முன்னோக்கு

குற்றவிசாரணை காணொளி நாடாளுமன்ற கட்டிடம் மீது ட்ரம்ப் தூண்டிவிட்ட தாக்குதலின் அளவையும் தீவிரத்தையும் எடுத்துக்காட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனநாயகக் கட்சியின் சபை நிர்வாகிகள் 13 நிமிட காணொளியுடன் நேற்று டொனால்ட் ட்ரம்ப் மீதான செனட் சபை விசாரணையைத் தொடங்கினார்கள், அந்த காணொளி ஜனவரி 6, 2021 இல் காங்கிரஸ் சபையின் இரண்டு அவைகளிலும் ஓர் அமர்வு நடந்து கொண்டிருந்த போதே அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் மீது, முன்னொருபோதும் கண்டிராத அளவில், நடத்தப்பட்ட தாக்குதலின் பெரும் அளவையும் தீவிரத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

அந்த காணொளி மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு அதிர்ச்சிகரமாக இருக்கும். இப்போது வரையில், அந்த சம்பவத்தின் காணொளி காட்சிகளில் பெரும்பாலும் மிகவும் வன்முறையான காட்சிகள் நீக்கப்பட்டு துண்டு துண்டாக தான் ஒளிபரப்பப்பட்டு இருந்தன. அந்த தாக்குதலில் ஈடுபட்டிருந்தவர்களின் எண்ணிக்கையும், அந்த கும்பல் நாடாளுமன்றக் கட்டிடத்தை நொறுக்கிய போது அது பயன்படுத்திய தீவிர வன்முறையும், காங்கிரஸ் சபை உறுப்பினர்கள், செனட்டர்கள் மற்றும் துணை ஜனாதிபதியையே கூட வேட்டையாடுவதற்கான அதன் உறுதியான தீர்மானமும் இவை இந்தளவுக்குத் தெளிவாகவும் ஒருமித்த வடிவிலும் இதுவரையில் பொதுமக்கள் முன்னால் கொண்டு வரப்பட்டிருக்கவில்லை.

அனைத்திற்கும் மேலாக, அந்த காணொளி காட்சி ட்ரம்ப் அந்த பாசிசவாத கும்பலைத் தூண்டுவிடுவதற்கும் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறை தாக்குதலுக்கும் இடையிலான நேரடி தொடர்பை அம்பலப்படுத்தியது.

Trump video

ஐந்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இருந்த அந்த கும்பலில், பெரும் எண்ணிக்கையில் இராணுவம், பொலிஸ் மற்றும் அதிவலது ஆயுதமேந்திய குழு உறுப்பினர்களும் உள்ளடங்கி இருந்தனர். அந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குவதற்குத் தயாராக இருந்ததுடன், ட்ரம்புக்கு எதிரானவராக அவர்கள் கருதியவர்களைப் படுகொலை செய்யவும் தயாராக இருந்தனர்.

அந்த காணொளி என்ன நடந்ததோ அதை மிகவும் தெளிவாக விளக்குகிறது. அது நாடாளுமன்ற கட்டிடத்தை நொறுக்குவதற்கு முந்தைய ட்ரம்ப் உரையுடன் தொடங்குகிறது. அவர் "பெருவாரியாக" வெற்றி பெற்றிருப்பதாகவும் தேர்தலில் தில்லுமுல்லு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த பொய்யை மீண்டும் உரைத்து, “நாம் இந்த திருட்டைத் தடுப்போம்!” என்று ட்ரம்ப் அறிவிக்கிறார். “நீங்கள் மோசடியாளர்களுக்கு வாக்களிக்கவில்லை,” என்று கூறும் அவர், “நீங்கள் யாரேனும் ஒரு மோசடியாளரைப் பிடிக்கும் போது, மிகவும் வேறுபட்ட விதிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறீர்கள்,” என்கிறார்.

“நாங்கள் சண்டையிடுவோம், நாங்கள் மிகவும் பயங்கரமாக சண்டையிடுவோம்,” என்று ட்ரம்ப் அச்சுறுத்துகிறார். “நீங்கள் பயங்கரமாக சண்டையிடவில்லை என்றால், உங்களுக்கு இனி ஒரு நாடே இருக்காது.” நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் அணிவகுப்பதே திட்டம் என்று கூறும் அவர், “நம் குடியரசுக் கட்சியினருக்கு வழங்குங்கள் —அவர்கள் பலவீனமானவர்கள் ஏனென்றால் பலமானவர்களுக்கு நம் உதவி தேவைப்படாது— நம் நாட்டை திரும்ப பெறுவதற்கு அவர்களுக்கு அவசியப்படும் ஒருவித கர்வத்தையும் தைரியத்தையும் நாம் வழங்க முயல்வதற்காக செல்கிறோம்" என்கிறார்.

ஆயிரக் கணக்கான அதிவலது ஆயுதக் குழு உறுப்பினர்களும் ட்ரம்ப் ஆதரவாளர்களும் அந்த வளாகத்தைச் சுற்றியிருந்த வலுவற்ற மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பாதுகாப்பை மீறி, வன்முறையாக நாடாளுமன்ற கட்டிடத்தைத் தாக்கும் காட்சிகளில் ட்ரம்பின் கருத்துக்கள் அங்கே இடையிடையே வருகிறது. கூட்டத்தில் தனித்தனியாக சிலர், “கட்டிடத்தைக் கைப்பற்று!”, “திருட்டை நிறுத்து!” “துரோகிகள்!” “ட்ரம்புக்காக போராடுவோம்!” “அமெரிக்கா! அமெரிக்கா!” என்று கூச்சலிடுவதைக் கேட்க முடிகிறது. ஒருவர் சுருக்குக் கயிறு அமைப்பது தெரிகிறது.

இராணுவ பாணியில் உடுப்பணிந்திருந்த பல நபர்களை உள்ளடக்கிய அந்த கும்பல், தடுப்பு தடையரண்களை மீறி, ஜன்னல்களை உடைத்து, கட்டிடத்திற்குள் வெள்ளமென நுழைந்து, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையை நோக்கி தனித்தனியாக முற்றுகையிடுகிறது.

சிலர் நடவடிக்கையை வழிநடத்தியவாறு, கட்டிடத்திற்குள் செல்ல அவர்களை வழிகாட்டுகிறார்கள். நாடாளுமன்ற கட்டிட பொலிஸ் உறுப்பினருக்கு ஒருவர் கூறுகிறார், “நீங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறீர்கள். துரத்தியடிக்க நாங்கள் மில்லியன் கணக்கில் இருக்கிறோம், நாங்கள் ட்ரம்ப் சொல்வதைத் தான் கேட்போம், அவர் தான் உங்கள் எஜமானர்,” என்கிறார். கட்டிடத்திற்குள் இருக்கும் தடைகளைக் கடப்பதற்காக, ஒரு கதவுக்கு மத்தியில் ஒரு பொலிஸ் அதிகாரியை சிக்க வைத்து அழுத்தி, அவர்கள் ஒன்று சேர்ந்து தள்ளும் போது, “நமக்கு புதிய தேசபற்றாளர்கள் முன்பக்கத்திற்கு தேவைப்படுகிறார்கள்!” என்று ஒருவர் கத்துகிறார்.

செனட் சபையில் செனட்டர்கள் உள்ளே இருக்கும் போதே, கிளர்ச்சியாளர்கள் அந்த அவையை நெருங்கி வருகையில், தேர்வுக் குழு வாக்குகளை காங்கிரஸ் சபை அங்கீகரிப்பதற்குத் தலைமை தாங்கி கொண்டிருந்த துணை ஜனாதிபதி மைக் பென்ஸை விமர்சித்து ட்ரம்ப் ஒரு ட்வீட் அனுப்புகிறார். கலகக்காரர்களுடனான ஆயுத மோதலுக்கு மத்தியில், காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்படுகிறார்கள். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே, நமக்கு "30,000 துப்பாக்கிகள்" தேவைப்படுகின்றன என்று ஒருவர் கூறுவதையும், அதற்கு மற்றொருவர், "அடுத்த முறை" என்று பதிலளிப்பதையும் ஒரு போராட்டக்காரர் பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிட முறிப்பு நடவடிக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் —இதற்குள் பிணைக்கைதிகளைப் பிடிப்பதிலும் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது கட்டுப்பாட்டை எடுப்பதிலும் கிளர்ச்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டனர் என்பது தெளிவாகி இருந்த நிலையில்— ட்ரம்ப், "மோசடி தேர்தல்" என்று கண்டித்தும் அதேவேளையில் "தனிச் சிறப்பார்ந்த" கிளர்ச்சியாளர்கள் "வீடு திரும்புமாறு" வலியுறுத்தியும் ஒரு காணொளி வெளியிட்டார்.

ஜனவரி 6 சம்பவங்கள் மீதான இந்த ஆவண ஆதாரத்திலிருந்து சில குறிப்பிட்ட புள்ளிகள் முன்வருகின்றன.

முதலில், இந்த காணொளி ஜனவரி 6 சம்பவங்களின் சீரிய முக்கியத்துவத்தை நலிவடைய செய்வதற்கான ஒவ்வொரு முயற்சியையும் ஒன்றுமில்லாது ஆக்குகிறது. இந்த காணொளி காட்சிகள், அந்த தாக்குதலின் காட்சிப்படுத்தப்பட்ட ஆவணம் என்றளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும், என்ன தெரிகிறதோ அது ஓர் ஓழுங்கமைக்கப்பட்ட ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியாகும். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஜனாதிபதியாலேயே அறிவுறுத்தப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அவரது உரையில் அந்த வலதுசாரி கும்பலுக்கு அவர் தனிப்பட்டரீதியில் தாக்குவதற்கான சமிக்ஞையை அளித்திருந்தார்.

ஜனநாயகக் கட்சியினரின் மட்டுப்படுத்தப்பட்ட நோக்கங்களை மனதில் கொண்டிருக்கும் அந்த ஆவணப்படம் எந்தவொரு பரந்த அரசியல் தீர்மானத்தை எட்டுவதையும் தவிர்க்கின்ற அதேவேளையில், நாடாளுமன்ற கட்டிடம் மீது கட்டுப்பாட்டை எடுப்பதும், தேர்வுக் குழுவில் பைடென் பெரும்பான்மை உறுதி செய்யப்படுவதை முன்கூட்டியே தடுப்பதும், திறமையாக 2020 தேர்தல் முடிவுகளைப் பயனற்றதாக ஆக்குவதும், ட்ரம்பை ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரியாக பதவியில் வைத்திருக்க நிலைமைகளை உருவாக்குவதும் அந்த தாக்குதலின் வெளிப்படையான நோக்கமாக இருந்தது.

நடவடிக்கை எடுக்க சரியான தருணமாக ட்ரம்ப் மற்றும் அவரது சதிகாரர்களால் ஜனவரி 6 ஆம் நாள், தேர்தல் முடிவுகளை உறுதி செய்ய காங்கிரஸ் சபை ஒன்றுகூடிய அந்த நாள், தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த குற்றவிசாரணையின் குற்றச்சாட்டுக்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் பல செனட்டர்களால் ஊக்குவிக்கப்பட்ட, “சீர்குலைக்கப்பட்ட தேர்தல்" என்ற மோசடி குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்தி, அந்த தாக்குதலுக்கு பல மாதங்களாக மிகவும் கவனமாக தயாரிப்பு செய்யப்பட்டிருந்தது.

அந்த தாக்குதலுக்கு சில மணி நேரத்திற்கு முன்னரும் அந்த தாக்குதலின் போதும் என்ன நடந்தது என்பதை அந்த காணொளி உறைய வைக்கும் ஒரு சித்திரத்தை வழங்குகிறது. ஆனால் ஜனநாயகக் கட்சியினரின் விளக்கமோ அந்த தாக்குதலை ஊக்குவித்த அடியிலிருக்கும் அரசியல் மூலோபாயத்தின் மீது எவ்விதத்திலும் கவனம் செலுத்துவதைத் தவிர்த்தது.

அந்த கிளர்ச்சியாளர்கள் காங்கிரஸ் சபையைக் கட்டுப்பாட்டில் எடுப்பதில், பிணைக்கைதிகளை பிடிப்பதிலும் படுகொலை செய்வதிலும், அரசின் சட்டமன்ற பிரிவுகளை அடைப்பதிலும் வெற்றி பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதே அந்த காணொளியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள சம்பவங்களில் இருந்து எழும் கேள்வியாக உள்ளது.

அந்த சதியைக் குறித்த ஒரு விரிவான விசாரணைக்கு அப்பாற்பட்டு, இந்த கேள்விக்கு நிச்சயமாக பதிலளிக்க முடியாது தான். ஆனால் இந்த விளைவுக்குத் தான் ட்ரம்ப் தயாரிப்பு செய்திருந்தார் — செயல்பட்டிருந்தார் என்பது திட்டவட்டமாக உள்ளது. இந்த நோக்கம் கைவரப் பெற்றிருந்தால், அரசின் சட்டமன்ற பிரிவு மீதான அவரின் சொந்த தாக்குதலால் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடியை ட்ரம்ப் நிச்சயமாக சாதகமாக்கி கொண்டிருப்பார்.

அந்த தாக்குதலைத் தூண்டிவிட்ட பின்னர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறி இருந்த ட்ரம்ப், ஓர் அவசரநிலையை அறிவித்து, "முப்படைகளின் தலைமை தளபதி" பதவியில் இருக்கும் அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தி இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. மைக்கல் ஃபிளின் போன்ற உயர்மட்ட ஆலோசகர்கள், அதிகார மாற்றத்தை நிறுத்த முன்னதாக இராணுவச் சட்டத்தை அறிவிக்குமாறு ட்ரம்புக்கு வலியுறுத்தி இருந்தனர். காங்கிரஸ் சபை மூடப்படுவதால் உருவாகும் வெற்றிடத்தில், நடைமுறையளவில் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரம் என்பதே அர்த்தமாக இருந்திருக்கும்.

குடியரசுக் கட்சி அரசியலமைப்புக்கு உட்பட்ட இந்த குற்றவிசாரணையையே கூட இப்போதும் எதிர்ப்பதைப் போல, அப்போது ட்ரம்புக்குப் பின்னால் ஐக்கியப்பட்டு இருந்திருக்கும். வாஷிங்டன் வெற்றியால் ஊக்குவிக்கப்பட்டு, மிச்சிகன், வேர்ஜினியா மற்றும் பென்சில்வேனியா போன்ற மாநிலங்களிலும் அதிவலது ஆயுதக் குழுக்களால் அதேபோன்ற நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். அடிமட்டத்திலிருந்து மக்கள் எதிர்ப்பை தூண்டிவிட்டுவிடும் என்று எதையும் செய்ய பீதியுற்றுள்ள ஜனநாயகக் கட்சியினர் "ஒற்றுமை" மற்றும் "இருக்கட்சிகளது ஒருமனதான சம்மதம்" என்ற பெயரில் சில உடன்பாடுகளை எட்ட முயன்றிருக்கும்.

இந்த குற்றவிசாரணை நடைமுறைகளில், ஏறக்குறைய ஒட்டுமொத்த குடியரசுக் கட்சியுமே (50 செனட்டர்களில் 44 பேர்), ட்ரம்ப் பதவியில் இல்லை என்பதால் இந்த விசாரணை அரசியலமைப்புக்குப் புறம்பானது என்று செவ்வாய்கிழமை ட்ரம்ப்பின் வழக்குரைஞர்களின் அப்பட்டமான அர்த்தமற்ற வாதங்களின் தரப்பில் நின்றனர், இவை முற்றிலும் சட்டத்தின் அடித்தளத்தில் இல்லை.

ஜனவரி 6 சம்பவங்கள் ஓர் அவசர எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். “இது இங்கே நடக்காது" என்ற வரிகள் —அதாவது, பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திலிருந்து காத்துக் கொள்ளும் சுயவலிமை அமெரிக்கா கொண்டுள்ளது என்ற கருத்து— பொய் என்று நிரூபணமாகி உள்ளது. ஒரு பாசிசவாத கிளர்ச்சி ஏற்பட முடியும் என்பது மட்டுமல்ல, மாறாக அது நிகழ்ந்துள்ளது என்பதோடு அது வெற்றி பெறுவதற்கு நெருக்கத்தில் இருந்துள்ளது. அதுவும் இது கடைசி முயற்சியும் அல்ல.

ஜனநாயகக் கட்சியினர், குற்றவிசாரணைக்கான இருகட்சிகளது ஏகமனதான வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சியின் அவர்களது பாசிசவாத "சகாக்களை" அவர்களுடன் இணைய செய்ய சமாதானப்படுத்துவதில் ஒருமுனைப்பட்டுள்ளதைப் பொறுத்த வரையில், அவர்கள் எது இந்த நடைமுறைகளின் முக்கிய நோக்கமோ அதைத் தவிர்த்து வருகின்றனர்: அதாவது, இந்த சதியின் எல்லா முக்கிய அம்சங்களையும் விரிவாக அம்பலப்படுத்துவதை, அனைத்திற்கும் மேலாக, அதனை ஒழுங்கமைத்தவர்கள் யார், அதை திட்டமிடுவதில் ஏதோவொரு மட்டத்தில் பங்கெடுத்தவர்கள் யார், அதன் நோக்கங்கள் என்ன என்பனவற்றை தவிர்த்து வருகின்றனர். செனட் வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும், ட்ரம்ப் மீதும் மற்றும் அவரின் சக-சதிகாரர்கள் அனைவர் மீதும் குற்றவியல் வழக்கு தொடுத்து அவர்களைக் கைது செய்வதற்கான பாதையைத் தெளிவுபடுத்தும் உண்மைகளை வெளிப்படுத்துவதே இந்த சட்ட நடைமுறைகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

Loading