அக்டோபர் 17, 1961 அன்று பாரிஸில் அல்ஜீரியர்கள் படுகொலை செய்யப்பட்டு அறுபது ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அல்ஜீரியப் போர் முடிவடைவதற்கு சற்று முன்பும் மார்ச் 1962 இல் பிரான்சிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், பிரெஞ்சு பொலிஸ் பாரிஸில் ஒரு பயங்கரமான இனவெறி படுகொலையை நடத்தியது. இரண்டாம் உலகப் போரின் போது உயர் நாஜி ஒத்துழைப்பாளராக இருந்த பாரிஸ் தலைவர் மொறிஸ் பப்போன் (Maurice Papon) தலைமையில், அல்ஜீரியர்களுக்கு மட்டும் பப்போனால் விதிக்கப்பட்ட இனவெறி ஊரடங்கு உத்தரவிற்கு எதிரான அமைதியான போராட்டத்தை பொலிசார் தாக்கினர். பெரும்பாலும் சுமார் 200 என மதிப்பிடப்படுகின்ற பொலிசாரால் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை இன்றுவரை கூட தெரியவில்லை.

நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சில், பாரிய யூதப்படுகொலையத் தொடங்கி 1942ல் 13,000 யூதர்களின் சுற்றி வளைப்பை, வெல் டீவ் (Vél d'Hiv) நடவடிக்கையை வழிநடத்திய பிரெஞ்சு காவல்துறைக்கு, 20 ஆண்டுகளுக்குள், ஒரு பாசிச வெறி பாரிஸில் பற்றிக்கொண்டது. 'மொட்டாக்கு தலையினரை தின்கிறோம்' என்று கத்தியவாறு, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை நோக்கி மிக அண்மித்த தூரத்திலிருந்து பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். டஜன் கணக்கான மக்களை மயங்கும்வரையில் அடித்து அவர்களை செயின் ஆற்றில் வீசிக் கொன்றனர், மேலும் 7,500 முதல் 12,000 பேர் வரையான ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர். அவர்கள், பல ஆயிரக்கணக்கான காயமடைந்தவர்களை கொடுமையான சூழ்நிலையில், சரியான மருத்துவ பராமரிப்பு இல்லாமல் தடுத்து வைத்தனர், மேலும் அல்ஜீரியாவில் உள்ள பிரெஞ்சு வதை முகாம்களுக்கு நூற்றுக்கணக்கானோரை நாடுகடத்தினர்.

அறுபது வருடங்கள் கழித்து, பிரான்ஸ் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு இந்த நிகழ்வுகள், மிக பிரதான ஜனநாயகம் என்று சொல்லப்படும் முதலாளித்துவ அரசு எந்திரத்தின் பங்கு பற்றிய பேரழிவு தரும் ஒரு எச்சரிக்கையாக அமைகின்றன. உண்மையில், இந்த படுகொலை இன்று ஏகாதிபத்திய 'ஜனநாயகங்கள்' முழுவதும் பாசிச, பொலிஸ்-அரசு கொள்கைகளின் எழுச்சியுடன் மிகவும் சக்திவாய்ந்தமுறையில் எதிரொலிக்கிறது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நேற்று படுகொலை நினைவேந்தலில் கலந்துகொண்டார். ஆனால் அதைப் பற்றி பகிரங்கமாக பேசத் துணியவில்லை. அல்ஜீரியாவின் எல்லைகளான மாலியில் அவரது அரசாங்கம் இரத்தக்களரி போரை நடத்துவது மட்டுமல்லாமல், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இரத்தம் தோய்ந்த பொலிஸ் வன்முறையின் நிரந்தர அச்சுறுத்தலில், மக்ரோன் அரசாங்கம் தனது உயிர்பிழைப்பை பணயம் வைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், அவர் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான 'மஞ்சள் சீருடை' போராட்டங்களில் கலகம் செய்யும் போலீஸை கட்டவிழ்த்துவிட்டு, 10,000 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து, 4,000 பேரை காயப்படுத்தி, இருவரை கொன்றதற்கு முன், நாஜி-ஒத்துழைப்பு சர்வாதிகாரி பிலிப் பெத்தானுக்கு (Philippe Pétain) மரியாதை தெரிவித்தார்.

அக்டோபர் 17, 1961 படுகொலையானது, தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் சமூக கோபத்திற்கு அஞ்சி பொலிஸ்-அரசு எந்திரத்தின் சக்திவாய்ந்த கூறுகள் இப்போது என்ன திட்டமிடுகின்றன என்பதற்கான எச்சரிக்கையாகும்.

உண்மையில், கோவிட்-19 தொற்றுநோய் வெடிப்பதற்கு சற்று முன்பு டிசம்பர் 2019 பிரெஞ்சு இரயில் (SNCF-RATP) வேலைநிறுத்தத்தின் போது, தீவிர வலதுசாரி ஓய்வுபெற்ற ஜெனரல் பியர் டு வில்லியே (Pierre de Villiers), பிரான்சில் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மீதான அடக்குமுறையை தீவிரப்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

'மனிதகுலத்திற்கும் உறுதிக்கும் இடையிலான சமநிலையை நாம் மீண்டும் நிறுவ வேண்டும். ... நம் நாட்டில் போதுமான உறுதியான தன்மை இல்லை,” என்று டு வில்லியே RTL ஊடகத்திடம் கூறினார். மேலும், “வழிநடத்துபவர்களுக்கும் கீழ்ப்படிபவர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. ‘மஞ்சள் சீருடைகள்’ இதன் முதல் அறிகுறியாகும். … நாம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும்; விஷயங்கள் இந்த வழியில் தொடர முடியாது' என்றார்.

டு வில்லியே இன் தந்தை உட்பட அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆட்சியின் தீவிர ஆதரவாளர்களால், ஏப்ரல் 21, 1961 இல் அல்ஜியர்ஸ் சதி தோல்வியுற்ற 60 வது ஆண்டு நினைவு நாளில், டு வில்லியே கூறியதன் அர்த்தம் என்ன என்பது இந்த ஆண்டு தெளிவாகியது. இந்த ஏப்ரலில், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலியில் ஏகாதிபத்திய போர்களின் தோல்விக்கு மத்தியில், அவரது சகோதரர் பிலிப் டு வில்லியே, தீவிர வலதுசாரி பத்திரிகையான Current Affairs இல் சுவிஸ் வங்கியாளர்களையும் கோவிட்-19 பொது சுகாதார நடவடிக்கைகளையும் கண்டித்து 'முதலாளித்துவ-எதிர்ப்பு' துவேஷத்தை வெளியிட்டார். பின்னர், ஆயிரக்கணக்கான அதிகாரிகள் அதே பத்திரிகையில் பிரெஞ்சு மண்ணில் தலையிடப்போவதாக மிரட்டி, ஆயிரக்கணக்கான மரணங்களுக்கு வழிவகுக்கபோவதாக ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டனர். இது ஏப்ரல் 21, 2021 திகதியிடப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டின் அனைத்து அடிப்படைப் பிரச்சனைகளான சமூக சமத்துவமின்மை, போர், பாசிசம், பொலிஸ்-அரசு ஆட்சி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமை ஆகியவை இன்று வெளிப்படையாக மீண்டும் எழுகின்றன. அக்டோபர் 17, 1961 படுகொலையானது, டு வில்லியேக்களின் அச்சுறுத்தல்கள் அல்லது வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைநகர் மீது அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 6 நவ-நாஜி சதி முயற்சியின் தாக்கங்கள் பற்றிய ஒர் எச்சரிக்கையாகும். 60 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸில் நடந்த படுகொலை நாஜி-விச்சி ஆட்சியின் கீழ் அல்ல, குடியரசு மற்றும் முன்னாள் முதலாளித்துவ-சார்பு எதிர்ப்பு இயக்கத்தின் (Resistance) தலைவரான சார்ல்ஸ் டு கோலின் (Charles de Gaulle) ஜனாதிபதி பதவிக்காலத்தில் நடந்தது.

1961 அக்டோபர் படுகொலைக்குப் பின்னர், பாரிஸில் உள்ள செயின் நதிக்கு அருகிலுள்ள சுவரில் 'இங்கே நாங்கள் அல்ஜீரியர்களை மூழ்கடித்தோம்' என எழுதப்பட்டுள்ளது

மேலும், 1991 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜீன்-லூக் ஐனோடி (Jean-Luc Einaudi) இன் விரிவான மற்றும் அச்சமூட்டும் புத்தகமான The Battle of Paris: 17 October 1961, மற்றும் 1998 ஆம் ஆண்டு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பப்போன் மீதான விசாரணை வரை இதுபற்றி பிரெஞ்சு பொது வாழ்க்கையில் கிட்டத்தட்ட முழுமையான அமைதி நிலவியது.

ஸ்ராலினிச மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் உடந்தை இல்லாமல் இந்தப் படுகொலையை நடத்தவோ மறைத்திருக்கவோ முடிந்திராது. படுகொலையை நிறுத்தவும் அல்ஜீரியாவில் அழுக்கான காலனித்துவ போரை நிறுத்தவும் தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டை அவர்கள் தடுத்தனர். இது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஸ்ராலினிச மற்றும் தொழிலாளர் அதிகாரத்துவங்களுக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலுவாக எழுப்புகிறது.

1961 அக்டோபர் 17 படுகொலை

1961 இல், அதன் ஏழாவது ஆண்டில் இருந்த அல்ஜீரிய போர் சுமார் 400,000 அல்ஜீரியர்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு உயிர்களை பலிகொண்டிருந்தது. கி மொலே (Guy Mollet) இன் சமூக-ஜனநாயக அரசாங்கம் 1956 இல் இராணுவத்தை அல்ஜீரியாவுக்கு அனுப்பி மற்றும் பாரிய சித்திரவதைக்கான ஒரு கொள்கையை அங்கீகரித்தது. இதற்கு தேசிய சட்டமன்றத்தில் நிதியளிக்க ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஆதரவாக வாக்களித்தது. அல்ஜீரியாவில் அரச பயங்கரவாதம் ஆட்சி செய்தது. அல்ஜீரியாவில் பிரெஞ்சு 'மறுசீரமைப்பு முகாம்களில்' குறைந்தது 2.5 மில்லியன் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

போரின் போது பப்போனின் வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது. அவர் பிரான்சில் நாஜி ஆக்கிரமிப்பில் இருந்த, போர்தோவில் உள்ள காவல்துறை பொதுச்செயலாளராக, நாஜி சுற்றிவளைப்புகளினால் ஆயிரக்கணக்கான யூதர்கள் மரண முகாம்களுக்கு நாடு கடத்தப்படுவதற்காக பிரெஞ்சு பொலீஸின் பங்கேற்பை ஏற்பாடு செய்தார். போரின் முடிவில், அவர் கோலிஸ்டுகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதோடு தன்னை ஒரு 'எதிப்பு இயக்க போராளி' (resistance fighter) என்று அறிவித்தார். கி மொலே பதவியேற்ற பின்னர், பப்போன் அல்ஜீரியாவில் உள்ள கான்ஸ்டன்டைனின் மாநிலத்தின் அதிகாரியாகி, அங்கு பாரிய சித்திரவதையை ஊக்குவித்தார். செப்டம்பர் 1957 அறிக்கையில், பப்போன் தன்னால் 10,284 பேர் கொல்லப்பட்டதாகவும், 117,000 பேர் 'மறுஒழுங்கமைத்ததாகவும்' சான்றளித்தார்.

1958 இல் ஒரு இராணுவ சதி மொலே அரசாங்கத்தை கவிழ்த்து, டு கோலை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி, பிரான்சின் ஐந்தாவது குடியரசை ஸ்தாபித்த பின்னர், பப்போன் பாரிஸ் நகர பொலிஸ் தலைவரானார்.

1961 ஆம் ஆண்டில், பிராங்கோ-அல்ஜீரிய சமாதான பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, போருடன் தொடர்புடைய பிரான்சில், இரத்தக்களரி, ஒரு புதிய வடிவத்தை எடுத்தது. முதலில் அல்ஜீரிய தேசியவாதிகளுக்கிடையேயான இரத்தக்களரி மோதலுடன் தொடர்புடையது, இது கிரிம் பெல்காசிம் தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி (FLN) மெஸ்ஸாலி ஹட்ஜின் அல்ஜீரிய தேசிய இயக்கத்தை அழித்து, நூற்றுக்கணக்கான அல்ஜீரிய உயிர்கள் இழப்பிற்கு காரணமானது. இருப்பினும், ஆகஸ்ட் 1961 இல், FLN இன் பிரெஞ்சு கூட்டமைப்பு, அல்ஜீரியாவில் FLN தலைமையின் எதிர்ப்பை மீறி, பிரெஞ்சு காவல்துறை அதிகாரிகளை குறிவைக்கத் தொடங்கியது.

ஆகஸ்ட் 29 மற்றும் 1961 அக்டோபர் தொடக்கம் வரை 11 பிரெஞ்சு பொலிஸார் கொல்லப்பட்டு மற்றும் 17 பேர் காயமடைந்ததால் பாதுகாப்பு படையினர் மத்தியில் பீதி ஏற்பட்டது. அதே நேரத்தில், தெருக்களில் சுடப்பட்டு அல்லது செயின் ஆற்றில் அடித்து மூழ்கடிக்கப்பட்ட அல்ஜீரியர்களால் பிண அறைகள் நிரப்பத் தொடங்கின.

அக்டோபர் 2 அன்று, பொலிஸ் தொழிற்சங்கங்களின் கோரிக்கையின் பேரில், பப்போன் பாரிஸ் பொலிஸை சந்தித்தார். இந்த மரணங்கள் தற்காப்புக்காக எனக்காட்டப்படும் வரை அல்ஜீரியர்களைக் கொல்ல அவர் ஒரு பச்சை விளக்கை காட்டினார். 'நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள், உங்களுக்கு எனது உத்தரவாதம் இருக்கிறது. இதைத்தவிர, தலைமையகத்தில் ஒரு வட ஆபிரிக்கர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டால், அங்கு செல்லும் காவல்துறைத் தலைவரிடம் வட ஆபிரிக்கர் அவர் மீது துப்பாக்கியை வைத்தார் என கூறுவதற்கு அவருக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. ஏனென்றால் நம் காலத்தில், அதன் அர்த்தம் அனைவருக்கும் தெரியும்.” அக்டோபர் 5 ம் தேதி, பப்போன் மாலை 8:30 மணியிலிருந்து காலை 5:30 மணி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். பாரிஸில் அரேபியர் என அவர்கள் கருதிய எவருக்கும் பொலிஸார் ஒரு இனவாத அடிப்படையிலான ஊரடங்கை பிரயோகித்தனர்.

அக்டோபர் 17, 1961 மாலை பாரிஸ் பகுதியில் அனைத்து அல்ஜீரியர்களின் அமைதியான, நிராயுதபாணியான ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை அரேபிய மொழியில் பரப்புவதன் மூலம் பப்போனின் ஊரடங்கு உத்தரவுக்கு FLN பதிலளித்தது. எதிர்ப்பின் அமைதியான இயல்பை அடிக்கோடிட்டுக் காட்ட, குடும்பங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய அழைத்தது.

அக்டோபர் 17 காலை மட்டுமே போராட்டத்தினால் எச்சரிக்கையடைந்த பப்போன் மற்றும் பிரெஞ்சு பிரதமர் மிஷேல் டுபிரே (Michel Debré) இன் அலுவலகம் 8,400 பேரை நடவடிக்கைக்கு தயார் செய்தது. காலை பணிமாற்றில் வேலை செய்யும் அல்ஜீரியர்கள் பலர் அவர்கள் வேலையை விட்டு வெளியேறியபோது தொழிற்சாலை வாயிலில் கைது செய்யப்பட்டு, ஆரப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பு அடித்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஐனோடி ஆவணப்படுத்திய ஒரு நிகழ்வில், ஒடினா மூஸ்ஸா (Oudina Moussa) மற்றும் இரண்டு பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் துப்பாக்கியின் அடிப்பகுதியால் அடித்து, வாந்தியெடுக்கும் வரை வெளிறச்செய்யும் வேதியல்பொருள் கலந்த தண்ணீரை (bleach) குடிக்கச் செய்தனர். மற்றொரு சம்பவத்தில், ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவரை அணுகி, அவர் அல்ஜீரியரா என்று அவரிடம் கேட்டு, வயிற்றில் சுட்டார்.

அக்டோபர் 17, 1961. பாரிஸில் உள்ள கொன்கோர்ட் மெட்ரோ நிலையம். அல்ஜீரிய ஆண்கள் குழுவொன்று காவல்துறையினரால் தலையில் கைகளை வைத்து சுவரில் நிற்குமாறு வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர் [Photo credit: Elie Kagan/ Bibliothèque de documentation internationale contemporaine]

ஆயினும்கூட, அந்த மாலை, குறைந்தபட்சம் 40,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் FLN இன் அழைப்பில் பேரில், இதில் ரெனோல்ட் வாகன தொழிலாளர்கள் குழு உள்ளடங்கலாக pont Saint-Michel, pont de Neuilly, place de la Concorde, Arc de triomphe, Opéra Garnier மற்றும் பிற இடங்களூடாக ஊர்வலமாக சென்றனர். 1871 இல் பாரிஸ் கம்யூனை மூன்றாம் குடியரசு அழித்ததிலிருந்தும் மற்றும் நாஜி அதிகாரிகளுக்கு எதிரான 1944 தொழிலாள வர்க்க எழுச்சிக்கு பின்னருமான பாரிசின் இரத்தக்களரியான படுகொலைக்கு அணிவகுத்து சென்றனர்.

முதலில், Opéra மற்றும் Arc de triomphe க்கு வரும் அல்ஜீரியர்களை பேருந்துகளில் ஏற்றி, அடித்து பாரிஸைச் சுற்றியுள்ள காவல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். பேருந்துகள் நிரம்பியபோது, அவை திரும்பவரும் வரை பெண்களும் குழந்தைகளும் தெருக்களில் துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் ஒன்றாக பஸ்களில் தூக்கி எறியப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இதில் அவர்களை பொலிசார் கையாள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சில பார்வையாளர்களும் உள்ளடங்குவர். பின்னர், Arc de triomphe மற்றும் Champs-Elysées பெருவீதியில் பொலிசார் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றதுடன் மற்றும் அவர்களுக்கு ஒரு மருத்துவர் சிகிச்சையளிக்க முயன்றபோது அவர்களின் துப்பாக்கி அடிப்பகுதியால் கைதிகளை அடித்தனர்.

அடக்குமுறையின் போது, பொலிஸாரை வெறித்தனமூட்டுவதற்காக, பப்போனும் பொலிஸ் அதிகாரிகளும் பாரிஸில் அல்ஜீரியர்கள் பொலிஸ்காரர்களை சுட்டுக் கொல்வதாக பொய்யான அறிக்கைகளை வேண்டுமென்றே பொலிஸ் வானொலியில் பரப்ப அனுமதித்தனர்.

பாரிஸ் முழுவதும் பொலிஸ் பிரிவுகள் குவிக்கப்பட்டிருந்தன. பொலிஸார் சுவர்களுக்கு எதிராக துப்பாக்கி முனையில் அல்ஜீரியர்களை வலுக்கட்டாயமாகத் தள்ளி மற்றும் இரும்புக் கம்பிகள் மற்றும் பொலிஸ் தடிகளால் தலைக்கு மேல் அடித்ததால் கொன்கோர்ட் சதுக்க மெட்ரோ இரயில் நிலையம் இரத்தத்தால் சிவந்து ஓடியது. செயிண்ட் மிஷேல் பாலத்தில், அமைதியான அல்ஜீரியக் கூட்டத்தினர் மீது போலீஸார் தடியடி நடத்தி, அவர்களை செயிண்ட் மிஷேல் சதுக்கத்தில் சுற்றி வளைத்து இரக்கமின்றி அடித்து, சதுக்கத்தில் உள்ள அதன் சிற்றுண்டிக் கடைகளை அழித்து, உயிரற்ற உடல்களாலும் பெரிய இரத்த குளங்களாலும் நிரப்பிவிட்டிருந்தனர்.

நெய்யி பாலத்தில், ஆர்ப்பாட்டக்காரர்ளுக்கு அண்மையில் நின்று பொலிஸ் கண்டபடி துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், அவர்களை பொலிஸ் குண்டாந்தடிகளால் கடுமையாகத் தாக்கினர். நெய்யி பாலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிசாரால் பிடிக்கப்பட்ட பல அல்ஜீரியர்கள் மயக்கமடையும் வரை அடித்து செயின் ஆற்றில் தூக்கி வீசப்பட்டனர். பின்னர் அவை Gennevilliers மற்றும் Asnières போன்ற தொழிலாள வர்க்கப் பகுதிகளின் கீழ் ஆற்றுப்பகுதிகளுக்கு அடித்துச்செல்லப்பட்டன. அதே நேரத்தில், Nanterre இல் உள்ள அல்ஜீரிய குடியிருப்பு மக்களை போலீசார் சுற்றி வளைத்து அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு இழுத்துச் சென்று மோசமாக தாக்கினர்.

நகரம் முழுவதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அல்ஜீரியர்கள் பேருந்துகளில் பாரிஸ் நகரிலிருந்து விரட்டப்பட்டனர். இது பின்னர் பாரிஸ் பொது போக்குவரத்து பராமரிப்பு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை தூண்டியது. அவர்கள் மோசமான காயமடைந்த அல்ஜீரிய எதிர்ப்பாளர்களின் இரத்தத்தில் நனைந்த பேருந்துகளை சுத்தம் செய்ய மறுத்தனர். வன்செனில் உள்ள புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையத்துடன் சேர்ந்து, Le Dôme de Paris மாளிகை ஆயிரக்கணக்கான அல்ஜீரிய கைதிகளுக்கான பாரிய வதை முகாம்களாக பயன்படுத்தப்பட்டன.

தடுப்புக்காவல் நிலையத்திற்கு ஒரு பேருந்து வரும்போது, இரண்டு வரிசை பொலிஸ்காரர்களுக்கு ஊடாக கைதிகள் கட்டடத்திற்குள் செல்ல வைக்கப்பட்டனர். அதன்போது அவர்கள் மிருகத்தனமாக தடியடி நடாத்தினர். அடிபட்டவர்கள் தங்கள் தலையை அடியிலிருந்து பாதுகாக்க முயன்றபோது விரல்கள் மற்றும் கைகள் முறிந்தன அல்லது துன்பகரமாக அவர்களின் மண்டை ஓடுகள் வெறித்தனமான பொலிசாரால் உடைக்கப்பட்டன. அல்ஜீரியர்களை கழிவறை வசதிகளோ அல்லது சரியான மருத்துவ வசதியோ இல்லாமல் காவலில் வைத்ததுடன், உணவு வழங்குவதற்கு பல நாட்கள் பொலிஸ் காத்திருக்கவைத்தது. அல்ஜீரியாவில் உள்ள சிறை முகாம்களுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

அக்டோபர் 20, 1961. அக்டோபர் 17 அன்று கைது செய்யப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றிய செய்திகளைக் கண்டறிந்த பின்னர், பாரிஸ் சிறைக்கு வெளியே அல்ஜீரிய பெண்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டனர். ]Photo credit: Elie Kagan, Bibliothèque de documentation internationale contemporaine]

படுகொலையின் மூடிமறைப்பும் மற்றும் பிரெஞ்சு இடதுகளும்

பாரிசில் நடுத்தெருவில் பொதுமக்கள் கண்முன்னே செய்யப்பட்ட இந்த கொடூரமான படுகொலைகள், அட்டூழியங்கள் பற்றிய படங்களை பறிமுதல் செய்வதன் மூலமும் செய்திகளில் அறிவிப்பதையும் தடுப்பதற்கும் பொலிஸார் முயற்சித்த போதிலும் அதை மறைக்க முடியவில்லை. உண்மையில், இது அடுத்தடுத்த நாட்களில் பரவலாக கண்டிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், பிரெஞ்சு இடது அரசியலில் மேலாதிக்கம் செலுத்திய அமைப்புகளான பாரிய ஸ்ராலினிச மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகளால் எந்தவொரு பயனுள்ள நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்வது சாத்தியமற்றிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், விச்சி ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் எழுந்த ஒரு புரட்சிகர இயக்கத்தை அவர்கள் டு கோல் தலைமையிலான முதலாளித்துவ ஆட்சிக்கு பின்னால் திசைதிருப்பினர். டு கோலின் ஆட்சி ஜனநாயகமானது என்றும் பாசிசத்தின் மறுபிறப்பை எப்போதும் தடுக்கும் என்றும் கூறப்பட்டது. பொலிஸார் என்ன கொடுமைகள் செய்தபோதிலும், அவர்கள் ஆதரித்த மற்றும் உருவாக்க உதவிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை.

ஆனால், நாஜி ஆக்கிரமிப்பு முடிவடைந்து, விச்சி ஆட்சியின் வீழ்ச்சி முடிந்து 20 வருடங்களுக்குள், பரந்தளவிலான மக்களால் 1961 கொடூரத்தை, யூதர்கள் மீதான பாசிசப் படுகொலையின் தொடக்கத்துடன் ஒப்பிடாமல் இருப்பது சாத்தியமில்லாதிருந்தது. சமூக ஜனநாயகவாதியும் மனித உரிமைகள் குழுவின் தலைவருமான டானியல் மேயர், இதனை நாஜி ஜேர்மனியில் யூதர்களுக்கு எதிரான 1938 'பேர்லினில் கிறிஸ்டல்நாக்ட்' (“Kristallnacht in Berlin) படுகொலையுடன் ஒப்பிட்டார்.

பிரான்சில் உள்ள யூத சங்கங்களின் ஒன்றியம், அடக்குமுறை 'நடவடிக்கைகளின் இனவெறி குணாம்சத்தை' கண்டனம் செய்தது, மேலும் கூறியது: 'மஞ்சள் நிற நட்சத்திரம் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருந்த நேரத்தில் போன்று, எம்மால் இத்தகைய துன்புறுத்தல்களுக்கு மத்தியில் அமைதியாக இருக்க முடியாது. ... எடுத்துக்காட்டாக இனவெறியால் பாதிக்கப்பட்ட நாங்கள், துன்புறுத்தப்பட்டவர்களுடனான எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவதுடன், மற்றும் வட ஆபிரிக்க மக்களுக்கு எதிராக கூட்டு அடக்குமுறையின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என்று நாங்கள் கோருகிறோம்”.

இருப்பினும், அந்த நேரத்தில் பிரெஞ்சு தொழிலாளர் இயக்கத்தில் மேலாதிக்கம் மிக்க சக்தியாக இருந்த சமூக-ஜனநாயகவாதிகளும் குறிப்பாக ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டலைத் தடுத்தது. அல்ஜீரியாவில் மொலே போருக்குத் தலைமை தாங்கியதிலிருந்து, சமூக-ஜனநாயக நாளிதழான Le Populaire கூர்மையாக வலது பக்கம் திரும்பி, வெட்கமின்றி “திரு. பப்போனை ... ஒரு அன்பான மற்றும் துணிச்சலான மனிதர். அர்ப்பணிப்புள்ள மற்றும் பெரும்பாலும் மனிதாபிமானமுள்ள பொது ஊழியர். இது உண்மையாக இருப்பதால், இதை நகைமுரண் இல்லாமல் எழுதுகிறோம். அவருக்கு எதிராக யாரும் எதையும் கூறமுடியாது” என்றது.

ஸ்ராலினிச நாளிதழான L'Humanité க்கு படுகொலையை கண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 'அக்டோபர் 17 அன்று சிறையில் அடைக்கப்பட்ட அல்லது கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரியது. பிரான்சில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியும் அல்லது ஜனநாயகவாதியும் அல்ஜீரிய தொழிலாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பாசிச குணாம்சத்தினால் தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தப்படுவதாக உணர வேண்டும். ஏனெனில் இந்த நடவடிக்கைகள் நாளை அவர்களுக்கு மேலாகவும் நீட்டிக்கப்படலாம்' என எழுதியது.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை சோர்போன் பல்கலைக்கழக முற்றத்தில் கூடியருந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொது நபர்களின் சந்திப்பில் எதிரொலித்தது. கூட்டத்தில், ஜோன்-போல் சார்த்ர் (Jean-Paul Sartre), சிமோன் டு போவுவார் (Simone de Beauvoir) உட்பட பரவலாக அறியப்பட்ட பிரெஞ்சு அறிவுஜீவிகளின் குழுவினராலும், முன்னாள் ட்ரொட்ஸ்கிசவாதிகளான Laurent Schwartz, Louis Aragon, André Breton, Aimé Césaire மற்றும் Pierre Vidal-Naquet ஆகியோராலும் ஒரு அழைப்பு விடப்பட்டது. அது பின்வருமாறு குறிப்பிட்டது:

செயலற்ற நிலையில் இருப்பதன் மூலம், பிரெஞ்சு மக்கள் இப்போது பாரிஸை மூழ்கடிக்கும் இந்த இனவெறி சீற்றத்திற்கு உடந்தையாக ஆகிவிடுவார்கள். இது நாஜி ஆக்கிரமிப்பின் இருண்ட நாட்களுக்கு நம்மை கொண்டு செல்கிறது. Le Dôme de Paris மாளிகையில் கூட்டமாக 'திரும்ப அனுப்பப்படுவதற்கு' காத்திருக்கும் அல்ஜீரியர்களுக்கும் மற்றும் நாடுகடத்தலுக்கு காத்திருந்த ட்ரான்சி சிறையில் அடைக்கப்பட்ட யூதர்களுக்கும் இடையில் ஒரு வேறுபாட்டை ஏற்படுத்துவதை நாம் மறுக்கிறோம். இந்த ஊழலை முடிவுக்கு கொண்டுவர, தார்மீக எதிர்ப்புகள் மட்டும் போதாது. அனைத்து ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளிடம் இந்த இழிவான நடவடிக்கைகளை உடனடியாக இரத்து செய்யக் கோருவது மட்டுமல்லாமல், இந்த வன்முறை எழுச்சியை நேரடியாக எதிர்க்க தமது அங்கத்தவர்களை அணிதிரட்டுமாறு அழைப்பதன் மூலம் அல்ஜீரிய தொழிலாளர்களுடன் தங்கள் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும் என இதில் கையெழுத்திட்ட நாங்கள் கோருகிறோம்”.

ஆயினும்கூட, மீண்டும் எழுந்துவரும் பாசிச அச்சுறுத்தலை எதிர்க்க ஸ்ராலினிஸ்டுகள் அழைப்பு விடுத்த போதிலும், பிரான்சின் பரந்த ஸ்ராலினிச தொழிற்சங்க அமைப்பு எதுவும் செய்யவில்லை. அக்டோபர் 20 அன்று குண்டாந்தடிகளால் பொலிஸாரால் தாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான Chausson et Chenard வாகனத் தொழிலாளர்களின் ஒரு எதிர்ப்பை இது தனிமைப்படுத்தியது. அல்ஜீரிய மக்கள் மீதான பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பாசிச மிருகத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கூட்டு தொழில்துறை வலிமையை அணிதிரட்டுவதற்கான வாய்ப்பு தொழிலாள வர்க்கத்திற்கு மறுக்கப்பட்டது.

அக்டோபர் 17க்குப் பின்னர், ஸ்ராலினிச அமைப்புகள் அல்ஜீரிய போராட்டக்காரர்கள் பாரிய காவலில் தடுத்து வைக்கப்படுவதற்கு அடிபணிந்தனர். Popular Aid தொண்டு நிறுவனம் சிறை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு பால் சேகரித்தது. CGT இனது La Vie Ouvrière (தொழிலாளர் வாழ்க்கை)பத்திரிகை, படுகொலை பற்றிய அதன் அறிக்கையை பக்கம் 8 இல் புதைத்து, படுகொலை செய்யப்பட்ட அல்ஜீரியத் தொழிலாளர்களை பற்றி இழிந்த முறையில் பின்வருமாறு எழுதியது: “எங்கள் தோழர்கள் அணிவகுத்துச் சென்றது, அவர்கள் அல்ஜீரியர்களாக இருந்ததால் மட்டுமல்ல, அவர்கள் தொழிலாளர்கள் என்பதால்தான். La Vie Ouvrière அவர்களுடன் தனது சகோதர ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. அது அவர்களின் மரணத்திற்கு முன் தலைவணங்குகிறது”. இதன் மூலம் CGT படுகொலைக்கான பொறுப்புகளை திறம்பட கை கழுவிவிட்டது.

ட்ரொட்ஸ்கிச இயக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் பாசிசத்திற்கு எதிரான தொழிலாளர்களின் கிளர்ச்சிகளையும் மற்றும் அல்ஜீரியப் போருக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஸ்ராலினிசவாதிகள் கழுத்தை நெரிப்பதையும் எதிர்த்தது. பாரிசில் நடந்த படுகொலையை தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அதன் சொந்த அணிகளுக்குள்ளும் குறிப்பாக பிரான்சிலும் நெருக்கடியுடன் பிணைக்கப்பட்ட கடுமையான பிரச்சினைகளை ட்ரொட்ஸ்கிச இயக்கம் எதிர்கொண்டது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1953 இல் நான்காம் அகிலம் பிளவுபட்டது. மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு நடுத்தர வர்க்க போக்கு ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) உடைத்துக்கொண்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாக்கையில், பப்லோவாத போக்கு, ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாத கட்சிகள் தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர தலைமையை வழங்க முடியும் என்று கூறியது.

பப்லோவாத முன்னோக்கு தவறானதும் மற்றும் புரட்சிகர எதிர்ப்பாளர்கள் ஆக அல்லாது போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சியின் எதிர்ப் புரட்சிகர ஆதரவாளர்களான ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கு அடிபணிந்துபோவதாக இருந்தது. அல்ஜீரியப் போர், மீண்டும் பப்லோவாதிகளின் பொய்யான, ட்ரொட்ஸ்கிச-விரோத முன்னோக்கின் திவால்நிலையை அம்பலப்படுத்தியது. அல்ஜீரிய முதலாளித்துவ தேசியவாதிகள் ஒரு சகோதர மோதலில் ஈடுபட்டிருந்தபோது, பப்லோவாதிகள் அதில் FLN ஐ ஆதரிக்கையில், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு எதிராக பாரிஸ் நடத்தும் போருக்கு நிதியளிக்க ஆதரவாக வாக்களித்தது.

பியர் லம்பேர் இன் OCI (Organisation communiste internationaliste), அந்த நேரத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவாக இருந்து, அல்ஜீரிய கைதிகளை விடுவிக்க அழைப்பு விடுத்ததுடன் மற்றும் போருக்கு எதிராக பிரெஞ்சு மற்றும் அல்ஜீரிய தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடியது. La Vérité des Travailleurs இதழில் அது படுகொலை குறித்த ஸ்ராலினிஸ்டுகளின் வெற்று விமர்சனங்களின் போலித்தனத்தை கண்டனம் செய்தது:

“ஒடுக்குமுறை மீதான இந்த கண்டனங்கள் பருவகாலங்கள் போன்றது, அது வந்து போகிறது. ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஒவ்வொரு நாளும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு அவர்களின் சொந்த கிராமங்களுக்கு அல்ல, சிறை முகாம்களுக்கு அல்ஜீரியாவிற்கு நாடு கடத்தப்படுகிறார்கள். முன்னர் பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அல்ஜீரியர்களால் பெறப்பட்ட வெவ்வேறு கடிதங்கள், அவர்கள் அல்ஜீரியாவில் உள்ள முகாம்களில் எட்டு அல்லது ஒன்பது வயது குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன”.

அல்ஜீரிய மக்களுக்கு ஆதரவாக தொழிலாள வர்க்கத்தின் பரந்த அரசியல் அணிதிரட்டலுக்கு அழைப்பு விடுத்து, 'Popular Aid இன் அழைப்புகளில் காணப்படும் பயத்தை விமர்சித்தது. ரெனோல்ட்டில் உள்ள Popular Aid அமைப்பின் பிரிவு தொழிலாளர்களுக்கு ‘கிறிஸ்துமஸ் பரிசுகளுக்காக’ ஒரு வேண்டுகோளை வெளியிட்டது. இவை முக்கியமாக அல்ஜீரியக் கைதிகளுக்கானவை என்பதை விவேகமான முறையில் மறைத்திருந்தது. இதுவே இனவாத அழுத்தத்திற்கு அடிபணிதல் என்று அழைக்கப்படுவதாகும். இது அரசியல் தலைவர்கள் அல்லது போராளிகள் உறுதியான நிலைப்பாடு எடுக்காத நிலையில் இன்னும் பலமானதாகின்றது”.

எவ்வாறாயினும், OCI இறுதியில் சமூக-ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச அமைப்புகளுக்கு அடிபணியும் பப்லோவாத, குட்டி-முதலாளித்துவ அழுத்தங்களுக்கு சரணடைந்தது.

1968 ஆம் ஆண்டில், பாரிஸ் மற்றும் நாந்தேரில், பொலிசாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த நகரங்களில் மாணவர் போராட்டங்களை பொலிசார் அடக்கியமை மே 1968 பொது வேலைநிறுத்தத்தைத் தூண்டியது. பிரான்ஸ் முழுவதும் தொழிற்சாலைகள் மீது செங்கொடிகள் பறந்தன. மேலும் 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் டு கோல் அரசாங்கம் சரிந்ததுடன் பொருளாதாரத்தை இயங்காது நிறுத்தியது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் CGT மட்டுமே, கிரெனெல் (Grenelle) உடன்படிக்கைகளை ஆட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்கப் போராட்டத்தைத் தடுத்து, டு கோலை காப்பாற்றி புரட்சியைத் தவிர்த்தன. ஆயினும் அந்தக் காலத்தின் தீவிரமயமாக்கப்பட்ட சூழ்நிலையில், இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் OCI க்குள் புகுந்தனர்.

துரதிருஷ்டவசமாக, OCI ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தில் நிலவும் மாயைகளுக்கு அடிபணிந்து, 1971 இல் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்தும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்தும் முறித்துக்கொண்டு, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிரன்சுவா மித்ரோனின் புதிதாக நிறுவப்பட்ட சமூக-ஜனநாயக, சோசலிஸ்ட் கட்சி (PS) ஆகியவற்றுக்கு இடையேயான இடதுகளின் ஐக்கியத்தை (Union of the Left) ஆதரித்தது. அல்ஜீரியாவில் போரை நடத்திய முன்னாள் நாஜி-ஒத்துழைப்பாளரும் 1956-1958 மொலே அரசாங்கத்தின் உறுப்பினருமான மித்ரோனுடனான அதன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, OCI அக்டோபர் 17, 1961 படுகொலை தொடர்பாக நிலவிய அமைதிக்கு இணங்கியது. இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு அரசியல் பொறியாக நிரூபிக்கப்பட்டது.

ஐனோடி இன் பாரிஸ் போராட்டமும் பப்போனின் விசாரணையும்

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் 1981 இல் ஆட்சிக்கு வந்த மித்ரோன் அரசாங்கத்தின் நெருக்கடிக்கு மத்தியில், அக்டோபர் 17, 1961 படுகொலையை பொது வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வேலையை தொடங்கியது. 1986 ஆம் ஆண்டில், தொழிலாளர்களுக்கு எதிராக மித்ரோன் விதித்த சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு எதிராக எஃகு மற்றும் வாகன தொழிலாளர் வேலைநிறுத்தங்களின் அலைக்குப் பின்னர், முன்னாள் FLN அதிகாரிகள் மற்றும் அனுதாபிகள் படுகொலை குறித்த கோப்புகளை ஜோன்-லூக் ஐனோடி இடம் ஒப்படைத்தனர்.

மொறிஸ் பப்போன் (Source: Wikimedia Commons)

ஒரு மாவோவாத பத்திரிகையாளரான ஐனோடி, படுகொலை தொடர்பானவற்றில் எஞ்சியிருந்ததை கொண்டு நடந்தவற்றை மறுகட்ட்டமைக்க முழுமையான ஆராய்ச்சி நடத்தினார். உள்ளக FLN அறிக்கைகளை ஆய்வு செய்தல், பிரெஞ்சு கல்லறைகளின் பதிவுகள் பற்றிய ஆலோசனைகள் மற்றும் படுகொலையில் இருந்து தப்பிய அல்ஜீரியர்கள் மற்றும் பிரெஞ்சு மற்றும் FLN அதிகாரிகளை நேர்காணல் செய்ததன் அடிப்படையில், அவர் தனது தலைசிறந்த பாரிசின் போராட்டம் என்ற புத்தகத்தை1991 இல் வெளியிட்டார். புத்தகம் வெளிவந்த சில மாதங்களுக்குப் பின்னர், எவ்வாறாயினும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்து, கிழக்கு ஐரோப்பா முழுவதும் முதலாளித்துவ மறுசீரமைப்பை பூர்த்திசெய்தது.

ஐனோடி இன் புத்தகம், இடதுசாரி அரசியலை தொழிலாள வர்க்கத்துடன் பரவலாக அடையாளம் காண்பதையும் மற்றும் அந்த நேரத்தில் பிரான்சில் இருந்த பாசிசம் மற்றும் காலனித்துவத்திற்கு எதிர்ப்பையும் பிரதிபலிக்கிறது. பப்போன் மேற்பார்வையிட்ட பொலிஸ் நடவடிக்கைகளில் கொலை செய்யப்பட்ட இரண்டு சிறுமிகளான, போர்தோவிலிருந்து அவுஷ்விட்சுக்கு 1942 இல் நாடுகடத்தப்பட்ட 9 வயதான யூதச் சிறுமி ஜனெட் கிரிஃப் க்கும், அக்டோபர் 17, 1961 ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதற்கு பின்னர் செயிண்ட்-டெனிஸ் கால்வாயில் மூழ்கிக் கிடந்து கண்டுபிடிக்கப்பட்ட 15 வயதான அல்ஜீரிய பெண்ணான ஃபாத்திமா பேடார் க்கும் ஐனோடி அதை அர்ப்பணித்தார்.

ஐனோடி இன் புத்தகம் படுகொலையை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்ததற்காகவும், பப்போனின் தண்டனைக்கு முக்கிய பங்கு வகித்ததற்காகவும் பாராட்டப்பட வேண்டும். போர்தோவில் இருந்து யூதர்களை நாடு கடத்தியதில் பப்போனின் பங்கிற்காக 1997 ஆம் ஆண்டின் இறுதியில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டபோது, ஐனோடி 1998 இல் அவருக்கு எதிராக சாட்சியமளித்து மற்றும் சாட்சி கூண்டில் பாரிஸ் போராட்டத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி சாட்சியமளித்தார். பப்போன் அவதூறு வழக்குத் தொடுத்தபோது, ஐனோடி தன்னைத் தற்காத்துக் கொண்டார் மற்றும் முழுமையாக விடுவிக்கப்பட்டார். பப்போன் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக 1998 இல் தண்டிக்கப்பட்டார். (பார்க்க: “Maurice Papon and the October 1961 massacre of Paris”)

எவ்வாறாயினும், யூதப்படுகொலையின் 20 வருடங்களுக்குள், இதுபோன்ற பாசிச படுகொலைக்கு எப்படி அனுமதித்திருக்க முடியும் என்ற கேள்வியோடு இந்த புத்தகம் தொடர்பாக ஒரு புள்ளி குறிப்பிடப்பட வேண்டும். 'அலட்சியம், செயலற்ற தன்மை மற்றும் குற்றத்தன்மை' என்று FLN இன் இளம் ஆதரவாளரின் கருத்துக்களை ஐனோடி ஒப்புதலுடன் மேற்கோள் காட்டுகிறார். படுகொலைக்கு பொதுமக்களின் பிரதிபலிப்பு இல்லாததைக் குற்றம்சாட்டி, Le Dôme de Paris மாளிகையில் ஆயிரக்கணக்கான அல்ஜீரியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றி ஐனோடி பின்வருமாறு எழுதுகிறார்:

'அதே நேரத்தில், பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. Le Dôme de Paris மாளிகை நுழைவாயிலை மக்கள் கடந்து செல்கின்றனர். யாரும் எதிர்வினையாற்றவில்லை, ஒரு குழுவும் அமைக்கப்படவில்லை. ... இரத்தத்தால் தோய்ந்த ஆண்கள், தங்கள் தலைகளில் கைகளை வைத்தபடி ஒரு தடுப்பு முகாமில் மணிக்கணக்கில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் எதுவும் நடக்காதது போல் அதைச்சுற்றி வாழ்க்கை எங்கும் தொடர்ந்து நடக்கிறது”.

பாசிச வன்முறை மீதான அலட்சியம் உண்மையில் மிகவும் ஆபத்தானது. மற்றும் பல நூற்றாண்டுகள் காலனித்துவ வன்முறை மற்றும் யூத எதிர்ப்பு மற்றும் முஸ்லீம் எதிர்ப்புக்கான அரசியல் அழைப்புகள், தேசியவாதத்தை ஸ்ராலினிசம் ஊக்குவித்ததுடன் இணைந்து, பிரெஞ்சு கலாச்சாரத்தில் ஆழமான மற்றும் அருவருப்பான அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது. ஆனாலும் இந்த படுகொலை எப்படி நடந்தது என்ற இந்த கேள்விக்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்பும் போராட்டத்திற்கு வெளியே பதிலளிக்க முடியாது.

அல்ஜீரியா, பிரான்ஸ் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களிடையே அல்ஜீரிய போரின் போது பிரெஞ்சு பொலிஸ்-அரசு இயந்திரத்தின் வன்முறைக்கு ஆழ்ந்த எதிர்ப்பு இருந்தது. எவ்வாறாயினும், கோலிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைத் தடுப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பாரிய ஸ்ராலினிச அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தில் இருந்தபோதும் இந்த எதிர்ப்பை அணிதிரட்ட முடியவில்லை. அக்டோபர் 1961 இல் பாரிஸ் நகரத்தில் உள்ள தனிப்பட்ட தொழிலாளர்களுக்கு, இரத்தக்களரி பொலிஸ் தாக்குதலுக்கு எதிரான எதிர்த்தாக்குதலை முன்னெடுப்பதும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி - CGT எந்திரத்தின் எதிர்-புரட்சிகர பலத்தை சமாளிப்பதும் சாத்தியமற்றது.

இந்த நிலைமைகளின் கீழ், போராட்டத்திற்கான வெளிப்படையான வழிகள் ஏதுமின்றி, அலட்சியம், அவநம்பிக்கை மற்றும் பிற பின்தங்கிய உணர்வுகள் தொழிலாளர் அடுக்குகள் உட்பட, உண்மையில் முன்னுக்கு வரலாம். ஆயினும் இறுதிப் பகுப்பாய்வில், இந்த நிலைமைக்கான பொறுப்பு தொழிலாள வர்க்கத்திடம் இல்லை, ஆனால் அல்ஜீரியாவில் போருக்கு நிதியளிக்க உதவிய மற்றும் அத்தகைய பாசிச வன்முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டலைத் தடுத்த ஸ்ராலினிசக் கட்சிகளும், அதிகாரத்துவங்களுமே பொறுப்பாகும்.

பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் அல்ஜீரிய போரின் அரசியல் படிப்பினைகள்

1998 ஆம் ஆண்டில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் பப்போன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார், இன்று தீவிர வலதுசாரிகள், 23 ஆண்டுகளுக்கு முன்பு கேள்விப்படாதளவில் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ அரசியலில் வெளிப்படையான பொது ஆதரவை அனுபவித்து வருகின்றனர். சோவியத் ஒன்றிய ஸ்ராலினிச கலைப்பால் மதிப்பிழந்த பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் L'Humanité ஆகியவை, எந்தவொரு தொழிலாள வர்க்க அடித்தளத்தையும் இழந்து, பெருநிறுவன கையளிப்புகள் மற்றும் அரசு மானியங்களால் நிதியளிக்கப்பட்டு வாழ்கின்றன. பிரான்சில் இருந்து முஸ்லீம்களை நாடு கடத்துவதாக அச்சுறுத்திய விச்சி ஆட்சியின் ஆதரவாளரான தீவிர வலதுசாரி பத்திரிகையாளர் எரிக் சிமோர், 2022 ஜனாதிபதித் தேர்தலுக்கான முக்கிய வேட்பாளர்களில் ஒருவராக உள்ளார்.

ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து விட்டோடிய பப்லோவாதிகள் மற்றும் OCI போன்ற குட்டி முதலாளித்துவ துரோகிகளின் வழித்தோன்றல்களின் அரசியல் பொறுப்பு இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

உண்மையில், 2002, ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்புக்கு எதிராக சர்வதேச எதிர்ப்புகள் வெடித்த வருடம், பிரான்சில் நவ-பாசிச வேட்பாளர் ஜோன்-மரி லு பென் பதவியில் இருந்த வலதுசாரி ஜாக் சிராக்கை எதிர்கொண்டு இரண்டாவது சுற்றுக்கு வந்தபோது பெரும் எதிர்ப்புகள் வெடித்தன. இரண்டாவது சுற்றில் லு பென் முன்னிலைக்கு வருவதற்கும், சிராக்கிற்கும் லு பென்னுக்கும் இடையே ஒரு அழுகிய தேர்வை நிராகரிப்பதற்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் தெருக்களில் வெள்ளமெனக் குவிந்தனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்ததுலகக் குழு, பப்லோவாத புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (Ligue communiste révolutionnaire - LCR), தொழிலாளர் கட்சி (Parti des travailleurs - OCI இன் வழித்தோன்றல்) மற்றும் தொழிலாளர் போராட்டம் (Lutte ouvrière) குழுக்களுக்கு ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியது. அது இரண்டாம் சுற்றில் வாக்களிப்பை தீவிரமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று வாதிட்டது. அதாவது, தேர்தல்களைப் புறக்கணிப்பதற்கும் அடுத்த ஜனாதிபதியின் கொள்கைகளை எதிர்ப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றது. தீவிர வலதுசாரி ஆபத்துக்கு எதிராக, ஆளும் கட்சிகளிலிருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரே வழி இதுதான் என்று அது விளக்கியது.

நான்காம் அகிலத்தின் அனைத்ததுலகக் குழுவின் மூலோபாயத்தை மறுத்து, LCR லு பென்னுக்கு எதிராக சிராக்கை வெளிப்படையாக ஆதரித்தது. அதன் கூட்டாளிகள் அனைவரும் இதே போன்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு மேலும் பாசிச அபாயத்திலிருந்து பிரான்சின் இரட்சகராக கருதப்படும் சிராக்கோடு தொழிலாள வர்க்கத்தை பிணைக்க உழைத்தன.

இந்த நிலைப்பாடு 20 ஆம் நூற்றாண்டின் அரசியல் படிப்பினைகளை முற்றுமுழுதாக மறுப்பதுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியப் போர் மற்றும் அக்டோபர் 17, 1961 படுகொலை பாசிச வன்முறையானது பாசிச அல்லது பாசிச சார்பு கட்சிகளுக்கு உரித்தானது மட்டுமல்ல, இது முதலாளித்துவத்தின் வர்க்க இயக்கவியலில் வேரூன்றியுள்ளது என்பதை மறக்கமுடியாத வகையில் எடுத்துக்காட்டியது. ஆளும் வர்க்கத்தின் செழுமையூட்டல், மக்கள் ஆதரவற்ற போர்கள் மற்றும் மதிப்பிழந்த அரசியல் அமைப்புகள் ஆகியவற்றால் உற்பத்தி செய்யப்படும் சமத்துவமின்மையின் நிலைகளைப் பாதுகாக்க, ஆளும் உயரடுக்கு மரண நெருக்கடியின் போது எப்போதும் அரசு எந்திரம் மற்றும் அதன் தீவிர வலதுசாரி தேசிய ஆதரவாளர்களின் இரத்தக்களரி வன்முறையை நோக்கி திரும்புகின்றது.

2002 இல் LCR இன் நிலைப்பாடு, அக்டோபர் 17, 1961 படுகொலையை நடத்திய அரசு எந்திரத்துடன் அதனை இணைத்துக்கொள்வதற்கான சமிக்ஞையாகும். ஏகாதிபத்திய போர் மற்றும் பொலிஸ்-அரசு வன்முறைக்கு இந்த மறைமுக ஒப்புதல் LCR தன்னைக் கலைத்து 2009 இல் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை (NPA) நிறுவிய பின்னர் வெளிப்பட்டது. அது 2011 இல் லிபியாவில் நேட்டோ போரையும், 2014 இல் உக்ரேனில் தீவிர வலதுசாரி சதிக்கு ஆதரவாக நேட்டோ தலையீட்டையும் ஆதரித்தது. இது, சிராக் மற்றும் அடுத்தடுத்த ஜனாதிபதிகளால் சுமத்தப்பட்ட சிக்கனக் கொள்கைகளுக்கு ஒரே எதிர்ப்பாக பிரெஞ்சு நவ-பாசிஸ்டுகள் தம்மை காட்டிக் கொள்வதற்கு வழியமைத்தது.

2016 ல் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்ததுலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste - PES) 2017 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தலையிட்டது. மீண்டும் மக்ரோனுக்கும் நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பெனுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றை தீவிரமாக புறக்கணிக்க அழைப்பு விடுத்தது. மக்ரோன், ஒரு பாசிச வேட்பாளருக்கு மாற்றீடு இல்லை என எச்சரிப்பதற்கும், தொழிலாள வர்க்கத்தில் சுயாதீன புரட்சிகர அணிதிரட்டலின் அவசியத்தை தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் விளக்குவதற்கும் போராட்டங்களில் தலையிட்டதோடு பொதுக் கூட்டங்களையும் நடத்தியது.

சோசலிச சமத்துவக் கட்சி (PES) முன்வைத்த முன்னோக்கு முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போதான வேலைநிறுத்தங்கள், 'மஞ்சள் சீருடை' போராட்டங்களுக்கு எதிரான கொடூரமான பொலிஸ் தாக்குதல் மற்றும் மக்ரோனின் 'வைரஸுடன் வாழும்' கொள்கையின் போதும், மக்ரோனின் அதிகாரத்தின் கீழ் அரசு எந்திரத்திற்குள் சக்திவாய்ந்த சக்திகள் ஒரு தீவிர வலதுசாரி அரசாங்கத்தை தயார் செய்கின்றன என்பது தெளிவாகிறது.

ஜெனரல் பியர் டு வில்லியே புரட்சியின் அபாயத்திற்கு எதிராக ஒரு சர்வாதிகாரத்தை தயார் செய்ய மெல்லியதாக மறைக்கப்பட்ட ஒரு அழைப்பை கடந்த ஆண்டு விடுத்தார். 'இன்று, பாதுகாப்பு நெருக்கடிக்கு அப்பால், தொற்றுநோய் உள்ளபோது, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் பின்னணியில் தலைவர்கள் மீது நம்பிக்கையின்மை' இருக்கின்றது என்று அவர் கூறினார். 'இந்த தேங்கியுள்ள கோபம் உடனடியாக வெடிக்கும் என்று நான் அஞ்சுகிறேன்,' என்று அவர் எச்சரித்தார். 'நாம் சிந்திக்க முடியாததை சிந்திக்க வேண்டும். … சட்டத்தின் ஆட்சி வெளிப்படையாக ஒரு நல்ல விஷயம். ஆனால் ஒரு கட்டத்தில், நாமும் ஒரு மூலோபாய சிந்தனையை வளர்த்துக் கொள்வதும் அவசியம்”.

இந்த ஏப்ரல் மாதத்தில் Valeurs actuelles இன்பக்கங்களில் வெளிவந்த 'மூலோபாயத் திட்டம்' தீவிர வலதுசாரி சதி மற்றும் பிரான்சிற்குள் இராணுவ ஒடுக்குமுறையால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதும் அடங்கும். மக்ரோன் தனது பங்கிற்கு, டு வில்லியே சகோதரர்கள், பல்வேறு சுறுசுறுப்பான மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் 1961 அல்ஜியர்ஸ் சதித்திட்டத்தின் பிற அரசியல் சந்ததியினரால் செய்யப்பட்ட சதி அச்சுறுத்தல்கள் குறித்து காது கேளாத மௌனத்தைக் கடைப்பிடித்தார்.

PES அதன் பங்கிற்கு, வர்க்கப் போராட்டத்தினதும், தொழிலாள வர்க்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் சர்வதேச இயக்கத்தினதும் பக்கம் திரும்பியுள்ளது. PES அக்டோபர் 17, 1961 படுகொலையை நினைவுகூருகையில், அது பிரான்சிலும் சர்வதேச அளவிலும் நவ காலனித்துவ போர்கள் மற்றும் பாசிச சதி அச்சுறுத்தல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான அதன் போராட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. அக்டோபர் 17, 1961 படுகொலையை நடத்திய வலதுசாரி சக்திகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின் எதிர் தாக்குதலைத் தடுத்த ட்ரொட்ஸ்கிச-விரோத கட்சிகள் மற்றும் அதிகாரத்துவங்கள் ஆகியவற்றின் அரசியல் வாரிசுகளுக்கும் எதிராக ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னோக்கில் தொழிலாள வர்க்கத்தை ஆயுதமயப்படுத்த போராடுகிறது.

Loading