முன்னோக்கு

ஐரோப்பாவில் பெரும் தொற்றுநோய்க்கான பாசிசக் கொள்கை: மக்கள் “தடுப்பூசி போடுவார்கள், மீட்கப்படுவார்கள் அல்லது இறந்துவிடுவார்கள்” என்கிறார் ஜேர்மன் சுகாதார அமைச்சர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாம் ஆண்டு முடிவடையும் நிலையில், ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு வெகுஜன நோய்த்தொற்றுகள் அல்லது இறப்புகளைத் தடுக்க எந்தக் கொள்கையும் இல்லை என்பது தெளிவாகிறது. வைரஸ் பற்றிய பரந்த விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு தடுப்பூசிகள் இருந்தபோதிலும், ஐரோப்பாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 பேர் COVID-19 நோயால் இறக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 31, 2021, உக்ரேனில் உள்ள ககோவ்காவில் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கான கூடார மருத்துவமனையில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி ஆக்ஸிஜன் முகக்கவசத்துடன் சுவாசிக்கிறார். (AP Photo / Evgeniy Maloletka)

வெளியேறும் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல், 'இதுவரை எங்களிடம் இருந்த அனைத்தையும் மிஞ்சும் ஒரு சூழ்நிலை உள்ளது' என நேற்று ஒப்புக்கொண்டார்.

கடந்த வாரம் ஐரோப்பாவில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான COVID-19 நோய்த்தொற்றுகளைக் கண்டது, இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து எந்த வாரத்திலும் அதிகமானது. ஜேர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, செக்கியா, ஸ்லோவாக்கியா மற்றும் விரைவில் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நோய்த்தொற்றுகளின் அளவு முன்னைய மட்டங்களை தாண்டுகின்றன. ஜேர்மன் பாராளுமன்றம் வியாழனன்று 'தேசிய அளவிலான தொற்றுநோய் நிலைமை' பற்றிய அதன் கண்டுபிடிப்பை இரத்து செய்த பின்னர், COVID-19 ஐக் கட்டுப்படுத்தத் தேவையான நாடு தழுவிய பொது சுகாதார நடவடிக்கைகளுக்கான சட்ட அடிப்படையை முடிவுக்குக் கொண்டுவந்தது, வெளிச்செல்லும் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் ஆளும் வட்டாரங்களில் நிலவும் வெகுஜன மரணம் பற்றிய பாசிச அலட்சியத்தை அப்பட்டமாக கூறினார்.

'குளிர்காலத்தின் முடிவில், ஜேர்மனியில் உள்ள அனைவரும், சில சமயங்களில் சிறிதளவு அவநம்பிக்கையான முறையில், தடுப்பூசி போடப்படுவார்கள், மீட்கப்படுவார்கள் அல்லது இறந்துவிடுவார்கள்,' என்ற ஸ்பான் மேலும் கூறினார்: 'மிகவும் தொற்றுத்தன்மை கொண்ட டெல்டா மாறுபாட்டுடன், தடுப்பூசி போடப்படாத எவரும் அடுத்த சில மாதங்களில் அவர்கள் மிகமிக கவனமாக இல்லாவிட்டால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது ...'

ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் COVID-19 இறப்புகளுக்குப் பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவம் UK பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் சமூக-விரோத மந்திரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டது: 'இனி பூட்டுதல்கள் இல்லை, சடலங்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்.' வைரஸின் பரவலை அகற்றுவதற்கான விஞ்ஞான சுகாதாரக் கொள்கைகளுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் செலவாகும். பெரு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு இலாப ஓட்டத்தை குறைக்கும் எதையும் அவை சகித்துக்கொள்ளாது.

ஸ்பான் வாதிடுவது இனப்படுகொலை மட்டத்திலான கட்டுப்பாடற்ற அரசியல் குற்றமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி போடப்படாத 157 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசியின் அவசியத்தைப் பற்றி அறிவுறுத்தி அவர்களுக்கு தடுப்பூசிகளுக்கான அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பொது பிரச்சாரமும் இல்லை. தடுப்பூசி போடப்பட்டவர்களின் தொற்றுக்கள் அதிகரித்து வருவதால் இன்னும் பலமில்லியன் கணக்கானோர் மூன்றாம் கட்ட தடுபூசிக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலைமைகளின் கீழ், வைரஸின் கட்டுப்பாடற்ற சுழற்சி பல்லாயிரக்கணக்கான மோசமான நோயாளிகளைக் கொண்ட மருத்துவமனைகளை மூழ்கடிக்கும். இது இன்னும் மில்லியன் கணக்கானவர்களை நீண்டகால கோவிட் மற்றும் பிற பலவீனப்படுத்தும் நாட்பட்ட நோய்களின் பாதிப்புக்குட்படுத்தும்.

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) சுட்டிக்காட்டியுள்ளபடி, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தால் மட்டுமே கோவிட்-19 ஐ முடிவுக்குக் கொண்டுவர முடியும். இதற்கு, தொற்றுநோய் மற்றும் அரசாங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் கொலைகாரப் பிரதிபலிப்பு பற்றிய தெளிவான அரசியல் மற்றும் விஞ்ஞான பகுப்பாய்வுடன் ஆயுதபாணியாக்க பட்டிருக்க வேண்டும்.

ஜேர்மனியின் வரவிருக்கும் அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் -சமூக ஜனநாயகக் கட்சி (SPD), சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) மற்றும் பசுமைக் கட்சி- சமூக இடைவெளி கொள்கைக்கான தங்கள் விரோதப் போக்கைப் பற்றி வெளிப்படையாக தற்பெருமை காட்டுகின்றன. மார்க்கோ புஷ்மான் (FDP), ஒரு சாத்தியமான நீதி அமைச்சராகக் கருதப்படுகிறார், அவர் ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் கூறினார்: “பூட்டுதல்கள், பொதுப் பள்ளி மற்றும் வணிக மூடல்கள் அல்லது ஊரடங்கு உத்தரவு போன்ற சட்ட நடவடிக்கைகளில் இருந்து நாங்கள் நீக்கியுள்ளோம். அவற்றை இனி நடைமுறைப்படுத்த முடியாது.'

புஷ்மான் தனது அறிக்கையின் மூலம், புதிய ஆளும் கூட்டணியின் கருத்துக்களை மட்டுமல்ல, முழு ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களையும் சுருக்கமாகக் கூறினார். 'தொற்றுநோய் நிலைமையை' முடிவுக்கு கொண்டுவருவதற்கான உந்துதல், முதலில் ஸ்பானின் தோற்றத்தில் இருந்து வந்தது. இந்த முடிவை ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்று (AfD) மற்றும் இடது கட்சி ஆதரித்தது, இவை SPD மற்றும் பசுமைக் கட்சியுடன் இணைந்து ஆளும் ஜேர்மன் மாநிலங்களில் வாழ்க்கைக்கு முன் இலாபம் என்ற கொள்கையை திணிக்கிறது.

இப்போது பல மாகாணங்களில் நடந்து வரும் மருத்துவமனை அமைப்பின் சரிவைத் தடுக்க, ஆஸ்திரிய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பகுதியளவிலான பூட்டுதல்கள், பயங்கரமான அளவில் அதிகரித்துவரும் மரணத்தைத் தடுக்காது. பெரும்பாலான அத்தியாவசியமற்ற பணியிடங்கள் மற்றும் பள்ளிகள் திறந்திருக்கும் நிலையில் இது வைரஸ் பரவுவதை அனுமதிக்கும். பகுதியளவு பூட்டுதல்கள் வேலை அல்லது பள்ளிக்குப் பின்னர் மக்கள் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் அதே வேளையில், இதுபோன்ற பூட்டுதல்கள் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவராது என்று ஏராளமான தொழிலாளர்கள் உணர்கிறார்கள்.

உண்மையில், ஐரோப்பாவில் நவம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை 700,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், அதே நேரத்தில் கண்டத்தின் பெரும்பகுதியில் இதுபோன்ற பகுதியளவு கட்டுப்பாடுகள் இருந்தன.

ஆஸ்திரியாவில் பூட்டுதல்களை மீண்டும் அமல்படுத்துவது மற்றும் பிற இடங்களில் அதிக பொது சுகாதார கட்டுப்பாடுகளுக்கான அழைப்புகள், தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிர வலதுசாரிகள் எதிர்ப்பு அலைகளைத் தூண்டுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை புருஸ்ஸல்ஸில் சுமார் 30,000 எதிர்ப்பாளர்கள் அணிவகுத்து பொலிஸாருடன் மோதினர். சற்று முன், டச்சு போலீசார் ரோட்டர்டாமில் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இறுதியாக, வன்முறையான தடுப்பூசி எதிர்ப்புப் போராட்டங்கள் பிரெஞ்சு வெளிநாட்டுப் பிரதேசமான குவாடலூப்பை உலுக்கின.

மிகக் கடுமையான எச்சரிக்கைகள் அவசியம்.. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு வெளியே, எந்த அரசியல் இயக்கமும் வைரஸை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை. தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்னோக்கையும் அவர்கள் வழங்கவில்லை. ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் தொடர்ந்து பொய் கூறி வருகின்றன. கோவிட்-19 ஒரு 'சிறிய காய்ச்சல்', முகக்கவசங்கள் அவற்றிலிருந்து பாதுகாக்க உதவாது; குழந்தைகளை வைரஸ் பிடிப்பதில்லை அல்லது பரப்புவதில்லை; அல்லது தடுப்பூசி மட்டுமே தொற்றுநோயை நிறுத்தும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஜேர்மனியில் இடது கட்சி அல்லது ஸ்பெயினில் பொடேமோஸ் போன்ற முதலாளித்துவ ஊடகங்களால் 'இடது' என்று பொய்யாக விளம்பரப்படுத்தப்படும் கட்சிகள், உள்ளூர் மற்றும் தேசிய அலுவலகங்களில் ஆளும் வலது கட்சிகளின் அதே கொடிய கொள்கைகளை திணித்தன.

மில்லியன் கணக்கான மக்கள் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்போ அல்லது நம்பிக்கையோ இல்லாத சூழ்நிலையில், ஐரோப்பா முழுவதிலும் உள்ள நவ-பாசிசக் கட்சிகள் மக்களின் பெருகிவரும் விரக்தியையும் கோபத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆளும் உயரடுக்கின் நிதிய நலன்களால் உந்துதல் பெற்ற ஒரு ஆபத்தான மரண வழிபாட்டு முறை உருவாகி வருகிறது.

இப்போதைக்கு, தொற்றுநோய் முழுவதும், சமூகத்தை வைரஸிலிருந்து பாதுகாக்க மீண்டும் மீண்டும் போராடிய தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையினரின் ஆதரவு தீவிர வலதுசாரிகளுக்கு இல்லை.

முதன்மையாக தெற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வாகன தயாரிப்பு தொழிற்துறை, இறைச்சி உற்பத்தி மற்றும் பதனிடல் துறைகளில் எழுந்த திடீர் வேலைநிறுத்தங்களின் அலை, 2020 வசந்த காலத்தில் கடுமையான பூட்டுதல்களை விதிக்க அரசாங்கங்களை கட்டாயப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த அரசாங்கங்கள் கண்காணிப்பு மற்றும் தடமறிதல் கொள்கைகளை அமைக்க மறுத்துவிட்டன. இதன் மூலம் மீதமுள்ள நோய்த்தொற்றுகள், தொற்றுநோயின் புதிய அலையாக மாறுவதைத் தடுத்திருக்க முடியும். இந்தப் புதிய அலை தாக்கியபோது, கிரீஸ், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் பள்ளி வேலைநிறுத்தங்கள் உட்பட புதிய வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புகளும் அதற்கு எதிராக வெடித்தன.

தொற்றுநோயின் தற்போதைய எழுச்சியானது, அமெரிக்காவில் டீர், வோல்வோ, டேனா தொழிலாளர்களில் இருந்து, ஜேர்மன் இரயில் சாரதிகள், சுகாதாரப் பணியாளர்கள்; ஸ்பானிய எஃகுத் தொழிலாளர்கள் மற்றும் போர்த்துகீசிய பொதுத்துறை ஊழியர்கள் வரை சர்வதேச வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் வருகிறது.

இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) தொடங்கப்பட்ட 'தொற்றுநோய் மீதான உலகளாவிய தொழிலாளர் கணக்கெடுப்பின்' (Global Workers Inquest into the pandemic) பெரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாள வர்க்கத்தால் தொற்றுநோயை எதிர்த்துப் போராட முடியும். எவ்வாறாயினும், வங்கிகள் மற்றும் பெரிய பெருநிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாப்பதில் மட்டுமே நோக்கமுள்ள விரோத அரசியல் சக்திகளால் சூழப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் செய்தி ஊடகம் கூறும் பொய்களின் மூடுபனியின் கீழ், வெகுஜன மரணங்களைத் தடுக்கத் தேவையான கொள்கைகளை அதனால் தன்னியல்பாக நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பில்லியனர்களின் நிகர மதிப்பில் சேர்க்கப்பட்ட டிரில்லியன்களின் விலை, தொற்றுநோயைத் தடுக்கவும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும் இயலாமையை உருவாக்கியுள்ளது என்று ICFI க்கு வெளியே எந்த அரசியல் போக்கும் விளக்கவில்லை. தொற்றைத் துண்டிக்க கடுமையான கட்டுப்பாட்டுக் காலம், அதைத் தொடர்ந்து தொடர்பு தடமறிதல் கொள்கைகள் மற்றும் பாரியளவிலான தடுப்பூசிகள் மூலம் வைரஸை தடுக்க முடியும் என்ற விஞ்ஞானபூர்வ அறிவை தொழிலாளர்கள் இழந்துள்ளனர். மேலும், அத்தகைய கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அனைத்து ஸ்தாபகமயப்பட்ட கட்சிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் மக்களின் ஊழியர்களாக செயல்படவில்லை, மாறாக வங்கிகளின் கருவிகளாக செயல்பட்டன.

எவ்வாறாயினும், ஒரு தெளிவான அரசியல் மற்றும் விஞ்ஞானபூர்வ புரிதலுடன் ஆயுதபாணியாகிய தொழிலாள வர்க்கம், நிதியப் பிரபுத்துவத்தையும் வளர்ந்து வரும் பாசிச அபாயத்தையும் தோற்கடித்து, தொற்றுநோயை நிறுத்த முடியும். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உலகளாவிய தொழிலாளர் கணக்கெடுப்பில் பங்கேற்கவும், அவர்களின் அனுபவங்களை பங்களிக்கவும், அதன் உள்ளடக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை தொழிலாள வர்க்கத்திற்கு பரவலாக தெரியப்படுத்தவும் ஊக்குவிக்கிறோம்.

Loading