மலேசியா, சிங்கப்பூர் கொடிய "கோவிட் உடன் வாழும்" மூலோபாயத்தை ஏற்றுக்கொள்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இரண்டும் தங்கள் எல்லைகளை மீண்டும் திறக்கவும் குறிப்பிட்ட COVID-19 கட்டுப்பாடுகளை நீக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளன. தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகள் வைரஸுடன் 'வாழும்' கொள்கைக்கு பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயங்களை உத்தியோகபூர்வமாக கைவிடுகின்றன.

தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் உட்பட பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்கள் சுற்றுலாவை மீண்டும் நிறுவுதல் மற்றும் வணிகங்களை மீண்டும் தொடங்குவதன் மூலம் தங்கள் பொருளாதாரத்தை புத்துயிர்ப்பிக்க முயல்கின்றன.

ஜூலை 9, 2021 அன்று இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் சுரபயாவில், கோவிட்-19 தொற்றுகளின் அதிகரிப்புக்கு மத்தியில், நெரிசலான மருத்துவமனையின் நடைபாதையில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன (AP Photo/Trisnadi)

பெருகிவரும் உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியால் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பெரும் வணிகம் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கடந்த மாதம் இப்பகுதியில் கோவிட்-19 தொற்றுக்களின் அதிகரிப்பு 'துறைமுகங்களை இயங்காது செய்து மற்றும் தோட்டங்கள் மற்றும் பதப்படுத்தல்களை பூட்டி, பால்ம் எண்ணெய், காப்பி மற்றும் தகரம் போன்ற மூலப்பொருட்களின் நீட்டிக்கப்பட்ட இடையூறுகளைத் தூண்டியது' எனக் குறிப்பிட்டது.

சிங்கப்பூர் பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகமும், உலகின் மிகப்பெரிய பயண மற்றும் நிதிய மையங்களில் ஒன்றுமாகும். சாங்கி விமான நிலையம் அதன் நான்கு முனையங்களில் இரண்டை கடந்த ஆண்டு முதல் 76 சதவிகிதம் விமானங்கள் வீழ்ச்சியடைந்த பின்னர் இயங்காது செய்துள்ளன. தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலேசிய தொழிற்சாலைகளிலிருந்து பெறப்பட்ட குறைக்கடத்திகள் (semiconductors) பற்றாக்குறை காரணமாக ஃபோர்ட் சமீபத்தில் ஜேர்மனியின் கொலோன் நகரில் உள்ள தனது வாகனத் தொழிற்சாலையில் Fiesta மாதிரிகளின் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது.

இரு நாடுகளும் பொது சுகாதாரக் கட்டுப்பாடுகளைக் காட்டிலும், தடுப்பூசி மூலம் சமாளிக்கப்படக்கூடிய வைரஸாக சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளன. ஒப்பீட்டளவில் அதிக தடுப்பூசி இடப்பட்ட விகிதங்கள் இருந்தபோதிலும், கணிசமான எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளை அனுபவிக்கும் போது அவை ஆபத்தான முறையில் 'அதிகரிக்கின்றன'. சமீபத்திய கோவிட் புள்ளிவிவரங்கள் தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு சான்றளிக்கின்றன. மலேசியாவின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 21,571 என்ற சராசரி உச்சத்தில் இருந்து கீழ்நோக்கிச் சென்றது. ஆனால் அக்டோபர் 4 முதல் 17 வரை 113,122 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

தற்போது 89,173 தொற்றுக்கள் உள்ளன. அவற்றில் 679 தொற்றுக்கள் மோசமான நிலையில் உள்ளன. அக்டோபர் 17 அன்று, 6,145 புதிய தொற்றுக்கள் ஏழு நாள் சராசரியாக 7,299 விகித்தத்துடன் உறுதிப்படுத்தப்பட்டன. மலேசியாவின் மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 27,921 இறப்புகளுடன் அதிர்ச்சியூட்டும் 2.39 மில்லியன் ஆக உள்ளது.

அக்டோபர் 17 அன்று சிங்கப்பூரில் 3,058 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. ஏழு நாள் சராசரியாக 3,030. அக்டோபர் 4 முதல் 17 வரை 44,335 நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 25,456 தொற்றுக்கள் உள்ளன. சிங்கப்பூரில் மொத்தம் 148,000 தொற்றுக்களும் மற்றும் 233 இறப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இந்த ஆண்டிற்குரியவையாகும்.

தொடரும் தொற்றுநோய் இருந்தபோதிலும், வயதுவந்த மக்களின் தடுப்பூசி இலக்கு 90 சதவிகிதத்தை அடைந்த பின்னர், மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) கடந்த வாரம் மலேசியாவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை முழுமையாக தடுப்பூசி பெற்ற குடியிருப்பாளர்களுக்காக முடிவிற்கு கொண்டு வந்தார். அதே நேரத்தில், சிங்கப்பூர் தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்படாத பயணப் பாதைகளில் எட்டு புதிய நாடுகளைச் சேர்த்தது. இது கடந்த மார்ச் மாதம் எல்லைகள் மூடப்பட்டதிலிருந்து பயணக் கட்டுப்பாடுகளில் மிக முக்கியமான தளர்வாகும். 5.45 மில்லியன் மக்கள் வசிக்கும் சிங்கப்பூரில், தற்போது 85 சதவீத மக்கள் முற்றாக தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளிலும் கோவிட்-19 தொற்றுக்களால் பேரழிவை ஏற்படுத்தியது. இது மிகவும் தொற்றக்கூடிய டெல்டா மாறுபாட்டால் தூண்டப்பட்டது. அவர்கள் தீவிரமான கோவிட் ஒழிப்பு என்ற கொள்கைகளைப் பின்பற்றி, கடுமையான பூட்டுதல்கள் மற்றும் எல்லைகளை மூடுவதன் மூலம் பதிலளித்தனர்.

சிங்கப்பூர் முன்பு கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடும் ஒரு சில நாடுகளில் முன்மாதிரி ஒன்றாக இருந்தது. ப்ளூம்பேர்க் ஏப்ரல் மாதத்தில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை விட சிங்கப்பூரை முதலிடத்தில் வைத்து தொற்றுநோய் நிர்வாகத்திற்கான தங்க நட்சத்திரத்தைக் கொடுத்தது. இது பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே முந்தைய தொகையான பரவுதலை அடக்கியதாகத் தோன்றியது.

இருப்பினும், ஒரு மாதத்திற்குள், சிங்கப்பூர் தெற்காசியாவிலிருந்து கிட்டத்தட்ட 300 COVID-19 தொற்றுக்களை இறக்குமதி செய்தது. அரசாங்கம் உடனடியாக சமூக ஒன்றுகூடுதலை குறைத்தது, உணவகங்களில் உணவை தடைசெய்தது மற்றும் அலுவலக ஊழியர்களுக்காக வீட்டிலிருந்து வேலை செய்வதை மீண்டும் நிறுவியது. 10 குழந்தைகள் நேர்மறையாக சோதனை செய்த பின்னர், ஏழு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வீட்டு கற்றலுக்குத் திரும்ப வேண்டியதால், 16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி இடத்தொடங்கியது.

ஆகஸ்ட் மாதத்தில், சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்சில் பங்குகள் 13 வருட உச்சத்திலிருந்து வீழ்ச்சியடைந்தன. வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியதால் முதலீட்டாளர்கள் இவ்வாறு பிரதிபலித்தனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்குகள் 5.7 சதவிகித இழப்புடன் மூடப்பட்டன. இது இலாபத்தை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் நிதிய உயரடுக்கின் விரோதப்போக்கு தொடர்பான பார்வையை வழங்குகின்றது.

மலேசியாவில், முஹைதீன் யாசின் தலைமையிலான முந்தைய அரசாங்கம் கடுமையான பூட்டுதலை விதித்தது மற்றும் ஜூலை மாதம் நாட்டில் பூஜ்ஜிய தொற்றுக்கள் இருப்பதாக அறிவித்ததால், தொற்றுநோய் 2020 ஆம் ஆண்டிலும் இதேபோல் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை வேகமாக கட்டுப்பாட்டை மீறியது.

கடந்த ஜனவரியில், வளர்ந்து வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், முஹைதீன் அவசரகால நிலையை அறிவிக்க மன்னரின் ஆதரவைப் பெற்றார். ஜூன் மாதத்தில் தினசரி கோவிட் தொற்றுக்கள் 7,000 ஐ எட்டும்போது 'மொத்த பூட்டுதல்' அறிவிக்கப்பட்டது. இருப்பினும், சில உற்பத்தி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு, வைரஸின் பரிமாற்ற தளங்களாக மாறின. இது பரிசோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் முறையின் பற்றாக்குறையால் மோசமடைந்தது.

தொற்றுநோயை அரசாங்கம் கையாள்வது குறித்து, முக்கியமாக இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர்ச்சியான அரசாங்க எதிர்ப்பு பேரணிகள் ஜூலை மாதம் வெடித்தன. 'கறுப்புக்கொடி' போராட்டங்கள் வாக்களிக்கும் வயதினையும் கடந்து 15 முதல் 30 வயதுடையவர்களிடையே அதிக வேலையின்மை விகிதம், தேங்கி நிற்கும் ஊதியங்கள், கட்டுப்படியாகாத வீடுகள் மற்றும் தொற்றுநோய்களின் போது உண்மையான சமூக பாதுகாப்பு வலை இல்லாதது போன்றவற்றிற்கு எதிரான ஒரு பரந்த சமூக இயக்கமாக வளர்ந்தது.

மலேசியாவின் கோவிட் எழுச்சி ஆகஸ்ட் மாதத்தில் உச்சத்தை எட்டியது. நாடு ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான தொற்றுக்களைப் பதிவு செய்தது. வீழ்ச்சியடைந்துவரும் பொருளாதாரம் மற்றும் திரளும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் முஹியிதின் இராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக வலதுசாரி ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமிக்கப்பட்டார்.

தடுப்பூசி விகிதம் 66 சதவிகிதமாக உயர்ந்தபோது, புதிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மூலோபாயத்தை வைரஸுடன் 'வாழ' என்பதாக மாற்றியது. ஆகஸ்ட் நடுப்பகுதியில் கார் கழுவுதல், கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் முடிதிருத்தும் நிலையங்கள் உட்பட 11 வகையான பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டன. பள்ளிகள் அக்டோபர் 3 ஆம் தேதி 50 சதவீத திறனில் மீண்டும் திறக்கத் தொடங்கின.

யாகோப் இந்த மாத தொடக்கத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில்: 'கோவிட் உடன் வாழ எங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், ஏனென்றால் கோவிட் முழுமையாக அகற்றப்படாது' என்று கூறினார். தொற்றுக்கள் அதிகரித்தாலும் மலேசியா மீண்டும் பரந்த பூட்டுதல்களை விதிக்காது என்று அவர் அறிவித்தார்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், நாடு கோவிட் 'நிரந்தரமாக இருக்கும் நிலைக்கு' செல்லும்போது அனைத்து மலேசியர்களும் 'புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தயாராக இருக்க வேண்டும்' என்றார். கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மலேசியர்கள் அனுமதிக்கு விண்ணப்பிக்காமல் வெளிநாடு செல்லலாம். மலேசியாவின் 13 மாநிலங்களில் பயணம் செய்வதற்கான தடையை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டுப் பயணங்களும் அனுமதிக்கப்படும். லங்காவி தீவுகளின் விடுமுறை இலக்கு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சர்வதேச பயணிகளுக்கு நாட்டை மீண்டும் திறப்பது பரிசீலனையில் உள்ளது.

சிங்கப்பூரில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் செப்டம்பரில் அதன் கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கினர். எவ்வாறாயினும், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 3,000க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகும் நிலையில், தொற்று எண்கள் மாதம் முழுவதும் தொடர்ந்து உயர்ந்தது. பரவலான பொது அக்கறைக்கு பதிலளித்து, அதிகாரிகள் போக்கை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இறுக்கமான தற்காலிக நடவடிக்கைகளில் சமூக ஒன்றுகூடுதலை இரண்டு நபர்களுக்கு மட்டுப்படுத்துவது மற்றும் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு வகுப்புகளை இடைநிறுத்துதல் அல்லது இணையவழிக்கு நகர்த்துவது ஆகியவை அடங்கும்.

எவ்வாறாயினும், வணிகத்தின் வளர்ந்து வரும் அழுத்தத்தின் கீழ், தொற்றுக்கள் தொடர்ந்து சீற்றமடைந்தாலும் இந்த கட்டுப்பாடுகள் பல இப்போது நீக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் 'வேலை இழப்பு, குடும்பப் பிரிவு மற்றும் வணிக மூடல்கள்', உளவியல் மற்றும் உணர்ச்சி மனஉளைச்சல் மற்றும் மனச்சோர்வை 'ஏற்படுத்தியதாகக் கூறி' “காலவரையின்றி மூடப்பட முடியாது' என்று அறிவித்தார்.

அக்டோபர் 9 அன்று ஒரு முக்கிய பொது அறிக்கையில், லீ மிகவும் மோசமாக டெல்டா மாறுபாட்டைக்காட்டி ஒரு பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயம் 'இனி சாத்தியமில்லை' என்றார். மேலும் 'தடுப்பூசிகள் மூலம் கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டன' என அவர் கூறினார். 'வைரஸ் பெரும்பாலானவர்களுக்கு இலேசான, சிகிச்சையளிக்கக்கூடிய நோயாக மாறிவிட்டது', மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்போது மக்கள் தங்கள் 'தினசரி நடவடிக்கைகளுக்கு' செல்லுமாறு வலியுறுத்தினார்.

தினசரி ஆயிரக்கணக்கான புதிய தொற்றுக்கள் மற்றும் தொடர்ச்சியான இறப்புகள் இருந்தபோதிலும், சிங்கப்பூர் இப்போது வைரஸுடன் 'வாழ்வதற்கான' ஒரு உதாரணமாக சர்வதேச அளவில் காட்டப்படுகிறது.

Loading