மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வார இறுதியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கைப்பாவை அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, ஊடகங்களையும் அரசியல் ஸ்தாபகத்தையும் இந்த கேள்வி பீடித்திருந்தது: காபூலில் ஆட்சியின் மிக விரைவான வீழ்ச்சியால் அவர்கள் இந்தளவிற்கு கேவலமான வகையில் “பாதுகாப்பற்றதாகியது” எப்படி?
இந்த கேள்விக்கான பதிலுக்கு ஊடகங்களின் பங்களிப்புடன் ஒரு பெரும் தொடர்பு உள்ளது. முதலாளித்துவ ஊடகங்களின் பாரம்பரிய செயல்பாடுகளில் ஒன்று பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பது மட்டுமல்லாமல், ஆளும் வர்க்கத்திற்கும் தெரிவிப்பதாகும். இருப்பினும், அமெரிக்க ஊடகங்கள் முற்றிலும் அரசு பிரச்சார எந்திரமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த செயல்பாட்டில், ஆளும் வர்க்கம் ஏமாற்றுவதற்காக மட்டுமல்லாமல், சுய-ஏமாற்றத்திற்கும் ஒரு கருவியை உருவாக்கியுள்ளது. என்றாலும், ஏமாற்றுபவர்கள் தான் ஏமாற்றமடைந்தனர்.
வியட்நாம் போரிலிருந்து ஆளும் வர்க்கம் கற்றுக்கொண்ட ஒரு முக்கிய பாடம் “கட்டுக்கதைகளை கட்டுப்படுத்த” வேண்டும் என்பதே, அதாவது ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதாகும். போரின் கொடூரமான யதார்த்தத்தைப் பற்றிய ஊடக அறிக்கைகள் பொதுமக்கள் கருத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன. மேலும் 1968 டெட் தாக்குதலுக்கு (Tet Offensive) பின்னர் CBS செய்தி ஊடகத்தின் செய்தித் தொகுப்பாளர் வால்டர் க்ரோன்கைட் (Walter Cronkite) உட்பட ஒரு சில முக்கிய ஊடகவியலாளர்கள் போருக்கு எதிராக வெளிப்படையாக பேசினர்.
ஆளும் வர்க்கம் மோசமான செய்திகள், அதாவது உண்மைகள் பரவுவதை தன்னால் கட்டுப்படுத்த முடிந்தால், அது தனது ஏகாதிபத்திய நடவடிக்கைகளின் விளைவை சரிசெய்துகொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தது. 1991 இல் ஈராக்கிற்கு எதிராக நடந்த வளைகுடாப் போர் இந்த செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க கட்டத்தைக் குறித்தது, அப்போது, முதல் புஷ் நிர்வாகத்தின் பிரச்சாரத்தை ஊடகங்கள் கடமையுடன் ஒப்பித்தன. அமெரிக்க வெடிகுண்டுகளால் ஏற்பட்ட பேரழிவு பற்றி செய்தி வெளியிட்ட ஒரேயொரு ஊடகவியலாளரான CNN நிருபர் பீட்டர் ஆர்நெட் (Peter Arnett) சதாம் உசேனின் கருவி என வெள்ளை மாளிகையால் கண்டனம் செய்யப்பட்டார். 1999 ஆம் ஆண்டில், “Operation Tailwind” பற்றிய ஆர்நெட்டின் அறிக்கை குறித்து ஒரு அவதூறு உருவாக்கப்பட்டு வலையமைப்பிலிருந்து அவர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
ஜோர்ஜ் புஷ் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் போருக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின்னர் ஊடகங்கள் இராணுவத்தின் ஊதுகுழலாக மாற்றப்படுவது வெளிப்படையானது. CBS செய்தி ஊடகத்தின் முன்னணி செய்தித் தொகுப்பாளர் டான் ராதர் (Dan Rather), “ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதி. அவர் தான் முடிவுகளை எடுக்கிறார். மேலும் ஒரு அமெரிக்கராக என்னை எங்கு வரிசைப்படுத்த விரும்புகிறாரோ அதன்படி அவர் எனக்கு அழைப்பு விடுப்பார்” என்று செப்டம்பர் 17 அன்று அவர் அறிவித்தபோது, அரசுக்கு முன்னால் ஊடகங்களின் கோழைத்தனமான சரணாகதியை சுருக்கமாகக் கூறினார்.
அக்டோபர் 2001 பிற்பகுதியில், போர் தொடங்கி மூன்று வாரங்களுக்குப் பின்னர், CNN தலைவர் வால்டர் இசாக்ஸன் (Walter Isaacson), செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு “பொறுப்பாளிகளான பயங்கரவாதிகளுக்கு தாலிபான்கள் எவ்வாறு அடைக்கலம் அளித்துள்ளனர் என்பது பற்றிய” அறிக்கைகளுடன் அமெரிக்க போர் விமானங்களால் ஏற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு பற்றிய அறிக்கைகளை “சமன்செய்து பார்க்க” வலையமைப்பின் சர்வதேச நிருபர்களுக்கு உத்தரவிடும் ஒரு குறிப்பாணையை அனுப்பினார். அந்த நேரத்தில் அவர் வாஷிங்டன் போஸ்ட்டிடம் “ஆப்கானிஸ்தானில் ஏற்படும் உயிரிழப்புகள் அல்லது கொடூரங்கள் குறித்து அதிக கவனம் செலுத்துவது விபரீதமாக தெரிகிறது” என்று கூறினார்.
“அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த செப்டம்பர் 11 தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு தாலிபான் ஆட்சி தொடர்ந்து அடைக்கலம் அளித்து வந்தபோதிலும், ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழப்புக்களை குறைக்க முயற்சிப்பதாக பென்டகன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது” போல, CNN இன் “தரநிலைகள் மற்றும் நடைமுறைகளின் தலைமை பிரிவு” அதன் அனைத்து செய்தித் தொகுப்பாளர்களும் போரை நியாயப்படுத்தும் தங்களது அறிக்கைகளில் குறிப்பிட்ட மொழி நடையை உள்ளடக்குவதை பரிந்துரைத்தது.
இது 20 ஆண்டு கால ஆக்கிரமிப்பின் போது ஒட்டுமொத்த ஊடகங்களுக்கும் “தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை” நிர்ணயித்தது. நவம்பர் 2001 இல் மசார்-இ-ஷெரீஃப் அருகே அமெரிக்க ஆதரவு போர்படைகளால் ஆயிரக்கணக்கான கைதிகள் சித்திரவதை மற்றும் படுகொலை செய்யப்பட்டது உட்பட, போரின் ஆரம்பகட்டங்களுடன் தொடர்புபட்ட கொடூரமான கொடுமைகளை இது மூடிமறைத்தது. மேலும், அமெரிக்க குண்டுகள் மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களால் ஏற்பட்ட தொடர்ச்சியான பேரழிவு, “ஜனநாயக” அரசாங்கத்தை வழிநடத்திய பல்வேறு அமெரிக்க பினாமிகளின் கணிக்க முடியாத ஊழல் மற்றும் குற்றம் ஆகியவை பற்றி கடந்த இரண்டு தசாப்தங்களாக பெரிதும் அறிவிக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் தொடங்கப்பட்டது, 2003 இல் ஈராக் மீதான படையெடுப்புடன் அதிகரிக்கப்பட்டது. இராணுவ பிரிவுகளுடன் சுமார் 700 ஊடகவியலாளர்கள் தங்கியிருந்தது தொடங்கி, “இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட நிருபர்களை” நிறுவனமயமாக்குவதில் இராணுவமும் ஊடகங்களும் நேரடியாக ஒத்துழைத்தன. இந்த திட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கமளித்து, அமெரிக்க கடல் சார் சைனியப் பிரிவின் லெப்டினன்ட் கர்னல் ரிக் லோங் (Rick Long) அப்போது, “போரில் வெற்றி பெறுவதே நமது வேலை. அதன் ஒரு பகுதியாக தகவல் போர் உள்ளது. எனவே தகவல் சூழல் மீது ஆதிக்கம் செலுத்த நாம் முயற்சிக்கப் போகிறோம்” என்று கூறினார்.
ஈராக் படையெடுப்புக்கு முன்னர், “பேரழிவுகர ஆயுதங்கள்” பற்றிய அரசாங்கத்தின் பொய்களை மறுபரிசீலனை செய்வதன் மூலம் போரை விற்பதில் ஊடகங்கள் பங்கேற்றன. படையெடுப்பின் போது, “விடுவிக்கப்பட்ட” மகிழ்ச்சியில் திளைத்த ஈராக்கியர்கள் பற்றி விவரிக்கும் பிரச்சாரத்தை இது முறையாக வழங்கியது. மேலும் படையெடுப்புக்குப் பின்னரும் மற்றும் ஆக்கிரமிப்பின் போதும், செல்சியா மானிங் மற்றும் விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் ஜூலியன் அசான்ஜ் உட்பட, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அம்பலப்படுத்த முயன்றவர்களை அரசு துன்புறுத்துவதற்கு இது உதவியது. முழு செயல்முறையிலும், உத்தியோகபூர்வ “விவாதத்திற்கான” கட்டமைப்பிலிருந்து பரவலான போர் எதிர்ப்பு உணர்வை விலக்க இது வேலை செய்தது.
(2017 இல் சிரியாவில் ட்ரம்ப் நடத்திய வான்வழித் தாக்குதல்களின் போது “நமது ஆயுதங்களின் அழகை” கண்டு அவர் வியந்ததாகக் கூறிய) வொல்ஃப் பிளிட்சர் (Wolf Blitzer), மார்த்தா ராடாட்ஸ் (Martha Raddatz), ஆண்ட்ரியா மிட்செல் (Andrea Mitchell), பிரையன் வில்லியம்ஸ் (Brian Williams) போன்றவர்களும், மற்றும் ஏராளமானோர் உட்பட, கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் போருக்கு உற்சாகமளித்த அதே மக்கள், இப்போது அது உருவாக்கிய தோல்வி குறித்து கருத்து தெரிவிக்கும் பொறுப்பில் உள்ளனர்.
நல்ல சம்பளம் பெறும் இந்த “ஊடகவியலாளர்கள்” எவரும் முதலில் அனைத்து தகவல்களையும் மிக மோசமாக தவறாகப் பெற அவர்களை வழிநடத்திய அடிப்படை ஆதாரம் பற்றி கேள்வி கேட்க நினைக்கவில்லை. அதாவது, “பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கும்,” “ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும்,” மற்றும் “பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாப்பதற்கும்” தான் அமெரிக்கா போரைத் தொடங்கியது என்று கூறப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டது. கேபிள் மற்றும் நெட்வொர்க் நிலையங்களிலும், மற்றும் நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், மற்றும் ஏனைய முக்கிய செய்தியிதழ்களிலும் வெளியிடப்பட்ட முடிவற்ற செய்தித் தொகுப்புகளை வைத்து, போரை எதிர்த்தவர்களுக்காக அல்லது அதன் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் சமூக நலன்கள் பற்றி முக்கியமாக எதையாவது விமர்சிப்பவர்களுக்காக குரல் கொடுப்பவரை ஒருவரால் கண்டறிய முடியாது. “கைதேர்ந்த வர்ணனையாளர்கள்” தவிர்க்கமுடியாமல், கைவசம் உள்ள முன்னாள் ஜெனரல்கள் மற்றும் ஊடகங்களில் தங்களை “இணைத்துக்கொண்ட” முன்னாள் உளவுத்துறை முகவர்கள் ஆகியோரில் இருந்து பெறப்படுகின்றனர்.
இது நல்ல முறையில், அல்லது ஒருவேளை குறிப்பாக, “தாராளவாத” ஊடகங்களுக்கு பொருந்தும். ஒரு கட்டத்தில் “இடதுசாரி” ஊடகவியலாளராக முன்நிறுத்தப்பட்ட MSNBC இன் ரேச்சல் மேடோ (Rachel Maddow), திங்களன்று, “ஆப்கான் இராணுவத்தை கட்டியெழுப்பவே நாம் இத்தனை வருடங்களை செலவழித்தோம், மாறாக போராட நாம் விரும்பவில்லை” என்று முழு ஆத்திரத்துடன் ஒரு கருத்தை வெளியிட்டார். “நாம்” இவ்வளவு பணத்தை செலவழித்தோம், ஆனால் “நேரம் வந்தபோது அவர்கள் உண்மையில் வெறுமனே சாவியை ஒப்படைத்துவிட்டனர்” என்று அவர் புகார் கூறினார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், ஜூலை 2010 இல், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு பற்றி “அறிக்கை” செய்ய மேடோ பல நாட்களை அங்கு செலவிட்டார், அப்போது அவர் பேசிய அமெரிக்க ஜெனரல்களிடம் “தேசத்தை கட்டமைக்கும்” அவர்களது செயல்பாடுகள் குறித்து பெருமையுடன் புகழ்ந்தார். ஒரு கட்டத்தில், மேடோ, சிஐஏ கறுப்பு தளங்களில் சித்திரவதை செய்யப்பட்ட அல்லது குவாண்டனாமோ விரிகுடாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த கைதிகளை தடுத்து வைக்க பயன்படுத்தப்பட்டு வந்த பாக்ராமில் உள்ள அமெரிக்க சிறை மையத்தை பாராட்டினார். மேலும், தாலிபான்களைத் தடுத்து நிறுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு என்பது, “சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்தது என்பதுடன், மக்களை அடைத்து வைப்பதற்கான சட்டம் மற்றும் ஒழுங்கின் ஒரு பகுதியாகும்” என்றும் மேடோ அறிவித்தார்.
மாயைகள் மற்றும் சுய-ஏமாற்றங்களின் நம்பிக்கை கொண்ட ஒரு அமைப்பாகவுள்ள அமெரிக்க ஊடகங்களில் பிரச்சாரகர்கள் தங்கள் சொந்த பிரச்சாரத்தை நம்புகிறார்கள், என்றாலும் உண்மை அவர்களைத் தாக்கும்போது திகைத்து நிற்கிறார்கள்.
ஒட்டுமொத்த நிறுவனத்தின் அபத்தத்தை முடித்து வைக்க, ஊடகங்கள், குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக, அனைத்து உண்மை அறிக்கைகளையும் “போலிச் செய்திகள்” என்று முத்திரை குத்தும் முயற்சியில் பங்கேற்றன. பொது கருத்தை “தடுத்து நிற்கும்” “அதிகாரபூர்வ ஆதாரங்களுக்கு” அப்பாற்பட்டு “தவறான தகவல்களை” அவை பரப்புவதாகக் கூறப்படும் ஊடகங்கள், கூகுள், பேஸ்புக் மற்றும் பிற தளங்களின் தணிக்கைக்கு இலக்காகியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு பற்றி இரண்டு தசாப்த காலமாக செய்திகளை தொகுத்து வழங்குவதில் ஈடு இணையற்ற சாதனை புரிந்து வந்துள்ள உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) இது பொருந்தும்.
பொய் பிரச்சாரங்களால் நிரம்பிய ஊடகங்களின் நீண்ட மற்றும் அவதூறு பரப்பும் பாதை ஆப்கானிஸ்தானில் நடந்த போருக்கு மட்டுமல்லாமல், இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், அதை நடத்தும் நாட்டிற்கும் பொருந்தும். ஆப்கானிஸ்தானில் “ஜனநாயகத்தை” நிலைநாட்டுவதில் தோல்வியடைந்தது பற்றிய அனைத்து பேச்சுக்களும் இருந்தாலும், ஸ்தாபக ஊடகங்களில் உள்ள எவரும் அமெரிக்காவில் “ஜனநாயகத்தின்” நிலை பற்றி நேர்மையாக பேச முடியாது, ஏனென்றால், இது கடந்த ஆண்டில், சர்வாதிகாரத்தின் விளிம்பில், அல்லது அதன் அடிப்படையிலான சமூக உறவுகளில் சிக்கிப் போயுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்பது, அமெரிக்க முதலாளித்துவத்தின் அப்பட்டமான குற்றவியல் வெளிப்பாடாகும். கடந்த 20 ஆண்டு கால இராணுவ ஆக்கிரமிப்பு என்பது, அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் ஊடகங்கள் உட்பட, அதன் அனைத்து நிறுவனங்களின் 20 ஆண்டு கால அரசியல், சமூக மற்றும் கலாச்சார சிதைவு ஆகும். மேலும் காபூலில் ஏற்பட்ட வீழ்ச்சியால் ஊடகங்கள் “பாதுகாப்பற்றதாக” உள்ளன என்றால், அமெரிக்காவில் நடக்கும் சமூக வெடிப்புகளால் அவர்கள் இன்னும் அதிர்ச்சியடைவார்கள்.