மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜனாதிபதி ஜோ பைடெனால் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவிற்கு அகதிகளின் ஓட்டத்தைத் தடுப்பதற்கான தனது நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு தலைமை தாங்க, கமலா ஹாரிஸ் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லைக்கான தனது முதல் பயணத்தில் டெக்சாஸின் எல் பாசோவுக்கு வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார்.
பைடென்-ஹாரிஸ் அரசாங்கத்தால் குழந்தைகளை பெருமளவில் சிறையில் அடைப்பது உட்பட, அடுத்தடுத்த நிர்வாகங்களால் புலம்பெயர்ந்தோர் கொடூரமாகவும் மற்றும் சட்டவிரோதமாகவும் நடத்தப்பட்டதை விவரிக்கும் இரண்டு முக்கிய அறிக்கைகள் கடந்த வாரம் வெளிவந்ததை தொடர்ந்து இந்த விஜயம் நிகழ்ந்தது. எல் பாசோவுக்கான அவரது பயணம் ஒரு "புலம்பெயர்ந்தோர் படையெடுப்பு" பற்றிய குடியரசுக் கட்சியின் கிளர்ச்சியை திசைதிருப்புவதற்கும், அதே நேரத்தில் ட்ரம்ப்பின் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளுக்கும் தற்போதைய நிர்வாகத்தின் கொள்கைகளுக்கும் இடையிலான தொடர்ச்சியை மூடிமறைப்பதற்குமான ஒரு புகைப்படத்திற்கு காட்சியளிக்கும் தேர்வாகும்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் அலெஹான்ட்ரோ மயோர்காஸ், செனட்டர் டிக் டர்பின் (இல்லினோய் ஜனநாயகக் கட்சி) மற்றும் பிரதிநிதி வெரோனிகா எஸ்கோபார் (டெக்சாஸ் ஜனநாயகக் கட்சி) ஆகியோருடன் இணைந்து, ஹாரிஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பதில்களில் வழக்கமான அற்பமான கருத்துக்களைத் தெரிவித்தார். பைடென் நிர்வாகம் "ஒரு கடினமான நிலைமையுடனான" முன்னைய நிர்வாகத்தின் பணியை பொறுப்பெடுத்துக்கொண்டபோதிலும் பெரும் “முன்னேற்றம்” கண்டதாகக் கூறினார்.
எல்லைக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்தது என்ற கேள்வியை நேர்த்தியாக ஒதுக்கி வைத்து, ஹாரிஸ் தான் பல முறை (துணைத் தலைவராக இல்லாவிட்டாலும்) “எப்போதும் இங்கு வருவதுதான் திட்டமாக” இருந்தது என்றும் கூறினார்.
அவரது வருகை ஒரு அமெரிக்க எல்லை ரோந்து செயலாக்க மையத்திற்கான ஒரு சுருக்கமான வருகையை உள்ளடக்கியது. அங்கு ஐந்து இளம் புலம்பெயர்ந்த சிறுமிகளை அங்கு சந்தித்தார். மெக்ஸிகன் நகரமான ஜூரெஸிலிருந்து பாசோ டெல் நோர்டே துறைமுக நுழைவாயிலில் ஒரு நிறுத்தமும்; அமெரிக்க சுங்க மற்றும் எல்லை ரோந்து எல் பாசோ துறையின் செயல் துணைத் தலைவரான வால்டர் ஸ்லோசருடனான சந்திப்பும், மற்றும் புலம்பெயர்ந்த வக்கீல்களுடன் ஒரு விவாதம் இதில் உள்ளடங்கியிருந்தது.
புலம்பெயர்ந்த சிறுமிகளிடமிருந்து தான் கேட்ட கதைகள் குடியேற்றத்தின் "மூல காரணங்களில்" கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாக ஹாரிஸ் இழிந்த முறையில் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த மாத தொடக்கத்தில் புலம்பெயர்ந்தோரின் மகளான ஹாரிஸ், குவாத்தமாலா மற்றும் மெக்ஸிகோவுக்குச் சென்று அதன் ஜனாதிபதிகளைச் சந்தித்து வறுமை, பொலிஸ் மற்றும் கும்பல்களின் கொலைகளில் இருந்து தப்பித்து அமெரிக்காவில் உள்ள தங்கள் குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைய முற்படும் மத்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோரின் வருகையை ஒடுக்குவதற்கு தங்கள் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துவதை அதிகரிக்குமாறு கோரினார்.
இவ்வளவு உயர்மட்ட அரசு விஜயத்தில் வாஷிங்டனைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண்மணியும் மற்றும் முதல் ஆபிரிக்க / ஆசிய-அமெரிக்கர் என்று கூறப்பட்ட ஹாரிஸ், அமெரிக்காவில் தஞ்சம் கோரும் மத்திய அமெரிக்க குடியேறியவர்களிடம், “அங்கு வர வேண்டாம்… நீங்கள் எங்கள் எல்லைக்கு வந்தால், நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள் என கூறினார். ”மீண்டும், எல் பாஸோவில், ஹாரிஸ் தனது குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளின் துர்நாற்றத்தை தணிக்க அடையாள அரசியலைப் பயன்படுத்த முயன்றார். தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த சிறுமிகளுடனான தனது கருத்துபரிமாற்றங்களைப் பற்றி பேசுகையில், "நீங்கள் முதல் பெண் துணை ஜனாதிபதியானது எப்படி?" என அவர்கள் கேட்டதாக தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் தனது கலந்துரையாடல்கள் “குடியேற்றம் பற்றிய பிரச்சினையை ஒரு அரசியல் பிரச்சினையாகக் குறைத்துவிட முடியாது என்பதற்கான ஒரு முக்கியமான நினைவூட்டலாக செயல்பட்டன என்றார். நாங்கள் குழந்தைகளைப் பற்றி பேசுகிறோம், நாங்கள் குடும்பங்களைப் பற்றி பேசுகிறோம், துன்பத்தைப் பற்றி பேசுகிறோம்." என்றார்.
பைடெனினதும் ட்ரம்ப்பினதும் நிர்வாகங்களுக்கும் இடையில் ஒரு கோடு வரைய முயற்சித்த அவர், “எல் பாசோவில் தான் முந்தைய நிர்வாகத்தின் குழந்தைகளைப் பிரிக்கும் கொள்கை செயல்படுத்தப்பட்டது” என்று அறிவித்தார்.
இங்கே இந்த பாசாங்குத்தனத்தின் மட்டத்தை வார்த்தைகளில் கூறுவது கடினமாகும்.
பைடென் நிர்வாகத்தின் கடந்த சில மாதங்களில், அமெரிக்காவிற்குள் செல்ல முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளது. மே மாதத்தில், சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு (CBP) 180,000 வருகைகளைப் பதிவு செய்தது. இது 2000 மார்ச் மாதத்திற்குப் பின்னர் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
திருப்பி அனுப்பபடாதவர்கள் ஒபாமா நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தடுப்புக்காவல் முறைக்கு உட்படுத்தப்பட்டு, ட்ரம்ப் நிர்வாகத்தால் வளர்க்கப்பட்டு, இப்போது பைடென் நிர்வாகத்தால் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த வார தொடக்கத்தில் கலிபோர்னியா கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் வாக்குமூலங்கள் மற்றும் தடுப்பு மையங்களில் உண்ணாவிரதங்களுக்கு குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க அமைப்பின் (ICE) பிரதிபலிப்பு குறித்த அமெரிக்க சமூக உரிமைகள் அமைப்பின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளதுபோல், இந்த நடைமுறைக்கு, சட்டபூர்வதன்மைக்கோ அல்லது அடிப்படை மனிதநேயத்திற்கோ எவ்வித இடமும் இல்லை.
பெற்றோரின் ஆதரவற்ற சிறுவயதினர் நெரிசலான கூண்டுகளில் அடைக்கப்பட்டு, உண்ணக்கூடிய உணவு, குடிநீர் மற்றும் சுத்தமான உடைகள் போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகிறார்கள். சட்ட சேவைகளுக்கான அணுகல் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பு ஆகியவற்றை பற்றி குறிப்பிடவோ தேவையில்லை.
வயது வந்தோருக்கான புகலிடம் கோருவோர் இதைவிடச் சிறந்ததல்ல. தடுத்துவைக்கப்பட்டவர்கள் தங்களது மோசமான சிரமங்கள் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சித்திரவதைகளுக்கு ஈடான கட்டாய-உணவு ஊட்டும் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
எல் பாசோவிற்கு ஹாரிஸின் வருகை முதன்மையாக, பைடென் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளின் "பலவீனம்" குறித்து குடியரசுக் கட்சியின் விமர்சனங்களுக்கும் மற்றும் இன்னும் கடுமையான கைது மற்றும் நாடுகடத்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் கோருவதற்கும் பதிலளிக்கும் விதமாக இடம்பெற்றுள்ளது. டெக்சாஸின் எல்லை நகரமான மெக்காலனுக்கு முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஒரு திட்டமிட்ட பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அவரது வருகை வந்தது என்பது தற்செயல் நிகழ்வு அல்ல.
எல் பாஸோவிற்கான விஜயமானது அரசியல் ரீதியாக நோக்கத்தால் உந்தப்பட்டதாகும். முன்னாள் ஒபாமா நிர்வாக அதிகாரி Politico விடம் கூறியது போல், “இது பிரவுன்ஸ்வில் பகுதி அல்லது அரிசோனா பகுதியின் சில பகுதிகளை விட மிகவும் பாதுகாப்பான இடமாகும். எனவே, எல்லை பாதுகாப்பானது என்பதை நீங்கள் காட்ட முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் எல் பாசோவுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.”
பைடெனின் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் (HHS) அனுசரணையில் திட்டமிட்ட முறைகேடு நடத்தப்படுவதால், சமீபத்தில் செய்திகளில் வந்துள்ள ஆயிரக்கணக்கான ஆதரவற்ற சிறார்களைக் கொண்ட டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் பிளிஸ் கூடார நகரத்தை பார்வையிட வேண்டாம் என்று ஹாரிஸ் முடிவு செய்தார்.
துணை ஜனாதிபதியின் எல்லைக்கான பயணத்தின் போது, அவரது பத்திரிகை செயலாளர் சிமோன் சாண்டர்ஸ் செய்தியாளர்களிடம், “நிர்வாகம் ஃபோர்ட் பிளிஸ் இன் நிலைமையை மிகவும் கவனத்திற்கு எடுத்து வருகிறது. மிகமிக கவனத்திற்கு எடுத்துள்ளது.” இந்த இராணுவ தளம் குறித்து "முழுமையான விசாரணை செய்ய" HHS செயலாளர் சேவியர் பெக்கெராவுக்கு அறிவுறுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், சில மணி நேரங்களுக்குள், வெள்ளை மாளிகை பின்வாங்கியது. ஒரு செய்தித் தொடர்பாளர் ஃபோர்ட் பிளிஸ் இன் நிலைமைகள் ஏற்கனவே மேம்பட்டுள்ளதாகவும், "HHS ஏற்கனவே இவ்விடத்தை தாமாகவே கவனித்து வருகிறது" என்றும் கூறினார். செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், "எந்த நேரத்திலும் வெள்ளை மாளிகை இந்த இடத்தை பற்றி விசாரிக்க பரிந்துரைக்கவில்லை." என்றார்.
பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் கொள்கைகளைப் பின்பற்றும் எவருக்கும் இவ்வாறாக பின்வாங்குவது ஆச்சரியமாக இருக்காது. ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வேறுபட்டது என்ற அதன் அனைத்து கூற்றுக்களும், கடந்த மாதங்களில் பயங்கரமான விதத்தில் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
மனித இழப்பை பொருட்படுத்தாமல் கோவிட் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி பொருளாதாரத்தை மீண்டும் திறக்க உறுதிபூண்டுள்ள ஒரு நிர்வாகம், Title 42 ஐப் பயன்படுத்துகிறது. இது ட்ரம்ப் நிர்வாகத்தால் தொற்றுநோய்களின் ஆபத்துக்களை மேற்கோள் காட்டி, முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தெளிவற்ற விதிமுறையாகும், அதன் கீழ் அவநம்பிக்கையான அகதிகளுக்கு தஞ்சம் கோருவதற்கான உரிமையை மறுப்பதுடன், இதன் மூலம் தென்மேற்கு எல்லையைத் நோக்கி அபாயகரமான பயணத்தை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறது.
மேலும் படிக்க
- கமலா ஹாரீஸின் புலம்பெயர்வு-விரோத பயணம்: ஏகாதிபத்திய சேவையில் அடையாள அரசியல்
- தெற்கு அமெரிக்க எல்லையில் நிரம்பி வழிகின்ற முகாம்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
- பைடென் புலம்பெயர்ந்தோர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடங்குகிறார்
- தென் அமெரிக்க நாடுகள் அகதிகளுக்கு எதிராக எல்லைகளை இராணுவமயமாக்குகின்றன