இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அக்டோபர் 24, ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு சென்றிருந்த உலக சோசலிச வலைத் தளத்தின்(WSWS) நிருபர்களுடன், ஏற்றுமதி உற்பத்தி துறையில் பல தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள், அதிகரித்துவரும் விலைவாசி உட்பட, தாங்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவித்தனர்.
புத்தளம், பொலன்னறுவை, மஹியங்கனை போன்ற தொலைதூர மாவட்டங்களில் உள்ள அவர்களது வீடுகளில் நிலவும் எரியும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் வேலையின்மை காரணமாக, கட்டுநாயக்க வலயத்துக்கு வந்துள்ள இத்தொழிலாளர்கள் ஸ்மார்ட் ஷர்ட், நெஸ்ட் மெனுபாக்ச்சரின், மாஸ் ஹோல்டிங்ஸ், பிரன்டிக்ஸ் போன்ற ஆடை தொழிற்சாலைகளிலும், யுனைடட் டுபேகோ புரொசெசிங், மீடூ இன்ஜினியரிங் போன்ற ஏற்றுமதி தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர்.
ஸ்மார்ட் ஷர்ட் இலக்கம் ஒன்று ஆடைத் தொழிற்சாலையில் சுமார் ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணிப்பெண் ஒருவர், தனது குடும்ப உறுப்பினர்களின் நிலைமையை விவரித்தபோது, தனது இரண்டு மகள்களுக்கு திருமணமாகிவிட்டதாகவும், ஒரு மருமகனும், அவரது கணவரும் விவசாயிகள் என்றும் கூறினார். மற்ற மருமகன் ஆசிரியர் ஆவார். மாதம் ஒன்று அல்லது இரண்டு முறைதான் அவள் தன் குடும்பத்துடன் இருப்பார்.
கடந்த ஆண்டு நாடு முடக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, ஒரு சிறிய தொகை இழப்பீடு பெற்று சேவையிலிருந்து விலகிக்கொள்ளுமாறு நிர்வாகத்தால் கேட்கப்பட்ட போதிலும் அவர் மறுத்துவிட்டார்.
அதிக எண்ணிக்கையில் உற்பத்தி கட்டளைகள் வந்துள்ளதால், இந்த நாட்களில் அதிக பணிச்சுமையால் சோர்வாக இருப்பதாக அவர் கூறினார். ஞாயிறு தவிர தினமும் 12 மணிநேரம் (மூன்று மணிநேர மேலதிக நேரம் உட்பட) வேலை செய்கிறாள். அவளது அடிப்படைச் சம்பளம் சுமார் 20,000 ரூபாயாகும், மேலும் ஊக்கத்தொகை, வருகை. மேலதிக நேர கொடுப்பனவுகள் என மாதம் 55,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறாள். ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு, தங்கள் பணியில் உள்ள ஒவ்வொருவரும் இலக்கை அடைய அயராது உழைக்க வேண்டும்.
ஒரு நாளாவாது வேலைக்குப் போகவில்லை என்றால் வருகைக் கொடுப்பனவு வெட்டப்படும். 'களைப்புதான், ஆனால் எங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை,' என்று அவள் சொன்னாள். நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி மேற்பார்வையாளர்கள் போலியான இலக்குகளை நிர்ணயிப்பதால், கொடுப்பனவுகள் குறைக்கப்படும் சம்பவங்களும் நடப்பதாக அவர் கூறினார். “எங்களுக்கு அதிக பொருளாதார பிரச்சினைகள் உள்ளன, நாங்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறோம். நாங்கள் இரண்டரை ஏக்கர் நெல் பயிர் செய்தும், சரியான வருமானம் கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
இந்த நாட்களில் தொழிற்சாலையில் நோயாளிகள் யாரும் இல்லாவிட்டாலும், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு டிப்பிங் (சட்டை கழுவுதல்) பிரிவில் பல நோயாளிகள் அடையாளம் கண்ட பின்னர், அந்தப் பிரிவு சுமார் இரண்டு வாரங்களாக மூடப்பட்டது. 'ஒருவருக்கு கொரோனா என்றால், கிருமி நாசினி தெளிக்கப்படும் போது தான், எங்களுக்குத் தெரிய வரும். முன்னரே எங்களுக்கு தகவல் வழங்கப்படுவதில்லை. எங்களுக்கு பார்சல்களில் உணவு வழங்கப்படுகிறது. உண்மையில் பேசவும் கூட எங்களுக்கு நேரமில்லை. சாப்பிட்டவுடன் மணி அடித்தால் ஓடுவோம். எல்லோரும் அவுட் (இலக்கு) பெற வரிசையில் பந்தயம் கட்டுகிறார்கள். அப்போதுதான் சம்பளம் உயரும்,” என்று அவர் மேலும் கூறினார். அவர்களுக்கு சாப்பிட ஒரு மணி நேரம் மட்டுமே விடுமுறை கிடைக்கும்.
அரசாங்கத்தைப் பற்றி பேசுகையில், கடந்த அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்த தாம் உட்பட பெரும்பான்மையான கிராம மக்கள் இப்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தனர், ஆனால் எந்த பயனும் இல்லை, என்று கூறினார். “பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்தாலும் கூலி உயர்வு இல்லை. இப்போது பேருந்துக் கட்டணம் உயரப் போகிறது,” என அவர் கூறினார். மாதம் 4,700 ரூபா அறை வாடகைக்கும் மின் கட்டணத்துக்கும் செலவாகிறது.
அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து மற்ற நிறுவனங்களை மூடிய நிலையில், முதலாளிகளும் முதலீட்டு சபையும் கூட்டாக சேர்ந்து தொழிற்சாலைகளை அடுத்தடுத்து திறந்துவிட்டு, தொழிலாளர்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியது தொடர்பாக அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: 'பெருமளவான யுவதிகள் பாதிக்கப்பட்டிருந்தனர் எல்லாவற்றையும் மூடினார்கள், ஆனால் ஆடை தொழிற்சாலைகளை மூடவில்லை. மேலதிக நேரம் வேலை வாங்கினார்கள் வீட்டிற்கு கூட போக முடியாது, பயணக் கட்டுப்பாடுகள் இருந்தன.... வேலைக்குச் செல்லாவிட்டால் வேலை நீக்கம் செய்வார்கள். இங்கு அடிமைத்தனம்தான் உள்ளது.
யூபிடி புகையிலை நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு பிரிவில் பல மாதங்களாக பணிபுரிந்து வரும் பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர், தற்போது சகல கொடுப்பனவுகளுடன் மாதாந்தம் சுமார் 60,000 ரூபா சம்பளம் பெறுவதாக கூறுகிறார்.
தற்சமயம் திருமணம் ஆகாத நிலையில், தனக்கு கிடைக்கும் சம்பளத்தில் தன்னால் வாழ்க்கை நடத்த முடியும் என்றும், பொருட்களின் விலை உயர்வால் இனி அது சாத்தியமில்லை என்று அவர் கூறினார். “நாங்கள் 1,000 ரூபாய் எடுத்துக்கொண்டு கடைக்கு போனால் ஒரே தடவையில் முடிந்துவிடும். பருப்பு, பால் மா மற்றும் எரிவாயு போன்ற அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. நாங்கள் மண்ணெண்ணெயில்தான் சமைக்கிறோம். விலைவாசி மிகவும் நியாயமற்றது.”
“மக்களுக்கு வாழ்வது கடினம். எங்களுக்கு இங்கே சம்பளம் கிடைக்கிறது. ஆனால் 20,000 ரூபா அல்லது 30,000 ரூபா சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். குடும்பம் உள்ளவர்கள் அந்த சம்பளத்தில் எப்படி வாழ முடியும்?'' என்று அவள் கேட்டாள்.
அவரது தாயார் ஒரு ஆசிரியராக இருப்பதோடு அவரது தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். அம்மாவின் மொத்த மாதச் சம்பளம் 40,000. ரூபாதான். கடனை வெட்டிய பிறகு, இருவருக்கும் எஞ்சுவது கொஞ்சமே. “அரசு ஊழியர்கள் தினமும் கடனில்தான் ஓடுகிறார்கள். எங்கள் அம்மாவின் சம்பளம் மாதம் 8,000 ரூபா தான் வரும். தந்தையின் ஓய்வூதியத்தில் இருந்து கடனைப் பிடித்த பிறகு, அவருக்கு ரூபா 8,000 மட்டுமே கிடைக்கிறது. எனவே அரச ஊழியர்களும் ஆசிரியர்களும் வீதிக்கு வருவது நியாயமானது. கொரோனாவை சாட்டாகக் கொண்டு இந்த அரசாங்கம் ஊதியத்தை குறைக்கின்றது, பொருட்களின் விலையை உயர்த்துகின்றது,” என்று அவர் மேலும் கூறினார்.
கொரோனா தொற்றுநோய்க்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்பு குறித்து வெறுப்புடன் பேசிய அவர், சுகாதாரத்திற்கு தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று கூறினார். அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை விளக்கிய செய்தியாளர்கள், அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, 6 பில்லியன் ரூபா சுகாதாரச் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புச் செலவீனங்கள் 18 பில்லியனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
'இது இராணுவ ஆட்சி போன்றது,' என்று கூறிய அவர், சிவில் நிர்வாகத்துக்கு இராணுவ அதிகாரிகளை நியமிப்பதையும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மஹியங்கனையைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றில் இருந்து சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் கட்டுநாயக்க வலயத்திற்கு வந்த பெண் தொழிலாளி ஒருவர் எமது நிருபர்களிடம் பேசினார்., பாராசூட்டுகளுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் பீடு இன்ஜினியரிங் தொழிற்சாலையில் பணிபுரியும் இந்த யுவதியின் தந்தை ஒரு விவசாயி ஆவார்..
அரசாங்கம் இரசாயன உரங்களுக்கு விதித்த தடையினால் தனது தந்தை உட்பட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அவரது அடிப்படைச் சம்பளம் 22,000 ரூபாய், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் அவள் வேலைக்குச் செல்லும் போது மொத்தமாக மாதம் 40,000 ரூபாய் அளவில் கிடைக்கும். சுமார் 200 பேர் தொழில் புரியும் இந்த தொழிற்சாலையின் தொழிலாளர்களில் நான்கில் ஒரு பகுதியினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற பின்னரும் அவளுக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. கடந்த காலங்களில் தனது மாதாந்தச் செலவுகளான 15,000 ரூபாயில் சமாளிக்க முடிந்த போதிலும், விலையேற்றம் காரணமாக 10,000 ரூபாவினால் செலவு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் இருந்து வந்து கட்டுநாயக்கா நெக்ஸ்ட் ஆடைத் தொழிற்சாலையில் சுமார் ஐந்து வருடங்கள் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர், தாங்க முடியாத அதிக செலவுகள் பற்றிப் பேசினார். “அரசாங்கம் எங்களைப் பற்றி சிந்திக்கவில்லை, பெரும் வணிகர்களைப் பற்றிதான் சிந்திக்கின்றது. விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் பொருட்களின் விலைகள் கட்டுப்படியாகாது. தொற்றுநோயுடன் நாங்கள் மரணத்தை கையில் வைத்துக்கொண்டு வாழ்கிறோம்,” என்று அவர் கூறினார்.
நெக்ஸ்ட் கார்மென்ட் நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு தொழிலாளி பின்வருமாறு கூறினார்: “இந்த நோயை ஒழிக்க வேண்டும். அதற்கான சரியான வேலைத்திட்டம் அரசிடம் இல்லை. ஆடை தொழிற்சாலையினுள் முகக்கவாசம் அணிகின்றனரா, இடைவெளி பேணுகின்றனரா என்று கூட கவனிப்பதில்லை. அன்டனி மார்கஸ் இங்கு ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கினார். ஆனால் அதனால் ஒன்றும் நடப்பதில்லை.
பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவர், தனது தொழிற்சாலையில் உள்ள பாதுகாப்பின்மை குறித்து கூறியதாவது: ஒருவருக்கு தலைவலி வந்தால் அவரை மாத்திரம் கொண்டு சென்று பி.சி.ஆர். செய்வார்கள் மற்ற அனைவரும் வேலை செய்வர்.”
கட்டுநாயக்க வலயத்திலுள்ள மாஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் இளம் தொழிலாளி ஒருவர் கூறுகையில், “தற்போது தொழிற்சாலைகளில் அந்தளவு கொரோனா நோயாளிகள் இருப்பதாக தகவல்கள் இல்லை என்றாலும், நாடு முழுவதும் நிலைமை ஆபத்தானதாக உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை. உண்மை சொல்லப்படுவதில்லை. இப்போது பி.சி.ஆர். செய்யபடுவதில்லை, அரசாங்கம் சுகாதார சேவையை முடக்கியுள்ளது,' என்று அவர் கூறினார்.
கடந்த தேர்தலின் போது கோட்டாபய இராஜபக்ஷவுக்கு வாக்களித்ததாகவும், தற்போது மாற்றுக் கட்சியை தேடி வருவதாகவும் தெரிவித்த அவர், “ஒவ்வொரு இளைஞரும் தற்போது மாற்றீட்டைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.
அன்றிரவு (அக்டோபர் 24) 'தொற்றுநோயை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது' என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தினால் நடத்தப்பட்ட இணையவழி கூட்டம் பற்றி கூறிய போது, அவர் அதை ஆர்வமாக கேட்டார்.
கட்டுப்படியாகாத வாழ்க்கைச் செலவு காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அரசாங்கம் மற்றும் முதலாளிகளுக்கு எதிராக கடும் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், வலயத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் உட்பட 10 அரசியல் கட்சிகள், அடுத்த பாதீட்டில் தொழிலாளியின் குறைந்தபட்ச தினக்கூலியை 1,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரி, நிதியமைச்சரிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளன.
இது, தாங்க முடியாத வாழ்கை சிலவு உட்பட முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிராக ஆசிரியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பிற துறைகளில் உள்ள தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுடன், ஏற்றுமதி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் அணிதிரட்டி, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதை தடுத்து, வளர்ச்சியடைந்து வரும் தொழிலாளர்களின் எதிர்ப்பை அரசாங்கத்திடம் மன்றாடும் நடவடிக்கைக்குள் கலைத்து விடும் திட்டமிட்ட நடவடிக்கையே இதுவாகும்.
