மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வாரம், அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான கூட்டாட்சி அலுவலகத்தின் தலைவர், (Verfassungsschutz -ஜேர்மனியின் உள்நாட்டு இரகசிய சேவை என்று அழைக்கப்படுகிறது) கூட்டாட்சி மாநிலங்களில் இருந்து தனது சகாக்களிடம், முகமையானது முழுமையாக ஜேர்மனிக்கான மாற்றீட்டையும் (AfD) ஒரு சந்தேகத்திற்குரிய வலதுசாரி தீவிரவாத வகையாக கருதும் என்றும், இப்போது உளவுத்துறை நோக்கங்களுக்காக கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். பல ஆண்டுகளாக அவ்வாறு செய்ய மறுத்த பின்னர், அரசாங்கம் இப்பொழுது ஜேர்மனியின் மிகப் பெரிய எதிர்க்கட்சியின் பாசிசத் தன்மையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நாஜிசத்தின் தாயகமான ஜேர்மனியில் மீண்டும் பாசிசத்தின் எழுச்சியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, சர்வதேச செய்தி ஊடகத்தில் இந்த நிகழ்வுப்போக்கு குறித்த செய்தி ஊடகத்தின் கவனம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பது அசாதாரணமானது. அமெரிக்காவில் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு கட்டுரைக்கு அப்பால் - அது கிட்டத்தட்ட புறக்கணிக்கிறது. ஆனால், ஜேர்மனி மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பின்னரும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னரும், 'வரலாற்றின் முடிவு' மற்றும் தாராளவாத ஜனநாயகத்தின் வெற்றி என்ற அனைத்து கூற்றுகளும் முற்றிலும் பிழையென்று காட்டப்பட்டுள்ளன என்பதே உண்மையாகும்.
பல்வேறு செய்தி ஊடகங்களுக்கு கசியவிடப்பட்ட ஒரு விரிவான அறிக்கையில், Verfassungsschutz இன் இந்த வகைப்படுத்தலுக்கான அதன் நியாயப்படுத்தலை சுருக்கமாகக் கூறுகிறது. இது 302 அலுவலகர்களின் அறிக்கைகளின் அடிப்படையில் உள்ளது, அவர்களில் 88 பேர் கூட்டாட்சி மட்டத்தில் உள்ளனர். உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்ட, வெளிப்படையாக பாசிச'Der Flugel' ('பிரிவு') கட்சியில் குழுவாக்கப்பட்டவர்கள் இன்னமும் பெரும் செல்வாக்கை செலுத்துகிறார்கள் என்று அது முடிக்கிறது. 'வன்முறை எதிர்ப்பு' என்பது கூட 'கொள்கை அடிப்படையில் விலக்கப்பட முடியாது,' என்று Verfassungsschutz எழுதியது.
சுருக்கமான அறிக்கையின்படி, அரசியல் எதிரிகள் கட்சியால் 'மக்களின் எதிரிகள்' மற்றும் 'ஜேர்மனியை அழிப்பவர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள், முஸ்லிம்கள் 'அவதூறு செய்யப்படுகிறார்கள், குறைகூறப்படுகிறார்கள் மற்றும் குழு முழுவதும் ஓரங்கட்டப்படுகிறார்கள்.' புலம்பெயர்ந்தோரின் மனித கெளரவத்தை மதிக்கத் தவறியது மனித கெளரவத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதம் மற்றும் சமத்துவத்தின் கொள்கையை 'முற்றிலும் எதிர்க்கிறது' என்பது மட்டுமல்லாமல், 'சமூக ஒத்திசைவு மற்றும் ஜேர்மனியில் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை பெரிதும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.'
AfD இன் வலதுசாரி தீவிரவாதத் தன்மை பற்றி எந்த சந்தேகமும் இருக்க முடியாது. 2017 ஆம் ஆண்டிலேயே, அதன் பாராளுமன்ற குழுத் தலைவரும் கௌரவத் தலைவருமான அலெக்சாண்டர் கௌலாண்ட் நாஜிக்களின் குற்றங்களை '1,000 ஆண்டுகளுக்கும் அதிகமான வெற்றிகரமான ஜேர்மன் வரலாற்றின் பறவைக் கதை' என்று அழைத்து ஹிட்லரின் இராணுவ (Wehrmacht) சிப்பாய்கள் மீது தனது பெருமையை வெளிப்படுத்தினார். கட்சி உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் வன்முறைமிக்க நவ-நாஜிக்கள் மற்றும் வலதுசாரி பயங்கரவாதக் களத்தில் இருப்பவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறார்கள், அவர்களுடைய உறுப்பினர்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்து, அவர்கள் சுற்றி வளைத்து ஒரு 'நாள் X' அன்று சுட்டுக்கொல்ல விரும்பும் ஆயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்களின் பட்டியலை வரைகிறார்கள்.
எவ்வாறாயினும், உள்துறை அமைச்சகத்திற்கு வெளிப்படையாக பதிலளிக்கும் Verfassungsschutz ஆனது பல ஆண்டுகளாக வலதுசாரி தீவிரவாதிகளை மூடிமறைத்து ஆதரித்து வருகிறது. அகதிகளை வேட்டையாடுவதையும், யூத-விரோத தாக்குதல்களையும் தூண்டிவிட்டு, ஆகஸ்ட் 2018 இல் மற்றய வலதுசாரி தீவிரவாதிகளுடன் சேர்ந்து AfD ஆனது செம்னிட்ஸ் (Chemnitz) வழியாக அணிவகுத்துச் சென்றபோது, உள்துறை மந்திரி ஹார்ஸ்ட் சீஹோஃபர் ஆர்ப்பாட்டத்தின் பின்னால் நின்று, “நான் ஒரு அமைச்சராக இல்லாவிட்டால், நான் ஒரு குடிமகனாக வீதிகளில் இறங்கியிருப்பேன்” என்று அறிவித்தார்.
Verfassungsschutz இன் அப்போதைய தலைவரான ஹான்ஸ்-கியோக் மாஸன், எந்தவொரு வலதுசாரி தீவிரவாத கிளர்ச்சியும் இல்லை என்று மறுத்தார். உளவுத்துறை அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக அவர் AfD தலைவர்களை தவறாமல் சந்தித்தார்.
அதே ஆண்டில், Sozialistische Gleichheitspartei (சோசலிச சமத்துவக் கட்சி, SGP) 'இடது-சாரி தீவிரவாதி' என்றும் 'அரசியலமைப்பு-விரோதமானது' என்றும் மற்றயவற்றுடன் சேர்த்து, 'தேசியவாதம் என்று கூறப்படுவதை எதிர்த்து' தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்றும் Verfassungsschutz ஆனது வகைப்படுத்தியது. வேறு எந்தக் கட்சியையும் விட SGP ஆனது வலதுசாரி ஆபத்து பற்றி எச்சரித்திருக்கிறது. அதற்கு எதிராக ஒரு எதிர்ப்பையும் ஒழுங்கமைத்துள்ளது.
அதன் ஆண்டு அறிக்கையில், உளவுத்துறை சேவையானது AfD கட்சி மாநாடுகளுக்கு எதிரான எதிர்ப்புக்களையும், 'வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிரான 'போராட்டம்' மற்றும் 'வலதுசாரி தீவிரவாதிகள் அல்லது உண்மையான வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் அவற்றின் கட்டமைப்புகள் பற்றிய தகவல்களை' 'இடதுசாரி தீவிரவாத' உணர்வுகளின் ஆதாரமாக திரட்டுதல் ஆகியவற்றையும் மேற்கோள் காட்டுகிறது.
2017 இல் பாராளுமன்றம் (கூட்டாட்சி பாராளுமன்றம்) இல் AfD நுழைந்தது. நாஜி சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பின்னர் முதல் தடவையாக, 90 க்கும் மேற்பட்ட வலதுசாரி தீவிரவாத பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருந்தனர். கட்சியானது பின்னர் அனைத்து நாடாளுமன்றக் குழுக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராளுமன்றப் பணிகளில் ஒருங்கிணைக்கப்பட்டன. அது முக்கியமான குழுக்களின் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் இறுதியாக சமூக ஜனநாயகக் கட்சி (SPD) பெரும் கூட்டணி அரசாங்கத்தில் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளுடன் (CDU/CSU) தனது இடத்தை மீண்டும் தொடங்கியபோது, அது உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவராக்கியது. துரிங்கியாவில், CDU மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) ஆனது பாசிஸ்ட்டுகளுடன் ஒரு பெரும்பான்மையைக் கூட உருவாக்கியது. 2019 இல் மட்டும், AfD ஆனது மாநில ஆதரவாக பத்து மில்லியன் யூரோக்களுக்கு மேல் பெற்றது.
இந்தக் கொள்கையின் காரணமாகத்தான், AfD ஆல் 16 மாநில நாடாளுமன்றங்களிலும் உள்ளே நுழையவும், ஒரு விரிவான கட்சி எந்திரத்தை உருவாக்கவும், போலீஸ், இராணுவம் மற்றும் இரகசிய சேவைகளுக்குள்ளாக தனது செல்வாக்கை பெருமளவில் விரிவாக்கவும் முடிந்தது.
இப்பொழுது, வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிரான பெரும் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, உள்துறை அமைச்சகமும், Verfassungsschutz கூட AfD இன் தன்மையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதை தவிர்க்க முடியாது. பாசிச ஆபத்து உண்மையில் எவ்வளவு தீவிரமானது என்பதை இது காட்டுகிறது மற்றும் SGP இன் எச்சரிக்கைகளை முழுமையாக உறுதிப்படுத்துகிறது.
ஆனால் அரசாங்கமோ அல்லது இரகசிய சேவைகளோ AfD க்கு எந்த வகையிலும் தீவிரமாக எதிராக போராடும் என்று எதிர்பார்க்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த சில ஆண்டுகளாக Verfassungsschutz ஆனது தீவிர வலதுடன் எந்த அளவிற்கு நெருக்கமாக பிணைந்துள்ளது என்பதைக் காட்டியுள்ளது.
AfD க்கு முன்பே, இரகசிய சேவை ஊழியர்கள் வலதுசாரி தீவிரவாத அமைப்புக்களில் தொனியை அமைத்தனர், மற்றும் Verfassungsschutz ஆனது பாசிசக் காட்சியின் பெரும் பகுதியினருக்கு நிதியளித்தது. 'அவதானிப்பு' என்ற போக்கில், Verfassungsschutz ஆனது நவ-நாஜி ஜேர்மன் தேசியக் கட்சி (NPD) க்குள் ஊடுருவி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துப்படி, அது ஒரு 'அரசு விவகாரம்' என்று பேசப்பட வேண்டிய அளவிற்கு இருந்தது.
பெரும் கூட்டணியானது AfD யை எதிர்க்கட்சித் தலைவராக்கியது மட்டும் இல்லாமல், வலதுசாரி தீவிரவாதிகளின் கொள்கைகளையும் நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. அகதிகளுக்கான மனிதாபிமானமற்ற நாடுகடத்தல் முகாம்களைக் கட்டுதல், பொலிஸ் அரச நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப் பாரியளவில் மீள்ஆயுதமயமாக்கல் ஆகியவை அனைத்தும் AfD இன் இசைவாணையைத் தாங்குகின்றன. இது சுகாதார மற்றும் உயிர்களுக்கு முன் பெருநிறுவன இலாபங்களை முன்வைக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் இரக்கமற்ற கொள்கையுடன் இது குறிப்பாக கூர்மையான வடிவங்களை எடுத்துக் கொள்கிறது.
சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் மரணத்தை விட பெரும்பான்மையான மக்களுக்கு முதலாளித்துவம் கொடுக்க வேண்டிய வேறு எதுவும் இல்லை என்பதால், 1930களில் செய்ததை போல ஆளும் வர்க்கம் பெருகிய முறையில் எதேச்சாதிகார மற்றும் பாசிச வழிமுறைகளை பயன்படுத்தி நிதியத் தன்னலக்குழுவின் கொள்கைகளை செயற்படுத்துகிறது. எனவேதான் அதி-வலது போக்குகள் உலகம் முழுவதும் கட்டமைக்கப்பட்டு, பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜனவரி 6-ம் திகதி டொனால்ட் ட்ரம்ப் இன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி இந்த விஷயத்தில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அமெரிக்க தேர்தல்களை முறியடிக்கவும், ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவவும், அரசு எந்திரத்தின் கணிசமான பகுதிகளை, குடியரசுக் கட்சி மற்றும் ஒரு பாசிசக் கும்பல் ஆகியவற்றை ட்ரம்ப் அணிதிரட்டினார். AfD இன் பாராளுமன்ற (Bundestag) உறுப்பினர் மார்ட்டின் ரென்னர், கேபிடல் முற்றுகைக்கு பின்னர் முகநூலில் எழுதினார், 'ட்ரம்ப் அதே அரசியல் போரை நடத்திவருகிறார் — ஏற்கனவே ஒரு கலாச்சார போர் என்று அழைக்கப்பட வேண்டும் — 'ஜேர்மனிக்கான மாற்றீடு' என்று நாம் அழைக்கப்படவேண்டும்.'
ஜேர்மனியைப் போலவே, அமெரிக்காவில், அதிவலதுகளுக்கு உத்தியோகபூர்வ அரசியல் எதிர்ப்பு என்பது போலித்தனமானது மற்றும் பாசாங்குத்தனமானது. தொழிலாள வர்க்கத்தில் அதற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பைப் போல பாசிசவாதிகளின் வேலைத்திட்டத்திற்கு அவர்கள் அஞ்சுவதில்லை. பாசிசத்திற்கு எதிரான போராட்டமானது முதலாளித்துவ அரசு மற்றும் அதன் இரகசிய சேவைகளின் அடிப்படையில் அமைந்திருக்க முடியாது என்பதை அனைத்து வரலாற்று அனுபவங்களும் காட்டுகின்றன. பிந்தையது தவிர்க்க முடியாமல் தங்களுடைய அதிகரித்த அதிகாரங்களை இடதுகளின் எதிர்ப்பை ஒடுக்கப் பயன்படுத்துகின்றனர்.
வலதுசாரி அபாயத்தை நிறுத்துவதற்கான ஒரே வழி, தீய, முதலாளித்துவத்தின் வேர்க்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது தான். இந்த ஆண்டு கூட்டாட்சித் தேர்தலில் SGP போராடி வரும் முன்னோக்கு இதுதான். பாசிசம் மற்றும் போருக்குத் திரும்புவதை நிராகரிப்பவர்கள் அனைவரும் இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்து சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
மேலும் படிக்க
- ஜேர்மன் அரசும் அரசியல் கட்சிகளும் யூத-விரோதத்தை ஊக்குவிக்கின்றன
- ஜேர்மனியின் நாடாளுமன்றக் கட்சிகள் கேரா நகர சபைக்கு தீவிர வலதுசாரி AfD வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றன
- ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாத மற்றும் யூத எதிர்ப்பு வன்முறைகளில் கூர்மையான அதிகரிப்பு
- 1930 களின் பேராபத்து எச்சரிக்கை மணி ஒலிக்கட்டும்! ஜேர்மனியில் அரசியல் சதித்திட்டமும், பாசிசத்தின் எழுச்சியும்