அரசாங்கத்துக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களை நிராகரிப்போம்! நடவடிக்கை குழுக்களை அமைத்து ஊதிய போராட்டத்தை முன்கொண்டு செல்வோம்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்களும் அதிபர்களும் ஏறக்குறைய இரண்டு மாத காலமாக முன்னெடுத்துச் சென்ற வேலைநிறுத்தத்தை ஒரு தீர்க்கமான இடத்துக்கு கொண்டுவந்து, ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட 'அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின்' அடிப்படையில் அரசாங்கம் கடந்த வாரம் தனது முடிவை அறிவித்தது.

அதன்படி, முதல் தர ஆசிரியர்களுக்காக கோரப்பட்ட 31,000 ரூபாய் மாத ஊதிய உயர்வுக்கு பதிலாக 11,000 ரூபாய் மட்டுமே அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிகிறது. தரம் 3-1 ஆசிரியருக்கான மாதாந்த சம்பள அதிகரிப்பு 5,000 ரூபா ஆகும். ஏனைய தரங்களுக்கான அதிகரிப்புகளும், அதே போல் அதற்கு ஏற்ப குறைக்கப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்ட அதிகரிப்பும் நான்கு கட்டங்களிலேயே நடைமுறைக்கு வரும். அதன்படி, நவம்பர் பாதீட்டில், முதலாம் தரத்திற்கும் 3-1 தரத்தினருக்கும் சம்பளம் முறையே ரூபா 2,750 மற்றும் ரூபா 1,250 மட்டுமே அதிகரிக்கப்படும்.

5 ஏப்ரல் 2021 அன்று பதுளையில் ஆசிரியர்கள் நடத்திய போராட்டம்

துரிதமாக உயரும் வாழ்க்கைச் செலவை கொஞ்சமாவது சமாளிக்க கூட போதாத இந்த அற்ப ஊதிய உயர்வை நிராகரித்து, ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவதில் உறுதியாக இருப்பதை அவர்களினது சமூக ஊடக பதிவுகள் வெளிப்படுத்துகின்றன,

இந்த சூழ்நிலையில், ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கங்களின் தலைமையில் இந்தப் போராட்டத்தை முன் கொண்டு செல்ல முடியுமா? அதை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஏற்ற வேலைத் திட்டம் அவர்களிடம் உள்ளதா? இல்லையெனில், என்ன செய்ய வேண்டும்? ஆகிய விடயங்கள் குறித்து நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டிய ஒரு நிலைக்கு வந்துள்ளோம்.

'நாடு' கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், ஆசிரியர்கள் கோருகின்ற ஊதிய உயர்வு 'தற்போது' நிறைவேற்ற கூடியதல்ல என்று அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவருகின்றது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, 'நாடு' பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருப்பதை தாங்களும் ஒப்புக் கொள்வதாக கூறிய தொழிற்சங்கங்கள், அவர்கள் கோரும் ஊதிய உயர்வை ஒரு 'கொள்கையாக' ஏற்றுக்கொண்டு, அதை பகுதி பகுதியாகவேனும் அமல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டன.

இலங்கை ஆசிரியர் சங்கம், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்த ஐக்கிய ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களால் உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் அரசாங்கம், ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைகளை ஒரு 'கொள்கையாக' ஏற்றுக்கொள்வதாகவும், தமது அமைச்சரவையானது பிரேரிக்கப்பட்ட ஊதிய உயர்வை நான்கு கட்டங்களில் செயல்படுத்த உள்ளதாகவும் கூறிக்கொள்கின்றது.

அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஆசிரியர்களின் மத்தியில் எழுந்த எதிர்ப்புக்கு மத்தியில், தொழிற்சங்கங்கள் இப்போது அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வை ஒரே தடவையில் கொடுக்குமாறு கோருகின்றன. இது ஆசிரியர்களின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட ஊதிய கோரிக்கை கோரிக்கையை கைவிட்டு, ஊதிய உயர்வுக்கான அரசாங்கத்தின் வாக்குறுதியைத் தழுவிக்கொண்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும்.

ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, தனது பிரேரணையை தொழிற்சங்கங்களால் ஒரு 'வெற்றியாக' சித்தரிக்கப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நம்பியே அரசாங்கம் இந்த சிறிய தொகையைக் கூட தருவதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மத்தியில் வளர்ந்த எதிர்ப்பின் மத்தியில், தொழிற்சங்கங்களால் அதைச் செய்ய முடியாமல் போனது. தொழிற்சங்கத் தலைவர்கள், இப்போது ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் நோக்கம் அவர்களிடம் இருந்து கிடைக்கும் ஏதாவதொரு போலி வாக்குறுதியை வெற்றியாக தூக்கிப் பிடித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதே ஆகும்.

இல்லையென்றால், தீர்வு இல்லாமல் வேலைநிறுத்தம் தொடர்வதற்கு இடம் கொடுத்து, அரசாங்கமும் முதலாளித்துவ ஊடகங்களும் தொடர்ந்து முன்னெடுக்கும் பிற்போக்கு பிரச்சாரத்தின் அழுத்தத்தின் கீழ் ஆசிரியர்களை களைப்படையச் செய்து வேலைநிறுத்தத்தை கலைத்துவிடுவதை தவிர, வேறு மாற்று வழி தொழிற்சங்கங்களுக்கு கிடையாது.

தாங்கமுடியாத வாழ்க்கைச் செலவு மற்றும் வேலைச்சுமை காரணமாக ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபமானது, தொற்றுநோய் சம்பந்தமாக இராஜபக்ஷ அரசாங்கம் பின்பற்றும் கொலைகாரத்தனமான கொள்கையால் மேலும் தீவிரமாகி, வெடித்துச் சிதறும் நிலையை அண்மிக்கும் சூழ்நிலையில், தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்த வேலைநிறுத்ததுக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுத்தது.

ஆனால், வேலைநிறுத்தம் இவ்வளவு தூரம் செல்லும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் எதிர்பாக்கவில்லை. 24 வருட காலமாக இந்த ஊதியக் கோரிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் முன்னெடுத்த ஒவ்வொரு போராட்டத்திலும் செய்ததைப் போலவே, அரசாங்கத்தின் ஒரு போலி வாக்குறுதியுடன் போராட்டம் விரைவில் முடிவடையும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கணக்குப் போட்டனர். ஆனால், இரண்டு காரணங்களால் இதுவரை அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.

முதலாவதாக, கடுமையான பொருளாதார அழுத்தத்தில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், இந்த சிறிய அதிகரிப்பை ஏற்க தயாராக இல்லை.

இரண்டாவது, தொற்றுநோயால் உக்கிரமாக்கப்பட்ட ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள அரசாங்கம் தற்போது வாக்குறுதி கொடுத்துள்ள மிகச்சிறிய தொகையை மிஞ்சிய ஒரு 'வாக்குறுதியை' பெற்றுக்கொள்ளக் கூட தொழிற்சங்கங்களுக்கு சாத்தியப்படவில்லை. ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய உயர்வு கூட, ஏனைய துறைகளில் உள்ள தொழிலாளர்களை போராட்டங்களில் இறங்க ஊக்குவிக்கும் என்று அரசாங்கம் பீதியடைந்துள்ளது.

இந்த நிலையில், வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் ஆசிரியர்கள் மீது எல்லாவகையிலும் அழுத்ததை அதிகரித்துள்ளது. நவம்பர் பாதீட்டில் சம்பளத்தை அதிகரிக்கும் வரை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த மாதாந்த கொடுப்பனவான 5,000 ரூபாயை, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கொடுக்கப் போவதில்லை என்று அரசாங்கம் சமீபத்தில் அச்சுறுத்தியது.

அத்தோடு, போராட்டத்தில் முன்னணியில் உள்ள ஆசிரியர்களுக்கு எதிரான வேட்டையாடல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்-அதிபர் ஊதியப் போரட்டத்தின் போது, 'பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட இடங்கள் மற்றும் திகதிகள், மற்றும் அவற்றை ஏற்பாடு செய்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள்' பற்றிய அறிக்கையை விரைவில் வழங்குமாறு அனைத்துப் பிரதேச செயலாளர்களுக்கும் பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது.

ஆசிரியர்களை மிரட்டி வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சிக்கு சமாந்தரமாக, அரசாங்கம் ஆசிரியர்களுக்கு எதிராக ஏனைய பொதுமக்களைத் தூண்டி விடும் பிரச்சாரத்தைத் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆசிரியர் போராட்டத்தின் விளைவாக தொற்றுநோய் பரவுவது துரிதப்படுத்தப்பட்டதாகவும், இணையவழி கற்பித்தலை கைவிடுவதன் மூலம் பிள்ளைகளின் கல்வியை சீர்குலைப்பதாகவும், மேலும் நாடு ஒரு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள சூழ்நிலையில், தமது வயிற்றை மாத்திரம் நிரப்பிக்கொள்ளும் நோக்கில் 'ஒரு இறாத்தல் இறைச்சியை' கேட்டுக்கொண்டிருப்பதாக, அரசாங்கத்தின் அமைச்சர்கள், ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டிவருகின்றனர். முதலாளித்துவ ஊடகங்களும் அதற்கு முழு ஆதரவை அளித்து வருகின்றன.

இந்த சூழலில், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, கொண்டிருக்கும் உறுதிப்பாடு மாத்திரம் போதாது என்பதையும், அது ஒரு நிச்சயமான அரசியல் வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமது போராட்டம் உட்பட சர்வதேசத் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் அத்தியாவசியப் படிப்பினைகளை கிரகித்துக்கொள்ளாமல் அத்தகைய வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியாது.

முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் ஊடாக, தமது கோரிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதே, சம்பள உயர்வு கோரி இலங்கை ஆசிரியர்களும், தொற்றுநோய்க்கு மத்தியில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஆசிரியர்களும், சிறந்த தொழில் நிலைமைகள் மற்றும் அதிக ஊதியத்தை கோரி உலகெங்கிலும் உள்ள சுகாதார பணியாளர்களும் முன்னெடுத்து செல்லும் போராட்டங்களினதும் வேலைநிறுத்தங்களின் அனுபவமாகும்.

முதலாளித்துவ அரசாங்கங்களினதும் முதலாளித்துவ எஜமானர்களினதும் நலன்களுக்காக வேலை செய்யும் உலகெங்கிலும் உள்ள தொழிற்சங்கங்கள் பிற்போக்கு கருவிகளாக மாறியுள்ளதையும் அந்த தொழிற்சங்கங்கள் தங்கள் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்ற உண்மையை உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.

தொற்றுநோய் பேரழிவுகரமாக பரவும் சூழ்நிலையில், இராஜபக்ஷ அரசாங்கம் பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் திறந்து தொழிலாளர்களை வேலைக்கு தள்ளும் நிலையில், தொழிற்றசங்கங்கள் முதலாளிகளுடனும் அரசாங்கத்துடனும் சேர்ந்து தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்க உடந்தையாக செயற்பட்டன.

அது மட்டுமன்றி, மில்லியனுக்கும் அதிகமான அரசாங்க ஊழியர்களை பாதிக்கும் கொடூரமான 'அத்தியாவசிய பொது சேவை' உத்தரவை விதித்துள்ள போதிலும், ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதை மௌனமாக ஆதரிக்கின்றன.

பாடசாலை மீண்டும் திறந்து சிறுவர்களின் உயிரைத் பலிகொடுக்கும் அமெரிக்காவில் பைடன் நிர்வாகத்தின் கொலைகார கொள்கைக்கு சார்பாக, அமெரிக்க ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரான ராண்டி வெய்ன்கார்டன், வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார். வெய்ங்கார்டனைப் போலவே, இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களும், தொற்றுநோய்க்கு மத்தியில் ஜனாதிபதி இராஜபக்ஷவின் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஆதரவளித்தன.

இந்த அனுபவங்களினதும் படிப்பினையினதும் முடிவு என்னவென்றால், ஆசிரியர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் தங்கள் உரிமைகளுக்காகப் போராட ஒரு புதிய வேலைத்திட்டமும் ஒரு புதிய அமைப்பு வடிவமும் அவசியம் என்பதாகும்.

ஆசிரியர் சம்பள குறைப்பு உட்பட அனைத்து தாக்குதல்களினதும் தோற்றுவாய் உலக முதலாளித்துவ நெருக்கடியே ஆகும். எனவே, இந்த தாக்குதல்களுக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவ அரசு மற்றும் முழு முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டமாகும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டமான இதற்கு, தொழிற்சங்கங்கள் முற்றிலும் எதிரானவை ஆகும். ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை இனிமேலும் தொழிற்சங்கங்களின் கைகளில் விட்டுவைக்காமல், உடனடியாக அதை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். இதற்காக, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான புதிய அமைப்பு வடிவங்களாக, ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு நடவடிக்கை குழுக்களை உருவாக்குவது அவசியமாகும். எங்களது குழு அதற்கு ஒரு முன் உதாரணமாகும்.

ஒவ்வொரு பாடசாலை சூழலிலும் இதுபோன்ற குழுக்களை அமைக்க அனைத்து ஆசிரியர்களும் முன்வர வேண்டும். அத்தோடு, அந்த கமிட்டிகளைச் சூழ, இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் அவசியத்தை உணர்ந்துள்ள பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய தொழிலாள வர்க்க ஒடுக்கப்பட்டவர்களையும் அணிதிரட்டிக்கொள்ளப் போராடுமாறும், நாங்கள் அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்டுக்கொள்கிறோம். போராட்டத்திற்கு எதிரான அரசாங்க அடக்குமுறை மற்றும் பிற்போக்கு பிரச்சாரத்தில் இருந்து ஆசிரியர்களின் ஊதியப் போராட்டத்தைப் பாதுகாக்க, ஏனைய தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்டவும் இந்தக் குழு போராட வேண்டும்.

'ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யும் இலங்கை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஒரு வேலைத் திட்டம்' என்ற தலைப்பில், 27 ஜூலை 2021 அன்று எங்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டிய கோரிக்கைகளை நாங்கள் இவ்வாறு முன்வைத்தோம்:

  • வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஒரு ஆசிரியரின் குறைந்தபட்ச மாதச் சம்பளத்தை 60,000 ரூபாயாக அதிகரி!
  • ஒவ்வொரு ஆசிரியருக்கும் முழு ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய்!
  • பொது கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை ஒதுக்கு!
  • அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இலவச கணினி மற்றும் இணையவழி வசதிகளை வழங்கு!
  • குறைந்த வட்டியில் போதுமான வீட்டுக் கடன் வசதிகளை வழங்கு!

நாங்கள் அதில் பின்வருமாறு கூறினோம்:

“தனியார் சொத்து மற்றும் இலாபத்தின் அடிப்படையிலான முதலாளித்துவ முறைமையின் கீழ் இந்த நியாயமான கோரிக்கைகளில் எதனையும் நிறைவேற்ற முடியாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இராஜபக்ஷ அரசாங்கத்தின் தலைமையிலான இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியை, சோசலிச பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தால் பதிலீடு செய்வதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும். இது உலக முதலாளித்துவ இலாப முறைமையும் ஒழிப்பதற்கான, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.”

தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் ஒரு சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்பி இந்த போராட்டத்தை முன் கொண்டு செல்வதற்காக, ஆசிரியர், மாணவர், பெற்றோர் பாதுகாப்பு நடவடிக்கை குழுக்களுடன் இணைந்து கொள்ளுமாறு நாங்கள் அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

Loading