இலங்கை: கிளனுகி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மஸ்கெலியா கிளனுகி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவானது செப்டம்பர் 21 முதல் ஒக்டோபர் 6 வரையிலான வேலைநிறுத்த போராட்டத்தின் படிப்பினைகள் மற்றும் ஒட்டுமொத்த தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னோக்கிய வழிகள் பற்றி அக்டோபர் 24 அன்று கூடிய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. கூட்டத்தில் கிளனுகி தோட்டத்தின் கிளனுகி மற்றும் டீசைட் பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஓல்டன் தோட்ட நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினசரி வேலை இலக்குகளை அசாதாரணமாக உயர்த்துவதன் மூலம், வேலை மற்றும் ஊதிய வெட்டுக்களை விரைவுபடுத்துவதற்கு எதிராகவே, கிளனுகி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் செப்டெம்பர் 21 தொடங்கியது. நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை உயர்த்திய பின்னர், உற்பத்தி இலக்கை அதிகரிக்கும் நோக்கத்துடன், தோட்ட நிர்வாகம் நாளாந்தம் பறிக்கும் தேயிலைக் கொழுந்தின் அளவை 16 கிலோவிலிருந்து 20 கிலோவாக அதிகரித்ததுடன், அந்த இலக்கை அடையாதவர்களின் சம்பளம் வெட்டுகின்றது.

கட்டுக்கல தோட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் [Photo: WSWS]

தோட்டத்தில் தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கமும் (NUW) வேலை நிறுத்தத்தை எதிர்த்தன. தொழிற்சங்கங்களுக்கு வெளியே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்கங்களின் உள்ளூர் தலைமைத்துவத்தைப் போலவே, எல்லா தொழிற்சங்க அதிகாரத்துவமும் தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து வேலைநிறுத்தத்தை சீர்குலைத்து, தோட்டத் தொழிலாளர்களிடையே பிளவை ஏற்படுத்த முயன்றன.

தோட்டத்தின் டிசைட் பிரிவில் உள்ள தொழிலாளர்களினால் இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களுடன் கிளனுகி பிரிவில் உள்ள தொழிலாளர்களை சேரவிடாமல் தடுக்க தொழிற்சங்கள் முயன்றன. தொழிற் சங்கங்களின் பிளவு படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக, உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர்களின் ஐக்கியத்தை வலியுறுத்திய கிளனுகி நடவடிக்கை குழுவின் தலையீட்டின் காரணமாக, கிளனுகி பிரிவு தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இணைந்தனர்.

எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை முற்றிலுமாக தனிமைப்படுத்தி, தோட்ட முகாமையாளர்களுடன் இணைந்து தொழிலாளர்கள் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தன. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பிய போதிலும், தொழிலாளர்களிடையே ஒரு நனவான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை குழுவால் முடிந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிற்சங்கங்களின் இந்த துரோக நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும், அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை நனவுடன் ஒழுங்கமைக்கத் தேவையான தலைமையை வழங்கவும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைக்கவும் போராடுகின்றது. உரிமைகளை பறிப்பதற்கு எதிரான இந்தப் போராட்டம், கொரோனா தொற்றுநோயின் பேரழிவிற்கு எதிராக தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்துடன், பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 24 அன்று நடந்த நடவடிக்கை குழு கூட்டத்தில், நடவடிக்கைக் குழு உறுப்பினர் தயாநிதி, வேலைநிறுத்தம் குறித்த தனது அனுபவத்தை விபரித்தார்: “15 நாட்கள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை பழிவாங்கத் தொடங்கியது. அக்டோபர் 21 அன்று காலை நான் வேலைக்குச் சென்றபோது, தோட்டத்தில் உள்ள மற்ற தொழிலாளர்களிடம் வேலை நிலைமைகள் குறித்து பேச வேண்டாம் என்று உதவி முகாமையாளர் என்னிடம் கூறினார். தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேச எனக்கு உரிமை உண்டு என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் நான் அவரிடம் சொன்னேன். அதனால் அவர் அன்று எனக்கு வேலை வழங்க மறுத்துவிட்டார்.

உடனடியாக நடவடிக்கை குழு கூடி எனக்கு வேலை கொடுக்காததை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். தோட்டத்தின் ஏ மற்றும் பி பிரிவுகளில் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர், என்றார். 'இந்த முடிவு டிசைட் பிரிவில் உள்ள தொழிலாளர்களுக்கும் தொலைபேசிமூலம் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எமது இரண்டு மணி வேலை நிறுத்தத்தினால், எனக்கு நிர்வாகம் மீண்டும் வேலை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. நான் இ.தொ.கா. தொழிற்சங்க உறுப்பினர். ஆனால் அவர்கள் என்னை காப்பாற்ற முன்வரவில்லை”.

கலந்துரையாடலில் பங்கேற்ற டிசைட் தோட்டத் தொழிலாளி ஒருவர் கூறியதாவது: “டிசைட் பிரிவில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. ஐந்து நிமிடங்கள் தாமதமாக வேலைக்குச் சென்ற 40 தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் வேலை வழங்க மறுத்துவிட்டது. அவர்கள் வேலைத் தளத்தை சென்றடைய வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும். எனவே ஐந்து நிமிட தாமதம் பெரிய தவறில்லை. இதனால் வேலை வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய தயாராகினர். இதுகுறித்து களஅலுவலர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இரண்டு மணி நேரம் கழித்து, 40 பேருக்கும் வேலை வழங்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை பிளவுபடுத்தி தமது போராட்டங்களை காட்டிக் கொடுப்பதாகவும், தொழிலாளர்கள் ஒன்றுபட்டால் தோட்ட நிர்வாகத்தின் தாக்குதல்களை எதிர்த்து போராட முடியும் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஏனய தோட்டங்களிலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை நிறுவுவதற்கான பிரச்சாரத்தை தொடங்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.

சாமிமலை ஓல்டன் தோட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளி ஒருவரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டார். அவர் கூறியதாவது: “பெப்ரவரி 5 அன்று ஆரம்பித்து 47 நாட்கள் தொடர்ந்த வேலை நிறுத்தத்திற்குப் பிறகு, எமது 38 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். ஏனய தொழிலாளர்கள் இப்போது தாங்க முடியாத வேலை நிலைமைகளின் கீழ் வேலை செய்ய வேண்டும்.

“பெண் தொழிலாளர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய வேண்டும். கொழுந்து பறிக்கும் போது தேயிலை செடிகளுக்கு இடையில் உள்ள புற்களையும் சுத்தம் செய்ய வேண்டும். எனவே, அவர்களுக்கு ஒரு நாளைக்கு 18 கிலோ என்ற இலக்கை வழங்க முடியாது. இலக்கு குறைவாக இருந்தால், சம்பளம் வெட்டப்படும். 17 கிலோ பறிக்கப்பட்டால் 9 கிலோவுக்கு 500 ரூபாவும், அதாவது இலக்கில் பாதிக்கு சம்பளமும், மீதி 8 கிலோவுக்கு கிலோவுக்கு ரூபா 40 படி 320 ரூபா வழங்கப்படுகின்றது. அப்போது 17 கிலோவுக்கு 820 ரூபாய்தான் கிடைக்கும். அதாவது ஒரு கிலோவை குறைந்தால் 180 ரூபாய் சம்பளம் குறையும். இவ்வாறு செய்வதன் மூலம் தோட்ட முகாமையாளர்கள் ரூபா 1,000 சம்பளம் கொடுப்பதை தவிர்க்கின்றனர். ஊழியர் சேம இலாப நிதிக்கு செலுத்தப்படும் தொகையும் அதற்கேற்ப குறையும்.”

இ.தொ.கா. NUW மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) உட்பட அனைத்து தோட்ட தொழிற்சங்கங்களும், தோட்ட நிர்வாகத்திற்கு ஆதரவளிப்பதாகவும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களையோ அல்லது பொய் வழக்குகளில் சிக்கியுள்ள 24 பேரையோ மீள வேலைக்கு எடுப்பது பற்றி எதுவும் செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.

24 தொழிலாளர்களை விடுவிக்கவும், வேலைநீக்கம் செய்யப்பட்ட 38 தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தவும் நடவடிக்கை குழு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இத்தாக்குதல்களை, கிளனுகி மற்றும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமல்ல, குறிப்பாக நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட பின்னர், வேலை மற்றும் சம்பள வெட்டுக்களுக்கு சகல தோட்டத் தொழிலாளர்களும் முகம் கொடுக்கின்றார்கள் என சோசலிச சமத்துவக் கட்சியின் பேச்சாளர் விளக்கினார். கடந்த மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பொய் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

“130 தொழிலாளர்கள் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவோ அல்லது வேட்டையாடுவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவோ எந்த தொழிற்சங்கமும் தலையிடவில்லை. தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் வலியுறுத்தலை இந்த அனுபவம் வலுவாக நீரூபித்துக் காட்டுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் மற்றும் முதலாளிகளின் தாக்குதல்களுக்கு எதிரான இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களின் ஒரு பகுதியாகும்.

“இலங்கையில் ஆசிரியர்கள் மூன்று மாதங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுகாதார ஊழியர்கள் தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். மின்சாரம், துறைமுகம் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்து வருகின்றன. சர்வதேச தொழிலாள வர்க்கத்தினதும், இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்தின் மூலமே தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக சக்திவாய்ந்த போராட்டத்தை முன்னெடுக்க முடியும். அந்த ஒற்றுமையை தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை அமைப்பதன் மூலமே ஏற்படுத்த முடியும்.”

Loading