்கியின் ஹெவன் ஹில்லில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மதுபான ஆலை தொழிலாளர்களைக் கும்பலாக வேலையிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்று அந்த நிர்வாகமும் மிரட்டியது. ஜோன் டீர் ஆலை நிர்வாகிகள், வேலைநிறுத்தக்காரர்களைப் பிரதியீடு செய்வதை அவர்கள் ஒதுக்கி வைக்கப் போவதில்லை என்றனர். இத்தகைய ஒவ்வொரு சம்பவத்திலும், இது போன்ற மிரட்டல்களை எதிர்க்கவோ அல்லது மற்ற தொழிலாளர்களுக்கு அவற்றைக் குறித்து தகவல் அளிக்கவோ கூட தொழிற்சங்கங்கள் எதுவும் செய்யவில்லை.

பகிரங்கமாக வேலைநிறுத்த-முறிப்பை நோக்கி திரும்புவதென்பது, 1980 களில் பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் கூலி வெட்டுக்களை எதிர்த்த தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தகர்க்க ஆளும் வர்க்கம் பயன்படுத்திய அதே அணுகுமுறைகளுக்குத் திரும்புவதாகும். அது 40 ஆண்டுகளுக்கு முன்னர் 1981 இல் PATCO விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தோற்கடிக்க ரீகன் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டது.

அதில் AFL-CIO அதிகாரத்துவம் முக்கிய பாத்திரம் வகித்தது, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்குத் தொழிலாள வர்க்கத்தில் பெருவாரியாக ஆதரவு இருந்த போதும், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களைப் பாதுகாக்க அது எதுவும் செய்யாது என்று அச் சங்கம் ரீகனுக்கு இரகசியமாக மறுஉத்தரவாதம் வழங்கியது. அது திறந்துவிட்ட ஒரு காலகட்டத்தில், தொழிற்சங்கங்கள் ஒரு வேலைநிறுத்தம் மாற்றி ஒரு வேலைநிறுத்தத்தைத் தோற்கடிக்க நிர்வாகத்துடன் ஒத்துழைத்தன, அதேவேளையில் விட்டுக்கொடுப்புகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுக்கு நேரடி பங்குகளை வழங்கிய நிறுனங்களுடன் பெருநிறுவன ஊழல் நிதி உறவுகளை ஸ்தாபித்ததன் மூலமாக அவை அத்தகைய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தங்களை உருவாக்கிக் கொண்டன.

அப்போதிருந்து, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிற்சங்கங்கள் நிலைமைகளை நடைமுறையளவில் கீழ்மட்டத்திற்குக் கொண்டு வர நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளன. அமெரிக்காவின் கெல்லோக் நிறுவனத்தில், தொழிலாளர் சக்தியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன இருந்ததோ அதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே உள்ளது. உலகில் செல்வந்த நாடுகள் எனப்படும் நாடுகளின் மில்லியன் கணக்கான ஏனைய தொழிலாளர்களுக்குச் செய்யப்பட்டுள்ளதைப் போலவே, 12 மற்றும் 16 மணி நேர வேலை நாட்கள் கூட வழமையாகிவிட்டன. இது ஆளும் வர்க்கம் தன்னை புதிய மட்டங்களுக்குச் செல்வ செழிப்பாக்கிக் கொள்ள உதவி உள்ளதுடன், சமத்துவமின்மையோ முன்பில்லாத உச்சபட்ச மட்டங்களை எட்டியுள்ளது.

ஆளும் வர்க்கம், அதுவும் குறிப்பாக ஜனநாயகக் கட்சி, வர்க்க போராட்டத்தை நசுக்குவதற்குத் தொழிற்சங்கங்களை ஒரு முக்கிய கருவியாக பார்க்கிறது. தன்னை 'அமெரிக்க வரலாற்றில் [முக்கிய] தொழிற்சங்க-சார்பு ஜனாதிபதியாக' கூறிக் கொள்ள ஒருபோதும் ஓயாத ஜனாதிபதி பைடென் பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் கெல்லோக் மறியல் களத்திற்கு தொழிலாளர் நலத்துறை செயலர் மார்டி வால்ஷை அனுப்பி உள்ள நிலையில், நிர்வாகத்தின் வேலைநிறுத்த-முறிப்பு அச்சுறுத்தலை ஒப்புக் கொண்டு ஒரு வார்த்தையும் வெளியிடவில்லை.

ட்ரெவர் பிடெல்மன் போன்ற BCTGM நிர்வாகிகளைத் தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களாக சித்தரிக்க மீண்டும் மீண்டும் களம் அமைத்துக் கொடுத்த, “ஜனநாயகக் கட்சியின் சோசலிசவாதி' என்றழைக்கப்படும் பேர்ணி சாண்டர்ஸூம் ஒன்றும் கூறவில்லை. சாண்டர்ஸ் அந்த வாக்கெடுப்பின் முடிவை ஆமோதிக்கக்கூட இல்லை.

BCTGM சங்கத்தையும் ஒட்டுமொத்தமாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் தொடர்ந்து ஊக்குவிக்கும் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் வாக்களிக்கிறார்கள் என்பதை முன்கூட்டி ஒருபோதும் சுட்டிக்காட்டாத Labor Notes போன்ற, ஜனநாயகக் கட்சியில் சேர்ந்துள்ள மற்றும் அதைச் சுற்றியுள்ள போலி-இடது குழுக்கள் இந்த ஒப்பந்த நிராகரிப்பால் அதிர்ச்சி அடைந்தன, அவற்றின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியில் அந்த உண்மைக்குப் பின்னர் அவை அதை நேர்மையின்றி பாராட்டின.

ஆளும் வர்க்கம் அதன் செல்வவளத்தைப் பாரியளவில் குவித்துக் கொள்ள, எதைக் கொண்டு வர்க்கப் போராட்டத்தை நசுக்கியதோ, அந்த கருவிகளும் இயங்குமுறையும் முறிந்து வருவதைக் கண்டு பீதியடைந்துள்ளது. அது தேவைப்படும் போது பயன்படுத்துவதற்கு வன்முறை மற்றும் ஒடுக்குமுறை ஆயுதங்களைக் கையிருப்பில் வைத்துள்ளது, ஆகவே வேலைநிறுத்தத்தை முறிப்பதற்கான கெல்லோக்கின் நடவடிக்கை ஓர் எச்சரிக்கையாக பார்க்கப்பட வேண்டும்.

ஆனால் கெல்லோக்கில் நிலவும் ஆபத்தைக் குறைமதிப்பீடு செய்யாமல், தொழிலாள வர்க்கத்திற்குள் பாரிய எதிர்ப்பைத் தூண்டிவிடாமலேயே தங்களால் பகிரங்கமான வேலைநிறுத்த-முறிப்பு நடவடிக்கையைச் செய்ய முடியும் என்று நிர்வாகம் நம்பினால், அவர்கள் மிகவும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றாகும். இது இப்போது 1980 கள் இல்லை. விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொண்டு தொழிற்சங்கங்களால் காட்டுக்கொடுப்புகளை நடத்த முடிந்த அக்காலம் மலையேறி விட்டது.

இத்தகைய காலாவதியான அமைப்புகளுக்கு எதிராக அதிகரித்து வரும் ஒரு கிளர்ச்சி அலை, தசாப்தங்களாக உருவாகி, இப்போது தொடங்கி விட்டது, தொழிலாள வர்க்கத்திற்குள் உறுதிப்பாடு மற்றும் திடமான தைரியத்தின் ஒரு புதிய சூழல் உருவெடுத்து வருகிறது.

இந்த பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கம் காட்டிய குற்றகரமான விடையிறுப்பால் அளவிட முடியாதளவில் மோசமடைந்துள்ள பேரழிவுகரமான சமூக நிலைமைகளால் கோப உணர்வும் எதிர்ப்புணர்வும் எரியூட்டப்பட்டுள்ளன. எல்லா பொது சுகாதார கொள்கையையும் இலாபங்களுக்கும் பங்கு மதிப்புகளுக்கும் அடிபணிய செய்யப்பட்டதால் அது அமெரிக்காவில் 800,000 இறப்புகளுக்கு மட்டுமல்ல, மாறாக ஓமிக்ரோன் போன்ற பெரிதும் தொற்றக்கூடிய புதிய வகை வைரஸ்கள் உருவெடுக்கவும் வழிவகுத்துள்ளது.

விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் பணக்காரர்கள் முன்னெப்போதையும் விட அதிகமாக பணம் சேர்த்துக் கொண்டிருக்கின்ற அதேவேளையில், வோல் ஸ்ட்ரீட்டுக்குள் பாய்ச்சப்படும் பாரியளவிலான பணம் பொருளாதாரம் எங்கிலும் விலை உயர்வுகளை ஏற்படுத்தி வருவதுடன், உலகெங்கிலும் பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் நிலைமைகளை மோசமாக்கி வருகிறது.

வொல்வோ ட்ரக்ஸ் மற்றும் ஜோன் டீர் ஆலைகளில் இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் டெட்ராய்ட் பொது பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் வெளிநடப்புகள் உட்பட, இந்த கெல்லோக் வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த மேலெழுச்சியின் பாகமாகும். விட்டுக்கொடுப்பு ஒப்பந்தங்களை ஒன்பதுக்கு ஒன்று வித்தியாசத்திலோ அல்லது அதை விட அதிகமாகவோ நிராகரிப்பது இந்தாண்டின் போக்கில் வழமையான நடைமுறையாக ஆகி உள்ள நிலையில், தொழிற்சங்கங்களோ முன்பினும் அதிக அப்பட்டமான காட்டுக்கொடுப்புகளுடன் விடையிறுக்கின்றன.

ஆனால் இத்தகைய பெரும்பிரயத்தன தந்திரங்கள், எஞ்சியுள்ள எச்சொச்ச பிரமைகளையும் துடைத்தழிப்பதில் மட்டுமே ஜெயித்துள்ளன. தொழிலாளர்களிடையே ஒழுக்கக்கேடுகள் மற்றும் அவநம்பிக்கையை விதைப்பதற்கான அவர்களின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு தனிப்பட்ட போராட்டத்திலும் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், அனுபவங்களால் முறுக்கேறி வருகின்றன.

இது, தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புகளை எதிர்க்கவும் நடவடிக்கைகளைத் தங்கள் சொந்த கரங்களில் எடுக்கவும் உலகெங்கிலும் தொழிலாளர் அமைத்து வரும் சுயாதீனமான தொழிலாளர் குழுக்கள் வேகமாக உருவெடுத்து வருவதில் வெளிப்பட்டு வருகிறது. ஜோன் டீர், வொல்வொ ட்ரக்ஸ், கெய்சர், டேனா வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனம் மற்றும் ஏனைய இடங்களிலும், எதிர்ப்பை ஈர்க்கும் துருவங்களாக வேகமாக தொழிலாளர்களாலேயே குழுக்கள் வேகமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன, இவை தொழிற்சங்கங்களின் விற்றுத்தள்ளல்களை எதிர்ப்பதற்காக மட்டுமல்ல மாறாக அவர்களின் சொந்த விடையிறுப்பை ஒழுங்கமைக்கவும் உதவுகின்றன.

கெல்லோக் வேலைநிறுத்தம் நசுக்கப்படுவதை தொழிலாளர்கள் அனுமதிக்க முடியாது! நிர்வாகத்தின் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்ய ஒவ்வொரு ஆலையிலும் வேலையிடத்திலும் சாமானிய தொழிலாளர் ஐக்கிய குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். கெல்லோக்கில் இந்த வேலைநிறுத்தத்தைத் தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து தொழிலாளர்கள் அவர்களின் சொந்த கைகளில் எடுக்கவும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் பரந்தளவில் முறையீடு செய்யவும் அவர்கள் தங்களின் சொந்த சாமானிய தொழிலாளர் குழுவை ஸ்தாபிக்க வேண்டும்.

உலக சோசலிச வலைத் தளம் உதவத் தயாராக நிற்கிறது. உங்கள் ஆலையிலோ அல்லது வேலையிடத்திலோ சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமைப்பதற்கான தகவல்களைப் பெற கீழேயுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும்.

Loading