மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்கத் தலைமை செயலகத்தின் புதன்கிழமை நிகழ்வுகள் அமெரிக்க ஜனநாயகத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியை அடிக்கோடிடுகின்றன. அவை பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தின் அதிகரித்து வரும் ஆபத்துக்கு கூடுதல் எச்சரிக்கையாக சேவையாற்றுகின்றன.
குடியரசுக் கட்சியின் சிறுபான்மை அணித் தலைவர் கெவின் மெக்கார்த்தி அமெரிக்க தலைமை செயலம் மீதான ஜனவரி 6 தாக்குதலை விசாரிக்கும் குழுவிற்கான அவரது ஐந்து மொத்த வேட்பாளர்களையும் திரும்பப் பெற்றார், அந்த தாக்குதலின் போது அப்போதைய ஜனாதிபதியால் தூண்டிவிடப்பட்ட அதிவலது ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஒரு கணிசமான வித்தியாசத்தில் ட்ரம்ப் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடெனிடம் தோற்றதைக் காட்டும் 2020 தேர்தல் முடிவுகளைக் காங்கிரஸ் சபையில் அங்கீகரிப்பதை முடக்க முனைந்திருந்தனர்.
காங்கிரஸ் சபையில் உள்ள ட்ரம்பின் மிக நெருக்கமான்ன சக-சதிகாரர்களில் ஒருவரான ஜிம் ஜோர்டன் உட்பட பைடென் வெற்றியை அங்கீகரிப்பதை முடக்க முனைந்த மூன்று குடியரசுக் கட்சியினரை திங்கட்கிழமை மெக்கார்த்தி பெயரிட்டார்.
இடதுசாரி போராட்டக்காரர்களின் 'வன்முறைக்கு' அந்த கிளர்ச்சி ஒரு நியாயமான விடையிறுப்பாக இருந்தது என்று வாதிடுவதற்காக, கமிட்டி சம்பந்தமான அந்த நிலைப்பாட்டை அவர் பயன்படுத்த இருப்பதை ஜோர்டான் உடனடியாக தெளிவுபடுத்தினார். 'ஜனநாயகக் கட்சியினர் தான் அந்த சூழலை உருவாக்கினர் என்று நினைக்கிறேன், ஒருவிதத்தில் அது கலகத்தை இயல்பாக்குவதாக, சூறையாடலை இயல்பாக்குவதாக, 2020 கோடையில் அராஜகத்தை இயல்பாக்குவதாக இருந்தது, இது பார்க்கப்பட வேண்டிய ஒரு முக்கிய தகவலாக நான் நினைக்கிறேன்,” என்றவர் அறிவித்தார்.
அதற்கு விடையிறுக்கும் வகையில், ஜனநாயகக் கட்சியின் அவைத் தலைவர் நான்சி பெலோசி, ட்ரம்பின் களவாடப்பட்ட தேர்தல் என்ற 'பெரும் பொய்' இன் மற்றொரு பாதுகாவலரான இண்டியானாவின் பிரதிநிதி ஜிம் பேங்க்ஸின் மற்றும் ஜோர்டனின் வேட்பாளர்களின் நியமனங்களை அவரது தடுப்பாணை அதிகாரத்தைக் கொண்டு ரத்து செய்தார்.
ஜோர்டான் நியமனம் மற்றும் அதையடுத்து குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் திரும்பப் பெறப்பட்டமை ஆகியவை ஒரு பாசிச கட்சியாக குடியரசுக் கட்சி மாறி வருவதன் பாகமாக ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை எந்தளவுக்கு அது தழுவி உள்ளது என்பதை தெளிவுபடுத்துகின்றன.
ட்ரம்ப் நிர்வாகத்தைப் பற்றி புதிதாக வெளியிடப்பட்ட புத்தகங்களில் தொடர்ந்து வெளியான கருத்துக்களால் ஒரு வாரம் கொந்தளிப்பாக இருந்த பின்னர் இந்த நடவடிக்கைகள் வந்தன. நாஜிசத்திற்கு ட்ரம்பின் உயர்மட்ட உதவியாளர்களிடையே இருந்தவர்களே அனுதாபம் காட்டியமை, 2020 தேர்தல்களை அவர் நடத்த விடாமல் செய்ய முயற்சிப்பார் என்ற அவர்களின் பயம், ட்ரம்பின் தோல்விக்குப் பின்னர் பாசிச இராணுவப் போராளிகள் குழுக்கள் ஆதரவுடன் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலமாக அப்போதைய-ஜனாதிபதி பதவியிலேயே நீடிக்க முயல்வார் என்பதன் மீது இராணுவத் தலைவர்களின் கவலை ஆகியவை அந்த புத்தகங்களில் உள்ளடங்கி இருந்தன.
ஒரு புத்தகத்தின்படி, கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி, ஜேர்மனியில் சர்வாதிகார அதிகாரத்தைக் கைப்பற்ற ஹிட்லர் பயன்படுத்திய சம்பவத்தைக் குறிக்கும் விதத்தில், அவரது சக அதிகாரியிடம் கூறுகையில், ட்ரம்ப் ஜனவரி 6 ஐ அவரது 'ரைஹ்ஸ்டாக் தருணமாக' பார்த்ததாக தெரிவித்தார்.
வெறும் 11 நாட்களுக்கு முன்னர் தான், டல்லாஸின் பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில் (CPAC) உரையாற்றிய ட்ரம்ப், ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியை முழுமையாக தழுவியதற்கு நிகராக பேசியிருந்தார். அவர் 2020 தேர்தல் மோசடி குறித்த அவர் பொய்களை மீளவலியுறுத்திய அதேவேளையில், “நமது அமெரிக்க பாரம்பரியத்தை களவாடி' உள்ள சோசலிசவாதிகளுக்கு எதிராக அவர் சீற்றத்தை இரட்டிப்பாக்கினார், மேலும் அவர் தலைமையைக் கேள்விக்குட்படுத்தும் குடியரசுக் கட்சியிலுள்ள எவரொருவரையும், குறிப்பாக தலைமை செயலகம் மீதான தாக்குதலுக்கு அவரைப் பொறுப்பாக்கும் எவரையும் கட்சியிலிருந்து நீக்க கோரினார்.
பிரதிநிதிகள் சபை வளாகத்தில் கலகக்காரர்களின் ஒரு குழுவை வழிநடத்திய போது சுட்டுக் கொல்லப்பட்ட அஷ்லி பாபிட் மரணத்திற்கு இரங்கல் கூறி, ஜனவரி 6 தாக்குதலில் பங்கெடுத்தவர்களை ட்ரம்ப் பகிரங்கமாக பாதுகாத்தார். அந்த CPAC கூட்டம், தலைமைச் செயலகம் மீதான தாக்குதலை முன்னின்று நடத்திய பிரவுட் பாய்ஸ், ஓத் கீப்பர்ஸ் மற்றும் த்ரீ பெர்சென்டர்ஸ் ஆகிய பாசிசவாத போராளிகள் குழுக்களில் இருந்து வந்தவர்களை வரவேற்றது.
உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தைப் போல, 'டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் மீது அவர் அதிகாரத்தை உறுதிப்படுத்தி, அதை ஒரு பழமைவாத முதலாளித்துவக் கட்சி என்பதிலிருந்து ஒரு தனிப்பட்ட தலைவர் மற்றும் துணை இராணுவப்படைப் பிரிவைக் கொண்ட ஒரு பாசிசவாத கட்சியாக மாற்றி வருகிறார்.”
இந்த நிகழ்வுபோக்கில் புதன்கிழமை சம்பவங்கள் மற்றொரு படியைக் குறித்தன, அவற்றில் குடியரசுக் கட்சி அதன் முன்னாள்-ஜனாதிபதியின் நேரடியாக நீட்சியாக இன்னும் கூடுதலாக செயல்படுகிறது. மெக்கார்த்தி அவரின் மாபெரும் தலைவருடன் (Führer) தீர்மானத்தைத் தெளிவுபடுத்துவதற்காக ட்ரம்பின் நியூ ஜெர்சி பெட்மின்ஸ்டர் பண்ணையில் அவரைச் சந்தித்த பின்னர், திங்கட்கிழமை கமிட்டியைத் தேர்ந்தெடுக்க ஐந்து குடியரசுக் கட்சி பிரதிநிதிகளை மெக்கார்த்தி நியமித்தார்.
மெக்கார்த்தியும் ட்ரம்பும் விசாரணையை கீழறுக்க உரிய அணுகுமுறைகளை வகுத்துள்ளனர். ஆரம்பத்திலிருந்து அதை வெளிப்படையாக புறக்கணித்து வந்ததற்குப் பதிலாக, அவர்கள் அதில் கலந்து கொள்வதைப் போல பாசாங்கு செய்வார்கள், பின்னர் ஜோர்டான் மற்றும் பேங்க்ஸ் போன்ற குடியரசுக் கட்சியினரை நியமிப்பார்கள், இவர்கள் ட்ரம்பைப் பாதுகாக்கவும் மற்றும் இடதுசாரி எதிர்ப்பாளர்களைத் தாக்கவும் அந்த குழுவை ஒரு தளமாக பயன்படுத்துவார்கள்.
ஆரம்பத்தில் பெலோசி மெக்கார்த்தியின் நியமனங்களை ஏற்கத் தயாராக இருப்பதாகத் தோன்றியது. ஜோர்டான் மற்றும் பேங்க்ஸ் உட்பட மெக்கார்த்தியின் மூன்று வேட்பாளர்கள், தலைமை செயலகத்திலிருந்து கலகக்காரர்கள் வெளியேற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் பைடெனைத் தேர்வு செய்வதைத் தடுக்க வாக்களித்தனர் என்பதைக் குறிப்பிட்ட பின்னர், பெலோசி கூறுகையில், “ஜோ பைடென் தேர்வானதை உறுதிப்படுத்துவதன் மீது ஒவ்வொருவரும் எப்படி வாக்களித்தார்கள் என்பது சேவைக்கான அளவுகோல் இல்லை என்பதை நான் தெளிவுப்படுத்தி விடுகிறேன். அதுவொரு விஷயமே இல்லை,” என்றார்
'இருகட்சித்தன்மை'க்கு ஆதரவளிப்பதில் ஒரு நீண்டகால அரணாக விளங்கும் வாஷிங்டன் போஸ்ட், செவ்வாய்கிழமை இரவு, பேங்க்ஸ் மற்றும் ஜோர்டனை பெலோசி ஏற்கக்கூடாதென வலியுறுத்தியும், “ஜனவரி 6 விசாரணையைச் சீர்கெடுக்க கெவின் மெக்கார்த்தியின் இழிவார்ந்த தந்திரமே' அவர்களை வேட்பாளர்களாக நிலைநிறுத்துவது என்று குறிப்பிட்டும் ஒரு தலையங்கம் வெளியிட்டது.
இறுதியில், புதன்கிழமை, பேங்க்ஸ் மற்றும் ஜோர்டானின் நியமனங்களை நிராகரித்து பெலோசி ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டார். ஜனநாயகக் கட்சியினர் எந்த பத்திரிகையாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யவில்லை அல்லது குடியரசுக் கட்சி நடவடிக்கையின் ஆத்திரமூட்டும் தன்மையைப் பொதுமக்களுக்கு விரிவாக விளக்கவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
மெக்கார்த்தியும் ஐந்து குடியரசுக் கட்சியினரும் உடனடியாக ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி, அமெரிக்க அரசு ஆசனத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத தாக்குதலுக்கான சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள் பற்றிய எந்த விசாரணையையும் அவர்கள் எதிர்ப்பதைத் தெளிவுபடுத்தினர். அவர்களின் பார்வையில், தலைமை செயலகத்தின் பொலிஸ் ஏன் தாக்குதலுக்கு அந்தளவுக்குத் தயாரிப்பின்றி இருந்தது என்பதே விசாரிக்கப்பட வேண்டிய ஒரே பிரச்சினையாக இருந்தது, அந்த தோல்வியைத் தான் அவர்கள் ஜனநாயகக் கட்சி அவைத் தலைவரிடம் முழுமையாக கொண்டு சென்றனர்.
ஜனநாயகக் கட்சியும் பைடென் நிர்வாகமும் ஜனவரி 6 இன் உண்மையான அர்த்தத்தை மூடி மறைக்க முற்படுகின்ற நிலையில், இத்தகைய அபிவிருத்திகள் அவர்களின் பொறுப்பின்மையை இன்னும் கூடுதலாக எடுத்துக்காட்டுகின்றன.
தலைமை செயலகம் மீதான தாக்குதல் பற்றிய விசாரணை சம்பந்தமாக, குடியரசுக் கட்சியினரையும் உள்ளடக்கும் ஒரு முயற்சியில் பெலோசி ஒன்றன்பின் ஒன்றாக பின்வாங்கினார். 'இருகட்சியினது ஒருமனதான சம்மதத்துடன் செயல்படுவது' மற்றும் 'நமது குடியரசுக் கட்சி சகாக்களுடன்' 'நல்லிணக்கம்' என்ற பைடென் நிர்வாகத்தின் தாரக மந்திரத்திற்கு இணங்க, ஜனநாயகக் கட்சியினர் அப்போதும் செனட் சபையில் அமர்ந்திருந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்காரர் ட்ரம்ப் மீதான செனட் குற்றவிசாரணை வழக்கில் எந்தவொரு சாட்சியையும் அழைக்க மறுத்து, ஜனவரி 6 தாக்குதலுக்குப் பிந்தைய அவர்களின் சொந்த குற்றவிசாரணை முனைவை முடக்கினர்.
பின்னர், '9/11 பாணியிலான' சுதந்திரமான ஆணைக்குழுவைப் பின்தொடர்வதில், அப்பெண்மணி உறுப்பினர் எண்ணிக்கையில் 50-50 இருக்க வேண்டுமென்ற, மற்றும் சாட்சியங்களை விசாரணைக்கு அழைப்பதில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரேமாதிரியான உரிமைகள் இருக்க வேண்டுமென்ற சிறுபான்மை அணித் தலைவர் மெக்கார்த்தியின் கோரிக்கைக்கு விட்டுக் கொடுத்தார்.
ஜனவரி 6 சம்பவங்களில் இருந்து கவனத்தை முற்றிலும் திசை மாற்றுவதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாக, கடந்தாண்டு நடந்த பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களை உள்ளடக்கும் வகையில் ஆணைக்குழுவின் நோக்கம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மெக்கார்த்தி சேர்த்த போது தான், பெலோசி, ஒரு சட்டமசோதா மூலமாக ஓர் ஆணைக்குழுவை நிறுவ முற்படும் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார், பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சியினர் அந்த சட்டமசோதாவை எதிர்த்திருந்த நிலையில், செனட் சபையில் பல்வேறு முட்டுக்கட்டைகளுடன் இறுதியில் அது ஒன்றுமில்லாமல் செய்யப்பட்டது.
வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸ் சபையின் இரண்டு அவைகளையும் கட்டுப்படுத்தும் ஜனநாயகக் கட்சி, ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியின் அவரது சக-சதிகாரர்களைத் தண்டிக்க மறுத்துள்ளதுடன், அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஆறு மாதங்களுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர் அது நடத்திய அலங்கோலமான காங்கிரஸ் சபை விசாரணைகளில் வெளியான, FBI, பொலிஸ் மற்றும் பென்டகனின் பாகத்தில் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஒத்துழைப்பு இருந்ததைப் பற்றிய அம்பலப்படுத்தல்களை மூடிமறைத்துள்ளது.
அந்த விசாரணையை நாசப்படுத்த குடியரசுக் கட்சியினர் மேற்கொண்ட வெளிப்படையான முயற்சி பற்றிய எந்த குறிப்பும் இல்லாமல், அப்பெண்மணி மீது அதன் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு மேலோட்டமான அறிக்கையுடன் பெலோசியின் நடவடிக்கைக்கு வெள்ளை மாளிகை புதன்கிழமை விடையிறுத்தது. உள்கட்டமைப்பு செலவின மசோதாவுக்குக் குடியரசுக் கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியில், பைடென் 'இருகட்சியின் ஒருமனதான சம்மதத்திற்கான' அவரின் சொந்த தேடலில் ஈடுபட்டுள்ளார். புதன்கிழமை செனட் சபையில் குடியரசுக் கட்சியின் ஒரு முட்டுக்கட்டை அந்த சட்டமசோதா மீது விவாதத்தைத் தொடங்குவதை முடக்கியது.
இரண்டு கட்சிகளின் ஒருமனதான சம்மதத்திற்கான பெரும்பிரயத்தன முறையீடுகளுக்கும், பாசிசவாத எதேச்சதிகாரத்தின் ஒரு கட்சியென குடியரசுக் கட்சியைக் குறிப்பிட மறுப்பதற்கும் அங்கே ஆழமான வர்க்க காரணங்கள் உள்ளன. குடியரசுக் கட்சியினரைப் போலவே, ஜனநாயகக் கட்சியினரும் ஆளும் நிதிய பிரபுத்துவத்தின் ஒரு அரசியல் கருவியாவர். முதலாளித்துவ வர்க்கம், அதிகாரத்திலுள்ள கட்சி மீது மக்கள் அதிருப்தி ஓர் அபாயகரமான மட்டத்திற்கு அதிகரிக்கும் போது எப்போதுமே 'மற்றொரு' கட்சி இருக்கிறது என்று, நீண்டகாலமாக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியை மாற்றி மாற்றி பதவியில் அமர்த்தியதன் மூலம் அதன் ஆட்சியைப் பேணி வந்துள்ளது.
இன்று ஆளும் வர்க்கத்தின் இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் உழைக்கும் மக்களிடையே விரோதப் போக்கை அதிகரித்து வருவது அதற்கு நன்கு தெரியும். வாழ்க்கைத் தரங்களின் வீழ்ச்சி, அதிர்ச்சியூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மை மட்டங்கள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் மனித உயிர்களை விட பெருநிறுவன இலாபங்களுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கைகளால் காலவரையின்றி நீடித்து வரும் பெருந்தொற்று பயங்கரம் ஆகியவற்றால் பெருந்திரளான மக்கள் அன்னியப்பட்டுள்ளனர்.
ட்ரம்ப்பால் உருவகப்படுத்தப்படும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு சர்வாதிகார மன்றத்தை தேடுகிறது. அதுபோன்றவொரு மோதலின் விளைவைக் குறித்து அஞ்சும் மற்றொரு கன்னை இராணுவ-உளவுத்துறை எந்திரத்தைக் கையிருப்பில் வைத்திருக்கும் அதேவேளையில், பாரிய எதிர்ப்பை நசுக்க தொழிற்சங்கங்கள் மற்றும் அடையாள அரசியலின் நடுத்தர வர்க்க நடவடிக்கையாளர்களைச் சார்ந்துள்ளது.
தொழிலாள வர்க்கம் ஆளும் உயரடுக்கின் இந்த இரு பிரிவுக்கும் எந்த ஆதரவும் கொடுக்க முடியாது. சர்வாதிகார முகாமில் இல்லையென்றாலும் ஆனால் அவர்களுக்கு அவசியமாகும் போது உடனடியாக அதில் இணைந்துவிடும் பெருவணிகத்தின் அத்தகைய பிரிவுகளைச் சார்ந்திருப்பதன் மூலமாக பாசிசவாத அச்சுறுத்தலை எதிர்த்து போராட முடியாது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒரு சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய புரட்சிகர இயக்கத்தைக் கட்டமைப்பது அவசியமாகும். இதன் அர்த்தம், இந்த வேலைத்திட்டத்திற்காக போராடும் ஒரே கட்சியான சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதைக் கட்டியெழுப்புவதாகும்.