இலங்கை: கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் வேலை நிலமைகள் மீதான நிர்வாகத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுகிறார்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

திங்கட்கிழமை கட்டுக்கலை தோட்டத்தில் சுமார் 130 தொழிலாளர்கள், தேயிலைத் தோட்டத்தில் வேலையை தொடர அனுமதிக்கப்பட வேண்டுமெனில், கடுமையான புதிய உற்பத்தித்திறன் உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டும் என்ற நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்தனர். செப்டம்பர் 29 முதல் தமது நிபந்தனைகளுக்கு கட்டுப்படும் வரை நிர்வாகம் தொழிலாளர்கள் தொழில் செய்வதை தடை செய்துள்ளது.

செப்டம்பர் 29 அன்று கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து மடுவத்துக்கு அருகில் நடத்திய போராட்டம் [Photo: WSWS media]

கொழும்பில் இருந்து 130 கிலோமீற்றர் தொலைவில், நுவரெலியா மாவட்டத்தில், மஸ்கெலியா தோட்டக் கம்பனியால் நிர்வகிக்கப்படும் தலவாக்கலை பெருந்தோட்டத்தின் ஒரு பிரிவே கட்டுக்கலை தோட்டமாகும்.

வேலைச்சுமை அதிகரிப்பு மற்றும் தொழிலாளர்கள் மீதான நிர்வாகத்தின் தாக்குதலின் விளைவாக, ஆகஸ்ட் 18 முதல் 24 வரை தொழிலாளர்கள் ஆறு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். ஒரு தொழிலாளியின் தேயிலை கொழுந்து பறிக்கும் இலக்கை நாள் ஒன்றுக்கு 16 கிலோவில் இருந்து 20 கிலோவாக அதிகரிக்கவும், பூச்சிக்கொல்லி தெளிக்கும் அளவை இருமடங்காக உயர்த்தவும் நிர்வாகம் கோரியது.

ஆகஸ்ட் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, நிர்வாகத்தின் துன்புறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, செப்டம்பர் 26 அன்று கட்டுக்கலை தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தம் செய்தனர். வேலைநிறுத்தத்தை உடைக்க வெளியில் இருந்து தொழிலாளர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்தமையினால், பி. பொன்னிறசெல்வி என்ற தொழிலாளியை நிர்வாகம் பலிக்கடா ஆக்கியதை அடுத்து, செப்டம்பர் 29 அன்று அவர்கள் மீண்டும் வேலைநிறுத்தம் செய்தனர்.

பொன்னிறசெல்விக்கு எதிரான நிர்வாகத்தின் பழிவாங்கலை எதிர்த்து, தொழிலாளர்கள் பெறட்டு களத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் போது நடந்த மோதலில் மூன்று தோட்ட அதிகாரிகள் மற்றும் பொன்னிறசெல்வி, எஸ். ஸ்ரீதேவி உட்பட இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். நிர்வாகமே மோதலை தூண்டிவிட்டதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று வந்த பொலிசாரை அண்ணாத்துரை, ஸ்ரீகாந், சிவஞானம், சசிரேகா, எம். சிவனேஸ்வரன், எம். வஜிதரன், பாலச்சந்திரன், பி. விஜயலட்சுமி உட்பட 11 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னிறசெல்வி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஒக்டோபர் 7 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தனிப்பட்ட முறையில் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றும் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்றும் நுவரெலியா நீதவான் கடுமையான பிணை நிபந்தனைகளை விதித்தார். தொழிலாளர்களின் எதிர்ப்பின் பின்னரே தொழிலாளர்களை தாக்கிய நிர்வாக அதிகாரிகள் பல நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடன் பிணை வழங்கப்பட்டது.

பழிவாங்கப்பட்ட கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் அக்டோபர் 7 அன்று கடுமையான பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்ட பின்னர் வீடு செல்கின்றனர் [Photo: WSWS media]

அடக்குமுறை வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படமாட்டார்கள் என்று வலியுறுத்தி, கட்டுக்கலை தோட்ட நிர்வாகம் அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முடுக்கி விட்டது.

  • நிர்வாக அதிகாரிகள் மீதான உடல்ரீதியான தாக்குதல்கள் போன்ற 'சட்டவிரோத' நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க தொழிலாளர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். செப்டம்பர் 29 மோதலில் ஈடுபட்ட குறித்த அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழேயே செயல்பட தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
  • வெளியாட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு கட்டுக்கலை தொழிலாளர்கள் சம்மதிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நிர்வாகம் வேலை நிறுத்தங்களை முறியடிக்க கருங்காலிகளை பயன்படுத்துவதை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • 1,000 ரூபாய் ($US5) தினசரி ஊதியத்தைப் பெற, தொழிலாளர்கள் புதிய அதிகரித்த உற்பத்தி இலக்குகளை ஏற்க வேண்டும். இலக்குகளை அடைய முடியாதவர்களுக்கு அவர்களின் உற்பத்தி மற்றும் வேலை நேரங்களுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.

தொழிலாளர்கள் வழக்கம் போல், காலையில் அவர்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன் பெறட்டுக் களம் அருகில் கூட முடியாது என்றும், அவர்களது சம்பளத்தை தோட்ட அலுவலகத்திலிருந்து அல்லது அவர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

நவம்பர் 17 அன்று, நிர்வாக அதிகாரிகள் தோட்டத்தில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர். தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்டு வழக்கை எதிர்கொள்கின்ற 11 தொழிலாளர்களைத் தவிர, ஏனைய அனைத்து தொழிலாளர்களையும் வேலைக்குத் திரும்ப அனுமதிக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், நவம்பர் 22 அன்று, முகாமையாளர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத வரை யாரும் வேலையைத் தொடர முடியாது என்று வலியுறுத்தினர். தொழிலாளர்கள் உடனடியாக நிர்வாகத்தின் இறுதி எச்சரிக்கையை நிராகரித்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) ஆகிய தோட்டத் தொழிற்சங்கங்களின் முழு ஆதரவும் கட்டுக்கலை தோட்ட நிர்வாகத்திற்கு கிடைப்பதால், தொழிலாளருக்கு எதிரான இந்தத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட முடிகின்றது.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளியான இ.தொ.கா.வின் தலைவரான ஜீவன் தொண்டமான், இலங்கையின் தோட்ட உட்கட்டமைப்பு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராக உள்ளார். NUW மற்றும் LJEWU ஆகியவை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் உள்ளதுடன் அவற்றின் தலைவர்கள் கடந்த ஆட்சியின் அமைச்சர்களாக இருந்தனர். இந்த தொழிற்சங்கங்கள் எதுவும் கட்டுக்கலை தொழிலாளர்களை பாதுகாக்கவில்லை, மாறாக திட்டமிட்டு அவர்களை தனிமைப்படுத்தியுள்ளன.

இதற்கு நேர்மாறாக, கட்டுக்கலைத்ங தோட்டத்தின் அருகில் உள்ள ரூப்ஸ் மற்றும் சென்கிளயர் தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, செப்டம்பர் 29 வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம், கட்டுக்கலையில் உள்ள தங்கள் சக தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தனர்.

அக்டோபர் தொடக்கத்தில், தொழிற்சங்கங்கள் ஹட்டனில் உள்ள உதவித் தொழிலாளர் ஆணையாளர் அலுவலகத்தில், ஆணையாளரின் முன்னால், கட்டுக்கலை தோட்ட நிர்வாகத்தின் மீது உள்ளூர் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தைக் கலைக்கும் எதிர்பார்ப்பில், ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தன. கட்டுக்கலை தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதையும் விவாதிக்க மறுத்து கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

தோட்டத்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் தோட்ட முகாமையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தோட்ட துரைமார் சங்கம், அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. தொழிலாளர்கள் அதிக 'வன்முறையில்' ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, 'இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவும்' அந்த கடிதத்தில் கோரியுள்ளனர்.

தோட்ட அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் துரைமார் சங்கம், 'தொழிலாளர்களால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க தோட்டத்திற்குள் இரவு இராணுவ ரோந்துப்பணியை தீவிரப்படுத்த' அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சண்டே டைம்ஸ் அக்டோபர் 3 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தோட்டக் கம்பனிகளும் அவற்றின் முகாமையாளர்களும் அரச அடக்குமுறைக்கு வெளிப்படையான அழைப்புகள் விடுத்துள்ளமை. கட்டுக்கலை தோட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகும். இரக்கமற்ற உற்பத்தித்திறன் இலக்குகள் மற்றும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்கள் அனைத்தும், உலகளாவிய தொற்றுநோயால் மோசமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கான முயற்சியாகும்.

தேயிலைத் தோட்டத் தொழில்துறைத் தலைவர்களும் அவற்றின் முகாமையாளர்களும் 'வருவாய்ப் பங்குத் திட்டத்தை' நடைமுறைப்படுத்துவதற்கு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுமார் 1,000 தேயிலை செடிகளை பயிரிடவும், பராமரிக்கவும், அறுவடை செய்யவும் வேண்டும். தோட்ட நிர்வாகம் உரம் மற்றும் அடிப்படை உபகரணங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கும். கம்பனிகள் அறுவடையை எடுத்துக்கொண்டு, அவற்றின் 'செலவுகள்' மற்றும் இலாபங்களைக் கழித்து, மீதியை தொழிலாளிக்கு வழங்கும். தொழிலாளர்கள் இந்த சமூகப் பிற்போக்குத்தனமான வருமானப் பங்கீட்டு முறையை பெருமளவில் எதிர்த்துள்ளனர்.

கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்கள், 1,000 ரூபா தினசரி ஊதியம் கோரி வேலைநிறுத்தம் செய்த ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஒப்பானதாகும். ஓல்டன் தொழிலாளர்கள் நிர்வாகத்தால் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு உட்படுத்தப்பட்டனர். இ.தொ.கா. உட்பட தொழிற்சங்கங்களின் உதவியுடன், பொலிசாருடன் சேர்ந்து வேலை செய்யும் தோட்ட நிர்வாகம், போலி வன்முறைக் குற்றச்சாட்டின் பேரில் 24 தொழிலாளர்களை கைது செய்து, பின்னர் 38 தொழிலாளர்களை பலிவாங்கி அவர்களை வேலைநீக்கம் செய்தது. இந்த அரச வேட்டையாடலுக்கு எதிராக பிரச்சாரம் செய்த ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

டீசைட் தோட்டத் தொழிலாளர்கள் செப்டெம்பர் 28 அன்று வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டம். [PhotoL K. Kishanthan]

கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்களின் உறுதியான நடவடிக்கை, கம்பனி மற்றும் பொலிஸ் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடிய ஏனைய தோட்டத் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்தங்களில் பிரதிபலிக்கிறது.

நவம்பர் 22 அனறு, ஹட்டனின் உள்ள வெலிஓயா மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 200 தொழிலாளர்கள், அதிக வேலைப்பளுவை இரத்துச் செய்யக் கோரியும், ஜூன் மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஐந்து தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரியும் வேலை நிறுத்தம் செய்தனர். கொவிட்-19 தொற்றுநோய் தோட்டத்தைத் தாக்கியபோது, தொற்றுநோய் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் இந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

நவம்பர் 19 முதல், மஸ்கெலியா, சாமிமலையில் கிளனுகி தோட்டத்தின் டீசைட் பிரிவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூன்று நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர்- இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக-அதிகரிக்கப்பட்ட வேலைச்சுமை மற்றும் ஊதியக் குறைப்புகளை எதிர்த்து. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த வேலைநிறுத்தங்கள் இலங்கை முழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்ட அலையின் ஒரு பகுதியாகும், இதில் ஆசிரியர்களின் 100 நாட்களுக்கும் மேலான வேலைநிறுத்தப் போராட்டம், இந்த மாத தொடக்கத்தில் 100,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உயர் சம்பளம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வேலை நிலைமைகளைக் கோரி பல்லாயிரக்கணக்கான பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் நடத்திய போராட்டம், ஆகியவை அடங்கும்.

கட்டக்கலை தொழிலாளர்கள் தங்கள் துன்பங்களை WSWS நிருபவர்களிடம் தெரிவிக்க ஒன்று கூடினார். [Photo: WSWS Media]

கிளனுகி, எபோட்ஸிலி மற்றும் ஓல்டன் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக நடவடிக்கை குழுக்களை நிறுவியுள்ளனர். நவம்பர் 16 அன்று, சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினார். சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான முதலாளிகளின் தாக்குதல்களைத் தோற்கடிக்க ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை அணிதிரட்டுவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் ஏனய பிரிவினரின் பக்கம் திரும்புவது அவசியம் என்று அவர் கூறினார்.

Loading