மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'ஒரு வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதி' என்று அமெரிக்க அதிகாரிகள் எதை குறிப்பிட்டார்களோ அதை நிறுத்த கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி நடவடிக்கை எடுத்தார் என்பதைக் காட்டும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர்கள் பாப் வூட்வார்ட் மற்றும் ராபர்ட் கோஸ்டாவின் வெளியீடுகள், ட்ரம்ப் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் அமெரிக்கா சர்வாதிகாரத்திற்கும் சீனாவுடனான ஒரு சாத்தியமான போருக்கும் எவ்வளவு நெருக்கமாக வந்திருந்தது என்பதை எடுத்துக்காட்டி உள்ளன.
ஒரு கிளர்ச்சியைத் தூண்டுவதற்கான ட்ரம்பின் முயற்சிக்குப் பின்னர், தனது ஒப்புதல் இல்லாமல் ட்ரம்பின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டாம் என அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு கூறியிருந்த மில்லி, ட்ரம்ப் ஒரு போரை தொடங்க முயற்சித்தால் சீன இராணுவ அதிகாரிகளை எச்சரிக்கவும் உறுதியளித்தார். இந்த யதார்த்தம் குடியரசுக் கட்சியில் உள்ள ட்ரம்பின் சக சதிகாரர்களுடன் 'நல்லிணக்கம்' மற்றும் 'இருகட்சிகளின் ஒருமனதான சம்மதம்' ஆகியவற்றுக்காக ஜனநாயகக் கட்சியினர் விடுக்கும் தொடர்ச்சியான அழைப்புகளின் குற்றகரமான தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது.
வூட்வார்ட் மற்றும் கோஸ்டாவின் புதிய புத்தகமான Peril இல் உள்ள பிரதான வெளியீடுகளில் ஒன்றை மில்லியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் புதன்கிழமை உறுதிப்படுத்தினார், அதாவது மில்லி அவரின் சீன சமதரப்பான மக்கள் விடுதலை இராணுவத்தின் தளபதி Li Zuocheng உடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அக்டோபர் 30, 2020 இல் தொலைபேசியில் பேசியிருந்தார், பின்னர் அமெரிக்க தலைமை செயலகத்தில் ட்ரம்ப்-ஆதரவு கும்பல் தாக்குதல் நடத்தி இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஜனவரி 8, 2021 இல் மீண்டும் உரையாடியிருந்தார்.
அந்த புதிய புத்தகத்தின் தகவல்படி, சிஐஏ இயக்குனர் ஜினா ஹாஸ்பெல், “நாம் ஒரு வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் வழியில் உள்ளோம்,” என்று மில்லிக்கு எச்சரித்துள்ளார்.
ஜனவரி 6 சம்பவங்களை மூடிமறைப்பதற்கான ஜனநாயகக் கட்சியினரின் முயற்சிகளுக்கு முட்டுக்கொடுக்க, போஸ்டும் நியூ யோர்க் டைம்ஸூம் அவற்றின் முகப்புப் பக்கங்களில் இந்த வெளியீடுகளைக் குறித்த கட்டுரைகள் வராதவாறு புதைத்து விட்டன, அவ்விரு பத்திரிகைகளுமே இந்த விஷயம் குறித்து ஒரு தலையங்கமும் வெளியிடவில்லை.
தனது பங்கிற்கு பைடென் புதன்கிழமை கூறுகையில் மில்லி மீது அவர் 'மிகப்பெரும் நம்பிக்கை' வைத்திருப்பதாக தெரிவித்த அதேவேளையில், Peril புத்தகத்தின் வெளியீடுகள் பற்றி எந்த கருத்தும் கூறவில்லை.
இதற்கு எதிர்விதமாக குடியரசுக் கட்சியினர், மில்லிக்கு எதிராக ஒரு கடுமையான பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். ட்ரம்பின் சக-சதிகாரர்களில் ஒருவரான குடியரசுக் கட்சி செனட்டர் டெட் குரூஸ், “தலைமை தளபதிக்கு குழிபறித்து, தனது சொந்த தளபதியை மீறி நம் எதிரிகளுக்கு உறுதிமொழி அளித்திருப்பதாக' மில்லி மீது குற்றஞ்சாட்டினர். மில்லியை இராணுவ நீதிமன்றத்திற்கு இழுக்க வேண்டுமென செனட்டர் ராண்ட் பவுல் கோரிய அதேவேளையில், தேசத் துரோகம் இழைத்ததாக மில்லி மீது ட்ரம்பும் குற்றஞ்சாட்டினார்.
இந்த புதிய புத்தகத்தில் சொல்லுக்குச் சொல் அப்படியே வெளியிடப்பட்ட உரையாடலின்படி —வெளிப்படையாகவே இது மில்லி அல்லது பெலோசி அல்லது அவ்விருவர் உடனான நேர்காணல்களின் அடிப்படையில் இருக்கிறது— பெலோசி மில்லிக்கு கூறுகையில், தேர்தலில் தோற்றாலும் ஜனாதிபதி பதவியை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியுமென ட்ரம்பை ஊக்குவித்ததில் 'குடியரசுக் கட்சியினரின் கரங்களில் இரத்தம் படிந்துள்ளது' என்றார்.
“ஆனால் அரசின் மற்றொரு பிரிவுக்கு எதிராக படைபலத்தைப் பயன்படுத்திய ஒரு சர்வாதிகாரி நம்மை ஆள்வது நம் நாட்டின் வருந்தத்தக்க அரசு விவகாரமாகும்,” என்று தொடர்ந்து கூறிய அப்பெண்மணி, “அவர் இன்னமும் ஆட்சியில் தான் இருக்கிறார். அவர் கைது செய்யப்பட வேண்டும். அவர் இருக்கும் இடத்திலேயே அவர் கைது செய்யப்பட வேண்டும் … பதவியில் தொடர்வதற்காக நமக்கு எதிராக அவர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியாணை வழங்கியிருந்தார். அவரைப் பதவியிலிருந்து நீக்க ஏதாவது வழி வேண்டும்.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காங்கிரஸ் சபை மீதான ஜனவரி 6 தாக்குதல், அதை அறிந்து கொள்ள வேண்டிய பதவியில் இருந்தவர்களால் —அதாவது, அமெரிக்க இராணுவத் தலைவர் மற்றும் காங்கிரஸ் சபையில் ஜனநாயகக் கட்சியின் தலைவரால்—ட்ரம்ப்-ஆதரவு கூட்டத்தின் ஒரு மிதமிஞ்சிய கலகமாக மட்டுமே பார்க்கப்படவில்லை. அவர்கள் அதை புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதோடு, பதவியைக் கைப்பற்றுவதற்கான ஒரு தீவிர முயற்சியாக, அதாவது தேர்தல் முடிவை அங்கீகரிப்பதை முடக்கி ஜனாதிபதி பதவியைக் களவாட ட்ரம்ப் மற்றும் அவரது உள்வட்டாரங்களது முயற்சியான, பாசிச வன்முறையை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு சதி என்று அவர்கள் புரிந்துகொண்டு, பகிரங்கமாக கலந்துரையாடியிருந்தார்கள்.
வெளியிடப்பட்ட பெலோசியின் கூற்றுகள் குறிப்பாக பளிச்சிடும் வெளிப்பாடுகளாக உள்ளன. அவரின் சொந்த வாழ்க்கையே அச்சுறுத்தப்பட்டு அவரின் பணியாளர்கள் அவருக்குத் தடுப்பரணாக இருந்து அவரை ஒரு கலந்தாய்வு அறைக்கு அழைத்து செல்ல நிர்பந்திக்கப்பட்டு வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஜனவரி 8 இல், அப்போது, அந்த கும்பல் வளாகத்திற்கு வெளியே கூச்சலிட்டுக் கொண்டிருந்த போது செல்போன்களில் உதவிக்காக மன்றாடி அவர் பேசியிருந்தார். ஆகவே அவர் அப்பட்டமாக மூடிமறைக்காமல் ஓர் 'ஆட்சிக்கவிழ்ப்பு சதி' என்றும், ஓர் உடனடி அச்சுறுத்தலை முன்னிறுத்தும் ஒரு 'சர்வாதிகாரி' ஆக இருப்பவர் என்றும் பேசினார்.
பின்னர் ஒரு சில நாட்களிலேயே, பெலோசி முதலாளித்துவ அரசியலின் எப்போதும் கூறப்படும் அதே பல்லவிக்கு மீண்டும் திரும்பினார், தொடர்ச்சியான நாடாளுமன்ற தந்திரங்களில் ஈடுபட்டார் —அதாவது, குற்றவிசாரணை, இது ஜனவரி 6 சம்பவங்கள் மீது ஒரு 'சுதந்திரமான ஆணையம்' ஏற்படுத்தும் தீர்மானத்தை பின்தொடர்ந்து தோல்வியடைந்தது, அந்த ஆணையமும் சம்பவங்களை விசாரிப்பதற்காக ஒரு 'தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின்' நியமனத்தை பின்தொடர்ந்து தோல்வியடைந்தது, அந்தக் குழு துல்லியமாக ஒரேயொரு முறை மட்டுமே கூடியிருந்தது.
பெலோசிக்கு என்னதான் முக்கிய பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றாலும் இந்த மூடிமறைப்பின் உந்துசக்தி அவரில்லை. உத்தரவுகள் வெள்ளை மாளிகையிலிருந்து வருகின்றன, அங்கே ஜனாதிபதி பைடென், அவர் வெளிப்படையாக கூறியதைப் போல, குடியரசுக் கட்சியைப் பலப்படுத்த, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குடியரசுக் கட்சி ஜனநாயகத்தை உடைத்து ட்ரம்பின் சர்வாதிகாரத்தையும் பாசிசக் கொள்கைகளையும் வெளிப்படையாகத் தழுவிய நிலைமைகளின் கீழ் கூட பைடென் இரு கட்சி அமைப்பைப் பாதுகாக்க விரும்புகிறார்.
பைடென் தனது பதவியேற்பு உரையில், அந்த ஜனாதிபதி ஒரு 'கிளர்ச்சியை' தூண்டினார் என்ற உண்மை ஒருபுறமிருக்க, ஜனவரி 6 சம்பவங்களை குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை.
பைடெனின் கொள்கை வெறுமனே பல்வேறு சட்ட துணுக்குகளுக்கு குடியரசுக் கட்சியின் ஆதரவைத் தேடும் விஷயம் அல்ல. அது சாக்குபோக்கு மட்டுந்தான். அவரின் நிஜமான கவலை எல்லாம், அமெரிக்க முதலாளித்துவம் பற்றியதும், ஒரு நூற்றாண்டுக்கு அதிகமாக எதன் மூலமாக அது ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளதோ அந்த அரசியல் அமைப்புமுறை பற்றியதும் ஆகும். குடியரசுக் கட்சி இந்த ஜனநாயகத்தை முறித்து, பகிரங்கமாக ட்ரம்பின் பாசிசவாத அரசியலையும் எதேச்சதிகாரத்தையும் தழுவி வருகின்ற நிலைமைகளின் கீழ் கூட, பைடென் இந்த இரண்டு கட்சி முறையைப் பேண விரும்புகிறார்.
ஜனவரி 6 சம்பவங்களுக்குப் பின்னர் இருந்து, ஒரு வலதுசாரி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும் மற்றும் அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் செய்யப்பட்ட ஒரு முன்னோடியில்லாத முயற்சிக்கு விடையிறுப்பதை விட, ஜனநாயக கட்சியினர் முன்னாள் நியூ யோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவின் வரம்புமீறல்கள் என்று குற்றஞ்சாட்டப்படும் விஷயங்கள் மீது அதிகமாகவே நேரத்தையும் ஆற்றலையும் செலவிட்டுள்ளனர்.
வூட்வார்ட்டின் புத்தகத்தின் புதிய வெளிப்பாடுகள் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி குறித்து உலக சோசலிச வலைத் தளம் கூறிய ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்துகின்றன என்பதோடு, அவை அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) முதல் அமெரிக்க உளவுபார்ப்பு அரசின் முன்னாள் எதிர்ப்பாளர் கிளென் கிரீன்வால்ட் வரை பல்வேறு போலி-இடது குழுக்கள் அன்றைய நாளின் சம்பவங்களை முக்கியத்துவம் இல்லாதவை என்றோ அல்லது வெறுமனே அரசியல் பேரம்பேசல்கள் என்றோ உதறிவிட செய்யும் முயற்சிகளையும் சிதறடிக்கின்றன.
அது தேர்தலைக் கவிழ்ப்பதற்கான ஒரு தீவிர முயற்சியாக இருந்தது, மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட அந்த முயற்சி வெற்றி பெற வாய்ப்பில்லை என்று இராணுவ-உளவுத்துறை எந்திரத்தில் உள்ள தீர்க்கமான அதிகார மையங்கள் தீர்மானித்ததால் மட்டுமே அது தோல்வியுற்றது. ஆனால் தளபதிகள் மற்றும் சிஐஏ இயக்குனர்களின் விருப்பங்களைச் சார்ந்திருக்கும் ஒரு ஜனநாயகம், ஒருபோதும் ஒரு ஜனநாயகமாக இருக்க முடியாது, மாறாக ஒரு சர்வாதிகாரம் காத்துக் கொண்டிருக்கிறது.
ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கின் எந்தவொரு பிரிவின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது என்பதையே ஜனவரி 6 சம்பவங்களும், அதை அடுத்து நடந்த மூடிமறைப்புகளும் எடுத்துக் காட்டுகின்றன. இந்த பணியை, ஒரு பாரிய சோசலிச இயக்கத்தை கட்டமைப்பதன் மூலமாக, தொழிலாள வர்க்கம் கையிலெடுக்க வேண்டும்.
மேலும் படிக்க
- அமெரிக்காவிற்கும் உலகிற்கும் எதிரான சதி: அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் COVID-19 தொற்றுநோய் பற்றிய உண்மையை எவ்வாறு ஒடுக்கின
- குடியரசுக் கட்சியினர் ஜனவரி 6 தாக்குதல் விசாரணையை தடுக்கின்றனர்
- குற்றவிசாரணை காணொளி நாடாளுமன்ற கட்டிடம் மீது ட்ரம்ப் தூண்டிவிட்ட தாக்குதலின் அளவையும் தீவிரத்தையும் எடுத்துக்காட்டுகிறது