இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அக்டோபர் 15 உலகளாவிய பாடசாலை பகிஷ்கரிப்புக்கு ஆதரவாக இலங்கை ஆசிரியர்களும் மாணவர்களும் குரல் கொடுத்துள்ளனர். பிரித்தானிய பெற்றோரும், அனைவருக்கும் பாதுகாப்பான கல்வி (SafeEdforAll) பிரச்சாரக் குழுவின் உறுப்பினருமான லிசா டியஸால் அழைப்பு விடுக்கப்பட்ட, இன்றைய பகிஷ்கரிப்பு நடவடிக்கை, உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழிலாளர்களால் ஆதரிக்கப்பட்ட, அக்டோபர் 1 அன்று நடத்தப்பட்ட முதலாவது பள்ளி பகிஷ்கரிப்பைத் தொடர்ந்து இடம்பெறுகின்றது. சர்வதேச அளவில் பள்ளிகளை அரசாங்கங்கள் மீண்டும் திறப்பதன் விளைவாக தொற்றுநோய் பிள்ளைகளுக்கும் பரவி அவர்கள் கொல்லப்படும் நிலையில், அக்டோபர் 9 அன்று டியஸ் ட்விட்டரில் இந்த இரண்டாவது பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்தார்.
சுமார் 800 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தினசரி அடையாளம் காணப்படுகின்ற மற்றும் தினசரி 30 பேர் மரணிக்கின்ற பாதுகாப்பற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில், இராஜபக்ஷ அரசாங்கம் அக்டோபர் 21 அன்று இலங்கைப் பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது. இலங்கையின் சோதனை விகிதங்கள் மிகக் குறைவு ஆகும். அதாவது இந்த புள்ளிவிவரங்கள் உண்மையான சூழ்நிலையை அபாயகரமான முறையில் குறைத்து மதிப்பிடப்படுபவை ஆகும்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அரசியல் வழிகாட்டுதலின் கீழ் நிறுவப்பட்ட ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழுவானது அரசாங்கத்தின் முன்கூட்டிய பாடசாலை திறப்புக்கு எதிராக போராட, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்கப் போராடுகிறது. ஒழுக்கமான சம்பளத்தை கோரி மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை நிறுத்தத்தை தொடங்கிய சுமார் 250,000 இலங்கை அரச பாடசாலை ஆசிரியர்கள், இணையவழி கற்பித்தல் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
கீழேயுள்ள கருத்துக்கள் இன்றைய உலகளாவிய நடவடிக்கைக்கு ஆசிரியர்கள், கல்வி வல்லுநர்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவை வெளிப்படுத்துகின்றன.
கொழும்பில் தொழில்நுட்ப ஆசிரியரான லக்மல்: 'உலகெங்கிலும் தொற்றுநோயின் யதார்த்தம் பற்றிய உண்மையை மூடிமறைக்கவும் அதை இயல்பாக்கவும் முயற்சி நடக்கிறது. நான் இதை முழுமையாக எதிர்க்கிறேன். இது மக்களின் வாழ்க்கையை பயன்படுத்தி செய்யும் ஒரு கொலைகார பரிசோதனை ஆகும்.
'உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் இந்த குற்றவியல் கொள்கைக்கு எதிர்ப்பைத் திரட்ட லிசா டியஸ் போராடுகிறார். நான் அதை முழுமையாக ஆதரிக்கிறேன். இலங்கையில் அவ்வப்போது பாடசாலைகள் திறக்கப்பட்ட போது ஆபத்தான விளைவுகளை நாங்கள் ஏற்கனவே பார்த்திருப்பதோடு அக்டோபர் 21 முதலும் நாங்கள் அதை எதிர்கொள்ளப் போகிறோம். இதை எதிர்த்துப் போராட, இங்கிலாந்து பெற்றோர்கள் இப்போது செய்வது போல், சர்வதேச ஐக்கியத்தை ஒருங்கிணைப்பதற்கான அவசியத்தை நான் பார்க்கிறேன்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவரும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் உறுப்பினருமான சகுந்த ஹிரிமுத்துகொட கூறியதாவது: 'பிரித்தானியாவிலும் மற்றும் உலகம் பூராவும் பாதுகாப்பற்ற மற்றும் கொலைகாரத்தனமாக பள்ளிகளைத் திறப்பதற்கு எதிரான, இரண்டாவது பாடசாலை பகிஷ்கரிப்பிற்கு லிசா டியஸ் விடுத்துள்ள அழைப்பை, ஒரு பல்கலைக்கழக மாணவனாக நான் பலமாக ஆதரிக்கிறேன். இலங்கையில் ஆளும் வர்க்கம் பெரும் வணிகர்களின் இலாப நலன்களைப் பாதுகாப்பதற்காக ’கோவிட் -19 உடன் வாழ்வது’ என்ற அதே குற்றவியல் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது.
'இந்த கொள்கையின் விளைவாக தொற்றுநோயால் ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் நீண்டகால கோவிட் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மக்கள், இப்போது அனுபவிப்பது போல், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டால், அதே சூழ்நிலையை ஊக்குவிக்கும்.
“இந்த சமூகப் படுகொலையை நிறுத்த நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலாளித்துவத்தின் இலாபத்திற்காக இனி உயிர்கள் பலியாகக் கூடாது. உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான மக்கள், தேசிய எல்லைகளை கடந்து, ஒரேமாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதை நாம் எப்படி எதிர்கொள்வது?
'டியஸ் அறைகூவல் விடுத்த வேலைநிறுத்த நடவடிக்கை, என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது அவர்களின் போராட்டம் மட்டுமல்ல, எங்களின் போராட்டமும் கூட, மற்றும் அது உலகளாவிய போராட்டமாக இருக்க வேண்டும். உலக சோசலிச வலைத் தளத்தில் விளக்கியுள்ளபடி, தொற்றுநோயை முற்றாக ஒழிப்பதே அழிவை நிறுத்துவதற்கான ஒரே வழி, எனவே இந்த போராட்டத்தை ஆதரிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
கண்டியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் தனிது திசல் கூறியதாவது: 'நான் எனது நண்பர்களுடன் பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன், ஆனால் இந்த கொடிய வைரஸுக்கு எனது உயிரை அல்லது எனது நண்பர்களின் உயிரை நான் ஒருபோதும் தியாகம் செய்ய மாட்டேன். எனது பார்வையில், கோவிட்-19 வைரஸை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதால், ஏராளமான பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் கணிசமானவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர்.
“உலகம் முழுதும் உள்ள அரசாங்கங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இது ஒரு பொய் என்பதை WSWS கட்டுரைகளை படித்ததிலிருந்து நான் கற்றுக்கொண்டேன். பெரிய வணிகத்தின் இலாபத்திற்காக தங்கள் பெற்றோர்களை மீண்டும் வேலைக்கு அனுப்புவதற்காக, அவர்கள் பிள்ளைளை பாடசாலைக்கு அனுப்ப நெருக்குகிறார்கள். இந்தக் கொள்கையால் நான் அதிர்ச்சியடைந்தேன். நம் உயிர் அவ்வளவு மதிப்பு இல்லாததா?
'தொற்றுநோய் பூமியிலிருந்து ஒழிக்கப்படும் வரை இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ பாடசாலைகளை மீண்டும் திறக்கக் கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன். நம் உயிரைப் பொருட்படுத்தாமல் அவர்கள் அவ்வாறு செய்தால், நாம் அனைவரும் அதை எதிர்க்க வேண்டும். நான் லிசா டியஸின் பிரச்சாரத்தை முழுமையாக ஆதரிக்கிறேன், அதற்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆதரவு தேவை.'
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை விரிவுரையாளர் கலாநிதி லக்ஷ்மன் நுகபிட்டிய, பாடசாலைகளை மீண்டும் திறப்பது பொருளாதாரத்தை முழுமையாக மீண்டும் திறப்பதற்கான ஒரு படியாகும், இது முதலாளிகளுக்கே நன்மை பயக்கும் என்றார். 'அவர்கள் ஏற்கனவே பெரும் இலாபம் ஈட்டியுள்ளனர், இப்போது அவர்கள் அதிக இலாபத்திற்காக அதிக உயிர்களை தியாகம் செய்ய விரும்புகிறார்கள்,' என்று அவர் தெரிவித்தார்.
'பிரித்தானிய பெற்றோர் லிசா டியஸ் இந்த குற்றத்திற்கு எதிராக முன் வந்துள்ளார். அதற்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். அதைச் சுற்றி சர்வதேச ஆதரவைத் திரட்டுவதை ஒரு புரட்சிகர முயற்சியாக நான் பார்க்கிறேன். இந்த முக்கிய போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் அரசியல் ஆதரவை நான் பாராட்டுகிறேன்,” என்றும் அவர் கூறினார்.
இரண்டு குழந்தைகளின் தாயான அனுபமா தெரிவித்ததாவது: “இலங்கை பொதுப் போக்குவரத்திலும் பாடசாலைகளிலும் காணப்படும் நெரிசலைப் பற்றி நினைக்கும் போது, பாடசாலைகள் திறக்கப்பட்ட பிறகு ஏற்படும் சூழ்நிலை குறித்து நாங்கள் பயப்படுகிறோம். பெற்றோரின் அச்சங்கள் நியாயமானவை மற்றும் புரிந்துகொள்ளக்கூடியவை. தொற்றுநோய்க்கு மத்தியில் இலங்கையில் இதற்கு முன்னர் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. அரசாங்கம் எங்கள் பிள்ளைகளின் உயிர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்பதை இது காட்டுகிறது. இறுதியாக, பெற்றோர்களாகிய நாங்கள், தேவையான சுகாதாரப் பொருட்களை வாங்குவதற்கு நாமே பணத்தை சேகரிக்க வேண்டியிருந்தது.
'பிரித்தானிய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை எதிர்ப்பது அரசாங்கத்திற்கு பதில் சொல்வதற்கான சரியான வழியாகும். அவர்கள் தங்கள் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற போராடக்கூடாதா? அக்டோபர் 15 வேலைநிறுத்தத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன், இலங்கையில் பெற்றோர்களாகிய நாங்கள் அதே போராட்டத்தை இங்கே தொடங்க முடியும் என்று நம்புகிறேன்.”
மேலும் படிக்க
- இலங்கை ஆசிரியர் போராட்டத்தின் மூன்று மாத அனுபவம்
- இங்கிலாந்தின் தாயார் லீசா டியஸ் இரண்டாவது பள்ளி பகிஸ்கரிப்பிற்கான தனது அழைப்பைப் பற்றி பேசுகிறார்
- பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது: ஒழிப்புக்கான வாதங்கள்
- பெற்றோர்களின் அக்டோபர் 1 வேலைநிறுத்தம்: இந்த பெருந்தொற்றுக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டத்தில் ஒரு முக்கிய முன்னோக்கிய படி