மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜேர்மன் இரயில்வே துறை (Deutsche Bahn, DB) பணியமர்த்திய இரயில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் வேலைநிறுத்தம் முழு தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமைக்கு தகுதியானதாகும்.
இந்த வேலைநிறுத்தம், இரயில்வே நிர்வாகத்திற்கு வருமானம் தொடர்ந்து கிடைத்தாலும், அதன் பங்குச்சந்தை மதிப்பு உயர்ந்து கொண்டிருந்தாலும், கோவிட்-19 நெருக்கடிக்கு இரயில்வே பணிக்குழுவினர் விலை கொடுக்க வேண்டுமா என்பது பற்றி நடக்கிறது. பணவீக்கம் 5 சதவீதத்தை நெருங்கினாலும் கூட, ஜேர்மன் இரயில்வே துறை நடப்பு ஆண்டுக்கு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டாம் என தீர்மானித்துள்ளது. இதன் பொருள் உண்மையான ஊதியங்களில் பாரிய வெட்டுக்கள் இருக்கும் என்பதாகும்.
உண்மையில், மிக அடிப்படையான பிரச்சினை ஆபத்தில் உள்ளது. ஜேர்மனியில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் பெருவணிகங்கள் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து நிலைமைகள் மற்றும் உரிமைகள் மீதான முன்னணி தாக்குதலுக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்றை பயன்படுத்துகின்றன. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் கெர்ஹார்ட் ஷ்ரோடர் (Gerhard Schroder) தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம், சமூக விரோத ஹார்ட்ஸ் IV சட்டங்கள், குறைந்த ஊதியங்கள், ஓய்வூதிய வெட்டுக்கள், மற்றும் பணக்காரர்களுக்கான பாரிய வரி வெட்டுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதன் “2010 திட்டநிரலை” திணித்தது, இந்நிலையில் தற்போதைய அரசாங்கமும், பெரு வணிகங்களும் தங்கள் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளன. அதாவது, பங்குச்சந்தை ஏற்றத்திற்கு எரியூட்டுவதற்கும், ஏற்கனவே அவர்களிடம் உள்ள பெரும் செல்வத்தை மேலும் பெருக்குவதற்கும் மற்றும் புதிய போர்களுக்கு நிதியளிப்பதற்கும் இந்த கொள்கையை அவர்கள் அத்தியாவசியமானது என கருதுகிறார்கள்.
கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மனித உயிர்கள் வெறும் செலவுக் காரணியாகக் கருதப்படுகின்றன. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், வருடத்திற்கு 50,000 கோவிட்-19 இறப்புக்கள் நிகழ்வது “ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டம் தான்,” என்றும், ஒரு கோவிட் நோயாளியை காப்பாற்ற 30,000 பவுண்டுகளுக்கு அதிகமாக செலவாகாது என்றும் முடித்த செலவு மிச்சப்படுத்தும் பகுப்பாய்வை (cost-benefit analysis) உருவாக்கிய ஏனைய விடயங்கள் பற்றிய அவரது கருத்துக்களைப் போல இதுபற்றியும் உரக்க கருத்து தெரிவித்துவிட்டார். அடிமைகள் கூட ஒரு காலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்டனர்!
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கோவிட்-19 ஆல் ஜேர்மனியில் 93,000 மக்களும், உலகளவில் 4.5 மில்லியன் மக்களும் இறந்துள்ளனர், காரணம் உலகளவிலான ஆளும் உயரடுக்குகள் கடுமையான பூட்டுதல்களையும், மற்றும் சில வாரங்களில் தொற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடிய ஏனைய நடவடிக்கைகளையும் விதிக்க மறுத்துவிட்டன. ஜேர்மன் அரசாங்கத்தையடுத்து, ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய மத்திய வங்கியும் பெருவணிகங்கள் மற்றும் வங்கிகளுக்கு டிரில்லியன் கணக்கில் நிதியுதவி செய்தன. மேலும், இலாபங்களின் பெருக்கத்தை உறுதிசெய்ய தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை மீண்டும் அவசரமாக திறந்தன.
பணக்காரர்களைப் பொறுத்தவரை, தொற்றுநோய் ஒரு இலாபகரமான வணிகமாகும். 2020 தொற்றுநோய் ஆண்டில் ஜேர்மனியில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 107 இல் இருந்து 136 ஆக அதிகரித்து, அவர்களது சொத்து வளங்களின் மதிப்பு 447 பில்லியன் டாலரில் இருந்து 625 பில்லியன் டாலராக உயர்வு கண்டது. இந்த சுய-செல்வப் பெருக்க விளையாட்டிற்கு தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை தொடர்ந்து தீவிரப்படுத்துவது அவசியமாகிறது.
இரயில்வே, பொது போக்குவரத்து, மருத்துவமனைகள், பொதியிடுதல் மற்றும் விநியோக சேவைகள் அல்லது வாகனம் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்கள் எதுவாயினும், மாற்றுப் பணிகளும் கூடுதல் வேலை நேரமும் வாழ்க்கையை சகித்துக்கொள்ள முடியாததாக்குவதால் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கோபமாக உள்ளனர். வேலையின்மைக்கான மற்றும் முதுமையில் வறுமை அதிகரிப்பதற்கான சாத்தியமுள்ள அதேவேளை ஊதிய நிலைகள் வீழ்ச்சியடைகின்றன. இந்நிலையில், மீண்டும் போராட்டத்தில் இறங்க தொழிலாளர்கள் வழி தேடுகிறார்கள்.
அதனால் தான் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதியினர் இரயில்வே வேலைநிறுத்தம் சிரமத்தை ஏற்படுத்தினாலும் அதனை வரவேற்கின்றனர், அதேவேளை இரயில்வே துறையின் சலுகைக்கும் இரயில் ஒட்டுநர்கள் சங்கத்தின் (GDL) கோரிக்கைக்கும் இடையில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை என்றாலும், இரயில்வே துறை ஏன் இந்தளவிற்கு ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொள்கிறது என்பதாலும் வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. இரயில்வே துறையின் தலைவர் ரிச்சார்ட் லூட்ஸ் (Richard Lutz), இரயில்வே துறையை தன்வசம் வைத்துள்ள ஜேர்மன் அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் இரக்கமற்றமுறையில் கையாளுகின்றார். அவர்கள் இரயில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை உதாரணமாக்கவும், ஏனைய பிரிவுகளின் தொழிலாளர்கள் இவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதை தடுக்கவும் விரும்புகிறார்கள்.
பல பணியிடங்களிலும் நிறுவனங்களிலும் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இரயில்வே வேலைநிறுத்தத்தின் இரண்டாவது சுற்றுக்கு மத்தியில், பேர்லினில் சீமன்ஸ் தொழிலாளர்கள் வேலை வெட்டுக்களை எதிர்ப்பதுடன், மருத்துவமனைகளில் சகித்துக்கொள்ள முடியாத வேலை நிலைமைகளை எதிர்த்து செவிலியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில், வாகன உதிரிப் பாகங்கள் விநியோகஸ்தர்களான வொல்வோ டிரக்ஸ் மற்றும் டேனா நிறுவனத் தொழிலாளர்கள், ஏற்கனவே உருவாக்கிய சுயாதீன நடவடிக்கை குழுவைக் கொண்டிருந்தாலும், தொழிற்சங்கங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத ஒப்பந்தங்களை பெருமளவில் நிராகரித்தனர். இதேபோன்ற போராட்டங்கள் பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கின்றன.
இரயில் ஓட்டுநர்கள் இரயில்வே நிர்வாகத்தையும் அரசாங்கத்தையும் மட்டுமல்லாது, தொழிற்சங்கங்களையும் எதிர்த்துப் போராடுகிறார்கள். ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் (DGB) தலைவர் ரைய்னர் ஹொஃப்மான் (Reiner Hoffmann) உம் மற்றும் இரயில் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் (EVG) தலைவர் கிளவுஸ்-டீட்டர் ஹோமெல் (Klaus-Dieter Hommel) உம், இரயில் ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தை மறைமுகமாக தாக்கியுள்ளனர். தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக தொழிலாளர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை நிறுத்திவிட்டன. அவர்கள் வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து அடக்கும் இணை மேலாளர்களாகவும், நிறுவன போலீஸ் அதிகாரிகளாகவும் மாறிவிட்டனர். இது EVG, இரயில்வே நிறுவன தொழிற்சங்கத்திற்கு மட்டுமல்லாமல், ஏனைய அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் பொருந்தும்.
இரயில் ஓட்டுநர் சங்கம் GDL உம் இதற்கு விதிவிலக்கல்ல. இரயில்வேயின் நிதிய மறுசீரமைப்பு இரயில் ஓட்டுநர்களின் செலவில் மேற்கொள்ளப்படுவதால் அவர்கள் சலித்துவிட்ட நிலையில், GDL இன் தலைவர் கிளவுஸ் வெசெல்ஸ்கி (Claus Weselsky) பெரும் அழுத்தத்தில் உள்ளார். அதே நேரத்தில், பணியிடத்தில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கத்தை மட்டுமே அனுமதிக்கும் கூட்டு பேரம் பேசும் ஐக்கியம் (Collective Bargaining Unity) குறித்த பிற்போக்குத்தன சட்டம் GDL இன் இருப்பை அச்சுறுத்துகிறது. ஆயினும்கூட, வெசெல்ஸ்கியின் மீது நம்பிக்கை வைப்பது ஆபத்தான மாயையாகவே இருக்கும்.
ஏனைய அனைத்து தொழிற்சங்கங்களைப் போல, GDL உம், “சமூக கூட்டாண்மை,” என்ற, அதாவது நிறுவனத்தின் நலன்களை பாதுகாக்கும் ஜேர்மன் அமைப்புக்கு உறுதியளித்துள்ளது. வெசெல்ஸ்கி கூட ஜேர்மன் சான்சிலரின் கட்சியான கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) ஒரு உறுப்பினராவார். உண்மையான ஊதிய வெட்டுக்களை விளைவித்த, மற்றும் மேலதிக தொழில்துறை நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் இரயில்வே ஊழியர்களை தடுத்த அழுகிப்போன சமரசங்களுடன் அனைத்து முன்னைய பேரம் பேசுதல்களையும் வெசெல்ஸ்கி முடித்துவிட்டார். GDL இன் தற்போதைய கோரிக்கையும் பணவீக்கத்தை சரிசெய்வதில் தவறியது.
எல்லாவற்றிற்கும் மேலாக, GDL, வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவதற்கு முற்றிலும் அவசியமான பரந்த அணிதிரட்டலை நிராகரிக்கிறது. GDL அழைப்புவிடுத்த தனிப்பட்ட வேலைநிறுத்தங்களின் வரையறுக்கப்பட்ட காலப்பகுதி, இரயில்வே துறை அனுசரித்து சரியான நேரத்தில் எதிர்வினையாற்றுவதை எளிதாக்குகிறது. தற்போதைய வேலைநிறுத்தம், இரண்டு நாட்கள் நடந்த முதல் இரண்டு வேலைநிறுத்தங்கள் போலல்லாமல், செப்டம்பர் 2 முதல் 6 வரை ஐந்து நாட்கள் நீடிக்கும் என்பதே உண்மை.
காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் மட்டுமே எதிர் தரப்பை அதற்கு மண்டியிட வைக்க முடியும் என்பதை தொழிலாளர் இயக்கத்தின் முழு வரலாறும் காட்டுகிறது. இருப்பினும், வெசெல்ஸ்கி அத்தகைய ஒரு தெரிவை திட்டவட்டமாக நிராகரிக்கிறார். “இரயில்வே அமைப்பில் காலவரையற்ற தொழில்துறை நடவடிக்கை பற்றி ஒருபோதும் நான் பேசவில்லை,” என்று Frankfurter Allgemeine Zeitung செய்தியிதழுக்கு அவர் தெரிவித்தார்.
பரந்தளவில் தொழிலாளர்களிடம் முறையிடுவதற்குப் பதிலாக, GDL சார்ந்திருக்கும் வலதுசாரி ஜேர்மன் பொது சேவை கூட்டமைப்பை (German Civil Service Federation) வெசெல்ஸ்கி நம்பியுள்ளார். அவர் ஜேர்மன் காவல்துறை சங்கத்தின் பிற்போக்குத் தலைவர் ரெய்னர் வென்ட்டை (Rainer Wendt), GDL வேலைநிறுத்தப் பேரணிக்கு விருந்தினர் பேச்சாளராக அழைத்திருந்தார். இரயில்வே துறைக்குள், ஓட்டுநர்களுக்கும், மற்றும் வெசெல்ஸ்கியின் கருத்துப்படி வேலைகள் குறைக்கப்படவுள்ள நிர்வாக ஊழியர்களுக்கும் இடையே GDL பிளவை ஏற்படுத்துகிறது.
இரயில்வே நிர்வாகத்தின் மற்றும் ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்த, தொழிற்சங்கங்கள், மற்றும் பணியிடங்களில் உள்ள அவர்களது அதிகாரிகளிடமிருந்து சுயாதீனமான போராட்டத்திற்கான புதிய அமைப்புக்கள், அதாவது தொழிலாளர்களுக்கு கட்டுப்பட்ட மற்றும் அவர்களுக்கு மட்டுமே பொறுப்பாளியாகவுள்ள நடவடிக்கை குழுக்கள் கட்டமைக்கப்பட வேண்டும்.
இந்த குழுக்கள், தொழிலாளர்களுக்கு தகவல்களை வழங்க வேண்டும், ஜனநாயக ரீதியாக கோரிக்கைகளை முடிவு செய்ய வேண்டும், போராட்டத்திற்கான ஒரு மூலோபாயத்தை உருவாக்க வேண்டும் மற்றும் பணி நிலைமைகள் மற்றும் கூட்டு ஒப்பந்தங்கள் தொடர்புபட்ட பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிட வேண்டும். மேலும், அவற்றை தேசியளவிலான வலையமைப்பாக உருவாக்கி, மற்ற நாடுகள் மற்றும் துறைகள் சார்ந்த தொழிலாளர்களுடனான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), “சர்வதேச அளவில் தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் உள்ள தொழிலாளர்களின் சுயாதீனமான, ஜனநாயக அடிப்படையிலான மற்றும் போர்க்குணமிக்க புதிய வடிவிலான சாமானிய தொழிலாளர் அமைப்புகளுக்கான கட்டமைப்பை உருவாக்க” நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியை (International Workers Alliance of Action Committees) கட்டமைக்க ஏப்ரலில் அழைப்புவிடுக்கத் தொடங்கியது.
அறிக்கை இதுபற்றி பின்வருமாறு தெரிவிக்கிறது: “ICFI உம் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும், உலகளாவிய பேரழிவிற்கு பொறுப்பாளியாகவுள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசாங்கங்களின் கொலைகார கொள்கைகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர் தாக்குதலை தொடங்கவும் வளர்க்கவும் இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றன.”
அமெரிக்காவில் வொல்வோ டிரக்ஸ் மற்றும் டேனா நிறுவனங்களில் உள்ளது போல, தற்போது ஏராளமாக உள்ள சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்கள் தொழிற்சங்கங்களின் சரணடைவிற்கு எதிராக தொழிலாளர்களை வெற்றிகரமாக அணிதிரட்டியுள்ளன.
தொழிலாளர்கள் குழுக்களின் ஒரு வலையமைப்பை கட்டமைப்பதானது, தொழிலாளர்கள் நலன்களை பரிந்துரைப்பதற்கான ஒரு புதிய கட்சி கட்டமைக்கப்படுவதற்கு மாற்றாகாது. தீவிர நடைமுறை நடவடிக்கைகளுக்கு வேலைத்திட்டமும் கோட்பாடுகளும் அவசியம். குறிப்பாக ஜேர்மனி இந்த விஷயத்தில் ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. ஜேர்மனியில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கு முன்னதாக 19 ஆம் நூற்றாண்டில் சமூக ஜனநாயகக் கட்சியை உருவாக்கிவிட்டனர், மேலும் அதே சமயத்தில் SPD மார்க்சிசத்தின் பதாகையின் கீழ் சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடிக் கொண்டிருந்தது.
இன்று, இரயில் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் ஒவ்வொரு திருப்பத்திலும் அரசியல் பணிகளை எதிர்கொள்கின்றனர். இன்றைய SPD மற்றும் இடது கட்சி உட்பட, ஜேர்மன் பாராளுமன்றத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வேலைநிறுத்தத்தை கடுமையாக எதிர்க்கின்றன. இடது கட்சியின் முன்னணி தேர்தல் வேட்பாளர் டீட்மார் பார்ட்ஷ், வேலைநிறுத்தத்தில் தலையிட்டு அதனை முடிவுக்குக் கொண்டுவர சான்சிலர் அங்கேலா மேர்க்கெலுக்கு அழைப்புவிடுத்துள்ளார். “மூன்றாவது வேலைநிறுத்தம் முற்றிலும் நியாயமற்றது,” என்று DPA செய்தி முகமைக்கு அவர் தெரிவித்தார். மேலும், “சான்சிலர் வேலைநிறுத்தத்தை தடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்ற இரயில் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும். தொற்றுநோய் காரணங்களுடன், இந்த நாடகம் முடிந்துவிட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
சோசலிச சமத்துவக் கட்சி (SGP), ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்திற்காக போராட தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய பாரிய கட்சியை கட்டமைக்க வேண்டி கூட்டாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. “வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை அபகரித்து அவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தால் தவிர எந்த சமூக பிரச்சினையையும் தீர்க்க முடியாது,” என்று எங்கள் தேர்தல் திட்டம் கூறுகிறது.
வேலைநிறுத்தம் செய்யும் இரயில்வே தொழிலாளர்களையும் மற்றும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை, கொலைகார உத்தியோகபூர்வ நோய்தொற்று கொள்கை மற்றும் இராணுவவாதத்திற்கு திரும்புவது ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத அனைவரையும், சோசலிச சமத்துவக் கட்சியை தொடர்பு கொண்டு, சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது பற்றி விவாதிக்க நாங்கள் அழைப்புவிடுக்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளியுங்கள், மேலும் அதன் உறுப்பினராகுங்கள்!