மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியமை, ஜனாதிபதி அஷ்ரப் கானி மற்றும் ஆப்கான் இராணுவத்தின் தலைமையிலான கைப்பாவை அரசாங்கம் சீட்டுக்கட்டு வீடு போல் சரிந்தது மட்டுமல்லாமல், ஜேர்மனியின் போருக்குப் பின்னைய இராணுவம் (Bundeswehr) நடத்திய மிக நீண்ட, மிகப்பெரிய மற்றும் பெரும் செலவிலான இராணுவப் பணியை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட பொய்களின் பெருங்குவியலையும் வெடிக்கச் செய்துள்ளது.
20 ஆண்டுகளாக, அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் மற்றும் நாட்டின் அடிமைத்தனமான ஊடகங்களும், ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் இராணுவம் இருப்பது கிணறுகளைத் தோண்டவும், பெண்கள் பள்ளிக்குச் செல்ல உதவவும் மற்றும் தேசத்தை கட்டமைக்க ஊக்குவிக்கவும் தான் என்று ஜேர்மன் பொதுமக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில், ஆப்கானியப் போர் என்பது ஆரம்பத்திலிருந்தே படுகொலைகள், சித்திரவதை, குற்றம் மற்றும் ஊழல் என அனைத்து களங்கங்களும் நிறைந்த ஒரு காலனித்துவப் போராகவே இருந்து வருகிறது.
பாக்ராம் நாட்டின் மிகப்பெரிய அமெரிக்க விமானப்படை தளம் மட்டுமல்ல, மாறாக உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் கைதிகளை விசாரணை செய்து குவாண்டனாமோவுக்கு மாற்றும் ஒரு சிறை மற்றும் சித்திரவதை மையமாகவும் அது செயல்படுகிறது. தாலிபான்கள் காபூல் நகரை கைப்பற்றியபோது காபூலின் இரண்டு சிறைச்சாலைகளில் மட்டும் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10,000 க்கு நெருக்கமான அரசியல் கைதிகளை அவர்கள் விடுவித்தனர்.
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கிட்டத்தட்ட 165,000 ஆப்கானியர்கள் போரின் போது கொல்லப்பட்டுள்ளனர். உண்மையான எண்ணிக்கை அநேகமாக பல மடங்கு அதிகமாகும். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்க விமானங்கள் பொழிந்த குண்டு மழையில் இறந்தனர். 130 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஏராளமான குழந்தைகளின் உயிர்களைப் பறித்த மிகப்பெரிய படுகொலை சம்பவத்திற்கு, செப்டம்பர் 4, 2009 அன்று ஜேர்மன் இராணுவ அதிகாரியான கர்னல் ஜியோர்க் க்ளீன் குண்டூஸூக்கு அருகே உத்தரவிட்டார்.
நாட்டின் வடக்கே ஜேர்மன் இராணுவம் நுழைவதற்கு முன்னரே, மேற்கத்திய சக்திகளின் கூட்டாளியான அப்துல் ரஷித் தோஸ்தம், 3,000 முதல் 8,000 க்கு இடைப்பட்ட கைப்பற்றப்பட்ட தாலிபான் போராளிகளைக் கொன்றார். அவர்கள் சார்டீன் மீன்களை அடைத்துவைப்பதைப்போல கொள்கலன்களில் அடைத்து பிழியப்பட்டனர், அதில் அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை, அதிக வெப்பம் மற்றும் தாகம் ஆகியவற்றால் ஏற்பட்ட வேதனையால் இறந்தனர். இந்த கடும் சோதனையிலிருந்து தப்பியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேற்கத்திய சக்திகளால் நிறுவப்பட்ட, தாங்கிப்பிடிக்கப்பட்ட மற்றும் பில்லியன் கணக்கில் நிதியுதவி வழங்கப்பட்ட ஹமீத் கர்சாய் மற்றும் அஸ்ரப் கானியின் ஆப்கான் அரசாங்கங்கள் கூட, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள ஏனைய ஏகாதிபத்திய கைப்பாவை ஆட்சிகளைப் போலவே, மிருகத்தனமாகவும், இரக்கமற்றும் மற்றும் ஊழல் நிறைந்ததாகவும் இருந்தன.
2019 இல் கசியவிடப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் உள் ஆவணங்களான ஆப்கானிஸ்தான் ஆவணங்கள், ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க நிதியுதவியில் 40 சதவீதம் ஊழல் அதிகாரிகள், போர் தளபதிகள் மற்றும் குற்றவாளிகளின் பைகளுக்கு சென்றுவிட்டதாக மதிப்பிடுகிறது. தஜிகிஸ்தானுக்கான ஆப்கான் தூதர் முகமது ஜாகிர் அக்பரின் கூற்றுப்படி, ஜனாதிபதி கானி கடந்த வாரம் நாட்டை விட்டு தப்பித்தபோது 169 மில்லியன் டாலர் ரொக்கத்தை தன்வசம் கொண்டிருந்தார்.
ஏகாதிபத்திய துருப்புக்கள் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் அதிவேக வீழ்ச்சிக்கு இதுவே காரணமாகும். கானியின் போலியான ஜனநாயக ஆட்சிக்கு காபூலின் குறுகிய நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தின் ஒரு அடுக்கினது தவிர, எந்தவித சமூக ஆதரவும் அதற்கு இல்லை. ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மை மக்களுக்கு, அவரது ஆட்சியும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பும் பூமியில் நரகத்தை உருவாக்கியிருந்தது.
ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸூம் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் “நாங்கள் நிலைமையை தவறாக மதிப்பிட்டோம்,” என்று இப்போது அறிவித்துள்ளதன் பொருள், அவர்கள் தங்கள் சொந்த பிரச்சாரத்தை தீவிரமாக நம்பிய அதேவேளை சமூக யதார்த்தத்தை கவனிக்க முற்றிலும் தவறிவிட்டனர். உண்மையில், போரின் உண்மையான நோக்கம் பற்றி பேர்லினில் கூட ஒருபோதும் சிறு சந்தேகம் எழவில்லை.
ஆப்கானிஸ்தானைத் தாக்கி தாலிபான் ஆட்சியை தூக்கியெறிவதற்கான ஒரு சாக்குப்போக்காக செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களை அமெரிக்கா பயன்படுத்தியபோது, அது நீண்ட காலத்திற்கு முன்னரே தயாரிக்கப்பட்ட செயல் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருந்தது. உண்மையில், சோவியத் ஒன்றிய வீழ்ச்சியைத் தொடர்ந்து அமெரிக்காவின் உத்தி, புவிசார் அரசியல் மற்றும் எரிசக்தி வழங்கல் தொடர்புபட்ட அசாதாரண முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி மீது ஆதிக்கம் செலுத்துவது குறித்து இருந்தது.
“ஆப்கானிஸ்தானைத் தாக்கி, ஒரு வாடிக்கையாளர் ஆட்சியை அமைத்து, அப்பிராந்தியத்திற்கு பரந்த இராணுவப் படைகளை அனுப்புவதற்கான அமெரிக்காவின் நோக்கம், அங்கு ஒரு புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கி அதற்குள் தனது மேலாதிக்கக் கட்டுப்பாட்டைச் செலுத்துவதாகும்,” என்று போர் தொடங்கி மூன்று நாட்களில் “நாங்கள் ஏன் ஆப்கானிஸ்தானில் போரை எதிர்க்கிறோம்? என்ற அறிக்கையில் WSWS எழுதியது.
ஜேர்மன் ஏகாதிபத்தியத்தால் இதிலிருந்து ஒதுங்கி நிற்க முடியாது அல்லது நிற்காது. 1991 இல் நிகழ்ந்த ஜேர்மன் ஒன்றிணைவிற்குப் பின்னர், ஜேர்மன் அதன் பொருளாதார நலன்களை முன்னிட்டு மீண்டும் ஒரு உலகளாவிய அரசியல் மற்றும் இராணுவப் பாத்திரத்தை எவ்வாறு வகிக்க முடியும் என்பது பற்றி முன்னணி அரசியல் மற்றும் இராணுவ வட்டாரங்களில் தீவிர விவாதங்கள் நடைபெற்றன. 1999 ஆம் ஆண்டில், சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக் கட்சியும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னைய முதல் வெளிநாட்டு போர் பணியை நடத்த யூகோஸ்லாவியாவுக்கு தமது இராணுவத்தை அனுப்பின. பின்னர் உலகின் மிக முக்கியமான புவிசார் மூலோபாய பிராந்தியங்களில் ஒன்றில் காலூன்ற ஜேர்மனிக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர் தொடங்கி நான்கு நாட்களுக்குப் பின்னர், அக்டோபர் 11, 2001 அன்று, சமூக ஜனநாயகக் கட்சி சான்சிலர் கெர்ஹார்ட் ஷ்ரோடர் (Gerhard Schroder) ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை மறுசீரமைப்பு பற்றி ஜேர்மன் பாராளுமன்றத்தில் (Bundestag) அறிவித்தார். அந்த காலகட்டத்தில், “இரண்டாம் நிலை உதவி” மூலம் “சுதந்திரம், நீதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச முயற்சிகளில்” ஜேர்மனி பங்கேற்றிருந்த காலம் “சீர்செய்ய முடியாத நிலையில் முடிந்துவிட்டது,” என்று அவர் அறிவித்தார். மேலும், “ஜேர்மனியர்களான நாம் குறிப்பாக … இப்போது நமது புதிய பொறுப்புக்கு முழு நீதியைச் செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்பதையும் இது வெளிப்படையாக உள்ளடக்கியது என்பதை நான் சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறேன்” என்றும் கூறினார்.
ஒரு மாதத்திற்குப் பின்னர், “சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான” போராட்டத்திற்கு 3,900 ஜேர்மன் இராணுவ சிப்பாய்களை வழங்க அதிகபட்ச பெரும்பான்மையுடன் ஜேர்மன் பாராளுமன்றம் முடிவு செய்தது. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை கட்சி போன்ற ஆளும் கட்சிகளுக்கு மேலதிகமாக, அங்கேலா மேர்க்கெல் தலைமையிலான பழமைவாத எதிர்க்கட்சி கூட ஆப்கானிஸ்தான் பணிக்கு ஆதரவாக வாக்களித்தது.
வெளியுறவுக் கொள்கை நோக்கங்களுக்கு கூடுதலாக, இந்த தலையீடு உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்கும் உதவியது. பல தசாப்தங்களாக போரைத் தவிர்த்ததைத் தொடர்ந்து, போர்களத்தில் கொலை செய்வதற்கும் இறப்பதற்கும் ஜேர்மன் படையினர் மீண்டும் பயன்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, அதேவேளை மிகப்பரந்த மக்கள்தொகை அதன் ஆழமான, வரலாற்று ரீதியாக வேரூன்றிய இராணுவ எதிர்ப்புவாதத்தை முறியடித்து, போர் பணிகளில் ஆர்வமுள்ளதாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
அப்போதிருந்து, ஆப்கானிஸ்தானில் 150,000 க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஜேர்மன் இராணுவப் படையினர் தீ ஞானஸ்நானம் பெற்றனர், இதில் 59 பேர் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் மற்றும் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில், இந்த பணி வலதுசாரி தீவிரவாத போக்குகளுக்கான உற்பத்தி தளமாக மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பின்னணி நடவடிக்கைகளில் ஈடுபட்ட, சிறப்புப் படை கட்டளையில் (Special Forces Command-KSK) தீவிர வலதுசாரி கூறுகளின் செல்வாக்கு முடிந்தளவிற்கு வெளிப்படுகையில், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் அன்னெக்ரெட் க்ராம்ப்-காரன்பவர் (Annegret Kramp-Karrenbauer) நான்கு KSK நிறுவனங்களில் ஒன்றைக் கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தோல்வி ஜேர்மன் இராணுவவாதத்திற்கு விழுந்த பெரும் அடியாகும். “பாதுகாப்பு கொள்கை நலன்களை அமல்படுத்துவதற்காக ஏற்கனவே சமாதானப் போக்கைக் கொண்ட ஜேர்மனியர்கள் இராணுவ ரீதியாக வலிமை வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்க விருப்பம் கொண்டமை, கடந்த சில நாட்களாக அவர்களது நன்மதிப்பு மீதான பார்வையை மேலும் கீழ்ப்படுத்துகிறது,” என்று வலதுசாரி Neue Zurcher Zeitung செய்தி ஊடகம் குறை கூறியது.
எவ்வாறாயினும், இது ஜேர்மன் ஆளும் வர்க்கம் அதன் இராணுவத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தடுக்காது. மேலும் இது தீவிர வலது ஜேர்மனிக்கான மாற்றீட்டுக் கட்சியையும், போரை எதிர்ப்பவர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளையும் முன்னெப்போதையும் விட அதிகமாக நம்பியிருக்கும். ஆகஸ்ட் 31 அன்று ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பும் படையிரை கௌரவிக்கும் உத்தியோகபூர்வ விழாவின் போது அரசாங்க மாவட்டம் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களுக்கும் விளம்பர தட்டிகள் தொங்கவிடுவதற்கும் தடை விதிப்பதற்கான பேர்லின் காவல்துறையின் திட்டங்கள் ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.
பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து கட்சிகளும் இராணுவவாதத்திற்கு ஆதரவளிக்கின்றன. தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆப்கானிஸ்தான் தோல்வி குறித்து அவை ஒன்றையொன்று குற்றம் சாட்டினாலும், அவற்றில் எந்தவொரு கட்சியும் போரின் குற்றவியல் தன்மையை கண்டிக்கவில்லை. கூட்டாட்சி மட்டத்தில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை கட்சியால் கூட்டணி கட்சியாக இடது கட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதானால், ஜேர்மன் இராணுவத்தின் போர் பணிகளை ஆதரிக்கும் அதன் விருப்பத்தை நீண்ட காலமாக சமிக்ஞை செய்து வந்துள்ள அதற்கும் இது பொருந்தும்.
சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மட்டுமே இராணுவவாதம் மற்றும் போரை திட்டவட்டமாக நிராகரிக்கும் ஒரே கட்சியாக உள்ளதுடன், அதன் மூலகாரணமான முதலாளித்துவத்தை அகற்றும் நோக்கில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் கூட்டாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது.